
இராமாயணம் இந்துக்களின் புனிதமான காப்பியம். காப்பிய நாயகன் இராமன் கடவுள் அவதாரம். இத்தகைய பெருமை கொண்ட இராமாயணம் கிரேக்க காவியத்தின் வெறும் தழுவலா? சந்தேகம் வந்துட்டா சும்மா இருக்க முடியுமா? உடனே கூகிள் ஆண்டவனை அணுகினேன். இது போன்றதொரு ஆராய்ச்சி ஏற்கெனவே வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடம் உண்டு என்பதை அறிந்தேன்.
2004-ம் ஆண்டு பிராட் பிட் மற்றும் எரிக்பானா நடித்து வெளிவந்த ட்ராய் என்கிற திரைப்படம் கிரீஸுக்கும் ட்ராய்க்கும்(தற்போதைய துருக்கி) நடந்த ட்ராஜன் போரை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். கி.மு. 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டில் ஹோமரால் எழுதப்பட்ட 'இலியட்' என்கிற காப்பியத்தின் கதை தான் இப்படத்தின் மையக்கரு. ஹோமர் 'ஒடிஸி' என்னும் மற்றொரு காப்பியத்தையும் இக்கதையினுடைய தொடர்ச்சியாக இயற்றியுள்ளார். இந்த ட்ராஜன் போர் சம்பவங்கள் 12-13-ஆம் நூற்றாண்டில் நடந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். இப்போது ட்ராய் படத்தின் கதையைப்பற்றி சற்று பார்ப்போம். கிரீஸுக்கும் ட்ராய்க்கும் பல ஆண்டுகளாக போர் நடக்கும் தருவாயில், சமாதான நடவடிக்கையாக ட்ராய் இளவரசர்கள் பாரீஸ் மற்றும் ஹெக்டர் இருவரையும் விருந்திற்காக மெனிலஸ் எனும் கிரேக்கமன்னன் அழைக்கிறான். விருந்தில் பாரீஸும் மெனிலஸின் மனைவியாகிய ஹெலனும் காதல் வயப்படுகிறார்கள். ஹெக்டர் வேண்டாம் என்று கூறியபோதும், பாரீஸ் ஹெலனை ட்ராய்க்கு அழைத்துவந்து விடுகிறான். ட்ராய் மன்னனும் பாரீஸ் மற்றும் ஹெக்டரின் தகப்பனுமான ப்ரியம் ஹெலனையும் பாரீஸையும் வரவேற்று ஏற்றுக்கொள்கிறான். மனைவியை இழந்த மெலனிஸ் தன்னுடைய சகோதரன் அகமெனனின் உதவியை நாடுகிறான். ட்ராயின் மீது ஏற்கனவே படையெடுக்க காத்துக்கொண்டிருந்த அகமெனனுக்கு இது சரியான சந்தர்ப்பமாக அமைந்துவிட, கிரேக்கப்படை முழுவதும் அகமெனனின் தலைமையில் ட்ராயை நோக்கிச்செல்லுகிறது.

தான் செய்த தவறுக்கு படையாட்கள் இழக்கவேண்டாமென்று, மெலினஸுடன் போர் புரிய துணிகிறான் பாரீஸ். போரில் வென்றவர்கள் ஹெலனை அடையலாம் என முடிவு செய்யப்படுகிறது. வாட்போரில் தோற்றுவிட்ட பாரீஸ், ஹெக்டரின் உதவியை கோருகிறான். ஹெக்டர் மெலினஸை கொன்றுவிட, போர் தொடங்குகிறது. அக்கிலிஸ், ஒடிஸஸ், எஜக்ஸ் அகமனின் தரப்பிலிருந்து போர் புரிகிறார்கள். வெகுநாட்கள் முற்றுகையிட்டும் ட்ராய் அரணை கிரேக்கப்படைகளால் நெருங்க முடிவதில்லை. போரில் ஹெக்டர் அக்கிலிசின் நண்பனை தவறுதலாக கொன்றுவிட, அதற்கு அக்கிலிஸ் ஹெக்டரைப் பழிவாங்குகிறான். இறுதியில், ஒடிஸஸின் யோசனைப்படி, கிரேக்கர்கள் "ட்ராஜன் மரக்குதிரை" தயாரித்து வைத்துவிட்டு, மறைந்து கொள்கிறார்கள். அரண் வெளியே கோவிலையிடித்த எதிரிகள் அப்போலோ கடவுளால் அழிந்து போனதாக நினைத்து, மரக்குதிரையை அரணுக்குள்ளே எடுத்துச்செல்ல ப்ரியம் மன்னன் உத்தரவிடுகிறான். அன்று வெற்றிவிழா முடிந்ததும், இரவு மரக்குதிரைக்குளிருந்த கிரேக்கர்கள் வெளிவந்து அரணை திறந்து விடுகிறார்கள். உள்ளே நுழையும் கிரேக்கப்படை ட்ராய் மக்களையும், படைவீரர்களையும் கொன்று நாட்டையே சாம்பலாக்குகிறது. அக்கிலிஸ் பாரீஸின் அம்புபட்டு உயிர் நீக்கிறான் (கணினி வைரஸுக்கும் ட்ராஜன் என வைக்கப்பட்டது, இதே காரணத்தால் தான்).

எதற்கு இந்த கதை என்று கேட்கிறீர்களா? சற்று நன்றாக கவனித்தால், இராமாயணம் இந்த கதையின் மையக்கருவையொத்தே அமைந்திருக்கும் என்பது தெளிவாகப் புரியும். இராமன் - மெலனிஸ், இராவணன் - பாரீஸ், ஹெலன் - சீதை, அனுமன் - அக்கிலிஸ், சுக்கிரீவன் - அகமனன். (அகமனனைப் போல அந்தக்கால தமிழ் மன்னர்கள் இலங்கையை கைப்பற்றவே நினைத்திருந்தார்கள் என்பது உண்மை) இலியட ்இராமாயணம் எழுதியதற்கு முன் எழுதப்பட்டதாக ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது. ட்ராஜன் குதிரை யுக்தியொன்றே போதும், கிரேக்கர்களின் போர் நுணுக்கத்தைப் பரைசாற்ற. இராமகாதை வால்மிகியால் 5-1-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. இராமன் வாழ்ந்த நூற்றாண்டு எதுவென்றே சொல்ல முடியாத அளவிற்கு, நம்மிடம் ஒரு தடயமும் இல்லை. மதவல்லுனர்களை கேட்டால், த்ரேதா யுகம் என்பார்கள். 20 லட்சம் வருசங்கள் கடந்த வரலாற்றை கூறுவார்கள். இதை கேட்ட மாத்திரத்தில் தலை சுற்றும். எனவே இராமகாதை ட்ராஜன் போர்கதையின் தழுவலாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது.
இதுமட்டுமல்லாமல், அக்கிலிஸ் பிறந்தபின் அவனுடைய தாயாகிய தீடைஸ் அவனை மரணமற்றவனாக்க 'ச்டிக்ஸ்' ஆற்றில் மூழ்கியெடுக்கிறாள். அவ்வாறு மூழ்கியெடுக்கும்போது, அவள் பிடித்திருந்த அவனுடைய கணுக்கால்பகுதி ஆற்றில் நனையாமல் பலவீனமாக இருக்கிறது. (ஆங்கிலத்தில் பலவீனத்தை 'அக்கிலிஸ் ஹீல்' என்று கூறுவதுண்டு). இது போன்றதொரு கதை, மகாபாரதத்தில் துரியோதனனுக்கும் உண்டு என்பதை அறிவீர். பாரதத்தில் கூறியதுபோல, மக்கட்தொகையை குறைக்கவே, ஜீயஸால்(கடவுள்) போர் தோற்றுவிக்கப்படுகிறது.
(குறிப்பு: எனக்கு தோன்றிய சிந்தனையைத் தான் கூறியுள்ளேன். மேலும் தகவல் தெரிந்தோர் பகிர்ந்து கொள்ளலாம்.)