Tuesday, September 17, 2013

அம்மா ஊறுகாய் மற்றும் சிக்கன் 65 திட்டம் முதலமைச்சர் துவங்கி வைத்தார்.

"அம்மா குடிநீர்" திட்டம் முதலமைச்சர் துவங்கி வைத்தார்.

…புரட்டு தலைவியே! டாஸ்மாக் எண்ணிக்கையைக் கூட்டி சரக்குக்கு ஏற்பாடு செஞ்சிங்க. குடிநீர் திட்டம் கொண்டுவந்து மிக்ஸிங்க்கும் ஏற்பாடு செஞ்சிட்டிங்க. அப்படியே கொஞ்சம் சைட்டிஷுக்கு "ஊறுகாய் திட்டம்" "சிக்கன் 65 திட்டம்" கொண்டுவந்திங்கன்னா புண்ணியமா போகும்.


நடிகர் பிரசன்னா தற்போது விரும்பி பார்க்கும் படம்.

என் பொண்டாட்டி நல்லவ.

மூட நம்பிக்கை ஒழிப்புக்கு, உரிய சட்டம் ஒன்றை, மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் - கலைஞர்  கருணாநிதி

ஆமா! என்னமா பீல் பண்ணுராரு. நீங்களே உங்க மஞ்சள் துண்டை ஆட்டி துவங்கி வையுங்க.

எங்கள் வீட்டில் எங்கள் அம்மா தான் பாஸ் என்று ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் தெரிவித்துள்ளார்.

 "ஒரு பொம்பிளேன்னா ..." தலைவரோட டயலாக் எல்லாம் சினிமாவுலத்தான்.



******************************************************

இன்றைக்கு எம்.ஆர்.ராதா பற்றி எழுதுபவர்கள் எல்லாருக்கும் அட்சய பாத்திரம் போல இருப்பது. எம்.ஆர்.ராதா அவர்கள் கொடுத்த சில பேட்டிகள் . அவற்றுள் முக்கியமான ஒன்று விந்தனின் "சிறைச்சாலை சிந்தனைகள்". இதிலிருக்கும் சில விடயங்களை எடுத்து தான் கொஞ்சம் இப்படி அப்படி இட்டுக்கட்டி எம்.ஆர்.ராதாவைப் பக்கத்திலிருந்து பார்த்தது போல பலர் இன்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சரி சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன். திரைப்படத்துறையில் வெளிப்படையான மனிதர், திறந்த புத்தகம் எனப் பொதுவாக கண்ணதாசனைச் சொல்லுவார்கள். எம்.ஆர்.ராதாவும் அப்படித்தான். மேலே சொன்ன விந்தனின் புத்தகத்தில் ஒரு இடத்தில் சொல்லுவார். ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பாலமுருகனாக, பால கிருஷ்ணனாக, பெண்வேடங்களில் நடிக்கும் பையன்களுடன் உடலுறவு கொள்ள சில பணக்கார கூட்டம் அலைந்ததையும், தானும் அதுபோல ஆண் மோகம் கொண்டு அலைந்தவர்களில் ஒருவன் என வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். இதைப் பற்றி இவர் அதிகமாக சொல்லவில்லை. இப்படிப்பட்ட  செயல்களில் ஈடுபட்டதற்கு தான் பெரும் வேதனை அடைவதாக குறிப்பிட்டிருந்தார்.   இத்தகைய வலுக்கட்டாயமான ஓரினசேர்க்கை பழக்கங்களை (Homosexual என்பதா? Pedophile என்பதா? தெரியவில்லை) வெளியில் சொல்ல அதிக தைரியம் வேண்டும். எம்.ஆர்.ராதா செய்த தவறுகளை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் எத்தனைபேர் இப்படி தவறுகளை ஒத்துக்கொள்பவர்கள் இருக்கிறார்கள்? எனக்குத் தெரிந்து யாருமில்லை.

எம்.ஜி.ஆர், சிவாஜி கூட இளம்வயதில் பெண்வேடங்களை ஏற்று நடித்தவர்கள். இவர்கள் கூட இப்படி பல போன்ற எண்ணற்ற இன்னல்களை சந்தித்துதான் வந்திருப்பார்கள் போலும்.

******************************************************

நான் பார்த்த அரசியல் என்ற நூலில் எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதியை ஒப்பிட்டு கண்ணதாசன் கூறுகிறார்.
…".....அவரைப் (கருணாநிதி) பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை. ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார். ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார். இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.(http://chakkarakatti.blogspot.de)"

கண்ணதாசன் கருணாநிதியுடன் 25 ஆண்டுகளுக்கு மேல் பழகியிருக்கிறார். அதனையொட்டியே இவ்வளவு தெளிவாக கருணாநிதி பற்றி கூறுகிறார். பாருங்க எவ்வளவு உண்மை. இன்றுவரை கருணாநிதி மாறவில்லை.  அப்படியேதான் இருக்கிறார்.

… ****************************************************
படிக்காதமேதை படத்தில் கேவி மகாதேவன் இசையமைப்பில் ஜமுனாராணி, ஏஎல் ராகவன் பாடிய பாடல். எனக்குப் பிடித்த ஒரு பாடல். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

 

Friday, September 06, 2013

குழந்தைகளின் பெற்றோர்களே ஜாக்கிரதை

பல்கலைக்கழகத்தில் நான் படித்துக் கொண்டிருந்த நேரம். ஒருநாள் மாணவர்விடுதியில் நானும் என் நண்பனும் கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்தோம். தாடிவைத்த ஒருவர். நடுத்தரவயது இருக்கும். தான் ஒரு மலையாளி எனவும் புதிதாக கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும் எங்களிடம் தமிழில் அறிமுகப்படுத்திக் கொண்டார். அவருடன் பேசியதில் அவருக்கு திருமணமாகி இருப்பதும் தெரிந்தது. பல்கலைக்கழகத்தில் குடும்பத்துடன் வசிப்பவர்களுக்கு தனிவிடுதியும் உண்டு. அவ்விடுதியில் இடம் கிடைத்ததும் மனைவியை அழைத்துக் கொண்டுவரப்போவதாக சொல்லிக் கொண்டிருந்தார். சிறிதுநேர விளையாட்டிற்குப் பிறகு செல்லும்போது என்னையும் என் நண்பனையும் பார்க்க சகோதரர்கள் போல இருப்பதாக சொல்லிவிட்டுச சென்றார். அதன் பிறகு நான் அவரைப் பார்க்கவில்லை. வெகுநாட்கள் கழித்து, என்னுடன் படித்த ஒரு கன்னடர் அன்று தாமதமாக வேலைக்கு வந்தார். அவரும் குடும்பஸ்தர்கள் விடுதியில் இருந்து வருபவர் தான். ஏன் தாமதம் என்று கேட்டேன். அவர் வசிக்கும் விடுதியில் இருக்கும் ஒருவன் குழந்தைகளிடம் சாக்லேட் கொடுத்து அறைக்குள் கூட்டிப் போய் சில்மிஷம் செய்து இருக்கிறான்.  குழந்தைகள் பெற்றோரிடம் விவரமாக சொன்னதன் பேரில் அவனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்ததாக சொல்லிக் கொண்டிருந்தார். எனக்குப் பகீர் என்றது, படிக்கவரும் இடத்தில் கூட இப்படி எல்லாம் நடக்கவேண்டுமா?  எனக்கு உணவுஇடைவேளைக்கு நேரமானதால் விடுதிக்கு வந்துவிட்டேன். விடுதியில் நுழையும்போது எனக்குத் தெரிந்த  ஒரு மலையாளி நண்பன் என்னிடம் விசாரித்தான். "இன்றைக்கு என்ன ஆச்சி விஷயம் தெரியுமா?"
"என்ன"
"இக்பாலை போலிஸ் கொண்டு போச்சு"
"எந்த இக்பால்"
"அன்றைக்கு உன்னுடன்  கிரிகெட் ஆடினாரே. தாடி கூட வச்சிட்டு இருந்தாரே. அவர்"
"ஏன் என்னவாம்"
"குழந்தைகளிடம் செக்ஷுவலாக தவறு செய்தாராம். என்னால் நம்ப முடியல. அவர் அப்படி இல்லை. வேண்டுமென்றே யாரோ இப்படி பழி சுமத்தி இருக்காங்க" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

நான் பதிலேதும் பேசாமல் சாப்பிடப் போய்விட்டேன். இது நடந்து பல ஆண்டுகள் இருக்கும். இந்த விஷயம் அப்போது செய்தித்தாளிலெல்லாம் வந்தது. என்னைப் பொருத்தவரை child abuse, phedophile விஷயங்களில் யார் வேண்டுமானாலும் குற்றவாளிகளாக இருக்கலாம். இவர்களை கண்டுகொள்வது கடினம். பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம், வீட்டிற்கு வரும் நண்பர்களாக இருக்கலாம், ஏன் குழந்தையின் தந்தையோ சகோதரனாகக் கூட இருக்கலாம்.

இன்றைக்கு செய்தித்தாளைத் திறந்தால் சிறுமி கற்பழிப்பு, குழந்தை கற்பழிப்பு  என்றுதான் அதிகமாக வருகிறது. செய்தித்தாளில் வரும் சங்கதிகள் சில. ஆனால் உண்மையில் சமூகத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல் நம்மைச் சுற்றி இருக்கும் பல குழந்தைகள்  சீறழிக்கப்படுகிறார்கள். மனரீதியான பாதிப்புடையர்கள் தான் இத்தகைய காரியங்களில் ஈடுபட முடியும். வேதனை தரக்கூடிய இந்த விஷயத்தைப் பற்றி நான் மேலும் சொல்ல விரும்பவில்லை. குழந்தைகளின் பெற்றோர்களே ஜாக்கிரதை. நான் ஒன்றும் குழந்தைகள் மனோ தத்துவநிபுணன் அல்ல. ஆனால் ஒரு சில விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு
1. உங்களுக்கு என்ன கவலை இருந்தாலும், குழந்தைகளிடம் அன்பாக இருங்கள். 
2. முடிந்தவரை அடிக்கடி உங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து பேசுங்கள். அவர்கள் அன்று என்ன செய்தார்கள் என்று அன்புடன் விசாரியுங்கள். 
3. யாருடன் பழகுகிறார்கள் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். 
4. குழந்தைக்கு காயம் ஏதாவது ஏற்பட்டிருப்பின், எதனால் ஏற்பட்டது என்பதை அன்புடன் விசாரியுங்கள். "யாருடன் சண்டை போட்ட" என்று அதட்டினால், பிறகு அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை இருப்பின் உங்களிடம் சொல்லப் பயந்து தயங்குவார்கள். 
5. அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
6. மிகவும் முக்கியமானதொரு விஷயம் சிறுவர்களை பேஸ்புக், இணையதளங்களை பாவிக்கவிடாதீர்கள். அப்படி பாவிக்கவிட்டாலும், கண்காணிப்புடன் நடந்துகொள்ளுங்கள். வளர்ந்த நாடுகளில் இணையத்தின் மூலம் குழந்தைகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுடன் இனிமையாக பழகி தனியாக வரவழைத்து கற்பழித்த கொடூரங்கள் நடந்துள்ளன.