Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Sunday, November 25, 2007

நஞ்சாவது பிஞ்சாவது

தான் வழக்கம்போல தேநீர் அருந்தும் கடைக்குச் சென்று அமர்ந்தான் கிச்சா. பொதுவுடைமை மற்றும் பெரியாரிய கருத்துகளில் அதிக ஆர்வமுடைய கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி, ஒரு தொழிற்நுட்ப மாணவன். சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டும் முற்போக்குச் சிந்தனையை நமீதாவை விரும்புவதற்கு இணையாக விரும்பினான். அம்பேத்கார் மற்றும் விவேகானந்தரின் நூல்களை சிலுவைபோல் சுமந்து திரிவான். சென்னையில் வசிக்கும் கிச்சாவிற்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தமிழில் பதிவெழுதுவது.

இன்றும் தமிழ்மணத்தில் என்ன பதிவெழுதலாம் என சிந்தித்தவாறு, தன் வாய்நுனியில் வந்தமர்ந்த சிக்ரெட்டுக்குத் தீயிட்டான். கடையில் வேலைபார்க்கும் வேலுவிடம் தேநீர் தயாரிக்கச் சொல்லிவிட்டு மறுபடியும் யோசிக்கலானான். புகை தின்றவாறு செய்தித்தாளைப் புரட்டிய அவன் கண்களில் சிக்கியது அந்தச் செய்தி. "சிறார்கள் தொழிலில் ஈடுபடுத்துவதை எதிர்த்து மனிதசங்கிலி". கிச்சா தேடியது எதோ கிடைத்தது போலும், அப்படி ஒரு மலர்ச்சி அவன் முகத்தில். செய்தித்தாளின் வரிகளில் லயித்துவிட்ட அவனது உதடுகளின் முணுமுணுப்பு அன்று வரையப்போகும் பதிவின் தலைப்பை "நஞ்சுபட்ட பிஞ்சு உள்ளங்கள்!" என்று ஒருவாறு முடிவு செய்தது.

"அண்ணே! டீ" என்று கொண்டுவந்த தேநீரை நீட்டினான் வேலு. செய்திகளை அசைபோட்டவாறு தேநீரை வாங்கிப் பருகிய கிச்சாவின் முகத்தில் ஓராயிரம் விரிசல்கள். "என்னடா! டீ போடுரே! உங்க மாஸ்டர் எங்கடா? " என்று உருமிய கிச்சா நெற்றிக்கண் இருந்திருந்தால் வேலுவை எரித்திருப்பான். கிலியாகிப்போய், வெறித்தபடி நின்று கொண்டிருந்த வேலு மிகவும் பாவம். நான்கு நாட்களுக்கு முன் தேநீர்க்கடையில் வேலைக்கு சேர்ந்த அவனுக்கு வயது ஒன்பது தான்.

Wednesday, July 11, 2007

நாத்திகனும் ஆட்கொல்லியும்

நாத்திகன் ஒருவன்

நகரத்திற்குச் சென்றான்

கருமைகவ்விய காட்டுவழி

பொழுதும் சாய்ந்தது

நிலவுக்கதிர்களை வடிகட்டியபடி

வழிநெடுகிலும் வானளாவிய

மரங்களின் கிளைகள்

தனிமையான இருள்

பூச்சிகளின் கிறீச்சலுடன்

இதயத்துடிப்பு தடவிச்செல்லும்

இவனை பயமுறுத்தியது

திடீரென்று சீறல்சத்தம்

திரும்பிப் பார்த்தான்

நெடிய சிங்கமொன்று

வந்தது இவந்திசைநோக்கி

புரியாமல் திகைத்தவன்

யத்தனித்தான் ஓட

அசுரவேகத்தில் அவன்

புகைதின்றது போல்

கண்கள் கனந்தது

கோரப் பற்களுடன்

நகங்கள் நெருங்கியது

அருகாமையில் மரணம்

வீறிடலுடன் மண்ணில்

தடுமாறி வீழ்ந்தான்

சிங்கம் தன்கரத்தை

ஓங்கியது மேலே

வானிலே வெளிச்சம்

"ஆன்மீகவாதி ஆகிவிடு

ஆட் கொள்கிறேன்"

என்றொரு அபயக்குரல்

கனைத்தது கடவுளா?

என்றெண்ணிய கொள்கைவீரன்

"ஆட்கொள்வது இருக்கட்டும்

ஆட்கொல்லியான சிங்கத்தை

ஆன்மீகவாதி ஆக்குக!"

என்று கதைத்தான்

உயர்ந்திருந்த சிங்கத்தின்

கரங்கள் இறங்கியது

ஆன்மீகவாதியான சிங்கம்

"கடவுளே! கருணையுடன்

உணவளித்த உங்களுக்கு

நன்றி!" என தியானித்து

நாத்திகனை நறநறவென

நரம்புகளைக் குதறியது

(இது ஆன்மீக சிங்கம் தான் சிந்திச்சி சிந்திச்சி பிடரி எல்லாம் கொட்டி போச்சி)

(இந்த நினைப்பலயும் சில சிங்கங்கள் சுத்துரது உண்டு)




பி.கு.:

நாத்திகன்: இந்த கதையில் இருந்து என்ன தெரியுது.

குட்டிபிசாசு: அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்-னு தெரியுது

நாத்திகன்: ஏய்! குட்டிபிசாசு! நீ மூடிட்டு சும்மா இருக்கியா! நான் உன்னை கேட்கல, வாசகர்களைத்தான் கேட்கிறேன்

வாசகர்கள்: எங்களுக்கு புரியரது இருக்கட்டும். உனக்கு என்னடா புரியுது லூசு! இப்படி எழுதுரே!

நாத்திகன்: நல்ல புரிதல்! அதனால தான் இந்த இடுகைய லூசுவேலை என்ற தொகுப்பில் சேர்த்து இருக்கேன்.

ஐயா சாமிகளா! இது என்னோட 50வது பதிவு!! என்ன செய்யறது. 50வது இடுகை மொக்கையாக போடணும்னு நெனச்சேன். முடியல!! லூசுவேலையத்தான் போட முடிஞ்சது.

Wednesday, June 20, 2007

காலத்தைக் கட்டுப்படுத்த கடிகாரத்தை நிறுத்திய கந்தசாமி

பருந்துச் சிறகுடைய

பட்டாம்பூச்சி காலயந்திரத்தை

கந்தசாமியின் கொல்லைபுரத்தில்

போட்டுவிட்டுப் போனது

பள்ளியே பார்த்து

அறியாத கந்தசாமிக்கு

காலயந்திரமா புரியப்போகுது,

காயலாங்கடைக்கு சென்றான்

வழியில் என்னைப்பார்த்து,

காலயந்திரம் தருகிறேனென்று

பழைய கடனுக்கு

கணக்குத் தீர்த்தான்

சோதனையோட்டம் பார்க்க

இயந்திரத்தில் ஏறினோம்.

காலத்தை கட்டுப்படுத்த

கந்தசாமி கடிகாரத்தை

நிறுத்தி கொண்டான்

“கடிகாரத்தை நிறுத்தினால்,

காலம் எப்படி நிற்கும்”

என்றேன்! “மூச்சி நின்றால்,

உயிரும் நிற்கும்தானே!”

உளரினான் மடையன்

விசையை இயக்கினேன்

கண்ணிமைக்கும் நேரத்தில்

கட்டற்ற வெளிக்குள்

காலங்கள் தாண்டின

உயிரை உறித்ததுபோல்

காலத்தின் சுழற்சி

சலனமற்ற சஞ்சரிப்பு

சரித்திர சம்பவங்கள்

விரித்தது கண்முன்னே!

‘சாக்ரடீசு விடமுண்டார்’

வரலாற்றைப் புரட்டியது,

‘வயோதிக வால்மீகி

ராமகாதை எழுதினார்’

வயற்றைப் புரட்டியது

‘இயேசு சிலுவையேறினார்’

கண்களை மிரட்டியது

படீரென்று சத்தம்!

பால்காரன் வரும்நேரமென்று

கந்தசாமி விசையைத்திருக

வீட்டுக்கு திரும்பிவிட்டோம்!!