மொகலாய
மன்னர் அக்பருக்கு இரு சந்தேகங்கள் இருந்ததாம். ஒன்று கங்கை ஆறு எங்கிருந்து தோன்றுகிறது.
இரண்டு குழந்தைகள் பேசும் மழலை மொழி என்ன மொழி. முதல் சந்தேகத்தின் விடையைக் காண ஒரு
கூட்டம் அனுப்பப்பட்டது. சென்று வந்தவர்கள், „ஆற்றைத் தொடர்ந்து சென்றோம், பல காடுமேடுகளைக்
கடந்தோம். முடிவில் ஒரு மலைமேல் பெரிய மரத்தாலான மாட்டின் தலை இருந்தது. ஆற்றுநீர்
அதன் வாயில் இருந்து வழிந்து கொண்டிருந்தது. அந்த மலையின் பின்னே சென்று பார்க்க முடியவில்லை“
எனச் சொன்னார்கள். அவர்களுக்கு மன்னர் கொஞ்சம் பொருளுதவி செய்து அனுப்பினார்.
மன்னருடைய
இரண்டாவது சந்தேகத்திற்கு ஒரு காரணம் இருக்கிறது. குழந்தைகள் பேசும் மொழியைத்தான் ஆதிமனிதர்கள்
(ஆதாம், ஏவாள்) பேசியிருக்க வேண்டும் என்பது மன்னரின் கருத்து.. அதை நிவர்த்தி செய்ய
பல மொழி விர்ப்பன்னர்கள் ஒன்று கூட்டப்பட்டனர். அனைவரும் தங்களின் மொழியையே மழலை மொழியை
ஒத்திருப்பதாக கூறினார்கள். 12 குழந்தைகள்
தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் தனியாக வளர்க்கப்பட்டார்கள். அவர்களை பல மொழி அறிஞர்கள் கண்காணித்தார்கள். 12 ஆண்டுகள் கழித்து, யாரும்
மழலை மொழிக்கும் மற்ற மொழிகளுக்கான தொடர்பை உறுதிபடுத்த முடியவில்லை. இந்த சம்பவம்
நடந்திருக்குமா என நமக்குச் சந்தேகம் எழலாம். ஆனால் அக்கால மன்னர்கள் இது போல எதுவேண்டுமானாலும்
செய்திருக்கலாம்.
அக்பர்
காலத்தில் மது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஐரோப்பியர்களுக்கு மட்டும் அந்த விதி
தளர்த்தப்பட்டது. மதுவகைகளை தயாரித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மன்னர்
ஜஹாங்கீர் நன்றாக மது அருந்துவார் என்பது ஓரளவுக்கு மொகலாய வரலாறு படித்தவர்களுக்குத்
தெரியும். ஜஹாங்கீருக்கு ஐரோப்பிய கிருத்துவ நண்பர்கள் அதிகம். ஒருமுறை சில பாதிரியார்களுடன்
பேசிக்கொண்டிருக்கும்போது, பன்றிக்கறி பற்றிய பேச்சு வந்தது. பன்றிக்கறி சமையல் எப்படி
இருக்கும் என ஜஹாங்கீர் கேட்க, பாதிரியார்கள் „மிருதுவாகவும், வாசமாகவும்“ இருக்கும்
என்றார். உடனே ஜஹாங்கீருக்கு பன்றிக்கறி சமையல் சாப்பிட ஆவல் வந்துவிட்டது, தன் விருப்பத்தையும்
அவர்களிடம் தெரிவித்தார். பாதிரியார் ஒருவர் வீட்டில் விருந்து தயாரானது. மன்னரும்
விருந்திற்கு சென்றுவிட்டு வந்தார். மன்னருக்கு நெருக்கமான சில இஸ்லாமிய அறிஞர்களுக்கு
மன்னரின் புதிய உணவுப் பழக்கம் சுத்தமாக பிடிக்கவில்லை. ஒருநாள் எப்படியும் இன்று கேட்டுவிட
வேண்டும் முடிவு செய்தார்கள். இஸ்லாமிய வழக்கப்படி பன்றிக்கறி உண்பது தவறு என்று எடுத்துச்
சொன்னார்கள். உடனே ஜஹாங்கீருக்கு கோபம் வந்துவிட்டது. „சரி! பன்றிக்கறி சாப்பிட அனுமதிக்கும்
மதம் ஒன்றைக் கூறுங்கள்“ என்றார் மன்னர். „கிருத்துவம்“ என பதில் வந்தது. „நானும் கிருத்துவத்திற்கு
மாறலாம் என நினைக்கிறேன்“ என்று மன்னர் சொன்னதுதான்,
அதற்கு பிறகு யாரும் ஜஹாங்கீரிடம் உணவைப்
பற்றியும், மதுவைப்பற்றியும் வாய் திறப்பதில்லை.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கொசுவத்தி சுத்தலாம் வாங்க
நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது, எங்கள் தமிழாசிரியர் பெயர் சங்கரன். வகுப்பில் எப்பவும் சுத்த தமிழில் பேசுவார். எங்களையும் பேசச் சொல்லுவார். அப்போது இருந்த ஒரு வழக்கம் என்னவென்றால், ஆசிரியர்கள் டீ,காபி வாங்கிவரச் சொல்லும்போது பேனா கொடுத்து அனுப்புவார்கள். டீகிளாஸுக்கு பதிலாக பேனாவை கொடுத்துவிட்டு டீ,காபி வாங்கிவருவோம். திரும்ப கிளாஸ் கொண்டுபோய் கொடுக்கும்போது பேனாவை வாங்கிக் கொள்வோம். சங்கரன் ஐயா பேனாவை பிரகாசத்திடம் கொடுத்து „கொட்டைவடிநீர்(coffee) வாங்கி வா“ என்றார். பேனாவை வாங்கிச் சென்ற பிரகாசம் சற்றுநேரம் கழித்து பேனாவைக் கொண்டுவந்து கொடுத்தான். சங்கரன் ஐயாவுக்கு ஒன்று விளங்கவில்லை. பிறகு தான் தெரிந்தது, பிரகாசம் கொட்டைவடிநீரை „பேனாமை“ எனப் புரிந்து கொண்டு பேனாவில் மை நிரப்பி வந்தது.






