தங்கவேல், பானுமதி நடித்த படம் ரம்பையின் காதல். இப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கனீர்குரலில் ஒலித்த தத்துவப்பாடல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பகவானே மௌனம் ஏனோ... , சமரசம் உலாவும் இடமே... என்று தொடங்கும் பாடல்கள். மனதை உருக்கக்கூடியடி ஆர்.பாப்பாவின் இசை,மருதகாசியின் பாடல் வரிகளைக் கொண்ட பாடல்கள். பாடல்களை ரசித்தவர்கள் மறக்காமல் கருத்தைச் சொல்லவும்.
Sunday, February 28, 2010
Saturday, February 20, 2010
இந்தியாவை புரையோட வைக்கும் புரையிரும்பாலைகள்
நாட்டிற்கு முன்னேற்றம் அவசியம், அந்த அவசியம் நாட்டினுடைய வளத்தையும் சுற்றுப்புறசூழலையும் சீர்கெடுத்துத்தான் வளரவேண்டுமா? இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் புரையிரும்பு ஆலைகள் அதிக அளவில் பெருகிவருவது. வெவ்வேறு சுற்றுப்புற சுகாதார நாசங்களால் மக்கள் அவதியுறும் வேளையில், புரையிரும்பு (sponge iron) என்ற DRI (Direct-reduced iron) இரும்பு உற்பத்தியால் இந்தியா புரையோடிக் கொண்டிருக்கிறது. புரையிரும்பு நவீன எஃகு உற்பத்திக்கு முக்கியமான மூலப்பொருள். இரும்புத்தாதுவை நிலக்கரி அல்லது எரிவாயுடன் ஆக்ஸிசன் ஒடுக்கம் செய்வதனூடாக உலையில்லாமல் புரையிரும்பு தயாரிக்கப்படுகிறது. இம்முறை அதிக லாபத்தையும் குறைந்த முதலீட்டையும் கொண்டது. உலகிலேயே இந்தியாவில் தான் புரையிரும்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 20% உலகஉற்பத்தியை இந்தியா கொண்டுள்ளாது. புரையிரும்பாலை மிகுந்த லாபம் ஈட்டித் தருவதாக உள்ளது. 100 டன் உற்பத்தி செய்யும் ஆலை, அதன் முதலீட்டை வெறும் 18 மாதங்களில் மீட்டெடுப்பதாக சொல்லப்படுகிறது. ஆதலால் புரையிரும்பாலைகளின் மீதான முதலீடுகள் அதிகரிக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் கட்டுமான தொழிலின் வளர்ச்சியால், இரும்பின் தேவை அதிகமாக உள்ளது. ஆகவே எஃகு உற்பத்தியின் முலப்பொருளாகிய புரையிரும்பும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது.
இரும்புத்தாது, நிலக்கரி சுலபமாக கிடைப்பது பொருத்து, பெரும்பாலான புரையிரும்பாலைகள் ஒரிசா, ஜார்கண்ட், சடிஸ்கார், மேற்குவங்காளம் போன்ற மத்தியகிழக்கு மாநிலங்களில் அமைந்துள்ளன. ஆந்திரா, தமிழ்நாடு, கோவா, குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களிலும் புரையிரும்பாலைகள் உள்ளன. ஒரிசாவில் மட்டும் கிட்டத்தட்ட இந்தியாவின் 60% புரையிரும்பாலைகள் அமைந்துள்ளன. 1988-ல் ஒரு மில்லியன் டன்னாக இருந்த இந்திய புரையிரும்பு உற்பத்தி, 2005-ல் 11.82 டன்னாக இருந்த வளர்ச்சிகண்டு, 2006-2007-ல் 16.27 டன்னாக உயர்ந்து, 2009-ல் 20 டன்னை விஞ்சி நிற்கிறது. புரையிரும்பு தயாரிப்பில் இரண்டு வகையுள்ளது, 1. நிலக்கரி சார்ந்தமுறை, 2. எரிவாயு சார்ந்தமுறை. உலகின் மற்ற நாடுகளில் புரையிரும்பு அதிகமாக எரிவாயு பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அதனால் அவற்றிலிருந்து புகை வெளியேற்றப் படுவதில்லை, மேலும் மாசுபடுதலும் குறைவாக உள்ளது. ஆனால் முதலீட்டளவில் பார்த்தால் எரிவாயு பயன்படுத்தி புரையிரும்பு தயாரிக்கும்முறையின் முதலீட்டின் 20% கொண்டு நிலக்கரி சார்ந்த புரையிரும்பாலைகள் அமைத்துவிடலாம். இந்தியாவில் கிட்டத்தட்ட 90% புரையிரும்பாலைகள் நிலக்கரியைப் பயன்படுத்துகின்றன. எனவே, இவை அதிகமான புகையையும், தூசு, மாசுக்களை ஏற்படுத்தி சுற்றுப்புறசூழலை நாசப்படுத்துகின்றன.
இந்தியாவின் பல புரையிரும்பாலைகளில் நச்சு புகை வெளியேறுவது மட்டுமல்லாமல், அறிவியலல்லாத முறையில் கழிவுகள் அகற்றப்படுகின்றன. சாலையோரங்களில், ஆறுகளில், ஆற்றுப்படுகைகளில் கழிவுகள் கொட்டப்படுகின்றன, ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் புகை கார்பண்டையாக்ஸைட், நைட்ரஜண்டையாக்ஸைட் போன்ற வாயுக்களையும், நுண்ணிய கன உலோகத் துகள்களான காட்மியம், ஜின்க், ஈயம், பாதரசம், மங்கனிஸ், நிக்கல், க்ரோமியம், ஆர்சனிக் போன்றவற்றை கொண்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்கள் சிலிகோசிஸ், ஆஸ்த்மா போன்ற சுகாதாரப் பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டுள்ளனர். நீரில் அதிகம் கலந்துள்ள ஈயம், பாதரசம் போன்ற உலோகங்கள் மூளை-சிறுநீரகப் பிரச்சனைகளை உருவாக்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. பல புரையிரும்பாலைகளின் ஐந்து கி.மீ சுற்றளவிற்குள் உள்ள நிலம், நீர் இராசயனக் கழிவுகளால் மாசுபடுத்தப்பட்டுள்ளன. அரிசி வயல்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள புரையிரும்பாலைகளின் கழிவுகளால், அரிசி பழுப்பு நிறமாக விளைகின்றன. இதனால் பெரும்பான்மையான விவசாயிகள் தொழிலடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், மாசடைந்து விலைபோகாத அரிசியை உண்ணும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
ராய்ப்பூர் வேளாண்மைப் பல்கலைகழகத்தின் ஆய்வுக்கட்டுரையில்
“ராய்ப்பூரின் அருகிலுள்ள சில்தாரா பகுதியில் 25000 ஹெக்டர் நிலப்பரப்பு வாழமுடியாத பகுதியாக உள்ளது”.
கருமையான நச்சு தூசுகள் படிந்த நிலங்கள் மேய்ச்சலுக்குக் கூட பயனற்றுப் போய்விட்டதால், கிராமபுறங்களின் கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்னாற்றலை சேமிப்பதாக கருதி, பகலில் மட்டுமே மாசுவடிகட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இரவில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அருகிலுள்ள பகுதிகளில் சாம்பல் போன்ற மாசுக்கள் படிந்து மையான பூமி போல காட்சியளிக்கிறது.
இந்திய சட்டப்படி, இரண்டு புரையிரும்பாலைகளுக்கிடையே குறைந்தது 5கி.மீ இடைவெளி இருக்கவேண்டும். ஆனால் சில்தாராவில் 30 ஆலைகள் உள்ளன. ஒரு கி.மீ இடைவெளியில் ஆலைகள் அமைந்துள்ளன. ஒரு கிராமத்திற்கும் புரையிரும்பாலைக்கும் ஒரு கி.மீ இடைவெளி இருக்கவேண்டும். அதுவும் இங்கே மீறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஒரிசா, சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களிலுள்ள பல புரையிரும்பாலைகள் சட்டத்திற்கு புறம்பாக மலைவாழ் மக்கள் வசிக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களில் (Scheduled areas) அமைக்கப்பட்டுள்ளன.
கண்முன்னே நிகழும் அழிவைப் பார்த்துக்கொண்டிராமல், பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் விளைவாக கோவா மாசுகட்டுப்பாட்டுவாரியத்தின் உத்தரவின்படி, முக்கியமான புரையிரும்பாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் ஆலைகள் துவங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ‘லோஹா கரம் ஹை’ (இரும்பு சூடாக இருக்கிறது) என்ற ஆவணப்படம் புரையிரும்பாலையினால் ஏற்படும் சுற்றுப்புறசூழல் சீர்கேட்டினைப் பற்றியது. இப்படம் இந்திய ஆவணப்பட தயாரிப்பாளர்கள் கழகத்தின் சிறப்பு விருதினைப் பெற்றது. ஒரு விருது பெருவதற்காக எடுக்கப்பட்ட ஆவணப்படமாக இல்லாமல், அதையும் தாண்டி முறையற்ற தொழில்மயமாக்கலினால் உண்டாகும் மனிதவுரிமை, சுகாதார, சுற்றுப்புற சீர்கேடு, சட்ட மீறல்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது இந்த ஆவணப்படம்.
உலகமயமாக்கலின் பிறகு, உலகம் முழுக்க தொழில்மயமாகி வரும் இன்றைய நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் எவை என்றால், இந்தியாவும் சீனாவும் தான். என்ன தான் இவை பொருளாதார முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அதற்கு கொடுக்கப்பட்ட விலை மிகமிக அதிகம். சீரற்ற வளர்ச்சிக்காக, நாட்டின் வளத்தையும், நாட்டு மக்களையும் பலிகடாவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா, சீனா போன்ற நாடுகள் முன்னேற்ற புலிகள் போல காட்டிக்கொண்டாலும், தரம்-பாதுகாப்பு விடயங்களில் மக்களை மக்களாகவே மதிப்பதில்லை. மக்களின் நலத்தின் மீது துளியும் அக்கரையின்றி நாட்டினுடைய சுற்றுப்புறசூழலை சீர்கெடுத்து அழிவுப்பாதையில் அழைத்துச் செல்கின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற ஆண்டுச்சந்திப்பில், 163 நாடுகளை சுற்றுப்புறசூழல் செயல்திறன் குறியீட்டெண்களின் வரிசைப்படி வெளியிட்டது. இதில் இந்தியா 123வது இடத்திலும், சீனா 121வது இடத்திலும் உள்ளன. இந்த இருநாடுகளின் வளர்ச்சி, அவற்றின் சுற்றுப்புறசூழலின்மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக்கொள்ள முடியாது. சில இந்திய முதலாளிகளை உலகப்பணக்காரப் பட்டியலில் இடம்பெற வைத்துவிட்டு, மற்றவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கினால் இந்தியா நாடாக இருக்காது, சுடுகாடாகத்தான் இருக்கும். பயனடைவோர் 20% இருந்தாலும், நட்டம் அடைவோர் 80% இருக்கின்றனர். உடைந்த கண்ணாடி பயனற்றுப் போவது போல, சேதமுற்ற சுற்றுப்புறச்சூழலை எவ்வளவு கொடுத்தும் முந்தைய நிலைமைக்கு மீளமைக்க இயலாது. நாம் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு பணம்-பதவி விட்டுச்செல்வதைவிட தூய்மையான நாட்டை, உலகை விட்டுச்செல்ல வேண்டும்.
அரசியல் கொள்கை, பொருளாதார மேம்பாடு, சுற்றுப்புற சூழல் என எல்லாவற்றையும் கடந்துநிற்பதே மனிதநேயம். அதற்கேனும் மனம் இறங்குவார்களா...!
சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி – கிளியே!
செம்மை மறந்தாரடி?
Wednesday, February 17, 2010
தோழன் அன்பரசுவிற்கு
தோழன் அன்பரசுவிற்கு,
வங்காளத்தில் முதன்முதலாய் அறிமுகமானவன் நீ தான். கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் என்னோடு இருந்ததை விட உன்னோடு தான் அதிகம் இருந்திருப்பேன். கடந்த 25 ஆண்டுகளில் நான் விரும்பிய நட்பு உன்னிடம் தான் கிடைத்தது. நாம் கல்லூரி விட்டுச் செல்லும்போது நான் அழுதுகொண்டிருந்தேன். ‘இது என்ன நிரந்தரப் பிரிவா? பிறகு பார்க்கத்தானே போகிறோம்’ என்றாய். சமாதனப்படுத்தினாய். இப்போது அந்தப் பிரிவு நிரந்தரமாகிவிட்டது. வாழ்க்கை எத்தனை நிலையாமை கொண்டது. என் தாயை இழந்த போது இருந்த அதே வலி. இப்போது நண்பனை இழக்கும்போதும். நீ இறந்தபோன செய்தி பொய்த்துப் போய்விடாதா? வேனில்கால மழையாய் என் வாழ்வில் வந்து போய்விட்டாயே. இனி நான் எங்கு காண்பேன் உன்னை.
என்றும் உன்னுடன்
அருண்
Labels:
டூரிங்டாக்கீஸ்,
நான்
Monday, February 15, 2010
திருகாணி சவப்பெட்டி
சவப்பெட்டிக்கு ஆணி அடிப்பாங்க. ஆனால் ஆணிக்குள்ளவே சவத்தை வைக்கமுடியும்ன்னா? அதெப்படி. இப்ப திருகாணி வடிவில் ஒரு சவப்பெட்டி வந்து இருக்காம். இதுக்குள்ள சவத்தை வைத்து நிலத்தில் அழுத்தி முறுக்கவேண்டியது தான். இதைப் பயன்படுத்தினால் இடம் மிச்சமாகுமாம். மையானத்தில் பயன்படுத்தாமல் இருக்கும் பகுதிகளில் கூட இந்த திருகாணிசவப்பெட்டியை வைக்கமுடியும். பெட்டியின் மேலுள்ள சின்னங்கள் விருப்பம் போல வைத்துக் கொள்ளலாம்.படங்களைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.
Tuesday, February 09, 2010
காதல் மீதான புனிதப்போராட்டம் (Jihad for Love)
சில நாட்களுக்கு முன் காதல் மீதான புனிதப்போராட்டம் (Jihad for Love) என்றொரு ஆவணப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. இந்த ஆவணப்படம் இஸ்லாமிய மதத்தில் இருக்கும் ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றியது. இவர்களுடைய மனக்குமுறல்கள், உண்மையான நிலைப்பாடுகள், கடவுள் மீதான பற்றுதல் என அனைத்தையும் இந்த ஆவணப்படம் கண்முன் நிறுத்துகிறது. ஆவணப்படத்தில் நான் பார்த்தவற்றை சுருக்கமாக கீழே தருகிறேன்.
• இரண்டு பெண் ஓரினக் காதலர்கள் குரான் வாசகங்களை படிப்பதாக ஆவணப்படம் தொடங்குகிறது.
• தென்னாப்பொரிக்காவில் திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் ஒரு முஸ்லீம் சகோதரர். ஓரினச் சேர்க்கை, மதம், குடும்பம் என அவருடைய வாழ்க்கை போராட்டமாக இருப்பதாக விவரிக்கிறார். முக்கியமாக ஒரு இஸ்லாமிய மத அறிஞருடன் பேசும்போது குரானில் homosexual act அதாவது molestation தான் பாவமாக கருதப்படுவதாகவும், homosexual relationship or love பற்றி எதுவும் கூறவில்லை என்றும் கூறுகிறார். அதற்கு அந்தப் பெரியவர் “இஸ்லாம் மட்டுமல்ல எந்த புனிதமான மதமும் ஓரினச் சேர்க்கையை அனுமதிப்பதில்லை.” என்று திட்டவட்டமாக மறுக்கிறார்.
• எகிப்தில் ஓரினச்சேர்க்கைக்காக தண்டனை அனுபவித்துவிட்டு பிரான்ஸில் அகதியாக இருக்கும் ஒருவர். அவருடைய தண்டனை கொடுத்தவர்கள் மீதான கோபத்தையும், அனுபவித்த இன்னலையும் நம் முன்னே பதிவு செய்கிறார்.
• தங்கள் காதலை இஸ்லாமிய சமூகம் எப்படி அங்கீகரிக்கும் என்றபடி பிரான்ஸில் இருக்கும் இரு பெண் ஓரினக் காதலர்கள். அதில் ஒருவர் பெண் ஓரினச் சேர்க்கைக்கு குரானில் என்ன தண்டனை என்று பார்க்கிறார். “The only punishment is Scolding the women, when there is no penetration” என்று அராபியில் படிக்கிறார்.
• ஓரினச்சேர்க்கைக்காக 100 கசையடி வாங்கிய, இரானில் இருக்கும் அமீர். துருக்கியில் தன் காதலனோடு இருக்கிறார்.அவர்களுடைய குடும்ப நலனுக்காக முகம் படத்தில் காட்டப்படுவதில்லை.
• துருக்கியில் இருக்கும் பெண் ஓரினக் காதலர்கள். (துருக்கியில் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டங்கள் எதுவுமில்லை.)
• பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் சுஃபி கவிஞன்,துறவி ஷா ஹுசைன், இந்துவான மதுலால் இருவருக்குமான காதல். அவர்களுடைய சமாதி, அங்கே ஹுசைனுடைய இறந்தநாளன்று கொண்டாடப்படும் விழா.
• இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளரான இளைஞர் ஒருவர். அவருடைய தேடல்.பெண்வேடமிட்ட ஆண்களுடனான ஆட்டம். பின்னணி “மொஹலே ஆஸம்” படத்தில் வரும் பிரபலமான பாடல் “பியார் கியா தோ டர்னா க்யா”.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஓரினக் காதலர்கள் மீது மதங்களுக்கு அப்படி என்ன கடுப்போ தெரியாது. சொல்லி வைத்தது போல, எல்லா மதங்களும் இந்த விடயத்தை கடுமையாக எதிர்கின்றன. ஓரினக் காதலை ஆபிராகாமிய மதங்கள் முற்றிலுமாக எதிர்க்கின்றன. கடுமையான தண்டனைகள் விதிகின்றன, விதிக்கப்பட்டுள்ளன. இந்து மதத்தில் கடவுளே ஓரினக் காதலர்களாக இருந்தாலும், மதம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. மனுதர்மத்திலும், அர்த்தசாத்திரத்திலும் இதற்கான தண்டனைகள் சொல்லப்பட்டுள்ளன. சில மதங்கள் இவற்றை ஒரு சமூகக்கூறாக கூட கருதவில்லை. விலங்குகளில் கூட ஓரினச்சேர்க்கை உண்டு. ஓரினச்சேர்க்கை பரிணாம கொள்கைக்கான ஒரு எடுத்துக்காட்டு. இதுவே தற்போதைய முற்போக்கான, விஞ்ஞான மதவாதிகள் எதிர்க்கக் காரணமாகவும் இருக்கும். இயற்கையாக ஏற்படும் விளைவுக்கு தனிப்பட்ட நபர் எப்படி காரணமாவார். அவரை தண்டிப்பது ஏன்? ஒதுக்குவது ஏன்?
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சில நாட்களுக்கு முன் கோவா படம் குறித்த விமர்சனப் பதிவில் நண்பர் ஒருவர் ஓரினச்சேர்க்கையை விமர்சித்திருந்தார். ஓரினச்சேர்க்கை ஓர் அருவருக்கத்தக்க விடயமாக கூறியிருந்தார். “ஓரினச்சேர்க்கை என்பது தவறா?” என்று ஒரு நண்பர் பின்னூட்டமிட, பதிவிட்ட நண்பர் “ஓ! அவனா நீ?” என்று ஒரு பகடி செய்தார். இதில் பகடி செய்ய என்ன இருக்கிறது. ஓரினச்சேர்க்கையை ஆதரித்துப் பேசினால் அவனும்/அவளும் ஓரினச் சேர்க்கையாளராகத்தான் இருக்கவேண்டுமா? அப்படி இருந்தால் என்ன தவறு.
Philadelphia படத்தில் tom hanks ஓரினச் சேர்க்கையாளராக நடித்திருப்பார். முதலில் அவர் ஓரினச் சேர்க்கையாளர், எய்ட்ஸ் நோயாளார் என அறிந்து அவருக்காக வழக்காட மறுக்கும் வழக்குரைஞர், பின்பு மனம்மாறி வழக்காடுவார். அந்த வழக்குரைஞரையும் சிலர் ஓரினச்சேர்க்கையாளராக அணுகுவார்கள்.
Fire படத்தில் இரு பெண்கள் திருமண வாழ்வில் தோல்வியடைந்து ஓரினச்சேர்க்கைக்குத் தள்ளப்படுவார்கள். ஆனால் அந்தப் படத்திற்கு நம்மவர் மத்தியில் இருக்கும் மதிப்பு எப்படி என்று கேட்டுப்பாருங்கள். எதோ நீலப்படம் போல கூறுவார்கள்.
இதுதான் கட்டுக்கோப்பு, ஒழுக்கம் என்ற பெயரில் சாக்கடையாக மணக்கும் நம் சமுதாயத்தின் நிலைமை. எல்லோரும் இதில் நெளிபவர்களே. இதையெல்லாம் பார்த்தும் கேள்வி எழுப்பாமல் இருக்கும் நாமும் இந்தப் புழுக்களில் ஒன்றா என்பதில் அவமானப்படவேண்டும். இதில் எந்த மதத்தையும் நான் தனியாக குறிப்பிடவில்லை. எல்லாவற்றிற்கும் பொருந்தும். பெற்றபிள்ளையின் காதலை ஆதரிக்கும் முற்போக்காளராகக் காட்டிக்கொண்டாலும், அடுத்தவன் பிள்ளை ஓரினச்சேர்கையில் காதலித்தால் முகம் சுளிப்பவர்களே! திருமாலும், சிவனும் சேர்ந்து ஹரிஹரனாகலாம், ஆனால் நம்மோடு இருக்கும், நடமாடும் உறவுகள் செய்தால் தவறா? இவர்களுடைய காதலைத் தடுக்க மதங்களுக்கும், மனிதர்களுக்கும் உரிமை யாரால் கொடுக்கப்பட்டது.
Saturday, February 06, 2010
Tuesday, February 02, 2010
Monday, February 01, 2010
நீயா நானா / கோபிநாத் / ருத்ரன்
பொதுவாக மனிதர்களிடையே தெய்வ நம்பிக்கையோ, ஜோதிட நம்பிக்கையோ, பேய்பிசாசு நம்பிக்கையோ, மற்ற மூட நம்பிக்கையோ இருந்துகொண்டுதான் இருக்கிறது. படித்தவர்களில் பலர் இந்த நம்பிக்கைகள் இல்லாமல் இருப்பது போல காட்டிக் கொண்டாலும், நம்பிக்கையுடையவர்களாகத் தான் இருப்பார்கள். இவற்றில் எந்த நம்பிக்கையும் மற்றவர்களை (அதாவது இந்த மற்றவர்கள் சகோதரர்களாக, பிள்ளைகளாக, கணவன்/மனைவியாக கூட இருக்கலாம்) சுரண்டாத, ஒடுக்காத வரையில் பரவாயில்லை.
அமானுஷ்ய விசயங்கள் உண்மையா பொய்யா என்பது பற்றி விஜய்டீவியின் நீயா நானா-வில் சென்ற ஆண்டில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. மனநலமருத்துவர் ருத்ரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வீற்றிருந்தார். மக்கள் அமானுஷ்ய விசயங்களை எப்படி அணுகலாம் என்ற கேள்விக்கு ருத்ரனின் பதில் „உங்களுக்கு பயப்படும் போல் ஒரு சம்பவம் நடக்கிறதா பயப்படுங்கள். அது இயல்பு. பிறகு அதையே நினைத்துக்கொண்டு மற்றவர்களிடம் எமாறாதீர்கள்“.
நிகழ்ச்சியின் ஹைலைட்டான விசயம் என்னவென்றால், கனவுகள் நிஜசம்பவங்களாக நடப்பதாக ஒருவர் கூறினார். அடுத்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூட என்னால் கூறமுடியும் என்று சொன்னார். கோபிநாத்தும் ‚நடந்தது என்ன’ நிகழ்ச்சியில் நாங்களும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளோம் என்று சான்றிதழ் கொடுத்தார். பிறகு ருத்ரன் கேள்வி கேட்க ஆரம்பித்ததும். மேற்சொன்ன நபர் முதலில் நண்பனிடம் போன் செய்து கனவு பற்றி விசாரித்தேன் என்றார். பிறகு வேறொரு நண்பர் மூலம் விசாரித்தேன் என்று தடுமாறினார். பிறகு அந்த நண்பர் தான் தன்னை அணுகி தான் டீவியில் செய்த நிகழ்ச்சி பார்த்ததாகவும், தற்போது எதாவது கனவு வந்ததா என்று கேட்டதாக புதிதாக ஒன்றை சொன்னார். இப்படியாக டாக்டர் ருத்ரன் அந்த நபரிடம் இருந்து போலித்தனத்தை வெளியே கொண்டுவந்ததும் கோபிநாத்திற்கு ஷாக் அடித்தது போல் இருந்திருக்கும், ஏனென்றால் நடந்தது என்ன என்று நிகழ்ச்சியின் மூலம் அவர் கொடுத்த சான்றிதழ் கிழிந்துவிட்டது.
அடுத்ததாக அமானுஷ்ய விசயங்கள் சுவாரசியமானவை, பொழுதுபோக்கானவை என்று ஒரு குண்டு போட்டார் கோபி. அதற்கும் சுவாரசியம் என்றால் உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள் பொதுவில் வந்து மக்களை முட்டாளாக்கத் தேவையில்லை என்று ருத்ரனிடம் இருந்து வந்த பதில் வந்தது. டாக்டர் ருத்ரன் தன் பதிலில் இந்த கார்போரேட் சமாசாரங்களின் சிந்தனை, அறிவு சாயத்தை வெளிக்கொண்டு வந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. இந்த பதிலும் நிச்சயம் கோபிநாத்திற்கு சுருக்கென்று இருந்திருக்கும். இவர் நடத்தும் ‚நடந்தது என்ன’ என்ற நிகழ்ச்சியில் மக்களுக்கு ஏமாற்றும் விசயங்களை புரியவைப்பதை விட்டுவிட்டு, சுவாரசியமான விசயங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பேசாமல் கோபி சாருவை கூப்பிட்டு இருக்கலாம். தன்னோட பங்குக்கு சாயிபாபா படத்தில் இருந்து குங்குமம், அரிசி, பருப்பு, புளி கொட்டுகிற கதையெல்லாம் சொல்லி சுவாரசியமாக்கி இருப்பார். அமானுஷ்ய விசயத்தை நம்பாதவராக மருத்துவப் பெண்மணி ஒருவர் தன்னுடைய அனுபவத்தையும், கருத்தையும் பகிர்ந்து கொண்டார். அமானுஷ்ய சக்தியில் நம்பிக்கை இல்லாதவர்களிலிருந்து வந்த கருத்துகள் நிகழ்ச்சியில் காண்பிக்கப்படவில்லை. நிகழ்ச்சியின் முடிவில் கோபிநாத் அமானுஷ்ய சக்தியை நம்பும் ஒரு பெண் மாபெரும் கருத்தைக் கூறிவிட்டதாகப் பரிசளித்து திருப்தியடைந்தார்.
உபரிதகவல்:
நீயா நானா சிகழ்ச்சியில் பெண்ணிற்கு தாலி புனிதமானதா? இல்லையா? என்ற விவாதம் செம்மையாக வெளிவருவது போல, பர்தா தேவையா? இல்லையா? என்ற விவாதம் வெளிவராமலே இருப்பது மிகவும் சிறப்பான விசயம்.
பொய்யாகிப் போனவை
எங்க பாட்டி மதிய நேரத்தில் கறிசோறு கொடுத்து அனுப்பினால் இரும்பு ஆணியோ ஒரு அடுப்புகரித்துண்டோ போட்டு அனுப்புவாங்க. மதியநேரம் கறிசோறு கொண்டு போனால் காத்துகருப்பு தொடர்ந்து வரும் என்று அவங்களுக்கு ஒரு நம்பிக்கை. தென் தமிழகத்தில் கருப்புசாமி, அய்யனார், மதுரைவீரன் கும்பிடுவது போல, வேலூர் பகுதியில் காட்டேரி, முனீஸ்வர வழிபாடு உண்டு. என்னுடைய சிறுவயதில் காட்டேரி என்றால் கருப்பாக இருக்கும், அதற்கு நீளமா தலைமுடி இருக்கும் என்று கதை சொல்லித்தான் எனக்கு எங்க பாட்டி சோறு ஊட்டுவாங்க. காட்டேரி கும்பிட சாயங்காலமாக குளக்கரை பக்கத்தில் இருக்கும் அரசமரத்தடியில் பொங்கல், கறி, கருவாட்டு கொழம்பு செய்துகொண்டு போய் படைப்பாங்க. இப்போது அங்க ஒரு சப்கோர்ட் வந்திடுச்சி. ஆனால் இப்போது அந்த அரசமரம் இல்லை. வெட்டிட்டாங்க.
முன்பெல்லாம் எங்க ஊரில் இருக்கிற முனீஸ்வரன் கோயில் பக்கம் இரவில் யாரும் போகமாட்டாங்க. அங்க இருக்குற முனிகள் இரவில் சண்டைபோடும் என்று சொல்லுவாங்க. உடைந்து போயிருக்கும் களிமண் குதிரைகள் சண்டையில் செத்துபோன குதிரைகள் என்று சொல்லுவாங்க. இப்ப அந்த பகுதியில் வீடுகள் அதிகமாகிவிட்டதால், இந்தக் கதைகள் எல்லாம் பொய்யாகிப் போய்விட்டது.
ஒரு உபரி தகவல் என்வென்றால், காட்டேரி குலதெய்வமா கும்பிடுரவங்க கருப்பு அறுனாகொடி கட்டுவாங்க. முனீஸ்வரன் கும்பிடுரவங்க சிவப்பு நிற கொடி கட்டுவாங்க. இரண்டையும் கும்பிடுரவங்க இரண்டு நிறத்திலும் கட்டுவாங்க.
எங்க வீட்டுக்கு எதிரில் எங்கத் தெருவையும் பக்கத்துத் தெருவையும் இணைக்கும் ஒரு சந்து இருந்தது. அங்கு பேய் நடமாட்டம் இருப்பதாக பேசிப்பாங்க. ஒருநாள் இரவு எங்க தாத்தா திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் எதோ ஒரு வெள்ளையான உருவம் அவரை எழுப்பியதாம். பதற்றத்தில் அவர் அந்த உருவத்தை அடிக்கப் போக, ஜன்னல் கம்பியை ஓங்கியடித்து கைமுறிந்துவிட்டதாம். இந்த கதையை நான் நினைத்து நினைத்து சிரிப்பதுண்டு.
எங்க தெருவில் மூலைக்கடை நாடாருக்கு சொந்தமான ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் பூதம் இருப்பதாக சொல்லி யாரும் வாழரது இல்லை. அப்படி இதுக்கு முதல் அந்த வீட்டில் இருந்தவங்க சாப்பிடும் போது திங்குற சோத்தில் மலமும், மண்ணும் விழுமாம். இப்போ அங்க வீடு இல்ல. ஒரு மளிகைக்கடை இருக்கு.
மேலே சொன்ன விசயங்கள் கதைகளாக, செவிவழிச் செய்தியாக எனக்குச் சொல்லப்பட்டவை. இப்படி நிறைய பேருக்கு அனுபவங்கள் இருக்கும். இவை அந்தந்த பகுதிகளின் பழக்கவழக்கமாக, தெய்வ நம்பிக்கையாக, தனிநபர் நம்பிக்கையாக, குல வழக்கமாக உருவாக்கப்பட்ட புனைக்கதைகளின் சார்புடையவையாகவே கருதுகிறேன். இவற்றை இன்னும் மக்கள் நம்பிக்கொண்டும் வழிபட்டுக்கொண்டும் தான் இருக்கிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)