Saturday, November 08, 2008

எம்.ஜி.ஆர் ரசிகரா...


இந்திய திரையுலகில் சண்டைக் காட்சிகள் மிகவும் இன்றியமையாதவை. குறிப்பாக தமிழ் திரைப்படத்தில் ரசிகர்கள் இதைப் பெரிதும் எதிர்பார்ப்பார்கள். எனக்கு எம்.ஜி.ஆர் சண்டைக் காட்சிகள் என்றால் விரும்பிப் பார்ப்பேன். என்னோட அப்பா ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர், அதனால் நானும் பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்களையே பார்த்து வளர்ந்தேன். சண்டைக் காட்சிகளைப் பொருத்தவரை, இந்தியாவில் எம்.ஜி.ஆர் போல எந்தக் கதாநாயகனும் சிறப்பாக திரையில் சண்டை செய்து பார்த்ததில்லை. எனக்கு எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்ரும் வாலிபன் மிகவும் பிடித்த படம். இருந்தாலும், ரிக்ஷாகாரன் படத்தில் வரும் இறுதிக்காட்சி சண்டை எனக்குப் பிடித்தமானது. சண்டைக் காட்சியில் புரட்சிநடிகர் "சுருள்பட்டை" சுற்றும் ஒளித்துண்டை கீழே கொடுத்துள்ளேன். பார்த்து ரசிக்கவும்.



இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தான், நான் சிலம்பம் கற்றுக் கொள்ள போய் 'வீடு கட்ட' மட்டும் கற்றுக் கொண்டு வந்தேன். பத்தாம் வகுப்பில் படிப்பு, ஹிந்தி டியுசன் என பளு அதிகமானதால், தொடர்ந்து செல்ல முடியவில்லை. எங்க ஊரு பக்கம் கம்பு சுற்றுவதில் 'சாரபட்டை' சொல்லித் தருவார்கள். நான் ஆசைஆசையாக செய்து வாங்கி வந்த 'பானா கோல்' (சிலம்பம்), இப்போது அரிசி, பருப்பு வெயிலில் காயவைத்தால் காக்கா விரட்டவும், குரங்கு விரட்டவும் பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது.

கொசுறு செய்தி:

எம்.ஜி.ஆர் திரைப்படம் பற்றிய அரிய தகவலுக்கு http://mgrroop.blogspot.com போய் பாருங்க!!

பாடகர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களும் எம்.ஜி.ஆர் ரசிகர், அதை அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Friday, November 07, 2008

வில்லியம் வாலஸ்


Brave Heart படம் எல்லாரும் பார்த்திருப்பிங்க. இந்தப் படம் 1995-ல் மெல்கிப்சன் நடித்து வெளிவந்தது. இது William Wallace என்ற போராளியோட கதை. இவனுடைய காலம் 1272-1305 என்று கூறப்படுகிறது. 13-ம் நூற்றாண்டில் சிதறுண்டு கிடந்த ஸ்காடிஷ் மக்களை ஒன்று திரட்டி பிரிட்டிஷ் உடனான போரை முன்நின்று நடத்தி, அதில் வெற்றியும் பெற்றவன். Brave heart படம் வெளிவந்த பிறகு, 1997-ல் வில்லியம் வாலஸுக்கு Stirling எனும் இடத்தில் National Wallace Monument சிலையொன்று அருகே வைக்கப்பட்டது. இந்த சிலை பார்ப்பதற்கு Brave heart மெல்கிப்சன் போலவே வடிவமைக்கப்பட்டது. அந்த சிலை நம்ம ஊரு பெரியார் சிலை போல சில விஷமிகளால் தாக்கப்பட்டதால், அதைச் சுற்றிலும் தடுப்பு வைக்கப்பட்டது. சிலையுடைய மூக்கு சேதப்படுத்தப்பட்ட பின், 2004-ல் அதை 350000 ஸ்டெர்லிங் பவுண்ட் விலைக்கு விற்க முடிவு செய்தனர், ஆனால் யாரும் வாங்க வரவில்லை. இந்த வருடம் அச்சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டது.


ஜக்குபாய் கதை


1994-ல் வெளிவந்த Leon the professional என்ற படத்தை இயக்கியவர் Luc besson. இந்தப் படம் தான் தமிழில் சூரியபார்வை என அர்ஜூன் நடித்து வெளிவந்தது. பிறகு பாபிதியோல், ராணிமுகர்ஜி நடித்து 'பிச்சூ' (தமிழில் தேள் என்று பொருள்) என்று ஹிந்தியிலும் வந்தது. தமிழிலேயே ஓரளவுக்கு நன்றாக இருக்கும், ஹிந்தியில் படத்தின் கருவை குதறியிருப்பார்கள். சூரியபார்வை படத்தில் வரும் "கதவை திறக்கும் காற்றிலே.." என்ற மெலடி அருமையாக இருக்கும்.

Luc besson எடுத்த பல படங்களில் வயதான கதாநாயகன், இளம்வயது பெண் இடையே உள்ள காதல், அன்பு, பாசம் பற்றியதாகவே இருக்கும். இவருடைய திரைக்கதையில் வெளிவந்த Wasabi படமும் இதே கதைக்கரு தான். ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால், ரஜினி நடிக்காமல் விட்டு, தற்போது சரத் நடித்துக் கொண்டிருக்கும் 'ஜக்குபாய்' படத்தின் கதையும் இப்படத்தின் தழுவல் தான்.
நான் சமீபத்தில் Besson திரைக்கதையில் வெளிவந்த Taken படம் பார்த்தேன். அமெரிக்காவிலிருந்து பாரீஸ் சென்று Sex trafficing-ல் கடத்தப்பட்ட மகளை மீட்கப் போராடும் தந்தையின் கதை. படம் முழுக்க அதிரடி காட்சிகள் தான். Schindler's List படத்தில் நடித்த Liam Neeson இப்படி அடிதடியில் கலக்குவார் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அதிரடியான படங்கள் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.

Tuesday, November 04, 2008

காமிக்ஸ் to கார்ட்டூன்


நாம் எல்லோரும் சிறிய வயதில் காமிக்ஸ் புத்தகங்கள் படித்தவர்களாகவோ அல்லது பார்த்து ரசித்தவர்களாகவோ இருப்போம். நம்ம பதிவர் "லக்கிலுக்" கூட அடிக்கடி காமிக்ஸ் வாசிப்பைப் பற்றிய அனுபவங்களை எழுதுவார். அவர் பதிவுலக பெயர்கூட காமிக்ஸ் மேல் கொண்ட பாசம் தான் காரணம். நானும் சிறுவயதில் காமிக்ஸ் புத்தகம் படிப்பேன். ராணிகாமிக்ஸ், லயன் காமிக்ஸ் அப்போது வருவதுண்டு. காமிக்ஸில் வரும் வீரர்கள் என்னை அதிகமாக கவர்ந்துவிடும். அப்படிக் கவர்ந்தவை... துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட், டைகர், குதிரைவீரன் ஜோ, இரும்பு மனிதன் ஆர்ச்சி, இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர். அப்படி காமிக்ஸ் கேரக்டர்களின் ரசிகனாக இருந்த காலத்தில், என் தந்தையிடம் தினமும் குதிரை, தொப்பி வாங்கித்தரச் சொல்லி அடம்பிடிப்பேன். நான் அதிகமாக நேசித்தது குதிரைவீரர்க்ளைத் தான். கட்டிலில் அமர்ந்து காமிக்ஸ் கையில் எடுத்துவிட்டால், எப்போதும் கற்பனைதான். வீட்டில் அம்மா இல்லாவிட்டால், நானும் என் அண்ணனும் காமிக்ஸ் கதையின்படி நடிக்க ஆரம்பித்துவிடுவோம். கட்டிலின் இருபுறமும் இருந்து கையை துப்பாக்கியாக வைத்துக் கொண்டு சுடுவதுண்டு. இவ்வாறு நாங்கள் இருவரும் நடிக்கும் போது, என் அண்ணனுக்கு நான் செவ்விந்தியர் வேடம் தான் கொடுப்பேன். ஒன்றுமில்லை... கோழியிறகோ / காக்கையிறகோ தலையில் சொருகிக்கொள்ளவேண்டும். கல்லூரி நாட்களின்போது குதிரைவீரர்களின் காமிக்ஸ் தாக்கம் காரணமாகவே நிறைய Western gendre படங்கள் தேர்ந்தெடுத்து பார்க்கத் தொடங்கினேன். இப்படியாக சுமார் 50 படங்களுக்கு மேல் பார்த்ததோடல்லாமல், சேமித்தும் வைத்திருந்தேன்.
லயன்காமிக்ஸில் 'ஈகிள்மேன்' என்று வெளிவந்த கதையின் திரைப்படம் தான் "Condorman", அப்படத்தின் ஒரு ஒளித்துண்டு கீழே...



நான் 4-ம் வகுப்பு வந்தபின் ஒரு வழியாக காமிக்ஸ் ஆர்வம் குறைந்துவிட்டது. அதன் பின் தொலைக்காட்சியில் வரும் ஹீமேன், ஸ்பைடர்மேன் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். 1992-ல் ஸ்டார் சேனல் தொடங்கியபின், தினமும் காலை எழுந்தவுடன் கார்டூன் பார்க்கும் வேலை தான். Oscar wilde தொகுப்பில் வரும் fairytale கதைகள் அதிகமாக வரும். (Happy prince, Selfish giant போன்ற கதைகளைப் பார்த்த ஞாபகம் இன்னும் பசுமையாக மனதில் இருக்கிறது). கிருத்ஸ்மஸ் பண்டிகை மற்றும் கோடைவிடுமுறை வந்துவிட்டால், ஸ்டார் டீவியில் நிறைய குழந்தைகளுக்கான படங்கள் காட்டப்படும், அவற்றை வெகுவாக ரசிப்பதுண்டு. சன் டீவி தொடங்கி வளர்ந்த பிறகு என்னை அப்போது யாரும் கார்டூன் சேனல் பார்க்க அனுமதிப்பதில்லை.
ஆனால் இப்போதுள்ள குழந்தைகள் கார்டூன் நெட்வொர்க், சுட்டி டிவி, போகோ என பல சேனல்கள் பார்க்கிறார்கள்.கொடுத்து வைத்தவர்கள். என்னோட அண்ணன் மகன் கார்த்திகேயன் யாரையும் மற்ற சேனல் பார்க்கவே விடுவதில்லை. அந்த அளவுக்கு இப்ப குழந்தைகள் வெறித்தனமாக பார்க்கிறார்கள். ஆனால் எப்படியோ மொக்கையான சீரியல்களும் அரைகுறையான தமிழ்படங்களைப் பார்ப்பதைவிட இந்த காட்டூங்ன் சேனல்கள் நிறைய தகவலும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

Monday, November 03, 2008

சுவாமி ரஜினிகாந்தும் அவரோட சிஷ்யகோடிகளும்

ஆண்டவன் நினைத்தால் நாளையே அரசியல் கட்சி தொடங்கி விடுவேன். ஆனால் இப்போது நாடு சரியில்லை. அமைதியாக அவரவர் பணிகளில் கவனம் செலுத்துங்கள் பின்னர் பார்க்கலாம் என ரஜினி தன் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று ரஜினி-ரசிகர்கள் சந்திப்பு நடந்த்து. காலை 10 மணிக்கு ரஜினிகாந்த் மேடைக்கு வந்தார். மேடையில் "கடமையைச் செய்; பலனை எதிர்பார்' என்று எழுதப்பட்டிருந்தது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அது முடிந்தவுடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த பாபாஜி உருவப் படத்தை ரஜினிகாந்த் வணங்கினார்.

தொடர்ந்து ரசிகர்களை நோக்கி, "உங்களுடைய கேள்விகளை பேப்பரில் எழுதி, மன்ற நிர்வாகி சுதாகரிடம் கொடுங்கள். அவர் மேடையில் உங்களுடைய கேள்விகளை மைக்கில் வாசிப்பார். அதற்கு நான் பதில் கூறுகிறேன்' என்றார். (கிட்டத்தட்ட ஒரு ஆன்மீக ஞானி போல சூப்பர்ஸ்டார ஆக்கிட்டாங்கப்பா!!)

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்களுடைய கேள்விகளை எழுதி மேடைக்கு அனுப்ப ரஜினி பதில் கூறினார்.

கேள்வி: இந்த சந்திப்பின் நோக்கம் என்ன?

ரஜினி: நீங்கள் என்னை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள். அதே போன்று நானும் உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதுதான் நோக்கம். (என்ன ஒரு உன்னத நோக்கம்! ரஜினியும் ரசிகர்களும் காதலன் - காதலி போல ஆகிட்டாங்க)

என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று 300, 400 பேர் என கும்பலாக வருவதால், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒருமுறை சச்சிதானந்த சுவாமிகள் தன்னுடைய சிஷ்யர்களிடம் பேசும்போது உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேளுங்கள் அதற்கு பதில் அளிக்கிறேன் என்றார். அதுதான் இப்போது நடக்கிறது. (தலைவா! எதாவது ஒரு சாமியார உதாரணமா சொல்லாம உங்களால இருக்க முடியாதா?)

கே: எதிர்காலம் திட்டம் என்ன?

ரஜினி: முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள். என்னுடைய எதிர் காலத்திட்டம் தற்போதைக்கு எந்திரன் படம்தான். (இதை முதல்லே சொல்லி இருந்தா ஏன் இப்ப கேள்வி கேட்கிறாங்க!)

கே: மன்ற நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்யப்படுமா?

ரஜினி: பணம், ஜனம் இரண்டையும் ஒன்று சேர்க்கக் கூடாது. சேர்ந்தால் அங்கு அரசியல் வந்துவிடும். என்னிடம் பணத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்களால் இயன்றதை நீங்களே செய்யுங்கள். நான் தனியாக உதவிகள் செய்துகொண்டே தான் இருக்கிறேன்.

கே: ரஜினி ரசிகர்களுக்கு என ஒரு அங்கீகாரம் கிடைக்குமா? (விடுதலைப் போராட்டத்தியாகியா நீங்க பஸ் பாஸ், பென்சன் கொடுக்க!)

ரஜினி: சமூகத்தில் உங்களுக்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைக்கும்படி செய்வேன்.

கே: முதலில் ராகவேந்திரரை வழிபட்டீர்கள். பிறகு அருணாச்சலேஸ்வரர் என்றீர்கள். பாபாஜி என்றீர்கள். அடிப்படையில் உங்களுக்கே தெளிவான பார்வையில்லையா? (ரஜினி நெனச்ச சாமி கும்பிட கூட உரிமை இல்லையா?)

ரஜினி: (சிரிக்கிறார். சிறிது நேரம் யோசித்து விட்டு) இந்துவிலிருந்து முஸ்லீம், முஸ்லீம் இருந்து கிறிஸ்துவம் என்று மாறினால்தான் தவறு. அது கூட தவறு என்று சொல்ல முடியாது. நமது பாடத்திட்டத்திலேயே கூட வரலாறு, புவியியல், கணிதம் என்று பல படிப்புகள் உள்ளன.

அவை நமது ஞானத்தை விருத்தி செய்கிறது. அது போன்று தான் தேடல் நிறைந்த உள்ளம் நமது ஆன்ம ஞானத்தை விருத்தி செய்கிறது. இதில் தவறும் ஒன்றும் கிடையாது. விருப்பம் உள்ளவர்கள் பின்பற்றுகிறார்கள்.

கே: நீண்ட காலம் மன்றப் பணிகள் செய்து வரும் ரசிகர்களை பற்றி உங்கள் கருத்து?

ரஜினி: ரஜினி ரசிகர்களை பற்றி நான் பேச வேண்டிய அவசியம் கிடையாது. நாட்டு மக்களுக்கே தெரியும். இதை மற்றவர்களிடம் கேளுங்கள். (நான் கேட்டதுக்கு பைத்தியக்காரட்கள்னு சொன்னாங்கப்பா! ஏனென்றால் நானும் ஒரு ரஜினி விசிறி!)

கே: உங்களை குழப்பவாதி என்று சில பத்திரிக்கைகளில் எழுதும்போது அதை கேட்கவும், படிக்கவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்கு ஏன் நீங்கள் இடம் கொடுக்கிறீர்கள்?.

ரஜினி: பத்திரிக்கைக்காரர்களை வைத்துக் கொண்டே இந்த கேள்வியை கேட்டால் எப்படி. சில நேரங்களில் நான் செய்வது கூட அப்படித்தான் இருக்கிறது. எல்லாம் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வதுதான். இது செய்தால், இது நடக்கும் என யூகித்து செய்வதில்லை.

நாம் நினைப்பது சரி எனும்போது பேசி விடுகிறேன். வேறு கோணத்தில் பார்க்கிறவனுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். அது தவிர்க்க முடியாது. குழப்பவாதி என்று சொல்லலாம். சுயநலத்தோடு எதையும் செய்ய மாட்டேன். எது சரி என்று படுகிறதோ அதைத்தான் செய்வேன்.

சில செய்திகளை படிக்கும் போது சிரிப்பாக இருக்கும். சில சிந்திக்க வைக்க செய்யும். சமீபத்தில் நான் வெளியிட்ட அறிக்கையை பற்றிக்கூட குழப்பவாதி என்று கூறினார்கள். அன்று நான் அந்த முடிவு எடுக்காவிட்டால் நாட்டில் எத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து சில நேரத்தில் கெட்ட பெயர் எடுத்துள்ளேன். இப்போது அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். நானும் அமைதியாக இருக்கிறேன். (குழப்பவாதியானு கேள்வி தானே கேட்டாங்க! உடனடியாக நிருபிச்சிட்டிங்களே!)

கே: ஒகேனக்கல் விவகாரத்தில் மன்னிப்பு கேட்டதாகவும், வருத்தம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது. உண்மையில் நடந்தது என்ன? உங்கள் வாயால் சொல்லுங்கள்.

ரஜினி: (சிரித்துக் கொண்டே) முன்னாலே முன்னாலே போகனும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் பின்னாலே பின்னாலே போகனும் என்கிறீர்கள். விஷயம் நடந்தது முடிந்தது. விட்ருங்க. அதிலேயே இருந்தால் எப்படி.

முதலில் ஒகேனக்கல் பிரச்சனை சினிமா சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால் கர்நாடகாவில் எந்த பிரச்சனையானாலும் தியேட்டரைத்தான் முதலில் அடிப்பார்கள். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகத்தான் அந்த கூட்டத்தில் நான் அமர்ந்தேன்.

அங்கு பேசியவர்கள் எப்படி பேசினார்கள் என்று உங்களுக்கு தெரியும். எனக்கு சிறிது கோபம் ஏற்பட்டது. அப்போது உணர்ச்சி வசப்பட்டு உதைக்கனும் என்று கூறிவிட்டேன். தண்ணீர் கொடுக்க மறுப்பவர்களை உதைக்க வேண்டும் என்று கூறி இருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். அப்போது குசேலன் ரிலீசாகும் சமயம் கர்நாடகா விநியோகஸ்தர்கள் என்னைச் சந்தித்தார்கள். எடியூரப்பா தியேட்டருக்கு பாதுகாப்பு தருவதாக கூறினார். ரசிகர்கள் கத்தி, கபடாவோடு நாங்களும் தயார் என்றார்கள்.

ஒரு பிரச்சனை ஆரம்பித்தால் உடனே முடிய வேண்டும். இழுத்தடிக்கக் கூடாது. அதனால் பொது நலத்திற்காக, மற்றவர்கள் நலனுக்காக நான் மன்னிப்பு கேட்டேன் என்றார்.

தொடர்ந்து ரசிகர்கள் எழுப்பிய மேலும் பல கேள்விகளுக்கு பதில் அளித்த ரஜினி பின்பு பேசியதாவது:

மீண்டும் மீண்டும் நான் சொல்வது எல்லாம் குடும்பத்தை கவனியுங்கள். நான் என் மனைவிக்கு நல்ல கணவனாக, என் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக, தயாரிப்பாளர்களுக்கு நல்ல நடிகனாக என்று என் கடமைகளை செய்து வருகிறேன். (ரசிகமணிகளே! இப்பயாவது உங்களுக்கு புரியலயா?)

நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள். கடமையைச் செய். பலனை எதிர்பார் இதுதான் நமது தத்துவம். அரசியலை பொறுத்தவரை ஒருவர் வெற்றி பெறுகிறார்கள் என்றால், அது திறமையாலோ, புத்திசாலித்தனத்தாலோ, உழைப்பாலோ என்று கூறினால் அது முட்டாள்தனம்.

சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம் ஆகியவை தான் ஒருவரின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பாக இருக்கிறது.

சரியில்லாத நேரத்தில் நீங்கள் குட்டிகரணம் அடித்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது. 1996ம் ஆண்டு இருந்த நிலைமை வேறு. அன்று பதவியில் போய் அமர வேண்டியது தான். அப்படி ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால் யாரோ ஜெயித்து நாம் அனுபவிப்பதா?.

நமக்கு ஒரு விஷயத்தில் திறமை இருக்க வேண்டும். அனுபவம் இருக்க வேண்டும். அதை நாம் செய்ய வேண்டும். தெரியாமல் ஒரு விஷயத்தை செய்யக் கூடாது.

என் சிறு வயதில் பணக் கஷ்டத்தில் இருந்த போது கூட சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 வருடம் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த பிறகு தான் நடிக்க வந்தேன். தெரியாத ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன். பலவந்தமாக திருமணம் செய்தால் அந்த வாழ்க்கை நடக்குமா? ஈடுபாடு இருந்தால் தான் இனிமையாக இருக்கும். ஒருவேளை ஆண்டவன் சொன்னால் நாளைக்கே நடக்கலாம்.

தொடர்ந்து நாட்டில் நடப்பதை கண்காணித்துக் கொண்டே வாருங்கள்.

தற்போது நாடு சரியில்லை. தமிழ்நாடு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இந்தியா முழுக்கவே அப்படித்தான் இருக்கிறது. பார்க்கலாம் ஆண்டவன் இருக்கிறான் என்றார் ரஜினி. பிற்பகல், ரசிகர்கள் அனைவருக்கும் ராகவேந்திரா மண்டபத்தில் விருந்து பரிமாறப்பட்டது.

(பாவம்! கேள்வி கேட்கிறேன் என்று சொல்லி ரசிகர்கள் ரஜினியை ரொம்ப படுத்தி இருக்காங்க. ரஜினியும் சாய்பாபா ரேங்ஜுக்கு பத்திப்பரவசம் பொங்கி வழிய பதில் சொல்லி இருக்கார். இவரு பேசாம கட்சிக்கு பதில் ஆசிரமம் ஆரம்பிக்கலாம்.)

(தட்ஸ்தமிழ்.காம் இருந்து சுடப்பட்டது)

நகைச்சுவை என்று பார்த்தால் சீரியஸா இருக்கு!!