Monday, February 01, 2010

நீயா நானா / கோபிநாத் / ருத்ரன்


பொதுவாக மனிதர்களிடையே தெய்வ நம்பிக்கையோ, ஜோதிட நம்பிக்கையோ, பேய்பிசாசு நம்பிக்கையோ, மற்ற மூட நம்பிக்கையோ இருந்துகொண்டுதான் இருக்கிறது. படித்தவர்களில் பலர் இந்த நம்பிக்கைகள் இல்லாமல் இருப்பது போல காட்டிக் கொண்டாலும், நம்பிக்கையுடையவர்களாகத் தான் இருப்பார்கள். இவற்றில் எந்த நம்பிக்கையும் மற்றவர்களை (அதாவது இந்த மற்றவர்கள் சகோதரர்களாக, பிள்ளைகளாக, கணவன்/மனைவியாக கூட இருக்கலாம்) சுரண்டாத, ஒடுக்காத வரையில் பரவாயில்லை.  
அமானுஷ்ய விசயங்கள் உண்மையா பொய்யா என்பது பற்றி விஜய்டீவியின் நீயா நானா-வில் சென்ற ஆண்டில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. மனநலமருத்துவர் ருத்ரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வீற்றிருந்தார். மக்கள் அமானுஷ்ய விசயங்களை எப்படி அணுகலாம் என்ற கேள்விக்கு ருத்ரனின் பதில் உங்களுக்கு பயப்படும் போல் ஒரு சம்பவம் நடக்கிறதா பயப்படுங்கள். அது இயல்பு. பிறகு அதையே நினைத்துக்கொண்டு மற்றவர்களிடம் எமாறாதீர்கள்.

நிகழ்ச்சியின் ஹைலைட்டான விசயம் என்னவென்றால், கனவுகள் நிஜசம்பவங்களாக நடப்பதாக ஒருவர் கூறினார். அடுத்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூட என்னால் கூறமுடியும் என்று சொன்னார். கோபிநாத்தும் நடந்தது என்ன நிகழ்ச்சியில் நாங்களும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளோம் என்று சான்றிதழ் கொடுத்தார். பிறகு ருத்ரன் கேள்வி கேட்க ஆரம்பித்ததும். மேற்சொன்ன நபர் முதலில் நண்பனிடம் போன் செய்து கனவு பற்றி விசாரித்தேன் என்றார். பிறகு வேறொரு நண்பர் மூலம் விசாரித்தேன் என்று தடுமாறினார். பிறகு அந்த நண்பர் தான் தன்னை அணுகி தான் டீவியில் செய்த நிகழ்ச்சி பார்த்ததாகவும், தற்போது எதாவது கனவு வந்ததா என்று கேட்டதாக புதிதாக ஒன்றை சொன்னார். இப்படியாக டாக்டர் ருத்ரன் அந்த நபரிடம் இருந்து போலித்தனத்தை வெளியே கொண்டுவந்ததும் கோபிநாத்திற்கு ஷாக் அடித்தது போல் இருந்திருக்கும், ஏனென்றால் நடந்தது என்ன என்று நிகழ்ச்சியின் மூலம் அவர் கொடுத்த சான்றிதழ் கிழிந்துவிட்டது.

அடுத்ததாக அமானுஷ்ய விசயங்கள் சுவாரசியமானவை, பொழுதுபோக்கானவை என்று ஒரு குண்டு போட்டார் கோபி. அதற்கும் சுவாரசியம் என்றால் உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள் பொதுவில் வந்து மக்களை முட்டாளாக்கத் தேவையில்லை என்று ருத்ரனிடம் இருந்து வந்த பதில் வந்தது. டாக்டர் ருத்ரன் தன் பதிலில் இந்த கார்போரேட் சமாசாரங்களின்   சிந்தனை, அறிவு சாயத்தை வெளிக்கொண்டு வந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. இந்த பதிலும் நிச்சயம் கோபிநாத்திற்கு சுருக்கென்று இருந்திருக்கும். இவர் நடத்தும் நடந்தது என்ன என்ற நிகழ்ச்சியில் மக்களுக்கு ஏமாற்றும் விசயங்களை புரியவைப்பதை விட்டுவிட்டு, சுவாரசியமான விசயங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பேசாமல் கோபி சாருவை கூப்பிட்டு இருக்கலாம். தன்னோட பங்குக்கு சாயிபாபா படத்தில் இருந்து குங்குமம், அரிசி, பருப்பு, புளி கொட்டுகிற கதையெல்லாம் சொல்லி சுவாரசியமாக்கி இருப்பார். அமானுஷ்ய விசயத்தை நம்பாதவராக மருத்துவப் பெண்மணி ஒருவர் தன்னுடைய அனுபவத்தையும், கருத்தையும் பகிர்ந்து கொண்டார். அமானுஷ்ய சக்தியில் நம்பிக்கை இல்லாதவர்களிலிருந்து வந்த கருத்துகள் நிகழ்ச்சியில் காண்பிக்கப்படவில்லை. நிகழ்ச்சியின் முடிவில் கோபிநாத் அமானுஷ்ய சக்தியை நம்பும் ஒரு பெண் மாபெரும் கருத்தைக் கூறிவிட்டதாகப் பரிசளித்து திருப்தியடைந்தார்.

உபரிதகவல்:
நீயா நானா சிகழ்ச்சியில் பெண்ணிற்கு தாலி புனிதமானதா? இல்லையா? என்ற விவாதம் செம்மையாக வெளிவருவது போல, பர்தா தேவையா? இல்லையா? என்ற விவாதம் வெளிவராமலே இருப்பது மிகவும் சிறப்பான விசயம்.

பொய்யாகிப் போனவை



எங்க பாட்டி மதிய நேரத்தில் கறிசோறு கொடுத்து அனுப்பினால் இரும்பு ஆணியோ ஒரு அடுப்புகரித்துண்டோ போட்டு அனுப்புவாங்க. மதியநேரம் கறிசோறு கொண்டு போனால் காத்துகருப்பு தொடர்ந்து வரும் என்று அவங்களுக்கு ஒரு நம்பிக்கை. தென் தமிழகத்தில் கருப்புசாமி, அய்யனார், மதுரைவீரன் கும்பிடுவது போல, வேலூர் பகுதியில் காட்டேரி, முனீஸ்வர வழிபாடு உண்டு. என்னுடைய சிறுவயதில் காட்டேரி என்றால் கருப்பாக  இருக்கும், அதற்கு நீளமா தலைமுடி இருக்கும் என்று கதை சொல்லித்தான் எனக்கு எங்க பாட்டி சோறு ஊட்டுவாங்க. காட்டேரி கும்பிட சாயங்காலமாக குளக்கரை பக்கத்தில் இருக்கும் அரசமரத்தடியில்  பொங்கல், கறி, கருவாட்டு கொழம்பு செய்துகொண்டு போய் படைப்பாங்க. இப்போது அங்க ஒரு சப்கோர்ட் வந்திடுச்சி. ஆனால் இப்போது அந்த அரசமரம் இல்லை. வெட்டிட்டாங்க.

முன்பெல்லாம் எங்க ஊரில் இருக்கிற முனீஸ்வரன் கோயில் பக்கம் இரவில் யாரும் போகமாட்டாங்க. அங்க இருக்குற முனிகள் இரவில் சண்டைபோடும் என்று சொல்லுவாங்க. உடைந்து போயிருக்கும் களிமண் குதிரைகள் சண்டையில் செத்துபோன குதிரைகள் என்று சொல்லுவாங்க. இப்ப அந்த பகுதியில் வீடுகள் அதிகமாகிவிட்டதால், இந்தக் கதைகள் எல்லாம் பொய்யாகிப் போய்விட்டது.

ஒரு உபரி தகவல் என்வென்றால், காட்டேரி குலதெய்வமா கும்பிடுரவங்க கருப்பு அறுனாகொடி கட்டுவாங்க. முனீஸ்வரன் கும்பிடுரவங்க சிவப்பு நிற கொடி கட்டுவாங்க. இரண்டையும் கும்பிடுரவங்க இரண்டு நிறத்திலும் கட்டுவாங்க.

எங்க வீட்டுக்கு எதிரில் எங்கத் தெருவையும் பக்கத்துத் தெருவையும் இணைக்கும் ஒரு சந்து இருந்தது. அங்கு பேய் நடமாட்டம் இருப்பதாக பேசிப்பாங்க. ஒருநாள் இரவு எங்க தாத்தா திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் எதோ ஒரு வெள்ளையான உருவம் அவரை எழுப்பியதாம். பதற்றத்தில் அவர் அந்த உருவத்தை அடிக்கப் போக, ஜன்னல் கம்பியை ஓங்கியடித்து கைமுறிந்துவிட்டதாம். இந்த கதையை நான் நினைத்து நினைத்து சிரிப்பதுண்டு.

எங்க தெருவில் மூலைக்கடை நாடாருக்கு சொந்தமான ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் பூதம் இருப்பதாக சொல்லி யாரும் வாழரது இல்லை. அப்படி இதுக்கு முதல் அந்த வீட்டில் இருந்தவங்க சாப்பிடும் போது திங்குற சோத்தில் மலமும், மண்ணும் விழுமாம். இப்போ அங்க வீடு இல்ல. ஒரு மளிகைக்கடை இருக்கு.

மேலே சொன்ன விசயங்கள் கதைகளாக, செவிவழிச் செய்தியாக எனக்குச் சொல்லப்பட்டவை. இப்படி நிறைய பேருக்கு அனுபவங்கள் இருக்கும். இவை அந்தந்த பகுதிகளின் பழக்கவழக்கமாக, தெய்வ நம்பிக்கையாக, தனிநபர் நம்பிக்கையாக, குல வழக்கமாக உருவாக்கப்பட்ட புனைக்கதைகளின் சார்புடையவையாகவே கருதுகிறேன். இவற்றை இன்னும் மக்கள் நம்பிக்கொண்டும் வழிபட்டுக்கொண்டும் தான் இருக்கிறார்கள்.