Saturday, November 08, 2008

எம்.ஜி.ஆர் ரசிகரா...


இந்திய திரையுலகில் சண்டைக் காட்சிகள் மிகவும் இன்றியமையாதவை. குறிப்பாக தமிழ் திரைப்படத்தில் ரசிகர்கள் இதைப் பெரிதும் எதிர்பார்ப்பார்கள். எனக்கு எம்.ஜி.ஆர் சண்டைக் காட்சிகள் என்றால் விரும்பிப் பார்ப்பேன். என்னோட அப்பா ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர், அதனால் நானும் பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்களையே பார்த்து வளர்ந்தேன். சண்டைக் காட்சிகளைப் பொருத்தவரை, இந்தியாவில் எம்.ஜி.ஆர் போல எந்தக் கதாநாயகனும் சிறப்பாக திரையில் சண்டை செய்து பார்த்ததில்லை. எனக்கு எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்ரும் வாலிபன் மிகவும் பிடித்த படம். இருந்தாலும், ரிக்ஷாகாரன் படத்தில் வரும் இறுதிக்காட்சி சண்டை எனக்குப் பிடித்தமானது. சண்டைக் காட்சியில் புரட்சிநடிகர் "சுருள்பட்டை" சுற்றும் ஒளித்துண்டை கீழே கொடுத்துள்ளேன். பார்த்து ரசிக்கவும்.



இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தான், நான் சிலம்பம் கற்றுக் கொள்ள போய் 'வீடு கட்ட' மட்டும் கற்றுக் கொண்டு வந்தேன். பத்தாம் வகுப்பில் படிப்பு, ஹிந்தி டியுசன் என பளு அதிகமானதால், தொடர்ந்து செல்ல முடியவில்லை. எங்க ஊரு பக்கம் கம்பு சுற்றுவதில் 'சாரபட்டை' சொல்லித் தருவார்கள். நான் ஆசைஆசையாக செய்து வாங்கி வந்த 'பானா கோல்' (சிலம்பம்), இப்போது அரிசி, பருப்பு வெயிலில் காயவைத்தால் காக்கா விரட்டவும், குரங்கு விரட்டவும் பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது.

கொசுறு செய்தி:

எம்.ஜி.ஆர் திரைப்படம் பற்றிய அரிய தகவலுக்கு http://mgrroop.blogspot.com போய் பாருங்க!!

பாடகர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களும் எம்.ஜி.ஆர் ரசிகர், அதை அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Friday, November 07, 2008

வில்லியம் வாலஸ்


Brave Heart படம் எல்லாரும் பார்த்திருப்பிங்க. இந்தப் படம் 1995-ல் மெல்கிப்சன் நடித்து வெளிவந்தது. இது William Wallace என்ற போராளியோட கதை. இவனுடைய காலம் 1272-1305 என்று கூறப்படுகிறது. 13-ம் நூற்றாண்டில் சிதறுண்டு கிடந்த ஸ்காடிஷ் மக்களை ஒன்று திரட்டி பிரிட்டிஷ் உடனான போரை முன்நின்று நடத்தி, அதில் வெற்றியும் பெற்றவன். Brave heart படம் வெளிவந்த பிறகு, 1997-ல் வில்லியம் வாலஸுக்கு Stirling எனும் இடத்தில் National Wallace Monument சிலையொன்று அருகே வைக்கப்பட்டது. இந்த சிலை பார்ப்பதற்கு Brave heart மெல்கிப்சன் போலவே வடிவமைக்கப்பட்டது. அந்த சிலை நம்ம ஊரு பெரியார் சிலை போல சில விஷமிகளால் தாக்கப்பட்டதால், அதைச் சுற்றிலும் தடுப்பு வைக்கப்பட்டது. சிலையுடைய மூக்கு சேதப்படுத்தப்பட்ட பின், 2004-ல் அதை 350000 ஸ்டெர்லிங் பவுண்ட் விலைக்கு விற்க முடிவு செய்தனர், ஆனால் யாரும் வாங்க வரவில்லை. இந்த வருடம் அச்சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டது.


ஜக்குபாய் கதை


1994-ல் வெளிவந்த Leon the professional என்ற படத்தை இயக்கியவர் Luc besson. இந்தப் படம் தான் தமிழில் சூரியபார்வை என அர்ஜூன் நடித்து வெளிவந்தது. பிறகு பாபிதியோல், ராணிமுகர்ஜி நடித்து 'பிச்சூ' (தமிழில் தேள் என்று பொருள்) என்று ஹிந்தியிலும் வந்தது. தமிழிலேயே ஓரளவுக்கு நன்றாக இருக்கும், ஹிந்தியில் படத்தின் கருவை குதறியிருப்பார்கள். சூரியபார்வை படத்தில் வரும் "கதவை திறக்கும் காற்றிலே.." என்ற மெலடி அருமையாக இருக்கும்.

Luc besson எடுத்த பல படங்களில் வயதான கதாநாயகன், இளம்வயது பெண் இடையே உள்ள காதல், அன்பு, பாசம் பற்றியதாகவே இருக்கும். இவருடைய திரைக்கதையில் வெளிவந்த Wasabi படமும் இதே கதைக்கரு தான். ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால், ரஜினி நடிக்காமல் விட்டு, தற்போது சரத் நடித்துக் கொண்டிருக்கும் 'ஜக்குபாய்' படத்தின் கதையும் இப்படத்தின் தழுவல் தான்.
நான் சமீபத்தில் Besson திரைக்கதையில் வெளிவந்த Taken படம் பார்த்தேன். அமெரிக்காவிலிருந்து பாரீஸ் சென்று Sex trafficing-ல் கடத்தப்பட்ட மகளை மீட்கப் போராடும் தந்தையின் கதை. படம் முழுக்க அதிரடி காட்சிகள் தான். Schindler's List படத்தில் நடித்த Liam Neeson இப்படி அடிதடியில் கலக்குவார் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அதிரடியான படங்கள் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.