Pages

Thursday, May 15, 2014

பெண்கள்/மனைவி வேலைக்குப் போகலாமா வேண்டாமா?

பெண்கள் வேலைக்குப் போகலாமா வேண்டாமா என்று சில விவாதங்கள் வருவதுண்டு. இணையத்திலும் இத்தகைய விவாதங்களைப் பார்க்கலாம். இப்படி விவாதிப்பவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்களாகவும் நகரவாசிகளாவும் இருப்பார்கள். 

கீழ்தட்டுமக்களில் வசிக்குமிடம் கிராமமாகட்டும் நகரமாகட்டும் கிட்டத்தட்ட எல்லா பெண்களும் வேலைக்குப் போகிறார்கள். 

ஆதலால் இவ்விவாதத்தை மேம்போக்காக பெண்கள் என்று எடுத்துக் கொள்ளாமல், மேல்தட்டு பெண்கள் என்று சொல்லலாம். அவர்களைப் பற்றியே இக்கருத்துகள். இப்பெண்கள் வேலைக்குப் போகவேண்டிய காரணங்கள் என்று பார்த்தால்: ஒன்று பெண்ணின் விருப்பம், இரண்டு அவர்களின் குடும்ப சூழ்நிலை (விருப்பு வெறுப்புகளைத் தாண்டி வேறுவழியில்லாமல் செல்வது), மூன்று மற்றவரின் தலையீடு (அதாவது மற்றவரின் கட்டாயப்படுத்தல்). இவற்றில் மூன்றாவது பிரிவில் ஆண்களின் விருப்புவெறுப்புகள் (தலையீடுகள்) வருகின்றன.

தாய், சகோதரி, மனைவி, மகள், மருமகள் என எவ்வளவோ பெண் சொந்தங்கள் இருப்பினும், மனைவியை வேலைக்கு அனுப்புவது பற்றியே சிலர் தனித்தலைப்புடன் விவாதிக்கிறார்கள். மனைவி வேலைக்குப் போகலாமா வேண்டாமா என்பதைப் பற்றி பேசும் பெரும்பாலான ஆண்களுக்கு உளவியல்ரீதியான ஒரு காரணத்தை நான் அவதானித்திருக்கிறேன். முதலாமவர்கள் மனைவி வேலைக்குப் போக வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள். இவர்கள் பெரும்பாலும் வேலைக்குப் போகாத தாயின் பிள்ளைகளாக இருப்பார்கள். இவர்களின் இளம்வயது வாழ்க்கை தாயின் கையால் நல்ல சாப்பாடு, தாயின் அரவணைப்பு என்று இருந்திருக்கும். இரண்டாமர்கள் மனைவி வேலைக்குப் போகத் தேவையில்லை என்று நினைப்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் வேலைக்குப் போகும் தாயின் பிள்ளைகள். இவர்களது இளம்வயது ஓட்டல் சாப்பாடு, தாயுடன் அதிக நேரம் செலவிட முடியாமை, சொந்தங்கள் வீட்டில் வளர்வது என்று இருந்திருக்கும்.

நான் பிறந்தபின், என் அம்மா வேலைக்குப் போகும்போது என் பாட்டி வீட்டில் விட்டுவிட்டு செல்வார். என் பாட்டி இறந்த பிறகு, எனது பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டில் தனியாகவே இருக்க வேண்டிவரும். பூட்டிய வீட்டிற்குள் காலை முதல் மாலை வரை நானும் அண்ணனும் தனியாக இருப்போம். சில சமயம் நான் மட்டும். வேலைக்குச் செல்லும் பெற்றோரை உடைய குழந்தைகள் பலர்  சிறு- பெரு நகரங்களில் பெரும்பாலும் இன்றும் இப்படித்தான் தனியாக பூட்டிய வீடுகளில் இருக்கிறார்கள் (இன்றைய காலகட்டங்களில் குழந்தைகளை விட்டுச்செல்ல சில தாதிமார்கள் பெருநகரங்களில் இருப்பினும், அவர்களின் பராமரிப்பு என்ன? பராமரிப்பு ஒழுங்காக இருந்தால் அதற்காகும் செலவு என்ன? என்ற பல கேள்விகள் உள்ளன). மாலை வேலை முடிந்துவரும் என்னுடைய அம்மாவிற்கு வீட்டுவேலைகள் செய்யவே சரியாக இருக்கும். என் தந்தை வேலை முடிந்து இரவு எட்டு மணிக்கு மேல் வருவார். அவர் வருவதற்குள் சமைத்தும் வைக்க வேண்டும்.  இப்படி பெண்கள் வேலைக்குப் போகும் குடும்பங்களில் பல பிரச்சனைகள் உண்டு. "உனக்கு வரவளயாவது வேலைக்குப் போகச் சொல்லி தொந்தரவு தராம பார்த்துக்க" என்று என் அம்மா அடிக்கடி என்னிடம் சொல்வதுண்டு. என்னுடைய அம்மா கூட குடும்ப சூழ்நிலை (கடன்) காரணமாகவே விருப்பமில்லாமலும் உடற்நிலையை பொருட்படுத்தாமல் வேலைக்குப் போய்கொண்டிருந்தார். கணவன், குழந்தைகள், வேலை என்று வாழ்ந்து, வேளைக்கு உணவருந்தாமல், தன்னையே தானே வருத்திகொள்ளும் ஒரு சராசரி இந்தியத்தாயாகவே வாழ்ந்தார்.

என் நண்பன் ஒருவன் ஒரிசாவில் நல்ல மத்திய அரசுப் பணியில் இருக்கிறான். அவன் திருமணம் செய்த பெண் ஆயுற்வேதம் படித்திருந்தாள். திருமணம் செய்து அழைத்துச் சென்ற ஒரு மாதத்தில் "நீ வேலைக்குப் போ" என்று வற்புறுத்த ஆரம்பித்துவிட்டான். அப்பெண்ணுக்கு உடனடியாக போக விருப்பமில்லை. "இப்ப தானே வந்திருக்காங்க! வைத்தியம் பார்க்க மொழி தெரியனும், ஒடியா தெரிஞ்சிக்கட்டும். இடம் வேற புதுசு. வேற ஆட்கள். பயமா இருக்கும். ரெண்டு மூணு வருஷமாவது போகட்டும்" என்றேன் நான். "நீங்க எந்தக்காலத்தில் இருக்கிங்க. பொண்ணுங்க படிச்சா வேலைக்கு போகனும், வீட்டுக்குள்ளே அடங்கி இருக்கக்கூடாது" (என் மாதிரி சமுதாயத்தில் வாழ்கிறோம்? :) ) அப்படி இப்படி என்று லெக்சர் கொடுக்க ஆரம்பித்து விட்டான். குடும்பப் பிரச்சனை, வீட்டுக்கடன், பணவரவு என்று எதாவது உண்மையைச் சொன்னால் சரி, ஆனால் அதை விடுத்து இப்படி "முற்போக்கு" முகமூடி எதற்கு என்று தெரியவில்லை. சரி உன் விருப்பம் என்று விட்டுவிட்டேன். அவனுடைய தாயும் வேலைக்குப் போகாத பெண்மணி தான்.

இப்படி சொல்வதால், பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் என்று யாராவது சொல்லலாம். ஆனால் இது தான் எதார்த்தம். நான் முடிவாக சொல்வது: முதலில் வேலைக்குப் போகலாமா வேண்டாமா முடிவெடுக்க வேண்டியவள் சம்பந்தப்பட்ட பெண், இரண்டாவது ஆணோ பெண்ணோ, அவர்கள் வேலைக்குப் போவது அவரவர் விருப்பம், குடும்பச் சூழ்நிலை பொருத்தது. இதையெல்லாம் பொதுப்புத்தியில் பார்க்க இயலாது. வேலைக்குப் போனால் பெண்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்று பார்த்தால் (போக்குவரத்து, சமுதாயம், உடல்நலம், மாதவிடாய், பாலியல் தொல்லைகள், மன உளைச்சல்) அதற்கு தனியாக ஒரு பத்து பதிவாவது எழுதவேண்டும். வேலைக்குப் போகும் மனைவியரை ஊக்குவிக்கும் அல்லது விரும்பும் ஆண்கள் வெறுமனே வாயால் வடைசுடுவதை விடுத்து, அவர்களுக்கு சமையல், குழந்தைவளர்ப்பு, வீட்டுவேலைகளில் கூடமாட உதவியாக இருக்கலாம். மனைவியருக்கு வேலை அலைச்சல், உடல்-மன உளைச்சல் ஏற்படும் காலங்களில் உதவியாக அல்லது குறைந்தபட்சம் ஆறுதலாகவாவது இருக்க வேண்டும். அதைவிடுத்து எல்லா வேலைகளையும் பெண்கள் மேல் சுமத்திவிட்டு, பெண்ணடிமைத்தனத்தை ஒழித்துவிட்டதாக நீங்கள் நினைத்தால், "பாவம் சார்! உங்க சம்சாரம்".

=========================================================================

18 comments:

  1. குட்டிப்பிசாசு,

    நல்ல ஆய்வு!

    கிராமங்கள், நடுத்தர ஊர்களில் எல்லாம் பெரும்பாலும் பெண்களின் சம்பாத்தியத்தில் தான் குடும்பமேஓடுது, பல கிராம புற ஆண்கள் சம்பாதிச்சு ,குடிச்சுட்டு சாப்பிட கூட காசு இல்லாமல் வீட்டுக்கு வந்து பொண்டாட்டி , நடவு நட்டு அரிசி வாங்கி பொங்கி வச்சத சாப்பிட்டு விட்டு ,பொண்டாட்டி மேல ராத்திரியான கால தூக்கி போடுறானுங்க ,அவ்வளவு தான் ஆணாதிக்கம் அவ்வ்!

    பொண்டாட்டி வேலைக்கு போக வேண்டாம், என்பது ஆணாதிக்கம் என்பதை விட , அவங்களுக்கு இருக்கும் "குடும்ப வேலைகளின்" சுமை உணர்ந்து செய்வதாகவும் கணக்கில் எடுக்கலாம்

    ஏன் ஆண் குடும்பத்தினை பார்க்க கூடாதா எனலாம்,என்ன தான் கவனிச்சு குழந்தைக்கு சோறு ஊட்டினாலும் ,குழந்தைகள் அம்மா கையால் சாப்பிடவே விரும்பும் ,என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    அப்பா ஒரு வாரம் ஊரில் இல்லைனாலும் குழந்தைகள் ஏங்காது ஆனால் அம்மா ஒரு நாள் ஊரில் இல்லைனாலும் ஏங்கிடும் என்பது குழந்தைகளின் உளவியல்.

    ReplyDelete
    Replies
    1. //பொண்டாட்டி மேல ராத்திரியான கால தூக்கி போடுறானுங்க ,அவ்வளவு தான் ஆணாதிக்கம் அவ்வ்!//

      இதைத்தான் இங்க எல்லாரும் வவ்வால் டச்னு சொல்லுராங்க.

      //ஏன் ஆண் குடும்பத்தினை பார்க்க கூடாதா எனலாம்,என்ன தான் கவனிச்சு குழந்தைக்கு சோறு ஊட்டினாலும் ,குழந்தைகள் அம்மா கையால் சாப்பிடவே விரும்பும் ,என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.//
      நான் வேலைக்குப் போக முடியாத சூழ்நிலை எனக்கு இரண்டு முறை வந்தது. முதல்முறை நான் படிக்க வேண்டிவந்ததால், அப்போது என் மனைவி வேலைக்குப் போய் சம்பாதித்துக் கொண்டிருந்தாள். இரண்டாவதுமுறை அவளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, வேலையை விட்டுவிட்டு வீட்டிலிருந்து குழந்தையைப் கவனித்துக் கொண்டிருந்தேன். அச்சமயங்களில் "உத்யோகம் புருஷ லட்சணம்" என்று என் மாமியார் காதுபட சொல்வார். எரிச்சல் வந்தாலும் "கோபம் அறிவுக்குச் சத்ரு" என்று அமைதியாக போக வேண்டியதுதான்.

      Delete
    2. // பல கிராம புற ஆண்கள் சம்பாதிச்சு ,குடிச்சுட்டு சாப்பிட கூட காசு இல்லாமல் வீட்டுக்கு வந்து பொண்டாட்டி , நடவு நட்டு அரிசி வாங்கி பொங்கி வச்சத சாப்பிட்டு விட்டு ,பொண்டாட்டி மேல ராத்திரியான கால தூக்கி போடுறானுங்க ,அவ்வளவு தான் ஆணாதிக்கம் அவ்வ்! //

      வவ்வால் சரக்கு மாத்தி அடித்ததால் சொந்த கதையை உளறி விட்டார் போலிருக்கே அவ்வ் :))

      மெய்ப்பொருள்

      Delete
  2. வணக்கம்

    விரிவான அலசல் நன்றாக சொல்லியுள்ளீர்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நல்ல அலசல் குட்டிபிசாசு.

    ஆனால் ஆணுக்கு நிகராகப் படித்த பெண்கள் வீட்டு வேலைக்கும்
    குழந்தை வளர்ப்புக்கும் மட்டும் தான் தன் திறமையைப் பயன்படுத்த வேண்டுமா?

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் வேலைக்குப் போவதா அல்லது குழந்தை பராமரிப்பில் இருக்கலாமா என்பதை அவர்களே முடிவு செய்யலாம். குழந்தை என்ற ஒன்று வந்துவிட்டால், தாய் தந்தையில் ஒருவராவது அதன் வளர்ப்பில் கவனம் செலுத்துவது நலம். பெண்கள்தான் குழந்தையை கவனிக்க வேண்டும் என்று இல்லை, ஆண்களும் வீட்டில் இருந்து கவனிக்கலாம், ஆனால் நம்ம ஊரு ஆண்கள் இதை ஒத்துக்கொள்வார்களா தெரியவில்லை. :)

      தங்களின் கருத்திற்கு நன்றி.

      Delete
    2. நான் ஒரு ஆணின் பார்வையில் என் கருத்துகளைச் சொல்லியுள்ளேன். ஒருவேளை தற்காலப் பெண் வேறுவிதமாகவும் நினைக்கலாம்.

      Delete
  4. குப்பத்தாண்ட மினிம்மால்லாம் கேட்டுக்குதுங்க... ஏன்டா பேமானிங்களா நீங்க காண்டி இப்புடிக்கால்லாம் ரோசனை பண்ண மாட்டீங்களாடான்னு...!

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    ReplyDelete
    Replies
    1. அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...! - ?????

      உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

      Delete
  5. யாராக இருந்தாலும் வீட்டு நிர்வாகம் என்பது சாதாரண விசயமல்ல...

    ReplyDelete
    Replies
    1. அலுவலக வேலையைவிட வீட்டு நிர்வாகம் கஷ்டம்தான். அதனால் ஆண்கள் பெண்களை அதில் தள்ளிவிடுகிறார்கள். :)

      Delete
  6. .நான் கல்லூரியில் படிக்கும்போது என் மிக மிக நெருங்கிய நண்பி என்னை குட்டி பிசாசு என்றுதான் அழைப்பாள் .
    kala karthik

    ReplyDelete
    Replies
    1. //மிக மிக நெருங்கிய நண்பி//

      அய்யோ...அய்யோ (வடிவேலு போல படிக்கவும்)

      Delete
  7. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

    இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

    அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil US
    www.tamilus.com

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய