Pages

Saturday, April 13, 2013

கடவுள் வணிகப் பொருளாகிப்போன காலத்தில்

ஆலயடி விநாயகர் தலபுராணம்

என்னுடைய சொந்தக்கார பையன் ஒருத்தன். மகேஷ் என்று பெயர். பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடையவில்லை. வீட்டில் சும்மா இருக்க முடியாமல், ஒரு பெட்டிக்கடை வைத்தான். கடை வாடகை கொடுக்கும் அள்விற்குக் கூட லாபம் இல்லை. கடை நடத்த முடியாமல் மூடிவிட்டான். அவனின் வீட்டுக்குப் அருகாமையில் ஒரு பெரிய குப்பை கொட்டும் இடம் இருந்தது. ஊரின் சில பகுதிகளின் குப்பை பெரும்பாலும் இங்கு தான் கொட்டப்படும். பிள்ளையார் சதுர்த்தி வந்தால், சிறுவர் போவோர் வருவோரிடம் காசு சேர்த்து இந்தக் குப்பை கொட்டப்படும் இடத்தின் பக்கத்தில் உள்ள ஒரு காலி இடத்தில் களிமண் பிள்ளையார் வைத்துக் கொண்டாடுவார்கள். மகேஷுக்கு வேலைவெட்டி இல்லாததால், அவர்களுடன் சேர்ந்து காசு சேர்ப்பதிலும் பிள்ளையார்சிலை வாங்கி வைப்பதிலும் மும்முரமாக இருந்தான். இம்முறை நிறைய பணம் சேர்ந்திருந்தது. வெறுமனே பிள்ளையார் மட்டும் வைக்காமல், ஒரு ஓலைக்கொட்டகைப் போட்டார்கள். அந்த இடம் ஒரு புறம்போக்கு இடம் என்பதால், பிள்ளையார் சதுர்த்தி முடிந்ததும் ஓலைக்கொட்டகை பிரிக்கப்படவில்லை. நம்ம பையனும் ஓலைக் கொட்டகையை கோயில் ரேஞ்சுக்கு பெருக்கி சுத்தம் செய்துவிடுவான். களிமண் பிள்ளையாருக்கு பூபோட்டு எதாவது பக்திப்பாட்டு பாடிடுவான். ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்து, அந்தப் பகுதியில் உள்ள அவனது சொந்தங்கள் ஓலைக்கொட்டகை உள்ள இடத்தில் ஒரு கல் பிள்ளையார்சிலையும் கோயிலும் கட்டுவதென ஏகமனதாக முடிவெடுத்தனர். முதலில் ஒரு சிறுகோயில் கட்டி சின்ன பிள்ளையாரும் வைக்கப்பட்டது. அன்றுமுதல் மகேஷே கோயிலுக்கு அர்ச்சகர்.

விநாயகர் ஸ்துதி, பிள்ளையார் அகவல் என நான்கைந்து புத்தகங்கள் வாங்கி படிக்கத் துவங்கிவிட்டான். சில ஆண்டுகளில் சமூக ட்ரெண்டுக்கு ஏற்றபடி கோயில் மேலும் விரிவாக்கப்பட்டது. அனுமன், ஐயப்பன், நவகிரகங்கள், வைக்கப்பட்டன. நம்மாளும் சலிக்காமல் பூணூல் ஒன்று வாங்கிப் போட்டுக்கொண்டு, முழுநேர பிசினஸில் இறங்கிவிட்டார்.  ஸ்பெஷல் அர்ச்சனை, ஆண்டுப்பிறப்பு, பிரதோஷம் (பிள்ளையார் கோயிலில்?!), நன்கொடை என பிஸினஸில் பிரமாதமான முன்னேற்றம். தற்போது கோயிலில் புதிதாக அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மகேஷும் தகட்டில் சக்கரம் எழுதுவது, குறி சொல்வது என புது பிராஞ்ச் திறந்து பிஸினஸை மேலும் விரிவுபடுத்தியுள்ளார். ஒருமுறை மகேஷோட அம்மா சொன்னாங்க "பிள்ளையாரா இங்க வந்து இருக்கணும்னு விரும்பி இருக்காரு. அதனாலதான் கோவில் வந்தது". நானும் வாய் சும்மா இல்லாமல் "குப்பைத்தொட்டி பக்கத்தில் இருக்க அவருகென்ன அப்படி ஒருஆசை" என்றுகேட்டுவிட்டேன். பார்த்தார்களே ஒரு பார்வை, நான் ஓடிவிட்டேன். மகன் சம்பாதிக்கும் பெருமிதம் அவங்களுக்கு.

கடவுள் வணிகப்பொருளாகிப் போன காலத்தில், பக்தர்களே வாடிக்கையாளர்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பழைய தமிழ்ப்படங்களில் வரும் கிளப் டான்சர்கள், வில்லன்கள்   கிருத்துவர்களாக, முஸ்லீம்களாகக் காட்டுவது ஏன்?

கிளப் டான்ஸ் என்பது முதலில் இந்திப் படங்களில் வந்தன. பிறகு  தென்னிந்தியப் படங்களிலும் அதை ஈயடிச்சான் காப்பியடிக்க கிளப் டான்சர்களாக ரீட்டா, ஜூலி என பெண்கள் வருவார்கள். ஆனால் ஊர்த் திருவிழாவில் ஆடுபவர்கள் முத்தம்மாவாக முனியம்மாவாக இருப்பார்கள். இது ஒரு திரைப்பட ஸ்டீரியோடைப் அவ்வளவே. இந்திப்படங்களில் இவ்வாறு வரக்காரணம், 1950 - 60களிலும் அதற்கு முன்பும் பம்பாயில் கிளப் டான்சர்களாக  ஆங்கிலோ இந்தியர்கள் அதிகமாக இருந்தார்கள். அவர்களுடைய நிறத்திற்காகவும், நுனிநாக்கு ஆங்கிலத்திற்காகவும், இத்தகைய வாய்ப்புகள் கிடைத்தன. இந்தி சினிமாவிலும் சிலர் பயன்படுத்தப்பட்டார்கள்.

இதே அறுபதுகளில் பம்பாயில் மாபியா கும்பல், கள்ளக்கடத்தல் ஆப்கானிய குடியேறிகளால் நடத்தப்பட்டு வந்தது. இதற்கடுத்த கால கட்டங்களில் மாபியாகளில் கரிம்லாலா, ஆஜிமஸ்தான், வரதராஜன் முக்கியமானவர்களாக இருந்தார்கள். பிறகு தாவுத் இப்ராகீம். இதன் காரணமாக பல இந்திப் படங்களில் கடத்தல் வில்லன்கள் முஸ்லீமாக அல்லது தாராவியைச் சார்ந்த தமிழனாக  இருப்பதுண்டு. தென்னிந்தியன் என்று காட்ட வேண்டுமென்றால் நெற்றியில் விபூதி இருக்கும்.

…டான் படத்தில் வில்லன் ஒரு கிருத்துவன். அதன் ரீமேக்கான பில்லாவிலும் அப்படியே. ஆனால் பெயர் மட்டும் 1978ல் குழந்தை கற்பழிப்பு வழக்கில் பிரபலமாயிருந்த ஜஸ்பீர்சிங் என்கிற பில்லா. HAM படத்தில் வில்லன் கிருத்துவர். அதன் காப்பியான ரஜினி நடித்த பாட்சாவிலும் அதேதான், வில்லன் ஆண்டனியாக ரகுவரன் வருவார். இவற்றிலிருந்து ஒரு முரணான விடயம். "தீவார்" திரைப்படத்தில் வரும் கதாநாயகன் ஆஜிமஸ்தான் (தமிழர்  தான்) என்ற மாபியா தலைவனின் இன்ஸ்பிரேஷன் தான். ஆனால் படத்தில் அமீதாப் ஒரு கடவுள் நம்பிக்கையற்ற இந்து. தமிழில் "தீ" என்ற பெயரில் ரீமேக் ஆன ரஜினி நடித்திருந்தார். திரைப்படங்களைப் பொருத்தவரை முஸ்லீம்கள், கிருத்துவர்கள் மட்டுமல்ல யாரைத் தான் ஒழுங்காக சித்தரித்துள்ளார்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கரிமேடு கருவாயன் படத்தில் கவுண்டமணி - செந்தில் சேர்ந்து கலக்கும் ஒரு டப்பாங்குத்து. இசைஞானியின் இசையில். பாட்டோட துவக்கத்தில் ஒரு சின்ன எடிட்டிங் தவறு. கவுண்டமணி உறுமி இருக்கு என்பார் தமுக்கு காண்பிக்கப்படும். தமுக்கு என்பார், உறுமி காண்பிக்கப்படும்.

3 comments:

  1. puthiya thagavalgal T U

    ReplyDelete
  2. கடவுளை வணிக மயமாக்கியதில் அரசுக்கும் பின்னர் பக்தர்களுக்கும் அந்த வரிசைப் படி பங்கு இருக்கிறது..

    கோவில்களை அரசு ஏன் பராமரிக்க வேண்டும் ? பின்னர் அவற்றின் வருமானத்தைச் சுரண்ட வேண்டும்? பின்னர் அதைப் காரணம் காட்டி எல்லாவற்றிற்கும் நுழைவுக் கட்டணம் மற்றும் பலவிதமான கட்டணங்கள் விதிக்க வேண்டும் ?

    இவற்றைக் கேள்வி கேட்டால் ஒத்துக் கொள்பவர்கள் மிகவும் குறைவு..

    நுழைவுச் சீட்டு ஒரு கொள்ளை என்றால் காணிக்கை அடுத்த கொள்ளை.அதுவும் தமிழகப் பிரதானக் கோவில்களில் அர்ச்சகர்கள் ரௌடிகள் போல் நடந்து கொள்கிறார்கள். அவர்களைக் கண்டிப்பார் எவருமில்லை.

    இதனால் கோவில்களிலும் லஞ்சம் காணிக்கை வடிவில் நுழைந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறது.

    ReplyDelete
  3. வித்யாசமான தகவல்கள்.... சூப்பர்.....

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய