Friday, May 09, 2014

கொசுவத்தி பதிவுகள்

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, என்னுடைய வகுப்பில் 120 பேர் இருந்தோம். அத்தனை பேரும் தரையில் தான் அமருவோம். வாத்தியார் கூப்பிட்டால் எழுந்து வரவும் முடியாது. அவராலும் எல்லோரையும் தாண்டி வந்து அடிக்க இயலாது. தூங்கினால் கூட தெரியாது, அவ்வளவு கூட்டமாக இருக்கும். இவ்வளவு நலன்களைத்தாண்டி ஒரே பிரச்சனை, காற்று வசதி. ஒரு ஜன்னல் தான் இருக்கும். எவனாவது குசுவிட்டால் பக்கத்தில் இருப்பவர்கள் செத்தார்கள். துர்நாற்றம் சுத்தி சுத்தி அங்கேயே இருக்கும். சில சமயம் வாத்தியரே எழுந்து திட்டிக் கொண்டே வெளியே போய்விடுவார்.


ஓலைக் கூரை என்பதால் கனமழை பெய்தால், தரை முழுக்க ஈரமாகி ஒன்று-இரண்டு நாட்களுக்கு விடுமுறை கிடைக்கும். பிறகு ஓலைக் கூரையை சீமைஓடாக மாற்றினார்கள். கத்தி போய் வால் வந்த கதையாக, வெப்பம் தாங்க முடிவதில்லை. வெள்ளாவிகுள்ள தூக்கிப் போட்டது போல இருக்கும். ஒரு வழியாக, எல்லா மாணவர்களிடம் கட்டாயமாக பணம் வசூலித்து மின்விசிறியும், குழல்விளக்கும் பொருத்தினார்கள். 

ஆறிலிருந்து ஏழாம் வகுப்பிற்குச் செல்லும்போது, வகுப்பு இரண்டாக பிரிக்கப்பட்டது. புதிதாக சேர்ந்த மாணவர்களோடு சேர்த்து 70 பேர் இருந்தோம். எங்கள் வகுப்பில் வெறும் ஆண்கள் மட்டுமே. எல்லோரும் பென்சில் (bench) அமர்ந்தோம். உயரம் பார்த்து தான் வகுப்பில் அனைவரும் அமரவைக்கப்பட்டார்கள். முன்னாடி அல்லது கடைசி பென்சில்  உட்கார்ந்தால் அடிக்கடி வாத்தியாரிடம் அடிவாங்க வேண்டுமென்பதால், எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி நடித்து நடு பென்சில் ஒரு இடம் பிடித்துவிட்டேன். ஒரு பென்சிற்கு 6 பேர். இக்கட்டாக இருக்கும். நெருக்கி நெருக்கி அமர்ந்திருப்போம்.

விதி யாரை விட்டது. வகுப்பை இரண்டாக பிரித்தும் நெரிசல் என்னை விட்டபாடில்லை. கிரிக்கெட் ஆடும்போது, படாத இடத்தில் டென்னிஸ் பந்துபட்டு எனக்கு வீங்கிவிட்டது. நானே நடக்க முடியாமல் நடந்து வந்து பொத்தினாற்போல அமர்ந்திருப்பேன். பென்சில் உள்ளவர்கள் அப்போதுதான் நெருக்கியடித்து இடித்துக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு நேரந்தான் தம்கட்டி இடிபடாமல் பார்ப்பது. அடிபட்ட விஷயத்தை சொல்லவும் முடியாது. சொன்னாலோ 'கைகொட்டிச் சிரிப்பார்கள் ஊரார்கள்'. இடியிலிருந்தும் தப்ப முடியாது. பேசாமல் எழுந்துபோய் தரையில் அமர்ந்துவிடுவேன்.

பள்ளி வகுப்புகளில் கிளாஸ் லீடர் என்றொரு பதவி உண்டு. கொஞ்சம் உயரமானவர்களைத் தான் கிளாஸ் லீடர்களாக நியமிப்பார்கள். கலை என்ற பெயரில் ஒரு பெண், உயரமாக இருப்பாள். நன்றாக படிப்பாள். லீடர் வேலை என்னவென்றால், சாக்பீஸ்-டஸ்டர் தினமும் கொண்டுபோய் கொண்டு வரவேண்டும். மாணவர்களிடம் பணம் சேகரித்து அனைவருக்கும் கட்டுரை நோட்டுப் புத்தகம், வெள்ளைத்தாட்கள் வாங்கி வந்து கொடுக்க வேண்டும் (இதில்  கடைக்காரரிடம் கொஞ்சம் கமிஷனும் கிடைக்கும்). வாத்தியார் இல்லாத சமயங்களில் பேசுவோர் பெயரை எழுதிவைக்க வேண்டும். அதை வாரம் ஒருமுறை வாத்தியார் பார்வையிடுவார். இதற்கென்று ஒரு நோட்டுப்புத்தகம் வேறு இருக்கும். நான் என் ஓட்டைவாயை வைத்துக் கொண்டு எப்போதும் சும்மா இருப்பதில்லை. பேசிக்கொண்டே இருப்பேன். தினமும் முதல் பெயராக என் பெயர் நோட்டுப்புத்தகத்தில் வந்துவிடும். நானும் இதெல்லாம் கண்டுகொள்வதாக இல்லை. பெயர் ஏற்கனவே எழுதிவிட்டாள் தானே என்று இன்னும் சத்தமாக பேசிக்கொண்டிருப்பேன். ஒருநாள் நோட்டு முருகேச வாத்தியாரிடம் போனது. கலையும் என்னைப் பற்றியும் என் பேச்சாற்றலை பற்றியும் விலாவாரியாக சொல்லிவிட்டாள். வாத்தியார் என்னைக் கூப்பிட்டார்.
வாத்தியார்: ஏன்டா! இப்படித்தான் வகுப்புல பேசிகிட்டே இருக்கியா!
நான்: இல்ல சார்! நான் ஒருமுறை தான் சார் பேசினேன்
கலை: இல்ல சார்! அவன் சொல்லச்சொல்ல பேசிட்ட இருந்தான் சார்!
நான்: இல்ல சார்! பொய் சார்!
வாத்தியார்: சரி! அடுத்தமுறை எத்தனை தடவை பேசுரானோ, அத்தனைமுறை அவன் பேரை எழுது.
கலை நோட்டை வாங்கிக் கொண்டு போய்விட்டாள்.
முருகேச வாத்தியார் என் தந்தையின் பால்ய நண்பர் என்பதால், எப்போதும் என்னை அடித்ததில்லை. "அறிவுகெட்டவனே! உங்கப்பனும் இப்படித்தான்" என்று செல்லமாக திட்டி அனுப்பிவிடுவார்.


மறுநாள்....
நான் வழக்கம்போல வாத்தியார் இல்லாத நேரம் தொனத் தொனவென பேசிக் கொண்டே இருந்தேன். இரண்டு நாள் இப்படியே போனது. மூன்றாவது நாள், நானும் என் பேச்சை துவங்கி இருந்தேன். சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் படத்தைப் பார்த்து எங்க தமிழ்வாத்தியார் பேசினால் எப்படி இருக்கும் என்று அவரைபோல பக்கத்தில் மாணவர்களிடம் செய்து காட்டிக் கொண்டிருந்தேன்.

கலை என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவள் வந்தவுடன் என் சேட்டை நிறுத்திவிட்டு அமைதியாகிவிட்டேன். வந்தவள் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டு "இரண்டு நாளாக உன்னுடைய பெயரை ராமஜெயம் எழுதுவது போல தினமும் எழுதிக்கொண்டிருக்கிறேன், உன் பேச்சை நிறுத்தவே மாட்டியா" சொன்னாள். எனக்கு அவள் சொன்னதில் என்ன தோணியதோ அடக்கமுடியாத சிரிப்பு. அவளும் சிரித்தவாறே போய்விட்டாள். அதன்பிறகு அவள் என்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காக அசட்டுதனமாக எதாவது செய்துகொண்டு இருப்பேன். நண்பன் லோகேஷ் மட்டும் நக்கலாக கேட்பான் "ஏண்டா! அந்தப் பொண்ணு உயரம் என்ன. உன் உயரம் என்ன. உனக்கெல்லாம் இது தேவையா!".

முன்பே சொன்னது போல, ஏழாவதில் என்னை வேறு வகுப்பில் போட்டுவிட்டார்கள். பிறகு கலையிடம் நான் பேசியதே இல்லை, வெறும் சிரிப்போடு மட்டுமே எங்கள் நட்புணர்வு இருந்தது. சில வருடங்கள் கழிந்தது. பத்தாவது தேர்வு முடிந்து ப்ளஸ் ஒன் சேர்வதற்கான விண்ணப்பத்துடன் பள்ளி அலுவலகத்தின் முன் நின்றிருந்தேன். மற்ற மாணவ- மாணவியர்களும் நின்றிருந்தார்கள். மாணவிகள் எல்லோரும் ஒவ்வொருவராக விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டு போகிறார்கள். எனக்கு கலையும் கணக்கு குருப் எடுத்து என்னோடு ஒரே வகுப்பில் படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் கலை மட்டும் கண்ணில் தென்படவில்லை. யோசித்து யோசித்து, தயங்கியவாறு தனலட்சுமியிடம் கேட்டேன் "கலை வரவில்லையா? வேறெதாவது பள்ளியில் சேரப்போகிறாளா?" என்று. "கலைக்கு திருமணமாகி பெங்களூர் போய்விட்டாள்" என்றாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது,

அப்போது புரியவில்லை நான் ஏன் அதிர்ச்சி ஆனேன் என்று. பிறகு புரிந்தது...

என்னமோ இது இன்பாங்களே! அதான்... அதான்பா...சே! அந்த...இது! ....ஆங்! இன்-பேக்-சிச்சுவேஷன்.

Thursday, May 08, 2014

எனக்குப் பிடித்த பாடல்கள்

பட்டிக்காடா பட்டணமா படத்தில் நாயகியைப் பார்த்து நாயகன் சந்தோசமாக பாடிய ஒரு பாடல் "என்னடி ராக்கம்மா". படத்தின் பிற்பாதியில் சோகமான பாடலாக வருகிறது. எம்.எஸ்.வி திருமணத்தில் வாசிக்கும் நாதஸ்வரத்தையும் கொட்டுமேளத்தையும் சோகப்பாடலுக்காக பயன்படுத்தியிருப்பது ஒரு புதுமை. பாட்டில் கூட ஒரு வரி "கல்யாண மேளங்கள் மணியோசை என் கவலைக்கு தாளமடி" என்று வரும். ஒளிப்பதிவு கேமிராக் கோணங்களும் கொஞ்சம் வித்யாசமானதாக இருக்கும். வழக்கம்போல, டி.எம்.எஸ் அவர்களின் அற்புதக் குரலில்.



ஹரிதாஸ், ரத்தக்கண்ணீர் படங்களில் வருவது போல அருணகிரிநாதர் படத்திலும் ஒரு ட்விஸ்ட், சிற்றின்பமே பெரிதென்று வாழும் அருணகிரி தன் தவற்றை உணர்ந்து மனம் நொந்து பாடும் பாடல் "எத்தனையோ பிறவி பெற்று". டி.எம்.எஸ் அவர்களே நடித்ததாலோ என்னமோ கொஞ்சம் மிகை தெரியும். ஆனாலும், பாடல் மாசுமறுவற்றது.



Oliver Twist கதையின் தழுவலான அனாதை ஆனந்தன் என்ற படத்தின் துவக்கத்தில் ஒரு பாடல். "அழைத்தவர் குரலுக்கு வருவேன்" என்று துவங்கும் இப்பாடலை எழுதியது கண்ணதாசன். சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக்குரலில் இப்பாடலை கேட்கும்போது, தெய்வபக்தியுடையோருக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தும். அது கவியரசின் தமிழாலா அல்லது கே.வி.எம்மின் இசையாலா தெரியவில்லை. (This song is dedicated to Bhagavathar Jeyadevdas).



அவன் தான் மனிதன் என்ற  படத்திலிருந்து இளமைத்துள்ளலுடன் ஒரு பாடல்.  "ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில்" என்று துவங்கும் பாடல். இப்படத்தில் வேறு பல பாடல்கள் எனக்குப் பிடித்திருப்பினும், இப்பாடலின் வேகம், வரிகள் ரசிக்க வைக்கின்றன. இதனுடன் 70களில் சிங்கபூரின் அழகு. நடிகர் திலகத்தின் அட்டகாசமான ஸ்டைல்.



சங்கே முழங்கு படத்திலிருந்து "நாலுபேருக்கு நன்றி" என்று துவங்கும் பாடல். இப்படி எளிமையான வரிகளில் தத்துவங்களை அள்ளிவீச கவியரசரால் மட்டுமே இயலும். வலியை உணர்ந்தவர்களின் கண்களில் நீரை வரவழைக்கும்.


ராஜராஜன் படத்திலிருந்து "இதயம் தன்னையே" என்ற பாடல். கே.வி.மகாதேவன் இசையில். வழக்கம்போல சுசீலா, ஜானகி என்றில்லாமல் ஒரு புதிய குரல் எ.பி.கோமளா. மன அழுத்தம் குறைக்க நினைப்பவர்கள் இப்பாடலை முயற்சித்துப் பாருங்கள்.



ப்ரேமபாசம் படத்திலிருந்து "அவனல்லால் புவிமேலே" என்ற பாடல்.  பாரசீகபாணி இசையில் அமைந்த அருமையான பாடல். பி.பி.சீனிவாசன் குரலில்.



Wednesday, May 07, 2014

பாவம் ரொம்ப ஏழைங்க

சென்னை குண்டுவெடிப்பில் ஈடுபட்டோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - இல.கணேசன்

நரேந்திரமோடி நேற்று நெல்லூர், குண்டூர், விசாகப்பட்டினத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார். எனவே அவரை மையமாக வைத்து இந்த சதி செயலை திட்டமிட்டு செய்து இருக்கிறார்கள் - பொன்.ராதாகிஷ்ணன்

# இவங்கெல்லாம் யாரு, தமிழகத்தில் இத்தனைநாள் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். தேர்தல் கூட முடிந்துவிட்டதே, பிறகு எதற்கு இவ்வறிக்கை. இலவு காத்த கணேசனும், போனியாகாத ரா.கியும் தேமுதிக மீது சவாரி செய்தாவது வெற்றிபெற பார்க்கிறார்கள். மே 16 தெரியும் இவங்க வண்டவாளம்.



நான் பிற்படுத்தப்பட்டவன், ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவர்கள் என்னை  இது போன்று வசைபாடுகின்றனர் - மோடி

# பரவாயில்லை நல்லா முயற்சி செய்ராப்ள! ஆனா கலைஞர் அளவுக்கு இல்லை. 

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று, 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் 424 பேருக்கு இந்தியா தடை விதித்துள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தாமதப்படுத்தவே உள்நோக்கத்துடன் வரிசை வரிசையாக வாய்தாக்கள் பெறப் பட்டன என்று கருணாநிதி கூறியுள்ளார்.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவின் மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

# ஆகா! எவ்வளவு நல்ல உருப்படியான காரியங்கள் நம்ம தலைவர் செய்து வருகிறார்.  இதுவே ஆட்சியில் இருந்தால்...



இப்படி எதாவது ஒரு படத்தின் துவக்க விழா, நூறாவது நாள் விழா, படப்பிடிப்பு, பாடாவதி வசனம் என்றோ, கமலின் மொக்கைப் படத்தைப் பார்த்தோ, ரஜினியின் அட்டுப் படத்தை ரசித்தோ பொழுதைப் போக்கி இருப்பார்.

‘ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு தொடர் கதை’  என குறிப்பிட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, அது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். - See more at: http://newsalai.com/news1/2014/05/8874.html#sthash.qAqYMtcZ.dpuf
என்ன கலைஞரையே குறை சொல்கிறீர்கள். ஜெவைப் பற்றி எதுவும் சொல்வதில்லை என்று சிலர் ஆதங்கப்படுகின்றனர். நான் என்னங்க பண்ணட்டும், அந்தம்மா கோட்டைக்கு வந்தால் தானே, செய்தித்தாளில் எதாவது போடுவாங்க. கொடாநாட்டிலேயே இருக்காங்க. ஒரு மாசம் தேர்தல் பிரசாரம் செய்துவிட்டு, ஓர் ஆண்டு ஓய்வில் இருப்பாங்க போல. 

மறுபடியும் செய்வீர்களா! செய்வீர்களா! 


 *********************************************************************************


உத்திரபிரதேசம், பீகாரில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டுசெல்லும் ஊழியர்கள் (நன்றி: தினமலர்)

# நான் எதோ ஊருக்கு போறாங்கனு இல்ல நெனச்சேன்



# பாவம் ரொம்ப ஏழைங்க!

*********************************************************************************

புனைப்பெயரில் எழுதுபவர்களாக இருப்பின் சில நன்மைகள் உண்டு. நாம் நினைப்பதை பேதம் பார்க்காமல் வெளிப்படையாக சொல்லலாம். ஆனால் முகமூடி இல்லாமல் எழுதும்போது இச்சுதந்திரம் இருப்பதில்லை. பதிவிடும்போது கூட பார்த்து பார்த்துதான் போட வேண்டும். யார் மனதாவது புண்படுமோ, யாராவது கோபிப்பார்களோ என்றெல்லாம் பார்க்கவேண்டும். 

பதிவுலகில் அனானிகளால் தொல்லை என்று சிலர் அங்கலாய்ப்பது உண்டு. என்னைப் பொருத்தவரை அனானிகளில் பலர் தொல்லை தருபவர்களாக இருப்பதில்லை. ஆக்கப்பூர்வமான கருத்துக்களை சொல்பவர்கள் உண்டு. முன்பு அனானிகளாக இருந்த பலர் இன்று சொந்தமாக பதிவுகள் தொடங்கி பதிவிடுகிறார்கள். நானும் அனானியாகவே தொடங்கினேன் (9 வருடங்களுக்கு முன்). பதிவர்களுடன் அதிகம் பழக்கமில்லை. பதிவர்கள் சந்திப்பிற்கு ஓரிருமுறை போய் இருக்கிறேன். யாரிடமும் நான் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதில்லை. ஒரு சில பதிவர்களுக்கு மட்டும் என்னை தனிப்பட்ட முறையில் தெரியும். அப்போது பரபரப்பாக பதிவெழுதியவர்கள், இப்போது எழுதுவதில்லை. 

ஆனால் இன்று அப்படியில்லை, கூகில் ப்ளஸ் வந்துவிட்டது. ஜிமெயில் ஐடி இருந்தால் போதும், அனானியாக இல்லாமல் பெயருடன் பின்னூட்டமிடலாம். அப்படி என்ன பிரச்சனை அனானிகளால். ஒரு சிலர் அனானியாக கிடைக்கும் கருத்து சுதந்திரத்தை அடுத்தவனை அல்லது மாற்றுக் கருத்து கொண்டோரை வைவதற்கு நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இன்னும் ஒரு சில பதிவர்கள் வேறு பெயரில் வந்து தருமாறாக பேசுவார்கள். உதாரணமாக, நமக்கு அறிமுகமான பதிவரே தங்களுடைய பெயரில் கருத்துக்களை சொல்ல பயந்து அல்லது கூச்சப்பட்டு வேறு பெயரில் வந்து வயது வித்யாசமில்லாமல் தகாத வார்த்தைகளைச் சொல்வார்கள் அல்லது திட்டுவார்கள். ஆனால் அப்படி பின்னூட்டமிடும்போது பலரால் வேறு பெயருக்கேற்ப தங்களுடைய எழுதும் முறையை மாற்றிக் கொள்ள இயலுவதில்லை. வடிவேலு போல கொண்டையை மறைக்காமல் விட்டுவிடுவார்கள். ஏற்கனவே அப்படி சிலர் சிக்கியும் இருக்கிறார்கள்.

விருப்பம் இருந்தால் நாம் அனானிகளை அனுமதிக்கலாம். இல்லாவிடில் அந்த ஆப்சனை தூக்கிவிடலாம். Name/Url ஆப்சன் கொடுத்தால் சிலர் அதை பயன்படுத்தி வேறொருவர் பெயரில் பின்னூட்டமிட வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படி பின்னூட்டமிட்டாலும், முயற்சி செய்தால் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் இவர்கள் கம்ப்யுட்டர் ஐபியையும் பெறமுடியும். 

*********************************************************************************

‘ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு தொடர் கதை’  என குறிப்பிட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, அது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். - See more at: http://newsalai.com/news1/2014/05/8874.html#sthash.qAqYMtcZ.dpuf
‘ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு தொடர் கதை’  என குறிப்பிட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, அது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். - See more at: http://newsalai.com/news1/2014/05/8874.html#sthash.qAqYMtcZ.dpuf