Friday, October 31, 2008

மார்க்ஸ் சாதனையும் டாஸ்மாக் சாதனையும்




#1 மார்க்ஸ் சாதனை:
தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதர சிக்கலுக்குப் பிறகு மறுபடியும் மார்க்சிசம், சோசியலிஸம், கம்புனிஸம் பற்றிய பொதுவான பார்வை மாறியுள்ளது போலும். தேடல்கள் அதிகரித்துள்ளது. சமீபத்தில், ஜெர்மனியில், கார்ல்-டைட்ஸ் வெர்லாஃக் பதிப்பகம் 1500-க்கும் மேற்பட்ட கார்ல் மார்க்ஸ் எழுதிய "மூலதனம்" நூலின் பிரதிகளை விற்றுள்ளது. "1867-ல் எழுதப்பட்ட மூலதனம், ஆண்டிற்கு பொதுவாக விற்பனை இரண்டு இலக்கம் தாண்டுவதே அரிதாக இருக்கும்போது, தற்போது விற்பனை அதிகரித்துள்ளது", என்று அதன் பதிப்பாளர் கூறுகிறார்.

#2 டாஸ்மாக் சாதனை:
தமிழகம் முழுவதும் உள்ள 6700 டாஸ்மாக் கடைகளில் அயல்நாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி தினத்தன்று மட்டும் "டாஸ்மாக்'"ல் மது விற்பனை 100 கோடி ரூபாய்க்கு எகிறியுள்ளது. முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையும் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை எட்டியதால், மது விற்பனை வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.சராசரியாக நாள் ஒன்றுக்கு 45 கோடி ரூபாய் முதல் 60 கோடி ரூபாய் வரை டாஸ்மாக் மூலம் விற்பனை நடந்து வருகிறது. சென்னையில் மட்டும் ஏழு கோடி ரூபாய்க்கு மேல் டாஸ்மாக் விற்பனை நடந்துள்ளது. சேலத்தில் இரண்டு நாட்களிலும் எட்டு கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.சாதாரண நாட்களில் மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனை நடந்து வந்தது. இது தீபாவளியன்று மூன்று மடங்கு அதிகரித்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனையாகியுள்ளது. எதோ திரையில் விஜயகாந்த் வசனம் பேசுவது போல, ஒரே புள்ளியல் விவரமாக தினமலரில் வந்துள்ளது. அரசுக்கு வருமானம் அதிகமானாலும், இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுவது கீழ்தட்டு மக்கள்தான். மற்ற மாநிலங்களை விட தற்போது, தமிழகத்தில் குடிப்போர் எண்ணிக்கை பெறுமளவில் அதிகரித்துவிட்டது. குடிப்பழக்கம் அவரவர் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு இருந்தால் கூட பரவாயில்லை, அப்படி இருப்பதில்லையே. இது பெருமளவில் தனிமனிதர்களின் பொருளாதாரச் சிக்கலை அதிகரிக்கும், அதன் தொடர்ச்சியாக சமுதாய சிக்கல்கள் உருவாகலாம். தெரியாமலா வள்ளுவர் கள்ளுண்மை அதிகாரத்தை, தனிமனித ஒழுக்கமாக கருதி அறத்துப்பாலில் வைக்காமல், பொருட்பாலில் வைத்தார்.
என்ன நடக்கிறது, எங்கே போகிறது தமிழகம். மக்களைப் போதையில் வைத்துக் கொண்டு ஆட்சி நடத்த கலைஞர் என்ன கலிகுலாவா? குறளோவியம் படைத்த கலைஞருக்கு இது தெரியாதா என்ன?
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

சாட்சாத் திருமால் தான் கேபல்ஸ் (Goebbels) !



அரசியலிலும் போரிலும் பொய்ப்பிரச்சாரம் செய்பவர்களை கேபல்ஸ் (Goebbels) என்று சொல்லுவார்கள். ரஷ்யாவில் ஜெர்மனி தர்ம அடி வாங்கும்போது கூட "நாஜிகளுக்கு மாபெரும் வெற்றி" என்று முழங்கிக் கொண்டிருந்தவர். ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போர் முடிவுரும் தருவாயில், கேபல்ஸ் ஹிட்லர் இறக்கும் வரை தீவிரவிசுவாசியாக இருந்து, தன் மனைவி மற்றும் ஆறு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார். இது ஒருபக்கம் இருக்க, என்னதான் கேபல்ஸ் கூறியவற்றைப் பொய்ப்பிரச்சாரம் என்று சொன்னாலும், அரசியல்ரீதியாகப் பார்ப்பின் இத்தகைய தகவல்கள் தங்களது ஊர் மக்களுக்கு ஒரு மனரீதியான திடத்தன்மையையும், எதிரிகளுக்கு ஒரு சோர்வையும் அளிக்கக் கூடியவை.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்பட்ட கார்கில் யுத்தத்தின்போது இந்தியாவில் பாகிஸ்தான் செய்தித் தொலைக்காட்சிகள் தடைசெய்து வைக்கப்பட்டிருந்தன. இதற்குக் காரணம்,பாகிஸ்தான் கூறப்போகும் இந்திய இழப்பு பற்றிய புள்ளியல் விவரங்கள் இந்தியர்கள் கேட்காமல் இருக்கவே. இலங்கையில் நிகழும் ஈழப்போராட்டத்தில், இலங்கையரசு எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் "புலிகள் மீது கடும் தாக்குதல், பயிற்சித்தளம் தாக்கியழிப்பு, 50 புலிகள் பலி, 100 புலிகள் காயம்" என்றே அறிவித்து வந்துள்ளது. கருத்துக்கணிப்பு போல இதுவும் ஒரு கண்துடைப்பு விடயம் தான். இதனுடைய தாக்கமும், சமுதாயத்தில் பெறும் மாற்றத்தை உண்டு பண்ணக்கூடியவை. இதைப்பற்றி பேசும்போது, இந்திய இதிகாசங்களில் இருந்து ஒரு தகவல் ஞாபகத்திற்கு வருகிறது. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் நடக்கும் போது, தேவர்கள் அமுது அருந்துவதால் இறக்கமாட்டார்கள், ஆனால் அசுரர்கள் தொடர்ந்து அழியாமல் போரிடுவார்கள். இதன் காரணம் திருமாலைக் கேட்டால், அவர் "அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார், சஞ்சீவி மந்திரம் அறிந்தவர், அவர் இறந்தவர்களை உயிர்ப்பித்துவிடுகிறார்" என்று கூறினாராம். (பார்த்தீர்களா! ஒரு எதிர்இனத்தவரின் உண்மையான வீரத்தைக் கடவுளால் கூட ஒத்துக்கொள்ள முடியவில்லை). ஒருவேளை, தேவாசுர போர், உண்மையாக ஆரிய-திராவிட யுத்தமாக நடந்திருப்பின், திருமால் தான் "கேபல்ஸ்".

மழை என் தோழன் !!


பனி முட்டைகளாய்

முற்றத்தில் வீழ்ந்தபோது

வினைப் பின்னமில்லா

விடலைப் பருவத்திலே

முத்துக்களாய் சேகரித்தேன்!

சன்னலில் சாறலாய்

முத்தங்கள் பதித்தபோது

உடைந்த துளிகள்

உலர் உள்ளத்தை

நனைத்தது உணர்ச்சியால்!

தோட்டத்தில் தூறலாய்

பூவிதழில் பொதிந்தபோது

தழுவாத தருணங்கள்

எண்ணிய தவிப்புகளெத்தனை!

சாப்ளின் சொன்னதுபோல்

உன்னோடு உறவாடும்போது

உப்புநீர் உமிழும்

என்றும் என் கண்ணோடு!