Monday, October 15, 2012

எலித்தொல்லையா! CREEDOCIDE பயன்படுத்துங்கள்!

Creedocide - watch more funny videos

பெயரில் என்ன இருக்கா

முன்பு நொண்டி, முடவன், குருடன், செவிடன், ஊமை என்று குறிப்பிடப்பட்டவர்களை, ஊனமுற்றவர்கள் (physically handicapped, physically disabled) என குறிப்பிட்டோம், பிறகு அதுவே மாற்றுத்திறனாளிகள் (differently abled) என அழைக்கும் நிலையில் இருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் Euphemism என்பார்கள். தமிழில் இடக்கர் அடக்கல், மங்கலம், குழூவுக்குறி என மூன்றுவகையாகச் சொல்லப்படுகின்றன. நம்முடைய நாளிதழ்கள் பல விஷயங்களை அமெரிக்க ஆங்கிலத்திலிருந்து நேரடியாக மொழிபெயர்கிறார்கள். அதன் காரணமாக பல ஆங்கில Euphemistic சொற்கள் மொழிபெயர்ந்து தமிழில் உள்ளன. வன்புணர்வு, வல்லுறவு என்பதை பலர் கற்பழிப்பு (அதென்ன! கற்பழித்தல், இவர்கள் சொல்லும் கற்பு பெண்ணுக்கு மட்டும் தான் போகுமா, வற்புறுத்தியவனுக்கு கற்பு போகாதா?) என்கிறார்கள். இப்போது அதுவும் மாறி பாலியல் வன்முறை(வன்கொடுமை என்றாகிவிட்ட்து. முதலில் தாசி, தேவடியாள்(தேவரடியாள்), பிறகு விபச்சாரி, பிறகு விலைமாது, இப்போது பாலியல் தொழிலாளி. இப்போதெல்லாம் செய்திகளில் இறந்தார்கள், கொல்லப்பட்டார்கள் என்று வருவதில்லை, உயிர் இழந்தார்கள் என்று மங்கல சொல்லாக வருகிறது. வேலைநீக்கம் என்பதில்லை ஆட்குறைப்பு. ஏழை என்பதில்லை வாழ வசதியற்றோர். முன்பு முதியோர் எனக் குறிப்பிடப்பட்டவர், தற்போது மூத்தகுடிமகன். குள்ளமானவரை உயரம் குறைவானவர் என்றும், குண்டானவரை எடைகூடியவர் என்றும், ஒல்லியானவரை எடைகுறைந்தவர் என்றும் அழைக்கிறார்கள். பெண்களிடம் கிண்டல்கேலி செய்வது முதல் பொறுக்கித்தனம் செய்வதுவரை Eve teasing என்று பெயர். 

பல சமயம் இத்தகைய இடக்கர் அடக்கல் சொற்கள் பிரச்சனையை, உண்மையை  மறைக்கவே பயன்படுகின்றன. பெயரை மென்மையானதாக மாற்றுவதால் பாதிக்கப்பட்டவரின் பிரச்சனை தீர்வதிற்குப் பதில் மழுங்கடிக்கப் படுகிறது. உணர்வு முக்கியம் தான், ஆனால் அதைவிட முக்கியம் உரிமை. உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு உணர்வை மட்டும் வைத்துக்கொண்டு என்ன பயன். 

ஜாதிப் பெயர்களின் வழக்கொழிந்து தாழ்த்தப்பட்டவர்கள், தலித் என சொல்லப்பட்டு வருகிறது. தலித் என்றால் ஹிந்தியில் நசுக்கப்பட்டவர்கள் என்று பொருள். ஆனால் காந்தி நோகாமல் மென்மையாகஹரிஜன்’ (கடவுளின் மக்கள்) என்றார். பெயரை மாற்றினால் மட்டுமே பிரச்சனை தீர்ந்துவிடாது என அம்பேத்கார் இதனை கடுமையாக எதிர்த்தார். இருந்தபோதிலும், காங்கிரஸ்காரர்கள் தாழ்த்தப்பட்டவர்களை குறிக்கத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்கள் வருகிறார்கள். காந்தியின் கருத்தை ஆதரிப்பதாக B.G.கேர் என்பவர் ஹரிஜன் என்ற வார்த்தை மிகவும் சிறப்பானது, நர்சி மேத்தா எழுதிய குஜராத்தி பாடலில் கூட வருகிறது என்றார். நர்சி மேத்தா ஒரு பிராமண வகுப்பைச் சார்ந்தவர். அவர் குறிப்பிட்ட ஹரிஜன் என்ற சொல், கோவிலில் நடனமாடும் தேவரடியாள்களுக்கு கோவிலில் பணிபுரியும் பிராமணர்களுக்கும் பிறந்த குழந்தைகளை குறிக்கப் பயன்படுத்தப்பட்டவை. “எப்படி காந்தி அவர்கள் ஹரிஜன் எனக்கூறலாம். தாழ்த்தப்பட்டவர்கள் என்ன தாசிகளுக்குப் பிறந்தவர்களா?” எனக் அம்பேத்கார் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. கம்யுனிஸ பாடலைக் கேட்டிருப்பீர்கள். ஆயிரம் காலம் அடிமை என்றாயே, ஹரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே!!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒன்ஸ்மோர் கொசுவத்தி
நான் பத்தாம் வகுப்புக்கு சென்ற முதல் நாள் முதல் பாடம் தமிழ். தமிழாசிரியர் பெயர் கங்காதரன், மிகவும் கோபம் மிக்கவர். எங்க சீனியர்கள் அவரைப் பற்றி எங்களுக்கு சொன்னது கங்காதரன் முன்னாடி சிரிக்காதே! சிரிச்சா தன்னைப் பார்த்துத்தான் நாம சிரிக்கிறோம் என நினைத்து வெளுத்துவிடுவார்“. வகுப்புக்கு வந்த தமிழாசிரியர் சிலப்பதிகாரம் பற்றி பேசத் துவங்கினார். அப்போது கோவலன் தன்னுடைய உடைமைகளை இழந்து கண்ணகியுடன் மதுரைக்குச் செல்லும்போது துணையாக வந்த பௌத்த பெண்துறவி பெயர் என்ன?“ எனக் கேட்டார். அப்பெண்துறவியின் பெயர் கௌந்தியடிகள். என்னுடைய அம்மா ஏற்கனவே சிலப்பதிகாரத்தை கதையாகச் சொல்லும்போது எனக்கு சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அன்று எனக்கு எவ்வளவு யோசித்தும் நினைவில் வரவில்லை. என்னுடைய பக்கத்தில் இருந்த முருகன் (எங்க ஊரில் இருந்த முருகன் டாக்கீஸ் முதலாளியோட பையன்) தடாலடிய எழுந்து ஔவையார்என ஒரு போடு போட்டான். என்னையும் அறியாமல் களுக் என சிரித்துவிட்டேன். அவ்வளவுதான் கங்காதரன் கடுங்கோபதரனாக மாறி என் மண்டையில் நறுக் நறுக் என கொட்டி வகுப்பைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார். பிறகு காலாண்டுத் தேர்வின் மதிப்பெண் வரும்வரை அவருக்கு நான் வேண்டாப்பிள்ளையாகவே இருந்தேன். 

முருகனைச் சொல்லி தவறில்லை. ஔவையார் திரைப்படத்தில் ஔவையாராவும், பூம்புகார் திரைப்படத்தில் கௌந்தியடிகளாகவும் நடித்தது கே.பி.சுந்தரம்பாள். அதனால் குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம். எப்படியோ ஔவையார் எனச் சொல்வதற்கு பதில் கே.பி சுந்தரம்பாள் எனச் சொல்லாமல் போனான்.

மொகலாய கிசுகிசு - இரண்டுமொகலாயர் காலத்தில் யாராவது பதவிக்கு போட்டியாக இருப்பவர்கள் இறந்தால், கட்டாயம் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பது அன்றைய வரலாற்றாசிரியர்களின் பரவலான கருத்து. ஆட்சிக்கு இடையூறாக இருப்பவர்கள், ஆட்சியில் உரிமையுடையவர்கள், போட்டியாக இருப்பவர்கள் என பலரை விஷம் வைத்துக் கொல்லும் பழக்கம் இருந்தது. இதனால் நன்றாக ஆரோக்கியமாக இருந்தவர்கள் கூட திடீரென உடல்நலம்குன்றி இறந்துவிடுவார்கள். ஒருமுறை அக்பர் வேட்டைக்கு சென்றபோது பாம்பு ஒன்றை அம்பெய்து கொன்றார். அதே அம்பை எடுத்து தன்னைத் தாக்க வந்த ஒரு பெரிய மானின் மீது தற்செயலாக எய்துவிட்டார். மான் அம்பு பாய்ந்தவுடனே இறந்து போனது. அக்பர் காரணம் என்னவென்று விசாரித்தார். அம்புபட்டு இறந்த பாம்பின் கொடிய விஷத்தைப் பற்றி வேடுவர்கள் கூற, உடனே இறந்த பாம்பிலிருந்து விஷம் தயாரிக்க கண்ணாடி சாடிக்குள் போட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதுபோன்று விஷம் தயாரிக்கும் ஆர்வம் மொகலாய மன்னர்களிடம் இருந்தது. ஔரங்கசீப் வேட்டையாடிய புலிகளின் மீசைகள் கத்திரிக்கப்படும். அவ்வாறு சேகரிக்கப்பட்ட புலிமீசை பொடியாக தூளாக்கப்பட்டு கொல்லவேண்டியவர்களின் உணவில் கலக்கப்படும்.
இவ்வாறான விஷங்கள் உண்மையா?

ஒரு அல்கெமி தளத்தில் A Thick Sparkling Poison, The Tiger-bite Poison எனக் கொடுக்கப்பட்டிருந்தது.
4 parts tiger whisker/ground glass, 2 parts honey comb
A dangerous venom, the dramatically named 'tiger-bite poison' is so called for the traditional main component -- ground tiger whiskers. Combined with the Alchemist's magic, the tiny, hard 'grains' work like glass as they rip their victims to shreds...from the inside.
It is applied to weapons. Important note! Actual ground glass can be substituted for tiger whiskers. (காத்தாடி நூலுக்கு மாஞ்சா பூசவது போல பூசுவார்கள் என நினைக்கிறேன்).

தில்லியில் இரண்டு வகை பக்கிரிகள் இருந்துள்ளார்கள். முதலாமவர்கள் சுதந்திரமானவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள். அவர்கள் யார் வீட்டிலும் நுழைவார்கள், ஏழ்ழை பணக்காரன் என பாராமல் மரியாதையற்ற வார்த்தைகளில் ஏசுவார்கள். இவர்கள் எதாவது சாபமிட்டுவிடுவார்கள் எனப் பயந்து செல்வந்தர்கள் பணிவிடை செய்வார்கள். விரும்புவதைக் கொடுப்பார்கள். இரண்டாமவர்கள் பயமற்றவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள். பிச்சை கொடுக்காவிட்டால் இவர்கள் தங்களைத்தாங்களே கத்தியால் கிழித்துக்கொள்வார்கள். கொடுக்காதவர்கள் மீது இரத்ததை தெளிக்கவும் செய்வார்கள்.

ஜாஹாங்கிர், ஔரங்கசீப் காலத்தில் இந்தியாவில் தங்கியிருந்த இத்தாலியர் ஒருவர் அக்காலத்தில் நடந்த பல சம்பவங்கள் பற்றி குறிப்பெழுதியுள்ளார், இவர் அக்காலத்தில் மொகலாய அரசின் மருத்துவராகவும், பீரங்கிப்படையிலும் பணிபுரிந்துவர். ஔரங்கசீப் இடித்த கோயில்கள், சர்ச்சுகள் சிலவற்றை குறிப்பிட்டுவிட்டு, முழுவதும் எழுதவேண்டுமானால் பல பக்கங்கள் தேவைப்படும் என தவிர்த்துவிடுகிறார். மொகலாய மன்னர்களில் ஜஹாங்கீர் பெரும்பாண்மையான நேரத்தை முல்தான் பகுதியிலேயே கழித்தார். அங்குதான் அவர் நூர்ஜஹான் என்றழைக்கப்பட்ட மெஹ்ருநிஸாவை சந்தித்தார். ஔரங்கசீப் கோடைக்காலங்களில் காஷ்மீரில் தங்குவார். ஆனால் அவர் இறக்கும்வரை ஹஜ் பயணம் மேற்கொள்ளவில்லை, காரணம் இவர் இல்லாத சமயம் ஆட்சியை உடனிருப்பவர்கள் யாராவது பிடித்துவிடுவார்கள் என்ற அச்சம் எப்போதும் இருந்தது. இவர் மற்றவர்களுக்குக் கொடுத்ததை, மற்றவர்கள் இவருக்கு கொடுத்துவிடுவார்களோ என்ற பயம்.

ஔரங்கசீப் இஸ்லாத்தை தீவிரமாக தன்னுடைய வாழ்க்கையிலும், நாட்டின் சட்டங்களிலும் பின்பற்றினார் எனச் சொல்வதுண்டு. ஆனால் அவர் ஆட்சியிலும் ஐரோப்பியர்களுக்கு மதுபானங்கள் காய்ச்சிக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது. (ஐரோப்பியர்கள் இந்தியாவில் சூரத், அகமதாபாத், ஆக்ரா, கல்கத்தா (ஹூக்லி), பலாஷூர், க்வாலியர், மசூலிப்பட்டினம், மதராஸ் என இன்னும் பல முக்கிய நகரங்களில் தொழிற்சாலைகள் அமைத்து பணிபுரிந்ததோடல்லாமல், மொகலாயர்களின் ஆர்டிலரிபடைகளிலும், கோட்டைபாதுகாவலிலும், மருத்துவர்களாகவும் பணி புரிந்துள்ளார்கள்) அதுமட்டுமில்லாமல் ஔரங்கசீப் தன்னை முஸ்லீம் என்பதைவிட சுன்னிப்பிரிவைச் சேர்ந்த முஸ்லீமாகவே அடையாளப்படுத்திக் கொண்டார். ஔரங்கசீபின் ஆட்சியில் ஷியாபிரிவு முஸ்லீம்களும், ஆப்கானிய பத்தான்களும், பிஜ்ஜபூர்-கோல்கொண்டா சுல்தான்களும், பாரசீக முஸ்லீம்களும் பெருவாரியாக ஒதுக்கப்பட்டார்கள். அவர்களின் பதவி உயர்வு மறுக்கப்பட்டன. அக்பர் காலத்தில் நவ்ரோஸ் எனப்படும் பாரசீக புத்தாண்டைக் கொண்டாட அளிக்கப்பட்டிருந்த அனுமதி முற்றிலும் மறுக்கப்பட்டது. 

Niccolai Manucci – Storia do Mogor (Story of Mughals)