Saturday, September 29, 2012

ஆசிய சிவிங்கியும் ஒரு சூஃபிக்கதையும்



முன்பு ஒரு ஆங்கிலப்படம் பார்த்தேன். அப்படத்தில் 1910-களில் நடப்பதான கதை. அதில் ஆங்கிலத்தில் ‚சீத்தா (Cheetah)‘ எனப்படும் ஒரு வகைப்புலி காட்டப்படும். சாதாரணமாக சீத்தா வகைப்புலிகள் ஆப்பிரிக்காவில் தானே இருக்கும். எப்படி இந்தியாவில் காட்டுகிறார்கள்? என குழப்பம். இயக்குனரின் தவறாக இருக்கலாம் என விட்டுவிட்டேன். முன்பு இந்திய அரசர்கள் இதனை வேட்டைக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள் எனப் படித்திருக்கிறேன். ஆனால் அவற்றை ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவந்திருக்கப்படும் என நினைத்திருந்தேன். பிறகு தான் தெரிந்தது. இதன் பெயர் தமிழில் சிவிங்கிப்புலி. சீத்தா என்பது சம்ஸ்கிருதப் பெயர்.
 
ஒரு காலத்தில் சிவிங்கிப்புலிகள் இந்தியதுணைக்கண்டம் முழுக்க இருந்திருக்கிறது. தற்போது அரேபியா முதல் இந்தியா வரை வெறும் 70 – 100 சிவிங்கிப்புலிகள் மட்டுமே உள்ளன. அவற்றில் பெரும்பாலும் ஈரானில் மட்டுமே உள்ளன. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் பொழுதுபோக்கின் பெயரால் பல சிவிங்கிப்புலிகள் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன. பிறகு சிவிங்கிப்புலிகளின் இருப்பிடங்களான எத்தனையோ புல்வெளிகள் மக்களின் வாழ்விடங்களாகவும், விளைச்சல் நிலமாகவும், மேய்ச்சல் நிலங்களாவும் மாற்றப்பட்டுவிட்டன. இந்தியாவில் முதன்முதலாக ஒரு விலங்கு செயற்கையாக முற்றிலும் அழிக்கப்பட்டதென்றால் அது சிவிங்கிப்புலியே. 1952ல் இவை முற்றிலும் இந்தியாவில் அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மறுபடியும் ஆசியவகை சிவிங்கிப்புலிகளை இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டம் (Project Cheetah) இந்தியாவிற்கு உள்ளது. 2009ல் ஈரானிய அரசுடன் இது குறித்து பேச்சுவார்த்தையும் நடந்தேறியது. ஆனால் ஆசிய சிவிங்கிப்புலிஜோடிகள் அல்லது திசுக்களுக்கு (க்லோனிங் முறையில் உருவாக்க) பதிலாக ஈரான் ஆசிய சிங்கங்களை கேட்டுள்ளது. அவ்வாறு கொடுக்க இயலாது என இந்திய அரசு மறுத்துவிட்டது. வேறுவழியின்றி தென்னாப்பிரிக்காவிடமும் இந்திய அரசு சிவிங்கிப்புலிகளை கேட்டுள்ளது.

சில அதிக தகவல்களுக்கு தியோடர் பாஸ்கரன் தமிழில் எழுதிய கட்டுரை பார்க்கவும்.
****************************************************************************************
ஒரு ஊரில் ஒரு வணிகன் இருந்தானாம். ஒருநாள் அவன் வியாபாரம் எல்லாம் முடிச்சு ஒட்டகத்தில் ஊரு திரும்பிக்கொண்டு இருந்தான். வரும்வழியில் கடவுள் தொழுகைக்கு நேரமாகிவிட்டது. ஓரமாக ஒட்டகத்தை விட்டுவிட்டு, தொழுகை செய்ய ஆரம்பிச்சான். தொழுகைய முடிச்சி வந்து பார்த்தா ஒட்டகத்தை காணோம். இருட்டி வேற போச்சு. ஒட்டகத்தை தேடவும் வழியில்லை. ஒட்டகத்தில் தான் அவன் கொண்டுவந்த பணமும் இருக்கு. அவனுக்கு ஒரே கோபம். வானத்தைப் பார்த்து „கடவுளே! உன்னை தானே வணங்கிக் கொண்டிருந்தேன், இப்படி நீ செய்யலாமா? ஒட்டகம் ஓடி போச்சே! நான் என்ன செய்ய!“ எனக் கத்தி புலம்பிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியா ஒரு சூஃபி பெரியவர் வந்தராம். கடவுளிடம் புலம்பிக்கொண்டிருந்த வணிகனைப் பார்த்து „தம்பி! கடவுளை ஏன் திட்டுரே“ என்று கேட்டார். வணிகன் நடந்ததைச் சொன்னான். அதற்கு பெரியவர் „கடவுளைக் கும்பிடு! ஆனால் அதுக்கு முதல் ஒட்டகத்தை கட்ட வேண்டியது தானே!“ என்றார்.

உணவகம் அறிமுகம் - ஹோட்டல் மா சண்டி


மேற்கு வங்காளத்தில் இருக்கிறது மெதினிபூர். ஒரு சமயம்  அனுபம்தாஸ் என்ற வங்காள எதிரி ஒருத்தன் பார்ட்டி கொடுக்கிறேன் என்று சொல்லி என்னையும், நம்ம நண்பேன்டா சங்கரையும் கூப்பிட்டான். சரி இந்த ஊரில் சாப்பாடு எப்படித்தான் இருக்கும் என்று பார்த்துடுவோமே என இருவரும் அவனுடன் போனோம். இதுதான் ஓட்டல் என்று இருட்டில் எதையோ காட்டினான். ஒரு குண்டுபல்பின் மங்கலான வெளிச்சத்தில் „ஹோட்டல் மா சண்டி“ என்று இங்கிலீசிலும் பெங்காலியிலும் எழுதி இருந்தது. சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்து அமர்ந்தோம். சுவற்றில் சீரியல்லைட் போடப்பட்ட பத்ரகாளிபடம் மாட்டப்பட்டிருந்தது. உள்ளேயும் ஒரு குண்டு பல்பு தான். இருட்டான அந்த அட்மாஸ்பியரும், அங்கே கேட்டுக் கொண்டிருந்த „பாபுஜி தீரே சலோ“ பாடலும் சங்கருக்கு பிடித்துப்போனது.   

அருகில் உள்ள மேசையில் ஒருவன் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ரப்பர் போன்ற முரட்டு தோசையை லாவகமாக கிழித்து வாயில் போடுவதும், ஒரு கரண்டி சாம்பார் குடிப்பதும் என அக்கப்போரு செய்து கொண்டிருந்தான். திரும்பும்போது, சங்கர் எதிர்மேசையில் மொத்தமாக லிப்ஸ்டிக்கும், பவுடரும் அப்பியபடி அமர்ந்திருக்கும் பெண்களை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தான். தாஸ் சாப்பிட சோறு ஆர்டர் செய்தான். கொஞ்சம் நேரத்தில் மூவருக்கும் தட்டு நிறைய சோறு  மேசைக்கு வந்தது. கைலியுடன் ஒருவன் வந்து சாம்பார் ஊத்தினான். பார்க்க முருங்கைக்காய் சாம்பார் போல இருந்தது. தாஸிடம் கேட்டேன். அது முருங்கையல்ல பூசனிக்கொடியை நறுக்கி செய்தது என சொன்னதைக் கேட்டவுடன், நடிகர் சிவகுமார் போல சங்கர் என்னை ஒரு உணர்ச்சியற்ற பார்வை பார்த்தான். சூடான சாம்பாரை சோற்றுடன் குழைத்து நன்கு உருட்டி ஒரு கவளத்தை வாயில் வைத்தேன். தேவம்ருத இனிப்பாக இருந்தது. உண்மையாகவே சர்க்கரை போட்டதுபோல் இனிப்பாக இருந்தது. திரும்பினால் சங்கர் ஏற்கனவே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். இதை தனியாக சாப்பிட இயலாது. எதாவது சைட்டிஷ் சொல்லலாமே என்றான். எனக்கு ஒரு மீன்  துண்டும், சங்கருக்கு ஒரு ஆம்லேட்டும் ஆர்டர் செய்தேன். 

தாஸ் சோமாலியாவில் இருந்து வந்தது போல ஒரு பரபரப்புடன் பாதி சோற்றை காலி செய்திருந்தான். சற்று நேரத்தில் சர்வர் ஒரு கிண்ணத்தை கொண்டுவந்து வைத்துவிட்டு போனான். என்ன என எட்டிப்பார்த்தேன். சிவசிவ என கொழம்பு அதன் நடுவே அவித்து தோல் உரிக்கப்பட்ட பெரிய உருளைக்கிழங்கு ஒன்று. மறுபடியும் வேகமாக வந்த சர்வர் தான் வெறும்கையில் கொண்டுவந்த பொறித்த மீன் துண்டை அந்தக் கொழம்பில் தொப் என்று போட்டுவிட்டுப் போனான். என்னையும் அறியாமல் வடிவேலு படத்தில் சொன்ன டயலாக் என் நினைவில் வந்துபோனது (அட! நாறப்பய ஓட்டலா இருக்கும் போல). சற்று நேரத்தில் சங்கருக்கு ஆம்லேட் தயாராக வந்தது. நான் தாமதிக்காமல் மீனை எடுத்து தட்டில் வைத்துவிட்டு, உருளைக்கிழங்கு விழுந்துவிடாமல் கொழம்பை மட்டும் சோற்றில் மெதுவாக ஊற்றினேன். லேசாக பிசைந்து, உருண்டையாக்கி வாயில் வைத்தேன். கொழம்பில் தண்ணீர், எண்ணெய், மிளகாய் தூள், வெங்காயம் மட்டுமே போடப்பட்டுள்ளதை என்னுடைய நாக்கு அன்னப்பறவை போல உணர்ந்தது. சரி மீனையாவது ஒழுங்காக சாப்பிடுவோமே என எண்ணும் வேளையில், „கூமுட்டை“ என்றான் சங்கர். இவன் எதற்கு என்னை திட்டுகிறான் என திரும்பினேன். இப்போது அச்சுஅசல் நடிகர் ஏ.வி.எம்.ராஜன் போல உணர்ச்சிவசப்பட்டான். „ஏன்டா! திட்டுரே!“ என்றேன். „கெட்டுப்போன முட்டையா“ என்றான் சங்கர். கெட்டுப்போன முட்டையைத்தான் கூமுட்டை  எனக் கூறுகிறார்கள் என்பது அன்று தான் எனக்குத் தெரிந்தது. என்ன இருந்தாலும் சங்கர் தஞ்சைத் தமிழன் அல்லவா. இந்நேரம் தாஸ் தன்னுடைய தட்டை சுத்தமாக கழுவியது போல துடைத்து வைத்து இருந்தான். 

இதற்குமேலும் இங்கிருந்தால் முதலுக்கு மோசமாகிவிடும் என இருக்கையில் இருந்து எழுந்தோம். தாஸ் சாப்பிட்டாகிவிட்ட்தா? என்றான். „பஸ்! பஸ்!“ என சொல்லியவாறே சங்கர் பிலாஸ்டிக் டம்ளரில் தண்ணீர் மொண்டு மொண்டு கைக்கழுவிக் கொண்டிருந்தான். பணத்தை கொடுத்துவிட்டு வெளியே வந்தோம். தாஸ் வீட்டிற்கு கிளம்பும்முன் ‚குட் நைட்‘ சொல்லிவிட்டுச் சென்றான். சங்கரும் நானும் மெதினிபூர் ரயில்நிலையம் அருகேயுள்ள கடையொன்றில் மசாலா பொறியும், டீயும் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் வெட்டிக்கதை பேசிவிட்டு வீட்டிற்கு சென்றோம். மெதினிபூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்தே போனால் ஒரு மணிநேரமும், ரயில்நிலையத்தில் இருந்து சைக்கிளில் போனால் ஐந்து நிமிடத்திலும் ஓட்டல் வந்துவிடும். நீங்களும் மெதினிபூர் சென்றால் மறக்காமல் இந்த ஓட்டலில் சாப்பிடவும். மறக்காமல் குளிர்காலங்களில் செல்லவும், அக்கிளை சொரியாமல் பரிமாறுவார்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.



அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.

‚மஞ்சதுண்டு‘ மகான் உரை:
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.
மு.வ உரை:
விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.

Friday, September 21, 2012

கேபாப் / கபாப்

கேபாப் / கபாப் கிரீஸ், துருக்கியை பகுதியை ஒட்டிய நாடுகளிலிருந்து தோன்றியுள்ளது எனக் கூறுகிறார்கள். ஹோமரின் இலியட், ஒடிஸி கூட கேபாப் பற்றிய குறிப்புகள் உள்ளனவாம். கேபாப் என ஒரே பெயரில் எல்லா இடங்களில் அழைத்தாலும், செய்முறை, சுவை, பொருட்கள் வேறுவேறுதான். பொதுவாக இவை அரைத்த இறைச்சியாலோ, இறைச்சித்துண்டுகளாலோ மசாலாத்தூள்கள் சேர்த்து செய்யப்படுகிறது.


துருக்கியில் இறைச்சியை ஒரு இரும்புக்கம்பியில் மொத்தமாக கோர்த்து நெருப்பில் வாட்டி, இறைச்சியின் மேற்புறத்தை மட்டும் கத்தியால் சுரண்டி எடுத்து, தட்டையான ரொட்டியில் சாலாட்டோடு தயிர்சாஸ் போட்டு சாப்பிடுவார்கள். இதற்கு டோனர் கேபாப் என பெயர். இதனை மத்தியகிழக்கு நாடுகளில் ஷவர்மா, கிரீஸில் கைரோஸ் எனக் கூறுவதுண்டு. இதுவும் ரொட்டியில் வைத்து சாப்பிடுவதுதான். இந்த இறைச்சியை பிஸ்ஸாவில் போட்டு கேபாப்பிஸ்ஸா, ஷவர்மாபிஸ்ஸா, ஐரோஸ்பிஸ்ஸா எனவும் விற்கிறார்கள்.  

ஈரானில் அரைத்த இறைச்சியில் மசாலாத்தூள்கள், வெங்காயம், பூண்டு போட்டு ஒரு கத்தியில் அதை அப்பி வைத்து நெருப்பில் வாட்டி சாப்பிடுவார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவில் அரைத்த இறைச்சியில் மசாலாத்தூள், வெங்காயம், முட்டை சேர்த்து நாம் வடை சுடுவது போல தட்டி தவாவில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சுடுவார்கள். இவற்றிற்கு ஆப்கானிகபாப், சப்லிகபாப், ஷமிகபாப் என பலப்பெயர்கள் உண்டு. இதே முறையில் அரைத்த இறைச்சிக்குப் பதில் கொண்டைக்கடலையை அரைத்து செய்யப்படும் சைவ உணவான ஃபலாஃபல் மத்தியகிழக்கு நாடுகளில் குறிப்பாக எகிப்தில் மிகவும் பிரிசித்தம். சில கேபாப்கள் இறைச்சித்துண்டுகளை குச்சியில் கோர்த்து அல்லது தனியாக வாணலில் வறுத்தும் செய்வதுண்டு, இதற்கு ரேஷ்மிகபாப், சிக்கன் மலாய்கபாப் எனப் பலப்பெயர்கள் இருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் காவாப்ச்சி என ஒரு வகை கபாப் உள்ளது. ஜெர்மனியில் கிடைக்கும் ஃபிரிகடெலன் கூட ஒருவகை கபாப் தான். சில ஐரோப்பிய நாடுகளில் அரைத்த இறைச்சி உருண்டைகள் செய்து பொறித்து, காளான், தக்காளி, உருளைகிழங்கு சாஸ் விட்டு சாப்பிடுவார்கள். இது மீட்பால்ஸ், சுவிடனில் கோட்புல்லர் என அழைக்கப்படுகிறது. நான் சாப்பிட்ட, பார்த்தவற்றை மட்டும் தான் இங்கு கொடுத்துள்ளேன். இவைதவிர பலவகை கேபாப்கள் உலகெங்கும் உள்ளன.

என்னுடைய கேபாப் செய்யும்முறை
தேவையான பொருட்கள்:
அரைத்த இறைச்சி – 500 கிராம்
அரைத்த இறைச்சியைத் தேர்ந்தெடுக்கும்போது, பன்றி இறைச்சியாக இருந்தால் கொழுப்பு அதிகமாக இருக்கும். மாட்டிறைச்சியாக இருந்தால் இருக்கமாக கேபாப் வந்துவிடும். எனவே பன்றி இறைச்சியும் மாட்டிறைச்சியும் கலந்திருந்தால் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும், கொழுப்பும் தெறிக்காது.
வெங்காயம்,– 1 (பொடியாக நறுக்கியவை)
பச்சைமிளகாய் – 2 (பொடியாக நறுக்கியவை)
தேவையான அளவு அரைத்த இஞ்சி, பூண்டு
முட்டை – 1
நல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி
புதினா, கொத்துமல்லி, துளசி – பொடியாக நறுக்கியவை
தேவையான அளவு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், மஞ்சள், உப்பு.
கொஞ்சம் மைதாமாவு.

மேலே சொன்ன அனைத்தயும் ஒன்றாக பிசைந்து கொள்ளவும். வடை போல தட்டி தவாவில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சுடலாம். பர்கர் போல ரொட்டியில் வைத்து சாப்பிடலாம். எண்ணெய் வேண்டாம் என்பவர்கள் வோவனில் வைத்து வாட்டலாம். உருண்டைகளாக்கி பொறித்து புளிப்பான தயிர்பச்சடியில் தொட்டு சாப்பிடலாம்.

துளசியை தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற கிழக்கிந்திய நாடுகளிலும், ஐரோப்பாவிலும் சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஐரோப்பாவில் இறைச்சிப் பொருட்கள் சமைக்கும்போது மூலிகைகள் என துளசி, புதினா, ரோஸ்மரி, லாவண்டர், தைம், பார்ஸ்லி, சல்பை (கற்பூரவல்லி போன்று மணக்கும்), ஒரிகனோ, தில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றைப் பயன்படுத்தும்போது கவிச்சி மணம் அவ்வளவாக இருப்பதில்லை.