Pages

Sunday, March 21, 2010

இதில் என்ன வேறுபாடு

நாத்திகம் என்றால் கடவுள், கடவுள் சார்ந்த மதங்கள், கடவுள் சார்ந்த மூட நம்பிக்கைகளை எதிர்ப்பது. அதோடு நின்றுவிடுகிறது அதன் வேலை. பகுத்தறிவு என்பது அதனையும் கடந்தது. மதம் மட்டுமல்லாமல், சாதி, பழக்கவழக்கங்கள், உணவு, உடை என பல்வேறு பரிமாண மாற்றங்களை உள்வாங்கியது. காலத்திற்கு, சூழ்நிலைக்கேற்ற மாற்றங்களை, கருத்துகளை ஏற்றுக்கொள்வது.

பெரியார் இதைத்தான் திரும்ப திரும்ப சொல்லிவிட்டு சென்றார். ஆனால் அவரின் கொள்கைக் காவலர்களாக இன்று வலம்வருபவர்கள், இதை சுத்தமாக மறந்துவிட்டார்கள். ஒருகாலத்தில் பெரியார் பிராமணர்களை பார்ப்பான் என்று சொன்னார். அதையே இவர்கள் பிடித்துக் கொண்டு வம்பளப்பது ஏன்னென்று தெரியவில்லை. இன்று பூணூல் போட்டவர்களை விட பூணூல் போடாத பார்ப்பான்கள் தான் மிகமிக அதிகம். அம்பேத்கார் புத்தமதத்திற்கு மாறினார் என்று புத்தமதத்திற்கு ஓடுபவர்கள், பெரியார் இஸ்லாத்திற்கு போகச் சொன்னார் என்று இஸ்லாத்தின் பெருமை பற்றி பேசுபவர்கள் எல்லாரும் ஆட்டுமந்தைகளே. ஒருவேளை தானாக யோசித்து அந்த முடிவை எடுப்பாராகில் சரி.

ஒழுக்கம் என்பது மதத்தால் வருவது அல்ல. தனிமனிதனின் சூழ்நிலை, மனநிலையைப் பொருத்தது. ராஜபக்சே, பொன்சேகா போன்ற கொலைகாரர்கள் புத்தமதத்தில் இருப்பதால், அம்பேத்காரிய பெரியாரியவாதிகள் புத்தமதத்தைப் பற்றி விமர்சனம் செய்தார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அடுத்தவனை பார்ப்பான் என்று திட்டிவிட்டு தன் சாதி பெருமை பேசும் பல பெரியாரிஸ்ட்களைப் பார்த்திருக்கிறேன்.

இது இப்படியென்றால், இன்னுமொரு பக்கம் கடவுளால் மொத்தமாக கைவிடப்பட்டாலும், ஈழத்தமிழர்கள் மதப்பற்றிலும், கடவுள் பற்றிலும் ஊறித்திளைக்கிறார்கள். போரினால் பெரிதாக பாதிக்கப்பட்டதாக் சொன்னாலும், சகோதரர்கள் வேலிக்குள் முடங்கிக் கிடந்தாலும்  ஈழத்தமிழர்கள் கோவிலில் பாலபிஷேகம் செய்வதும், தேங்காய் உடைப்பதும் குறைந்தபாடில்லை. ஒரு மதம் தன்னைச் சார்ந்தவனை பண்படுத்த தவறினால், பிறகெதற்கு அதனுடைய கட்டுப்பாடுகள். மனிதர்கள் தங்களுக்கு தேவையான, வசதியான விடயங்களை வைத்துக் கொண்டு இயலாதவற்றை, வெறுப்பனவற்றை எதாவது காரணம் சொல்லித் தட்டிகழித்துக் கொள்வதே மதங்களின் நிலை. நிறுவனமயமாகிவிட்ட மதங்களில் இது சிறந்தது, இது தாழ்ந்தது என்ற ஐயமே தேவையற்றது. இந்துமதம் கூவம் நம்பர் 1 என்றால், இஸ்லாம் கூவம் நம்பர் 2. இதில் என்ன வேறுபாடு. 

Tuesday, March 02, 2010

9 (2009) - திரைப்படம்

மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இறுதிப்போர் நிகழ்ந்து எல்லோரும் அழிந்துகிடக்கும் தருவாயில் தன்னுடைய உயிரை பொம்மைகளில் அளித்துவிட்டு இறக்கிறார் ஒரு விஞ்ஞானி. அப்படி கடைசியாக உருவாக்கப்பட்ட பொம்மை '9'. உயிர்தெழுந்து வரும் 9, அழிவுகளிடையே நடந்து செல்லுகையில் ஒரு இயந்திர மிருகத்தால் துரத்தப்படுகிறது.  ஆனால் துரத்தப்படும்போது 9-ஐ பொம்மை 2 காப்பாற்றுகிறது. பிறகு தன்னுடைய சில தோழர்களிடம் 9-ஐ அறிமுகம் செய்கிறது. அந்தக்கூட்டத்திற்கு தலைமை வகிப்பது பொம்மை 1. ஆனால் அது ஒரு கோழை. 2 இயந்திரத்தால் பிடிக்கப்பட்ட்டப்பின், 2-ஐ காப்பாற்றி வருவதாக 9 செல்கிறது. ஆனால் சென்ற இடத்தில் செயலிழந்து கிடக்கும் இயந்திர உற்பத்தியை தொடக்கிவிட்டு விடுகிறது. ஊக்குவிக்கப்பட்ட இயந்திரங்களை 9ம், அதன் நண்பர்களும் எப்படி சமாளித்து அழித்தார்கள் என்பது மீதி கதை. முதலில் நான் '9' குறும்படத்தை பார்த்தேன். படத்தின் அனிமேஷன் காட்சிகளும், விடயமும் புதுமையாக இருந்தது. இந்தக் குறும்படம் 2005-ம் ஆண்டின்  ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டது. மிகுந்த ஆவலுடன், பிறகுதான் '9' என்று முழுநீளப் படமாக வந்ததையறிந்து, அந்தப்படத்தையும் பார்த்தேன்.  இப்படம் ஷான் அக்கரால் இயக்கப்பட்டது. குறும்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குனர் டிம் பர்டன் தானே இப்படத்தை தயாரித்தார். பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும், வித்யாசமான படமாக அனைவராலும் புகழப்பட்டது. நீங்களும் பார்த்து மகிழ '9' குறும்படத்தின் படத்துண்டை கீழே கொடுத்துள்ளேன். பார்த்துவிட்டு தங்களது கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும்.