Thursday, May 15, 2014

பெண்கள்/மனைவி வேலைக்குப் போகலாமா வேண்டாமா?

பெண்கள் வேலைக்குப் போகலாமா வேண்டாமா என்று சில விவாதங்கள் வருவதுண்டு. இணையத்திலும் இத்தகைய விவாதங்களைப் பார்க்கலாம். இப்படி விவாதிப்பவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்களாகவும் நகரவாசிகளாவும் இருப்பார்கள். 

கீழ்தட்டுமக்களில் வசிக்குமிடம் கிராமமாகட்டும் நகரமாகட்டும் கிட்டத்தட்ட எல்லா பெண்களும் வேலைக்குப் போகிறார்கள். 

ஆதலால் இவ்விவாதத்தை மேம்போக்காக பெண்கள் என்று எடுத்துக் கொள்ளாமல், மேல்தட்டு பெண்கள் என்று சொல்லலாம். அவர்களைப் பற்றியே இக்கருத்துகள். இப்பெண்கள் வேலைக்குப் போகவேண்டிய காரணங்கள் என்று பார்த்தால்: ஒன்று பெண்ணின் விருப்பம், இரண்டு அவர்களின் குடும்ப சூழ்நிலை (விருப்பு வெறுப்புகளைத் தாண்டி வேறுவழியில்லாமல் செல்வது), மூன்று மற்றவரின் தலையீடு (அதாவது மற்றவரின் கட்டாயப்படுத்தல்). இவற்றில் மூன்றாவது பிரிவில் ஆண்களின் விருப்புவெறுப்புகள் (தலையீடுகள்) வருகின்றன.

தாய், சகோதரி, மனைவி, மகள், மருமகள் என எவ்வளவோ பெண் சொந்தங்கள் இருப்பினும், மனைவியை வேலைக்கு அனுப்புவது பற்றியே சிலர் தனித்தலைப்புடன் விவாதிக்கிறார்கள். மனைவி வேலைக்குப் போகலாமா வேண்டாமா என்பதைப் பற்றி பேசும் பெரும்பாலான ஆண்களுக்கு உளவியல்ரீதியான ஒரு காரணத்தை நான் அவதானித்திருக்கிறேன். முதலாமவர்கள் மனைவி வேலைக்குப் போக வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள். இவர்கள் பெரும்பாலும் வேலைக்குப் போகாத தாயின் பிள்ளைகளாக இருப்பார்கள். இவர்களின் இளம்வயது வாழ்க்கை தாயின் கையால் நல்ல சாப்பாடு, தாயின் அரவணைப்பு என்று இருந்திருக்கும். இரண்டாமர்கள் மனைவி வேலைக்குப் போகத் தேவையில்லை என்று நினைப்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் வேலைக்குப் போகும் தாயின் பிள்ளைகள். இவர்களது இளம்வயது ஓட்டல் சாப்பாடு, தாயுடன் அதிக நேரம் செலவிட முடியாமை, சொந்தங்கள் வீட்டில் வளர்வது என்று இருந்திருக்கும்.

நான் பிறந்தபின், என் அம்மா வேலைக்குப் போகும்போது என் பாட்டி வீட்டில் விட்டுவிட்டு செல்வார். என் பாட்டி இறந்த பிறகு, எனது பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டில் தனியாகவே இருக்க வேண்டிவரும். பூட்டிய வீட்டிற்குள் காலை முதல் மாலை வரை நானும் அண்ணனும் தனியாக இருப்போம். சில சமயம் நான் மட்டும். வேலைக்குச் செல்லும் பெற்றோரை உடைய குழந்தைகள் பலர்  சிறு- பெரு நகரங்களில் பெரும்பாலும் இன்றும் இப்படித்தான் தனியாக பூட்டிய வீடுகளில் இருக்கிறார்கள் (இன்றைய காலகட்டங்களில் குழந்தைகளை விட்டுச்செல்ல சில தாதிமார்கள் பெருநகரங்களில் இருப்பினும், அவர்களின் பராமரிப்பு என்ன? பராமரிப்பு ஒழுங்காக இருந்தால் அதற்காகும் செலவு என்ன? என்ற பல கேள்விகள் உள்ளன). மாலை வேலை முடிந்துவரும் என்னுடைய அம்மாவிற்கு வீட்டுவேலைகள் செய்யவே சரியாக இருக்கும். என் தந்தை வேலை முடிந்து இரவு எட்டு மணிக்கு மேல் வருவார். அவர் வருவதற்குள் சமைத்தும் வைக்க வேண்டும்.  இப்படி பெண்கள் வேலைக்குப் போகும் குடும்பங்களில் பல பிரச்சனைகள் உண்டு. "உனக்கு வரவளயாவது வேலைக்குப் போகச் சொல்லி தொந்தரவு தராம பார்த்துக்க" என்று என் அம்மா அடிக்கடி என்னிடம் சொல்வதுண்டு. என்னுடைய அம்மா கூட குடும்ப சூழ்நிலை (கடன்) காரணமாகவே விருப்பமில்லாமலும் உடற்நிலையை பொருட்படுத்தாமல் வேலைக்குப் போய்கொண்டிருந்தார். கணவன், குழந்தைகள், வேலை என்று வாழ்ந்து, வேளைக்கு உணவருந்தாமல், தன்னையே தானே வருத்திகொள்ளும் ஒரு சராசரி இந்தியத்தாயாகவே வாழ்ந்தார்.

என் நண்பன் ஒருவன் ஒரிசாவில் நல்ல மத்திய அரசுப் பணியில் இருக்கிறான். அவன் திருமணம் செய்த பெண் ஆயுற்வேதம் படித்திருந்தாள். திருமணம் செய்து அழைத்துச் சென்ற ஒரு மாதத்தில் "நீ வேலைக்குப் போ" என்று வற்புறுத்த ஆரம்பித்துவிட்டான். அப்பெண்ணுக்கு உடனடியாக போக விருப்பமில்லை. "இப்ப தானே வந்திருக்காங்க! வைத்தியம் பார்க்க மொழி தெரியனும், ஒடியா தெரிஞ்சிக்கட்டும். இடம் வேற புதுசு. வேற ஆட்கள். பயமா இருக்கும். ரெண்டு மூணு வருஷமாவது போகட்டும்" என்றேன் நான். "நீங்க எந்தக்காலத்தில் இருக்கிங்க. பொண்ணுங்க படிச்சா வேலைக்கு போகனும், வீட்டுக்குள்ளே அடங்கி இருக்கக்கூடாது" (என் மாதிரி சமுதாயத்தில் வாழ்கிறோம்? :) ) அப்படி இப்படி என்று லெக்சர் கொடுக்க ஆரம்பித்து விட்டான். குடும்பப் பிரச்சனை, வீட்டுக்கடன், பணவரவு என்று எதாவது உண்மையைச் சொன்னால் சரி, ஆனால் அதை விடுத்து இப்படி "முற்போக்கு" முகமூடி எதற்கு என்று தெரியவில்லை. சரி உன் விருப்பம் என்று விட்டுவிட்டேன். அவனுடைய தாயும் வேலைக்குப் போகாத பெண்மணி தான்.

இப்படி சொல்வதால், பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் என்று யாராவது சொல்லலாம். ஆனால் இது தான் எதார்த்தம். நான் முடிவாக சொல்வது: முதலில் வேலைக்குப் போகலாமா வேண்டாமா முடிவெடுக்க வேண்டியவள் சம்பந்தப்பட்ட பெண், இரண்டாவது ஆணோ பெண்ணோ, அவர்கள் வேலைக்குப் போவது அவரவர் விருப்பம், குடும்பச் சூழ்நிலை பொருத்தது. இதையெல்லாம் பொதுப்புத்தியில் பார்க்க இயலாது. வேலைக்குப் போனால் பெண்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்று பார்த்தால் (போக்குவரத்து, சமுதாயம், உடல்நலம், மாதவிடாய், பாலியல் தொல்லைகள், மன உளைச்சல்) அதற்கு தனியாக ஒரு பத்து பதிவாவது எழுதவேண்டும். வேலைக்குப் போகும் மனைவியரை ஊக்குவிக்கும் அல்லது விரும்பும் ஆண்கள் வெறுமனே வாயால் வடைசுடுவதை விடுத்து, அவர்களுக்கு சமையல், குழந்தைவளர்ப்பு, வீட்டுவேலைகளில் கூடமாட உதவியாக இருக்கலாம். மனைவியருக்கு வேலை அலைச்சல், உடல்-மன உளைச்சல் ஏற்படும் காலங்களில் உதவியாக அல்லது குறைந்தபட்சம் ஆறுதலாகவாவது இருக்க வேண்டும். அதைவிடுத்து எல்லா வேலைகளையும் பெண்கள் மேல் சுமத்திவிட்டு, பெண்ணடிமைத்தனத்தை ஒழித்துவிட்டதாக நீங்கள் நினைத்தால், "பாவம் சார்! உங்க சம்சாரம்".

=========================================================================

தேர்வு முடிவு

செய்தி ஊடகங்கள் கேடுகெட்டுப் போய் கிடக்கின்றன என்பதற்கு தற்போது நடக்கும் சம்பவங்களே சாட்சி. போன வருடத்திலிருந்தே மாதாமாதம் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலும் முடிந்துவிட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் வந்துவிட்டன. ஆனால் எது உண்மை எது பொய் என்று தெரியவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில், கருத்துக்கணிப்புகள் முற்றிலும் பொய்த்துப் போய்விட்டன. போன தேர்தலில் சொன்னது போலவே, தற்போது எல்லா கருத்துக்கணிப்புகளும் பாஜக பெருமளவு வெற்றி பெரும் என்கின்றன. இதற்கும் ஒருபடி மேலே போய், யார்யார் பாஜக அமைச்சரவையில் உள்ளனர் என்று செய்தி ஊடகங்கள் விவாதிக்க துவங்கிவிட்டன. யாருடன் கூட்டணி என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எங்க ஊரு பக்கம் சொல்லுவாங்க. ஆடு ஆடுவாக்குல இருக்கு, எனக்கு _____  வேணும்னு சொன்னானான்.

அடுத்து, தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே மோடிக்கு இவர்களே பிரதமராக பதவிப் பிரமானம் செய்து வைத்துவிடுவார்கள் என நினைக்கிறேன். ஒன்றுக்கும் உதவாத இக்கருத்துக்கணிப்புகளை முதலில் ஒழிக்க வேண்டும். ஜோதிடம், குதிரை பந்தயத்தை விட கேவலமானது இது.

தமிழநாட்டில் 2009-ல் ஜெயலலிதா அதிக இடங்களில் வெற்றி பெறுவார் (பெற வேண்டும் என்றல்ல!) என நினைத்தேன். வெற்றி பெறவில்லை. 2011-ல் கருணாநிதி முதலமைச்சராக வெற்றி பெறுவார் (பெற வேண்டும் என்றல்ல!) என நினைத்தேன். வெற்றி பெறவில்லை. இப்போது ஜெயலலிதா வெற்றி பெறுவார் (பெற வேண்டும் என்றல்ல!) என நினைக்கிறேன். நாம் நினைப்பது எங்கே நடக்கிறது.

"நல்லவர் நினைப்பது ஒன்று தான் நடப்பதில்லை இத்தமிழ்நாட்டிலே". இதை அடியேன் சொல்லவில்லை. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி கணேசன் சொல்லுவார்.

**********************************************************************************

இது போன்ற கோடைக்கால விடுமுறைகளில் என் அம்மாவிற்கு எழுத்துப்பணி, மாணவர் சேர்க்கை போன்ற வேலைகள் இருக்கும். அச்சமயங்களில்  நானும் என் அண்ணனும் பாட்டி வீட்டில் இருப்போம். அப்படி ஒருநாள். மதியநேரம் இரண்டு மனி இருக்கும். நான் மதியம் சாப்பிட்டு முடித்தவுடன் வழக்கம் போல, ஈயை அடித்து எறும்பு புற்றுக்குள் போட்டுக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு சத்தம். திரும்பிப்பார்த்தால், வீட்டின் பின்புறம் இருந்த ஓலைக் கொட்டகை தரையோடு வீழ்ந்து கிடந்தது. என் பாட்டி உடனே ஓடிச்சென்று பார்த்தார். நானும் அவர் பின்னே ஓடினேன். அங்கே என் அண்ணன் கழுத்தில் மாட்டுக்குப் போடும் மூக்கணாங்கயிற்றுடன் விழுந்து கிடந்தான். என் பாட்டியின் ஓவென்ற அலறல் கேட்டவுடன், என் மாமாவும் சற்று நேரத்தில் வந்துவிட்டார். என் அண்ணனின் கழுத்தில் இறுகி இருந்த கயிற்றை கழற்றி வீசிவிட்டு, அவனை தூக்கிச் சென்று வெளியே போடப்பட்டு இருந்த கயிற்றுக்கட்டிலில் படுக்க வைத்தார்.

என் அண்ணன் முகமெல்லாம் சிவந்து குளிர் காய்ச்சல் வந்ததுபோல் நடுங்கிக்கொண்டு ஒடுங்கி படுத்திருந்தான். அண்ணன் கழுத்தில் சிவப்பான கோடு போல் வீங்கி இருந்தது. என் பாட்டி, மாமா இருவரும் அதிர்ச்சியில் உறைந்து இருந்தார்கள். நான் மட்டும் ஏன் அழுகிறேன் என்று தெரியாமல் அழுதுகொண்டிருந்தேன். கொஞ்சம் விபூதியைக் கொண்டுவந்து அண்ணன் நெற்றியிலும் நெஞ்சிலும் பூசிவிட்டு "ஐயா முருகா! நாங்க என்ன பாவம் செஞ்சோம்" என்று சாமிப் படத்தைப் பார்த்து நெஞ்சில் அடித்து என் பாட்டி அழுது கொண்டிருந்தார். "என்ன ஆச்சி மாமா! அண்ணனுக்கு" என்று கேட்டேன். "தூக்குல தொங்க பாத்துகீராண்டா, கழி ஒடஞ்சி கூரை உய்ந்திடுச்சி, அதான் ஜொரம் வந்துட்டுகீது" என்று தழுதழுத்த குரலில் சொன்னார். மாலைவரை ஒரே சோகமயம். மாமவும் பாட்டியும் அண்ணன் பக்கத்திலேயே இருந்தார்கள்.

சாயுங்காலம் ஆறு மணி ஆனது. என் மாமா சென்று அண்ணனைத் தொட்டுப் பார்த்துவிட்டு "அம்மா! ஜொரம் கொரஞ்சி கீது! நீ அவனுக்கு ஒரு முழுங்கு காப்பி போட்டுகுடு. நான் டாக்டர்கிட்ட கூட்னுபோரன்" என்றார். சிறிது நேரம் கழித்து, என் அண்ணன் எழுந்து கட்டிலில் அமர்ந்தான். என்ன நடந்திருக்கும் என்று அவன் யோசிப்பது அவனது பார்வையிலே புரிந்தது. பாட்டி காப்பி கொண்டுவந்தாள். காப்பி குடித்துக்கொண்டே எங்களைப் பார்த்தான். "என்னடா! கழுத்து வலிக்குதா!" என்றார் மாமா. "இல்ல மாமா" என்று அழத் துவங்கினான். மாமா அவனைக் கட்டியணைத்து சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். பாட்டியும் ஒரு ஓரத்தில் நின்றவாறு விம்மிக்கொண்டிருந்தார். "எல்லாம் சரியா போச்சி! அழக்கூடாது! எழ்ந்துகோ டாக்டர்கிட்ட போலாம்" என்று அண்ணனின் கையைப் பிடித்து எழுப்பினார் மாமா. மெதுவாக எழுந்து அவனும் மாமாவுடன் கிளம்பினான். சைக்கிளின் பின்னே அமர்த்திக் கொண்டு மாமா போவதைப் பார்த்துக் கொண்டு வாசற்படியில் நான் நின்றிருந்தேன். "பாடாலப்பான்! காலைல்லிருந்து இந்த கயித்த தேடிகினு இருந்தான். இதுக்குதான்னு தெரியாம போச்சி" என்று திட்டியவாறு, மூக்கணாங்கயிற்றை சீமை எண்ணெய் ஊற்றி எரித்துக்கொண்டிருந்தார் என் பாட்டி.

அண்ணன் பத்தாம் வகுப்பு பெயில் ஆனதற்காக தற்கொலை முயற்சித்தான் என்பது பிறகு தெரியவந்தது.

**********************************************************************************

நெல்லை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால், மனமுடைந்த நெல்லை காங்கிரஸ் பிரமுகர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். - இது தட்ஸ்தமிழில் வந்த செய்தி. அதில் மானுவல் என்ற அன்பர் ஒரு பின்னூட்டம் (நகைச்சுவை) இட்டிருந்தார். 

ஒரு அலுவலகத்தில் மூன்று நண்பர்கள் மதிய உணவு இடைவேளையின் போது சபதம் எடுத்துக் கொண்டார்களாம், "நாளையும் இதே சாப்பாடு என்றால் தற்கொலை செய்து கொள்வேன்".
மறுநாள் முதலாமவர் "அதே சாப்பாடுதான் கொடுத்துவிட்டு இருக்கிறாள்" என்று சொல்லி சபதத்தை நிறைவேற்ற தற்கொலை செய்து கொண்டார்.
மற்ற இருவரும் அதே போல கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதை கேள்வி பட்ட இருவர்களுடைய மனைவிமார்கள் அழுதுக்கொண்டே, "முன்பே தெரிந்திருந்தால் இதுபோல் நடக்காமல் பார்த்திருப்பேனே ".
மூன்றாவது நபருடைய மனைவி மட்டும் அழாமல் "அவருக்கு தேவையானதை அவரே சமைத்துக்கொள்வார் நான் என்ன செய்வது ".

**********************************************************************************

Friday, May 09, 2014

கொசுவத்தி பதிவுகள்

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, என்னுடைய வகுப்பில் 120 பேர் இருந்தோம். அத்தனை பேரும் தரையில் தான் அமருவோம். வாத்தியார் கூப்பிட்டால் எழுந்து வரவும் முடியாது. அவராலும் எல்லோரையும் தாண்டி வந்து அடிக்க இயலாது. தூங்கினால் கூட தெரியாது, அவ்வளவு கூட்டமாக இருக்கும். இவ்வளவு நலன்களைத்தாண்டி ஒரே பிரச்சனை, காற்று வசதி. ஒரு ஜன்னல் தான் இருக்கும். எவனாவது குசுவிட்டால் பக்கத்தில் இருப்பவர்கள் செத்தார்கள். துர்நாற்றம் சுத்தி சுத்தி அங்கேயே இருக்கும். சில சமயம் வாத்தியரே எழுந்து திட்டிக் கொண்டே வெளியே போய்விடுவார்.


ஓலைக் கூரை என்பதால் கனமழை பெய்தால், தரை முழுக்க ஈரமாகி ஒன்று-இரண்டு நாட்களுக்கு விடுமுறை கிடைக்கும். பிறகு ஓலைக் கூரையை சீமைஓடாக மாற்றினார்கள். கத்தி போய் வால் வந்த கதையாக, வெப்பம் தாங்க முடிவதில்லை. வெள்ளாவிகுள்ள தூக்கிப் போட்டது போல இருக்கும். ஒரு வழியாக, எல்லா மாணவர்களிடம் கட்டாயமாக பணம் வசூலித்து மின்விசிறியும், குழல்விளக்கும் பொருத்தினார்கள். 

ஆறிலிருந்து ஏழாம் வகுப்பிற்குச் செல்லும்போது, வகுப்பு இரண்டாக பிரிக்கப்பட்டது. புதிதாக சேர்ந்த மாணவர்களோடு சேர்த்து 70 பேர் இருந்தோம். எங்கள் வகுப்பில் வெறும் ஆண்கள் மட்டுமே. எல்லோரும் பென்சில் (bench) அமர்ந்தோம். உயரம் பார்த்து தான் வகுப்பில் அனைவரும் அமரவைக்கப்பட்டார்கள். முன்னாடி அல்லது கடைசி பென்சில்  உட்கார்ந்தால் அடிக்கடி வாத்தியாரிடம் அடிவாங்க வேண்டுமென்பதால், எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி நடித்து நடு பென்சில் ஒரு இடம் பிடித்துவிட்டேன். ஒரு பென்சிற்கு 6 பேர். இக்கட்டாக இருக்கும். நெருக்கி நெருக்கி அமர்ந்திருப்போம்.

விதி யாரை விட்டது. வகுப்பை இரண்டாக பிரித்தும் நெரிசல் என்னை விட்டபாடில்லை. கிரிக்கெட் ஆடும்போது, படாத இடத்தில் டென்னிஸ் பந்துபட்டு எனக்கு வீங்கிவிட்டது. நானே நடக்க முடியாமல் நடந்து வந்து பொத்தினாற்போல அமர்ந்திருப்பேன். பென்சில் உள்ளவர்கள் அப்போதுதான் நெருக்கியடித்து இடித்துக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு நேரந்தான் தம்கட்டி இடிபடாமல் பார்ப்பது. அடிபட்ட விஷயத்தை சொல்லவும் முடியாது. சொன்னாலோ 'கைகொட்டிச் சிரிப்பார்கள் ஊரார்கள்'. இடியிலிருந்தும் தப்ப முடியாது. பேசாமல் எழுந்துபோய் தரையில் அமர்ந்துவிடுவேன்.

பள்ளி வகுப்புகளில் கிளாஸ் லீடர் என்றொரு பதவி உண்டு. கொஞ்சம் உயரமானவர்களைத் தான் கிளாஸ் லீடர்களாக நியமிப்பார்கள். கலை என்ற பெயரில் ஒரு பெண், உயரமாக இருப்பாள். நன்றாக படிப்பாள். லீடர் வேலை என்னவென்றால், சாக்பீஸ்-டஸ்டர் தினமும் கொண்டுபோய் கொண்டு வரவேண்டும். மாணவர்களிடம் பணம் சேகரித்து அனைவருக்கும் கட்டுரை நோட்டுப் புத்தகம், வெள்ளைத்தாட்கள் வாங்கி வந்து கொடுக்க வேண்டும் (இதில்  கடைக்காரரிடம் கொஞ்சம் கமிஷனும் கிடைக்கும்). வாத்தியார் இல்லாத சமயங்களில் பேசுவோர் பெயரை எழுதிவைக்க வேண்டும். அதை வாரம் ஒருமுறை வாத்தியார் பார்வையிடுவார். இதற்கென்று ஒரு நோட்டுப்புத்தகம் வேறு இருக்கும். நான் என் ஓட்டைவாயை வைத்துக் கொண்டு எப்போதும் சும்மா இருப்பதில்லை. பேசிக்கொண்டே இருப்பேன். தினமும் முதல் பெயராக என் பெயர் நோட்டுப்புத்தகத்தில் வந்துவிடும். நானும் இதெல்லாம் கண்டுகொள்வதாக இல்லை. பெயர் ஏற்கனவே எழுதிவிட்டாள் தானே என்று இன்னும் சத்தமாக பேசிக்கொண்டிருப்பேன். ஒருநாள் நோட்டு முருகேச வாத்தியாரிடம் போனது. கலையும் என்னைப் பற்றியும் என் பேச்சாற்றலை பற்றியும் விலாவாரியாக சொல்லிவிட்டாள். வாத்தியார் என்னைக் கூப்பிட்டார்.
வாத்தியார்: ஏன்டா! இப்படித்தான் வகுப்புல பேசிகிட்டே இருக்கியா!
நான்: இல்ல சார்! நான் ஒருமுறை தான் சார் பேசினேன்
கலை: இல்ல சார்! அவன் சொல்லச்சொல்ல பேசிட்ட இருந்தான் சார்!
நான்: இல்ல சார்! பொய் சார்!
வாத்தியார்: சரி! அடுத்தமுறை எத்தனை தடவை பேசுரானோ, அத்தனைமுறை அவன் பேரை எழுது.
கலை நோட்டை வாங்கிக் கொண்டு போய்விட்டாள்.
முருகேச வாத்தியார் என் தந்தையின் பால்ய நண்பர் என்பதால், எப்போதும் என்னை அடித்ததில்லை. "அறிவுகெட்டவனே! உங்கப்பனும் இப்படித்தான்" என்று செல்லமாக திட்டி அனுப்பிவிடுவார்.


மறுநாள்....
நான் வழக்கம்போல வாத்தியார் இல்லாத நேரம் தொனத் தொனவென பேசிக் கொண்டே இருந்தேன். இரண்டு நாள் இப்படியே போனது. மூன்றாவது நாள், நானும் என் பேச்சை துவங்கி இருந்தேன். சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் படத்தைப் பார்த்து எங்க தமிழ்வாத்தியார் பேசினால் எப்படி இருக்கும் என்று அவரைபோல பக்கத்தில் மாணவர்களிடம் செய்து காட்டிக் கொண்டிருந்தேன்.

கலை என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவள் வந்தவுடன் என் சேட்டை நிறுத்திவிட்டு அமைதியாகிவிட்டேன். வந்தவள் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டு "இரண்டு நாளாக உன்னுடைய பெயரை ராமஜெயம் எழுதுவது போல தினமும் எழுதிக்கொண்டிருக்கிறேன், உன் பேச்சை நிறுத்தவே மாட்டியா" சொன்னாள். எனக்கு அவள் சொன்னதில் என்ன தோணியதோ அடக்கமுடியாத சிரிப்பு. அவளும் சிரித்தவாறே போய்விட்டாள். அதன்பிறகு அவள் என்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காக அசட்டுதனமாக எதாவது செய்துகொண்டு இருப்பேன். நண்பன் லோகேஷ் மட்டும் நக்கலாக கேட்பான் "ஏண்டா! அந்தப் பொண்ணு உயரம் என்ன. உன் உயரம் என்ன. உனக்கெல்லாம் இது தேவையா!".

முன்பே சொன்னது போல, ஏழாவதில் என்னை வேறு வகுப்பில் போட்டுவிட்டார்கள். பிறகு கலையிடம் நான் பேசியதே இல்லை, வெறும் சிரிப்போடு மட்டுமே எங்கள் நட்புணர்வு இருந்தது. சில வருடங்கள் கழிந்தது. பத்தாவது தேர்வு முடிந்து ப்ளஸ் ஒன் சேர்வதற்கான விண்ணப்பத்துடன் பள்ளி அலுவலகத்தின் முன் நின்றிருந்தேன். மற்ற மாணவ- மாணவியர்களும் நின்றிருந்தார்கள். மாணவிகள் எல்லோரும் ஒவ்வொருவராக விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டு போகிறார்கள். எனக்கு கலையும் கணக்கு குருப் எடுத்து என்னோடு ஒரே வகுப்பில் படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் கலை மட்டும் கண்ணில் தென்படவில்லை. யோசித்து யோசித்து, தயங்கியவாறு தனலட்சுமியிடம் கேட்டேன் "கலை வரவில்லையா? வேறெதாவது பள்ளியில் சேரப்போகிறாளா?" என்று. "கலைக்கு திருமணமாகி பெங்களூர் போய்விட்டாள்" என்றாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது,

அப்போது புரியவில்லை நான் ஏன் அதிர்ச்சி ஆனேன் என்று. பிறகு புரிந்தது...

என்னமோ இது இன்பாங்களே! அதான்... அதான்பா...சே! அந்த...இது! ....ஆங்! இன்-பேக்-சிச்சுவேஷன்.

Thursday, May 08, 2014

எனக்குப் பிடித்த பாடல்கள்

பட்டிக்காடா பட்டணமா படத்தில் நாயகியைப் பார்த்து நாயகன் சந்தோசமாக பாடிய ஒரு பாடல் "என்னடி ராக்கம்மா". படத்தின் பிற்பாதியில் சோகமான பாடலாக வருகிறது. எம்.எஸ்.வி திருமணத்தில் வாசிக்கும் நாதஸ்வரத்தையும் கொட்டுமேளத்தையும் சோகப்பாடலுக்காக பயன்படுத்தியிருப்பது ஒரு புதுமை. பாட்டில் கூட ஒரு வரி "கல்யாண மேளங்கள் மணியோசை என் கவலைக்கு தாளமடி" என்று வரும். ஒளிப்பதிவு கேமிராக் கோணங்களும் கொஞ்சம் வித்யாசமானதாக இருக்கும். வழக்கம்போல, டி.எம்.எஸ் அவர்களின் அற்புதக் குரலில்.



ஹரிதாஸ், ரத்தக்கண்ணீர் படங்களில் வருவது போல அருணகிரிநாதர் படத்திலும் ஒரு ட்விஸ்ட், சிற்றின்பமே பெரிதென்று வாழும் அருணகிரி தன் தவற்றை உணர்ந்து மனம் நொந்து பாடும் பாடல் "எத்தனையோ பிறவி பெற்று". டி.எம்.எஸ் அவர்களே நடித்ததாலோ என்னமோ கொஞ்சம் மிகை தெரியும். ஆனாலும், பாடல் மாசுமறுவற்றது.



Oliver Twist கதையின் தழுவலான அனாதை ஆனந்தன் என்ற படத்தின் துவக்கத்தில் ஒரு பாடல். "அழைத்தவர் குரலுக்கு வருவேன்" என்று துவங்கும் இப்பாடலை எழுதியது கண்ணதாசன். சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக்குரலில் இப்பாடலை கேட்கும்போது, தெய்வபக்தியுடையோருக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தும். அது கவியரசின் தமிழாலா அல்லது கே.வி.எம்மின் இசையாலா தெரியவில்லை. (This song is dedicated to Bhagavathar Jeyadevdas).



அவன் தான் மனிதன் என்ற  படத்திலிருந்து இளமைத்துள்ளலுடன் ஒரு பாடல்.  "ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில்" என்று துவங்கும் பாடல். இப்படத்தில் வேறு பல பாடல்கள் எனக்குப் பிடித்திருப்பினும், இப்பாடலின் வேகம், வரிகள் ரசிக்க வைக்கின்றன. இதனுடன் 70களில் சிங்கபூரின் அழகு. நடிகர் திலகத்தின் அட்டகாசமான ஸ்டைல்.



சங்கே முழங்கு படத்திலிருந்து "நாலுபேருக்கு நன்றி" என்று துவங்கும் பாடல். இப்படி எளிமையான வரிகளில் தத்துவங்களை அள்ளிவீச கவியரசரால் மட்டுமே இயலும். வலியை உணர்ந்தவர்களின் கண்களில் நீரை வரவழைக்கும்.


ராஜராஜன் படத்திலிருந்து "இதயம் தன்னையே" என்ற பாடல். கே.வி.மகாதேவன் இசையில். வழக்கம்போல சுசீலா, ஜானகி என்றில்லாமல் ஒரு புதிய குரல் எ.பி.கோமளா. மன அழுத்தம் குறைக்க நினைப்பவர்கள் இப்பாடலை முயற்சித்துப் பாருங்கள்.



ப்ரேமபாசம் படத்திலிருந்து "அவனல்லால் புவிமேலே" என்ற பாடல்.  பாரசீகபாணி இசையில் அமைந்த அருமையான பாடல். பி.பி.சீனிவாசன் குரலில்.



Wednesday, May 07, 2014

பாவம் ரொம்ப ஏழைங்க

சென்னை குண்டுவெடிப்பில் ஈடுபட்டோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - இல.கணேசன்

நரேந்திரமோடி நேற்று நெல்லூர், குண்டூர், விசாகப்பட்டினத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார். எனவே அவரை மையமாக வைத்து இந்த சதி செயலை திட்டமிட்டு செய்து இருக்கிறார்கள் - பொன்.ராதாகிஷ்ணன்

# இவங்கெல்லாம் யாரு, தமிழகத்தில் இத்தனைநாள் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். தேர்தல் கூட முடிந்துவிட்டதே, பிறகு எதற்கு இவ்வறிக்கை. இலவு காத்த கணேசனும், போனியாகாத ரா.கியும் தேமுதிக மீது சவாரி செய்தாவது வெற்றிபெற பார்க்கிறார்கள். மே 16 தெரியும் இவங்க வண்டவாளம்.



நான் பிற்படுத்தப்பட்டவன், ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவர்கள் என்னை  இது போன்று வசைபாடுகின்றனர் - மோடி

# பரவாயில்லை நல்லா முயற்சி செய்ராப்ள! ஆனா கலைஞர் அளவுக்கு இல்லை. 

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று, 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் 424 பேருக்கு இந்தியா தடை விதித்துள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தாமதப்படுத்தவே உள்நோக்கத்துடன் வரிசை வரிசையாக வாய்தாக்கள் பெறப் பட்டன என்று கருணாநிதி கூறியுள்ளார்.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவின் மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

# ஆகா! எவ்வளவு நல்ல உருப்படியான காரியங்கள் நம்ம தலைவர் செய்து வருகிறார்.  இதுவே ஆட்சியில் இருந்தால்...



இப்படி எதாவது ஒரு படத்தின் துவக்க விழா, நூறாவது நாள் விழா, படப்பிடிப்பு, பாடாவதி வசனம் என்றோ, கமலின் மொக்கைப் படத்தைப் பார்த்தோ, ரஜினியின் அட்டுப் படத்தை ரசித்தோ பொழுதைப் போக்கி இருப்பார்.

‘ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு தொடர் கதை’  என குறிப்பிட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, அது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். - See more at: http://newsalai.com/news1/2014/05/8874.html#sthash.qAqYMtcZ.dpuf
என்ன கலைஞரையே குறை சொல்கிறீர்கள். ஜெவைப் பற்றி எதுவும் சொல்வதில்லை என்று சிலர் ஆதங்கப்படுகின்றனர். நான் என்னங்க பண்ணட்டும், அந்தம்மா கோட்டைக்கு வந்தால் தானே, செய்தித்தாளில் எதாவது போடுவாங்க. கொடாநாட்டிலேயே இருக்காங்க. ஒரு மாசம் தேர்தல் பிரசாரம் செய்துவிட்டு, ஓர் ஆண்டு ஓய்வில் இருப்பாங்க போல. 

மறுபடியும் செய்வீர்களா! செய்வீர்களா! 


 *********************************************************************************


உத்திரபிரதேசம், பீகாரில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டுசெல்லும் ஊழியர்கள் (நன்றி: தினமலர்)

# நான் எதோ ஊருக்கு போறாங்கனு இல்ல நெனச்சேன்



# பாவம் ரொம்ப ஏழைங்க!

*********************************************************************************

புனைப்பெயரில் எழுதுபவர்களாக இருப்பின் சில நன்மைகள் உண்டு. நாம் நினைப்பதை பேதம் பார்க்காமல் வெளிப்படையாக சொல்லலாம். ஆனால் முகமூடி இல்லாமல் எழுதும்போது இச்சுதந்திரம் இருப்பதில்லை. பதிவிடும்போது கூட பார்த்து பார்த்துதான் போட வேண்டும். யார் மனதாவது புண்படுமோ, யாராவது கோபிப்பார்களோ என்றெல்லாம் பார்க்கவேண்டும். 

பதிவுலகில் அனானிகளால் தொல்லை என்று சிலர் அங்கலாய்ப்பது உண்டு. என்னைப் பொருத்தவரை அனானிகளில் பலர் தொல்லை தருபவர்களாக இருப்பதில்லை. ஆக்கப்பூர்வமான கருத்துக்களை சொல்பவர்கள் உண்டு. முன்பு அனானிகளாக இருந்த பலர் இன்று சொந்தமாக பதிவுகள் தொடங்கி பதிவிடுகிறார்கள். நானும் அனானியாகவே தொடங்கினேன் (9 வருடங்களுக்கு முன்). பதிவர்களுடன் அதிகம் பழக்கமில்லை. பதிவர்கள் சந்திப்பிற்கு ஓரிருமுறை போய் இருக்கிறேன். யாரிடமும் நான் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதில்லை. ஒரு சில பதிவர்களுக்கு மட்டும் என்னை தனிப்பட்ட முறையில் தெரியும். அப்போது பரபரப்பாக பதிவெழுதியவர்கள், இப்போது எழுதுவதில்லை. 

ஆனால் இன்று அப்படியில்லை, கூகில் ப்ளஸ் வந்துவிட்டது. ஜிமெயில் ஐடி இருந்தால் போதும், அனானியாக இல்லாமல் பெயருடன் பின்னூட்டமிடலாம். அப்படி என்ன பிரச்சனை அனானிகளால். ஒரு சிலர் அனானியாக கிடைக்கும் கருத்து சுதந்திரத்தை அடுத்தவனை அல்லது மாற்றுக் கருத்து கொண்டோரை வைவதற்கு நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இன்னும் ஒரு சில பதிவர்கள் வேறு பெயரில் வந்து தருமாறாக பேசுவார்கள். உதாரணமாக, நமக்கு அறிமுகமான பதிவரே தங்களுடைய பெயரில் கருத்துக்களை சொல்ல பயந்து அல்லது கூச்சப்பட்டு வேறு பெயரில் வந்து வயது வித்யாசமில்லாமல் தகாத வார்த்தைகளைச் சொல்வார்கள் அல்லது திட்டுவார்கள். ஆனால் அப்படி பின்னூட்டமிடும்போது பலரால் வேறு பெயருக்கேற்ப தங்களுடைய எழுதும் முறையை மாற்றிக் கொள்ள இயலுவதில்லை. வடிவேலு போல கொண்டையை மறைக்காமல் விட்டுவிடுவார்கள். ஏற்கனவே அப்படி சிலர் சிக்கியும் இருக்கிறார்கள்.

விருப்பம் இருந்தால் நாம் அனானிகளை அனுமதிக்கலாம். இல்லாவிடில் அந்த ஆப்சனை தூக்கிவிடலாம். Name/Url ஆப்சன் கொடுத்தால் சிலர் அதை பயன்படுத்தி வேறொருவர் பெயரில் பின்னூட்டமிட வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படி பின்னூட்டமிட்டாலும், முயற்சி செய்தால் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் இவர்கள் கம்ப்யுட்டர் ஐபியையும் பெறமுடியும். 

*********************************************************************************

‘ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு தொடர் கதை’  என குறிப்பிட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, அது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். - See more at: http://newsalai.com/news1/2014/05/8874.html#sthash.qAqYMtcZ.dpuf
‘ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு தொடர் கதை’  என குறிப்பிட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, அது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். - See more at: http://newsalai.com/news1/2014/05/8874.html#sthash.qAqYMtcZ.dpuf

Wednesday, February 26, 2014

உள்ளதைச் சொல்வேன் (25/02/2014)

பிரதமரைக் கொன்றவர்களை தண்டிக்காமல் விடுவதா?

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தொடர்புடைய நபர்களை தமிழக அரசு விடுதலை செய்ய முயற்சி எடுத்துள்ளது வரவேற்கதக்கது. ஜெயலலிதா எடுத்த முடிவு அரசியல் காரணங்களுக்காக இருக்கலாம். ஆனால் இப்போது அது முக்கியமல்ல. மத்தியில் ஆளும் காங்கிரஸ் மட்டுமல்லாமல், பல  வட இந்திய ஊடகங்கள் வழக்கம்போல "ராஜீவ் காந்தி கொலையாளிகள்" என்றே பிரசாரம் செய்து வருகிறது. ராஜீவ் கொலைவழக்கில் இவர்கள் யாரும் நேரடியாக தொடர்புடையவர்கள் அல்ல. கொலையில் நேரடியாக தொடர்புடையவர்கள் அனைவரும் சிவராசனோடு இறந்துவிட்டார்கள். கொலைக்குக் காரணமாக இருந்த பிரபாகரனும், பொட்டுவும் போரில் இறந்துவிட்டார்கள். எப்படி இருப்பினும் தண்டனையாக 23 வருடம் சிறையில் இருந்துவிட்டார்கள். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கை சிறையிலேயே முடிந்துவிட்டது. இனிமேலாவது அவர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும். இனியும்  இவர்களின் தண்டனையை நீட்டிப்பது தேவையற்றது. சமீபத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக ராகுல்காந்தி கருத்து தெரிவித்திருந்தார். "பிரதமரைக் கொன்றவர்களை தண்டிக்காமல் விடுவதா?" என்று கூறியிருந்தார்.


ஆயிரக்கணக்கான தமிழர்கள், சீக்கியர்கள் சாவிற்கும் காரணமான ராஜீவ் காந்தியை தண்டிக்க வேண்டுமென்றால், அவருடைய குடும்பத்தின் நான்கு தலைமுறைகள் (ராகுலையும் சேர்த்து) தூக்கில் தொங்க வேண்டும்.

*********************************************************************************

YOUTUBE-ல் ரஜினி நடித்த எதோ ஒரு திரைப்படத்தின் படத்துண்டு. ரஜினி ரசிகர் ஒருவர் "தலைவர் தலைவர்தான்! என்னா ஸ்டைல்!" என்று கருத்திட்டு இருந்தார். அதற்கு பதிலாக விடுதலைப்புலி கொடியின் புகைப்படம் போட்ட ஒருவர் "தலைவர் என்றால் தேசியத்தலைவர் பிரபாகரன் தான். கண்டவனெல்லாம் தலைவரில்லை" என்று கருத்திட்டு இருந்தார். பிறகு அவ்விவாதம் சச்சரவாக மாறி, கண்ணாபின்னாவென்று தனிப்பட்டமுறையில் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு ஒரு சந்தேகம். நான் இன்னாரைத்தான் தலைவர் என்று சொல்லவேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்? நான் யாரை வேண்டுமானாலும் தலைவர் என்று அழைப்பேன். ஆட்டோ ஓட்டுனரைக் கூப்பிடுவேன், டீக்கடைக்காரரைக் கூறுவேன், எங்கள் சந்தியில் இருக்கும் பிச்சைக்காரரிடம் "என்ன தலைவரே! இன்னைக்கு வசூல் குறைவாக இருக்கே!" என்று கேட்பேன்.

**********************************************************************************

இப்புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் என்று தெரிகிறதா...!

(1984-ல் ஈழ தேசிய விடுதலை முன்னணி (TNLF) என்று டெலோ, ஈ பி ஆர் எல் எஃப், ஈரோஸ் இயக்கங்களின் கூட்டமைப்பாகத் துவக்கப்பட்டது. 1985-ல் விடுதலைப்புலிகள் இயக்கமும்  பிரபாகரன் தலைமையில் இணைந்து கொண்டது. ஒற்றுமையாக களத்தில் நிற்போம் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள் தலைவர்கள், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்)

1.சிறீ சபாரத்தினம் (டெலோ இயக்கத் தலைவர் - 1986-ல் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்)
2.பத்மநாபா (ஈ பி ஆர் எல் எஃப் இயக்கத் தலைவர் - 1990-ல் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்)
4.பாலகுமாரன் (ஈரோஸ் தலைவர் - மேலே உள்ளவர்களின் நிலைமை வேண்டாமென்று (வேறுவழியின்றி) விடுதலைப் புலிகளோடு சேர்ந்து கொண்டவர்)
3.மேதகு. பிரபாகரன் (ஈழவிடுதலைக்காக போராடி(?) 2009-ல் உயிர் நீத்தார்)

 
***********************************************************************************

நான் ஒரு ராசியில்லா ராஜா 


மறைந்த பாடகர் டி எம் சௌந்திரராஜன் சிவாஜி கணேசன், எம் ஜி ஆர், ஜெமினி, எஸ் எஸ் ஆர் , ஜெய்சங்கர், எ வி எம்ராஜன், ரவிசந்திரன் என அனைவருக்கும் பொருந்தக் கூடிய அளவிற்கு 1950, 60, 70களில் பல பாடல்களைப் பாடி சாதனை படைத்தவர். தனிப்பாடல்களாகவும் பல பாடியுள்ளார். இருப்பினும் பல சமயம் அவர் கூறும் பதில்கள் எரிச்சலைக் கொடுக்கக் கூடியவை. பல ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியில் அவருடைய பேட்டியில் அவர் கூறிய சில கருத்துகள்.
  • …சிவாஜி கணேசன், எம் ஜி ஆர் புகழடைந்ததற்கு என் பாடல்களே காரணம்.
  • …என்னுடைய தாய்மொழியான சௌராஷ்ட்டிரம் பேசுவதால்தான் பாடலை நன்றாக உச்சரிக்கிறேன். (சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதனை விடவா இவர் தமிழை சிறப்பாக உச்சரிக்கிறார்)
  • …பெண்ணை போன்று பாவணை செய்து (நடித்து காட்டுகிறார்) குழைந்து குழைந்து பேசுவாரே ஒரு நடிகர் (டி ராஜேந்தர் தான் அப்பெண்தன்மையுள்ள நடிகர்), அவர் படத்தில் பாடினேன். அதோடு எனக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விட்டது. அப்பாடலை கேட்டுவிட்டு ஏன் அதைப் பாடினாய் என பலர் என்னை கடிந்து கொண்டனர்.  
டி எம் எஸ் குறிப்பிடுவது ஒரு தலை ராகம் படத்தில் வரும் நான் ஒரு ராசியில்லா ராஜா, என் கதை முடியும் நேரமிது போன்ற சோக பாடல்களை. எல்லோரும் கடிந்து கொண்டனர் என்றால், ஏன் அதற்கு அடுத்த ஆண்டு வந்த ரயில் பயணங்களில் படத்திலும் நூலும் இல்லை வாலும் இல்லை என்ற பாடலைப் பாடினார் என்று தெரியவில்லை. எல்லா கலைஞர்களுக்கு ஒரு காலத்திற்குமேல் ஒரு வீழ்ச்சி என்பது கட்டாயம் இருக்கவே செய்யும், அதை உணராவிட்டால் இப்படி புலம்பக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
…**********************************************************************************
'ஜால்ரா'முத்து


இளையராஜாவை புகழ்வதாக இருந்தாலும் சரி, ரகுமானை புகழ்வதாக இருந்தாலும் சரி, அவரவர்களின் ரசிகசிகாமணிகள் எடுத்துவிடும் ஒரே வாசகம்.

இந்திப் பாடலில் காதை வைத்திருந்த தமிழனின் காதுகளை தமிழ்ப் பாடல்களைக் கேட்க வைத்தவர் இசைஞானி.

இந்திப் பாடலில் காதை வைத்திருக்கும் இந்திக்காரனையும், ஆங்கிலப் பாடலில் காதை வைத்திருந்த ஆங்கிலேயனையும் தமிழ்ப் பாடலைக் கேட்க வைத்தவர் இசைப்புயல். 

- இவை ஐஸுக்கே ஐஸ் வைக்கும் வைரமுத்துவின் ஜால்ரா வரிகள்.
வைரமுத்து இளையராஜாவையோ, ரகுமானையோ காக்கா பிடிப்பதில் தவறில்லை. புதுப்புதுக் கதைகளை எதற்கு உருவாக்க வேண்டும். இளையராஜாவின் இசை என்கிற சாகாப்தம் 70களின் இறுதியில் தொடங்கி 80களில் உச்சத்தை தொட்டது. இளையராஜா அவருக்கு முந்தையவர்களிடமிருந்து விலகி வித்யாசமான இசையால் மக்களைக் கவர்ந்தார். பாடல்களில் இசையின் ஆதிக்கம் அதிகரித்தது. சரி! இளையராஜாவின் வருகைக்கு முன்னர் தமிழர்கள் இந்திப் பாடலை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தனரா? இல்லை அதற்கு முன் யாரும் கேட்கக்கூடிய தரமான பாடல்களைக் கொடுக்கவில்லையா? முதலில் இசைக்கு மொழி ஏது. யார் எந்த மொழிப் பாடலை வேண்டுமானாலும் கேட்கலாம். இரண்டாவது தமிழகத்தில் 80களின் துவக்கத்தில் தான் கேசட்கள் (கிட்டத்தட்ட 20 பாடல்கள் பதிவு செய்யலாம்) பெருமளவில் புழங்கத் தொடங்கின. எல்லா தரப்பு மக்களும் பாடல்களைப் பதிவு செய்து கேட்கத் துவங்கனார்கள். அதற்குமுன் பெரும்பாலான மக்கள் வானொலியில் மட்டுமே பாடல்களைக் கேட்டு வந்தனர். அக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள், தமிழ் மட்டுமின்றி இசை இன்பத்திற்காக மொழி புரியாவிடினும் தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள  பாடல்களைக் கேட்பார்கள். இதனை வைத்து தமிழர்கள் ஏதோ ஹிந்திமொழிப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது ரொம்ப ஓவர்.

ஒருவேளை ரகுமான் விஷயத்தில் பாதி உண்மை இருக்கலாம். இந்தி பேசுபவர்களையும் தமிழ் பாடல்களை கேட்க வைத்தார். இந்திய சினிமாவில் அதுவரை இல்லாத ஒரு நுணுக்கமான இசை அனுபவத்தை ரகுமான் 90களில் துவங்கி வைத்தார். 90களில் வெளியான ரோஜா, ஜென்டில்மேன், பம்பாய், காதலன் பாடல்களை வட இந்தியவில் பரவலாக ரசிகர்கள் வரவேற்பைப் பெற்றது. மொழிபெயர்க்கப்பட்டு ஹிந்திசேனல்களில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் அவரது இசையை கேட்கும்போதெல்லாம் 'பழைய நெனப்புடா பேராண்டி' என்பதாகவே இருக்கிறது. (வெளிநாட்டவர்கள் பாலிவுட்டை மட்டுமே இந்திய சினிமாவாக பார்க்கிறார்கள். ரகுமான் பாடல்கள் மட்டுமல்ல பல பாலிவுட் பாடல், ஆடல்களையும் பார்க்கிறார்கள். பார்த்துவிட்டு, இதுதான் இந்தியாவின் சங்கீதம், இதுதான் இந்தியாவின் நடனம் என முடிவு செய்துகொள்கிறார்கள்)

தமிழ் கூறும் நல்லுலகில் "ஜிங்சாக் போடும் கவிஞர்களின் பேரரசர்" என்று ஒரு பட்டம் கொடுத்தால், அதற்கு வைரமுத்து மட்டுமே முழுத்தகுதியுடையவர். வெள்ளை ஜிப்பாவோடு, விரல் சொடுக்கி, ஆள்காட்டி விரலை நீட்டி, 90 டிகிரியில் கண்ணை வைத்துக்கொண்டு இவர் விடும் பீலா இருக்கிறதே! (இந்த வயதிலும் கலைஞரையே புல்லரிக்க வைக்கிறார் என்றால் பாருங்களேன்.) எவனையாவது காக்கா பிடிக்க வேண்டுமென்றால் போதும் "இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள், ---- கழுவியவர்கள்" என ஜால்ரா சத்தம் காது கிழியும்.

…*******************************************************************************

Wednesday, February 19, 2014

உள்ளதைச் சொல்வேன் (19/02/2014)

குழாயடிச்சண்டை

என் சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு முன்னாடி ஒரு பொதுக்குழாய் இருக்கும். குழாயில் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அங்கு பெண்கள் சண்டை இடுவது மட்டும் தினந்தோறும் நடக்கும். பள்ளிக்கு செல்லும்முன் சற்றுநேரம் குழாயடிச்சண்டையைப் பார்த்துவிட்டு தான் போவேன். தமிழகராதியில் இல்லாத பல நல்ல "கெட்ட" வார்த்தைகளை அங்குதான் பயின்றேன். சாயுங்காலம் ஆறு ஏழு மணிக்கு பெண்கள் நான்கைந்து பேர் வாசர்படியில் அமர்ந்து கதை பேசுவார்கள். சினிமா, அக்கம்பக்கத்தின் காதல், கள்ளத்தொடர்பு, சமையல், ஆன்மீகம், அமானுஷ்யம் எனப் பல விஷயங்கள் பற்றி பேச்சுக்கள் வரும். நல்லா பொழுது போகும். எட்டு ஒன்பது மணிக்குமேல் சாப்பாட்டை முடித்து வெளியில் வந்து அமர்ந்தால், ஏ1 சாரயக்கடையில் குடித்துவிட்டு நடுரோட்டில் நின்று கண்ணதாசன் பாட்டை எவனாவது சத்தமாக பாடிக்கொண்டிருப்பான். கொஞ்சநேரத்தில் அவன் பொண்டாட்டியோ பசங்களோ இரண்டு போட்டு இழுத்துக்கொண்டு போவார்கள். இதை நான் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், சமூக வலைத் தளங்களான முகநூல், ப்ளாக், கூகிள்ப்ளஸ், ட்விட்டர் என பலவற்றில் குழாயடிச்சண்டை, கிசுகிசு, சரக்கடித்தவன் உளறல் போன்றவைகளைத் தான் பார்க்க நேரிடுகிறது. விஞ்ஞானம் முன்னேறினாலும் நம்ம ஜனங்கள் மட்டும் அப்படியே தான் இருக்கிறார்கள்.  போனவாரம் யுவன் என்கிற உலகமகா இசையமைப்பாளர் இஸ்லாம் மாறிவிட்டார் என அதைப்பற்றி ஒரு அக்கபோரு. வார கடைசியில் பாலுமகேந்திரா ஷோபாவை ஏமாற்றிக் கொன்றுவிட்டார் என்று முப்பது வருடத்திற்கு முன்னாடி செத்துப்போன ஷோபாவைப் பற்றி ஒப்பாரி. இப்போது அடுத்துவரப்போவது, தூக்குதண்டனையில் இருந்து தப்பித்த மூன்று தியாகிகள் பற்றி இருக்கும் (இப்போதே துவங்கியாயிற்று என நினைக்கிறேன்). இவனுங்கதான் இப்படி என்று ஆங்கில செய்தி வாசிக்கப் போனால், அங்கு சிங்கம் பலமானதா? கழுதைகொறத்தி வலிமையானதா? என பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார்கள். சரி! எதாவது யூட்யுபிள் பார்க்கலாம் என்று போனால், சாதி பெருமை பேசிக்கொண்டு ரெண்டு குருப் திட்டிக்கொண்டிருந்தார்கள். அடச்சே!!!

*******************************************************************************

சங்ககால தமிழர்களின் "ஊன்சோறு"

சங்ககால தமிழர்களின் "ஊன்சோறு" பற்றி வரலாறு.காம் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். நாம் இன்று அதிகமாக பயன்படுத்தும் மிளகாய், தக்காளி போன்றவற்றை பண்டைய தமிழர்கள் அறிந்ததில்லை. நாமும் செய்து தான் பார்ப்போமே என்று முயற்சித்தேன். ஊன்சோறு அருமை.

பன்றி இறைச்சி - 500 கிராம்
கடுகு, பெருஞ்சீரகம், …மிளகு - தேவைக்கேற்ற அளவு
உப்பு - தேவைக்கேற்ற அளவு
மஞ்சள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கிராம்பு - நான்கைந்து
பட்டை - ஒன்று
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - மூன்று பல்
கறுவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
  • …அரிசியை கழுவி சிறிது சேரம் ஊற வைக்கவும்.
  • இஞ்சி, பூண்டு, கிராம்பு, மிளகு இவற்றை உரலில் இட்டு நன்றாக இடித்துக்கொள்ளவும்.
  • வானலியில் எண்ணெய் சூடானபின், பட்டை, பெருஞ்சீரகம் மற்றும் கடுகைப் போடவும். கடுகு பொறிந்தவுடன், கறுவேப்பிலை, இடித்து வைத்திருக்கும் கலவையை இட்டு வதக்கவும். சிறிது வதங்கியபின் பன்றி இரைச்சி, மஞ்சள், உப்பு போன்றவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். 
  • சிறிது நேரத்தில் பன்றி இறைச்சி நீர்விடத்துவங்கும். இன்னும் சற்று நேரத்தில் ஊறவைத்த அரிசியைப் போட்டு நன்கு கிளரவும். கேவையான அளவு தண்ணீர் சேர்த்து (பாஸ்மதி அரிசியைப் பயன்படுத்தினால் 1:1 அளவில் நீர் சேர்ப்பேன்) மிதமான சூட்டில் 10 - 12 நிமிடங்கள் வேகவிடவேண்டும். 
  • நறுக்கிய கொத்துமல்லியை தூவி பரிமாறவும்.
  • பன்றி இறைச்சி பயன்படுத்தினால் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். (மாடு போல அல்லாமல் பன்றி இறைச்சிக்காவே வளர்க்கப்படுவது. சங்க காலத்தில் பன்றியை இறைச்சிக்காக அதிகமாக பாவித்தனர் தமிழர்கள்).

பதிவுலகில் பலர் ஓட்டலில் சாப்பிடுவதை சிலாகித்து பதிவிடுகிறார்கள். தனியாகவோ குடும்பமாகவோ சென்று சாப்பிடுவதாக சொல்கிறார்கள். அதை மற்றவருக்கும் பரிந்துரை செய்கிறார்கள். வகையாக சாப்பிட்டுவிட்டு தொகைதொகையாக கதை எழுதுகிறார்கள். இதில் ஒருவர் இக்கொடுமையை புத்தகமே போடுகிறார்.

முடிந்தவரை வீட்டு உணவு சாப்பிட பாருங்கள். அப்படி முடியாதபட்சத்தில் வெளியில் நல்ல உணவாக சாப்பிடுங்கள். குறிப்பாக வீட்டில் உள்ள வாண்டுகளுக்கு ஓட்டல் உணவை அறிமுகப்படுத்தாதீர்கள், உங்களுக்கு புண்ணியமாக போகும். இதை அறிவுரையாக எடுத்துக்கொளாதீர்கள்: ஒரு வேண்டுகோள் அவ்வளவே.


**********************************************************************************

காபி...நரசூஸ்...

சென்னை தூர்தர்ஷனில் வந்த பழைய விளம்பரங்களைப் பார்ப்பதில் எனக்கு ஒரு அலாதி சுகம். அதிலும் அப்போது வந்த நரசுஸ் காபி விளம்பரம் மிகவும் பிரபல்யம். YOUTUBE-யிருந்து உங்களுக்காக.

தேங்காய் சீனிவாசன் மற்றும் மனோரமா



…உசிலைமணி



Monday, February 10, 2014

உள்ளதைச் சொல்வேன் (09/02/2014)

ஜி.ராமனாதன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வனாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, சங்கர்-கணேஷ், சந்திரபோஸ், தேவா, ராஜ்குமார், ரகுமான் என பலரின் பாடல்களை ரசிப்பவன் நான். இளையராஜா பாடல் என்றால் எனக்கு விருப்பம். அதற்காக எனக்கு அவருடைய இசைமீது வெறியோ பக்தியோ இல்லை. பிடிக்கும் அவ்வளவே. இளையராஜா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பிறந்தவன் என்பதால் அவருடைய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்கு காரணம் அவருடைய பாடல்கள் என்னுடைய சிறுவயது நினைவுகளை மீட்டெடுப்பவை. Nostalgia. தற்போது போன வருடம்  கிங் ஆப் கிங்ஸ் என்று மலேசியாவில் நிகழ்ந்து முடிந்த இசைநிகழ்ச்சியை காண முடிந்தது. அதைபற்றி எனது சில எண்ணங்கள்.


  • கிங் ஆப் கிங்ஸ் என்றால் ஏசுவை குறிக்கும் வாக்கியம். ஒருவேளை ராஜாதிராஜா என்பதை இப்படி மொழிபெயர்த்திருப்பார்களோ? எப்படியோ போகட்டும்.  பாலு எப்படி இந்த வயதிலும் இளமை பொங்க படுகிறார் என்று தெரியவில்லை. பாலு...பாலு தான். அவர் பாடியதை மிகவும் ரசித்தேன்.…
  • ஜனனி ஜனனி பாடல் உருவான விதம் பற்றி இளையராஜா உருகிஉருகி சொல்லிக்கொண்டிருந்தார். அப்பாடல் ஒன்றும் அப்படி உருக்கமான பாடல் அன்று. ஆதிசங்கரர் இளையராஜாவின் பாடலில் வந்ததைப் பற்றி  அவர் கூறும்போது, எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. "குருவே! இன்றைக்கு பாடலை கம்போஸ் செய்கிறேன். நீங்கள் அதில் வரவேண்டும்" என்று சொல்லிவிட்டு போனதாகவும், சங்கரரே பாடலில் வந்து அருள் புரிந்ததாக சொல்லி இருந்தார். இதைக்கேட்டு எனக்கு அப்படியே  புல் பூண்டு எல்லாம் அரித்துவிட்டது!
  • …ஒருவேளை நேத்துராத்திரி எம்மா பாடல் எப்படி உருவானது என்று கேட்டிருந்தால், இளையராஜா எப்படி பதில் சொல்லி இருப்பார்!!!!!!!!!!!…
    …நான் பாட்டு கம்போசிங்கிற்கு போயிட்டு இருந்தேன். போகிறவழியில் சில்க்கோட சினிமா போஸ்டரை தற்செயலாய் பார்த்தேன். "சில்க் நீ இன்னைக்கு என்னோட பாட்டுல வர" என்று சொல்லிவிட்டு போய்விட்டேன். பாட்டு கம்போஸிங்க் முடிச்சி பார்க்கிறேன். எல்லாருடைய கண்ணிலும்  (நோட் திஸ் பாய்ண்ட்) தண்ணி வந்துவிட்டது. கம்போசிங் முடித்துவிட்டு ஆர்மோனியத்தை வைக்கப்போனேன். சட்டென்று ஒரு பட்டுத்துணி என்மீது விழுந்தது. பட்டு என்றால் என்ன ? சில்க். சில்கினுடைய அருள். சில்க் என்னுடைய பாட்டில் வந்து, பாட்டை வேறொரு தளத்திற்கு கொண்டுபோய்விட்டதை எண்ணி எனக்கும் கண்ணில் தண்ணி வந்துவிட்டது. 
  • இளையராஜாவுடைய எவ்வளவோ நல்ல பாடல்கள் இருக்கும்போது, நிலா காயுது பாடலும் பாடப்பட்டது. இதுபோன்ற ஒரு கேவலம் எந்த மொழிக்கும் கிடைக்காது. இப்பாடலை பொதுவில் வயதுக்கு வராத பசங்களோட கேட்டு ரசிக்கும் நம்ம சமூகம் ஒரு புரட்சிகரமான சமூகம். வெட்கக்கேடு. இளையராஜாவுக்கு முந்தைய இசையமைப்பாளர்கள் பெரியவர்களுக்கு மட்டும் விளங்கும்படி இலைமறைவு காய்மறைவாக பாடல்களை உருவாகிக் கொண்டிருந்தார்கள். அதை வெளிப்படையாக விருந்து படைத்த பெருமை இளையராஜாவையே சேரும். அவருக்கு பின்னாடி வந்தவர்கள் பற்றி சொல்லவும் வேண்டுமா? பிரித்து மேய்ந்துவிட்டார்கள். கருமம். எப்படியோ போய் ஒழிங்க.
  • …நிகழ்ச்சி முழுவதும் காண இயலவில்லை. இயலவில்லை என்றால் என்னால் சகிக்க இயலவில்லை. அதிலும் இளையராஜாவின் மானத்தை வாங்க யுவன் ஒருவர் போதும் என்று நினைக்கிறேன். காதல் கசக்குதய்யா பாடலை நாலுநாள் கக்கூஸ் போகாதவன் போல பல்லை கடித்தபடி பாடிக்கொண்டிருந்தார். இளையராஜா பாடிய பாடல்களை அவருடைய தவப்புதல்வர்கள் இப்படி குதறி எடுப்பதை பார்க்க முடியவில்லை.

இளையராஜா மீதும், அவருடைய பாடல்கள் மீதும் இருக்கும் ரசிகர்களின் ஈர்ப்பை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க, இவனுங்களுக்கு எப்படிப்பட்ட வழி பாருங்க.

*******************************************************************
சமீபத்தில் 1989-ல் (அபூர்வ சகோதரர்கள் வந்த சமயம்) வெளியான பொம்மை மாதயிதழுக்காக சிவாஜி கணேசனிடம் கமல் எடுத்த பேட்டியைப் படித்தேன்.

…அதிலிருந்து எனக்குப் பிடித்த சில கேள்விகள்.

கமல்: உங்களுக்கு ஏன் டைரக்ட் பண்ணும் ஆசை வரல?
 
சிவாஜி: டைரக்ஷனைப் பற்றி நிஜமாகவே எனக்கு ஒன்றும் தெரியாது. இப்போ நீ டைரக்ஷன் செய்தால் ஒத்துழைப்பு தருவேன். எனக்கு டைரக்டர் ஆகவேண்டும் என்ற எண்ணம் என்னைக்குமே வந்ததில்லை. நான் நல்ல சொல்ஜராக இருந்தேனே தவிர கேப்டனாக விரும்பியதில்லை. எனக்கு கேப்டனாக இருந்தவங்க "இன்னும்...இன்னும்.." என்று சொல்லிட்டு இருந்தாங்களே தவிர "இது போதும்" என்று சொன்னதில்லை.

…கமல்: நீங்க நாடகத்துல இருந்ததாலே, கண்டிப்பாக மேடையிலே பாடி இருக்கணும். ஏன் சினிமாவில் பாடவில்லை.
சிவாஜி: இப்பவும் நல்லா பாடுவேனே. நானும் பாடிப்பார்த்தேன். ரெண்டு பேரோட வேலையை கெடுக்கர மாதிரி இருந்தது விட்டுட்டேன். அதுமட்டுமல்ல, அப்ப பாட்டுக்கு ரெண்டு நாள் மூணு நாள்  ரிகர்சல் பார்ப்பாங்க. நமக்கு இருந்த வேலையில் 2 நாள் 3 நாள் ஒதுக்க முடியாதுங்கிறது ஒண்ணு. தவிர, நம்மை விட நல்லா பாடுரவங்க இருந்தாங்க என்கிறது.

கமல்: இன்னைக்கு பல நடிகர்கள் புருவத்தை உயர்த்தி திரும்பி பார்க்கும்போது, என்ன என்று கேட்பதற்கு பதிலாக உறுமலே கேட்கிறது. அதெல்லாம் உங்கள் சாயல் தானே? 

…சிவாஜி: அந்த காலத்துல அது சரி கமல். இன்னைக்கு நீ குழந்தை மாதிரி வந்து நிக்குற, திரும்புற, அழற பாரு...அதுதான் சரி. நான் பண்ண காலம் வேற. இன்னைக்கு காலம் வேற. கலை தான் அப்பப்ப மாறிட்டே இருக்குமே. இப்ப கூட மறுபடியும் நான் நடிக்கவந்தேன்னா, ரெண்டு நாளைக்கு "ஜெர்க்" அடிப்பேன். இப்ப நீ நடிக்கிறது தான் நடிப்பு. அந்த காலத்துல நான் நடிச்சது நடிப்பா இருக்கலாம். கால ஓட்டதுல எல்லாத்துறையிலேயும் முன்னேற்றம், மாறுதல் வரும்.

இன்னும் பல விஷயங்கள் பற்றி அப்பேட்டியில் சிவாஜி அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்.

*********************************************************************

சோ ராமசாமி பல காலமாக விடுதலைப்புலிகளை எதிர்த்தே பேசிவந்துள்ளார். அவர்களை ஆதரிப்பவர்களையும் சாடியுள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலைப்படி அவர் ஈழத்தமிழர் விஷயத்தில் சொல்பவை கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும், ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். விடுதலைப்புலிகள் தங்களின் சக விடுதலை இயக்கங்களின் உறுப்பினர்களை வேட்டையாடி கொன்றமை, அவற்றின் தலைமையை அழித்தமை என பல விடயங்களை கண்டித்துப்பேச அக்காலத்தில் மிகுந்த தைரியம் வேண்டும். ஈழத்தின் நிலைமை பற்றி மக்களுக்கு சரியாக தகவல்கள் கிடைக்காத காலம் அது. விடுதலைப்புலிகளால் டெலோ இயக்கத்தலைவர் சபாரத்தினம் மற்றும் 100க்கும் மேற்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்  கொல்லப்பட்டபோது கூட விடுதலைப்புலி இயக்கத்திற்குள்ளே ஏதோ சிறிய  சச்சரவு என்ற அளவில் தமிழகத்தின் சில முக்கிய பத்திரிகைகள் எழுதின. ஆனால் அப்போதும் தன்னுடைய கருத்தை தெளிவாக பதிவு செய்தவர் சோ. "தமிழின துரோகி" என பட்டம் கிடைக்கும் என்று தெரிந்தும் அதை அவர் செய்தார். நவம்பர் 1986-ல் துக்ளக் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை.