Pages

Tuesday, February 09, 2010

காதல் மீதான புனிதப்போராட்டம் (Jihad for Love)




சில நாட்களுக்கு முன் காதல் மீதான புனிதப்போராட்டம் (Jihad for Love) என்றொரு ஆவணப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. இந்த ஆவணப்படம் இஸ்லாமிய மதத்தில் இருக்கும் ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றியது. இவர்களுடைய மனக்குமுறல்கள், உண்மையான நிலைப்பாடுகள், கடவுள் மீதான பற்றுதல் என  அனைத்தையும் இந்த ஆவணப்படம் கண்முன் நிறுத்துகிறது. ஆவணப்படத்தில் நான் பார்த்தவற்றை சுருக்கமாக கீழே தருகிறேன்.

இரண்டு பெண் ஓரினக் காதலர்கள் குரான் வாசகங்களை படிப்பதாக ஆவணப்படம் தொடங்குகிறது.
தென்னாப்பொரிக்காவில் திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் ஒரு முஸ்லீம் சகோதரர். ஓரினச் சேர்க்கை, மதம், குடும்பம் என  அவருடைய வாழ்க்கை போராட்டமாக இருப்பதாக விவரிக்கிறார். முக்கியமாக ஒரு இஸ்லாமிய மத அறிஞருடன் பேசும்போது குரானில் homosexual act அதாவது molestation  தான் பாவமாக கருதப்படுவதாகவும், homosexual relationship or love பற்றி எதுவும் கூறவில்லை என்றும் கூறுகிறார். அதற்கு அந்தப் பெரியவர் “இஸ்லாம் மட்டுமல்ல எந்த புனிதமான மதமும் ஓரினச் சேர்க்கையை அனுமதிப்பதில்லை.” என்று திட்டவட்டமாக மறுக்கிறார்.
எகிப்தில் ஓரினச்சேர்க்கைக்காக தண்டனை அனுபவித்துவிட்டு பிரான்ஸில் அகதியாக இருக்கும் ஒருவர். அவருடைய தண்டனை கொடுத்தவர்கள் மீதான கோபத்தையும், அனுபவித்த இன்னலையும் நம் முன்னே பதிவு செய்கிறார்.
தங்கள் காதலை இஸ்லாமிய சமூகம் எப்படி அங்கீகரிக்கும் என்றபடி பிரான்ஸில் இருக்கும் இரு பெண் ஓரினக் காதலர்கள். அதில் ஒருவர் பெண் ஓரினச் சேர்க்கைக்கு குரானில் என்ன தண்டனை என்று பார்க்கிறார். “The only punishment is Scolding the women, when there is no penetration” என்று அராபியில் படிக்கிறார்.
ஓரினச்சேர்க்கைக்காக 100 கசையடி வாங்கிய, இரானில் இருக்கும் அமீர். துருக்கியில் தன் காதலனோடு இருக்கிறார்.அவர்களுடைய குடும்ப நலனுக்காக முகம் படத்தில் காட்டப்படுவதில்லை.
துருக்கியில் இருக்கும் பெண் ஓரினக் காதலர்கள். (துருக்கியில் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டங்கள் எதுவுமில்லை.)
பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் சுஃபி கவிஞன்,துறவி ஷா ஹுசைன், இந்துவான மதுலால் இருவருக்குமான காதல். அவர்களுடைய சமாதி, அங்கே ஹுசைனுடைய இறந்தநாளன்று கொண்டாடப்படும் விழா.
இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளரான இளைஞர் ஒருவர். அவருடைய தேடல்.பெண்வேடமிட்ட ஆண்களுடனான ஆட்டம். பின்னணி “மொஹலே ஆஸம்” படத்தில் வரும் பிரபலமான பாடல் “பியார் கியா தோ டர்னா க்யா”.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

ஓரினக் காதலர்கள் மீது மதங்களுக்கு அப்படி என்ன கடுப்போ தெரியாது. சொல்லி வைத்தது போல, எல்லா மதங்களும் இந்த விடயத்தை கடுமையாக எதிர்கின்றன. ஓரினக் காதலை ஆபிராகாமிய மதங்கள் முற்றிலுமாக எதிர்க்கின்றன. கடுமையான தண்டனைகள்  விதிகின்றன, விதிக்கப்பட்டுள்ளன. இந்து மதத்தில் கடவுளே ஓரினக் காதலர்களாக இருந்தாலும், மதம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. மனுதர்மத்திலும், அர்த்தசாத்திரத்திலும் இதற்கான தண்டனைகள் சொல்லப்பட்டுள்ளன. சில மதங்கள் இவற்றை ஒரு சமூகக்கூறாக கூட கருதவில்லை. விலங்குகளில் கூட ஓரினச்சேர்க்கை உண்டு. ஓரினச்சேர்க்கை பரிணாம கொள்கைக்கான ஒரு எடுத்துக்காட்டு. இதுவே தற்போதைய முற்போக்கான, விஞ்ஞான மதவாதிகள் எதிர்க்கக் காரணமாகவும் இருக்கும். இயற்கையாக ஏற்படும் விளைவுக்கு தனிப்பட்ட நபர் எப்படி காரணமாவார். அவரை தண்டிப்பது ஏன்? ஒதுக்குவது ஏன்? 

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

சில நாட்களுக்கு முன் கோவா படம் குறித்த விமர்சனப் பதிவில் நண்பர் ஒருவர் ஓரினச்சேர்க்கையை விமர்சித்திருந்தார். ஓரினச்சேர்க்கை ஓர் அருவருக்கத்தக்க விடயமாக கூறியிருந்தார். “ஓரினச்சேர்க்கை என்பது தவறா?” என்று ஒரு நண்பர் பின்னூட்டமிட, பதிவிட்ட நண்பர் “ஓ! அவனா நீ?” என்று ஒரு பகடி செய்தார். இதில் பகடி செய்ய என்ன இருக்கிறது. ஓரினச்சேர்க்கையை ஆதரித்துப் பேசினால் அவனும்/அவளும் ஓரினச் சேர்க்கையாளராகத்தான் இருக்கவேண்டுமா? அப்படி இருந்தால் என்ன தவறு.

Philadelphia படத்தில் tom hanks ஓரினச் சேர்க்கையாளராக நடித்திருப்பார். முதலில் அவர் ஓரினச் சேர்க்கையாளர், எய்ட்ஸ் நோயாளார் என அறிந்து அவருக்காக வழக்காட மறுக்கும் வழக்குரைஞர், பின்பு மனம்மாறி வழக்காடுவார். அந்த வழக்குரைஞரையும் சிலர் ஓரினச்சேர்க்கையாளராக அணுகுவார்கள்.

Fire படத்தில் இரு பெண்கள் திருமண வாழ்வில் தோல்வியடைந்து ஓரினச்சேர்க்கைக்குத் தள்ளப்படுவார்கள். ஆனால் அந்தப் படத்திற்கு நம்மவர் மத்தியில் இருக்கும் மதிப்பு எப்படி என்று கேட்டுப்பாருங்கள். எதோ நீலப்படம் போல கூறுவார்கள். 

இதுதான் கட்டுக்கோப்பு, ஒழுக்கம் என்ற பெயரில் சாக்கடையாக மணக்கும் நம் சமுதாயத்தின் நிலைமை. எல்லோரும் இதில் நெளிபவர்களே. இதையெல்லாம் பார்த்தும் கேள்வி எழுப்பாமல் இருக்கும் நாமும் இந்தப் புழுக்களில் ஒன்றா என்பதில் அவமானப்படவேண்டும். இதில் எந்த மதத்தையும் நான் தனியாக குறிப்பிடவில்லை. எல்லாவற்றிற்கும் பொருந்தும். பெற்றபிள்ளையின் காதலை ஆதரிக்கும் முற்போக்காளராகக் காட்டிக்கொண்டாலும், அடுத்தவன் பிள்ளை ஓரினச்சேர்கையில் காதலித்தால் முகம் சுளிப்பவர்களே! திருமாலும், சிவனும் சேர்ந்து ஹரிஹரனாகலாம், ஆனால் நம்மோடு இருக்கும், நடமாடும் உறவுகள் செய்தால் தவறா? இவர்களுடைய காதலைத் தடுக்க மதங்களுக்கும், மனிதர்களுக்கும் உரிமை யாரால் கொடுக்கப்பட்டது.

5 comments:

  1. //திருமாலும், சிவனும் சேர்ந்து ஹரிஹரனாகலாம், ஆனால் நம்மோடு இருக்கும், நடமாடும் உறவுகள் செய்தால் தவறா?//

    இதெல்லாம் டூ மச் :-))))

    1. பிள்ளையாரைக் கும்பிடலாம். ஆனால் தும்பிக்கையுடம் குழந்தை பிறந்தால் சந்தோசமாக இருப்பார்களா அல்லது ஆப்புரேசன் செய்வார்களா?

    2.கண்ணனைக் கொண்டாடலாம், ஆனால் தனது பிள்ளை எத்திராஜ் கல்லூரி அருகில் உள்ள மரத்தில் ஏறி எட்டிப் பார்த்து, பல பெண்களுடன் குஜாலகா இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா?

    3.இராதையைப் பற்றி பாடலாம், ஆனால் மணமான தனது பெண் பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்து காதல் வயப்பட்டால் அவளையும் இராதையாக ஏற்க முடியுமா?

    4.அன்னை மேரிக்கு வந்தது போல , ஒரு பிள்ளை தானாக உருவாகியது என்றால் , எந்தக் கண‌வன் ஏற்றுக் கொள்வான்? தீவிர "இயேசு அழைக்கிறார் சபை" பக்தனாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வார்களா?

    5. முகம்மது செய்தார் என்பதற்காக யாரவது அவரைப்போல் திருமணங்கள் செய்ய விரும்பினால் , எத்தனை இஸ்லாம் பெண்கள் தங்கள் கணவனை அனுமதிப்பார்கள்?

    ***

    மதங்கள் எல்லாம் கதைகள். ஜாலியாப் படிக்கனும். அதற்காக அவர்களைப் போல வாழ முயற்சிக்கக்கூடாது. :-)))

    இதெல்லாம் மதவாதிகளுக்குத் தெரியும். நமக்க்குத்தான் தெரியாது.

    .

    ReplyDelete
  2. &&இதெல்லாம் மதவாதிகளுக்குத் தெரியும். நமக்க்குத்தான் தெரியாது.&& நன்றி பலூன்மாமா... இது homosexuality-க்கு மட்டுமே சொன்ன எடுத்துக்காட்டு, கடவுள் செய்த களவாணித்தனங்களை நான் சொல்லவில்லை.

    ReplyDelete
  3. இவர்களுடைய காதலைத் தடுக்க மதங்களுக்கும், மனிதர்களுக்கும் உரிமை யாரால் கொடுக்கப்பட்டது////////

    மிகச்சரி

    ReplyDelete
  4. இவர்களுடைய காதலைத் தடுக்க மதங்களுக்கும், மனிதர்களுக்கும் உரிமை யாரால் கொடுக்கப்பட்டது////////

    மிகத்தவறு

    சரியான முறையில் சிந்திக்க தெரிந்தவனுக்கு மட்டுமே ஏன் தவறு என்று தெரியும்.

    ReplyDelete
  5. 4.முகம்மது செய்தார் என்பதற்காக யாரவது அவரைப்போல் திருமணங்கள் செய்ய விரும்பினால் , எத்தனை இஸ்லாம் பெண்கள் தங்கள் கணவனை அனுமதிப்பார்கள்?

    http://www.onlinepj.com/PDF/download.php?file=Nabigal-Nayagam-Pala-Thirumanam.pdf

    இதனை முழுமையாக படியுங்கள் புரியும் இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்.....)

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய