Showing posts with label மதமின்மை. Show all posts
Showing posts with label மதமின்மை. Show all posts

Saturday, April 13, 2013

கடவுள் வணிகப் பொருளாகிப்போன காலத்தில்

ஆலயடி விநாயகர் தலபுராணம்

என்னுடைய சொந்தக்கார பையன் ஒருத்தன். மகேஷ் என்று பெயர். பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடையவில்லை. வீட்டில் சும்மா இருக்க முடியாமல், ஒரு பெட்டிக்கடை வைத்தான். கடை வாடகை கொடுக்கும் அள்விற்குக் கூட லாபம் இல்லை. கடை நடத்த முடியாமல் மூடிவிட்டான். அவனின் வீட்டுக்குப் அருகாமையில் ஒரு பெரிய குப்பை கொட்டும் இடம் இருந்தது. ஊரின் சில பகுதிகளின் குப்பை பெரும்பாலும் இங்கு தான் கொட்டப்படும். பிள்ளையார் சதுர்த்தி வந்தால், சிறுவர் போவோர் வருவோரிடம் காசு சேர்த்து இந்தக் குப்பை கொட்டப்படும் இடத்தின் பக்கத்தில் உள்ள ஒரு காலி இடத்தில் களிமண் பிள்ளையார் வைத்துக் கொண்டாடுவார்கள். மகேஷுக்கு வேலைவெட்டி இல்லாததால், அவர்களுடன் சேர்ந்து காசு சேர்ப்பதிலும் பிள்ளையார்சிலை வாங்கி வைப்பதிலும் மும்முரமாக இருந்தான். இம்முறை நிறைய பணம் சேர்ந்திருந்தது. வெறுமனே பிள்ளையார் மட்டும் வைக்காமல், ஒரு ஓலைக்கொட்டகைப் போட்டார்கள். அந்த இடம் ஒரு புறம்போக்கு இடம் என்பதால், பிள்ளையார் சதுர்த்தி முடிந்ததும் ஓலைக்கொட்டகை பிரிக்கப்படவில்லை. நம்ம பையனும் ஓலைக் கொட்டகையை கோயில் ரேஞ்சுக்கு பெருக்கி சுத்தம் செய்துவிடுவான். களிமண் பிள்ளையாருக்கு பூபோட்டு எதாவது பக்திப்பாட்டு பாடிடுவான். ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்து, அந்தப் பகுதியில் உள்ள அவனது சொந்தங்கள் ஓலைக்கொட்டகை உள்ள இடத்தில் ஒரு கல் பிள்ளையார்சிலையும் கோயிலும் கட்டுவதென ஏகமனதாக முடிவெடுத்தனர். முதலில் ஒரு சிறுகோயில் கட்டி சின்ன பிள்ளையாரும் வைக்கப்பட்டது. அன்றுமுதல் மகேஷே கோயிலுக்கு அர்ச்சகர்.

விநாயகர் ஸ்துதி, பிள்ளையார் அகவல் என நான்கைந்து புத்தகங்கள் வாங்கி படிக்கத் துவங்கிவிட்டான். சில ஆண்டுகளில் சமூக ட்ரெண்டுக்கு ஏற்றபடி கோயில் மேலும் விரிவாக்கப்பட்டது. அனுமன், ஐயப்பன், நவகிரகங்கள், வைக்கப்பட்டன. நம்மாளும் சலிக்காமல் பூணூல் ஒன்று வாங்கிப் போட்டுக்கொண்டு, முழுநேர பிசினஸில் இறங்கிவிட்டார்.  ஸ்பெஷல் அர்ச்சனை, ஆண்டுப்பிறப்பு, பிரதோஷம் (பிள்ளையார் கோயிலில்?!), நன்கொடை என பிஸினஸில் பிரமாதமான முன்னேற்றம். தற்போது கோயிலில் புதிதாக அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மகேஷும் தகட்டில் சக்கரம் எழுதுவது, குறி சொல்வது என புது பிராஞ்ச் திறந்து பிஸினஸை மேலும் விரிவுபடுத்தியுள்ளார். ஒருமுறை மகேஷோட அம்மா சொன்னாங்க "பிள்ளையாரா இங்க வந்து இருக்கணும்னு விரும்பி இருக்காரு. அதனாலதான் கோவில் வந்தது". நானும் வாய் சும்மா இல்லாமல் "குப்பைத்தொட்டி பக்கத்தில் இருக்க அவருகென்ன அப்படி ஒருஆசை" என்றுகேட்டுவிட்டேன். பார்த்தார்களே ஒரு பார்வை, நான் ஓடிவிட்டேன். மகன் சம்பாதிக்கும் பெருமிதம் அவங்களுக்கு.

கடவுள் வணிகப்பொருளாகிப் போன காலத்தில், பக்தர்களே வாடிக்கையாளர்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பழைய தமிழ்ப்படங்களில் வரும் கிளப் டான்சர்கள், வில்லன்கள்   கிருத்துவர்களாக, முஸ்லீம்களாகக் காட்டுவது ஏன்?

கிளப் டான்ஸ் என்பது முதலில் இந்திப் படங்களில் வந்தன. பிறகு  தென்னிந்தியப் படங்களிலும் அதை ஈயடிச்சான் காப்பியடிக்க கிளப் டான்சர்களாக ரீட்டா, ஜூலி என பெண்கள் வருவார்கள். ஆனால் ஊர்த் திருவிழாவில் ஆடுபவர்கள் முத்தம்மாவாக முனியம்மாவாக இருப்பார்கள். இது ஒரு திரைப்பட ஸ்டீரியோடைப் அவ்வளவே. இந்திப்படங்களில் இவ்வாறு வரக்காரணம், 1950 - 60களிலும் அதற்கு முன்பும் பம்பாயில் கிளப் டான்சர்களாக  ஆங்கிலோ இந்தியர்கள் அதிகமாக இருந்தார்கள். அவர்களுடைய நிறத்திற்காகவும், நுனிநாக்கு ஆங்கிலத்திற்காகவும், இத்தகைய வாய்ப்புகள் கிடைத்தன. இந்தி சினிமாவிலும் சிலர் பயன்படுத்தப்பட்டார்கள்.

இதே அறுபதுகளில் பம்பாயில் மாபியா கும்பல், கள்ளக்கடத்தல் ஆப்கானிய குடியேறிகளால் நடத்தப்பட்டு வந்தது. இதற்கடுத்த கால கட்டங்களில் மாபியாகளில் கரிம்லாலா, ஆஜிமஸ்தான், வரதராஜன் முக்கியமானவர்களாக இருந்தார்கள். பிறகு தாவுத் இப்ராகீம். இதன் காரணமாக பல இந்திப் படங்களில் கடத்தல் வில்லன்கள் முஸ்லீமாக அல்லது தாராவியைச் சார்ந்த தமிழனாக  இருப்பதுண்டு. தென்னிந்தியன் என்று காட்ட வேண்டுமென்றால் நெற்றியில் விபூதி இருக்கும்.

…டான் படத்தில் வில்லன் ஒரு கிருத்துவன். அதன் ரீமேக்கான பில்லாவிலும் அப்படியே. ஆனால் பெயர் மட்டும் 1978ல் குழந்தை கற்பழிப்பு வழக்கில் பிரபலமாயிருந்த ஜஸ்பீர்சிங் என்கிற பில்லா. HAM படத்தில் வில்லன் கிருத்துவர். அதன் காப்பியான ரஜினி நடித்த பாட்சாவிலும் அதேதான், வில்லன் ஆண்டனியாக ரகுவரன் வருவார். இவற்றிலிருந்து ஒரு முரணான விடயம். "தீவார்" திரைப்படத்தில் வரும் கதாநாயகன் ஆஜிமஸ்தான் (தமிழர்  தான்) என்ற மாபியா தலைவனின் இன்ஸ்பிரேஷன் தான். ஆனால் படத்தில் அமீதாப் ஒரு கடவுள் நம்பிக்கையற்ற இந்து. தமிழில் "தீ" என்ற பெயரில் ரீமேக் ஆன ரஜினி நடித்திருந்தார். திரைப்படங்களைப் பொருத்தவரை முஸ்லீம்கள், கிருத்துவர்கள் மட்டுமல்ல யாரைத் தான் ஒழுங்காக சித்தரித்துள்ளார்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கரிமேடு கருவாயன் படத்தில் கவுண்டமணி - செந்தில் சேர்ந்து கலக்கும் ஒரு டப்பாங்குத்து. இசைஞானியின் இசையில். பாட்டோட துவக்கத்தில் ஒரு சின்ன எடிட்டிங் தவறு. கவுண்டமணி உறுமி இருக்கு என்பார் தமுக்கு காண்பிக்கப்படும். தமுக்கு என்பார், உறுமி காண்பிக்கப்படும்.

Monday, August 13, 2012

எங்கே யூதர்கள் ?


இஸ்ரேலைச் சேர்ந்த பேராசிரியர் ஷ்லொமோ  சண்ட் 2008-ல் கிப்ரூ மொழியில் ஒரு நூலை எழுதினார். அதன் பெயர் "யூதர்கள் எங்கு எப்படி கண்டுபிடிக்கப்பட்டார்கள்". அந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு "The invention of Jewish people" என்ற பெயரில் வெளியானது. இந்த வெளியானவுடன் ஷ்லொமோவிற்கு ஒரு பக்கம் சொந்த நாட்டிலேயே கடுமையான எதிர்ப்பும், வேறொரு பக்கம் நன்மதிப்பும் ஆதரவும் கிடைத்துள்ளது. அதிகப் பிரதிகள் விற்று மக்களிடமும் சென்றடந்துள்ளது.  ஷ்லொமோவை பாலஸ்தீனத்தின் பல்கலைக்கழகம் அழைத்து, அவருடைய நூலைப்பற்றி மாணவர்களிடையே பேசவைத்தது. அப்படி என்ன அந்த நூலில் உள்ளது. யூதமதவாதிகளுக்கு எரிச்சலையும், பாலஸ்தீனத்தை ஈர்ப்பையும் கொடுத்துள்ளது. நூலின் சுருக்கத்தை முழுமையாக பார்ப்பதைவிட, அதில் நூலாசிரியரால் தொகுக்கப்பட்டுள்ள சில முக்கிய கருத்துகளைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

…2000 வருடங்களுக்கு முன் ரோமானியர்களால் ஜுடாவைவிட்டு யூதமக்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுவது ஒரு கட்டுககதை. மாறாக யூதர்களை ரோமானியர்கள் வெளியேற்றவில்லை. இரண்டாவது கோவில் மட்டும் இடிக்கப்பட்டது. புரட்சியால் விளைந்த போரில் சிலர் மாண்டுவிட்டனர், சிலர் போர் முடிந்தபின் வழமைக்குத் திரும்பிவிட்ட்னர், இஸ்லாமிய படையெடுப்பின் போது சிலர் மதம்மாறிவிட்டனர். ஆனால் யூதவரலாற்றாசிரியர்கள் கூறுவது போல உலகில் உள்ள அனைத்து யூதர்களும் இஸ்ரேலில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பது மாபெரும் பொய். இஸ்ரேலை யூதர்களின் பூர்வீக பூமியாக உலகிற்கு காட்டவும், யூதர்களை நம்பவைக்கவும் இந்தக் கட்டுகதை புனையப்பட்டுள்ளது.

…ஒருவன் யூதனாக பிறக்கவே முடியும், மாற முடியாது என்பதும் முழுபொய். 100 வருடங்களுக்கு முன் உலகின் பல்வேறு பகுதியில் இருந்த யூதர்கள், மதம் மாற்றப்பட்ட அப்பகுதி மக்களே ஆவார்கள்.

…யூதயினம் என்ற ஒன்று இல்லவேயில்லை.  யூதர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் தேசியயினம் இல்லை. யூதர்கள் ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் அவ்வளவே. உதாரணமாக இத்தாலியர்கள் , ஆங்கிலேயர்கள் , ஜெர்மனியர்கள் . இவர்களிடம் இன அடையாளமாக பல விடயங்கள் உண்டு. உணவு, விழா, இசை, நடனம் எனப் பல உண்டு. ஆனால் இது போன்ற இன அடையாளம் யூதர்களிடம் இல்லை. உலகில் உள்ள யூதர்களிடம் மதவிடயங்கள் தவிர்த்து வேறு ஒற்றுமை எதுவும் இல்லை.

…இஸ்ரேல் தன்னை ஒரு ஜனநாயக நாடாக கூறிக்கொண்டாலும், இஸ்ரேலை யூதர்களுக்கான நாடாகவே அறிவிக்கின்றது. அங்கு வாழும் மற்ற மதத்தினரை அன்னியப்படுத்துகிறது. யூத இஸ்ரேலியர்கள் மற்ற மதத்தினரை மணப்பதைத் தடுக்கிறது. தான் குடியுரிமை பெற்று வாழும் ஒரு நாடு தனக்கானது என்ற எண்ணத்தைக் கூட மற்ற மதத்தினருக்கு வழங்க மறுக்கிறது.


யூதர்களும் பாலஸ்தீனியர்களும் ஒற்றுமையாக வாழவேண்டும். இஸ்ரேலிய இஸ்லாமியர்களின் உரிமைகள் மறுக்கப்படக் கூடாது என்பதே நூல் ஆசிரியரின் தீர்வு.

…பாலஸ்தீனம் சென்று பேசியபோது (யூத மதம் சார்ந்த) இஸ்ரேலிய  ஷ்லொமோவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது "பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து குடியேறி இருக்கும் யூதர்கள் இஸ்ரேலில் தொடர்ந்து இருக்க வேண்டுமா?" என்பது. அதற்கு ஷ்லொமோ சொன்னது என்னவென்றால் "யூதர்கள் பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேலை உருவாக்கி இருப்பது தவறு, அதற்காக இரண்டு தலைமுறை கண்ட அவர்களை வெளியெறச்சொல்வது முறையல்ல. கற்பழிப்பின் மூலமாக பிறந்த குழந்தைக்கும் சமுதாயத்தில் வாழ உரிமை உண்டு தானே!". ஷ்லொமோ சொன்ன வார்த்தைகளின் உண்மை பாலஸ்தீனியருக்கு புரிந்திருக்க வேண்டும். அன்றைய மறுநாள் பாலஸ்தீனிய நாளேட்டின் தலைப்புச் செய்தி "கற்பழிப்பின் மூலமாக பிறந்த குழந்தைக்கும் சமுதாயத்தில் வாழ உரிமை உண்டு தானே".

Sunday, March 21, 2010

இதில் என்ன வேறுபாடு

நாத்திகம் என்றால் கடவுள், கடவுள் சார்ந்த மதங்கள், கடவுள் சார்ந்த மூட நம்பிக்கைகளை எதிர்ப்பது. அதோடு நின்றுவிடுகிறது அதன் வேலை. பகுத்தறிவு என்பது அதனையும் கடந்தது. மதம் மட்டுமல்லாமல், சாதி, பழக்கவழக்கங்கள், உணவு, உடை என பல்வேறு பரிமாண மாற்றங்களை உள்வாங்கியது. காலத்திற்கு, சூழ்நிலைக்கேற்ற மாற்றங்களை, கருத்துகளை ஏற்றுக்கொள்வது.

பெரியார் இதைத்தான் திரும்ப திரும்ப சொல்லிவிட்டு சென்றார். ஆனால் அவரின் கொள்கைக் காவலர்களாக இன்று வலம்வருபவர்கள், இதை சுத்தமாக மறந்துவிட்டார்கள். ஒருகாலத்தில் பெரியார் பிராமணர்களை பார்ப்பான் என்று சொன்னார். அதையே இவர்கள் பிடித்துக் கொண்டு வம்பளப்பது ஏன்னென்று தெரியவில்லை. இன்று பூணூல் போட்டவர்களை விட பூணூல் போடாத பார்ப்பான்கள் தான் மிகமிக அதிகம். அம்பேத்கார் புத்தமதத்திற்கு மாறினார் என்று புத்தமதத்திற்கு ஓடுபவர்கள், பெரியார் இஸ்லாத்திற்கு போகச் சொன்னார் என்று இஸ்லாத்தின் பெருமை பற்றி பேசுபவர்கள் எல்லாரும் ஆட்டுமந்தைகளே. ஒருவேளை தானாக யோசித்து அந்த முடிவை எடுப்பாராகில் சரி.

ஒழுக்கம் என்பது மதத்தால் வருவது அல்ல. தனிமனிதனின் சூழ்நிலை, மனநிலையைப் பொருத்தது. ராஜபக்சே, பொன்சேகா போன்ற கொலைகாரர்கள் புத்தமதத்தில் இருப்பதால், அம்பேத்காரிய பெரியாரியவாதிகள் புத்தமதத்தைப் பற்றி விமர்சனம் செய்தார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அடுத்தவனை பார்ப்பான் என்று திட்டிவிட்டு தன் சாதி பெருமை பேசும் பல பெரியாரிஸ்ட்களைப் பார்த்திருக்கிறேன்.

இது இப்படியென்றால், இன்னுமொரு பக்கம் கடவுளால் மொத்தமாக கைவிடப்பட்டாலும், ஈழத்தமிழர்கள் மதப்பற்றிலும், கடவுள் பற்றிலும் ஊறித்திளைக்கிறார்கள். போரினால் பெரிதாக பாதிக்கப்பட்டதாக் சொன்னாலும், சகோதரர்கள் வேலிக்குள் முடங்கிக் கிடந்தாலும்  ஈழத்தமிழர்கள் கோவிலில் பாலபிஷேகம் செய்வதும், தேங்காய் உடைப்பதும் குறைந்தபாடில்லை. ஒரு மதம் தன்னைச் சார்ந்தவனை பண்படுத்த தவறினால், பிறகெதற்கு அதனுடைய கட்டுப்பாடுகள். மனிதர்கள் தங்களுக்கு தேவையான, வசதியான விடயங்களை வைத்துக் கொண்டு இயலாதவற்றை, வெறுப்பனவற்றை எதாவது காரணம் சொல்லித் தட்டிகழித்துக் கொள்வதே மதங்களின் நிலை. நிறுவனமயமாகிவிட்ட மதங்களில் இது சிறந்தது, இது தாழ்ந்தது என்ற ஐயமே தேவையற்றது. இந்துமதம் கூவம் நம்பர் 1 என்றால், இஸ்லாம் கூவம் நம்பர் 2. இதில் என்ன வேறுபாடு. 

Tuesday, February 09, 2010

காதல் மீதான புனிதப்போராட்டம் (Jihad for Love)




சில நாட்களுக்கு முன் காதல் மீதான புனிதப்போராட்டம் (Jihad for Love) என்றொரு ஆவணப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. இந்த ஆவணப்படம் இஸ்லாமிய மதத்தில் இருக்கும் ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றியது. இவர்களுடைய மனக்குமுறல்கள், உண்மையான நிலைப்பாடுகள், கடவுள் மீதான பற்றுதல் என  அனைத்தையும் இந்த ஆவணப்படம் கண்முன் நிறுத்துகிறது. ஆவணப்படத்தில் நான் பார்த்தவற்றை சுருக்கமாக கீழே தருகிறேன்.

இரண்டு பெண் ஓரினக் காதலர்கள் குரான் வாசகங்களை படிப்பதாக ஆவணப்படம் தொடங்குகிறது.
தென்னாப்பொரிக்காவில் திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் ஒரு முஸ்லீம் சகோதரர். ஓரினச் சேர்க்கை, மதம், குடும்பம் என  அவருடைய வாழ்க்கை போராட்டமாக இருப்பதாக விவரிக்கிறார். முக்கியமாக ஒரு இஸ்லாமிய மத அறிஞருடன் பேசும்போது குரானில் homosexual act அதாவது molestation  தான் பாவமாக கருதப்படுவதாகவும், homosexual relationship or love பற்றி எதுவும் கூறவில்லை என்றும் கூறுகிறார். அதற்கு அந்தப் பெரியவர் “இஸ்லாம் மட்டுமல்ல எந்த புனிதமான மதமும் ஓரினச் சேர்க்கையை அனுமதிப்பதில்லை.” என்று திட்டவட்டமாக மறுக்கிறார்.
எகிப்தில் ஓரினச்சேர்க்கைக்காக தண்டனை அனுபவித்துவிட்டு பிரான்ஸில் அகதியாக இருக்கும் ஒருவர். அவருடைய தண்டனை கொடுத்தவர்கள் மீதான கோபத்தையும், அனுபவித்த இன்னலையும் நம் முன்னே பதிவு செய்கிறார்.
தங்கள் காதலை இஸ்லாமிய சமூகம் எப்படி அங்கீகரிக்கும் என்றபடி பிரான்ஸில் இருக்கும் இரு பெண் ஓரினக் காதலர்கள். அதில் ஒருவர் பெண் ஓரினச் சேர்க்கைக்கு குரானில் என்ன தண்டனை என்று பார்க்கிறார். “The only punishment is Scolding the women, when there is no penetration” என்று அராபியில் படிக்கிறார்.
ஓரினச்சேர்க்கைக்காக 100 கசையடி வாங்கிய, இரானில் இருக்கும் அமீர். துருக்கியில் தன் காதலனோடு இருக்கிறார்.அவர்களுடைய குடும்ப நலனுக்காக முகம் படத்தில் காட்டப்படுவதில்லை.
துருக்கியில் இருக்கும் பெண் ஓரினக் காதலர்கள். (துருக்கியில் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டங்கள் எதுவுமில்லை.)
பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் சுஃபி கவிஞன்,துறவி ஷா ஹுசைன், இந்துவான மதுலால் இருவருக்குமான காதல். அவர்களுடைய சமாதி, அங்கே ஹுசைனுடைய இறந்தநாளன்று கொண்டாடப்படும் விழா.
இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளரான இளைஞர் ஒருவர். அவருடைய தேடல்.பெண்வேடமிட்ட ஆண்களுடனான ஆட்டம். பின்னணி “மொஹலே ஆஸம்” படத்தில் வரும் பிரபலமான பாடல் “பியார் கியா தோ டர்னா க்யா”.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

ஓரினக் காதலர்கள் மீது மதங்களுக்கு அப்படி என்ன கடுப்போ தெரியாது. சொல்லி வைத்தது போல, எல்லா மதங்களும் இந்த விடயத்தை கடுமையாக எதிர்கின்றன. ஓரினக் காதலை ஆபிராகாமிய மதங்கள் முற்றிலுமாக எதிர்க்கின்றன. கடுமையான தண்டனைகள்  விதிகின்றன, விதிக்கப்பட்டுள்ளன. இந்து மதத்தில் கடவுளே ஓரினக் காதலர்களாக இருந்தாலும், மதம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. மனுதர்மத்திலும், அர்த்தசாத்திரத்திலும் இதற்கான தண்டனைகள் சொல்லப்பட்டுள்ளன. சில மதங்கள் இவற்றை ஒரு சமூகக்கூறாக கூட கருதவில்லை. விலங்குகளில் கூட ஓரினச்சேர்க்கை உண்டு. ஓரினச்சேர்க்கை பரிணாம கொள்கைக்கான ஒரு எடுத்துக்காட்டு. இதுவே தற்போதைய முற்போக்கான, விஞ்ஞான மதவாதிகள் எதிர்க்கக் காரணமாகவும் இருக்கும். இயற்கையாக ஏற்படும் விளைவுக்கு தனிப்பட்ட நபர் எப்படி காரணமாவார். அவரை தண்டிப்பது ஏன்? ஒதுக்குவது ஏன்? 

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

சில நாட்களுக்கு முன் கோவா படம் குறித்த விமர்சனப் பதிவில் நண்பர் ஒருவர் ஓரினச்சேர்க்கையை விமர்சித்திருந்தார். ஓரினச்சேர்க்கை ஓர் அருவருக்கத்தக்க விடயமாக கூறியிருந்தார். “ஓரினச்சேர்க்கை என்பது தவறா?” என்று ஒரு நண்பர் பின்னூட்டமிட, பதிவிட்ட நண்பர் “ஓ! அவனா நீ?” என்று ஒரு பகடி செய்தார். இதில் பகடி செய்ய என்ன இருக்கிறது. ஓரினச்சேர்க்கையை ஆதரித்துப் பேசினால் அவனும்/அவளும் ஓரினச் சேர்க்கையாளராகத்தான் இருக்கவேண்டுமா? அப்படி இருந்தால் என்ன தவறு.

Philadelphia படத்தில் tom hanks ஓரினச் சேர்க்கையாளராக நடித்திருப்பார். முதலில் அவர் ஓரினச் சேர்க்கையாளர், எய்ட்ஸ் நோயாளார் என அறிந்து அவருக்காக வழக்காட மறுக்கும் வழக்குரைஞர், பின்பு மனம்மாறி வழக்காடுவார். அந்த வழக்குரைஞரையும் சிலர் ஓரினச்சேர்க்கையாளராக அணுகுவார்கள்.

Fire படத்தில் இரு பெண்கள் திருமண வாழ்வில் தோல்வியடைந்து ஓரினச்சேர்க்கைக்குத் தள்ளப்படுவார்கள். ஆனால் அந்தப் படத்திற்கு நம்மவர் மத்தியில் இருக்கும் மதிப்பு எப்படி என்று கேட்டுப்பாருங்கள். எதோ நீலப்படம் போல கூறுவார்கள். 

இதுதான் கட்டுக்கோப்பு, ஒழுக்கம் என்ற பெயரில் சாக்கடையாக மணக்கும் நம் சமுதாயத்தின் நிலைமை. எல்லோரும் இதில் நெளிபவர்களே. இதையெல்லாம் பார்த்தும் கேள்வி எழுப்பாமல் இருக்கும் நாமும் இந்தப் புழுக்களில் ஒன்றா என்பதில் அவமானப்படவேண்டும். இதில் எந்த மதத்தையும் நான் தனியாக குறிப்பிடவில்லை. எல்லாவற்றிற்கும் பொருந்தும். பெற்றபிள்ளையின் காதலை ஆதரிக்கும் முற்போக்காளராகக் காட்டிக்கொண்டாலும், அடுத்தவன் பிள்ளை ஓரினச்சேர்கையில் காதலித்தால் முகம் சுளிப்பவர்களே! திருமாலும், சிவனும் சேர்ந்து ஹரிஹரனாகலாம், ஆனால் நம்மோடு இருக்கும், நடமாடும் உறவுகள் செய்தால் தவறா? இவர்களுடைய காதலைத் தடுக்க மதங்களுக்கும், மனிதர்களுக்கும் உரிமை யாரால் கொடுக்கப்பட்டது.

Monday, February 01, 2010

நீயா நானா / கோபிநாத் / ருத்ரன்


பொதுவாக மனிதர்களிடையே தெய்வ நம்பிக்கையோ, ஜோதிட நம்பிக்கையோ, பேய்பிசாசு நம்பிக்கையோ, மற்ற மூட நம்பிக்கையோ இருந்துகொண்டுதான் இருக்கிறது. படித்தவர்களில் பலர் இந்த நம்பிக்கைகள் இல்லாமல் இருப்பது போல காட்டிக் கொண்டாலும், நம்பிக்கையுடையவர்களாகத் தான் இருப்பார்கள். இவற்றில் எந்த நம்பிக்கையும் மற்றவர்களை (அதாவது இந்த மற்றவர்கள் சகோதரர்களாக, பிள்ளைகளாக, கணவன்/மனைவியாக கூட இருக்கலாம்) சுரண்டாத, ஒடுக்காத வரையில் பரவாயில்லை.  
அமானுஷ்ய விசயங்கள் உண்மையா பொய்யா என்பது பற்றி விஜய்டீவியின் நீயா நானா-வில் சென்ற ஆண்டில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. மனநலமருத்துவர் ருத்ரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வீற்றிருந்தார். மக்கள் அமானுஷ்ய விசயங்களை எப்படி அணுகலாம் என்ற கேள்விக்கு ருத்ரனின் பதில் உங்களுக்கு பயப்படும் போல் ஒரு சம்பவம் நடக்கிறதா பயப்படுங்கள். அது இயல்பு. பிறகு அதையே நினைத்துக்கொண்டு மற்றவர்களிடம் எமாறாதீர்கள்.

நிகழ்ச்சியின் ஹைலைட்டான விசயம் என்னவென்றால், கனவுகள் நிஜசம்பவங்களாக நடப்பதாக ஒருவர் கூறினார். அடுத்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூட என்னால் கூறமுடியும் என்று சொன்னார். கோபிநாத்தும் நடந்தது என்ன நிகழ்ச்சியில் நாங்களும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளோம் என்று சான்றிதழ் கொடுத்தார். பிறகு ருத்ரன் கேள்வி கேட்க ஆரம்பித்ததும். மேற்சொன்ன நபர் முதலில் நண்பனிடம் போன் செய்து கனவு பற்றி விசாரித்தேன் என்றார். பிறகு வேறொரு நண்பர் மூலம் விசாரித்தேன் என்று தடுமாறினார். பிறகு அந்த நண்பர் தான் தன்னை அணுகி தான் டீவியில் செய்த நிகழ்ச்சி பார்த்ததாகவும், தற்போது எதாவது கனவு வந்ததா என்று கேட்டதாக புதிதாக ஒன்றை சொன்னார். இப்படியாக டாக்டர் ருத்ரன் அந்த நபரிடம் இருந்து போலித்தனத்தை வெளியே கொண்டுவந்ததும் கோபிநாத்திற்கு ஷாக் அடித்தது போல் இருந்திருக்கும், ஏனென்றால் நடந்தது என்ன என்று நிகழ்ச்சியின் மூலம் அவர் கொடுத்த சான்றிதழ் கிழிந்துவிட்டது.

அடுத்ததாக அமானுஷ்ய விசயங்கள் சுவாரசியமானவை, பொழுதுபோக்கானவை என்று ஒரு குண்டு போட்டார் கோபி. அதற்கும் சுவாரசியம் என்றால் உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள் பொதுவில் வந்து மக்களை முட்டாளாக்கத் தேவையில்லை என்று ருத்ரனிடம் இருந்து வந்த பதில் வந்தது. டாக்டர் ருத்ரன் தன் பதிலில் இந்த கார்போரேட் சமாசாரங்களின்   சிந்தனை, அறிவு சாயத்தை வெளிக்கொண்டு வந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. இந்த பதிலும் நிச்சயம் கோபிநாத்திற்கு சுருக்கென்று இருந்திருக்கும். இவர் நடத்தும் நடந்தது என்ன என்ற நிகழ்ச்சியில் மக்களுக்கு ஏமாற்றும் விசயங்களை புரியவைப்பதை விட்டுவிட்டு, சுவாரசியமான விசயங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பேசாமல் கோபி சாருவை கூப்பிட்டு இருக்கலாம். தன்னோட பங்குக்கு சாயிபாபா படத்தில் இருந்து குங்குமம், அரிசி, பருப்பு, புளி கொட்டுகிற கதையெல்லாம் சொல்லி சுவாரசியமாக்கி இருப்பார். அமானுஷ்ய விசயத்தை நம்பாதவராக மருத்துவப் பெண்மணி ஒருவர் தன்னுடைய அனுபவத்தையும், கருத்தையும் பகிர்ந்து கொண்டார். அமானுஷ்ய சக்தியில் நம்பிக்கை இல்லாதவர்களிலிருந்து வந்த கருத்துகள் நிகழ்ச்சியில் காண்பிக்கப்படவில்லை. நிகழ்ச்சியின் முடிவில் கோபிநாத் அமானுஷ்ய சக்தியை நம்பும் ஒரு பெண் மாபெரும் கருத்தைக் கூறிவிட்டதாகப் பரிசளித்து திருப்தியடைந்தார்.

உபரிதகவல்:
நீயா நானா சிகழ்ச்சியில் பெண்ணிற்கு தாலி புனிதமானதா? இல்லையா? என்ற விவாதம் செம்மையாக வெளிவருவது போல, பர்தா தேவையா? இல்லையா? என்ற விவாதம் வெளிவராமலே இருப்பது மிகவும் சிறப்பான விசயம்.

Monday, November 19, 2007

ராமர் பிறந்தநாள் கி.மு., 5114, ஜன.10 - விஜயகாந்த் என்ன சொல்லிட போறாரு?

ராமர் பிறந்தது கி.மு., 5114ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி என்று கூறியுள்ளார் தொல்லியல் மற்றும் வானியல் ஆய்வு நிபுணர் டி.கே.ஹரி.


சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் ஞான் என்ற அமைப்பின் நிறுவனர் டி.கே.ஹரி. தொல்லியல், வானியல் மற்றும் ஜாதக நிபுணர். ஹரி துவக்கியுள்ள அமைப்பு, இந்து புராணங்களில் கூறப்பட்டு இருப்பவற்றை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து வருகிறது.

பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கிரகங்களின் அம்சங்கள் அடிப்படையிலும், ராமாயண இதிகாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளின் அடிப்படையிலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளோரின் பிறந்த தினத்தை, ஆங்கில காலண்டர் முறைப்படி இவர் கணித்துள்ளார்.இதற்கெனவே, தேதிகளை கண்டுபிடிக்கும் கம்ப்யூட்டர் மென் பொருளையும் தயாரித்துள்ளார். இதன் மூலமும், புஷ்கர் பட்நாகர் எழுதிய, "கடவுள் ராமரின் காலத்தை நாளிடுதல்"் என்ற புத்தகத்தின் அடிப்படையிலும், ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களின் அடிப்படையிலும், இந்த தேதிகளை ஹரி கண்டுபிடித்துள் ளார்.

ஹரியின் கணக்குப்படி, ராமருக்கு ஒரு நாள் பிறகு பிறந்தவர் பரதர். ஹரி கூறுகிறார். ராமர் கி.மு., 5114ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியும், பரதன் அதே ஆண்டு ஜனவரி 11ம் தேதியும் பிறந்துள்ளனர். பரதனுக்கு கி.மு. 5089ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி முடிசூட்டு விழா நடைபெற்றது. பரதனுக்கு முடிசூட்டு விழா முடிந்ததும் ராமர் தனது 25வது வயதில் மனைவி சீதாதேவி மற்றும் லட்சுமணனோடு வனவாசம் சென்றார். ராவணனுடன் போருக்கு முன்பாக, இலங்கைக்கு அனுமன் கி.மு., 5076ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி சென்று, அங்கிருந்து இரண்டு நாள் கழித்து, செப்டம்பர் 14ம் தேதி இந்தியா திரும்பி உள்ளார். (கள்ளதோணியிலா வந்தாரு, 2 நாள் ஆகுது??) இதை கண்டுபிடிப்பதற்காக, 27 நட்சத்திரங்கள் மற்றும் ஏழு கோள்களின் அமைப்புகள் ஆராயப் பட்டன. அவை இருந்த இடம், ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. ராமர் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். நாசா மையமும் கோள்களின் அமைப்பு குறித்து விரிவாக ஆராய்ந்து வருகிறது. (இந்த தகவலை பத்தி நாசாவுக்கு தெரியுமா? ஐ!!! அமெரிக்காவில் இருக்கும் தமிழ்மண அன்பர்கள் ஜாதகம், ஜோசியம், கைரேகை எல்லாம் இனிமேல நாசாவுலயே பார்த்துகலாம்). ராமர் குறித்த எங்களது ஆராய்ச்சி, முழுக்க முழுக்க அறிவியல் அடிப்படையிலானது. இவ்வாறு ஹரி கூறினார். (நன்றி: தினமலர்).


இந்த செய்தி பத்தி நம்ம கேப்டன் என்ன சொல்லியிருப்பாருனு யோசிச்சா.....!!!????!!!!????

//நாட்டுல எவ்வளவோ ஜனங்க கஸ்டப்படும்போது, நீங்க இராமருக்கு பொறந்தநாள கண்டுபிடிச்சிட்டு இருக்கீங்க. இதெல்லாம் தெரிஞ்சிகிட்டு நாளைக்கு இராமர்க்கு காவெண்ட்ல சீட்டா வாங்க போறாரு. இந்தியாவுல மொத்தம் 2038 கடவுள் இருக்கு, அதுல பூமியில பொறந்த கடவுள் 832. சாகாத கடவுள் 543. செத்துபோன கடவுள் 113, கல்யாணம் செய்துகிட்ட கடவுள் 1002, சாமியாரா போன கடவுள் 885. இதுகெல்லாம் பிறந்தநாள் கண்டுபிடிக்கத்தான் முடியுமா? அப்படி கண்டு பிடிச்சாலும் கேக் வெட்டி கொண்டாடத்தான் முடியுமா? அவனவன் இருக்கிற கஷ்டத்துல ஏன் பொறந்தோம்னு யோசிட்டு இருக்கான். ஆனா நீங்க இராமருக்கு பிறப்புச்சான்றிதழும், நபிகள்நாயகத்துக்கு சாதிச்சான்றிதழ் கொடுத்துட்டு இருக்கீங்க. இத ஒவ்வொரு தமிலனும் யோசிக்கனும். இவங்கள அடிச்சா உத்தரபிரதேஸ்ல இருக்கிற இராமர் இல்ல, உடுமலைபேட்டை இராமர் கூட வரமாட்டான்். பாகிஸ்தான் தீவிரவாதிகளை புடிக்க என்னய பர்வேஸ்முஸ்ரப் குபுட்டு இருக்காரு. நான் வரட்டுமா? ஆங்...//

Wednesday, July 11, 2007

நாத்திகனும் ஆட்கொல்லியும்

நாத்திகன் ஒருவன்

நகரத்திற்குச் சென்றான்

கருமைகவ்விய காட்டுவழி

பொழுதும் சாய்ந்தது

நிலவுக்கதிர்களை வடிகட்டியபடி

வழிநெடுகிலும் வானளாவிய

மரங்களின் கிளைகள்

தனிமையான இருள்

பூச்சிகளின் கிறீச்சலுடன்

இதயத்துடிப்பு தடவிச்செல்லும்

இவனை பயமுறுத்தியது

திடீரென்று சீறல்சத்தம்

திரும்பிப் பார்த்தான்

நெடிய சிங்கமொன்று

வந்தது இவந்திசைநோக்கி

புரியாமல் திகைத்தவன்

யத்தனித்தான் ஓட

அசுரவேகத்தில் அவன்

புகைதின்றது போல்

கண்கள் கனந்தது

கோரப் பற்களுடன்

நகங்கள் நெருங்கியது

அருகாமையில் மரணம்

வீறிடலுடன் மண்ணில்

தடுமாறி வீழ்ந்தான்

சிங்கம் தன்கரத்தை

ஓங்கியது மேலே

வானிலே வெளிச்சம்

"ஆன்மீகவாதி ஆகிவிடு

ஆட் கொள்கிறேன்"

என்றொரு அபயக்குரல்

கனைத்தது கடவுளா?

என்றெண்ணிய கொள்கைவீரன்

"ஆட்கொள்வது இருக்கட்டும்

ஆட்கொல்லியான சிங்கத்தை

ஆன்மீகவாதி ஆக்குக!"

என்று கதைத்தான்

உயர்ந்திருந்த சிங்கத்தின்

கரங்கள் இறங்கியது

ஆன்மீகவாதியான சிங்கம்

"கடவுளே! கருணையுடன்

உணவளித்த உங்களுக்கு

நன்றி!" என தியானித்து

நாத்திகனை நறநறவென

நரம்புகளைக் குதறியது

(இது ஆன்மீக சிங்கம் தான் சிந்திச்சி சிந்திச்சி பிடரி எல்லாம் கொட்டி போச்சி)

(இந்த நினைப்பலயும் சில சிங்கங்கள் சுத்துரது உண்டு)




பி.கு.:

நாத்திகன்: இந்த கதையில் இருந்து என்ன தெரியுது.

குட்டிபிசாசு: அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்-னு தெரியுது

நாத்திகன்: ஏய்! குட்டிபிசாசு! நீ மூடிட்டு சும்மா இருக்கியா! நான் உன்னை கேட்கல, வாசகர்களைத்தான் கேட்கிறேன்

வாசகர்கள்: எங்களுக்கு புரியரது இருக்கட்டும். உனக்கு என்னடா புரியுது லூசு! இப்படி எழுதுரே!

நாத்திகன்: நல்ல புரிதல்! அதனால தான் இந்த இடுகைய லூசுவேலை என்ற தொகுப்பில் சேர்த்து இருக்கேன்.

ஐயா சாமிகளா! இது என்னோட 50வது பதிவு!! என்ன செய்யறது. 50வது இடுகை மொக்கையாக போடணும்னு நெனச்சேன். முடியல!! லூசுவேலையத்தான் போட முடிஞ்சது.

Wednesday, May 16, 2007

கடவுள் மறுப்பா? பகுத்தறிவா?

கடவுள்மறுப்புக்கொள்கை எதோ இன்று தோன்றியது அல்ல. கடவுள்மறுப்புக்கொள்கைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனிதர்களால் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கடந்தநூற்றாண்டில் அம்பேத்கார், பெரியார் போன்றோர்கள் இந்தியாவில் கடவுள்மறுப்புகொள்கைகளை பெரிதும் உறுதிபடுத்தினர். மார்க்ஸிய தத்துவமும் கம்யுனிசமும் கடவுள்மறுப்புகொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. டார்வினின் பரிணாம வளர்ச்சித்தத்துவம் கடவுள்மறுப்பை மேலும் உறுதிபடுத்தியது. புத்தர் மற்றும் சக்கிரடிஸ்-ன் தத்துவங்கள் கடவுள் மற்றும் கடவுள் சார்ந்த சாத்திரங்களை எதிர்த்தன.

பொதுவாக, கடவுள்மறுப்பும் பகுத்தறிவும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை. ஆனால் பகுத்தறிவு முழுமையாக செயல்படாவிட்டால், கடவுள்மறுப்பு நிச்சயமாக நீர்த்துவிடும். உதரணத்திற்கு, கடவுளை மறுத்த புத்தரை கடவுளாக பாவிக்கும்தன்மை, அந்த சித்தாந்தம் நீர்த்ததன் விளைவு. எனவே கடவுள்மறுப்பைவிட, பகுத்தறிவே ஒரு சித்தாந்ததில் முதன்மை இடம் பெற வேண்டும். ரஷ்யாவில் மார்க்ஸ்ய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கம்யுனிச ஆட்சியில் கடவுள் மற்றும் மதங்கள் முற்றிலும் மறுக்கப்பட்டன. இவை பகுத்தறிவால் தோன்றியவை அல்ல. சட்டதினால் மாற்றப்பட்டவை. எனவே இவை காலப்போக்கில் செயலளவில் பலகீனம் அடைந்தன.

எனவே ஒரு மனிதன் கண்மூடித்தனமாக கடவுளை பின்பற்றுவதாலும், கடவுளை மறுப்பதாலும் ஒரு பயனும் இல்லை. எவன் ஒருவன் தன் பகுத்தறிவின் மூலம் உணர்கின்றானோ அவனே அப்பாதையில் செழுமை அடையமுடியும். கடவுள் மறுப்பு விட கடவுள் நம்பிக்கையை ஆதரிப்போர் அதிகம் ஆகவே கடவுள் நம்பிக்கை பற்றி நம்மக்களிடையே தோன்றும் சில கேள்விகளை பற்றி அலசுவோம்.

1. கடவுள்னம்பிக்கை ஒருவனை செம்மைபடுத்துகிறதா?
முற்றிலும் இல்லை, இன்றைய காலகட்டத்தில் தவறு (கொலை, கொள்ளை...) செய்பவர்களில் அதிகமானோர் இறைனம்பிக்கை உடையோர்தான். கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கை ஒருவனை முட்டாள் ஆக்குகிறது. ஆகவே பகுத்தறிவு இங்கு முக்கியம். எடுத்துகாட்டாக இந்தியாவில் சென்ற தோன்றிய முக்கிய பிரச்சனைகள் (மசூதி இடிப்பு, பம்பாய் குண்டுவெடிப்பு) எல்லாம் மத அடிப்படையில் உண்டானவை.

2. குழந்தைகளுக்கு பகுத்தறிவு என்றால் புரியுமா?
இது ஒரு வரட்டுவாதம். மதம், கடவுள் என்றால் மட்டும் குழந்தைகளுக்கு புரியப் போகிறதா? நிச்சயமாக இல்லை. பொதுவாகவே, குழந்தைகள் பகுத்தறிவுவாதிகள்தான். ஏன்னென்றால், அவர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் காரணங்களை ஆராய்வார்கள். ஆனால் நாமோ, அவர்களை பயமுறுத்தி கேள்விகளை தவிர்ப்போம். இது ஆரோக்கியமானது அல்ல. முதலில் பகுத்தறிவோடு கூடிய கருத்துக்களை அவர்களின் மனதில் பதிக்க வேண்டும். முடிந்தவரை கண்மூடித்தனமாக அவர்களை எதையும் செய்ய பயிற்ச்சிக்க கூடாது.

3. கடவுள்னம்பிக்கையால் லாபம் என்ன?
எனக்கு தெரிந்து நட்டம் தான் அதிகம். அது திருப்பதி ஆகட்டும், சபரிமலை ஆகட்டும், வாடிகன் ஆகட்டும், மக்கா ஆகட்டும். பணவிரயம் தான் கடவுளால் மிஞ்சுகிறது. நம்மக்கள் இங்கே நிம்மதியை விட்டுவிட்டு வேறெதயோ தேடிக்கொண்டு இருக்கிறார்கள். “மதம் மலர்களால் மறைக்கப்பட்ட விலங்கு” என்று மார்க்ஸ் கூறினார். மதம் மாறுவதால் மட்டும் மனிதநேயம் தழைத்துவிடாது என்பது. மார்க்ஸின் உறுதியான கொள்கை. எந்த மதமானலும் பகுத்தறிவுக் கருவியின் பயன் கொள்ளவேண்டும்.

4. எதோ ஒரு ஆற்றல் இந்த பிரபஞ்சத்தை செயல்படுத்துகிறதா?
செயல்படுத்தட்டும். அப்படி ஒரு ஆற்றல் இருந்தால் இருந்து விட்டுப்போகட்டும். நாம் அதை நம்புவதாலோ (அ) பூஜிப்பதாலோ, அது இயற்கை பிரச்சனையில் இருந்து காப்பாற்றிவிடப்போவதில்லை. அப்படி காப்பாற்றும் என்று நம்பினால், அதுவே உலகமகா மூடத்தனம். நம்முடைய தேவை 1. மக்கள் நன்மை மற்றும் 2. தேவையில்லாத பிரச்சனைகளை அகற்றுவது.

5. நன்மைசெய்வோர் கடவுளா?
இன்று நம்மக்கள் எந்த கடவுளை சொல்லி அடித்துக்கொள்கிறார்களோ, அவர்கள் எல்லாரும் முந்தைய காலங்களில் தத்துவஞானிகளாக (யேசு, முகமதுநபி, புத்தர், மகாவீரர்), அரசர்களாக (ராமர், கிருஷ்ணர்), மக்களுக்காக உயிர்நீத்த வீரர்கள் (கிராம கடவுள்கள்) இருந்தவர்கள். எனவே ஒரு மனிதனை கடவுளாக்குவதும் பிரச்சனையின் அடிப்படை.

‘கடவுளால் எல்லாம் நடைபெறுகிறது’ என்று சூழ்நிலைக்கைதியாகமல், மக்களின் நன்மைக்குரிய காரியங்களில் ஈடுபடவேண்டும். கடவுள் மறுப்போ அல்லது பகுத்தறிவோ என்பதன் காரியம் மக்களின் நலனாக இருக்கவேண்டும். வெறும் பேச்சளவில் இல்லாமல் செயலவில் இருக்கவேண்டும். “இன்று நான் கூறுவது, நாளைய சமுதாயத்திற்கு பொருந்தாமல் போகலாம். நான் கூறியவை தவறாகவும் இருக்கலாம், ஆதலால் நான் கூறியவற்றை பகுத்தறிவு கொண்டு சிந்தனை செய்து முடிவெடுக்க வேண்டுங்கள்” என்று சாக்கிரடிஸ் கூறினார். அதுபோல ஒவ்வொறு மனிதனும் கடவுள், மதம், மதசாத்திரங்களை தூக்கியெறிந்து பகுத்தறிவுடன் வாழ்ந்து உலகம் வளம் பெற மனிதநேயம் தழைத்தோங்க வாழவேண்டும்.

என்னுடைய கருத்துகளை யாரும் தவறாக கொள்ளவேண்டாம். இந்த கருத்துகள் யாரையும் யாருடைய மத நம்பிக்கையை புண்படுத்தும் நோக்கம் அல்ல. தங்களுடைய சிறந்த கருத்துகளை விவாதத்திற்கு கொண்டு வரலாம். வாழ்த்துக்கள்.