Pages

Friday, September 06, 2013

குழந்தைகளின் பெற்றோர்களே ஜாக்கிரதை

பல்கலைக்கழகத்தில் நான் படித்துக் கொண்டிருந்த நேரம். ஒருநாள் மாணவர்விடுதியில் நானும் என் நண்பனும் கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்தோம். தாடிவைத்த ஒருவர். நடுத்தரவயது இருக்கும். தான் ஒரு மலையாளி எனவும் புதிதாக கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும் எங்களிடம் தமிழில் அறிமுகப்படுத்திக் கொண்டார். அவருடன் பேசியதில் அவருக்கு திருமணமாகி இருப்பதும் தெரிந்தது. பல்கலைக்கழகத்தில் குடும்பத்துடன் வசிப்பவர்களுக்கு தனிவிடுதியும் உண்டு. அவ்விடுதியில் இடம் கிடைத்ததும் மனைவியை அழைத்துக் கொண்டுவரப்போவதாக சொல்லிக் கொண்டிருந்தார். சிறிதுநேர விளையாட்டிற்குப் பிறகு செல்லும்போது என்னையும் என் நண்பனையும் பார்க்க சகோதரர்கள் போல இருப்பதாக சொல்லிவிட்டுச சென்றார். அதன் பிறகு நான் அவரைப் பார்க்கவில்லை. வெகுநாட்கள் கழித்து, என்னுடன் படித்த ஒரு கன்னடர் அன்று தாமதமாக வேலைக்கு வந்தார். அவரும் குடும்பஸ்தர்கள் விடுதியில் இருந்து வருபவர் தான். ஏன் தாமதம் என்று கேட்டேன். அவர் வசிக்கும் விடுதியில் இருக்கும் ஒருவன் குழந்தைகளிடம் சாக்லேட் கொடுத்து அறைக்குள் கூட்டிப் போய் சில்மிஷம் செய்து இருக்கிறான்.  குழந்தைகள் பெற்றோரிடம் விவரமாக சொன்னதன் பேரில் அவனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்ததாக சொல்லிக் கொண்டிருந்தார். எனக்குப் பகீர் என்றது, படிக்கவரும் இடத்தில் கூட இப்படி எல்லாம் நடக்கவேண்டுமா?  எனக்கு உணவுஇடைவேளைக்கு நேரமானதால் விடுதிக்கு வந்துவிட்டேன். விடுதியில் நுழையும்போது எனக்குத் தெரிந்த  ஒரு மலையாளி நண்பன் என்னிடம் விசாரித்தான். "இன்றைக்கு என்ன ஆச்சி விஷயம் தெரியுமா?"
"என்ன"
"இக்பாலை போலிஸ் கொண்டு போச்சு"
"எந்த இக்பால்"
"அன்றைக்கு உன்னுடன்  கிரிகெட் ஆடினாரே. தாடி கூட வச்சிட்டு இருந்தாரே. அவர்"
"ஏன் என்னவாம்"
"குழந்தைகளிடம் செக்ஷுவலாக தவறு செய்தாராம். என்னால் நம்ப முடியல. அவர் அப்படி இல்லை. வேண்டுமென்றே யாரோ இப்படி பழி சுமத்தி இருக்காங்க" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

நான் பதிலேதும் பேசாமல் சாப்பிடப் போய்விட்டேன். இது நடந்து பல ஆண்டுகள் இருக்கும். இந்த விஷயம் அப்போது செய்தித்தாளிலெல்லாம் வந்தது. என்னைப் பொருத்தவரை child abuse, phedophile விஷயங்களில் யார் வேண்டுமானாலும் குற்றவாளிகளாக இருக்கலாம். இவர்களை கண்டுகொள்வது கடினம். பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம், வீட்டிற்கு வரும் நண்பர்களாக இருக்கலாம், ஏன் குழந்தையின் தந்தையோ சகோதரனாகக் கூட இருக்கலாம்.

இன்றைக்கு செய்தித்தாளைத் திறந்தால் சிறுமி கற்பழிப்பு, குழந்தை கற்பழிப்பு  என்றுதான் அதிகமாக வருகிறது. செய்தித்தாளில் வரும் சங்கதிகள் சில. ஆனால் உண்மையில் சமூகத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல் நம்மைச் சுற்றி இருக்கும் பல குழந்தைகள்  சீறழிக்கப்படுகிறார்கள். மனரீதியான பாதிப்புடையர்கள் தான் இத்தகைய காரியங்களில் ஈடுபட முடியும். வேதனை தரக்கூடிய இந்த விஷயத்தைப் பற்றி நான் மேலும் சொல்ல விரும்பவில்லை. குழந்தைகளின் பெற்றோர்களே ஜாக்கிரதை. நான் ஒன்றும் குழந்தைகள் மனோ தத்துவநிபுணன் அல்ல. ஆனால் ஒரு சில விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு
1. உங்களுக்கு என்ன கவலை இருந்தாலும், குழந்தைகளிடம் அன்பாக இருங்கள். 
2. முடிந்தவரை அடிக்கடி உங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து பேசுங்கள். அவர்கள் அன்று என்ன செய்தார்கள் என்று அன்புடன் விசாரியுங்கள். 
3. யாருடன் பழகுகிறார்கள் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். 
4. குழந்தைக்கு காயம் ஏதாவது ஏற்பட்டிருப்பின், எதனால் ஏற்பட்டது என்பதை அன்புடன் விசாரியுங்கள். "யாருடன் சண்டை போட்ட" என்று அதட்டினால், பிறகு அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை இருப்பின் உங்களிடம் சொல்லப் பயந்து தயங்குவார்கள். 
5. அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
6. மிகவும் முக்கியமானதொரு விஷயம் சிறுவர்களை பேஸ்புக், இணையதளங்களை பாவிக்கவிடாதீர்கள். அப்படி பாவிக்கவிட்டாலும், கண்காணிப்புடன் நடந்துகொள்ளுங்கள். வளர்ந்த நாடுகளில் இணையத்தின் மூலம் குழந்தைகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுடன் இனிமையாக பழகி தனியாக வரவழைத்து கற்பழித்த கொடூரங்கள் நடந்துள்ளன. 

1 comment:

  1. நல்ல எச்சரிக்கை பதிவு நண்பரே .. சமீபத்தில் கூட ஒரு செய்தி படித்தேன்.... http://news.vikatan.com/article.php?module=news&aid=18769

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய