Monday, November 03, 2008

சுவாமி ரஜினிகாந்தும் அவரோட சிஷ்யகோடிகளும்

ஆண்டவன் நினைத்தால் நாளையே அரசியல் கட்சி தொடங்கி விடுவேன். ஆனால் இப்போது நாடு சரியில்லை. அமைதியாக அவரவர் பணிகளில் கவனம் செலுத்துங்கள் பின்னர் பார்க்கலாம் என ரஜினி தன் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று ரஜினி-ரசிகர்கள் சந்திப்பு நடந்த்து. காலை 10 மணிக்கு ரஜினிகாந்த் மேடைக்கு வந்தார். மேடையில் "கடமையைச் செய்; பலனை எதிர்பார்' என்று எழுதப்பட்டிருந்தது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அது முடிந்தவுடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த பாபாஜி உருவப் படத்தை ரஜினிகாந்த் வணங்கினார்.

தொடர்ந்து ரசிகர்களை நோக்கி, "உங்களுடைய கேள்விகளை பேப்பரில் எழுதி, மன்ற நிர்வாகி சுதாகரிடம் கொடுங்கள். அவர் மேடையில் உங்களுடைய கேள்விகளை மைக்கில் வாசிப்பார். அதற்கு நான் பதில் கூறுகிறேன்' என்றார். (கிட்டத்தட்ட ஒரு ஆன்மீக ஞானி போல சூப்பர்ஸ்டார ஆக்கிட்டாங்கப்பா!!)

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்களுடைய கேள்விகளை எழுதி மேடைக்கு அனுப்ப ரஜினி பதில் கூறினார்.

கேள்வி: இந்த சந்திப்பின் நோக்கம் என்ன?

ரஜினி: நீங்கள் என்னை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள். அதே போன்று நானும் உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதுதான் நோக்கம். (என்ன ஒரு உன்னத நோக்கம்! ரஜினியும் ரசிகர்களும் காதலன் - காதலி போல ஆகிட்டாங்க)

என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று 300, 400 பேர் என கும்பலாக வருவதால், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒருமுறை சச்சிதானந்த சுவாமிகள் தன்னுடைய சிஷ்யர்களிடம் பேசும்போது உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேளுங்கள் அதற்கு பதில் அளிக்கிறேன் என்றார். அதுதான் இப்போது நடக்கிறது. (தலைவா! எதாவது ஒரு சாமியார உதாரணமா சொல்லாம உங்களால இருக்க முடியாதா?)

கே: எதிர்காலம் திட்டம் என்ன?

ரஜினி: முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள். என்னுடைய எதிர் காலத்திட்டம் தற்போதைக்கு எந்திரன் படம்தான். (இதை முதல்லே சொல்லி இருந்தா ஏன் இப்ப கேள்வி கேட்கிறாங்க!)

கே: மன்ற நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்யப்படுமா?

ரஜினி: பணம், ஜனம் இரண்டையும் ஒன்று சேர்க்கக் கூடாது. சேர்ந்தால் அங்கு அரசியல் வந்துவிடும். என்னிடம் பணத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்களால் இயன்றதை நீங்களே செய்யுங்கள். நான் தனியாக உதவிகள் செய்துகொண்டே தான் இருக்கிறேன்.

கே: ரஜினி ரசிகர்களுக்கு என ஒரு அங்கீகாரம் கிடைக்குமா? (விடுதலைப் போராட்டத்தியாகியா நீங்க பஸ் பாஸ், பென்சன் கொடுக்க!)

ரஜினி: சமூகத்தில் உங்களுக்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைக்கும்படி செய்வேன்.

கே: முதலில் ராகவேந்திரரை வழிபட்டீர்கள். பிறகு அருணாச்சலேஸ்வரர் என்றீர்கள். பாபாஜி என்றீர்கள். அடிப்படையில் உங்களுக்கே தெளிவான பார்வையில்லையா? (ரஜினி நெனச்ச சாமி கும்பிட கூட உரிமை இல்லையா?)

ரஜினி: (சிரிக்கிறார். சிறிது நேரம் யோசித்து விட்டு) இந்துவிலிருந்து முஸ்லீம், முஸ்லீம் இருந்து கிறிஸ்துவம் என்று மாறினால்தான் தவறு. அது கூட தவறு என்று சொல்ல முடியாது. நமது பாடத்திட்டத்திலேயே கூட வரலாறு, புவியியல், கணிதம் என்று பல படிப்புகள் உள்ளன.

அவை நமது ஞானத்தை விருத்தி செய்கிறது. அது போன்று தான் தேடல் நிறைந்த உள்ளம் நமது ஆன்ம ஞானத்தை விருத்தி செய்கிறது. இதில் தவறும் ஒன்றும் கிடையாது. விருப்பம் உள்ளவர்கள் பின்பற்றுகிறார்கள்.

கே: நீண்ட காலம் மன்றப் பணிகள் செய்து வரும் ரசிகர்களை பற்றி உங்கள் கருத்து?

ரஜினி: ரஜினி ரசிகர்களை பற்றி நான் பேச வேண்டிய அவசியம் கிடையாது. நாட்டு மக்களுக்கே தெரியும். இதை மற்றவர்களிடம் கேளுங்கள். (நான் கேட்டதுக்கு பைத்தியக்காரட்கள்னு சொன்னாங்கப்பா! ஏனென்றால் நானும் ஒரு ரஜினி விசிறி!)

கே: உங்களை குழப்பவாதி என்று சில பத்திரிக்கைகளில் எழுதும்போது அதை கேட்கவும், படிக்கவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்கு ஏன் நீங்கள் இடம் கொடுக்கிறீர்கள்?.

ரஜினி: பத்திரிக்கைக்காரர்களை வைத்துக் கொண்டே இந்த கேள்வியை கேட்டால் எப்படி. சில நேரங்களில் நான் செய்வது கூட அப்படித்தான் இருக்கிறது. எல்லாம் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வதுதான். இது செய்தால், இது நடக்கும் என யூகித்து செய்வதில்லை.

நாம் நினைப்பது சரி எனும்போது பேசி விடுகிறேன். வேறு கோணத்தில் பார்க்கிறவனுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். அது தவிர்க்க முடியாது. குழப்பவாதி என்று சொல்லலாம். சுயநலத்தோடு எதையும் செய்ய மாட்டேன். எது சரி என்று படுகிறதோ அதைத்தான் செய்வேன்.

சில செய்திகளை படிக்கும் போது சிரிப்பாக இருக்கும். சில சிந்திக்க வைக்க செய்யும். சமீபத்தில் நான் வெளியிட்ட அறிக்கையை பற்றிக்கூட குழப்பவாதி என்று கூறினார்கள். அன்று நான் அந்த முடிவு எடுக்காவிட்டால் நாட்டில் எத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து சில நேரத்தில் கெட்ட பெயர் எடுத்துள்ளேன். இப்போது அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். நானும் அமைதியாக இருக்கிறேன். (குழப்பவாதியானு கேள்வி தானே கேட்டாங்க! உடனடியாக நிருபிச்சிட்டிங்களே!)

கே: ஒகேனக்கல் விவகாரத்தில் மன்னிப்பு கேட்டதாகவும், வருத்தம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது. உண்மையில் நடந்தது என்ன? உங்கள் வாயால் சொல்லுங்கள்.

ரஜினி: (சிரித்துக் கொண்டே) முன்னாலே முன்னாலே போகனும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் பின்னாலே பின்னாலே போகனும் என்கிறீர்கள். விஷயம் நடந்தது முடிந்தது. விட்ருங்க. அதிலேயே இருந்தால் எப்படி.

முதலில் ஒகேனக்கல் பிரச்சனை சினிமா சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால் கர்நாடகாவில் எந்த பிரச்சனையானாலும் தியேட்டரைத்தான் முதலில் அடிப்பார்கள். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகத்தான் அந்த கூட்டத்தில் நான் அமர்ந்தேன்.

அங்கு பேசியவர்கள் எப்படி பேசினார்கள் என்று உங்களுக்கு தெரியும். எனக்கு சிறிது கோபம் ஏற்பட்டது. அப்போது உணர்ச்சி வசப்பட்டு உதைக்கனும் என்று கூறிவிட்டேன். தண்ணீர் கொடுக்க மறுப்பவர்களை உதைக்க வேண்டும் என்று கூறி இருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். அப்போது குசேலன் ரிலீசாகும் சமயம் கர்நாடகா விநியோகஸ்தர்கள் என்னைச் சந்தித்தார்கள். எடியூரப்பா தியேட்டருக்கு பாதுகாப்பு தருவதாக கூறினார். ரசிகர்கள் கத்தி, கபடாவோடு நாங்களும் தயார் என்றார்கள்.

ஒரு பிரச்சனை ஆரம்பித்தால் உடனே முடிய வேண்டும். இழுத்தடிக்கக் கூடாது. அதனால் பொது நலத்திற்காக, மற்றவர்கள் நலனுக்காக நான் மன்னிப்பு கேட்டேன் என்றார்.

தொடர்ந்து ரசிகர்கள் எழுப்பிய மேலும் பல கேள்விகளுக்கு பதில் அளித்த ரஜினி பின்பு பேசியதாவது:

மீண்டும் மீண்டும் நான் சொல்வது எல்லாம் குடும்பத்தை கவனியுங்கள். நான் என் மனைவிக்கு நல்ல கணவனாக, என் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக, தயாரிப்பாளர்களுக்கு நல்ல நடிகனாக என்று என் கடமைகளை செய்து வருகிறேன். (ரசிகமணிகளே! இப்பயாவது உங்களுக்கு புரியலயா?)

நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள். கடமையைச் செய். பலனை எதிர்பார் இதுதான் நமது தத்துவம். அரசியலை பொறுத்தவரை ஒருவர் வெற்றி பெறுகிறார்கள் என்றால், அது திறமையாலோ, புத்திசாலித்தனத்தாலோ, உழைப்பாலோ என்று கூறினால் அது முட்டாள்தனம்.

சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம் ஆகியவை தான் ஒருவரின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பாக இருக்கிறது.

சரியில்லாத நேரத்தில் நீங்கள் குட்டிகரணம் அடித்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது. 1996ம் ஆண்டு இருந்த நிலைமை வேறு. அன்று பதவியில் போய் அமர வேண்டியது தான். அப்படி ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால் யாரோ ஜெயித்து நாம் அனுபவிப்பதா?.

நமக்கு ஒரு விஷயத்தில் திறமை இருக்க வேண்டும். அனுபவம் இருக்க வேண்டும். அதை நாம் செய்ய வேண்டும். தெரியாமல் ஒரு விஷயத்தை செய்யக் கூடாது.

என் சிறு வயதில் பணக் கஷ்டத்தில் இருந்த போது கூட சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 வருடம் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த பிறகு தான் நடிக்க வந்தேன். தெரியாத ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன். பலவந்தமாக திருமணம் செய்தால் அந்த வாழ்க்கை நடக்குமா? ஈடுபாடு இருந்தால் தான் இனிமையாக இருக்கும். ஒருவேளை ஆண்டவன் சொன்னால் நாளைக்கே நடக்கலாம்.

தொடர்ந்து நாட்டில் நடப்பதை கண்காணித்துக் கொண்டே வாருங்கள்.

தற்போது நாடு சரியில்லை. தமிழ்நாடு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இந்தியா முழுக்கவே அப்படித்தான் இருக்கிறது. பார்க்கலாம் ஆண்டவன் இருக்கிறான் என்றார் ரஜினி. பிற்பகல், ரசிகர்கள் அனைவருக்கும் ராகவேந்திரா மண்டபத்தில் விருந்து பரிமாறப்பட்டது.

(பாவம்! கேள்வி கேட்கிறேன் என்று சொல்லி ரசிகர்கள் ரஜினியை ரொம்ப படுத்தி இருக்காங்க. ரஜினியும் சாய்பாபா ரேங்ஜுக்கு பத்திப்பரவசம் பொங்கி வழிய பதில் சொல்லி இருக்கார். இவரு பேசாம கட்சிக்கு பதில் ஆசிரமம் ஆரம்பிக்கலாம்.)

(தட்ஸ்தமிழ்.காம் இருந்து சுடப்பட்டது)

6 comments:

  1. thalaivar mela unakkena kolai veri

    ReplyDelete
  2. ippe thaan tv-la paarthen

    ReplyDelete
  3. nice comments.


    keep this kind of arrangement for posting the comments.

    In earlier template very difficult to comment.

    ReplyDelete
  4. nice comments,
    நைஸ் கமென்ட்ஸ்

    ReplyDelete
  5. எந்திரன் படம் வருது.. அது குசேலன் மாதிரி சிக்கல மாட்டக்கூடாது..
    பட்ஜெட் பல கோடி.. ஒரு பக்கம் என்னதான் மசாலா அரைச்சாலும்.. அது
    போணி ஆகணுமில்லையா.. அதுக்கு ஒரு டெக்னிக். ரசிகர்களை உசுப்பி விட்டு
    அரசியல் அது இதுன்னு ஆசை காட்னா, பாவம் அதுகளும் நல்ல உழைக்குங்க..
    இப்படி பல பிசினஸ் விசயம் இருக்கு சார்..ஒங்களுக்கு ஏன் சார் பொறாம..
    வவுத்தெறிச்சல்.. ஒரு கோடிய முளுசா பாத்திருக்கோமா.. நாம..? பதில் சொல்லு சார்..

    ReplyDelete
  6. \\தண்ணீர் கொடுக்க மறுப்பவர்களை உதைக்க வேண்டும் என்று கூறி இருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். \\அவர் இப்படிச் சொல்லவில்லை. "பஸ்சை கொளுத்துபவர்கள், பொதுச் சொத்துக்களை சூரையாடுபவர்களை உதைக்கத்தான் சொன்னேன்" என்று கர்நாடகத்தவர்களிடம் ரஜினி மன்னிப்பு கேட்டார். இந்தக் கூட்டத்தில், "என்னதான் இருந்தாலும் அவங்களை உதைக்கனும்னு சொல்லியிருக்கக் கூடாதல்லவா"- என்று சொன்னார்.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய