Pages

Sunday, January 06, 2008

படம் பார்க்கலாம் வாங்க! - Hana-bi (ஜப்பானிய திரைப்படம்)

டாகேஷி கிடனோவின் எழுத்து, நடிப்பு, இயக்கம், மற்றும் தொகுப்பில் 1997-ல் வெளிவந்த Hana-bi (ஜப்பானிய மொழியில் வானவேடிக்கை) சமீபத்தில் நான் பார்த்த சிறந்த படங்களில் ஒன்று. வெனிஸ் திரைவிழாவில் Golden lion விருது பெற்று, எல்லாராலும் நல்லமுறையில் விமர்சிக்கப்பட்ட படம்.

காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ள கிடனோ, தன்னுடைய சக ஊழியருக்கு விபத்தின் காரணமாக கால்கள் ஊனமான பாதிப்பில் பதவி விலகுகிறார். லெக்குமியாவால் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியுடன் அதிக நேரத்தை அவளுக்காக செலவிடுகிறார். கொள்ளையில் மற்றும் கடனாக பெற்ற பணத்தால் மற்றவர்களின் தேடுதல், தன் மனைவியுடனான பயணம் என கதை நகர்கிறது. நீளமான- மெதுவான நகர்வுகள், வசனமற்ற- இயக்கமற்ற காட்சிகள் என வழக்கமான கிடனோ படம். கணவன் மனைவிக்கான உறவு, சோகத்தின் நடுவே சில புன்னகை, திடீர் அடிதடியோடு கூடிய குரூரம், கவித்துமான ஓவிய இயல்புகளோடு சஞ்சலமில்லாத ஒரு நீர் ஓடை போல திரைப்படம் பயணிக்கிறது.

படத்தில் கிடனோவின் நண்பர் ஊனமாக இருக்கும்போது வரையும் ஓவியங்கள், உண்மையாக பரலிசிஸ் காரணமாக பாதிக்கப்பட்டு் ஓய்வில் இருந்தபோது கிடனோவால் வரையப்பட்டவை. இப்படத்தைப் பார்க்கும் முன்னர் கிடனோ இயக்கத்தில் Zatoichi என்ற அதிரடி படத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படத்தில் தான் கிடனோனின் இயக்கம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. உங்கள் பார்வைக்காக youtube-லிருந்து 9 பாகங்களாக இருக்கும் Hana-bi படம். பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லவும். நன்றி!!

பாகம்-1

பாகம்-2

பாகம்-3

பாகம்-4

பாகம்-5

பாகம்-6

பாகம்-7

பாகம்-8

பாகம்-9

Wednesday, January 02, 2008

ரஜினி படத்தின் புனிதத்தன்மையும் தற்போதைய ரீமேக்குகளும்

பில்லா வெற்றிக்குப் பிறகு ரஜினி படங்களை ரீமேக் செய்யும் ஆர்வம் எல்லாருக்கும் வந்துவிட்டது. சமீபகாலமாக ஹிட்டான பழைய படங்களை ரீமேக் செய்வதும், அதே டைட்டில்களை பயன்படுத்துவதும் தொடர் கதையாகிவிட்டது. அஜித்தின் 'பில்லா'வின் வெற்றியைத் தொடர்ந்து பல நடிகர்கள் ரீமேக் கதைகளை விரும்ப ஆரம்பித்துள்ளனர். அதிலும் குறிப்பாக ரஜினி பட தலைப்புக்கு அநேகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர். எல்லாரும் ஏன் ரஜினி படத்தையே குறிவைத்து ரீமேக் செய்ய விழைகிறார்கள். வேறென்ன? எதிர்பார்ப்பை உருவாக்கத்தான். இந்த நேரத்தைப் பயன்படுத்திக் காசு பண்ண ஆசைபடும் சிலர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ரஜினி படத்தின் டைட்டில்களை பதிவு செய்து வைத்துள்ளனர் என செய்திகளும் வெளிவந்துள்ளது. 'பாயும்புலி', 'மூன்றுமுகம்', 'முரட்டுகாளை', 'நல்லவனுக்கு நல்லவன்', 'மனிதன்', 'வேலைக்காரன்', 'குரு சிஷ்யன்' போன்ற 30 ரஜினி படத்தின் டைட்டில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பெரிய நடிகர்களை வைத்து ரஜினி படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படும் கம்பெனிகளிடம் பதிவு செய்த டைட்டில்களை கணிசமான விலைக்கு விற்கலாம் என்பதே சிலரது கணக்காக இருக்கிறதாம்.
'பில்லா' ரீமேக் செய்யப்பட்ட போதும், தற்போது வெளிவந்த பிறகும் பலர் பழைய ரஜினி நடித்த பில்லா நன்றாக இருப்பதாகவும், புதிய பில்லா படம் சொதப்பல் எனவும் கருத்து வெளியிட்டனர். (தமிழ்மணத்தில் ஒருவர், ஸ்ரீபிரியாவின் வசீகரம்(?) இதில் மிஸிங் என்று ஒருபடி மேலே சென்று அலம்பினார்!). பெரிய எதிர்பார்ப்பு இல்லாதவர்கள் அல்லது ஹிந்தி டான் படம் பார்க்காதவர்கள் அஜித் நடித்த பில்லாவை சிறப்பாகவே புகழ்ந்தார்கள். என்னைப் பொருத்தவரை ரீமேக் படங்கள் தமிழில் வருவதில் ஒரு தவறும் இல்லை. அப்படி ரீமேக் படம் செய்வது ஒரு பெரிய சவால். பழைய கதையை தற்போதைய ரசிகர்களின் ரசனைக்கேற்ப கொடுப்பதென்பது சதாரண காரியமல்ல. இரண்டாவது பழைய படம் வெளிவந்தபோது இருந்த தலைமுறை ரசிகர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்குமேல் எதோ கதைக்கு பஞ்சம் வந்துவிட்டதா? என குறை சொல்லுவது சரியில்லை. மேற்கத்திய வெற்றிப்படங்களான பென்ஹர், டைட்டானிக், கிங்காங்,டென் கமெண்ட்மெண்ட்ஸ் என நீளும் பல படங்கள் ரீமேக் படங்கள் தான். ரீமேக் என்பது ஒன்றும் தமிழுக்கு புதிதல்ல. அம்பிகாபதி, காத்தவராயன், பூம்புகார், நீரும்நெருப்பும், உத்தமபுத்திரன் என சில படங்கள் தமிழில் பழைய படங்களின் ரீமேக்குகளாக வெளிவந்தன. இப்படங்களில் நடித்தவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர் போன்ற முன்னணி நடிகர்கள் தான். இவர்கள் கதையில்லாமல் ஒன்றும் இப்படங்களில் நடிக்கவில்லை. வெற்றிப்படத்தின் கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் தான் காரனம்.

இப்படி ரீமேக் செய்வதின் மூலம் பெரிய எதிர்பார்ப்புகள் கிடைப்பதைத் தவிர்த்து, வேறொரு பிரச்சனையும் உண்டு. பழைய படத்தில் வந்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற காட்சிகளை எடுக்கும்போது ஒன்று அதை சிறப்பாக எடுக்கவேண்டும், இல்லாவிடில் அந்தக் காட்சியை எடுக்காமலே இருக்கலாம்.

அமிதாப் பச்சன், தர்மேந்திரா நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றிப்படமான 'சோலே' படத்தை 'ஆஃக்' என்று ரீமேக் செய்து ராம்கோபால்வர்மா கையை சுட்டுக்கொண்டார். அதற்குக் காரணம், அதிகமாக ரசிக்கப்பட்ட முக்கிய காட்சிகளில் கனமில்லாமல் சொதப்பியது தான்.

தற்போது விக்ரம் கூட ரஜினி நடித்த 'மூன்றுமுகம்' படத்தை ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அஜித் எதிர்கொண்ட சவாலை விட மிகவும் சிரமமானதொரு சவாலை விக்ரம் ஏற்கவுள்ளார். ஏனென்றால், பில்லாவை விட மூன்று முகத்தில் வரும் அலெக்ஸ் பாண்டியன் பாத்திரம் இதுவரை ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, பொதுவாக எல்லாருக்கும் மறக்க முடியாத ஸ்டைலான பாத்திரம்.
விக்ரமால் அலெக்ஸ் பாண்டியன் வேடத்தின் மெஜஸ்டிக்கைக் கொடுக்க முடியுமா? ரஜினியும், செந்தாமரையும் இடையே வரும் காட்சி எப்படி எடுப்பார்கள்? செந்தாமரை சிறப்பாக நடித்த வில்லன் வேடத்தை யார் ஏற்கப்போகிறார்? என நமக்கே கேள்வி எழும். எதிர்பார்ப்புகளும், எதிர்ப்புகளும் கடந்து படத்தின் பழைய செல்வாக்கைச் சிதைக்காமல் நல்லதொரு புதிய படைப்பைக் கொடுத்தால் யார் தான் வேண்டாமென்பார்கள்!!

மூன்றுமுகம் படத்தில் ஒரு காட்சி