Sunday, December 30, 2007
'Crop circle' பற்றிய ஒரு காணொளி
நச்சுனு எதோ ஒரு எழவு!!
Thursday, December 27, 2007
தமிழ்த்திரையுலகில் டி.எஸ்.பாலைய்யா
புதுமைப்பித்தன் படத்தில் மொத்தமான உருவத்திலும் பாலைய்யா டி.ஆர்.ராஜகுமாரி நடனத்தை ரசித்தபடியே பார்க்கும் காதல்பார்வை.
"காணடா...என் பாட்டு தேனடா...இசைதெய்வம் நானடா..."
Saturday, December 22, 2007
சர்வதேசவிழாவில் "வேகம்" திரைப்படம் - என்னக் கொடுமை இது!!
சிண்டு: வாங்கண்ணே! என்ன விஷயம் சொல்லுங்கண்ணே!!
அண்டு: பொதுவாக இந்தியாவில் வெளிநாட்டுப்படங்கள் என்றால் ஹாலிவுட் படங்களும், சீனமொழி படங்களே வெளியாகின்றன. அதுவும் அடிதடி, மசாலாப் படங்கள் தான் பெருமளவில் வெளியிடப்படுகின்றன.
சிண்டு: நம்ம ஜெட்லி, ஜாக்கிசான், அர்னால்ட் படங்களையா சொல்லுரிங்க!
அண்டு: ஆமாண்டா!! இப்படி படங்கள் வரும்போது, தரமான ஸ்பானிய, பிரென்சு, இத்தாலிய, பாரசீக, ஜப்பானிய, ரஷ்ய மொழிப்படங்கள் பார்க்கும் வாய்ப்புகள் சர்வதேச விழாக்களில் மட்டுமே சாத்தியம். இந்தியாவில் இத்தகைய விழாக்களில் தான் நம்மால் வேற்றுமாநில மொழிகளில் வெளியாகும் சிறந்த படங்களையும்் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. இவற்றில் திரையிடப்படும் படங்கள் சமூகசூழல்கள், மனித உறவுகள், கலாச்சாரம் போன்றவற்றைப் பிரதானப்படுத்தி எடுக்கப்பட்டவைகளாக இருக்கும். இப்படங்களை பார்ப்பதன் மூலம் உலகத் திரைப்படங்கள் எத்தகைய பரிமாணத்தில், எத்தகைய பரிநாம வளர்ச்சி பெற்று சென்று கொண்டு இருக்கிறது என்பதை நன்கு உணர முடியும்.
சிண்டு: அதுக்கென்ன இப்ப!!
அண்டு: அதுகென்னவா? தமிழ்சினிமா.காம் பார்க்கலையா? சமீபத்தில் நடந்த சென்னை சர்வதேச படவிழாவிற்குச் சென்ற நம் படைப்பாளிகளுக்கு மாபெரும் ஒன்று அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. தமிழில் வந்த நல்ல படங்களையும் திரையிட்டு வந்த இந்த படவிழா குழுவினர், எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் நடித்த 'வேகம்' படத்தையும் திரையிட்டார்களாம். பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களை திரையிடுகிற இவர்கள் வேகத்தை திரையிட்டதுதான் பெரும் அதிர்ச்சி.
சிண்டு: 'வேகம்' ஆங்கிலத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற Cellular என்ற திரைப்படத்தில் அப்பட்டமான உல்டா ஆச்சே!! இதுக்கு நம்ம மயிலாபூர் மாம்ஸ் என்ன சொல்லுறார்.
அண்டு: அவர் என்ன சொல்லுவார்! பெரியார் படத்திற்கு பணம் கொடுத்தால் இராஜாஜி பற்றிய படம் எடுக்கவும் பணவுதவி செய்யவேண்டும் என்று சட்டசபையில் சத்தமாக கூறிவிட்டு, தமிழ்மக்களின் இன்றைய தேவையைக் கருதி இந்த ஆங்கில உல்டாவைத்தான் எடுத்துள்ளார்.
சிண்டு: இதெல்லாம் டூ, திரி, போர் மச்!!!!
நன்றி: தமிழ்சினிமா.காம்
டான்ஸஸ் வித் உல்வ்ஸ் - செவ்விந்தியர் பற்றிய பார்வை
Dances with wolves என்ற நாவல் Kevin Costner இயக்கி நடித்து 1990-ல் திரைப்படமாக வெளிவந்து ஏழு அக்கெடமி விருதுகளை வென்றது. வட அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், குடியேற்றப்பகுதியின் எல்லைப் பகுதியை ஒட்டிய செவ்விந்திய கிராமத்தின் அருகில் தங்கியிருந்த அமெரிக்காவின் குதிரைப்படை அதிகாரியின் அனுபவமே கதை. பொதுவாக, அமெரிக்க Cowboy படங்களில் செவ்விந்தியர்களை காட்டுமிராண்டிகளாகவும், கோழைகளாகவும் காட்டுவார்கள். இப்படம் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, செவ்விந்தியரின் உண்மையான பக்கங்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
கதை முழுவதும், நாயகன் டன்பரின் பார்வையில் சொல்லப்படுகிறது. முற்றுப்பெறாத ஒரு உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், காலில் அடிபட்டு படுத்திருக்கும் நாயகன் லெப்டினட் ஜான் டன்பர் கால் அகற்றப்பட்டு விடுமோ என தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறான். அவனுடைய தற்கொலை முயற்சி ஸ்பானியர்களை திசைத்திருப்ப அமெரிக்கப்படை வெற்றி பெறுகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து டன்பர் தன்னுடைய சிஸ்கோ என்கிற குதிரையுடன் எல்லைப் புறத்திற்கு அனுப்பப்படுகிறான். டன்பருக்கு ஆளரவமில்லாத செட்விக் என்னும் இடத்தில் தனியாளாக பொழுதைக் கழிக்கவேண்டி இருக்கிறது. அவ்விடத்தில் சுற்றித்திரியும் ஒரு ஓநாயை டூசாக்ஸ் என்று பெயரிட்டு நட்பு பாராட்டுகிறான் டன்பர். இத்தகைய சூழ்நிலையில், டன்பர் சில சியோக்ஸ் செவ்விந்தியர்களை சந்திக்க நேரிடுகிறது. பிறகு சில சியோக்ஸ் செவ்விந்தியர்கள் சிஸ்கோவைக் கடத்திச் செல்ல முயல, சிஸ்கோ தப்பித்து வந்துவிடுகிறது. டன்பர் செவ்விந்தியர்களை தானே சந்திக்க முடிவு செய்து, சியோக்ஸ் கிராமத்திற்குச் போகும்வழியில் செவ்விந்திய உடையில் லக்கோடா மொழி பேசும் வித்பிஸ்ட் என்கிற மேற்கத்திய பெண் அடிபட்டுக் கிடப்பதைக் காண்கிறான். அவளை எடுத்துக் கொண்டு செவ்விந்தியரின் குடியிறுப்புக்குக் கொண்டு செல்கிறான். முதலில் எதிரியாக பாவிக்கப்படும் டன்பரை, பிறகு தொடரும் உரையாடல்கள் மூலம் நம்பிக்கைக்குரியவனாக ஏற்றுக்கொள்கிறார்கள் சியோக்ஸ் மக்கள். கிக்கிங்பர்ட் மற்றும் விண்ட் இன்ஹிஸ்ஹேர் போன்ற செவ்விந்தியர்கள் டன்பருக்கு நெருங்கிய தோழர்களாகிறார்கள்.
டன்பர் செவ்விந்திய வாழ்க்கைமுறை, வழக்கங்களுக்குப் பெரிய ரசிகனாகிவிடுகிறான். டன்பரை சியோக்ஸ் மக்கள் டான்ஸஸ் வித் உல்வ்ஸ் என்று செல்லமாக அழைக்கிறார்கள். உணவு, உடைக்காக தேவைப்படும் எருமைகளை வேட்டையாடச் செவ்விந்தியர்களுக்கு டன்பர் உதவுகிறான். பவ்னீ என்னும் வேறொரு செவ்விந்திய குழுவின் முற்றுகையிலிருந்து சியோக்ஸ் குடியிறுப்புகளை காப்பாற்ற மேலும் உதவ, முற்றிலும் சியோக்ஸ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு செவ்விந்தியனாகவே மாறிப்போகிறான். பிறகு செவ்விந்திய முறைப்படி வித்பிஸ்ட்டை மணந்துகொண்ட பிறகு, சியோக்ஸ் குடியிறுப்பிலேயே டன்பரின் வாழ்க்கை நகர்கிறது. எதிர்காலத்தில் பாரிய அமெரிக்கப்படை வருவதால், குளிர்கால குடியேற்றத்தைத் தற்போதே நடத்துமாறு கூறிவிட்டு, டன்பர் தன்னுடைய கேம்பிற்குச் செல்கிறான். ஏற்கனவே கேம்பிற்கு வந்திருக்கும் அமெரிக்கப்படை சிப்பாய்கள் படையைவிட்டு ஓடிய deserter (absent without official leave) என நினைத்து டன்பரை அடித்து சிறைபிடிக்கிறார்கள்.
விசாரனைக்குக் கொண்டு செல்லும் வழியில், சியோக்ஸ் டன்பரை மீட்டுச்செல்கிறார்கள். தான் மேலும் செவ்விந்தியர்களுடன் இருந்தால் அவர்களுக்குத் தான் ஆபத்து என்று எண்ணி, கிக்கிங்பர்டிடம் விடைபெற்றுக் கொண்டு டன்பர் தன் மனைவியுடன் தனியே செல்கிறான். அவர்கள் செல்லும் வழியில், "டான்ஸஸ் வித் உல்வ்ஸ் என்றும் என் நண்பன்" என்ற விண்ட் இன்ஹிஸ்ஹேரின் கூவல் கேட்பதோடு படம் நிறைவடைகிறது.
-
டன்பர் பார்வையில், படத்தில் கதை அழகாக சொல்லப்படுகிறது.
-
எருமைகளை வேட்டையாடும் காட்சி அருமையாக படமாக்கப்பட்டிருக்கும்.
-
சாதாரண ஹாலிவுட் படங்களைப் போலல்லாமல், செவ்விந்தியர்களை வேறொரு நல்ல கோணத்தில் அனுகியதால், பெரிதும் இப்படம் பாராட்டப்பட்டது.
-
Dances with wolves படம் தான் Western genre (cowboy movies) படங்களில் அதிகஅளவு ($184 மில்லியன்) விற்ற படம்.
-
சிறந்தபடம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, சிறப்புஒலி, படத்தொகுப்பு, திரைக்கதை போன்றவற்றிற்கு அக்கெடமி விருதுகள் பெற்றது.
Wednesday, December 19, 2007
"பில்லா" நல்லா தானே இருக்கு!!
இதுக்கு முதல் இப்படி ஒரு அஜித் படத்தை அவருடைய ரசிகமணி பார்த்திருக்கவே முடியாது. படத்தில் அஜித் அட்டகாசம் செய்கிறார். அப்படி ஒரு Majestic look. வசனத்தை மெறுகேற்ற இன்னும் கொஞ்சம் முயற்சித்து இருக்கலாம். தொழிற்நுட்பரீதியாக பில்லா மலையளவு உயர்ந்து நிற்கிறது. பாடல்களிலும், பின்னணியிலும் யுவன்சங்கர்ராஜா கலக்கி இருக்கிறார். பாடல்கள் நேர்த்தியாகவும் படமாக்கப்
பட்டிருக்கிறது. நமீதாவையும், நயந்தாராவையும் கவர்ச்சிக்குப் பதில் கொஞ்சம் நடிக்கவும் வைத்து இருக்கலாம் (இந்த அம்மணிகள் வர கோலத்தை சிலுக்கு பார்த்தால், அவருக்கே வெட்கம் வந்துடும்). அவர்கள் வரும் காட்சிகள் அனாவசியமாகவும் செயற்கையாகவும் உள்ளது போல தோன்றும் அளவிற்கு, கவர்ச்சி ஆடையில் வளையவந்து வெறுப்பேற்றுகிறார்கள். சங்கர் படத்தில் பாடலில் மட்டும் காணப்படும் ரிச்னெஸ் படம் முழுக்க அனுபவிக்க முடிகிறது.
படத்தோட பெரிய ப்ளஸ் பாயிண்டே அஜித் தான். சுருங்கச் சொன்னால் "Simple but powerful". (இனிமேலாவது அதிகமா சீன் போடாம நல்ல படமா நடிக்க வாழ்த்துக்கள்!!) பழைய பில்லா படத்தை எந்த இடத்திலும் ஞாபகம் படுத்தாமல் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. ரஜினியோட ஹிட் படத்தை கெடுத்துவிட்டார்கள் என்று யாரோ புலம்பிய ஞாபகம். அப்படி ஒன்றும் ஆகவில்லை. இந்த படத்தை ரஜினி நிச்சயமாக மனதார பாராட்டி இருப்பார். பில்லா (2007) படத்தில் ரஜினியைத் தேடாமல் படத்தை மட்டும் பாருங்கள். போழுதுபோக்கான நல்ல படம். தாராளமாக பார்க்கலாம்.
அடி செருப்பால! யோவ்! பில்லா படம் நல்லா தானே இருக்கு, எழவு சிவாஜி படத்தை நல்லா இருக்குணு எழுதுரானுங்க! இந்த படத்துக்கு அப்படி என்னய்யா குறைச்சல்!! யோவ் அஜித்து !!எழவுரொம்ப நாளை பிறகு இப்ப தான்ய்யா நீ ஒரு நல்ல படமா நடிச்சி இருக்கே! நல்லா இருய்யா!
Tuesday, December 18, 2007
கூகிள் தளத்தில் பாவனாவையும் நமீதாவையும் தேடியது யார்?
கூகிள் தளத்தில் இந்தியர்கள் அப்படி என்னதான் தேடினார்கள் என்ற முடிச்சை கூகிளே அவிழ்த்துள்ளது.
கடந்த வருடத்தில் தேடலில் முதலிடம் வகிப்பது: ஆர்குட் (orkut)
அதிகமாக தேடப்படும்...விளையாட்டு நட்சத்திரம்: சானியா மிர்சா
அரசியல்வாதி: காந்தி
"Sex" என்ற வார்த்தையை அதிகமாகக் கொடுத்துத் தேடும் இணைய அன்பர்கள் உள்ள நாடுகள் முறையே எகிப்து, வியட்நாம், இந்தியா, துருக்கி (நம் ஆளுங்க அடங்க மாட்டாங்க போல!!). "Movie online" என்று தேடுபவர்கள் உலகிலேயே இந்தியர்கள் தான் அதிகம் என்பது, movie piracy அதிகமாவிட்டது! ஓசியில் படம் பார்க்க எல்லாரும் விரும்புராங்க என்பதையே குறிக்கிறது. "Kashmir" என்று தேடுபவர்கள் இந்தியர்களை விட பாக்கிஸ்தானியர்களே அதிகம்(எவ்வளவு அக்கறை பாருங்க அவங்களுக்கு, நீங்களும் இருக்கிங்களே!!). "terrorism" என்று அதிகம் தேடுபவர்களும்் பாகிஸ்தானியர்கள் தான். "USA" என்று தேடுபவர்கள் அமெரிக்கர்களுக்கு அடுத்து இந்தியர்கள் (இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது? USA-ஐ அமெரிக்கர்களுக்கு அடுத்து இந்தியர்கள் தான் அதிகம் நேசிக்கிறார்கள் போலும்). கூகிள் தளத்திலேயே "google" என்று தேடும் புத்திசாலி நபர்களும் அதிகம் இந்தியர்கள் தான். "Tsunami" என்று முறையே இந்தோநேசியா, மலேசியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா வாழ் இணைய அன்பர்கள் அதிகமாக தேடுகிறார்கள். "Job" என்று தேடுவதிலும் இந்தியர்களுக்குத்தான் முதலிடம்.
மேலும் ஒரு தகவல் என்னவென்றால், "periyar" என்ற தேடல் 2006-ன் தொடக்கத்திலிருந்து அதிகரித்துள்ளது. இதற்குக்காரணம், பெரியார் திரைப்படம் அல்லது பெரியார் சிலையுடைப்பு காரணமாக இருக்கலாம்.
கொசுரு செய்தி: "Bhavana" என்ற பெயரை இந்தியர்கள் தேடுவதை அடுத்து, UAE-லிருந்து தான் அதிகமாக தேடப்படுகிறது.(தம்பி உமாகதிர் UAE-ல தான் இருக்கிறார் என்பதை வாசகர்கள் மறக்கக்கூடாது :) ).
"Namitha" என்ற பெயரை இந்தியர்களுக்கு அடுத்து இலங்கையிலிருந்து தான் தேடப்படுகிறது (யாரந்த நமிதாவின் இலங்கை ரசிகர்கள்? குறிப்பாக கொழும்பில் தான்! உண்மையை நீங்களே சொல்லி விடுங்கள் :)) ).
"Sivaji" என்று இந்தியாவை விட இலங்கையிலிருந்து தான் அதிகமாக தேடப்பட்டுள்ளது. (இதுக்கு என்ன சொல்லுரிங்கோ??)
நீங்களும் சமத்தா Google trends-ல போய் தேடிப் பாருங்க.
Sunday, December 16, 2007
ஒன்பது ரூபாய் நோட்டு
பண்ருட்டி பக்கத்திலுள்ள பத்திரக்கோட்டை கிராமத்தின் முதியவர் மாதவர் படையாச்சியுடைய குடும்பத்தில் நிகழும் 20 வருட சம்பவங்களை அவரோட பக்கத்து வீட்டில் இருந்து பார்த்தது போல இருந்தது திரைப்படம். அப்படி ஒரு யதார்த்தம். (முத்தம் கொடுப்பதையும், மனைவியைக்கடிப்பதையும், உள்ளாடை போடுவதையும் யதார்த்தம் என்று நம்பிக்கொண்டிருக்கும் கமல் இந்தப்படத்தைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும்). உலகத்தரம் என்பது தமிழ்மண்ணை உண்மையாக உலகிற்கு உணர்த்துவது தான். அதில் மறுபடியும் தேர்வாகிவிட்டார் தங்கர். தமிழ்திரைப்படத்தில் பொதுவாக இஸ்லாமியர் என்றாலே குண்டு வைப்பவர்கள் என்றோ, சம்பிரதாயத்துக்கு குல்லா போட்டுக்கொண்டு வந்துபோவார்கள். இவற்றிற்கு விதிவிலக்கு ஹாஜா பாயாக வரும் நாசர். தமிழ்திரையுலகிற்கு மறந்துபோன வட தமிழ்நாட்டை தங்கர் அழகாக படம் பிடித்திருக்கிறார். (நம்ம சந்தோஷோட ஊரு ஆம்பூர் தான் என்று நினைக்கிறேன்). எங்க வட்டார பேச்சுமொழியை வேறு பதிப்பித்துள்ளார். (உதா: செய்துகினு இருந்தேன், எம்மா நாள் ஆச்சு). பரத்வாஜின் இசை படத்தின் உணர்விற்கு மேலும் பலமூட்டுகிறது. யார் யாரோ, மார்கழி, வேலாயி எனத் தொடங்கும் பாடல்கள் கேட்கவும், பார்க்கவும் அருமையாக உள்ளது. அழகு குலையாமல் அள்ளித்தொகுத்திருக்கிறார் லெனின். இப்படம் தமிழ்மக்களுக்கு ஒரு வரலாற்றுச்சாசனம். தவறாமல் பார்க்க வேண்டிய படம். மேலும் இது போன்ற படங்களை தங்கரும், சத்யராஜும் தமிழுக்குக் கொடுக்க வேண்டும்.
எவனோ ஒருவன்
தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் ஒரு நேர்மையான குடும்பஸ்தனின் வாழ்க்கையில் மனைவி கேட்கும் சில கேள்விகள் புகுந்து அவனின் பாதையை மாற்றிபோடுவதே கதை. குளிர்பானத்திற்கு 2 ரூபாய் அதிகமாக விற்கும் இடத்தில் துவங்கி, காவல்துறையின் ஒழுங்கினம், பாதையில் பைக் நிறுத்துவது, போதைப்பொருள், மருத்துவமனையில் நிகழும் பிரச்சனை என எல்லாவற்றையும் உடைத்தெறிகிறார். பிறகு என்ன? ஒரு பக்கம் காவல்துறை தேடல், மனைவி குழந்தைகளோடு ஒரு பக்கம் புலம்பி அழ, நாயகன் தன் வழியில். எல்லாருக்கும் இருக்கும் சமுதாய சமத்துவ உணர்ச்சி மேலெழும்பி மறுபடியும் நாயகன் ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதே முடிவு. முடிவில் சமூக இன்னலுக்கு வன்முறை தீர்வல்ல என்று கூறுவது இது ஒரு மசாலாப்படம் அல்ல என்பதை மறுபடியும் உணர்த்துகிறது. கதை கொஞ்சம் மெதுவாகத்தான் நகர்கிறது, ஆனால் நல்லப்படத்தைப் பார்ப்பதற்கு இதைப் பொறுத்துக் கொள்ளலாம்.
காவல்துறை அதிகாரியாக வரும் சீமான் சங்கீதாவிடம் விசாரணை நடத்துவது காவல்துறை பெண்களிடம் எப்படி விசாரிக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம். கதாநாயகன் ஒரு பிராமண இளைஞனாகக் காட்டுவதற்கு மாதவன் நாமம் சாத்திக்கொள்வதையோ, சந்தியாவந்தனம் செய்வதையோ (சங்கர் படத்தில் வருவது போல) காண்பிக்காமல் வெறும் பேச்சில் மட்டும் உணர்த்தி சராசரி தமிழனாக உலவவிடுவது சிறப்பு்.
என்னவென்று தெரியவில்லை சமீபத்தில் வந்த எல்லாப்படங்களும் யதார்த்தமான, அருமையான படங்களே தமிழில் வந்துள்ளது. இது தான் தமிழ் திரைத்துறை வளர்ச்சிக்கு ஆரோக்கியம். ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்களில் வரும் படங்கள் மத்தியில் ஒன்பது ரூபாய் நோட்டு, எவனோ ஒருவன் படங்கள் அத்திப்பூக்கள் தான். கண்டிப்பாக பார்க்க கூடிய படம். டோண்ட் மிஸ் இட்!!
Wednesday, December 05, 2007
100 தியேட்டர்களில் ஒன்பது ரூபாய் நோட்டு!
**************************** ******************************* ******************************* ***************
ஒன்பது ரூபாய் நோட்டு படத்தை பார்த்து நெகிழ்ந்து போன பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் தலைவர் சாமிநாதன், தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான 100 தியேட்டர்களில் படத்தை திரையிட சம்மதித்துள்ளார். இந்த படத்தை பார்க்கிற ரசிகர்கள், தியேட்டருக்கு வெளியே இருக்கிற உண்டியலில் விரும்பிய பணத்தை செலுத்தலாம். அது ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி, ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி. அது அவரவர் விருப்பம். உண்டியலில் பணம் செலுத்தாமல் இலவசமாக படத்தை பார்த்துவிட்டும் செல்லலாம். இந்த நிபந்தனையின் பேரில் இப்படியரு படத்தை திரையிடுவது தமிழ்சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாகும்!
மிக அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை திரையிட சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் திண்டாடி வந்த இயக்குனர் தங்கர்பச்சான், பிரமிட் சாய்மீராவுக்கு சொந்தமான ஏழு தியேட்டர்களை வாடகை அடிப்படையில் கேட்டுப்பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தாராம். ஆனால், அவர் கேட்பதற்கு முன்பாகவே முந்திக்கொண்ட அந்நிறுவனம், இவ்வளவு அற்புதமான படத்திற்கு நாங்கள் இலவசமாகவே தியேட்டர் தருகிறோம். அதுவும் 100 தியேட்டர்களை! என்று சொல்ல, பரவசத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார் தங்கர்.
எதிர்வரும் ஞாயிறன்று தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான 100 திரையரங்கங்களில் இந்த படம் ஒரு காட்சி மட்டும் திரையிடப்படும். வெளியே உண்டியலில் விழுகிற பணம் அத்தனையும் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தை எடுக்க முன்வந்த தயாரிப்பாளருக்குதான். அதில் ஒரு பைசா கூட தங்களுக்கு வேண்டாம் என்று பெருந்தன்மையோடு தெரிவித்துவிட்டார் அந்நிறுவனத்தின் இயக்குனர் சாமிநாதன். அவரின் இந்த பெருந்தன்மையான செயலுக்கு சத்யராஜ், நாசர், அர்ச்சனா, ரோஹினி உள்ளிட்ட அத்தனை பேரும் நேரடியாக நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
நன்றி: தமிழ்சினிமா.காம்