Showing posts with label திரைவிமர்சனம். Show all posts
Showing posts with label திரைவிமர்சனம். Show all posts

Saturday, March 30, 2013

பரதேசி மற்றும் ஒரு காதல் கதை


பரதேசி 

…சமீபத்தில் பரதேசி படம் பார்த்தேன். வேதிகாவின் நடிப்பு   எரிச்சலோ எரிச்சல். க்ளைமேக்ஸ் காட்சியில் நடிக்கும்போது  முதல் மரியாதை ராதாவை ஞாபகப்படுத்துகிறார். தன்ஷிகாவின் நடிப்பு மிகவும் முதிர்ச்சியானதாக இருந்தது. பிரமாதம். அதர்வா செயற்கையாக நடித்திருந்தார். அவர் பல இடங்களில் அழும்போது ஏனோ ஈர்ப்பை ஏற்படுத்தவே இல்லை. பொதுவாக ஒரு அப்பாவி கதாபாத்திரம் தனக்கு நேரும் கொடுமையை எதிர்க்க துணிவில்லாமல், கஷ்டப்படும்போது நமக்கு ஒரு பச்சாதாபம் உண்டாகும். அது இங்கே மிஸ்சிங். ஜீவி. பிரகாஷுக்கு வைத்த  பரிக்ஷையில் வெள்ளைப் பேப்பரை கொடுத்துவிட்டு ஓடிவிட்டார். பாவம் அவர் என்ன செய்வார். பின்னணி இசை கொடுமை. பாலா + இளையராஜா ஒரு நல்ல காம்பினேஷன். "நான் கடவுள்" படத்தில் மிகவும் பிரமாதமான பின்னணி இசையைக் கொடுத்திருப்பார் ராஜா. பாலா ஏன் இப்படி? ஒருவேளை சொந்தப்படம் என்பதால் இவ்வாறு செய்தாரோ?  படத்தில் வறுமை, சாதிக்கொடுமை பற்றி வெளிப்படையாக குறிப்பிடாமல் விட்டது பாலாவின் சுதந்திரம் அதுபற்றி சொல்ல ஒன்றும் இல்லை. நாம எதுக்கு இந்தப் படத்தை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளவேண்டும். மற்றபடி ஒரு வித்யாசமான முயற்சி அவ்வளவே. அதற்காக பாராட்டலாம்.

…சுதந்திரம் வருவதற்கு முதல் மக்களை தேநீர் அருந்த பழக்கப்படுத்த ஆங்கில அரசாங்கம் எல்லோருடைய வீட்டிற்கும் இலவசமாக விநியோகித்தது.  வயசான ஒரு தாத்தா ஒருத்தர் சொன்னது "வெள்ளைகாரன் காசு வாங்கமல் டீயை சும்மா கொடுத்தான். சுதந்திரம் வாங்கி நம் ஆளுங்க டீயை காசுக்கு விக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னா விலை விக்குது!". என்னமா திங்க் பண்ணுராரு பாருங்க.

தொலைக்காட்சியில் பரதேசி பேட்டி
…அதர்வா: பாலா என்ன கெட்டப் கொடுப்பார்னு எனக்கு ஒரே எக்ஸைட்டிங்க இருந்தது.
…தொகுப்பாளர்: நீங்க எப்படி அந்த இன்ஸ்ட்ருமென்டை ……(டே! அது தமுக்குடா!)  கத்துகிட்டு அடிச்சிங்க?

 நான் என்றாவது முடியை ஒட்ட வெட்டி வந்தால், "என்னடா! காரவடை முடிவெட்டு வெட்டிகிட்டு வந்திருக்க" என எங்க பாட்டி சொல்லும். பரதேசி படத்தில் வரும் முடிவெட்டைத் தான் அப்படி சொல்வதுண்டு.

மதபோதனை செய்யும் மருத்துவர் வரும் பகுதி ஏதோ இடைசெறுகல் போல உள்ளது. கதையோட்டதைத் தடுக்கிறது. ஆனாலும் அந்தப் குத்துப்பாட்டு (தன்னைத் தானே...). கேட்க நன்றாக இருக்கிறது. எங்க ஊரு பக்கத்தில் ஒரு தோல் மருத்துவனை இருக்கிறது. அது கிருத்துவ மிஷனரியால் நிறுவகிக்கப்படுகிறது. என்னுடைய தமையனுக்கு சிறுவயதில் வைட்டமின் குறைவால் முகத்தில்  தேமல் இருக்கும். என்னுடைய பாட்டி அந்த மருத்துவமனைக்கு அவனைக் கூட்டிச் சென்றார்கள். நானும் உடன் செல்வதுண்டு. ஒவ்வொரு முறையும் சிறு சிறு வேதபுத்தகங்கள், நற்செய்தி வாசகங்கள் கொடுப்பார். பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளச் சொல்வார்கள். எனக்கு என் தமையனுக்கு இதில் சுத்தமாக ஈடுபாடு இருப்பதில்லை. அவர்கள் சொல்வதும் விளங்காது. மணிக்கணக்கில் வேறு உட்காரவைத்து விடுவார்கள். பிறகு ஒரு வழியாக  மருந்து சாப்பிட்டு தேமல் சரியாகிவிட்டது. ஆனாலும் வீட்டிற்கு வந்து புத்தகம் கொடுப்பார்கள். மேலும் வரச்சொல்வார்கள். மருத்துவமனை ஆட்கள் வந்தாலே போதும், நானும் தமையனும் புறகடை வழியாக அடுத்த தெருவிற்கு ஓடிவிடுவோம்.


*********************************************************************************

ஒரு காதல் கதை
கதையோட கதாநாயகன் அந்தண சாதியில் பிறந்தவன். சகோதரர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டு வீட்டைவிட்டு கோபித்துக் கொண்டு வேறொரு இடத்திற்குச் சென்று வேலை பார்க்கிறான். சகோதரர்கள் எப்படியோ அவனை சமாதானப்படுத்தி ஊருக்கு அழைத்துப் போகிறார்கள். போகும்வழியில் இளைப்பாற ஒரு இடத்தில் தங்குகிறார்கள். அங்கு ஒரு பாடல் கேட்கிறது. பாடல் கேட்கும் திசை நோக்கி கதாநாயகன் போகிறான். அங்கு இரண்டு சகோதரிகள். அவர்களுடைய குரலின் இனிமையில் மயங்கி, அவர்களுடன் பேச முயற்சிக்கிறான். அவர்கள் பயந்து ஓடுகிறார்கள். இவனும் துரத்திச் செல்கிறான். ஓடிச்சென்ற பெண்கள், தங்களை ஆண் ஒருவன் துரத்துவதாக தந்தையிடம் முறையிடுகிறார்கள். பெண்களுடைய தங்தை தகாதமுறை நடக்க நினைத்தவனை தண்டிக்க கத்தியுடன் வருகிறார். வரும்வழியில் கதாநாயகனைப் பார்க்கிறார். கதாநாயகன் தான் அப்பெண்களை நேசிப்பதாகவும், திருமணம் புரிய விரும்புவதாகவும் கூறுகிறான். அதற்கு பெண்களின் தந்தை தாங்கள் சக்கிலிய சாதியர் எனவும், இந்தத் திருமணம் பொருந்தி வராது எனக் கூறுகிறார். ஆனால் கதாநாயகன் திருமணம் செய்ய தீர்மானமாக இருக்கிறான்.  தவிர்ப்பதற்காகவோ, சந்தேகப்பட்டோ ஆனால் பெரியவரோ பெண்களை மணப்பதானால் சில கோரிக்கைகளை விடுக்கிறார். உன்னுடைய சாதிய அடையாளங்களான பூணூல், குடுமியைக்  களைந்துவிட்டு, தோல் செருப்பு அணிந்து கொள்ள வேண்டும்.  எங்கள்வீட்டில் மாடுமேய்த்து, தோல் பதனிடுதல், செருப்பு தைத்தல் போன்ற வேலைகளை செய்ய வேண்டும் என்கிறார். அவ்வாறு செய்தால் என் மகள்களை திருமணம் முடித்துவைப்பதாக கூறுகிறார். இவற்றிற்கு ஒப்புக்கொண்ட கதாநாயகன் வீட்டிற்குச் செல்கிறான்.  பெற்றோர், சகோதரர்களின் சம்மதம் கேட்கிறான். கிடைக்கவில்லை. குடுமி, பூணூலைக் களைந்துவிட்டு சக்கிலிய தொழிலை ஏற்கிறான். சகோதிரிகளை மணக்கிறான். திருமணம் முடிந்த கொஞ்ச வருடங்களில் மாமனார் இறந்துவிட, இவனே அனைத்து பொறுப்புகளையும் பார்த்துக் கொள்கிறான். ஒருநாள் மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகளை திருடர்கள் கவர்ந்து சென்றுவிடுகிறார்கள். திருட்டுப்போன சேதி கேட்டவுடன் வேல்கம்பும் வாளுடனும் கிளம்புகிறான் கதாநாயகன். திருடர்களுடன் சண்டை செய்து எல்லாரையும் வீழ்த்தி விரட்டுகிறான். திரும்பும்வேளையில் பின்னிருந்து ஒருவன் கத்தியால் குத்தி கதாநாயகனைக் கொன்றுவிடுகிறான். நடந்தது தெரிந்து மனைவியர்கள் இருவரும் ஓடோடி வருகிறார்கள். துயரம் தாளாமல் இருவரும் கணவனுடன் தீப்பாய்ந்து உயிர்விடுகிறார்கள். இது திருநெல்வேலிசீமையில் வணங்கப்படும் முத்துபட்டன் (பட்டவராயன்) கதை. மனைவியர்கள் - பொம்மக்கா, திம்மக்கா. மாமனார் - வாலபகடை.  இந்தக்கதை கதைப்பாடலாக இன்றும் தென்மாவட்டங்களில்  சொல்லப்பட்டு வருகிறது.

நம்ம மகாஜனங்கள் இந்தக் கதையையும் விட்டுவைக்கவில்லை. மதுரைவீரன் கதையில் மதுரைவீரன் காசிராஜனின் மகன் சக்கிலியரின் மகன் அல்ல என்று இடைசெறுகியது போல, பொம்மக்கா திம்மக்காவிற்கும் முற்பிறவி வைதீக சாயம் பூசி இருக்கிறார்கள். (எதோ "சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்" படத்தைப் போன்றதொரு லவ் சப்ஜக்ட். என்ன கிளைமேக்ஸ் தான் சோகம். ட்ராஜிடி.)

 பட்டவராயர் பொம்மக்கா திம்மக்காவுடன் ... சண்டையின் போது உடன் சென்ற பூச்சி காச்சி நாய்கள். 

***********************************************************************************

கானா பழனியின் பாட்டு (தாத்தா கொஞ்சம் பொடி கொடு)

Saturday, August 18, 2012

இந்தியன், தேவதை, இணைந்த கைகள் படங்கள் பற்றி

இந்தியாவிற்கு  விடுதலை கிடைப்பதற்கு முன் நாட்டில் நடக்கும் வெள்ளையர்களின் அநீதியை எதிர்த்துப்போராடுகிறான் ஒரு போராளி. நாட்டின் விடுதலைக்குப் பின் தன் மகனே நாட்டிற்கு துரோகம் செய்வது தெரிய வரும்போது  வயது முதிர்ந்த காலத்திலும் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு அவனை பிடித்துவர புறப்படுகிறான். தப்பிக்க நினைக்கும் மகனை சுட்டுவீழ்த்துகிறான். இந்தப் படத்தின் பெயர் 'இந்தியன் ' என்று தானே சொல்ல வருகிறீர்கள். அதுதான் இல்லை. படத்தின் பெயர் நாம் பிறந்த மண். சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா நடித்து 1977ல் வெளிவந்தது. படத்தில் சிவாஜி கணேசனின் மகனாக கமல் தான் நடித்திருந்தார். என்ன தான் இந்தியன் படம் எடுத்த விதத்தில் வித்யாசமாக இருந்தாலும், படத்தினுடைய மூலக்கதை தழுவப்பட்டதே. சங்கரும் வழக்கம்போல லஞ்சம், ஊழல் என்று மேல்பூச்சு பூசிவிட்டு கதையை தன்னுடையதாகவே போட்டுக்கொண்டார். உண்மையில் இந்தியன் படத்தில் சுவாரசியமாக சொல்லப்பட்ட விடயம் கொலை செய்யப்படும்முறை. விதவிதமான கொலைகள். அவற்றை நாம் ரசிக்கவேறு செய்கிறோம். (அன்னியன் படத்திலும் இதேபோலத் தான் பல வித கொலைகள்). சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட  வயதான கமல் செய்யும்  சீரியல் கொலைகள். நாட்டில் நடக்கும் ஊழலைக் கண்டு கொலை செய்யத் தொடங்கியிருந்தால், தேசவுணர்வு என்று எதாவது சொல்லிக்கொள்ளலாம். ஆனால் தனக்கு நிகழும் ஒரு அசம்பாவிதம் காரணமாக சுயனலமாக கொலை செய்யத்தொடங்குவது, இறகு ஊழலுக்குத் தீர்வு கொலை என முடிவுசெய்வதெல்லாம் வயதான கமல் ஒரு சைக்கோபாதிக் சீரியல் கொலையாளி என்பதை உறுதிபடுத்துகிறது.ஆனால் ரசிகனுக்கு அவ்வுணர்வே வராத வண்ணம் தேசபக்தி, ஊழலுக்கான தண்டனை என மூடி மறைக்கப்பட்டிருக்கும்.



நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் காதல் தோல்வியால் அரசன் ஒருவன் இறந்து போகிறான். அவன் தன்னுடைய காதலிக்காக ஜென்மம் ஜென்மமாக காத்திருக்கிறான். இது நாசர் இயக்கி வெளிவந்த 'தேவதை' படத்தின் கதை. இப்படம் 1992ல் கப்போலா இயக்கிய  'ட்ராக்குலா' படத்தின் அரைகுறை தழுவல். இந்தப் படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடையே "ஒரு நாள் அந்த ஒருநாள்" பாடல் மிகவும் பிரச்சிதம். இப்பாடலும் ஒரு தழுவல் என்றால் நம்புவீர்களா? 'டோட்டல் ரீகால்' என 1990ல் வெளிவந்த படத்தின் தீம் இசையின் பாதிப்பு இதில் இருக்கும். நீங்களே ஒப்பிட்டு கேளுங்கள்! 

டோடல் ரீகால் படத்திற்காக ஜெரால்ட் கிங் கோல்ட்ஸ்மிதின் இசை 


தேவதை படத்திற்கு இளையராஜாவின் இசை 


நான் பள்ளிபடிக்கும் வயதில் அதிகம் விரும்பிப் பார்த்த படம் 'இணைந்த கைகள்'. இப்படத்தில் வரும் தீம் இசை மிகவும் பிரபலம். இது கூட 'ப்ரேக்கார்ட் பாஸ்' எனும் பியர்ஸ் ப்ரொன்சன் நடித்த படத்தில் வரும் இசையின் அப்பட்டமான தழுவல். 
இப்படத்துண்டில் இறுதியில் வரும் இசை 






Tuesday, March 02, 2010

9 (2009) - திரைப்படம்

மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இறுதிப்போர் நிகழ்ந்து எல்லோரும் அழிந்துகிடக்கும் தருவாயில் தன்னுடைய உயிரை பொம்மைகளில் அளித்துவிட்டு இறக்கிறார் ஒரு விஞ்ஞானி. அப்படி கடைசியாக உருவாக்கப்பட்ட பொம்மை '9'. உயிர்தெழுந்து வரும் 9, அழிவுகளிடையே நடந்து செல்லுகையில் ஒரு இயந்திர மிருகத்தால் துரத்தப்படுகிறது.  ஆனால் துரத்தப்படும்போது 9-ஐ பொம்மை 2 காப்பாற்றுகிறது. பிறகு தன்னுடைய சில தோழர்களிடம் 9-ஐ அறிமுகம் செய்கிறது. அந்தக்கூட்டத்திற்கு தலைமை வகிப்பது பொம்மை 1. ஆனால் அது ஒரு கோழை. 2 இயந்திரத்தால் பிடிக்கப்பட்ட்டப்பின், 2-ஐ காப்பாற்றி வருவதாக 9 செல்கிறது. ஆனால் சென்ற இடத்தில் செயலிழந்து கிடக்கும் இயந்திர உற்பத்தியை தொடக்கிவிட்டு விடுகிறது. ஊக்குவிக்கப்பட்ட இயந்திரங்களை 9ம், அதன் நண்பர்களும் எப்படி சமாளித்து அழித்தார்கள் என்பது மீதி கதை. முதலில் நான் '9' குறும்படத்தை பார்த்தேன். படத்தின் அனிமேஷன் காட்சிகளும், விடயமும் புதுமையாக இருந்தது. இந்தக் குறும்படம் 2005-ம் ஆண்டின்  ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டது. மிகுந்த ஆவலுடன், பிறகுதான் '9' என்று முழுநீளப் படமாக வந்ததையறிந்து, அந்தப்படத்தையும் பார்த்தேன்.  இப்படம் ஷான் அக்கரால் இயக்கப்பட்டது. குறும்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குனர் டிம் பர்டன் தானே இப்படத்தை தயாரித்தார். பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும், வித்யாசமான படமாக அனைவராலும் புகழப்பட்டது. நீங்களும் பார்த்து மகிழ '9' குறும்படத்தின் படத்துண்டை கீழே கொடுத்துள்ளேன். பார்த்துவிட்டு தங்களது கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும்.


Wednesday, December 30, 2009

3 idiots and Some idiots of India

3 idiots திரைப்படம் தொடங்கிய நான்காவது நாளில் 100 கோடியைத் தாண்டியுள்ளதாம். அப்படி ஒரு வரவேற்பு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில்.படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி (முன்னாபாய் MBBS-ன் இயக்குனர்). மேலும் இப்படத்தில் அமீர்கான் நடித்துள்ளார். Chetan bhagat எழுதிய Five point something கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், சிலக் கல்லூரிக் காட்சிகளில் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளது. சரி இப்போது விடயத்துக்கு வருவோம். இந்தப் பதிவு படத்தைப் பற்றிய விமர்சனம் அல்ல. இப்படத்தில் கதை தொட்டுச்செல்லும் இந்திய மாணவ சமுதாயம் எதிர்நோக்கும் சில பிரச்சனைகள். 1.மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பாடத்துறையைத் தேர்ந்தெடுக்காமல், பெற்றோரின் விருப்பத்தின் பேரில் சுயவிருப்பமின்றி  பாடத்துறையை தேர்ந்தெடுப்பது, 2. பேராசிரியர்கள், விரிவுரையாளர்களால் மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் மன அழுத்தங்கள், 3. இவ்வாறான மன அழுத்தங்களால் எற்படும் மாணவத் தற்கொலைகள்.

மருத்துவதுறை கிடைக்காத பெண்ணை வீட்டில் உள்ளோர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை. இது என் நண்பன் வீட்டில் நடந்த ஒரு சம்பவம். இதற்குக் காரணம் என்ன? விருப்பமில்லாத பாடத்தைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துவது, அப்படி படிக்கமுடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்தால் திட்டுவது. முடிவு தற்கொலை. இதுபோல ஏராளமான செய்திகள் பத்திரிகைகளில் தேர்வுமுடிவுகள் வரும் மாதங்களில் வருவதுண்டு. பெரும்பாலான பெற்றோர்கள் “நீ டாக்டராக வேண்டும். இஞ்னியராக வேண்டும்” என்று பிள்ளையின் சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொண்டு வருவார்கள். இப்படி இவர்களால் கட்டமைக்கப்பட்ட கோட்டை ஒருவேளை சரிந்துவிட்டால், மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தானாகவே தற்கொலைக்குத் தயாராகிறார்கள். போதிய படிப்பறிவோ, விழிப்புணர்ச்சியோ இல்லாத பெற்றோர்கள் எப்படியாவது பணத்தை செலவழித்து தன் பிள்ளையை ஒரு பொறியியல் பட்டப்படிப்பையோ, ஒரு மருத்துவப்பட்டப் படிப்பையோ படிக்க வைத்து விடவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படுவதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை. தொடர்வண்டியில் செல்லும் போது என்னிடம் ஒரு பெரியவர் சொன்னது “என்னோட மகளை என்னுடைய நாலு ஏக்கர் நிலத்தை அடகு வைத்து இஞ்னியரிங் படிப்புக்கு …….. காலேஜில் சேர்த்து இருக்கிறேன்.”. இன்றைய நிலையில் இந்தியாவில் பெரும்பாலான கல்லூரிகள் அரசியல்வாதிகளாலும், மந்திரிகளாலும், பினாமிகளாலும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுள் சரியான கல்வி, கட்டுமான வசதிகள் இல்லாவிடினும் மத்திய அங்கீகாரம் பெற்று மக்களை ஏமாற்றி பணத்தைக் கரந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கல்விகற்க போதிய வசதியற்றக் கல்லூரியைத் தான் பெரியவர் குறிப்பிட்டார். கிராமத்திலிருந்தும் நகரத்திலிருந்தும் வரும் சராசரி மாணவர்களின் நிலை மிகவும் மோசமானது. அவர்களுக்கு என்ன பாடத்துறையைத் தேர்வு செய்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பிராக்டிகலாக  தேர்ந்தெடுக்கவும் தெரியாது, தங்களுக்கு எது விருப்பப் பாடம் என்று விவரிக்கவும் தெரியாது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நடக்கும்போது அங்கு கவுன்சிலிங் வரும் சில மாணவர்கள் அவ்வழியே செல்லும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களிடம் என்ன பாடத்துறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கேட்பதை பலமுறைப் பார்த்திருக்கிறேன். போகிறபோக்கில் அவர்களும் எதாவது தோன்றுவதைச் சொல்லிவிட்டுப் போவதுண்டு.

இந்தியாவின் கல்வித்தரமோ அதளபாதாளத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.IIT, மற்றைய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. IITகளும் அதிகப்படுத்தப்படவுள்ளன. நல்ல விடயம் தான். ஆனால் அதற்கான infrastructure வசதிகள் தயாராக உள்ளனவா என்றால்? இல்லை. இப்படி கட்டுமான வசதியில்லாமல் மாணவர் சேர்க்கை மட்டும் அதிகரித்தால், கல்வித்தரம் குறையும், விடுதி மாட்டுக் கொட்டகை போல் இருக்கும். இப்போதே விடுதியில் ஒரு அறைக்கு 2 அல்லது 3 ஆட்களை அடுக்கிக் கொண்டிருக்கிறது IIT எனும் இந்தியாவில் கார்போரேட் நிறுவனங்கள். இங்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் பொறியியல் மாணவர்கள் மலிவாக Microsoft,Google,Texas instruments,Cisco…. என பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் IIT மாணவர்களை இந்தியா பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது.

சரி ஒரு வழியாக மாணவன் தன்னுடைய விருப்பமான அல்லது விருப்பமற்ற பாடத்தையோ தேர்ந்தெடுத்துவிடுகிறான். அடுத்து அவன் சந்திக்கும் பிரச்சனைகள் அவனுடைய ஆசிரியர்கள் மூலமாக. இந்தியாவில் IITகள் தான் உயர்தர பொறியியல் கல்வியை வழங்குகிறது. அப்படி வழங்கிய கல்வியால் இந்தியாவிற்கும் இந்தியமக்களுக்கும் லாபம் வெகு குறைவே. இதற்கு பெரும்பாலானவர்கள் மாணவர்களைக் குறைகூறுவார்கள். ஏனென்றால் IIT-ல் படிக்கும் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் இது தவறான கூற்று. வெளிநாட்டு நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிப்பது யார்? கல்வி நிறுவனமா அல்லது கார்பரேட் நிறுவனமா என்று எண்ணும் அளவிற்கு ப்ரோஜக்ட்களை வாங்கிக் குவித்துப் பணம் சம்பாதிப்பது யார்? கார்பரேட் நிறுவனம் கூட செய்த வேலைக்கு காசுகொடுக்கும் ஆனால் project work என்ற பெயரில் மாணவர்களை பெரும்பாலான ஆசிரியர்கள் ஓசியில் வேலை வாங்கவும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் (research journals, conference papers) எழுதவும், அதிலும் தன் பெயரை முதன்மையாக போட்டுக்கொள்ளும் அளவிற்கு கசக்கிப் பிழிகிறார்கள். அப்படி மாணவர்கள் மேற்சொன்ன வேலைகள் செய்யவில்லையா? கிரேட்(மதிப்பெண்) குறைக்கப்படும். மாணவனின் CGPA பொருத்து பெரும்பாலும் ப்ரோஜக்ட் ஆசிரியர்கள் ஒதுக்கப்படுவார்கள். அப்படி ஒதுக்கப்பட்ட ஆசிரியரின் கீழ் பணிபுரியும் மாணவன் அவரின் விருப்பப்பாடத்தில் தான் ப்ரோஜக்ட் செய்ய வேண்டும். இது தான் பொதுவாக எழுதப்படாத விதி. நிலைமை இப்படி இருப்பின் மாணவனைப் பெரும்பாலும் புதிதாக சிந்திக்க விடமாட்டார்கள். இந்திய அரசாங்கம் வெளியிடும் ப்ரோஜக்ட்களை முடிக்க கல்விநிறுவனங்களுக்கு முதலிடம் தரப்படுகிறது. இவற்றைப் பெரும் பேராசிரியர்கள் மாணவர்களிடம் காசில்லாமல் வேலை வாங்கிக் கொண்டு நிறைய பணம் பார்க்கிறார்கள்.உதாரணமாக இந்திய அரசு நிறுவனத்திற்காக ஒரு சாப்ட்வேர் தயார்செய்ய 20 லட்சம் மதிப்பிலான ஒரு ப்ரொஜெக்ட் விளம்பரம் செய்யப்படுகிறது. கல்விநிறுவனத்திற்கு முதலிடம் என்ற வகையில் அந்த ப்ரோஜக்ட்டை ஏற்றுக்கொள்ளும் ஒரு பேராசிரியர், தனக்குத் தொடர்புள்ள சாப்ட்வேர் நிறுவனங்கள் (TCS, CTS…..) மூலமாக சில முக்கிய moduleகளை முடித்துக் கொண்டு, மற்றவற்றை தன் கீழ் ப்ரோஜெக்ட் செய்யும் மாணவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிடுகிறார். சாப்ட்வேர் நிறுவனங்கள் செய்த வேலைக்கான பணம் போக மற்றவற்றை அவரே சுருட்டியும் விடுவார்.

IIT-ல் ஒரு சம்பவம் உங்கள் கவனத்திற்கு. முதல் வருடம் சரியாகப் படிக்காத Btech மாணவர்களை இரண்டாம் வருடம் performance சரியில்லை என்று அனுப்பியுள்ளார்கள். தரத்தை மேம்படுத்துகிறேன் பேர்வழி என்று இந்த விடயம் கடந்த ஆண்டுகளில் நடந்தன. ஆனால் அதுபோல விதிமுறைகள் எதுவும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதுபோல நீக்கப்பட்ட மாணவர்கள் வழக்குத் தொடர, IIT வழக்குத் தொடர்ந்த மாணவர்களை மறுபடியும் சேர்த்துக் கொண்டது. முன்பு இந்த விதிமுறையால் பாதிக்கப்பட்ட மாணவகள் கதி என்னவென்று தெரியவில்லை.

IIT-ல் கடந்த நான்கு ஆண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் google-ல் IIT suicide என்று தேடிப்பாருங்கள்.

இந்தியாவில், 2006-ல் மட்டும் சுமார் 5897 மாணவர்கள் தேர்வுபளு காரணமாக (16 மாணவர்கள் /ஒரு நாள்) தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது வெறும் அதிகாரப்பூர்வமான தகவல். அப்படியாயின் உண்மை எவ்வளவு என்று தெரியவில்லை. தற்போது இதைவிட அதிகமாகக் கூட இருக்கலாம். இவற்றிற்கு காரணம், காதல் தோல்வி, தேர்வினால் மன அழுத்தம் என்று கூறி தப்பித்துக்கொள்ள முடியாது. இதையும் தாண்டி பெற்றோரின் புரிந்துகொள்ளாத மனப்பக்குவம், ஆசிரியர்களின் சுயநலம், வருங்காலத் தூண்களை துரும்புகளாக மதிக்கும் அரசு என பல முக்கிய காரணிகள் உள்ளன. மாணவர்கள் படிப்பிலும், வாழ்க்கையிலும் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க அவர்களிடம் ஒரு நண்பனைப் போல பழகி அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு தகுந்தவர்கள் (பிரச்சனைக்கேற்றவாறு) மூலம் கவுன்சிலிங் தேவை. அதை விடுத்து ஜோதிடரிடமும், சாமியாரிடமும் சென்று “என் மகனுக்கு எப்படி இருக்கும், என்ன ஆகும் என்று விசாரிப்பது”, மூடத்தனம் மட்டுமல்ல, பிள்ளைகளின் வேதனைக்கேற்ற மருந்தாக அமையாது. கீழ்தட்டு மக்களுக்கு மனநல மருத்துவம்,கவுன்சிலிங் எல்லாம் தற்போதைய சூழ்நிலையில் அணுக முடியாதவை தான். நம்முடைய சகபதிவாளர்கள் தம்மை இப்படி ஒரு உதவிகேட்டு வருபவர்களை கைவிடாமல் சரியான ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேற்கூறிய பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது சம்பந்தப்பட்ட பெற்றோரும், ஆசிரியரும், மாணவனும் கலந்தாலோசித்து எடுக்க வேண்டிய முடிவுகள் மட்டுமேயன்றி நாம் இதில் பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மேலும் இந்திய மக்கள் வருங்கால சமுதாயத்தைக் காப்பாற்ற பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களிடம் ஒரு நல்ல நண்பனைப் போல் நடந்து கொள்ளுங்கள்.


Don't try to fix the students, fix ourselves first. The good teacher makes the poor student good and the good student superior. When our students fail, we, as teachers, too, have failed.
- Marva Collins

Saturday, November 08, 2008

எம்.ஜி.ஆர் ரசிகரா...


இந்திய திரையுலகில் சண்டைக் காட்சிகள் மிகவும் இன்றியமையாதவை. குறிப்பாக தமிழ் திரைப்படத்தில் ரசிகர்கள் இதைப் பெரிதும் எதிர்பார்ப்பார்கள். எனக்கு எம்.ஜி.ஆர் சண்டைக் காட்சிகள் என்றால் விரும்பிப் பார்ப்பேன். என்னோட அப்பா ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர், அதனால் நானும் பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்களையே பார்த்து வளர்ந்தேன். சண்டைக் காட்சிகளைப் பொருத்தவரை, இந்தியாவில் எம்.ஜி.ஆர் போல எந்தக் கதாநாயகனும் சிறப்பாக திரையில் சண்டை செய்து பார்த்ததில்லை. எனக்கு எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்ரும் வாலிபன் மிகவும் பிடித்த படம். இருந்தாலும், ரிக்ஷாகாரன் படத்தில் வரும் இறுதிக்காட்சி சண்டை எனக்குப் பிடித்தமானது. சண்டைக் காட்சியில் புரட்சிநடிகர் "சுருள்பட்டை" சுற்றும் ஒளித்துண்டை கீழே கொடுத்துள்ளேன். பார்த்து ரசிக்கவும்.



இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தான், நான் சிலம்பம் கற்றுக் கொள்ள போய் 'வீடு கட்ட' மட்டும் கற்றுக் கொண்டு வந்தேன். பத்தாம் வகுப்பில் படிப்பு, ஹிந்தி டியுசன் என பளு அதிகமானதால், தொடர்ந்து செல்ல முடியவில்லை. எங்க ஊரு பக்கம் கம்பு சுற்றுவதில் 'சாரபட்டை' சொல்லித் தருவார்கள். நான் ஆசைஆசையாக செய்து வாங்கி வந்த 'பானா கோல்' (சிலம்பம்), இப்போது அரிசி, பருப்பு வெயிலில் காயவைத்தால் காக்கா விரட்டவும், குரங்கு விரட்டவும் பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது.

கொசுறு செய்தி:

எம்.ஜி.ஆர் திரைப்படம் பற்றிய அரிய தகவலுக்கு http://mgrroop.blogspot.com போய் பாருங்க!!

பாடகர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களும் எம்.ஜி.ஆர் ரசிகர், அதை அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Friday, August 29, 2008

அண்ணன் பாலபாரதிக்காக மறக்கமுடியாத ஒரு பாடல்

பாலபாரதி-மலர்வனம் லட்சுமி அவர்களின் இல்லறம் இன்புற்றிருக்க வாழ்த்துக்கள். 'அந்தநாள்' படத்தை இயக்கிய வீணை பாலசந்தர் அவர்கள் நடித்து சந்திரபாபு பாடிய 'பெண்' என்ற படத்தில் இடம்பெறும் பாடல் உங்களுக்காக!



Saturday, April 26, 2008

தமிழ்ப்படம் வெளிநாட்டினரை எவ்வளவு பாதித்துள்ளது பாருங்கள்

தமிழ்ப்படம் வெளிநாட்டினரை எவ்வளவு பாதித்துள்ளது பாருங்கள். கீழேயுள்ள படத்துண்டு "அதிசியப்பிறவி" படத்தில் வருவது ஆகும்.



இது வெளிநாட்டினரின் உருவாக்கிய படத்துண்டு (முடியும் வரைபாக்கவும்! நிச்சயம் சிரிப்பீர்கள்!)


Sunday, April 20, 2008

சந்திரலேகா படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய பாடல்!!

ஜெமினி பிக்சர்ஸ் எஸ்.எஸ். வாசன் அவர்கள் தயாரித்த 'சந்திரலேகா' படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் பாடிய வித்தியாசமான மேற்கத்திய இசைப்பாடல்.




Sunday, January 06, 2008

படம் பார்க்கலாம் வாங்க! - Hana-bi (ஜப்பானிய திரைப்படம்)

டாகேஷி கிடனோவின் எழுத்து, நடிப்பு, இயக்கம், மற்றும் தொகுப்பில் 1997-ல் வெளிவந்த Hana-bi (ஜப்பானிய மொழியில் வானவேடிக்கை) சமீபத்தில் நான் பார்த்த சிறந்த படங்களில் ஒன்று. வெனிஸ் திரைவிழாவில் Golden lion விருது பெற்று, எல்லாராலும் நல்லமுறையில் விமர்சிக்கப்பட்ட படம்.

காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ள கிடனோ, தன்னுடைய சக ஊழியருக்கு விபத்தின் காரணமாக கால்கள் ஊனமான பாதிப்பில் பதவி விலகுகிறார். லெக்குமியாவால் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியுடன் அதிக நேரத்தை அவளுக்காக செலவிடுகிறார். கொள்ளையில் மற்றும் கடனாக பெற்ற பணத்தால் மற்றவர்களின் தேடுதல், தன் மனைவியுடனான பயணம் என கதை நகர்கிறது. நீளமான- மெதுவான நகர்வுகள், வசனமற்ற- இயக்கமற்ற காட்சிகள் என வழக்கமான கிடனோ படம். கணவன் மனைவிக்கான உறவு, சோகத்தின் நடுவே சில புன்னகை, திடீர் அடிதடியோடு கூடிய குரூரம், கவித்துமான ஓவிய இயல்புகளோடு சஞ்சலமில்லாத ஒரு நீர் ஓடை போல திரைப்படம் பயணிக்கிறது.

படத்தில் கிடனோவின் நண்பர் ஊனமாக இருக்கும்போது வரையும் ஓவியங்கள், உண்மையாக பரலிசிஸ் காரணமாக பாதிக்கப்பட்டு் ஓய்வில் இருந்தபோது கிடனோவால் வரையப்பட்டவை. இப்படத்தைப் பார்க்கும் முன்னர் கிடனோ இயக்கத்தில் Zatoichi என்ற அதிரடி படத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படத்தில் தான் கிடனோனின் இயக்கம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. உங்கள் பார்வைக்காக youtube-லிருந்து 9 பாகங்களாக இருக்கும் Hana-bi படம். பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லவும். நன்றி!!

பாகம்-1

பாகம்-2

பாகம்-3

பாகம்-4

பாகம்-5

பாகம்-6

பாகம்-7

பாகம்-8

பாகம்-9

Sunday, December 30, 2007

'Crop circle' பற்றிய ஒரு காணொளி

Signs படத்தில் வரும் பயிர்வட்டம், வேற்றுகிரகவாசிகளிடம் இருந்துவரும் எதோ தகவல் பரிமாற்றம் என்பது போல காட்டப்படும். பல்வேறு பயிர்வட்டங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை தான். பயிர் வட்டம் (crop circle) பற்றி கூகிளில் மேயும் போது எனக்கு youtube-ல் கிடைத்த ஒரு காணொளியை உங்களுடன் பகிரந்துகொள்கிறேன்.

Saturday, December 22, 2007

டான்ஸஸ் வித் உல்வ்ஸ் - செவ்விந்தியர் பற்றிய பார்வை

Dances with wolves என்ற நாவல் Kevin Costner இயக்கி நடித்து 1990-ல் திரைப்படமாக வெளிவந்து ஏழு அக்கெடமி விருதுகளை வென்றது. வட அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், குடியேற்றப்பகுதியின் எல்லைப் பகுதியை ஒட்டிய செவ்விந்திய கிராமத்தின் அருகில் தங்கியிருந்த அமெரிக்காவின் குதிரைப்படை அதிகாரியின் அனுபவமே கதை. பொதுவாக, அமெரிக்க Cowboy படங்களில் செவ்விந்தியர்களை காட்டுமிராண்டிகளாகவும், கோழைகளாகவும் காட்டுவார்கள். இப்படம் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, செவ்விந்தியரின் உண்மையான பக்கங்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கதை முழுவதும், நாயகன் டன்பரின் பார்வையில் சொல்லப்படுகிறது. முற்றுப்பெறாத ஒரு உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், காலில் அடிபட்டு படுத்திருக்கும் நாயகன் லெப்டினட் ஜான் டன்பர் கால் அகற்றப்பட்டு விடுமோ என தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறான். அவனுடைய தற்கொலை முயற்சி ஸ்பானியர்களை திசைத்திருப்ப அமெரிக்கப்படை வெற்றி பெறுகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து டன்பர் தன்னுடைய சிஸ்கோ என்கிற குதிரையுடன் எல்லைப் புறத்திற்கு அனுப்பப்படுகிறான். டன்பருக்கு ஆளரவமில்லாத செட்விக் என்னும் இடத்தில் தனியாளாக பொழுதைக் கழிக்கவேண்டி இருக்கிறது. அவ்விடத்தில் சுற்றித்திரியும் ஒரு ஓநாயை டூசாக்ஸ் என்று பெயரிட்டு நட்பு பாராட்டுகிறான் டன்பர். இத்தகைய சூழ்நிலையில், டன்பர் சில சியோக்ஸ் செவ்விந்தியர்களை சந்திக்க நேரிடுகிறது. பிறகு சில சியோக்ஸ் செவ்விந்தியர்கள் சிஸ்கோவைக் கடத்திச் செல்ல முயல, சிஸ்கோ தப்பித்து வந்துவிடுகிறது. டன்பர் செவ்விந்தியர்களை தானே சந்திக்க முடிவு செய்து, சியோக்ஸ் கிராமத்திற்குச் போகும்வழியில் செவ்விந்திய உடையில் லக்கோடா மொழி பேசும் வித்பிஸ்ட் என்கிற மேற்கத்திய பெண் அடிபட்டுக் கிடப்பதைக் காண்கிறான். அவளை எடுத்துக் கொண்டு செவ்விந்தியரின் குடியிறுப்புக்குக் கொண்டு செல்கிறான். முதலில் எதிரியாக பாவிக்கப்படும் டன்பரை, பிறகு தொடரும் உரையாடல்கள் மூலம் நம்பிக்கைக்குரியவனாக ஏற்றுக்கொள்கிறார்கள் சியோக்ஸ் மக்கள். கிக்கிங்பர்ட் மற்றும் விண்ட் இன்ஹிஸ்ஹேர் போன்ற செவ்விந்தியர்கள் டன்பருக்கு நெருங்கிய தோழர்களாகிறார்கள்.

டன்பர் செவ்விந்திய வாழ்க்கைமுறை, வழக்கங்களுக்குப் பெரிய ரசிகனாகிவிடுகிறான். டன்பரை சியோக்ஸ் மக்கள் டான்ஸஸ் வித் உல்வ்ஸ் என்று செல்லமாக அழைக்கிறார்கள். உணவு, உடைக்காக தேவைப்படும் எருமைகளை வேட்டையாடச் செவ்விந்தியர்களுக்கு டன்பர் உதவுகிறான். பவ்னீ என்னும் வேறொரு செவ்விந்திய குழுவின் முற்றுகையிலிருந்து சியோக்ஸ் குடியிறுப்புகளை காப்பாற்ற மேலும் உதவ, முற்றிலும் சியோக்ஸ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு செவ்விந்தியனாகவே மாறிப்போகிறான். பிறகு செவ்விந்திய முறைப்படி வித்பிஸ்ட்டை மணந்துகொண்ட பிறகு, சியோக்ஸ் குடியிறுப்பிலேயே டன்பரின் வாழ்க்கை நகர்கிறது. எதிர்காலத்தில் பாரிய அமெரிக்கப்படை வருவதால், குளிர்கால குடியேற்றத்தைத் தற்போதே நடத்துமாறு கூறிவிட்டு, டன்பர் தன்னுடைய கேம்பிற்குச் செல்கிறான். ஏற்கனவே கேம்பிற்கு வந்திருக்கும் அமெரிக்கப்படை சிப்பாய்கள் படையைவிட்டு ஓடிய deserter (absent without official leave) என நினைத்து டன்பரை அடித்து சிறைபிடிக்கிறார்கள்.

விசாரனைக்குக் கொண்டு செல்லும் வழியில், சியோக்ஸ் டன்பரை மீட்டுச்செல்கிறார்கள். தான் மேலும் செவ்விந்தியர்களுடன் இருந்தால் அவர்களுக்குத் தான் ஆபத்து என்று எண்ணி, கிக்கிங்பர்டிடம் விடைபெற்றுக் கொண்டு டன்பர் தன் மனைவியுடன் தனியே செல்கிறான். அவர்கள் செல்லும் வழியில், "டான்ஸஸ் வித் உல்வ்ஸ் என்றும் என் நண்பன்" என்ற விண்ட் இன்ஹிஸ்ஹேரின் கூவல் கேட்பதோடு படம் நிறைவடைகிறது.

  • டன்பர் பார்வையில், படத்தில் கதை அழகாக சொல்லப்படுகிறது.

  • எருமைகளை வேட்டையாடும் காட்சி அருமையாக படமாக்கப்பட்டிருக்கும்.

  • சாதாரண ஹாலிவுட் படங்களைப் போலல்லாமல், செவ்விந்தியர்களை வேறொரு நல்ல கோணத்தில் அனுகியதால், பெரிதும் இப்படம் பாராட்டப்பட்டது.

  • Dances with wolves படம் தான் Western genre (cowboy movies) படங்களில் அதிகஅளவு ($184 மில்லியன்) விற்ற படம்.

  • சிறந்தபடம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, சிறப்புஒலி, படத்தொகுப்பு, திரைக்கதை போன்றவற்றிற்கு அக்கெடமி விருதுகள் பெற்றது.



எருமைகளை வேட்டையாடும் காட்சி


Wednesday, December 19, 2007

"பில்லா" நல்லா தானே இருக்கு!!

பில்லா கதை எல்லோருக்கும் தெரியும். நான் கூறத்தேவையில்லை. தமிழ்மணத்தில் சில பேர் சமீபத்திய பில்லா (2007) படம் சரியில்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள். அவர்கள் ஒன்று தமிழ்படத்தை தொடர்ந்து பார்க்காதவர்களாகவோஅல்லது ஹாலிவுட் படங்களோடு தமிழக படங்களை ஒப்பீடு செய்து ரத்தக்கண்ணீர் வடிப்பவர்களாகவோ இருக்கவேண்டும். நமக்குள்ள குறைந்த பட்ஜெட்டில் இப்படி எல்லாம் ஒரு படம் வருவது பாராட்ட வேண்டியதே!! பில்லா திரைப்படத்திற்கு கொஞ்சம் கதை, திரைக்கதை போன்றவற்றில் மெனகெட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மற்றபடி, தமிழ்த்திரை ரசிகர்களுக்கு இது நல்ல காலம் போல, மசாலா படம் கூட அருமையாகத் தான் எடுக்கப்படுகிறது.

இதுக்கு முதல் இப்படி ஒரு அஜித் படத்தை அவருடைய ரசிகமணி பார்த்திருக்கவே முடியாது. படத்தில் அஜித் அட்டகாசம் செய்கிறார். அப்படி ஒரு Majestic look. வசனத்தை மெறுகேற்ற இன்னும் கொஞ்சம் முயற்சித்து இருக்கலாம். தொழிற்நுட்பரீதியாக பில்லா மலையளவு உயர்ந்து நிற்கிறது. பாடல்களிலும், பின்னணியிலும் யுவன்சங்கர்ராஜா கலக்கி இருக்கிறார். பாடல்கள் நேர்த்தியாகவும் படமாக்கப்
பட்டிருக்கிறது. நமீதாவையும், நயந்தாராவையும் கவர்ச்சிக்குப் பதில் கொஞ்சம் நடிக்கவும் வைத்து இருக்கலாம் (இந்த அம்மணிகள் வர கோலத்தை சிலுக்கு பார்த்தால், அவருக்கே வெட்கம் வந்துடும்). அவர்கள் வரும் காட்சிகள் அனாவசியமாகவும் செயற்கையாகவும் உள்ளது போல தோன்றும் அளவிற்கு, கவர்ச்சி ஆடையில் வளையவந்து வெறுப்பேற்றுகிறார்கள். சங்கர் படத்தில் பாடலில் மட்டும் காணப்படும் ரிச்னெஸ் படம் முழுக்க அனுபவிக்க முடிகிறது.

படத்தோட பெரிய ப்ளஸ் பாயிண்டே அஜித் தான். சுருங்கச் சொன்னால் "Simple but powerful". (இனிமேலாவது அதிகமா சீன் போடாம நல்ல படமா நடிக்க வாழ்த்துக்கள்!!) பழைய பில்லா படத்தை எந்த இடத்திலும் ஞாபகம் படுத்தாமல் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. ரஜினியோட ஹிட் படத்தை கெடுத்துவிட்டார்கள் என்று யாரோ புலம்பிய ஞாபகம். அப்படி ஒன்றும் ஆகவில்லை. இந்த படத்தை ரஜினி நிச்சயமாக மனதார பாராட்டி இருப்பார். பில்லா (2007) படத்தில் ரஜினியைத் தேடாமல் படத்தை மட்டும் பாருங்கள். போழுதுபோக்கான நல்ல படம். தாராளமாக பார்க்கலாம்.

அடி செருப்பால! யோவ்! பில்லா படம் நல்லா தானே இருக்கு, எழவு சிவாஜி படத்தை நல்லா இருக்குணு எழுதுரானுங்க! இந்த படத்துக்கு அப்படி என்னய்யா குறைச்சல்!! யோவ் அஜித்து !!எழவுரொம்ப நாளை பிறகு இப்ப தான்ய்யா நீ ஒரு நல்ல படமா நடிச்சி இருக்கே! நல்லா இருய்யா!

Sunday, December 16, 2007

ஒன்பது ரூபாய் நோட்டு

ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் கதை அனைவரும் அறிந்ததே. படத்தில் குறையென்று ஒன்றும் இல்லை. சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகினி என முக்கியமான நடிகர்களுடன் மற்றவர்களும் புதுமுகங்கள் என்று தெரியாத அளவிற்கு நடித்துள்ளனர். முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை தனது நடிப்பால் அசத்திய ரஜினியை எப்படி சீரழித்ததோ, அதேபோல சத்யராஜையும் தமிழ்திரையுலகம் நன்றாகவே வீணடித்துள்ளது. காசில்லாமல் ரயிலில் நிற்கும்போது, பாம்பு தீண்டிய மனைவியை தூக்கிக்கொண்டு கதறிஓடும்போது, மனைவி இறந்த பின் ஹாஜாபாயிடம் கதறி அழும்போது மனதைப்பிழிகிறார் தனது நடிப்பால். அர்ச்சனா அசல் கிராமத்து வெள்ளந்தி தாயாக கணவனுக்கும் தாய்ப்பாசத்திற்கும் இடையே போராடும்போது சிறந்த நடிப்பு. நாசர், ரோகினி நடித்த இஸ்லாமிய தம்பதியினர் வேடங்கள் கனகச்சிதமான பொருத்தம். இன்பநிலா மிகவும் அழகாக இருக்கிறார்.

பண்ருட்டி பக்கத்திலுள்ள பத்திரக்கோட்டை கிராமத்தின் முதியவர் மாதவர் படையாச்சியுடைய குடும்பத்தில் நிகழும் 20 வருட சம்பவங்களை அவரோட பக்கத்து வீட்டில் இருந்து பார்த்தது போல இருந்தது திரைப்படம். அப்படி ஒரு யதார்த்தம். (முத்தம் கொடுப்பதையும், மனைவியைக்கடிப்பதையும், உள்ளாடை போடுவதையும் யதார்த்தம் என்று நம்பிக்கொண்டிருக்கும் கமல் இந்தப்படத்தைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும்). உலகத்தரம் என்பது தமிழ்மண்ணை உண்மையாக உலகிற்கு உணர்த்துவது தான். அதில் மறுபடியும் தேர்வாகிவிட்டார் தங்கர். தமிழ்திரைப்படத்தில் பொதுவாக இஸ்லாமியர் என்றாலே குண்டு வைப்பவர்கள் என்றோ, சம்பிரதாயத்துக்கு குல்லா போட்டுக்கொண்டு வந்துபோவார்கள். இவற்றிற்கு விதிவிலக்கு ஹாஜா பாயாக வரும் நாசர். தமிழ்திரையுலகிற்கு மறந்துபோன வட தமிழ்நாட்டை தங்கர் அழகாக படம் பிடித்திருக்கிறார். (நம்ம சந்தோஷோட ஊரு ஆம்பூர் தான் என்று நினைக்கிறேன்). எங்க வட்டார பேச்சுமொழியை வேறு பதிப்பித்துள்ளார். (உதா: செய்துகினு இருந்தேன், எம்மா நாள் ஆச்சு). பரத்வாஜின் இசை படத்தின் உணர்விற்கு மேலும் பலமூட்டுகிறது. யார் யாரோ, மார்கழி, வேலாயி எனத் தொடங்கும் பாடல்கள் கேட்கவும், பார்க்கவும் அருமையாக உள்ளது. அழகு குலையாமல் அள்ளித்தொகுத்திருக்கிறார் லெனின். இப்படம் தமிழ்மக்களுக்கு ஒரு வரலாற்றுச்சாசனம். தவறாமல் பார்க்க வேண்டிய படம். மேலும் இது போன்ற படங்களை தங்கரும், சத்யராஜும் தமிழுக்குக் கொடுக்க வேண்டும்.

எவனோ ஒருவன்

சங்கர் இதுவரை தனது படத்தில் (அவரு எங்க பட எடுத்தார்! பாப்ஆல்பம் தான் போடுரார்) சொல்லனும் என்று நினைத்து, சொல்ல முடியாத திரைக்கதை. குத்துப்பாட்டு நம்பி படம் எடுக்கும் காலத்தில், பாட்டு இல்லாத ஒரு படம். ர.மாதவனின் (அப்படித்தான் படத்தில் வருகிறது!) அற்புத நடிப்பு. மாதவன் இதுவரை நடிக்காத ஒரு கதை, ஏற்றிராத ஒரு வேடம். சீமான், சங்கீதா என எல்லோரிடமும் நல்ல நடிப்பு வெளிப்படுகிறது.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் ஒரு நேர்மையான குடும்பஸ்தனின் வாழ்க்கையில் மனைவி கேட்கும் சில கேள்விகள் புகுந்து அவனின் பாதையை மாற்றிபோடுவதே கதை. குளிர்பானத்திற்கு 2 ரூபாய் அதிகமாக விற்கும் இடத்தில் துவங்கி, காவல்துறையின் ஒழுங்கினம், பாதையில் பைக் நிறுத்துவது, போதைப்பொருள், மருத்துவமனையில் நிகழும் பிரச்சனை என எல்லாவற்றையும் உடைத்தெறிகிறார். பிறகு என்ன? ஒரு பக்கம் காவல்துறை தேடல், மனைவி குழந்தைகளோடு ஒரு பக்கம் புலம்பி அழ, நாயகன் தன் வழியில். எல்லாருக்கும் இருக்கும் சமுதாய சமத்துவ உணர்ச்சி மேலெழும்பி மறுபடியும் நாயகன் ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதே முடிவு. முடிவில் சமூக இன்னலுக்கு வன்முறை தீர்வல்ல என்று கூறுவது இது ஒரு மசாலாப்படம் அல்ல என்பதை மறுபடியும் உணர்த்துகிறது. கதை கொஞ்சம் மெதுவாகத்தான் நகர்கிறது, ஆனால் நல்லப்படத்தைப் பார்ப்பதற்கு இதைப் பொறுத்துக் கொள்ளலாம்.

காவல்துறை அதிகாரியாக வரும் சீமான் சங்கீதாவிடம் விசாரணை நடத்துவது காவல்துறை பெண்களிடம் எப்படி விசாரிக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம். கதாநாயகன் ஒரு பிராமண இளைஞனாகக் காட்டுவதற்கு மாதவன் நாமம் சாத்திக்கொள்வதையோ, சந்தியாவந்தனம் செய்வதையோ (சங்கர் படத்தில் வருவது போல) காண்பிக்காமல் வெறும் பேச்சில் மட்டும் உணர்த்தி சராசரி தமிழனாக உலவவிடுவது சிறப்பு்.

என்னவென்று தெரியவில்லை சமீபத்தில் வந்த எல்லாப்படங்களும் யதார்த்தமான, அருமையான படங்களே தமிழில் வந்துள்ளது. இது தான் தமிழ் திரைத்துறை வளர்ச்சிக்கு ஆரோக்கியம். ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்களில் வரும் படங்கள் மத்தியில் ஒன்பது ரூபாய் நோட்டு, எவனோ ஒருவன் படங்கள் அத்திப்பூக்கள் தான். கண்டிப்பாக பார்க்க கூடிய படம். டோண்ட் மிஸ் இட்!!

Tuesday, November 13, 2007

மங்கோல் - திரைப்படம்


'மங்கோல்' கஜகஸ்தான் சார்பில் ஆஸ்கார் விருதிற்காக முன்மொழியப்பட்ட ரஷிய படம். இத்திரைப்படம் மங்கோலிய பேரரசன் செங்கிஸ்கானின் கதையைப்பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு மங்கோலிய மக்கள் பல்வேறு எதிர்ப்புக்குரல் எழுப்பினார்கள். செங்கிஸ்கானை தெய்வமாக பாவிக்கும் மங்கோலிய நாட்டிலிருந்து பெருமெதிர்ப்பு கிளம்பியதற்குக் காரணம், செங்கிஸ்கான் 800 ஆண்டுகள் உயிர்வாழ்ந்ததாக அந்நாட்டு மக்கள் நம்புவதே. இப்படம் செங்கிஸ்கானின் கதையின் முதல்பகுதியாக, 10-12 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்ட்டுள்ளது. கஜகஸ்தானிலும், ரஷியாவிலும் படமாக்கப் பட்டுள்ளது. இதனுடைய இயக்குனர் போர்டோவ் " இப்படத்தின் கதை செங்கிஸ்கானைப்பற்றியும் அவனுடைய காதலைப்பற்றியும் ஒரு அனாதைக்குழந்தை, உலகத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றப்போவதையும் கூறும்" என்று தெரிவித்துள்ளார்.

இப்போது கதைக்கு வருவோம். மங்கோலிய வழக்கப்படி செங்கிஸ்கான் எனப்படும் தெமுஜின் தன்னுடைய சிறுவயதில் தந்தையுடன் பெண்பார்க்க செல்வதிலிருந்து தொடங்குகிறது திரைப்படம். (நம்ம ஊருபோல தான், சின்ன வயதில் பார்த்துவிட்டு பருவம் அடைந்த பிறகு மணந்து கொள்வது) தந்தையின் விருப்பதிற்கு மாறாக, ஒரு பலகீனமான இனத்திலிருந்து பெண் தேடிக்கொள்கிறான். திருப்பும் வழியில், எதிரிகளால் தந்திரமாக நஞ்சளித்துக் கொல்லப்படுகிறார் செங்கிஸ்கானின் தந்தை. தன் கூட்டத்தினராலேயே அரசபட்டம் பறிபோக, அடிமையாக வாழ்கிறான் செங்கிஸ்கான். பிறகு அங்கிருந்து தப்பித்துச் சென்று, சில ஆண்டு கழித்து தனக்கு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட பெண்ணை (போர்டே) மனைவியாக்கிக் கொள்கிறான். செங்கிஸ்கானை தாக்கிவிட்டு அவனுடைய மனைவியை மெர்கிட் இனத்தவர்கள் கவர்ந்து செல்ல, தன்னுடைய சகோதரனுடைய (ஜமுகா)உதவியை நாடுகிறான். மனைவியை மீட்ட பிறகு தனியே பிரிந்து செல்ல நினைக்கும் செங்கிஸ்கானுக்கும் ஜமுகாவுக்கும் இடையே ஏற்படும் விரிசலில், மறுபடியும் மனைவியைப் பிரிய நேருகிறது. சீனாவில் அடிமையாக சில காலம் வாழும்போது, மனைவியின் உதவியால் தப்பிக்கிறான். இறுதியில், படைதிரட்டி வந்து போர்த்ந்திரங்களால் ஜமுகாவை வெல்கிறான்.

இறுதி போர்களக்காட்சி தொழில்நுட்பரீதியாக சிறந்து இருந்தாலும், வரலாற்றுரீதியில் சறுக்கிவிடுகிறது. இடிமுழக்கம் கேட்டால் மன்கோலியர்கள் பயப்படுவார்கள் என்ற வாதத்தின்படி, போரில் சண்டையிடாமல் தோற்றுவிடுவார்கள் என்பது கொஞ்சம் நெறுடல்தான். மற்றபடி செங்கிஸ்கான் போர்டே இடையே மலரும் காதல், மங்கோலியரின் உடையமைப்பு, ஒளிப்பதிவு படத்தின் சிறப்பம்சமாக விளங்குகிறது. எப்படி இருப்பினும் தவறாமல் ரசிக்கக்கூடிய படம்.

மங்கோல் படத்திற்கான ட்ரெய்லர்:



Monday, July 09, 2007

திரையுலக வித்தகர் அகிராகுரோசவா - 2

மேற்கத்திய கலைஞர் 'காட் பாதர்' படத்தின் இயக்குனர் ப்ரான்சிஸ் போர்டு கப்போலா அக்கிரோ பற்றி கூறுகையில் "பொதுவாக திரைகலைஞர்களுக்கு சிறப்பான படைப்பு என்பது அதிகபட்சம் இரண்டு அமைவதுண்டு. ஆனால் அகிரா 8-9 படைப்புகளை வழங்கியுள்ளார்" என தெரிவித்துள்ளார்.
அக்கிரோ வெறும் இயக்குனராக மட்டுமல்லாமல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, மற்றும் திரைக்கதை என ஒரு திரைப்படம் உருவாக காரணமான முக்கியமான துறைகளிலும் கால் பதித்துள்ளார். தன்னுடைய இடதுசாரிக்கொள்கைகளை படம் முழுவதும் விதைத்திருப்பார். 'செவன் சாமுராய்' படத்தில் வேளாளர்களின் வாழ்க்கைத்துயரங்களும், 'யொஜிம்போ'வில் பட்டுநெசவாளர்களைப் பற்றிய கூறுகளும் காணப்படும். அகிரா அறிமுகப்படுத்திய திரைப்பட யுக்திகள் இன்றளவிலும் பயன்படுத்தப்படுகிறது. பார்வையாளர்களை படம் பார்த்த பிறகு சிந்திக்க வைக்கக் கூடிய அற்புதமான கோர்வையான காட்சிகளையே அக்கிரோ உருவாக்கினார்.

செவன் சாமுராய் படம் கொள்ளையர்களிடம் இருந்து ஒரு கிராமத்தைக் காப்பாற்ற 7 சாமுராய்களுடன் வேளாளர்களும் போரிடுவதுதன் கதை.

செவன் சாமுராய் படத்தில் ஆரம்ப காட்சியில், கொள்ளையர்கள் வரப்போவதையறிந்து மக்கள் கூட்டமாக அமர்ந்திருப்பதை தொலைவில் இருந்து காட்டுவார், பிறகு அடுத்தடுத்த காட்சிகளில் காமெரா நெருங்கும். மூன்று பேரைக்காட்டுவார். பிறகு கருத்து தெரிவிப்பவனைக் காட்டுவார். குதிரைகள் வரும்போது அதனுடைய காலடிகள் காண்பிக்கப்படும், பிறகு அதனை எதிர்நோக்கும் வீரர்கள் முகங்களின் மிரட்சி காட்டப்படும். சண்டை நடக்கும் போதும் குதிரையின் கால்கள், சாமுராயின் கால்கள் மண்ணில் ஆடுவது காட்டப்படும், பிறகு கொள்ளையன் கொல்லப்பட்டு கீழே விழுவான். கடைசிக்காட்சிகளில் சாமுராய்கள் ஓடும் போது காமெராவும் அவர்கள் ஓடும் திசை நோக்கி திரும்பும்,அதனை நேர்த்தியான படத்தொகுப்பின் மூலம் இங்கும் அங்குமாக காட்சிகள் நகர்ந்து விறுவிறுப்பைக்கூட்டி சீட்டின் நுனிக்கு நம்மை கொண்டுவந்துவிடும். சில காட்சிகளில் கொல்லப்பட்டவர்கள் மெதுவான நகர்வில் விழுவதும் சிறப்பம்சம். 1954-ல் இந்த காட்சிகளை அவர் உருவாக்கியது தான் நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறது. பொதுவாக கட்சாட் மூலம் அம்பு பாய்வதை காண்பிக்காமல்,(அதாவது ஒருவர் அம்பு எய்வார், வேகமாக கேமிரா திருப்பத்துடன் எதிராளியின் உடம்பில் அம்பு படும்) அகிரா யதார்த்திற்காக உண்மையாகவே அம்பு எய்து காட்சிகளை எடுத்து இருப்பார்(நடிகர்கள் தடுப்பு வைத்திருப்பார்கள் என்பது அறிந்ததே!)

யொஜிம்போ என்றால் மெய்காப்பாளன் என்று பொருள். இப்படத்தில் கதாநாயகன் இரு தீயகும்பல்களால் அல்லல்படும் நகரத்தில் பிரவேசித்து, அவர்களுக்குள் சண்டையை ஏற்படுத்தி அழிப்பான்.

யொஜிம்போ படத்தில் கதாநாயகன் ஊரில் பிரவேசிக்கும்போது ஒரு நாய் துண்டான ஒரு கையை கவ்விச்செல்வது காட்டப்பட்டு, அதன்மூலம் அந்த நகரத்தின் நிலையை உணர்த்துவார். கடைசி காட்சியில் இலையின் மீது கத்தி எறிவது ரிவர்ஸாக காண்பிக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது, ஆனால் படம் பார்க்கும் போது அந்த நினைவை நமக்கு ஏற்படுத்தாது. 'பிஸ்ட்புல் ஆப் டாலர்ஸ்' படத்தில் செர்கியோ லியோன் (இவரைப்பற்றி என்னுடைய முந்தைய இடுகை 1, 2) காட்சிக்கு காட்சி யோஜிம்போவை தழுவி எடுத்தார். இப்படம் கிளிந்த் ஈஸ்ட்வுட்க்கு (மில்லியன் டாலர் பேபி, அன்பர்கிவன் போன்ற அகாடமி விருது பெற்ற படங்களை இயக்கி நடித்தவர்) பெரும் மைல்கல்லாக அமைந்தது.பிறகு 1996-ல் ப்ரூஸ்விலிஸ் நடித்து வெளிவந்த 'லாஸ்ட்மேன் ஸ்டாண்டிங்' என்ற படமும் இப்படத்தின் தழுவலே.




1990-ல் நடந்த 62வது அகெடமி விருது விழாவில், அகிராவின் திரைத்துறைப் சாதனைகளை மரியாதை செய்யும் வகையில், அவருக்கு விருது வழங்கப்பட்டது.

(ஸ்டார் வார்ஸ் புகழ் ஜார்ஜ் லுகாஞ் (இடது), அகிரா (நடுவில்),ஸ்டீவன் ச்பில்பர்க் (வலது))

ஸ்டார் வார்ஸ் வரிசைகள் அக்கிரோவின் 'ஹிட்டன் போர்ட்ரெஸ்' படத்தின் தழுவல். இப்படத்தின் கதை, நாட்டை இழந்திருக்கும் இளவரசியுடன் அந்நாட்டின் தளபதி ஒரு மறைவான கோட்டையில் தங்கி இருப்பார். பேராசை பிடித்த இரு வேளாளர்களின் உதவியுடன் எதிரி நாட்டின் வழியாக வேறொரு நாட்டிற்கு விறகுகளில் ஒளிக்கப்பட்ட தங்கத்துடன் பயணிப்பார்கள். பயணத்தின் இடையே பேராசையினால் வேளாளர்கள் இழைக்கும் தவறுகள், அதனால் வரும் இன்னல்கள், அதனை தளபதி எதிர்கொள்ளும்விதம் என விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. அடிமைகள் செய்யும் கலவரத்தின் போது, கோட்டையும்,காட்சியமைப்பு சிறப்பாகவும், யதார்த்தமாகவும் இருக்கும். தளபதிக்கும் எதிரிநாட்டு தளபதிக்கும் இடையே நிகழும் சண்டை நன்றாக படமாக்கப்பட்டு இருக்கும். மேற்க்கூறிய மூன்று படங்களிலும் செவன் சாமுராய் தவிர்த்து நடிகர் மிபியுன் கதாநாயகனாக நடித்தார். மூன்று படங்களும் கருப்பு-வெள்ளை படங்களாக இருப்பினும், சுவாரசியமாக இருக்கும். மேலும் தொடர்ந்து அடுத்த பாகங்களில் பார்ப்போம்.

Thursday, July 05, 2007

திரையுலக வித்தகர் அகிரோகுரோசவா


ஜப்பானிய இயக்குனர் அகிரோகுரோசவா திரையுலகில் மறக்கமுடியாத மந்திரம்.உலகத்திரையுலகிற்கு புதியபிம்பத்தைக் கொடுத்தவர். 'எண்டெர்டெயின்மெண்ட் வீக்லி' வரிசைப்படுத்திய தலைசிறந்த 50 இயக்குனர்களில் இருந்த ஒரேயொரு ஆசிய இயக்குனர். அதில் 6வது இடம் இவர். இவர் இந்தியாவின் சத்யஜித்ரேவின் ரசிகரும் கூட. ஐம்பதுகளில் இவர் இயக்கிய படங்கள் விதைத்துச் சென்ற புதுமை ஏராளம். இவர் இயக்கிய ரோஷமொன் படத்தின் அடினாதம் சிவாஜி நடித்து வெளிவந்த அந்தநாள் முதல் விருமாண்டி என்கிற சண்டியர் வரை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. திரைப்பட தொழில்நுட்பத்தில் உலகை உலுக்கிக்கொண்டு இருந்த மேற்குலகை திகைக்க வைத்தவர்.

1954-ல் வெளியான செவன்சாமுராய் ஹாலிவுட்டில் மெக்னிபிசந்த் செவன் என தயாரிக்கப்பட்டு பெரும்வெற்றி பெற்றது. பாலிவுட்டின் சோலே,சைனாகேட் கூட இதனுடைய தழுவல் தான். 1961-ல் இவர் இயக்கிய யொஜிம்போ, ஹாலிவுட்டில் செர்ஜியோலியோன் இயக்கத்தில் பிஸ்ட் புல்லாப் டாலர்ஸ் என்ற லத்தின் அமெரிக்க படமாக வெளியானது. கிலிண்ட் ஈஸ்ட்வுட் இப்படத்தில் நடித்து தான் புகழின் உச்சத்திற்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகிரோகுரோசவா சிறந்த ஓவியர். காட்சியமைப்பை தன் மனம் ஏற்கும் வரை விடாப்பிடியாக எடுப்பதால் ஊடகங்களால் சர்வாதிகாரியாக சித்தரிக்கப்பட்டார். செவன்சாமுராய் படத்தின் இறுதிக்காட்சிகளில் ஒன்றிற்கு மேற்பட்ட கேமிராக்களைப் பயன்படுத்தி அற்புதமான போர்காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். சண்டைக்காட்சிகளில் கத்தியால் வெட்டும் காட்சிகளில் மாமிசங்கள் வெட்டப்பட்டு ஒலிப்பதிவு அமைக்கப்பட்டதாம்.

அகிரோகுரோசவாவின் படங்களில் மழைக்காட்சி இருக்கும். மேற்கத்திய திரையுலகின் மேதை ஜான் போர்டு அகிரோகுரோசவாவை சந்தித்தபோது "மழை உங்களுக்கு மிகவும் பிடிக்குமா?" என்று கேட்டார். "என்னுடைய படங்களை உண்மையில் அதிக கவனத்துடன் பார்க்கிறீர்" என்று பதிலளித்தார் அகிரோ.

அகிரோ நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும் காட்சியமைப்பதில் வல்லவர். நடிகர்களுக்கான உடையை ஒருவாரத்திற்கு முன்பே கொடுத்து உடுத்தச் சொல்லி, அந்த பாத்திரத்துடன் ஒன்றச்செய்து விடுவார். 1700-ல் ஜப்பானில் நிலவிய நிலப்பிரபுத்துவ கோட்பாட்டில் சாமுராய் மற்றும் வேளாளர்களின் வாழ்க்கைமுறையை பிரதிபலிக்கும்படி கதைகளனாக அமைத்து வெகுவான படங்களை இயக்கினார்.

டெர்ஸு உஸலா என்ற திரைப்படம் வேற்றுமொழிக்கான ஆஸ்கார் விருதினை இவருக்கு 1975-ல் வாங்கித்தந்தது (இப்படம் ஜப்பானிய மொழியில் எடுக்கப்படவில்லை! ரஷிய மொழியில் எடுக்கப்பட்டதாகும்). ரேன்(1985) திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனராக ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார். திரையுலகின் ஜாம்பவானாக வலம்வந்த இவர் 1998-ல மறைந்தார்.

Tuesday, June 26, 2007

சிவாஜி - இந்த டப்பா படத்துக்கு இப்படியொரு பில்டப்பா!!!

"தப்பா அதிர்ஸுகாது!!" சிவாஜி படத்த தெலுங்குல பார்த்துட்டேன்! அதுல தான் இந்த டயலாக். அந்த கொடுமைய ஏன் கேட்குரீங்க. இதெல்லாம் ஒரு படம்னு எடுத்தவன எதால அடிக்கிறதுனே தெரியல. இந்த டப்பா படத்தை எடுக்கத்தான் 2 வருஷமா 60 கோடி செலவு செய்து இல்லாத பில்டப் கொடுத்தானுங்க. உருப்படாத பயலுவ! படத்தோட மட்டமான கதைய பத்தி எல்லாரும் கேட்டுகேட்டு சலித்து போய் இருப்பீங்க. தமிழ்மண அன்பர்கள் அவங்கவங்க பாணில கதையையும், விமர்சனத்தையும் சொல்லிட்டாங்க. அதனால இங்க எனக்கு தோணினத மட்டும் சொல்லிகிறேன்.

* கதைனு எதுவும் இல்லீங்க!! இரண்டு ரஜினி படம் (படையப்பா, பாட்சா), இரண்டு சங்கர் படம் (முதல்வன், ஜெண்டில்மேன்) ஒரு குண்டால கொட்டி, நல்லா மசாலா கலந்து, அரைவேக்காடுல எடுத்து முடிச்சி இருக்காங்க!!

* படம் முழுக்க தேடினாலும் லாஜிக்னு ஒன்னு இல்லவே இல்ல. ரஜினி, சங்கர் படத்தில் என்னைக்குடா லாஜிக் இருந்து இருக்குனு நீங்க கேட்கலாம். இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் கொஞ்சம் திருந்தி இருக்கிற சமயத்தில், இவங்க ஊடால புகுந்து கெடுக்கிற முயற்சிய ரொம்பவே பாராட்டலாம்.

* தமிழ்சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்துகிறேன் என்று ஊரை எமாத்திட்டு இருக்குற டுபாக்கூர் சங்கர் படம் எடுக்கிறதுக்கு பதில் ஆல்பம் எதாவது போட போகலாம். வெயில், இம்சை அரசன் இதுபோல குறைந்த பட்ஜெட்ல நல்ல படம் கொடுத்து லாபமும் பார்க்கும் சங்கர், அரதபழசா போன ஒரு கதைய வச்சிட்டு 30-60 கோடி செலவு செய்து, ஒன்னுதுக்கும் உதவாத படங்களை எடுப்பது ஏனென்று தெரியவில்லை.

* உலக சினிமா பற்றி ஊருக்கு உபதேசம் செய்து வரும் சுஜாதா (இவரு திரைக்கதை எழுதுவது எப்படி?னு வேற நூல் விட்டு இருக்கார்), தான் கற்றதிலிருந்து என்ன பெற்றாரென்று தெரியவில்லை. இந்த படத்தில் அவரோட பங்கு என்னனு தெரியல. அப்படி ஒரு புதுமையான கதைக்களம்.

* விவேக் காமெடினு எதுவும் செய்யல, வெறும் ரஜினியோட புகழ்பாடியாக வர்றார்.

* இதுக்கு சுமனோட வில்லன் ரோல்ல சத்யராஜ் நடிக்க கேட்டாங்களாம். ரகுவரனையே ஒழுங்கா பயன்படுத்தாதவங்க சத்யராஜ்யா பயன்படுத்த போராங்க. கடைசில சுமன் மிதிபட்டு சாகும் போது தெலுங்கு படத்துக்கு இணையான முடிவு.

* ஸ்ரேயா புடவை கட்டினால் மூக்கு சிந்திட்டு இருக்காங்க! சின்னசின்ன டிரஸ் போட்டா எல்லாம் தெரிய ஆடுராங்க!

* ஏ.ஆர்.ரகுமான் இசை பரவாயில்லை ரகம். பாபா-ல வருவது போல, இதுலயும் "லப..லப..லப"னு பின்னணியில கத்துரார். பாடல்கள் ஓகே.

* க்ளைமாக்ஸ்ல ரஜினியைக் க்லோசப்பில் காட்டும்போது, செத்துப்போன எங்க தாத்தா ஞாபகம் தான் வருது. அப்படி ஒரு இளமை முகத்தில். இவரு செய்யற ஸ்டைலப் பார்த்து ஸ்ரேயா ரசிக்கிறது செயற்கையாக இருக்கிறது. தலையில் அடிச்சிகலாம் போல! வெளியே ஆன்மீக அல்டாப்பாகவும், பக்கம்பக்கமாக அறிவுரையும் சொல்லிட்டு அலையும் ரஜினிக்கு ஸ்ரேயாவோட இடுப்ப பிடிச்சிட்டு ஆட சொல்லி எந்த வேதம் சொல்லிதுனு தெரியல!! எங்கே நான் சின்ன வயதில் பார்த்த அந்த பில்டப் இல்லாத பழைய ரஜினினு கேட்கத்தோணுது. படத்தோட நடுவில் கலாய்க்கிற ஸ்டைல் ரசிக்கலாம்.் பழைய ரசிகன் என்கிற முறையில் ரஜினிக்கு ஒரே வேண்டுகோள், "நீங்க நதி இணைப்புக்கு பாக்கெட்ல இருந்து ஒரு கோடி இல்ல..ஒரு பைசா கூட தர வேண்டாம்!! 30 கோடி வாங்கிட்டு இதுபோல ஓட்டகாலணா பெரத படங்களில் நடித்து உங்க ஏழை ரசிகனோட மூளையையும், பாக்கெட்டையும் காலி பண்ணாதீங்கய்யா!!".

* சண்டைக்காட்சிகள், ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.

* கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி வித்தியாசமாக தோன்றுவதாக ஊடகங்கள் ஒரு கலக்குகலக்கின. ஆனால் எனக்கு குடைக்குள் மழை படத்தில் பார்த்திபன் சொல்லும் வரிகள் தான் நினைவில் வருகிறது (என்ன கோட் இது!!இங்கிலீஷ் படத்தில் வர இராப்பிச்சைகாரன் மாதிரி).

நீ என்னடா சொல்லுறது! படம் ரொம்ப நல்லா போகுதுனு சிலர் சொல்லலாம். இந்த கேவலமான படத்துக்கு ஆயிரத்தில் காசு வச்சி வித்து இருக்கானுங்க. அதை நினைச்சா, இவனுங்க எப்படிப்பட்ட மொள்ளமாரியா இருக்கணும், 1000 ரூபாய் காசு கொடுத்து பார்த்தவனுங்க எவ்வளவு பெரிய ஏமாளிங்கனு தோணுது "நாங்க எமாளி இல்லை, படம் நல்லாதான் இருக்கு"னு சொல்லி மீசைல மண்ணு படலனு போறவங்க என்னை தயவு செய்து திட்டாதீங்க. உங்களோட கருத்து மட்டும் சொல்லுங்க!!

படம் பார்த்த பிறகு எனக்கு இருக்கிற ஒரே சந்தோஷம் நான் (உபயம்: நெட்) ஓசில பார்த்ததுதான்.