Pages

Wednesday, December 30, 2009

3 idiots and Some idiots of India

3 idiots திரைப்படம் தொடங்கிய நான்காவது நாளில் 100 கோடியைத் தாண்டியுள்ளதாம். அப்படி ஒரு வரவேற்பு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில்.படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி (முன்னாபாய் MBBS-ன் இயக்குனர்). மேலும் இப்படத்தில் அமீர்கான் நடித்துள்ளார். Chetan bhagat எழுதிய Five point something கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், சிலக் கல்லூரிக் காட்சிகளில் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளது. சரி இப்போது விடயத்துக்கு வருவோம். இந்தப் பதிவு படத்தைப் பற்றிய விமர்சனம் அல்ல. இப்படத்தில் கதை தொட்டுச்செல்லும் இந்திய மாணவ சமுதாயம் எதிர்நோக்கும் சில பிரச்சனைகள். 1.மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பாடத்துறையைத் தேர்ந்தெடுக்காமல், பெற்றோரின் விருப்பத்தின் பேரில் சுயவிருப்பமின்றி  பாடத்துறையை தேர்ந்தெடுப்பது, 2. பேராசிரியர்கள், விரிவுரையாளர்களால் மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் மன அழுத்தங்கள், 3. இவ்வாறான மன அழுத்தங்களால் எற்படும் மாணவத் தற்கொலைகள்.

மருத்துவதுறை கிடைக்காத பெண்ணை வீட்டில் உள்ளோர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை. இது என் நண்பன் வீட்டில் நடந்த ஒரு சம்பவம். இதற்குக் காரணம் என்ன? விருப்பமில்லாத பாடத்தைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துவது, அப்படி படிக்கமுடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்தால் திட்டுவது. முடிவு தற்கொலை. இதுபோல ஏராளமான செய்திகள் பத்திரிகைகளில் தேர்வுமுடிவுகள் வரும் மாதங்களில் வருவதுண்டு. பெரும்பாலான பெற்றோர்கள் “நீ டாக்டராக வேண்டும். இஞ்னியராக வேண்டும்” என்று பிள்ளையின் சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொண்டு வருவார்கள். இப்படி இவர்களால் கட்டமைக்கப்பட்ட கோட்டை ஒருவேளை சரிந்துவிட்டால், மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தானாகவே தற்கொலைக்குத் தயாராகிறார்கள். போதிய படிப்பறிவோ, விழிப்புணர்ச்சியோ இல்லாத பெற்றோர்கள் எப்படியாவது பணத்தை செலவழித்து தன் பிள்ளையை ஒரு பொறியியல் பட்டப்படிப்பையோ, ஒரு மருத்துவப்பட்டப் படிப்பையோ படிக்க வைத்து விடவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படுவதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை. தொடர்வண்டியில் செல்லும் போது என்னிடம் ஒரு பெரியவர் சொன்னது “என்னோட மகளை என்னுடைய நாலு ஏக்கர் நிலத்தை அடகு வைத்து இஞ்னியரிங் படிப்புக்கு …….. காலேஜில் சேர்த்து இருக்கிறேன்.”. இன்றைய நிலையில் இந்தியாவில் பெரும்பாலான கல்லூரிகள் அரசியல்வாதிகளாலும், மந்திரிகளாலும், பினாமிகளாலும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுள் சரியான கல்வி, கட்டுமான வசதிகள் இல்லாவிடினும் மத்திய அங்கீகாரம் பெற்று மக்களை ஏமாற்றி பணத்தைக் கரந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கல்விகற்க போதிய வசதியற்றக் கல்லூரியைத் தான் பெரியவர் குறிப்பிட்டார். கிராமத்திலிருந்தும் நகரத்திலிருந்தும் வரும் சராசரி மாணவர்களின் நிலை மிகவும் மோசமானது. அவர்களுக்கு என்ன பாடத்துறையைத் தேர்வு செய்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பிராக்டிகலாக  தேர்ந்தெடுக்கவும் தெரியாது, தங்களுக்கு எது விருப்பப் பாடம் என்று விவரிக்கவும் தெரியாது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நடக்கும்போது அங்கு கவுன்சிலிங் வரும் சில மாணவர்கள் அவ்வழியே செல்லும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களிடம் என்ன பாடத்துறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கேட்பதை பலமுறைப் பார்த்திருக்கிறேன். போகிறபோக்கில் அவர்களும் எதாவது தோன்றுவதைச் சொல்லிவிட்டுப் போவதுண்டு.

இந்தியாவின் கல்வித்தரமோ அதளபாதாளத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.IIT, மற்றைய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. IITகளும் அதிகப்படுத்தப்படவுள்ளன. நல்ல விடயம் தான். ஆனால் அதற்கான infrastructure வசதிகள் தயாராக உள்ளனவா என்றால்? இல்லை. இப்படி கட்டுமான வசதியில்லாமல் மாணவர் சேர்க்கை மட்டும் அதிகரித்தால், கல்வித்தரம் குறையும், விடுதி மாட்டுக் கொட்டகை போல் இருக்கும். இப்போதே விடுதியில் ஒரு அறைக்கு 2 அல்லது 3 ஆட்களை அடுக்கிக் கொண்டிருக்கிறது IIT எனும் இந்தியாவில் கார்போரேட் நிறுவனங்கள். இங்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் பொறியியல் மாணவர்கள் மலிவாக Microsoft,Google,Texas instruments,Cisco…. என பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் IIT மாணவர்களை இந்தியா பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது.

சரி ஒரு வழியாக மாணவன் தன்னுடைய விருப்பமான அல்லது விருப்பமற்ற பாடத்தையோ தேர்ந்தெடுத்துவிடுகிறான். அடுத்து அவன் சந்திக்கும் பிரச்சனைகள் அவனுடைய ஆசிரியர்கள் மூலமாக. இந்தியாவில் IITகள் தான் உயர்தர பொறியியல் கல்வியை வழங்குகிறது. அப்படி வழங்கிய கல்வியால் இந்தியாவிற்கும் இந்தியமக்களுக்கும் லாபம் வெகு குறைவே. இதற்கு பெரும்பாலானவர்கள் மாணவர்களைக் குறைகூறுவார்கள். ஏனென்றால் IIT-ல் படிக்கும் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் இது தவறான கூற்று. வெளிநாட்டு நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிப்பது யார்? கல்வி நிறுவனமா அல்லது கார்பரேட் நிறுவனமா என்று எண்ணும் அளவிற்கு ப்ரோஜக்ட்களை வாங்கிக் குவித்துப் பணம் சம்பாதிப்பது யார்? கார்பரேட் நிறுவனம் கூட செய்த வேலைக்கு காசுகொடுக்கும் ஆனால் project work என்ற பெயரில் மாணவர்களை பெரும்பாலான ஆசிரியர்கள் ஓசியில் வேலை வாங்கவும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் (research journals, conference papers) எழுதவும், அதிலும் தன் பெயரை முதன்மையாக போட்டுக்கொள்ளும் அளவிற்கு கசக்கிப் பிழிகிறார்கள். அப்படி மாணவர்கள் மேற்சொன்ன வேலைகள் செய்யவில்லையா? கிரேட்(மதிப்பெண்) குறைக்கப்படும். மாணவனின் CGPA பொருத்து பெரும்பாலும் ப்ரோஜக்ட் ஆசிரியர்கள் ஒதுக்கப்படுவார்கள். அப்படி ஒதுக்கப்பட்ட ஆசிரியரின் கீழ் பணிபுரியும் மாணவன் அவரின் விருப்பப்பாடத்தில் தான் ப்ரோஜக்ட் செய்ய வேண்டும். இது தான் பொதுவாக எழுதப்படாத விதி. நிலைமை இப்படி இருப்பின் மாணவனைப் பெரும்பாலும் புதிதாக சிந்திக்க விடமாட்டார்கள். இந்திய அரசாங்கம் வெளியிடும் ப்ரோஜக்ட்களை முடிக்க கல்விநிறுவனங்களுக்கு முதலிடம் தரப்படுகிறது. இவற்றைப் பெரும் பேராசிரியர்கள் மாணவர்களிடம் காசில்லாமல் வேலை வாங்கிக் கொண்டு நிறைய பணம் பார்க்கிறார்கள்.உதாரணமாக இந்திய அரசு நிறுவனத்திற்காக ஒரு சாப்ட்வேர் தயார்செய்ய 20 லட்சம் மதிப்பிலான ஒரு ப்ரொஜெக்ட் விளம்பரம் செய்யப்படுகிறது. கல்விநிறுவனத்திற்கு முதலிடம் என்ற வகையில் அந்த ப்ரோஜக்ட்டை ஏற்றுக்கொள்ளும் ஒரு பேராசிரியர், தனக்குத் தொடர்புள்ள சாப்ட்வேர் நிறுவனங்கள் (TCS, CTS…..) மூலமாக சில முக்கிய moduleகளை முடித்துக் கொண்டு, மற்றவற்றை தன் கீழ் ப்ரோஜெக்ட் செய்யும் மாணவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிடுகிறார். சாப்ட்வேர் நிறுவனங்கள் செய்த வேலைக்கான பணம் போக மற்றவற்றை அவரே சுருட்டியும் விடுவார்.

IIT-ல் ஒரு சம்பவம் உங்கள் கவனத்திற்கு. முதல் வருடம் சரியாகப் படிக்காத Btech மாணவர்களை இரண்டாம் வருடம் performance சரியில்லை என்று அனுப்பியுள்ளார்கள். தரத்தை மேம்படுத்துகிறேன் பேர்வழி என்று இந்த விடயம் கடந்த ஆண்டுகளில் நடந்தன. ஆனால் அதுபோல விதிமுறைகள் எதுவும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதுபோல நீக்கப்பட்ட மாணவர்கள் வழக்குத் தொடர, IIT வழக்குத் தொடர்ந்த மாணவர்களை மறுபடியும் சேர்த்துக் கொண்டது. முன்பு இந்த விதிமுறையால் பாதிக்கப்பட்ட மாணவகள் கதி என்னவென்று தெரியவில்லை.

IIT-ல் கடந்த நான்கு ஆண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் google-ல் IIT suicide என்று தேடிப்பாருங்கள்.

இந்தியாவில், 2006-ல் மட்டும் சுமார் 5897 மாணவர்கள் தேர்வுபளு காரணமாக (16 மாணவர்கள் /ஒரு நாள்) தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது வெறும் அதிகாரப்பூர்வமான தகவல். அப்படியாயின் உண்மை எவ்வளவு என்று தெரியவில்லை. தற்போது இதைவிட அதிகமாகக் கூட இருக்கலாம். இவற்றிற்கு காரணம், காதல் தோல்வி, தேர்வினால் மன அழுத்தம் என்று கூறி தப்பித்துக்கொள்ள முடியாது. இதையும் தாண்டி பெற்றோரின் புரிந்துகொள்ளாத மனப்பக்குவம், ஆசிரியர்களின் சுயநலம், வருங்காலத் தூண்களை துரும்புகளாக மதிக்கும் அரசு என பல முக்கிய காரணிகள் உள்ளன. மாணவர்கள் படிப்பிலும், வாழ்க்கையிலும் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க அவர்களிடம் ஒரு நண்பனைப் போல பழகி அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு தகுந்தவர்கள் (பிரச்சனைக்கேற்றவாறு) மூலம் கவுன்சிலிங் தேவை. அதை விடுத்து ஜோதிடரிடமும், சாமியாரிடமும் சென்று “என் மகனுக்கு எப்படி இருக்கும், என்ன ஆகும் என்று விசாரிப்பது”, மூடத்தனம் மட்டுமல்ல, பிள்ளைகளின் வேதனைக்கேற்ற மருந்தாக அமையாது. கீழ்தட்டு மக்களுக்கு மனநல மருத்துவம்,கவுன்சிலிங் எல்லாம் தற்போதைய சூழ்நிலையில் அணுக முடியாதவை தான். நம்முடைய சகபதிவாளர்கள் தம்மை இப்படி ஒரு உதவிகேட்டு வருபவர்களை கைவிடாமல் சரியான ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேற்கூறிய பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது சம்பந்தப்பட்ட பெற்றோரும், ஆசிரியரும், மாணவனும் கலந்தாலோசித்து எடுக்க வேண்டிய முடிவுகள் மட்டுமேயன்றி நாம் இதில் பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மேலும் இந்திய மக்கள் வருங்கால சமுதாயத்தைக் காப்பாற்ற பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களிடம் ஒரு நல்ல நண்பனைப் போல் நடந்து கொள்ளுங்கள்.


Don't try to fix the students, fix ourselves first. The good teacher makes the poor student good and the good student superior. When our students fail, we, as teachers, too, have failed.
- Marva Collins

Monday, December 28, 2009

மரங்கள்


நியுடனுக்கும் புத்தருக்கும்
ஞானத்தைக் கற்பித்த மரம்!
அருகே ஒதுங்கினேன்!
நிழலால் அனைத்துக் கொண்டது!
****************************************
மரங்கள்!
கால மாற்றங்களை
உள்வாங்கிக் கொள்பவை!
துளிர்க்கும் இலைகளாக,
உதிரும் சருகுகளாக
மணித்துளி மாற்றத்தையும்
தன்னகத்தே தேக்கிநிற்கின்றன!

மண்ணில் இல்லாவிடினும்,
விலாசத்தை மறந்துவிடினும்
நம்முடைய இருப்பை
ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பன !

பூமிப்பந்தின் நாடித்துடிப்பு
அசைவுகளால் இசையானவை!

கவலையான தருணங்களில் மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால், மனதிற்குள் பூக்கள் பூப்பது போல் இருக்கும். பேருந்தில் செல்லும்போது மரங்கள் நம்மோடு ஓடிவருவதாக நினைத்த சிறுவர்களில் நானும் ஒருவன். சிறுவயதில் நம்மோடு ஒருவராக விளையாடிக் கொண்டு, சுவாசங்களை பகிர்ந்து கொண்டிருந்த மரங்களை தனியாக விட்டுவிட்டு நெடிய தொலைவு வந்துவிட்டோம். மறுபடியும் அவற்றோடு விளையாட, உறவாட மனம் ஏங்குகிறது.

Wednesday, December 23, 2009

அமீர்கானைத் தெரியாதென்ற தமிழர்!

அமீர்கான், மாதவன் நடித்து டிசம்பர் 25 வெளிவரவுள்ள படம் 3 இடியட்ஸ். அமீர்கான் தனது 3 இடியட்ஸ் படத்தை புரமோட் செய்வதற்காக வெவ்வேறு விதமான கெட்டப்களில் நாடு முழுக்க ரவுண்டு அடிக்க ஆரம்பித்துள்ளார் ஆமிர்கான். அதன் ஒரு கட்டமாக மாறு வேடத்தில் அவர் மகாபலிபுரம் வந்தார்.அங்குள்ள ஒரு கைடின் (Guide) உதவியுடன் தொல்பொருள் பெருமை மிக்க தலங்களைப் பார்த்து மகிழ்ந்தார்.

சிறிது நேரம் போன பின்னர் தான் யார் என்பதை அந்த கைடிடம் சொல்லி விடலாமே என்ற நல்லெண்ணத்தில், ஐயா, நான்தான் அமிர்கான் என்று கூறியுள்ளார்.அதைக் கேட்ட கைடுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்து விட்டுப் போங்கள், அதனால் என்ன என்ற ரீதியில் அவர் நெகட்டிவாக பதிலளிக்க தடுமாறி விட்டார் அமிர். நான் ஒரு நடிகர் என்று அடுத்த விளக்கத்திற்குப் போனார். அப்படியா, அப்படி எனக்கு யாரையுமே தெரியாதே என்று கைடு தெளிவாக கூற,   அமீர்கானும் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.

நாம் யாரென்று தெரியவில்லை போலும், உங்களுக்கு ஷாருக்கானை தெரியுமா என்று கேட்டார். தெரியாது ஆனால் பெயர் கேள்விபட்டிருக்கிறேன் என்று  அந்த கைடு கூற,  சரி இந்திப் படம் பார்க்கும் பழக்கம் உண்டா, கடைசியாப் பார்த்த படம் எது என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த கைடு, நான் கடைசியாப் பார்த்த படம் 1978-ல் தர்மேந்திரா, ஜீனத் அமென் நடித்து வெளிவந்த ஷாலிமார், எனக்கு தர்மேந்திராவையும், அமிதாப் பச்சனையும் தெரியும் என்று பதிலளித்துள்ளார்.அமீர் தனது மோதிரத்தை அந்த கைடுக்கு பரிசளித்துள்ளார். அந்த கைடும் அவருக்கு ஒரு விநாயகர் சிலையை பரிசளித்துள்ளார்.இப்போது பாலிவுட் முழுக்க இதுதான் பேச்சு, அமீர்கானை தெரியாத ஒருவர் என்று. தமிழகத்தைப் பற்றி இப்போதாவது அமீர் புரிந்து கொண்டாரே!


விமர்சகர்களால் விடுபட்டவை


இயல்பான நேர்த்தியான படம் எடுக்க உலகப் படங்கள் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றால் தொழிற்நுட்ப முன்னேற்றங்கள், கதை சொல்லல் பற்றியறிய பார்த்து வைக்கலாம். ஆனால் உலகதரம்மிக்க படங்கள் எடுக்க தமிழ் சமுதாய, சமூக சூழலை இருப்பதை இருப்பது போல காண்பித்தால் போதும். இதற்கு எந்த ரஷிய, இரானிய, லத்தினமெரிக்க, ஸ்பானிய,இத்தாலிய, ஜப்பானிய, கொரிய,பிரெஞ்சு படங்களைப் பார்த்துத் தள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லை. பருத்திவீரன் படம் வந்த சமயம் அமீர் கமலை சந்தித்தபோது, கமல் சொன்ன வார்த்தைகள் „உலகப் படங்கள் பாருங்கள்“ (எதுக்கு காப்பியடிக்கவா? ). எப்போது தமிழ்சினிமா பற்றி பேச்சு வந்தாலும் சிலரை மட்டுமே பரிசிலித்து மற்றவர்களை முழுதுமாக தவிர்த்துவிடுகிறார்கள்.

தமிழ் சினிமா என்றால் முதலில் எம்ஜிஆர், சிவாஜி பிறகு கமல், ரஜினி, இயக்குனர்களில் பாரதிராஜா, பாலசந்தர், மணிரத்னம், தற்போது அமீர், சேரன், சசிகுமார், மிஷ்கின் அவ்வளவு தான். சுதேசமித்திரன், சாருநிவேதிதா, ஜெயமோகன் போன்றோர்கள் பத்தி எழுத, நூல் எழுத தமிழ்சினிமாவை உலகத்தரத்துடன் ஒப்பிட்டு பெரிதாக கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அவர்கள் சொல்லும் கருத்து இத்தாலியப் படம் போல இல்லை, ரஷியப் படம் போல இல்லை என்பது தான். இவர்கள் தமிழ்படங்கள் பற்றி எழுத குறைந்தபட்சம் 70%  படங்களாவது பார்த்திருக்க வேண்டும். இது முற்றிலும் இல்லை. மேலே சொன்ன ஆளுமைகளைத் தவிர்த்து மற்றவர்கள் பற்றி பெரிதாக அலசினார்களா என்றால்? அதுவும் சுத்தமாகவே இல்லை. எனக்குத் தெரிந்து R.P.ராஜநாயஹம் அவர்கள் தமிழ் படங்கள் பற்றியும், உலகப் படங்கள் பற்றியும் தெளிவான அறிவு உடையவர். அவர் பாலைய்யா, சுப்பைய்யா பற்றியும் பேசுவார், பெட்ரிக்கோ பெல்லினி பற்றியும் பேசுவார். ரோமன் பொலன்ஸ்கி படத்தையோ,பெட்ரொ அல்மொடொவர் படத்தையோ முன்வைத்து நம்ம ஊர் படத்தை விமர்சனம் செய்யமாட்டார்.

50-60களில் அந்தநாள், நடுஇரவில், பொம்மை போன்ற படங்களை இயக்கி, நடித்து, இசையமைத்த வீணை பாலசந்தர் ஒரு மறக்க முடியாத இயக்குனர். இவர் இயக்கிய அனைத்துப் படங்களும் திகில், நாடக வகையைச் சார்ந்தது.இவர் ஒரு வித்யாசமான படம் எடுக்க வேண்டும் என்றே எடுப்பார் போலிருக்கிறது. 


எம்ஜிஆர், சிவாஜி நடித்துக் கொண்டிருந்த காலங்களில் ஜெமினிகணேசன் தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். கல்யாணப் பரிசு, மாமன்மகள், மிஸ்ஸியம்மா போன்ற சமூக படங்களானாலும் சரி,, வஞ்சிக்கோட்டை வாலிபன், பார்த்திபன் கனவு, கணவனே கண்கண்ட தெய்வம், மணளனே மங்கையின் பாக்கியம் போன்ற புராண, சரித்திர படங்களானாலும் சரி துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். 80-90களில் இவரின் பிரதியாக வந்தவர் கார்த்திக் என்று கூறலாம். ஜெமினிகணேசனைப் போன்றே காதல், நகைச்சுவை, துறுதுறுவென்ற நடிப்பு போன்றவற்றால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டவர். மௌனராகம் படத்தில் கார்த்திக் வரும் அந்த அரைமணிநேர காட்சியை யாராலும் மறக்க முடியாது. என் ஜீவன் பாடுது, இதயதாமரை, கிழக்குவாசல்,அமரன், நாடோடித் தென்றல் என்று வித்யாசமாக கலக்கிக் கொண்டிருந்துவிட்டு, ஒரு பிரேக்குப் பிறகு மறுபடியும் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, கோகுலத்தில் சீதை என அஜீத், விஜய் போன்ற இளைஞர்களுடன் போட்டியும் போட்டார்.

 அதேபோன்று சத்யராஜ்  வித்யாசமான நடிப்பு கொண்டவர். பாசில் இயக்கிய பூவிழி வாசலிலே, என் பொம்முகுட்டி அம்மாவுக்கு போன்ற படங்களில் நன்றாக நடித்தவர்.பெரியார், ஒன்பது ரூபார் நோட்டு போன்ற படங்களும் சொல்லத்தக்கவை. பெரியார் படத்தில் முதலில் சத்யராஜ் தெரிந்தாலும், வயதான பெரியாராக வரும்போது குரல், உடல்மொழி அனைத்திலும் பெரியாராக மாறிப் போய்விடுகிறார்.

மசாலா இயக்குனர்கள் என்று கூறி பாக்யராஜ், பாண்டியராஜன், கங்கைஅமரன் போன்றோரை சுத்தமாக  ஒதுக்கித் தள்ளுவது பொருந்தாது. எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் போன்ற கங்கைஅமரன் படங்கள் நிஜ கிராம வாழ்க்கையை சொல்லவில்லை என்றாலும், ஒரு நல்ல முயற்சிகான படங்களாக எடுத்துக் கொள்ளலாம். இயக்குனர்கள் என்று வரும் போது பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் புகுத்தப்பட்டிருக்கும் ஒன்றிரண்டு  மசாலா காட்சிகளைத்தவிர்த்தால் ஓரளவு கிராமத்துச் சூழலை காட்டக் கூடிய இயல்பான படமாகத்தான் இருக்கும். சுவரில்லாத சித்திரங்கள் பாக்யராஜ் கொஞ்சம் கொம்ப்ரொமைஸ் இல்லாமல் எடுத்த நல்ல படம். இன்று போய் நாளை வா என்ற படம் சிறந்த திரைக்கதையோடு கூடிய நகைச்சுவை படத்திற்கு உதாரணம். தூறல் நின்னுப்போச்சு படம் கிராம பின்னணியில் எடுக்கப்பட்ட காதல் படம். இந்த படத்தில் வரும் கிராமத்துக் கதாநாயகனுக்குப் பொருந்தக்கூடியவர் பாக்யராஜ் மட்டுமே. ஒருவேளை ராமராஜனும் பொருந்தலாம். கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படம் மிகையான செண்டிமெண்ட் காட்சிகள் இருந்தாலும், மதுரை சூழலில் அமைந்த ஒரு இயல்பான படம். ஸ்ரீவித்யாவின் ஒட்டாத பேச்சுதான் அந்த யதார்த்தமீரலுக்குக் காரணமாக நினைக்கிறேன்.

எப்படியோ அவள் அப்படித்தான் படத்தை மறக்காமல் குறிப்பிட்டு விடுகிறார்கள். 

பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் படம் மட்டும் இப்போது வந்திருந்தால், சுப்பரமணியபுரம், பருத்திவீரன் போன்ற படங்களை தின்று செரித்திருக்கும். இதுவும் சிறந்த திரைக்கதையோடு கூடிய நகைச்சுவை படம். இப்படத்தில் இளையராஜா தன் இசை மூலம் காதல் பரவசத்தை உருக்கியோட விடுவார்.  மேலே கூறிய இயக்குனர்கள் முன்னிருத்திய நிறைய படங்களுக்கு மெருக்கூட்டியவை இளையராஜாவின் இசை. அப்படியே இந்த ஒலிஒளித்துண்டைக் கேளுங்கள்.



நெத்தியடி என்றொரு பாண்டியராஜன் படம். அப்படத்தில் கதை வடதமிழகத்தில் நடக்கிறது. இப்படத்தில் வரும் பாட்டி இறந்து போன வீட்டில் நடக்கும் காட்சி மிகவும் இயல்பு. இப்படத்தில் ஜனகராஜும், பாண்டிராஜனும் அசல் வடதமிழகத்து வட்டார மொழியில் பேசுவார்கள். தமிழ்சென்னை முதல் தருமபுரி வரை ஓரளவு சென்னைத் தமிழ் போலத் தான் பேசுவார்கள். ஒன்பது ரூபாய் நோட்டு படத்திலும் சத்யராஜும், அர்ச்சனாவும் ஓரளவு விழுப்புரம் தமிழில் தான் பேசுவார்கள். எல்லாம் தங்கர்பச்சான் முயற்சியாக இருக்கும். ஆனால் காஞ்சிவரம் பொருந்தவே பொருந்தாத முகங்கள், பொருத்தமில்லாத நடை உடை பாவனைகள், இயல்புத் தன்மையே இல்லாத திரைக்கதை, ஒத்துப்போகாத பேச்சு மொழி என்று எக்கச்சக்க ஓட்டைகள் உள்ள படம். இப்படத்திலோ காஞ்சிபுரத்தில் „ஏலே, வாலே“ என்று தென்னாட்டு தமிழர்கள் போல பேசுகிறார்கள். பிரகாஷ்ராஜ் நடிப்பில் யாரும் குறைகூற இயலாது. காஞ்சிவரம் எப்படியோ இரண்டு தேசியவிருதுகளைப் பெற்றுவிட்டது.
(தொடரும்)

Monday, December 21, 2009

பாட்டி வடை சுட்ட கதையும் நம்ம பிரபலங்களும்



வெண்ணிறாடை மூர்த்தி:
கலக்கலான ஒரு ஊருல கட்டுமஸ்தா ஒரு ஆயா இருந்துசான். ஒருநாள் அந்த ஆயா கலர்கலரா வடை சுட்டுகிட்டு இருந்தப்போ! கபால்னு வந்த ஒரு காக்கா ஆயா வடைய கவ்விகிட்டு போயிடுச்சாம். ஆயாகிட்ட இருந்து வடைய லபக்குனு லவட்டிகிட்டு வந்த காக்கா, மரத்துமேல குந்திகிச்சான்.அந்தப் பக்கம் பப்ரபேனு வந்த காட்டுநரிக்கு காக்கா வச்சிட்டு இருந்த வடைய பார்த்து குஜாலாயிடுச்சி. „ப்ப்ப்ப்ருரு! காக்கா! குதுகலமா இருக்கிர நீ! இப்படி குந்தவச்சி உட்காரலாமா! குத்துமதிப்பா ஒரு பாட்டு பாடு“ னு சொல்லுச்சாம். கபாலத்துல கட்டெரும்பு புகுந்த மாதிரி வெட்கத்துல வெடவெடத்துப் போன காக்கா மடமடனு பாட்டு பாட, லொடக்குனு விழுந்த வடைய மடக்கு நரி எடுத்துகிட்டு ஓடிபோச்சாம். காக்கா சொல்லுச்சாம் „ வடை போச்சே!“.

மேஜர் சுந்தராஜன்:
For the past 10 years கிட்டதட்ட பதினஞ்சி வருஷமா இந்த கதைய யாருகிட்டயாவது சொல்லனும்னு நெனச்சிட்டு இருந்தேன். Today I got it. இன்னைக்குத் தான் அந்த சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. Sorry! நீங்க கேட்டுதான் ஆகணும். ஒரு விலேஜ்ல a old lady ஒரு வயசான பாட்டி (பாட்டின்னாவே வயசானவங்க தான்ய்யா!) இருந்தாங்களாம். அவங்க வடை சுட்டு பிஸ்னஸ் பண்ணிகிட்டு இருந்தாங்க. அந்தப் பக்கம் வந்த Crow  ஒரு காக்கா வடைய திருடுகிட்டு போயிடுச்சு. வடைய கொண்டு போன காக்கா ஒரு மரத்துல உட்காந்துச்சு. அந்தப் பக்கம் வந்த Jackle அதாவது நரி “ you damit! படவா ராஸ்கல்! நீ எப்படா திருடன் ஆனே!”னு கேட்டது. அதுக்கு அந்த காக்கா “எசமான்! என்ன மன்னிச்சிடுங்க எசமான்! இனிமே இந்த வடை மேல சத்தியமா திருடமாட்டேன்” னு சொல்லி கதறியழுச்சு. Then they became very good friends. yes. நல்ல நண்பர்களாகிட்டாங்க.

உலகமகாநாயகன் கமலஹாசன்:
சரித்திரக் கதைகேட்டு சலித்துப் போன உங்களுக்கு சாகாவரம் பெற்ற கதை ஒன்று சொல்லப் போகிறேன். இது கலைஞர் சொல்லிக் கொடுத்த வேதம். நடிகர் திலகத்தின் மடியில் அமர்ந்து கற்ற பாடம். மக்களும், மாக்களும் பரிணாம வளர்ச்சியின் பாதையில் நீர் அருந்திக் கொண்டிருந்த போது, தென்னிந்திய பகுதியில் ஒரு தமிழ் கிழத்தி வடை சுட்டு விற்றுக் கொண்டு வந்தாள். கண்மையின் கருமை கொண்ட காகம் ஒன்று, ஒரு வடையை அபகரித்துச் சென்றது. அபகரிப்பு அதிகரிக்கும் பூமியில் புரட்சி பிறந்தே தீரும். புரட்சியின் வடிவில் புத்திசாலி நரியொன்று, காகத்தினிடம் கடவுள் வாழ்த்து பாடச் சொன்னது. வாழ்த்துப் பாடிய காகம் இழந்தது வடை மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கையையும் தான்.

கலைஞர் கருணாநிதி:
ஈழத்தின் துயரை நெஞ்சில் சுமந்தபடி ரஷ்யாவின் “தாய்காவியம்” போல ஒரு “ஆயாகாவியம்” (ஆய்காவியம் அல்ல!) எழுத புறப்பட்டுவிட்டது எனது கரங்கள். வாழ்வைத் தொலைத்த ஒரு மூதாட்டியின் வடை திருடிய காகத்திடம் இருந்து வடையை அபகரித்த நரி குற்றவாளிக் கூண்டிலே நிற்கிறது.
இடம்: நீதிமன்றம்
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.
காகத்தைப் பாடச் சொன்னேன். வடையைத் களவாடினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. காகத்தைப் பாடச் சொன்னேன். பாட்டுக்குப் பாட்டு போட்டி நடத்தி பரிசு கொடுப்பதற்காக அல்ல. கோவில் காகம் கோவிந்தா என்று கத்தாது என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக. வடையைத் களவாடினேன். சரக்குக்கு சைட்டிஷ் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. வயதான மூதாட்டியின் வடை திருடிய வன்மையைக் கண்டிப்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. பிரியாணியும், சரக்கும் வாங்கிக் கொடுத்து கூட்டம் கூட்டுகிறார்களே அரசியல்வாதிகள் – அதைப் போல.

என்னைக் Cunning Jackle, Cunning Jackle என்கிறார்களே, இந்தக் Cunning Jackle ன் வாழ்க்கைப் பாதையிலே aboutturn அடித்துப் பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காகங்கள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். ஆயா சுட்ட வடை இல்லை என் பாதையில், காக்கா சுட்ட குறவர்கள் நிறைந்திருந்தனர். வடையைத் தீண்டியதில்லை நான். ஆனால் வடை சுட்ட கடாயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு காடு பிழைக்க ஒரு காடு. செய்யாற்றில் பிறந்த நான், வடை தின்ன சென்னைக்கு ஓடோடி வந்தேன். நாய் என்று நினைத்து என்னை வாலாட்டச் சொன்னார்கள். ஓடினேன். ஆண்நாய்கள் ஒரு பக்கம் துரத்தின. ஓடினேன். என் முகத்தில் விழித்தால் நல்லதென்று மஞ்சள் துண்டணியும் ஒரு கூட்டம் விரட்டியது. ஓடினேன். ஓடினேன். வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என்னை?

நாய் என்று நினைத்து என்னை வாலாட்ட சொன்னது யார் குற்றம்? டிஸ்கவரி சேனல் பார்க்காமல் சீரியல் பார்க்கும் சென்னைவாசிகள் குற்றம். ஆண்நாய்கள் துரத்தியது யார் குற்றம்? மார்கழி மாசம் வந்ததின் குற்றம். என் முகத்தில் விழித்தால் நல்லதென்று மஞ்சள் துண்டணியும் ஒரு கூட்டம் விரட்டியது யார் குற்றம்? அவர்கள் முகத்தில் நான் விழித்தால் என் கதி என்ன ஆகுமென்று யோசிக்காத வீணர்களின் குற்றம். இக்குற்றங்கள் களையப்படும் வரை நரிகளும் காகங்களும் குறையப்போவதில்லை. இதுதான் என் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.

உரைநடையின் உவகையில் உரைந்து கரைந்து போன என் உடன்பிறப்பே!என் கவிதையையும் சற்றுகனிந்துருகி கேளாய்!

ஈழத்துடன் கவிதை பகிர்ந்து கொல்ல ஒரு திட்டம்
தமிழகத்தில் காங்கிரசுடன் தொகுதி பகிர்ந்துகொள்ள ஒரு திட்டம்
ஈழத்தில் சகோதரயுத்ததை நிறுத்த ஒரு திட்டம்
தமிழகத்தில் சகோதர அரசியல் வளர்க்க ஒரு திட்டம்
ஈழத்தில் ஒரு வாய்க்கரிசி திட்டம்
தமிழகத்தில்  ஒரு கிலோ அரிசி திட்டம்
திட்டங்கள் எத்தனை எத்தனை! அத்தனையும் திகட்டாதவை!
இரந்துகேட்ட தமிழீழித்தால் வந்தது சுடுகாடு
இறந்துகெட்ட மக்களுக்கான கூப்பாட்டுக்கு ஒரு மாநாடு
வாழ்க அண்ணா நாமம்! வாழ்தமிழ் மக்கட்கு பட்டை நாமம்!

Thursday, December 17, 2009

சண்டைய நிறுத்துங்கண்ணே!

பதிவுலக நண்பர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு எழுத்தாளர் (சாரு) தனது சமீபத்திய இடுகையொன்றில் அவரைப் போன்ற விமர்சித்தே பேர் வாங்கும் ஒரு எழுத்தாளரை (ஞாநி) சரமாறியாக திட்டித்தீர்த்துள்ளார் (ஒரு வேளை விமர்சிப்பதில் போட்டியாக இருக்கும்).

விமர்சிக்கும் முக்கிய குற்றச்சாட்டுகள்:




\\
ஒரு வாரத்திற்கு முன்பு உடல் ஊனமுற்றோரின் நிகழ்ச்சி ஒன்றுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டாராம். (ஞாநியின் வார்த்தைகளிலேயே தருகிறேன்). அவருக்கு முன்னே அமர்ந்திருந்த 300 பேருமே ஏதோ ஒரு விதத்தில் உடல் ஊனமுற்றோர். அவர்கள் எல்லோருமே மாதம் 2000 ரூ. கிடைத்தால் போதும் என்ற நிலையில் இருப்பவர்கள். ’ லாட்டரி சீட்டு விற்று கூட பிழைத்துக் கொள்வோம்; அதற்கான ஒரு அடிப்படைப் பண உதவி தேவை’ என்பதே அவர்களுடைய வேண்டுகோளும் கோரிக்கையுமாக இருந்தது. நான் (ஞாநி) அவர்களிடம் சொன்னேன். நீங்களெல்லாம் மனுஷ்ய புத்திரனை ரோல் மாடலாகக் கொள்ள வேண்டும். அவர் கல்வி என்ற ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தார். இன்று தமிழர்கள் எல்லோருக்கும் தெரிந்த பதிப்பாளராக இருக்கிறார். அதே போல் நீங்களும் கல்வியைக் கற்று முன்னேறுங்கள். என்று அந்த ஊனமுற்றவர்களிடம் மனுஷ்ய புத்திரனை உதாரணம் காட்டிச் சொன்னேன். அந்த அளவுக்கு நான் (ஞாநி) மனுஷ்ய புத்திரனை மதிக்கிறேன். அவர் மட்டும் கல்வியைத் தன் கையில் எடுக்காமல் இருந்திருந்தால் அவரும் லாட்டரிச் சீட்டு தானே விற்றுக் கொண்டு இருந்திருப்பார்?
ஞாநியின் வார்த்தைகளை அப்படியே மேற்கோள் காட்டியிருக்கிறேன்.
\\
\\
அமெரிக்காவில் இருப்பவர்கள் தயவு செய்து சொல்லுங்கள். உங்கள் ஊரில் ஒரு கறுப்பின மனிதனை நீக்ரோ என்று அழைத்தால் எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்? அத்தனை ஆண்டுகள் ஞாநியை சிறையில் அடைக்க வேண்டும். ஏனென்றால் அவர் மனுஷ்ய புத்திரனின் தேக அடையாளத்தைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டார். அது மட்டுமல்ல; கல்வி இல்லாவிட்டால் அவர் தெருவில் லாட்டரிச் சீட்டு விற்றுக் கொண்டிருந்திருப்பார் என்று சொல்லி விட்டார். ஒரு தலித்தை அந்த சாதியைச் சொல்லித் திட்டும் ஒரு வார்த்தையால் குறிப்பிட்டால் எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அத்தனை ஆண்டுகள் ஞாநியை சிறையில் தள்ள வேண்டும்.
\\


சாரு சார்! எதுக்கு இப்படி கோபப்படுறிங்க. ஒரு உதாரணத்துக்கு ஒரு தலித் மாணவனிடம் "அம்பேத்கார் கூட ஒரு தாழ்த்தப்பட்டவர்தான். அவரோட படிப்புதான் இந்தியாவில் அவரை ஒரு அறிஞராக அனைவரையும் ஒத்துக்கொள்ளவைத்தது. நீ நல்லா படிச்சா தான் அம்பேத்கார் மாதிரி வருவே!" என்று சொன்னால் தப்பா. இல்லை! இல்லை! அம்பேத்கார் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவரை எப்படி எடுத்துக்காட்டாக கூறலாம் என்று உங்களால் கேட்க முடியுமா? "அம்பேத்கார் ஒரு தாழ்த்தப்பட்டவர்" என்று கேவலப்படுத்துகிறோம் என்று சொல்ல முடியுமா? அம்பேத்கார் எங்களுக்கு எப்படி ஒரு கலங்கரைவிளக்கம் போல இருந்தாரோ? அதுபோல மாற்றுத்திறனுடையவர்களுக்கு மனுஷ்யபுத்திரன் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கக் கூடாதா? அம்பேத்கார் கூட கல்வி தான் தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்த சரியான வழி என்று கூறியுள்ளார். இது மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கும், திருநங்கைகளுக்கும் பொருந்தும்.

\\
உடல்ரீதியான பிரச்சினைகள் கொண்டவர்களின் துன்பங்கள் என்பது நம்முடைய நாட்டில் முழுக்க முழுக்க சமூகரீதியானவை. மொத்த அமைப்பும் அவர்களுக்கு எதிரானதாக இருக்கிறது. அரசுப் பணிகளில் அவர்களுக்கு ஒதுக்கபட்டுள்ள இடஒதுக்கீட்டிற்கான இடங்கள் கூட நிரப்பப்படுவதில்லை என்பதுதான் உணமை. இதற்காக அவர்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். நம்முடைய வீடுகள், பொது இடங்கள், போக்குவரத்து அமைப்புகள் யாவும் அவர்களுக்கு எதிராக இருக்கின்றன. எல்லவற்றையும்விட மாற்றுத்திறன் கொண்டவர்களைப் பற்றிய சமூக மனோபாவம். ஒரு தலித் இந்த சமூகத்தில் எவ்வளவு பெரிய ஸ்தானத்தை அடைந்தாலுல் அவருடைய சாதிய இழிவிலிருந்து எப்படி விடுபட முடியவில்லையோ அதேபோல மாற்றுத் திறன்கொண்ட ஒருவர் எத்தகைய சாதனைகளைச் செய்தாலும் அவர் ஒரு குறைவுபட்ட மனிதராகத்தான் பார்க்கப்படுகிறார். அவர் பிற குறைவுபட்ட மனிதர்களுக்கு மட்டுமே ஒரு முன்னுதாரணம். இத்த்கைய பார்வை கொண்டவர்களுக்கு ஞாநி ஒரு சிறந்த உதாரணம். ஞாநி மனுஷ்ய புத்திரனிடம் காட்டும் மனோபாவம் என்பது அவரது சாதிய மனோபவத்தின் ஒரு நீட்சியே. அவர்களால் மனிதர்களை வேறு எப்படியும் பார்க்கவோ வகைப்படுத்தவோ முடியாது. வேண்டுமானால் யாராவது ஒரு பிராமணர் சங்க கூட்டத்தில் போய் ‘ சங்கரன்தான் நீங்கள் பின்பற்ற வேண்டிய முன்உதாரணம். உங்களுடைய சாதித் திமிரை எந்தவிதத்திலும் விட்டுக் கொடுக்காமல், அதே சமயம் ஒரு போலி ஜனநாயக, போலி முற்போக்கு முகமூடியையும் அணிந்துகொண்டு வெற்றிகரமாக உலா வரவேண்டுமானால் நீங்கள் ஞாநியை பின் பற்றுங்கள் ’ என்று உரையாற்றலாம்.
\\


அரசு ஒதுக்கப்பட்ட இடங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மக்கள் பங்கெடுக்க முடியாமல் இருப்பதற்கு சரியான விழிப்புணர்வு இல்லாமையும், கல்வியின்மையும், அரசின் மெத்தனமும் தான் முக்கிய காரணிகளாகும். (இங்கே அழுத்தி உலகமயமாக்கலுக்குப் பின் ஊனமுற்றோருடையநிலை பற்றிய பதிவை ப் படிக்கவும்)

ஞாநி சொல்லாத சாதி ஒன்றை நீங்களாகவே எடுத்துக் கொண்டு அவருடைய சாதி பற்றி பேசுரிங்க. இப்ப எல்லாம் முற்போக்காகக் காட்டிக் கொள்ள ஒரே வழி "சாதிதிமிர் என்று சொல்லிவிட்டு, அடுத்தவன் சாதியைப் பற்றி புறங்கூறுவது" . அதுவும் ஒரு வகை சாதித்திமிர் தான்.

\\சாரு நிவேதிதாவாகிய நான் சுரணையற்றுப் போய் விட்டேன். மானம் கெட்டுப் போய் விட்டேன். இல்லாவிட்டால் இப்படிப்பட்ட அருவருப்பான, ஆபாசமான, அயோக்கியத்தனமான வசையை ஒரு ஆள் மனுஷ்ய புத்திரனின் மீது வீசும் போது கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டேன். தமிழ்ச் சமூகத்தைப் போலவே நானும் மானம் கெட்டுப் போய் விட்டேன். \\

சுரனை, மானம் எல்லாம் போச்சு சரி! நீங்க சும்மா இருந்ததுக்கு எதுக்கு தமிழனை இழுக்கிறிங்க. உங்களுக்கு கே.கே நகரை கலைஞர் கருணாநிதி நகர் என்று சொல்ல வேண்டும் என்று ஞாநி கேட்தற்கு வந்த தார்மீகக் கோபம். மனுஷ்யபுத்திரம் பற்றி ஞாநி எள்ளியதாக நீங்கள் நினைத்தபோது எங்கே போனது. அதை அங்கேயே கேட்டு இருக்கலாமே?
\\
ஞாநியும் அவ்வாறே எளிமையின் சிகரமாக விளங்குபவர். லுங்கிதான் கட்டுவார். அது மட்டுமல்ல. தான் லுங்கி கட்டிக் கொண்டு கமலா தியேட்டருக்குப் போனதை குமுதத்தில் எழுதி 50 லட்சம் வாசகர்களுக்கும் அந்தச் செய்தியைத் தெரிவித்தார். ஞாநி மட்டும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால் நமது தேசிய உடையே லுங்கிதான் என்று சட்டம் போட்டாலும் போட்டிருப்பார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த எளிமை மேட்டரால் ஆகர்ஷிக்கப்பட்ட நானும் என்னால் முடிந்த ஒரு எளிமையைப் பின்பற்றி ஒருநாள் ஜட்டியே போடாமல் பேண்ட் போட்டுக் கொண்டு என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஐநாக்ஸ் தியேட்டருக்குச் சென்றேன். எனக்கும் குமுதத்தில் வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்த உடைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையால் எனக்கு நேர்ந்த விளைவுகள் பற்றி எழுதியிருக்கலாம்; ஞாநியின் லுங்கிக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என் ஜட்டிக்குக் கிடைக்கவில்லை. விடுங்கள்.
\\

நீங்களும் தான் தண்ணியடிச்சதை தத்ரூபமாக உங்க பதிவில் வருணிக்கிறிங்க. காசிருந்தால் ஸ்காட்சை ஆறாக வெள்ளமாக ஓடவிடுவேன் என்று எழுதி இருக்கிங்க. (எல்லா குடிமகனும் சொல்லுற வார்த்தை தான்! Including me ). என்ன உங்களுக்கு அதை குமுதத்தில் எழுத வாய்ப்பு கிடைக்கவில்லை.

War is a quarrel between two thieves too cowardly to fight their own battle - Thomas Carlyle

In this contest, we can say

Quarrel is a war between two cowards too thevishly to fight their own battle.


Tuesday, December 15, 2009

Change in democracy



    Always the change is misunderstood in democracy.

தெலுங்கனாவை தனிமானிலமாக காங்கிரஸ் அரசு அறிவித்தபின் ஆந்திராவில் பெரும் அமளியை உருவாக்கியுள்ளது.

    It is a false choice.

தெலுங்கானாவை தனியாக பிரிப்பதால் சந்திரசேகரராவுடன் கூட்டணி அமைத்து தெலுங்கனாவில் ஆட்சியமைக்க காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. ஆந்திராவில் இருந்து எதோ தெலுங்கனா பிரிந்தால் பொதுவுடைமை ஆட்சியா மலரப்போகிறது. அப்போதும் இதே காங்கிரஸ் கும்பல் தான் திருடப்போகிறது. சினிமாவையே ஜாதிரீதியாக ஆந்திராவில் பார்க்க ஒரு பெரிய கூட்டம் உண்டு. இந்த விடயத்தில் எப்படியோ? திருப்பதி நாமகாரருக்குத் தான் வெளிச்சம்.

    We're not perfect, but we do have democracy - Hugo Chavez


**************


காரல்மார்க்ஸின் ஆதர்ச நாயகன் ஸ்பார்சகஸ் (Spartacus).கி.மு-வில் மிகப்பெரிய பேரரசாகத் திகழ்ந்த ரோமாபுரிக்கு ஒரு ஆச்சரியக்குறியாக வந்தவர் தான் ஸ்பாடகஸ். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அடிமைகளை வீரர்களாக்கி கட்டுக்கோப்பான ரோமாபுரிப் படையையே கதிகலங்கடித்தவர். நான்கு அகெடமி விருதுகளை வென்ற Spartacus 1960-ல் வெளிவந்த திரைப்படம். வரலாற்றுப்படங்களில் முக்கியமான படம். Kirk douglas (Basic instincts புகழ் Michaeldouglas -ன் தந்தை) அற்புதமாக நடித்து இருப்பார். ஒரு கூடுதல் தகவல். இந்தப் படத்தில் வரும் ஒரு சிறைச்சாலை காட்சியை அப்படியே விருமாண்டியில் கமல் சுட்டு இருந்தார்.


****************

Monday, November 02, 2009

அழகான ஸ்பானியப் படங்கள்



தமிழில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மொழியிலும் திகில் படங்கள் எடுப்பது மிகக் குறைவு. அப்படி ஒன்றிரண்டு படங்கள் வந்தாலும், ஜிவனற்ற முறையில் எடுக்கப்பட்டதாக இருக்கும். இதுவே அமெரிக்க திகில் படங்கள் என்றால் திரையில் இரத்தம் தெரிக்கும், விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் சகட்டுமேனிக்கு கேமெரா சுற்றிச்சுழலும். இப்படிப்பட்ட எந்த சாயலுமில்லாமல் ஐரோப்பிய படங்களும் ஜப்பானிய கொரிய படங்களும் திகில் வரிசையில் தனித்து நிற்கின்றன. கிளாசிக் படமாகவும்,திகிலாகவும் ஒரு படத்தை எடுப்பது கடினமான காரியம் தான். ஐரோப்பிய படங்களில் ஸ்பானியப் படங்களுக்கு தனியிடம் உண்டு. 

2006ல் வெளிவந்து மூன்று ஆஸ்கார்களை வென்ற Pan´s Labyrinth படம் ஒரே கதையமைப்பில் fairy tale போலவும் classic war genre போலவும் அமைந்திருந்தது. ஒரு குழந்தையின் பார்வையில் இரு தளத்திலும் கதை பயனிக்கும். அட்டகாசமான கிராபிக்ஸ், பிரம்மாண்டமான கலைவடிவம் என்றெல்லாம் கதையளக்கும் இந்திய திரையுலகம், இப்படத்தைப் பார்த்தேனும் கிராபிக்ஸ் காட்சிகளை எப்படி அளவோடு அழகாக காட்டவேண்டும் என்று கற்றுக் கொள்ளவேண்டும். 
 
1944 ஸ்பெனில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கட்படை போராடிக் கொண்டிருந்த காலம். ஒபெலியா தன் கற்பமான தாயுடன் தற்போது மணந்துள்ள தந்தையான கேப்டன் விடலிடம் செல்கிறாள். தேவதைகளின் கதைகளுக்குள் சுற்றித்திரியும் அவளது எண்ணத்திற்கு மென்மையான இடமாகவும் அது அமைகிறது. ஒரு இரவில் அவளை தேவதைகள் பாதாளகுகைக்கு அழைத்துச் செல்கின்றன. அங்கு அவள் சந்திக்கும் faun அவள் பாதாளலோகத்தின் இளவரசி என்று கூறுகிறது. அவள் அந்த லோகத்திற்கு திரும்பிச்செல்ல மூன்று கட்டளைகள் இடப்படுகின்றன. சர்வாதிகார கும்பலுக்கும், போராளிகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நிகழும் இருண்ட கொடுமையான உலகிற்கும், ஒபெலியா தேடியலையும் மாய உலகிற்கும் மாறிமாறித்திரியும் கதை. இறுதியில் நிஜ உலகின் பிம்பங்களால் கசக்கியெரியப்பட்டு, இரத்தமயமான வலிகளுடன் பாதள உலகம் பயணிக்கிறாள் ஒபெலியா. இந்தப் படம் கேன்ஸ் விழாவில் திரையிட்டபோது பார்த்தவர்களின் கைத்தட்டல் அடங்க  22 நிமிடங்கள் பிடித்தது.

Saturday, October 31, 2009

படத்தழுவல்

Hansel and Gretel என்பது ஜெர்மானிய சிறுவருக்கான நீதிக்கதைகளுள் ஒன்று. இந்தக்கதையை சிறுவயதில் பள்ளி ஆசிரியர் சொன்ன ஞாபகம். சிற்றன்னையின் சதியாலும் உண்ண உணவில்லாததாலும் தந்தையால் காட்டிற்கு அனுப்பப்படும் இரு பிள்ளைகள் அங்கிருக்கும் சூன்யகார கிழவியிடம் சிக்கிக்கொள்கிறார்கள். அவளால் கொடுமைப்படுத்தப்படும் பிள்ளைகள் அவளைக் கொன்று தப்பிப்பது தான் கதை.

சமீபத்தில் இதே கதை அமைப்போடு ஒரு தென்கொரிய மொழிப்படத்தைப் பார்த்தேன். இதில் கதாநாயகனை சிறைபடுத்துவது குழந்தைகள். படத்தின் பெயரும் Hansel and Gretel தான். Misery என்று ஆங்கிலத்தில் வெளியாகி ஆஸ்கார் விருது பெற்ற படத்தின் தழுவல் இது. ஒரு எழுத்தாளர் மனம்பிறழந்த ஒரு பெண்ரசிகையிடம் மாட்டிக்கொண்டு தவிப்பதும், மேலும் அவள் கொடுமை அதிகரித்து ஒரு கட்டத்தில் அவளைக் கொன்றுவிட்டு வெளியெறுவதும் தான் கதை. ஜூலிகணபதி இந்தப் படத்தின் ஈயடிச்சான் காப்பி.


பேராண்மை படத்தை வினவு, மதிமாறன், சுகுணா ஏற்கனவே கிழிகிழினு கிழிச்சிட்டாங்க. நான் சொல்ல நினைத்ததை வினவு சொல்லிவிட்டதால், மேற்கொண்டு நானும் கிழிக்க விரும்பவில்லை. பேராண்மை படத்தில் ஜனநாதன் தன்னுடைய கதை என போட்டுக்கொண்ட At Dawn ist quiet here படத்தைக் காண இங்கே அழுத்தவும். படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்க நம்ம ஆளுங்க எப்படி கூத்தாடி கோலம் போட்டிருக்காங்கனு. ஒரு புரட்சிக்கான கதையை புரட்டி எடுத்து இருக்காங்க.