முன்பு
ஒரு ஆங்கிலப்படம் பார்த்தேன். அப்படத்தில் 1910-களில் நடப்பதான கதை. அதில் ஆங்கிலத்தில்
‚சீத்தா (Cheetah)‘ எனப்படும் ஒரு வகைப்புலி காட்டப்படும். சாதாரணமாக சீத்தா வகைப்புலிகள்
ஆப்பிரிக்காவில் தானே இருக்கும். எப்படி இந்தியாவில் காட்டுகிறார்கள்? என குழப்பம்.
இயக்குனரின் தவறாக இருக்கலாம் என விட்டுவிட்டேன். முன்பு இந்திய அரசர்கள் இதனை வேட்டைக்காக
பயன்படுத்தி இருக்கிறார்கள் எனப் படித்திருக்கிறேன். ஆனால் அவற்றை ஆப்பிரிக்காவில்
இருந்து கொண்டுவந்திருக்கப்படும் என நினைத்திருந்தேன். பிறகு தான் தெரிந்தது. இதன்
பெயர் தமிழில் சிவிங்கிப்புலி. சீத்தா என்பது சம்ஸ்கிருதப் பெயர்.
ஒரு காலத்தில் சிவிங்கிப்புலிகள்
இந்தியதுணைக்கண்டம் முழுக்க இருந்திருக்கிறது. தற்போது அரேபியா முதல் இந்தியா வரை வெறும்
70 – 100 சிவிங்கிப்புலிகள் மட்டுமே உள்ளன. அவற்றில் பெரும்பாலும் ஈரானில் மட்டுமே உள்ளன. வெள்ளையர்
ஆட்சிக்காலத்தில் பொழுதுபோக்கின் பெயரால் பல சிவிங்கிப்புலிகள் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன.
பிறகு சிவிங்கிப்புலிகளின் இருப்பிடங்களான எத்தனையோ புல்வெளிகள் மக்களின் வாழ்விடங்களாகவும்,
விளைச்சல் நிலமாகவும், மேய்ச்சல் நிலங்களாவும் மாற்றப்பட்டுவிட்டன. இந்தியாவில் முதன்முதலாக
ஒரு விலங்கு செயற்கையாக முற்றிலும் அழிக்கப்பட்டதென்றால் அது சிவிங்கிப்புலியே. 1952ல்
இவை முற்றிலும் இந்தியாவில் அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மறுபடியும் ஆசியவகை சிவிங்கிப்புலிகளை இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டம் (Project Cheetah) இந்தியாவிற்கு உள்ளது.
2009ல் ஈரானிய அரசுடன் இது குறித்து பேச்சுவார்த்தையும் நடந்தேறியது. ஆனால் ஆசிய சிவிங்கிப்புலிஜோடிகள்
அல்லது திசுக்களுக்கு (க்லோனிங் முறையில் உருவாக்க) பதிலாக ஈரான் ஆசிய சிங்கங்களை கேட்டுள்ளது.
அவ்வாறு கொடுக்க இயலாது என இந்திய அரசு மறுத்துவிட்டது. வேறுவழியின்றி தென்னாப்பிரிக்காவிடமும் இந்திய
அரசு சிவிங்கிப்புலிகளை கேட்டுள்ளது.
சில அதிக தகவல்களுக்கு தியோடர் பாஸ்கரன் தமிழில் எழுதிய கட்டுரை பார்க்கவும்.
சில அதிக தகவல்களுக்கு தியோடர் பாஸ்கரன் தமிழில் எழுதிய கட்டுரை பார்க்கவும்.
****************************************************************************************
ஒரு
ஊரில் ஒரு வணிகன் இருந்தானாம். ஒருநாள் அவன் வியாபாரம் எல்லாம் முடிச்சு ஒட்டகத்தில்
ஊரு திரும்பிக்கொண்டு இருந்தான். வரும்வழியில் கடவுள் தொழுகைக்கு நேரமாகிவிட்டது. ஓரமாக
ஒட்டகத்தை விட்டுவிட்டு, தொழுகை செய்ய ஆரம்பிச்சான். தொழுகைய முடிச்சி வந்து பார்த்தா
ஒட்டகத்தை காணோம். இருட்டி வேற போச்சு. ஒட்டகத்தை தேடவும் வழியில்லை. ஒட்டகத்தில் தான்
அவன் கொண்டுவந்த பணமும் இருக்கு. அவனுக்கு ஒரே கோபம். வானத்தைப் பார்த்து „கடவுளே!
உன்னை தானே வணங்கிக் கொண்டிருந்தேன், இப்படி நீ செய்யலாமா? ஒட்டகம் ஓடி போச்சே! நான்
என்ன செய்ய!“ எனக் கத்தி புலம்பிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியா ஒரு சூஃபி பெரியவர்
வந்தராம். கடவுளிடம் புலம்பிக்கொண்டிருந்த வணிகனைப் பார்த்து „தம்பி! கடவுளை ஏன் திட்டுரே“
என்று கேட்டார். வணிகன் நடந்ததைச் சொன்னான். அதற்கு பெரியவர் „கடவுளைக் கும்பிடு! ஆனால்
அதுக்கு முதல் ஒட்டகத்தை கட்ட வேண்டியது தானே!“ என்றார்.