Pages

Saturday, February 20, 2010

இந்தியாவை புரையோட வைக்கும் புரையிரும்பாலைகள்

நாட்டிற்கு முன்னேற்றம் அவசியம், அந்த அவசியம் நாட்டினுடைய வளத்தையும் சுற்றுப்புறசூழலையும் சீர்கெடுத்துத்தான் வளரவேண்டுமா? இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் புரையிரும்பு ஆலைகள் அதிக அளவில் பெருகிவருவது. வெவ்வேறு சுற்றுப்புற சுகாதார நாசங்களால் மக்கள் அவதியுறும் வேளையில், புரையிரும்பு (sponge iron) என்ற DRI (Direct-reduced iron) இரும்பு உற்பத்தியால் இந்தியா புரையோடிக் கொண்டிருக்கிறது. புரையிரும்பு நவீன எஃகு உற்பத்திக்கு முக்கியமான மூலப்பொருள். இரும்புத்தாதுவை நிலக்கரி அல்லது எரிவாயுடன் ஆக்ஸிசன் ஒடுக்கம் செய்வதனூடாக உலையில்லாமல் புரையிரும்பு தயாரிக்கப்படுகிறது. இம்முறை அதிக லாபத்தையும் குறைந்த முதலீட்டையும் கொண்டது. உலகிலேயே இந்தியாவில் தான் புரையிரும்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 20% உலகஉற்பத்தியை இந்தியா கொண்டுள்ளாது. புரையிரும்பாலை மிகுந்த லாபம் ஈட்டித் தருவதாக உள்ளது. 100 டன் உற்பத்தி செய்யும் ஆலை, அதன் முதலீட்டை வெறும் 18 மாதங்களில் மீட்டெடுப்பதாக சொல்லப்படுகிறது. ஆதலால் புரையிரும்பாலைகளின் மீதான முதலீடுகள் அதிகரிக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் கட்டுமான தொழிலின் வளர்ச்சியால், இரும்பின் தேவை அதிகமாக உள்ளது. ஆகவே எஃகு உற்பத்தியின் முலப்பொருளாகிய புரையிரும்பும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. 

 

இரும்புத்தாது, நிலக்கரி சுலபமாக கிடைப்பது பொருத்து, பெரும்பாலான புரையிரும்பாலைகள் ஒரிசா, ஜார்கண்ட், சடிஸ்கார், மேற்குவங்காளம் போன்ற மத்தியகிழக்கு மாநிலங்களில் அமைந்துள்ளன. ஆந்திரா, தமிழ்நாடு, கோவா, குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களிலும் புரையிரும்பாலைகள் உள்ளன. ஒரிசாவில் மட்டும் கிட்டத்தட்ட இந்தியாவின் 60% புரையிரும்பாலைகள் அமைந்துள்ளன. 1988-ல் ஒரு மில்லியன் டன்னாக இருந்த இந்திய புரையிரும்பு உற்பத்தி, 2005-ல் 11.82 டன்னாக இருந்த வளர்ச்சிகண்டு, 2006-2007-ல் 16.27 டன்னாக உயர்ந்து, 2009-ல் 20 டன்னை விஞ்சி நிற்கிறது. புரையிரும்பு தயாரிப்பில் இரண்டு வகையுள்ளது, 1. நிலக்கரி சார்ந்தமுறை, 2. எரிவாயு சார்ந்தமுறை. உலகின் மற்ற நாடுகளில் புரையிரும்பு அதிகமாக எரிவாயு பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அதனால் அவற்றிலிருந்து புகை வெளியேற்றப் படுவதில்லை, மேலும் மாசுபடுதலும் குறைவாக உள்ளது.  ஆனால் முதலீட்டளவில் பார்த்தால் எரிவாயு பயன்படுத்தி புரையிரும்பு தயாரிக்கும்முறையின் முதலீட்டின் 20% கொண்டு நிலக்கரி சார்ந்த புரையிரும்பாலைகள் அமைத்துவிடலாம். இந்தியாவில் கிட்டத்தட்ட 90% புரையிரும்பாலைகள் நிலக்கரியைப் பயன்படுத்துகின்றன. எனவே, இவை அதிகமான புகையையும், தூசு, மாசுக்களை ஏற்படுத்தி சுற்றுப்புறசூழலை நாசப்படுத்துகின்றன. 


இந்தியாவின் பல புரையிரும்பாலைகளில் நச்சு புகை வெளியேறுவது மட்டுமல்லாமல், அறிவியலல்லாத முறையில் கழிவுகள் அகற்றப்படுகின்றன. சாலையோரங்களில், ஆறுகளில், ஆற்றுப்படுகைகளில் கழிவுகள் கொட்டப்படுகின்றன, ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் புகை கார்பண்டையாக்ஸைட், நைட்ரஜண்டையாக்ஸைட் போன்ற வாயுக்களையும், நுண்ணிய கன உலோகத் துகள்களான காட்மியம், ஜின்க், ஈயம், பாதரசம், மங்கனிஸ், நிக்கல், க்ரோமியம், ஆர்சனிக் போன்றவற்றை கொண்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்கள் சிலிகோசிஸ், ஆஸ்த்மா போன்ற சுகாதாரப் பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டுள்ளனர். நீரில் அதிகம் கலந்துள்ள ஈயம், பாதரசம் போன்ற உலோகங்கள் மூளை-சிறுநீரகப் பிரச்சனைகளை உருவாக்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. பல புரையிரும்பாலைகளின் ஐந்து கி.மீ  சுற்றளவிற்குள் உள்ள நிலம், நீர் இராசயனக் கழிவுகளால் மாசுபடுத்தப்பட்டுள்ளன. அரிசி வயல்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள புரையிரும்பாலைகளின் கழிவுகளால், அரிசி பழுப்பு நிறமாக விளைகின்றன. இதனால் பெரும்பான்மையான விவசாயிகள் தொழிலடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், மாசடைந்து விலைபோகாத அரிசியை உண்ணும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். 

ராய்ப்பூர் வேளாண்மைப் பல்கலைகழகத்தின் ஆய்வுக்கட்டுரையில்
“ராய்ப்பூரின் அருகிலுள்ள சில்தாரா பகுதியில் 25000 ஹெக்டர் நிலப்பரப்பு வாழமுடியாத பகுதியாக உள்ளது”.

கருமையான நச்சு தூசுகள் படிந்த நிலங்கள் மேய்ச்சலுக்குக் கூட பயனற்றுப் போய்விட்டதால், கிராமபுறங்களின் கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்னாற்றலை சேமிப்பதாக கருதி, பகலில் மட்டுமே மாசுவடிகட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இரவில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அருகிலுள்ள பகுதிகளில் சாம்பல் போன்ற மாசுக்கள் படிந்து மையான பூமி போல காட்சியளிக்கிறது. 



இந்திய சட்டப்படி, இரண்டு புரையிரும்பாலைகளுக்கிடையே குறைந்தது 5கி.மீ இடைவெளி இருக்கவேண்டும். ஆனால் சில்தாராவில் 30 ஆலைகள் உள்ளன. ஒரு கி.மீ இடைவெளியில் ஆலைகள் அமைந்துள்ளன. ஒரு கிராமத்திற்கும் புரையிரும்பாலைக்கும் ஒரு கி.மீ இடைவெளி இருக்கவேண்டும். அதுவும் இங்கே மீறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஒரிசா, சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களிலுள்ள பல புரையிரும்பாலைகள் சட்டத்திற்கு புறம்பாக மலைவாழ் மக்கள் வசிக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களில் (Scheduled areas) அமைக்கப்பட்டுள்ளன.



கண்முன்னே நிகழும் அழிவைப் பார்த்துக்கொண்டிராமல், பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் விளைவாக கோவா மாசுகட்டுப்பாட்டுவாரியத்தின் உத்தரவின்படி, முக்கியமான புரையிரும்பாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் ஆலைகள் துவங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ‘லோஹா கரம் ஹை’ (இரும்பு சூடாக இருக்கிறது) என்ற ஆவணப்படம் புரையிரும்பாலையினால் ஏற்படும் சுற்றுப்புறசூழல் சீர்கேட்டினைப் பற்றியது. இப்படம் இந்திய ஆவணப்பட தயாரிப்பாளர்கள் கழகத்தின் சிறப்பு விருதினைப் பெற்றது. ஒரு விருது பெருவதற்காக எடுக்கப்பட்ட ஆவணப்படமாக இல்லாமல், அதையும் தாண்டி முறையற்ற தொழில்மயமாக்கலினால் உண்டாகும் மனிதவுரிமை, சுகாதார, சுற்றுப்புற சீர்கேடு, சட்ட மீறல்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது இந்த ஆவணப்படம்.

உலகமயமாக்கலின் பிறகு, உலகம் முழுக்க தொழில்மயமாகி வரும் இன்றைய நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் எவை என்றால், இந்தியாவும் சீனாவும் தான். என்ன தான் இவை பொருளாதார முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அதற்கு கொடுக்கப்பட்ட விலை மிகமிக அதிகம். சீரற்ற வளர்ச்சிக்காக, நாட்டின் வளத்தையும், நாட்டு மக்களையும் பலிகடாவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா, சீனா போன்ற நாடுகள் முன்னேற்ற புலிகள் போல காட்டிக்கொண்டாலும், தரம்-பாதுகாப்பு விடயங்களில் மக்களை மக்களாகவே மதிப்பதில்லை. மக்களின் நலத்தின் மீது துளியும் அக்கரையின்றி நாட்டினுடைய சுற்றுப்புறசூழலை சீர்கெடுத்து அழிவுப்பாதையில் அழைத்துச் செல்கின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற ஆண்டுச்சந்திப்பில், 163 நாடுகளை சுற்றுப்புறசூழல் செயல்திறன் குறியீட்டெண்களின் வரிசைப்படி வெளியிட்டது. இதில் இந்தியா 123வது இடத்திலும், சீனா 121வது இடத்திலும் உள்ளன. இந்த இருநாடுகளின் வளர்ச்சி, அவற்றின் சுற்றுப்புறசூழலின்மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக்கொள்ள முடியாது. சில இந்திய முதலாளிகளை உலகப்பணக்காரப் பட்டியலில் இடம்பெற வைத்துவிட்டு, மற்றவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கினால் இந்தியா நாடாக இருக்காது, சுடுகாடாகத்தான் இருக்கும். பயனடைவோர் 20% இருந்தாலும், நட்டம் அடைவோர் 80% இருக்கின்றனர். உடைந்த கண்ணாடி பயனற்றுப் போவது போல, சேதமுற்ற சுற்றுப்புறச்சூழலை எவ்வளவு கொடுத்தும் முந்தைய நிலைமைக்கு மீளமைக்க இயலாது. நாம் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு பணம்-பதவி விட்டுச்செல்வதைவிட தூய்மையான நாட்டை, உலகை விட்டுச்செல்ல வேண்டும். 

அரசியல் கொள்கை, பொருளாதார மேம்பாடு, சுற்றுப்புற சூழல் என எல்லாவற்றையும் கடந்துநிற்பதே மனிதநேயம். அதற்கேனும் மனம் இறங்குவார்களா...! 
சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி – கிளியே!
செம்மை மறந்தாரடி?

5 comments:

  1. &&சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
    சிந்தை இரங்காரடி – கிளியே!
    செம்மை மறந்தாரடி&&

    intha varikalodu mudithamai nandru.

    ReplyDelete
  2. உபயோகமான செய்தி.

    ReplyDelete
  3. \\தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக்கொள்ள முடியாது. சில இந்திய முதலாளிகளை உலகப்பணக்காரப் பட்டியலில் இடம்பெற வைத்துவிட்டு, மற்றவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கினால் இந்தியா நாடாக இருக்காது, சுடுகாடாகத்தான் இருக்கும். \\ These type of news worries me a lot. :(

    ReplyDelete
    Replies
    1. இவனுங்க அடிக்கிற கூத்துக்கு நாம் என்ன செய்ய முடியும்.

      Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய