Pages

Monday, April 22, 2013

அம்மா ஞாபகம்

நான் நான்காம் வகுப்பு என் அம்மா பணிபுரிந்த பள்ளியிலேயே படித்தேன். மதிய உணவு இடைவேளையில் அம்மா மற்ற ஆசிரியைகளுடன் இருந்து உண்பார்கள். நான் சாப்பிட்டவுடன் நண்பர்களுடன் விளையாடப் போய்விடுவேன். பள்ளியின் அருகில் இருக்கும் பெரிய பஜாரில் ஓடித்திரிந்து விளையாடுவோம். மீன்கடை, கோடவுன், காய்கறிக்கடை, அனுமன் கோயில் என ஒரு இடம் விடுவதில்லை எல்லா இடத்திலும் சுற்றிச்சுற்றி விளையாடுவோம்.  விளையாடியபின் Hotel பாலாஜிபவனில் தண்ணீர் குடித்துவிட்டு, அனுமன் கோயிலில் முகம் கழுவிக் கொண்டு, முடிதிருத்தும் கடையில் தலைசீவிக் கொண்டு வகுப்பிற்குச் செல்வோம். வழக்கம்போல் அன்று அப்படி விளையாடிவிட்டு வகுப்புச் செல்கையில், போகும்வழியில் எல்லா மாணவர்களும் பள்ளியைவிட்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். ஸ்ட்ரைக் எதாவது இருந்தால் பள்ளி விட்டவுடன் பையோடு தான் ஓடுவார்கள். எல்லோரும் வெறுங்கையோடு கத்திக்கொண்டும் கதறிக்கொண்டும் ஓடிக் கொண்டிருந்தார்கள். ஏன் ஓடுகிறார்கள் என்று யாரைக்கேட்டாலும் பதில் கிடைக்கவில்லை. நான் ஓடிச்சென்று பள்ளி இருக்கும் தெருமுனையில் நின்று பார்த்தேன். பள்ளியின் கூரை முழுவதும் ஒரு ஆள் உயரத்திற்கு எரிந்து கொண்டிருந்தது. நான் முன்பின் பார்த்திராத தீவிபத்து. பள்ளியில் இருந்த அம்மாவின் ஞாபகம்! எரிந்து கொண்டிருந்த பள்ளியை நோக்கி ஓடினேன். அங்கிருந்த சிலர் தீ பெரிதாக இருப்பதால் என்னையும் மற்ற மாணவர்களையும் பள்ளியின் அருகே நெருங்க விடாமல் விரட்டிக் கொண்டிருந்தார். என் அம்மா பள்ளியில் இருப்பதாக அழுதுகொண்டே ஒருவரிடம் சொன்னேன். பள்ளியில் யாரும் இல்லை, எல்லோரும் வெளியேறிவிட்டனர், நீ போய் தொலைவாக நில் என்று மறுபடியும் விரட்டினார். எரியும் பள்ளியைப் பார்த்தவாறே நான் நடந்து வந்து கொண்டிருந்தேன். அம்மா ஒரு வீட்டில் நின்று, என்னைக் காணவில்லை என்று மற்றவர்களிடம் சொல்லி அழுதுகொண்டிருந்தார். அப்போதுதான் எனக்கு நிம்மதி வந்தது. நான் அருகே சென்று அம்மா என்றதும், என்னைப் பார்த்த உடனே என் கன்னத்தில் அறை ஒன்று விட்டார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 

நம் ஆழ்மனதில் இருப்பவை தான் கனவாக வருகின்றன என்பார்கள். சிறுவயது கனவுகள் நாம் பார்த்த சற்று மோசமான உருவங்களாக இருக்கும், கேட்ட பேய்க்கதைகளின் சிந்தனைகளாக இருக்கும். எனக்கு என்னதான் என் பாட்டி பேய்க்கதைகள் சொன்னாலும் நான் உறங்கும்போது பயப்படுவதில்லை.

இப்போது வேலூர் மாவட்டத்தில் அவ்வளவாக மழை பெய்வதில்லை. ஆனால் சுமார் இருபது வருடங்களுக்கு முன் பருவ மழைகள் காலம் தவறாமல் பெய்யும். அவ்வாறு பெய்யும் போது, என்னுடைய அம்மா வீட்டின் வராண்டாவில் கொடிகட்டி துவைத்த சேலைகளைக் காயப்போடுவாங்க. நிறைய சேலைகள் தொங்கிக் கொண்டிருக்கும், அதனிடைய நான் தனியாக ஓடி விளையாடிக் கொண்டிருப்பேன். அன்றிரவு அதுவே கனவாக வரும். நான் சேலைகள் நடுவே ஓடிக்கொண்டிருப்பேன். சேலைகள் இடையே என் அம்மாவைத் தேடிக்கொண்டிருப்பேன். என்னுடைய அம்மாவின் குரல் கேட்கும், ஆனால் என்னால் கண்டுபிடிக்க இயலாது. எங்கு பார்த்தாலும் சேலையாக இருக்கும். வெளியே வர வழியே இருக்காது. இன்றுவரை இக்கனவு எனக்கு எப்போதாவது  வருவதுண்டு. அப்படி வந்தால், வட இந்தியாவின் ஏழு டிகிரி  குளிர்காலத்தில் கூட உடல் வேர்த்து நனைந்துவிடும்.  எல்லோரையும் போல என் தாய் மீது எனக்கு மிகுந்த பாசம். நான் சிறுவயதில் என் அம்மாவிடம் கோபித்துக் கொண்டு கதைக்காமல் இருந்தேனானால், என்னை கதைக்க வைக்க அம்மாவிடம் ஒருவழி இருந்தது. 'நீங்கள் கேட்டவை' படத்தில் வரும் " பிள்ளைநிலா இரண்டும் வெள்ளைநிலா" , 'தாயிக்கொரு தாலாட்டு' படத்தில் வரும் "ஆராரிரோ பாடியதாரோ" பாடல்களைக் கேட்ட மாத்திரத்தில் பசுவிடம் ஓடும் கன்று போல ஆகிவிடுவேன். என் தாயின் பிரிவிற்குப் பிறகு, இப்பாடல்களை கேட்பதற்கே எனக்கு பயம். என் மனைவி கேட்க விரும்பினால் Headphone-ல் கேட்கச்சொல்வேன்.

1 comment:

  1. கண் கலங்க வைக்குது, உங்க தாயாரைப் பத்தி நீங்க சொன்னது. வேலூர் முழுவதும் மரம் வையுங்க, வெப்ப மரம்,சூடு தணியும் மழையும் பெய்யும். [இது முழு தமிழ்நாடு, இந்தியாவுக்கும் பொருந்தும்.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய