Pages

Sunday, October 14, 2012

கொசுவத்தி சுத்தலாம் வாங்க


அன்று என்னுடைய குழந்தை பிறந்து மூன்று நாள் ஆகி இருந்தது. குழந்தை கொஞ்சம் எடை குறைவு என்று இன்டென்ஸிவ்கேரில் வைத்திருந்தார்கள். ஒருவழியாக மதியம் குழந்தையை கொடுத்துவிட்டார்கள். குழந்தையை பார்த்துக் கொண்டு எனக்கும் என் மனைவிக்கும் பொழுதுபோவதே தெரியவில்லை. இரவு ஏழு மணியாகிவிட்டது. மருத்துவமனையில் எங்களுடைய அறையின் நுழைவாயிலின் அருகே குளியலறை இருக்கிறது. என்னுடைய மனைவி சிறுநீர் கழிக்க வேண்டும் என எழுந்து போனாள். ஆனால் அவள் எங்கள் அறையிலுள்ள குளியலறையைத் தாண்டி வெளியே சென்றாள். நானும் பின்னால் சென்று பார்த்தேன். அவள் பக்கத்து அறையின் கதவின் அருகே சென்றாள். நான் ஓடிச் சென்று ஏன் அங்கே செல்கிறாய் எனக் கேட்க, மறந்து அங்கே சென்றுவிட்டேன் எனச் சொல்லி எங்களின் அறைக்குத் திரும்பிவிட்டாள். இவளுக்கு என்ன ஆனது என என்னால் யூகிக்க முடியவில்லை. நடந்ததை நர்ஸிடம் கூறினேன். அவர் பிரச்சனை ஒன்றும் இல்லை, முதல்குழந்தை பெற்றிருக்கிறாள் அப்படித்தான் இருக்கும் சரியாகிவிடும் எனக் கூறி நகர்ந்தார். இரவு எட்டு மணியாகி இருந்தது. என் மனைவியிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினேன்.

வீட்டிடிற்கு போகும் வழியில் மனதிற்குள் எதோ குழப்பம். என் மொபைலில் காசில்லை. அருகிலிருந்த பூத்தில் இருந்து சில்லரை போட்டு தொலைபேசினேன். என் மனைவி குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருப்பதாக சொன்னாள், நானும் தொந்தரவு செய்ய வேண்டாமென, பிறகு பேசுவதாகக் கூறி தொலைபேசியை வைத்துவிட்டேன். வீட்டிற்கு வந்த்தும் மறுபடியும் என் மனைவிக்கு தொலைபேசினேன். இம்முறை அவள் வேறொரு அறையில் இருப்பதாகவும் என்னுடைய மச்சான் வந்து அறை மாற்ற உதவி செய்ததாகவும் கூறினாள். மறுபடியும் எனக்குள் எதோ ஒரு குழப்பம். உடனே என்னுடைய மச்சானுக்கு தொலைபேசினேன். அவன் மருத்துவமனைக்கு போகவில்லை என்றான். திரும்பவும் என் மனைவிக்கு. இம்முறை எனக்கு மிகுந்த கோபம். அவள் எங்கிருக்கிறாள் என கேட்டேன். அதற்கு அவள் „என்னை வேறொரு மருத்துவமனைக்கு மாற்றிவிட்டார்கள். அது மனநல மருத்துவமனை. நானும் குழந்தையும் அங்கு தான் இருக்கிறோம்“ என்றாள். அந்த மருத்துவமனையின் முகவரியை கேட்டு எழுதிக்கொண்டேன்.  வீட்டைவிட்டு கிளம்பினேன்.

இரவு 12:30 மணி ஜனவரி மாதம் சரியான குளிர். இரவு அந்த மருத்துவமனை செல்ல இரண்டு பேருந்து மாறவேண்டி இருந்தது. கடைசியாக என் மனைவி குறிப்பிட்ட முகவரி உள்ள தெருவிற்கு வந்துவிட்டேன். ஆனால் இரண்டாம் எண் உள்ள வீட்டில் மருத்துவமனை இல்லை. ஒரு கடை உள்ளது, அதுவும் பூட்டியுள்ளது. கடைகளும், வளாகங்களும் நிறைந்த தெரு என்பதால் இரவில் யாரும் இல்லை. அத்தெருவின் நடுவில் ஒரு பூத் இருந்தது. அங்கு சென்று அவளுக்கு தொலைபேசினேன். இப்போது வீட்டு எண் 2 இல்லை 102 என்றாள். வெளியேவந்து நிற்பதாகவும் சொன்னாள். ஆனால் அவ்வெண் உள்ள வீட்டிலும் மருத்துவமனை இல்லை. இவள் மற்றும் குழந்தையின் நிலையை எண்ணி எனக்கு சுத்தமாக பொறுமை போய்விட்டது. மறுபடியும் தொலைபேசினேன். மறுபடியும் சொன்னதையே சொல்கிறாள். நிசப்தமாக தெருவில் பைத்தியம் பிடித்த்து போல நான் மட்டும் பூத்தில் நின்று கத்திக் கொண்டு இருக்கிறேன். பிறகு அழுது கொண்டே, எங்கிருக்கிறாய் எனக் கேட்கிறேன். „நான் உன் முன்னாடி தானே நிற்கிறேன். உனக்கு கன் தெரியவில்லையா?“ என்றாள். சிரிக்கிறாள். தொடர்ந்து என்னுடைய பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். என்னிடம் இருந்த சில்லரைகள் முழுவதும் தீர்ந்துவிட்டன. எனக்கு என்ன செய்யவதென்று தெரியவில்லை. கிட்டதட்ட மூன்று மணி ஆகிவிட்டு இருந்தது. அப்போது எதிரே ஒரு டாக்ஸி வந்தது. அதில் ஏறிக்கொண்டு உடனே மருத்துவமனைக்கு விரைந்தேன்.

மருத்துவமனை வந்தடைந்ததும், வேகமாக ஓடிப்போய் என் மனைவியின் அறைக்குச் சென்று எட்டிப்பார்த்தேன். அவள் குழந்தையுடன் படுத்துக்கொண்டிருந்தாள். எனக்கு உயிர் வந்தது போல இருந்தது. அவள் தூங்காமல் இருந்தாள். போய் அவள் பக்கமாக அமர்ந்தேன். „என்னை ஏன் இப்படி அலையவிட்டாய்“ என்றேன். அதற்கு அவள் „நான் உன் முன்னாடி தான் நின்றிருந்தேன், நீ தான் கவனிக்கவில்லை“ என்றாள். வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு என்ன செய்வதென்று புரியவில்லை. எனக்கு அவளுடைய பிரச்சனை ஓரளவுக்கு புரிந்துவிட்டது. நான் அவளை தூங்கச் சொல்லிவிட்டு, குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்று அமர்ந்தேன். காலை 9 மணி வரை நான் தூங்கவில்லை. குழந்தையுடனே அமர்ந்திருந்தேன். என் மனைவி பிறகு வந்தாள், நேற்று இரவு நடந்த நிகழ்ச்சி எதுவும் அவள் நினைவில் இல்லை. நான் நடந்தவற்றைக் கூறியதும் ஆச்சரியமாகக் கேட்டாள். குழந்தை இன்டன்ஸிவ்கேரில் இருந்ததால், குழந்தை பிறந்ததிலிருந்து மூன்று நாள் தொடர்ச்சியாக என் மனைவி தூங்கவில்லை. நான் விட்டிற்கு சென்ற பிறகு அவள் இரவில் தூங்குவதாக நினைத்திருந்தேன். தினமும் பலமுறை இன்டென்ஸிவ் வார்டுக்கு இரவுபகலாக போய்போய் வந்திருக்கிறாள். சிலசமயம் இரவில் குழந்தையின் அருகே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள். அதனால் ஏற்பட்ட ஒருவித மஅழத்ம் தான் அத்தனையும். குழந்தை பிறந்தும் பெண்குக்கு வும் போஸ்ட்பார்டம் டெப்ன். ஆனால் இவையாவும் நான் கூறிய பிறகே நர்ஸ்களுக்கு தெரிந்தது. அவளிடம் இருந்த மாற்றத்தை யாரும் உணரவில்லை. எப்படியோ ஒரு வழியாக தாயும் சேயும் நலமடைந்தது மிக்கமகிழ்ச்சி. உதவி கேட்கவும் ஆளில்லாமல் தனியாக நான் அன்றிரவு ஓடித்திரிந்தது வாழ்நாளில் மறக்கவியலாத சம்பவம்.

6 comments:

  1. படிக்க படிக்க அதிர்ந்து போனேன்
    நானாக இருந்தால் நிச்சயம் பைத்தியமாகி இருப்பேன்
    நல்ல வேளை எல்லாம் சரியாகிப் போனதே
    வித்தியாசமான நிகழ்வு பதிவு

    ReplyDelete
  2. இது நிஜமாவே நிஜக் கதை தானா!! கதையின் கடைசியில், வேறோ யாரோ எழுதிய கதை....அல்லது கற்பனை என்று முடிக்கப் போகிறீர்கள் என்றே படித்தேன்!!

    ReplyDelete
    Replies
    1. கொசுவத்தியில் எழுதும் அனைத்தும் எனக்கு நடந்த நிகழ்வுகளே!

      Delete
  3. கீதா.................. கீது.......... பூடுச்சா............ பூடுச்சு...........

    http://www.youtube.com/watch?v=w2Xwy5zmhEU&feature=relmfu

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய