Saturday, October 18, 2008

எதோ சினிமா கேள்வி-பதில் தொடர் போட்டியாம்!!

என்னடா! கொஞ்சம் நாளாக யாரும் தொடர்விளையாட்டு என்று கூப்பிடலயே என நினைத்தேன். முரளி புண்ணியம் கட்டிக்கிட்டாரு.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
முதலில் பார்த்ததாக நினைவில் உள்ள படம் எம்.ஜி.ஆர் நடித்து, டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான "குலேபகாவலி". அப்படத்தில் வரும் புரட்சித்தலைவர் புலியுடன் மோதும் காட்சி இன்றும் நினைவில் உள்ளது. மற்றபடி வேறெந்த காட்சிகளும் நினைவில் இல்லை. பிறகு அப்படத்தை பலமுறை பார்த்துள்ளேன். என்னுடைய தந்தை ஒரு எம்.ஜிஆர் ரசிகர். என்னுடைய சிறிய வயதில் நான் பார்த்த் பெரும்பாலான படங்கள் புரட்சித்தலைவர் நடித்தது தான்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
கடைசியாக அரங்கில் பார்த்த படம் 'அன்னியன்'. என்னுடைய அண்ணன் மகன் கார்த்தியுடன் பார்த்தேன். படம் முடியும் வேளையில், அம்மா ஞாபகம் வந்து கார்த்தி அழ ஆரம்பிக்க, கடைசி காட்சிகள் பார்க்கமலேயே வந்துவிட்டேன்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
ஆண்பாவம். என்னைப் பொருத்தவரை, இப்படம் இன்று வந்திருந்தால் இன்று யதார்த்தம் என்று பலரால் பாராட்டப்படும் பருத்திவீரன், சுப்ரமணியபுரம், மொழி போன்ற படங்களை தின்று ஜீரணித்திருக்கும். அழகான திரைக்கதை, அற்புதமான இசையமைப்பு, மறக்கமுடியாத நகைச்சுவை காட்சிகள்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா.
உன்னால் முடியும் தம்பி. காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
கன்னத்தில் முத்தமிட்டால், ரோஜா படங்களில் வரும் மொக்கையான அரசியல் சம்பவங்கள். பிரகாஷ்ராஜும், மாதவனும் நடந்தே தமிழீழப் பகுதிக்குச் செல்லும் காட்சி. அப்போது அவர்கள் உதிர்க்கும் அரைவேக்காட்டுத்தனமான கருத்து எரிச்சலூட்டுபவை. நாட்டுப்பற்றைக் காட்ட எரியும் கொடியை அணைக்கனும் அல்லது சேற்றை அள்ளி முகத்தில் பூசிக்கனுமாம். என்னங்கடா உங்க தேசபக்தி.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
இன்றைய நாளில் இந்தியாவில் திரைப்பட தொழில்நுட்பமென்றாலே அது தமிழ்சினிமா தான். உதாரணத்திற்கு, இந்தியாவிலுள்ள தற்போதைய சிறந்த ஒளிப்பதிவாளர்களைப் பட்டியலிட்டால், முதல் 7-8 இடங்கள் நமக்குத்தான். அன்று முதல் இன்று வரை, எந்த காலத்திலும் தொழில்நுட்ப விடயங்களில் தமிழ் சினிமா முன்னோடிதான். அந்த காலத்தில் கடினமாக இருந்த இரட்டை வேட படங்களை, நம்மவர்கள் வெகு சர்வ சாதாரணமாக எடுத்துத் தள்ளி இருப்பார்கள். ஓரளவு தொழில்நுட்பம் முன்னேறிய காலத்திலும், காட்சிகளில் கோணம் அதிகம் மாறாமல் static-காகவே எடுக்கப்பட்டிருந்தது. திரைப்பட கல்லூரி மாணவர்கள் எடுத்த படங்களில் காமேரா இங்கும் அங்குமாக வெவ்வேறு கோணங்களில் அலைபாயும். உதாரணத்திற்கு, ஊமைவிழிகள், இணைந்த கைகள் படங்களைப் பாருங்கள். இந்திக்குக் கிடைக்கும் போதியளவு பணம் நம்மிடம் இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக அசத்துவார்கள் நமது ஆட்கள். நாம் பெரும்பாலும் கோட்டை விடுவதெல்லாம் கதையில் தான்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
முன்பெல்லாம் வாசிப்பது குறைவு தான். வாரமலரோடு சரி. இப்போது இணையத்தின் உதவியில் வாசிப்பது அதிகமாகிவிட்டது.

7.தமிழ்ச்சினிமா இசை?
ஜி.ராமநாதன் முதல் இன்றைய இசையமைப்பாளர்கள் வரை அனைத்துப் பாடல்களையும் கேட்பதுண்டு. குறிப்பாக சொல்வதென்றால், இளையராஜாவின் பாடல்களே என்னை அதிகமாக கவர்ந்தவை. தமிழ்த் திரையுலகம் இளையராஜாவை இன்னும் சரிவர பயன்படுத்தவில்லை. இதுவரை அவருக்கு தீனிபோடும்படியான படங்கள் சரிவர கிடைக்கவில்லை. "ஹேராம்" பின்னணி இசையைப் கேட்டால் அவரது பரிமாணம் புரியும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
நிறைய!! கணக்கில் அடங்காத அளவிற்கு. அதிகம் விரும்பிப் பார்ப்பவை இரானியப்படங்கள். காரணம், படத்தின் களம் இந்தியாவைப் போன்று இருப்பதால். சமீபத்தில் பாதித்த படம் மஜித் மஜிதி இயக்கிய இரானியப்படங்கள். "Baran" படத்தில் ஆணாக நடித்துக் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்க்கும் ஆப்கானிய இளைஞிமீது காதல் வயப்படும் இரானிய இளைஞனது கதை. அடுத்து "children of heaven"-ல், குழந்தைகளின் உலகத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருப்பார் இயக்குனர். தற்போது IMDB-ல் உள்ள முதல் 300 படங்களுக்கு மேல் என் சேமிப்பில் உள்ளது.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை! (எவ்வளவு சுலபமான பதில் பார்த்திங்களா?)

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வழக்கம் போல தான் இருக்கும். உலகத்தரம், யதார்த்தம் என்று சால்ஜாப்பு வேலைகள் வழக்கம் போல நடைபெறும்.
ஆனால் ஒரு விடயம். இப்ப யாரும் production, direction பற்றியெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. Marketing பற்றிய சிந்தனை தான் படம் எடுக்கும் போதே தொற்றிக்கொள்கிறது. இனிமேல், 10 கோடி படத்திற்கு செலவு செய்யப்பட்டால், 5 கோடி விளம்பரத்திற்காக செலவு செய்யப்படும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழனுடைய எல்லாம் பிரச்சனைக்கும் தீர்வாக இருக்குற சர்வரோக நிவாரணி சினிமா தான். அது இல்லாட்டி, இந்த தலைமுறை பைத்தியகார ஆஸ்பத்திரியில் இருக்கும். ஆனால் அடுத்த தலைமுறை கண்டிப்பாக உருப்படும்.

எனக்கு தெரிந்த ஒன்றிரண்டு பேரை, நீங்களே அழைச்சிட்டீங்க!! நான் எங்க போவேன் யாரை கூப்பிடுவேன். எனக்கு யாரைத் தெரியும்.
இருந்தாலும் சில பெருந்தலைகளை கூப்பிட்டு வைக்கிறேன்.

கானாபிரபா
வெட்டிபயல்
தூயா
ஆயில்யன்

8 comments:

  1. //ஆண்பாவம். என்னைப் பொருத்தவரை, இப்படம் இன்று வந்திருந்தால் இன்று யதார்த்தம் என்று பலரால் பாராட்டப்படும் பருத்திவீரன், சுப்ரமணியபுரம், மொழி போன்ற படங்களை தின்று ஜீரணித்திருக்கும். அழகான திரைக்கதை, அற்புதமான இசையமைப்பு, மறக்கமுடியாத நகைச்சுவை காட்சிகள்.
    //

    மறுக்கமுடியாத கருத்து!

    சீன் பை சீன் காமெடியும் தொடரும் சங்கதிகளில் அழகான காதலையும் காட்டிய படம்

    சின்ன சின்ன சோக காட்சிகளில் கடந்து வந்தாலும் படம் முடியும்போது பார்ப்பவர்களின் மனங்களில் மகிழ்ச்சி மட்டுமே நிறைய செய்த படம்

    அருமை குட்டிபிசாசு! என்னையத்தான் திரும்பவும் சினிமா பத்தி எழுத கூப்பிட்டு(ஏற்கனவே 2 தடவை) நிறைய பேரை பயமுறுத்தீட்டீங்க :))))

    ReplyDelete
  2. நல்ல நினைவுகள் குட்டிபிசாசு...என்னையும் அழைத்ததிற்கு மிக்க நன்றிகள்.இதோ என்னுடைய பதிவு: http://thooya.blogspot.com/2008/10/blog-post_16.html

    பதில்9 கலக்கல் ;)

    ReplyDelete
  3. //கானாபிரபா
    வெட்டிபயல்
    தூயா
    ஆயில்யன்//

    பெருமையாய் இருக்கிறது இணைய பெருந்தலை சகோதரர்களின் வரிசையில் என்னையும் இணைத்த உங்களின் எண்ணங்களினை நினைக்கையில் (கொஞ்சம் ஆனந்த கண்ணீரும் விட்டுக்கொள்கிறேன்)

    :)

    ReplyDelete
  4. ஆயில்யன், தூயா ...

    நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. கூப்பிட்டதுக்கு ரொம்ப நன்றிப்பா... ஆனா நான் ஏற்கனவே எழுதிட்டனே...

    ReplyDelete
  6. //3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
    ஆண்பாவம். என்னைப் பொருத்தவரை, இப்படம் இன்று வந்திருந்தால் இன்று யதார்த்தம் என்று பலரால் பாராட்டப்படும் பருத்திவீரன், சுப்ரமணியபுரம், மொழி போன்ற படங்களை தின்று ஜீரணித்திருக்கும். அழகான திரைக்கதை, அற்புதமான இசையமைப்பு, மறக்கமுடியாத நகைச்சுவை காட்சிகள்.//

    Exactly

    அதுவும் வி.கே.ராமசாமி கேரக்டர் அட்டகாசம். எனக்கு ரொம்பவும் பிடிச்ச கேரக்டர் :)

    ReplyDelete
  7. வெட்டியண்ணே,

    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  8. தல‌

    உங்க போஸ்டுக்கு பின்னூட்டம் போட்டு தாவு தீர்ந்திட்டுது,


    அருமையான பதிவு, நான் அப்பவே எழுதிட்டேனே

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய