Saturday, September 29, 2012

உணவகம் அறிமுகம் - ஹோட்டல் மா சண்டி


மேற்கு வங்காளத்தில் இருக்கிறது மெதினிபூர். ஒரு சமயம்  அனுபம்தாஸ் என்ற வங்காள எதிரி ஒருத்தன் பார்ட்டி கொடுக்கிறேன் என்று சொல்லி என்னையும், நம்ம நண்பேன்டா சங்கரையும் கூப்பிட்டான். சரி இந்த ஊரில் சாப்பாடு எப்படித்தான் இருக்கும் என்று பார்த்துடுவோமே என இருவரும் அவனுடன் போனோம். இதுதான் ஓட்டல் என்று இருட்டில் எதையோ காட்டினான். ஒரு குண்டுபல்பின் மங்கலான வெளிச்சத்தில் „ஹோட்டல் மா சண்டி“ என்று இங்கிலீசிலும் பெங்காலியிலும் எழுதி இருந்தது. சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்து அமர்ந்தோம். சுவற்றில் சீரியல்லைட் போடப்பட்ட பத்ரகாளிபடம் மாட்டப்பட்டிருந்தது. உள்ளேயும் ஒரு குண்டு பல்பு தான். இருட்டான அந்த அட்மாஸ்பியரும், அங்கே கேட்டுக் கொண்டிருந்த „பாபுஜி தீரே சலோ“ பாடலும் சங்கருக்கு பிடித்துப்போனது.   

அருகில் உள்ள மேசையில் ஒருவன் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ரப்பர் போன்ற முரட்டு தோசையை லாவகமாக கிழித்து வாயில் போடுவதும், ஒரு கரண்டி சாம்பார் குடிப்பதும் என அக்கப்போரு செய்து கொண்டிருந்தான். திரும்பும்போது, சங்கர் எதிர்மேசையில் மொத்தமாக லிப்ஸ்டிக்கும், பவுடரும் அப்பியபடி அமர்ந்திருக்கும் பெண்களை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தான். தாஸ் சாப்பிட சோறு ஆர்டர் செய்தான். கொஞ்சம் நேரத்தில் மூவருக்கும் தட்டு நிறைய சோறு  மேசைக்கு வந்தது. கைலியுடன் ஒருவன் வந்து சாம்பார் ஊத்தினான். பார்க்க முருங்கைக்காய் சாம்பார் போல இருந்தது. தாஸிடம் கேட்டேன். அது முருங்கையல்ல பூசனிக்கொடியை நறுக்கி செய்தது என சொன்னதைக் கேட்டவுடன், நடிகர் சிவகுமார் போல சங்கர் என்னை ஒரு உணர்ச்சியற்ற பார்வை பார்த்தான். சூடான சாம்பாரை சோற்றுடன் குழைத்து நன்கு உருட்டி ஒரு கவளத்தை வாயில் வைத்தேன். தேவம்ருத இனிப்பாக இருந்தது. உண்மையாகவே சர்க்கரை போட்டதுபோல் இனிப்பாக இருந்தது. திரும்பினால் சங்கர் ஏற்கனவே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். இதை தனியாக சாப்பிட இயலாது. எதாவது சைட்டிஷ் சொல்லலாமே என்றான். எனக்கு ஒரு மீன்  துண்டும், சங்கருக்கு ஒரு ஆம்லேட்டும் ஆர்டர் செய்தேன். 

தாஸ் சோமாலியாவில் இருந்து வந்தது போல ஒரு பரபரப்புடன் பாதி சோற்றை காலி செய்திருந்தான். சற்று நேரத்தில் சர்வர் ஒரு கிண்ணத்தை கொண்டுவந்து வைத்துவிட்டு போனான். என்ன என எட்டிப்பார்த்தேன். சிவசிவ என கொழம்பு அதன் நடுவே அவித்து தோல் உரிக்கப்பட்ட பெரிய உருளைக்கிழங்கு ஒன்று. மறுபடியும் வேகமாக வந்த சர்வர் தான் வெறும்கையில் கொண்டுவந்த பொறித்த மீன் துண்டை அந்தக் கொழம்பில் தொப் என்று போட்டுவிட்டுப் போனான். என்னையும் அறியாமல் வடிவேலு படத்தில் சொன்ன டயலாக் என் நினைவில் வந்துபோனது (அட! நாறப்பய ஓட்டலா இருக்கும் போல). சற்று நேரத்தில் சங்கருக்கு ஆம்லேட் தயாராக வந்தது. நான் தாமதிக்காமல் மீனை எடுத்து தட்டில் வைத்துவிட்டு, உருளைக்கிழங்கு விழுந்துவிடாமல் கொழம்பை மட்டும் சோற்றில் மெதுவாக ஊற்றினேன். லேசாக பிசைந்து, உருண்டையாக்கி வாயில் வைத்தேன். கொழம்பில் தண்ணீர், எண்ணெய், மிளகாய் தூள், வெங்காயம் மட்டுமே போடப்பட்டுள்ளதை என்னுடைய நாக்கு அன்னப்பறவை போல உணர்ந்தது. சரி மீனையாவது ஒழுங்காக சாப்பிடுவோமே என எண்ணும் வேளையில், „கூமுட்டை“ என்றான் சங்கர். இவன் எதற்கு என்னை திட்டுகிறான் என திரும்பினேன். இப்போது அச்சுஅசல் நடிகர் ஏ.வி.எம்.ராஜன் போல உணர்ச்சிவசப்பட்டான். „ஏன்டா! திட்டுரே!“ என்றேன். „கெட்டுப்போன முட்டையா“ என்றான் சங்கர். கெட்டுப்போன முட்டையைத்தான் கூமுட்டை  எனக் கூறுகிறார்கள் என்பது அன்று தான் எனக்குத் தெரிந்தது. என்ன இருந்தாலும் சங்கர் தஞ்சைத் தமிழன் அல்லவா. இந்நேரம் தாஸ் தன்னுடைய தட்டை சுத்தமாக கழுவியது போல துடைத்து வைத்து இருந்தான். 

இதற்குமேலும் இங்கிருந்தால் முதலுக்கு மோசமாகிவிடும் என இருக்கையில் இருந்து எழுந்தோம். தாஸ் சாப்பிட்டாகிவிட்ட்தா? என்றான். „பஸ்! பஸ்!“ என சொல்லியவாறே சங்கர் பிலாஸ்டிக் டம்ளரில் தண்ணீர் மொண்டு மொண்டு கைக்கழுவிக் கொண்டிருந்தான். பணத்தை கொடுத்துவிட்டு வெளியே வந்தோம். தாஸ் வீட்டிற்கு கிளம்பும்முன் ‚குட் நைட்‘ சொல்லிவிட்டுச் சென்றான். சங்கரும் நானும் மெதினிபூர் ரயில்நிலையம் அருகேயுள்ள கடையொன்றில் மசாலா பொறியும், டீயும் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் வெட்டிக்கதை பேசிவிட்டு வீட்டிற்கு சென்றோம். மெதினிபூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்தே போனால் ஒரு மணிநேரமும், ரயில்நிலையத்தில் இருந்து சைக்கிளில் போனால் ஐந்து நிமிடத்திலும் ஓட்டல் வந்துவிடும். நீங்களும் மெதினிபூர் சென்றால் மறக்காமல் இந்த ஓட்டலில் சாப்பிடவும். மறக்காமல் குளிர்காலங்களில் செல்லவும், அக்கிளை சொரியாமல் பரிமாறுவார்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.



அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.

‚மஞ்சதுண்டு‘ மகான் உரை:
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.
மு.வ உரை:
விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.

12 comments:

  1. நல்ல பகிர்வு(நற..நற) ...தொடருங்கள்.

    த.ம.2012

    ReplyDelete
  2. 'சுவை'யான அனுபவப்பகிர்வு. தொடர்க.

    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.in/

    ReplyDelete
  3. ஹா,ஹா,ஹா!உள்குத்து?

    ReplyDelete
  4. டோட்டல் மால் புட் கோர்ட்டில் மீன் வறுவல் பிடிக்குமென பெங்காலி உணவு வாங்கிவிட்டு வாயில் வைக்கமுடியாமல் இனி ஜென்மத்துக்கும் வங்காள உணவு உண்ண மாட்டேனென சபதமெடுத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் இன்னும் சபதம் எடுக்கவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  5. பெங்காலி சோற்றைச் சாப்பிடுவதற்காக நண்பர்களையும் அழைத்துப் போனவன் நான். நட்பு கட். அதன்பிறகு ரொபீந்த்ர் சொங்கீத் கூட அலர்ஜியாகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. :)) பெங்காலி சாப்பாடு அவ்வளவு மோசம் இல்லை. நல்ல இடத்தில் சாப்பிட்டால் நல்லா இருக்கும்.

      Delete
  6. enna oru varnanai...marupadiyum Midnapore pona mathiriyae irunthuchu ji...

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய