Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Wednesday, October 22, 2008

ஈழத்தொடரும் இறையாண்மை இம்சையும்

உடன்பிறப்பு தூயா ஈழம் பற்றிய தொடருக்கு அழைப்பு விடுத்திருந்தார். பரிசில்காரன் தவிர யாரும் மற்றவரை அழைக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க, என்னுடைய சொந்தத்தைப் பற்றி எழுத எனக்கு எதற்கு அழைப்பு. ஆதலால் நானே தொடங்குகிறேன்.


1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?
நான் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் போது என்னுடன் பள்ளியில் படித்த சில மாணவர்கள் ஈழத்திலிருந்து அகதிகளாக வந்தவர்கள். ஆனால் அப்போது அவர்கள் ஏன் தமிழகம் வந்தார்கள் என்பது பற்றிய அறிவு எனக்கு இல்லை. பிறகு நான் முதன்முதலாக தமிழருக்கெதிராக இலங்கையில் ஏற்படும் அவலத்தை என் அப்பா கூறி கேட்டு இருக்கிறேன். நூலகத்தில் தேடிப்பிடித்து ஈழம் பற்றிய வரலாற்றுத் தகவல்களைப் படித்துள்ளேன். பிறகு ஈழம் பற்றி அதிகம் கேட்டும், படித்தும் தெரிந்து கொண்டேன். நான் சந்தித்த ஈழத்தமிழர்கள் வெகுசிலர், என் காதலி உட்பட. இவ்வளவு தான் என்னுடைய ஈழப்பரிச்சயம்.

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?
100%. 1980-க்கு முன்னால் அறவழியில் இருந்த போராட்டம் விடுதலை இயக்கங்களாக உருவெடுத்ததற்குக் காரணம், சிங்கள அரசின் மதவெறி, இனவெறி...! புள்ளப்பூச்சியைக் புலியாக மாற்றியது சிங்கள அரசு. அமைதியை விரும்பும் சிறுபான்மையினராக இலங்கையில் வாழ்ந்த தமிழர்களை இன்று சமராட வைத்தது சிங்கள அரசு. அத்தகைய அரசிடம் இணங்கி, அவர்களின் சட்டதிட்டத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்வது சாத்தியம் இல்லாத ஒன்று. சிங்கள அரசு தீவிரவாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஈவிறக்கமின்றி தமிழரைக் கொன்றபோது, பிறந்த நாட்டில் உரிமையில்லாமல் உயிருக்கு பயந்து உடைமையிழந்து உலகமெங்கும் அகதிகளாக சிதறியோடிய ஈழத்தமிழர்களின் விடிவு தமிழீழம் மட்டுமே.

தமிழர் கூட்டத்தில் ஐக்கியம் மற்றும் இறையாண்மை பற்றிப் பேசுபவர்கள், தமிழீழம் என்றால் போதும், உடனே இந்தியாவைப் பாருங்கள். அது போன்றதொரு ஒருங்கிணைந்த இலங்கையில் அரசாட்சி உருவாக்கப் பாடுபடுங்கள் என்று போதிக்கத் தொடங்கிவிடுவார்கள் இந்த நவீன காந்தியடிகள். "உங்கள் பெண்கள் கற்பழிக்கப் பட்டாலும், குழந்தைகள் கொல்லப்பட்டாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு விரல் சூப்புங்கள். ஆயுத ஏந்த வேண்டாம், அறவழியில் போராடுங்கள்" என்பார்கள்.

உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் பிலஹரி மார்தாணம் டைப் கேஸுங்க இதெல்லாம். எவனாவது அடிவாங்கி செத்தால் கூட அறவழி, அகிம்சை, கர்மவினை என்று கடவுள் பெயர்கூறி மணியாட்டிக் கொண்டிருப்பார்கள். சொந்த நாட்டு மக்களை இந்தியா என்னமோ கவுரவமாக நடத்துவது போல இவர்கள் நினைப்பு. காஷ்மீரில் மக்களிடையே இந்திய ராணுவம் செய்யும் அட்டூழியம் பல. வடகிழக்கு மாகாணங்களில் ராணுவம் புரியும் அராஜகம் கணக்கிலடங்காது. வடகிழக்கில் நடக்கும் கற்பழிப்புக்கு அகிம்சையாளர்களின், ஐக்கியவாதிகளின் பதில் என்ன? எத்தனை பேர் செத்து மடிந்தாலும், இதே கையாலாகாத போதனை தான். ஈழத்தில் பேசித் தீர்க்க இனி என்ன இருக்கு, பேச்சு வார்த்தை இயலாமல் தானே ஆயுதப் போராட்டம் வந்தது.

(சமீபத்தில் இந்துவில் வந்த ஐக்கிய மசுரு மண்ணாங்கட்டி கட்டுரை படித்த கோபத்தில் நான் எழுதித்தொலைத்தது "இந்துல சந்துல எழுதுரவங்களுக்கு".)

New Page 1

(தனிநாடு உருவாவது பற்றி கருத்து இருந்தால் சொல்லலாம், சொல்ல இயலாவிடில் விட்டுவிடலாம். "அய்யோ! அபிஷ்ட்டு, கண்ணதுல போட்டுக்கோ! நீ தனிநாடு பத்தி பேசலாமோ? எவ்வளவு பெரிய தப்பாக்கும். பகவான் கோபிச்சினுடுவார்" அப்படினு யாரும் சொல்லாதிங்க.)


3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

பள்ளியில் படிக்கும் போது தினமும் ஈழம் பற்றிய செய்திகளைத் தேடிப்படிப்பதுண்டு, ஓயாத அலைகள் நடந்து கொண்டிருந்த காலம் அது. கல்லூரி வந்த பிறகு, தமிழ் செய்தித்தாள் வாசிக்க இயலாமல் போனது. பிறகு, தமிழ்மணத்தில் வரும் செய்திகளைப் படிப்பதுண்டு. இதைத் தவிர்த்து புதினம், சங்கதி, பதிவு, தமிழ்நாதம் போன்றவற்றை அடிக்கடி படிப்பதுண்டு.

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?
நல்ல விடயம். தமிழக அரசு தற்போதைய ஆதரவை முழுமையாக செயல்படுத்தினால், தமிழீழப் போராட்டம் மேலும் வலுவடையும். மேலும், தமிழகத்திலுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகளை சற்றேனும் மேம்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

நம்பிக்கை இழக்காதீர். காலம் மாறும். உள்ளுணர்வு வெல்லும். தமிழீழம் மலரும்.

"நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

நீதிக்கு இது ஒரு போராட்டம் - இதை

நிச்சயம் உலகம் பாராட்டும்"

Tuesday, October 21, 2008

இந்துல , சந்துல எழுதுரவங்களுக்கு....

"History must be written of, by, and for the survivors" என்ற பழமொழிக்கேற்ப வரலாறு எழுதப்படுகிறது.வரலாறு என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். வரலாறு இல்லாதவர்கள் (மறைக்கப்பட்டவர்கள்) தங்களுடைய சுயங்களை இழந்தவர்களாக காட்சிக்கு வைக்கப்படுகிறார்கள்.


இந்தியன் படத்தில் கவுண்டமணி சொல்லுற மாதிரி நெற்றியில் ஈறுகுச்சியில் கோடு போட்டுகிட்டு இந்துவில் எழுதுரேன், சந்துவில் எழுதுரேனு கெளம்பிடுவானுங்க சிலர். இவனுங்களுக்கு தமிழரின் வரலாறும் தெரியாது. இந்தியாவின் பூர்வீகமும் தெரியாது. எப்பயெல்லாம் தமிழீழம் வேணும் என்கிற வாதம் வலுப்படுதோ? அப்பயெல்லாம் ஒருமைப்பாடு, ஐக்கிய இந்தியா, இந்திய இறையாண்மை அதுஇது என்று சொல்லிக்கொண்டு சாமியாட வந்துவிடுவார்கள். இப்படிப்பட்டவர்க்கு இலங்கை பற்றிய வரலாறு ஒரு மண்ணும் தெரிந்திருக்காது.

இவனுங்களுக்கு ஒரு கடிதம்,

வந்தேறிகளுக்கு எதற்கு தனிநாடு என்று பேசுபவர்கள், தனிநாடு கேட்பவர்கள் எல்லாரையும் தீவிரவாதிகள் என முத்திரை குத்துபவர்கள் என்று பேசுபவர்கள் எல்லாரும் இந்த ஐக்கியம் பற்றி பேசுபவர்கள் தான். ஹிலாரி க்ளிங்டன், ஒபாமா போன்றோர்கள் கூட விடுதலைப் புலிகளை ஒரு தீவிரவாத இயக்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளிப்படையாக கூற, இப்போதே இலங்கைக்கு புளியைக் கரைக்கிறது. அதனாலத்தான் பத்து நாடுகளிடம் பிச்சை எடுத்தாவது அவசரமாக சண்டை போடுகிறார்கள். அமெரிக்காவோட ஜால்ரா தானே நீங்க, இன்னும் திருந்தாம இருக்கிங்க.

காஷ்மீர் பிரச்சனை இரண்டு நாடு தொடர்புடையது. அதையும் இலங்கைப் பிரச்சனையும் ஒன்றுனு சொல்லி வழக்கம் போல இந்திய பாசிஸ்ட் மாறி மிரட்டுரிங்க. இலங்கை பிரச்சனையோடு ஒப்பிடலாமென்றால் இந்திய-பாக்கிஸ்தான் பிரிவினையை ஒப்பிடலாம். அமைதியாக பிரித்திருந்தால், இன்று இந்தியாவும் பாக்கிஸ்தானும் சகோதர நாடாக இருந்திருக்கும். ஆனால் அந்த பிரிவினை பலரது குருதியின் நெடியிலேயே ஏற்பட்டது. 15 நாட்கள் நீடித்த பிரிவினை இழுபறியால் 5000 கொலைகள் நிகழ்ந்தன. பிறகு தான் பிரிவினை முடிவு எடுக்கப்பட்டது. இந்தப் பிரிவினைக்குக் காரணம் மதம். அகிம்சாமூர்த்தி M.K. காந்தி கூட பிரிவினையை ஒத்துகிட்டாரே? அவரை பின்பற்றுவதாக சொல்லிகிட்டு திரிகிற அகிம்சாவதியான நீங்க ஏன் இந்த அளப்பரைய விடுரீங்க. ஒருவேளை இன்று உங்களைப்போல ஐக்கிய இந்திய கோட்பாடு பேசுபவர் சொல்வது போல், இந்தியா பாகிஸ்தான் பிரியாமல் இருந்திருந்தால், இலங்கையின் நிலைமைதான் நமக்கும் ஏற்பட்டிருக்கும். இன்று காஷ்மீரில் நிகழும் போர், இந்தியா முழுக்க ஜிகாதியாக நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. கிழக்குப் பாகிஸ்தான் பங்கலாதேஷ் என்ற தனிநாடாக பிரிந்தது. பிரித்துக் கொடுத்தது இந்தியா. இதற்குக் காரணம் வங்காள மொழி பேசிய வங்கதேச மக்கள் மீது பாகிஸ்தான் தொடுத்த அடக்குமுறை.

இப்படி நீங்க மட்டும் அல்ல! பலபேர் உள்ளனர் இந்தியாவில். இவர்களின் கனவு இதுதான் இந்தியா ஒரு இந்து நாடு (இதைத் தான் ஐக்கியம், வேற்றுமையில் ஒற்றுமை என்றெல்லாம் புருடா விடுவார்கள்). கேட்டால் தேசப்பற்று என்பார்கள்? நீங்க என்றாவது வடகிழக்கு மாகாண மக்களின் இன்னல்களையோ, அங்கு நடக்கும் உரிமை மீரலையோ காது கொடுத்து கேட்டதுண்டா? அங்கு சென்று இந்தியர்கள் என்றாலே உதைக்கிறார்களே, இந்திய நாடு என்ன, கொடிய கூட மதிக்காம வேற கொடி வச்சிட்டு இருக்காங்களே, இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா? காஷ்மீர மக்களின் துயர்களையோ அங்கு நடக்கும் கொலைகளையோ கணக்கில் கொண்டதுண்டா? இந்தியமக்கள் இந்திய ராணுவத்திடம், காவல்துறையிடம் அவதியுறுவதையே எழுதத்துணியாத நீங்கள் இலங்கையில் நிகழும் அடக்குமுறை, அவலநிலையை ஏன் கண்டுகொள்ளப் போகிறீர்கள். ஈழதமிழர்கள் செத்துமடியரத நீங்க செய்தி பொடுரது இருக்கட்டும், இந்திய மீனவர்கள் செத்தபோனத நீங்க எப்பயாவது செய்தியில போட்டு இருக்கிங்களா? பிரபாகரனை 20-30 தடவை செத்ததா செய்தி போட்டு இருக்கிங்க. சுனாமி வந்து 10000 பேர் செத்தாலும், பிரபாகரன் என்ன ஆனார் என்ற கவலை தான் உங்களுக்கு. ஏ.சி. அறை உட்கார்ந்து கொண்டு, அமெரிக்க பொருளாதாரம் எப்ப சீர்படும், அணுமின் ஒப்பந்தம் போடப்பட்டால் என்ன நன்மைகள், இந்தியா எப்ப உலகக்கோப்பை வாங்கும் என்று வழக்கம் போல எழுதப்பாருங்க.