Sunday, April 21, 2013

இத்தாலி பெஸ்தோ துவையல் மற்றும் பி பி சீனிவாஸ்

இத்தாலி பெஸ்தோ துவையல்

பெஸ்தோ என்பது ஒரு இத்தாலி வகை துவையல். அமிலத்தன்மையின்றி சாத்வீகமான சுவை உடையது. சுவையாகவும் வாசமாகவும் இருக்கும். ஸ்பெகட்டி, பஸ்தா, சோறு போன்றவற்றுடன சேர்த்து கிளறி சாப்பிடலாம். பிஸ்ஸா, ரொட்டியை ஓவனில் சுடுவதற்கு முன் அவற்றின் மேல் பெஸ்தோவை லேசாக பூசி சுட்டால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். …பெஸ்தோ தயாரிக்க துளசி பயன்படுத்தப்படுகிறது.  

துளசியிலையில் பலவகை உண்டு. இத்தாலி உணவில் துளசி அதிகமாக பாவிக்கப்படுகிறது. உணவிற்கு பயன்படுத்தப்படும் இவ்வகை துளசி "இனிப்புத் துளசி" (Sweet Basil) எனப்படுகிறது. என்னதான் இந்தியாவில் துளசியை கடவுளாகவே வனங்கினாலும் இத்தாலி உணவுகளில் துளசியை பயன்படுத்துவதுபோல நாம் பயன்படுத்துதில்லை எனலாம்.


பர்மிஸான் ஒரு உலர்ந்த வகை பாலாடைக்கட்டி. விலை சற்று அதிகம். இத்தாலி உணவுகளில் இதை எப்போதும் லேசாக துருவிப் போடுவார்கள்.

 
ஒலிவ் எண்ணெய் உடல் நலத்திற்கு நல்லது. ஒமேகா 3 கொழுப்பைக் கொண்டது. இதை பொறிக்கப் பயன்படுத்துவது உடல்நலத்திற்குச் தீங்கு என்கிறார்கள். அதனால்  நம்ம ஊர் நல்லெண்ணெய் போல உணவில் நேராக கலந்து பயன்படுத்தலாம். இந்தியாவில் ஒலிவ் எண்ணெய் விலை அதிகம் என்பதால், பெஸ்தோவை செய்பவர்கள் நெய் அல்லது நல்லெண்ணெய் பாவிக்கலாம். இதில் ஒரு நகைச்சுவையான விடயம் என்னவென்றால் நம் மக்கள் இந்தியாவில் இருக்கும் போது ஒலிவ் எண்ணெய் மிகவும் நல்லது எனக்கூறி அதிகவிலை கொடுத்துவாங்கி பாவிக்கிறார்கள். இதுவே அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றால், நல்லெண்ணென் மிகவும் நல்லதென அங்கு அதிகவிலை கொடுத்து வாங்குகிறார்கள்.

இப்போது பெஸ்தொ செய்வதைப் பற்றி பார்ப்போம். நாம் வழக்கமாகச் செய்யும் புதினா துவையல், கறிவேப்பிலை துவையல், கொத்துமல்லி துவையல் போலத்தான் இதன் செய்முறையும். கடினமில்லை.

…தேவையான பொருட்கள்:

2 கோப்பை - துளசி இலை (Basil)
1/2 கோப்பை  - பர்மிஸான் சீஸ் (Parmesan Cheese)
1/2 கோப்பை - ஒலிவ் எண்ணெய்
1/4 கோப்பை - பைன் கொட்டை (Pine nut) அல்லது அக்ரோட் (Walnut)
2(அ) 3 பல் - தோலுரித்த உள்ளி (பூண்டு)
தேவையான அளவு - உப்பு மற்றும் மிளகு

பெஸ்தோ செய்முறை:


…1. துளசியிலையை அக்ரோட் (அ) பைன் கொட்டையுடன் சேர்த்து உரலிலிட்டு அரைக்கவும். தோலுரிக்கப்பட்ட பூண்டையும் சேர்த்து அரைக்கவும். அரைக்கும் போது சிறிதுசிறிதாக ஒலிவ் எண்ணெயையும் சேர்க்கவும்.
2. தேவையான அளவு உப்பையும், மிளகையும், பாமஸான் சீஸையும் சேர்த்து அரைக்கவும்.
 


சில குழந்தைகளுக்கு இந்தச் சுவை பிடிக்காமல் போகலாம். அப்போது கொஞ்சம் பால் விட்டு சூடாக்கிக் கிளறிவிட்டுக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும். 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நானும் என் மனைவியும் காதலிக்கும்போது, எங்கள் காதல் எப்படியோ அவளுடைய வீட்டிற்குத் தெரிந்துவிட்டது. எவ்வளவோ முயற்சித்தும் பிறகு அவளை தொடர்புகொள்ள முடியவில்லை. அன்று என் வீட்டிற்குச் செல்ல  இரவு ஒரு 8 மணியளவில் பேருந்திற்காக காத்திருந்தேன்.  தனியார் பேருந்துகள் அதிக இடங்களில் நின்று செல்லும், ஆகவே நான் அரசு பேருந்துகளில் அதிகம் பயணம் செய்வதுண்டு. அரசுப்பேருந்து ஒன்று வந்தது. அதில் ஏறச் செல்லும் வேளையில், அவளிடம் இருந்து ஒரு செல்போன் மெசேஜ். "என்னுடைய பெற்றோர்கள் உன்னுடன் என்னை வாழவிடமாட்டார்கள். என்னை மறந்துவிடு. உனக்குப் பிடித்த வேறு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்". பேருந்தில் ஏறி அமர்ந்தேன். இரவு என்பதால் பயணிகள் எண்ணிக்கை குறைவு. பேருந்தில் பி.பி.சீனிவாஸ் பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது. நான் அமர்ந்த நேரந்தானா அப்பாடல் வரவேண்டும். அதுவரை நான் மறைத்துவைத்திருந்த என் துக்கம் அழுகையாக வெளிவந்துவிட்டது. பிறகு இதுவே என்னுடைய பேவரைட் பி.பி.சீனிவாஸ் பாடலாக மாறிவிட்டது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

8 comments:

  1. குட்டிப்பிசாசு,

    யாரும் செஞ்சுப்பார்க்க மாட்டாங்க,அதனால பிரச்சினை வராதுனு தைரியத்தில தானே இப்படி இத்தாலி,அர்ஜென்டினா உணவு சமையல் குறிப்பு போடுறது :-))

    இனிப்பு துளசினு சொல்லும் போது தான் நம்ம மக்களின் நம்பிக்கை வித்தியாசமானதுனு தெரிய வருது, இங்கே கடையில துளசி விப்பாங்க அதுல ஒரு இலைய வாயிலப்போட்டுப்பார்த்துட்டு என்னப்பா காரமே இல்லை , துளசிக்கேட்டா கண்ட இலைய கொடுக்கிறனு சன்டைக்கு நிக்கிறாங்க.

    நானும் அப்படி வாங்கின இலைய சாப்பிட்டு பார்த்திருக்கேன் சில சமயம் சப்புனு இருக்கும் லேசா இனிச்சாப்போலவும் தெரியும், அப்போ தெரியாது இனிப்பு துளசி இருக்குனு எல்லாத்திலயும் கலப்படம் செய்றாங்கனு நினைச்சிக்கிறது.

    ----------

    பிபிஸ் பாடல்கள் நிறைய கேட்டுத்தான் இருக்கேன் ,வீடியோவா இப்போ யுடூப் புண்ணியத்தில பார்க்க முடியுது. இந்த பாட்டின் வீடியோ இப்போ தான் பார்க்கிறேன்.

    நல்ல சிச்சுவேசேஷனில் தான் பாட்டுக்கேட்டு இருக்கீர்!

    வெற்றியடைஞ்ச பின் கேட்டப்பாட்டும் போட்டிருக்கலாம் :-))

    ReplyDelete
    Replies
    1. …வவ்வால்,

      …//யாரும் செஞ்சுப்பார்க்க மாட்டாங்க,அதனால பிரச்சினை வராதுனு தைரியத்தில தானே இப்படி இத்தாலி,அர்ஜென்டினா உணவு சமையல் குறிப்பு போடுறது :-))//

      …பெஸ்தோ பஸ்டா எனக்கு ரொம்ப பிடிக்கும். புதுசா எதாவது ஒரு சாப்பாட்டுக்குறிப்பு போட நினைத்தேன். அதான் போட்டேன். தெரிஞ்ச சமையல் குறிப்பைப் போட நிறைய மாமிங்க இருக்காங்க.

      …//பிபிஸ் பாடல்கள் நிறைய கேட்டுத்தான் இருக்கேன் ,வீடியோவா இப்போ யுடூப் புண்ணியத்தில பார்க்க முடியுது. இந்த பாட்டின் வீடியோ இப்போ தான் பார்க்கிறேன்.//

      நான் ஏற்கனவே பாடல் மட்டுமல்ல படமும் பார்த்துள்ளேன். …வீட்டில் என்னுடைய அப்பா பழைய படங்கள் ஒரு வண்டி டிவிடி வச்சி இருக்கார்.

      Delete
  2. பிபிஸ்ரீனிவாஸையும் இத்தாலி பெஸ்தோவையும் எப்படியோ இணைத்திருக்கிறீர்கள். ஒருவகையில் பார்த்தால் பிபிஎஸ்ஸை இனிப்புத் துளசி என்றும் சொல்லலாம். காரமோ இனிப்போ ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கும். அத்தோடு அதற்கென்று ஒரு தனித்துவமும் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி.

      …//பிபிஎஸ்ஸை இனிப்புத் துளசி என்றும் சொல்லலாம்.//

      …சரியா சொன்னிங்க.

      Delete
  3. சில வாரங்களுக்கு முன் நீயா நானாவில் ஒரு பெண், துளசியை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் மேற்குலகில் பேசில் என்ற பெயரில் தினமும் சாப்பிட்டு ஆரோக்கியம் பேணுவதாக சொன்னார். பேசில் துளசி இரண்டும் சாப்பிட்டவன் என்பதால் குழம்பி போனேன். இரண்டுக்கும் சுவை, மணம் ஏணி வைத்தாலும் எட்டாது. பின்பு இணையத்தில் பார்த்த பின்தான் தெரிந்தது, பலர் இரண்டையும் சேர்த்து குழப்புவது.

    பேசில் அல்லது இனிப்பு பேசில் என்பது Ocimum basilicum. துளசி Ocimum tenuiflorum. இரண்டும் Ocimum குடும்பம் ஆனால் சுவை மணம் முற்றிலுமாக வேறுவேறு. இக்குடும்பத்தில் 35 சிற்றின தாவரங்கள் உள்ளன. இவற்றில் சில மட்டுமே துளசி என வகைப்படுத்தபட்டுள்ளன Krishna Tulsi (Ocimum sanctum),Rama Tulsi(Ocimum sanctum),Vana Tulsi (Ocimum gratissimum). இதில் முதலிரண்டும் வழிபாட்டுக்கு உரியவை.

    துளசி & பேசில் குழப்பம் தாய்லாந்து உணவினால் வந்திருக்கலாம். தாய் உணவில் துளசி Thai holy basil எனவும் பேசில் Thai basil எனவும் உணவில் சேர்க்கிறார்கள்.

    வவ்வால் குறிப்பிட்ட இனிப்பு துளசி என்பது சர்க்கரை நோயாளிகளால் சர்க்கரையின் மாற்றாக பயன்படுத்தப்படும் இனிப்பு இலைகள். இது சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்தது. இது stevia எனும் ஜீனஸ், இதில் 240 வகை தாவரங்கள் உள்ளன. இதற்கும் துளசிக்கும் சம்மந்தமில்லை.

    பேசில் பாஸ்தா பிட்ஸா என பல இத்தாலிய உணவு வகைகளில் உபயோகிக்கபடுகிறது. உணவில் துளசி/ இனிப்பு துளசி இதற்கு மாற்று அல்ல.

    ReplyDelete
    Replies
    1. நந்தவனம்,

      …ஸ்டிவியா என்பது நம் ஊரில் இனிப்புத்துளசி என அழைக்கப்படுவது எனக்குத் தெரியாது. சர்க்கரை நோயாளிகள் பருகும் பானங்களுக்கு இது பயன்படுத்தப்படுவதுண்டு.

      …//பேசில் அல்லது இனிப்பு பேசில் என்பது Ocimum basilicum. துளசி Ocimum tenuiflorum. இரண்டும் Ocimum குடும்பம் ஆனால் சுவை மணம் முற்றிலுமாக வேறுவேறு.//

      …நீங்கள் சொன்ன basil, நம்ம ஊரு துளசி இரண்டையும் என் வீட்டில் வைத்து வளர்ப்பதால் சொல்கிறேன். இரண்டிற்கும் சற்று சுவை மற்றும் மணத்தில் ஒற்றுமை உண்டு. முதன்முதலில் basil சாப்பிட்ட போதே நான் அதை உணர்ந்தேன். எதோ பழக்கப்பட்ட சுவை. வெளிநாடுகளில் வளரும் பேசிலை முழுமையாக வளரவிட்டால் தெரியும். அதுவும் பூ பூத்து நம்ம ஊரு துளசி போலவே இருக்கும். தாய் பேசிலின் இலைகள் பார்க்க நம்ம ஊரில் இருக்கும் துளசி போலவே இருக்கும். ஆனால் சற்று ஊதா நிறத்தில் இருக்கும்.

      …//உணவில் துளசி/ இனிப்பு துளசி இதற்கு மாற்று அல்ல. //

      …முயற்சி செய்து பார்த்தால் தெரியும். நான் இன்னும் முயற்சிக்கவில்லை. உபயோகிக்காமல் மாற்று அல்ல என சொல்ல இயலாது.

      Delete
    2. //இரண்டிற்கும் சற்று சுவை மற்றும் மணத்தில் ஒற்றுமை உண்டு.//

      அதிகமாக இத்தாலிய உணவு சமைப்பதில்லை என்பதினால் காய்ந்த பேசில் இலைகளை கடையில் வாங்கி மட்டுமே வீட்டில் பயன்படுத்துவது வழக்கம். துளசியை போல் அல்லாமல் பேசில் குறைந்த மணம் குணத்துடன் இருப்பதினால் உணர முடியவில்லை என நினைக்கிறேன்.இணையத்தில் சிலர் பாதியளவு துளசியை உணவில் உபயோகப்படுத்தினால் சுமாராக பேசில் போல வரும் என்கிறார்கள். ஆனால் பேசிலே வேண்டும் என்பவர்களுக்காக http://tinyurl.com/d8u445f கோயமுத்தூர்காரரான குப்புசாமி ஐயா பேசில் பற்றி எழுதிய பதிவு.

      Delete
    3. நந்தவனம்,

      …காய்ந்த அல்லது குளிர்சாதனத்தில் உள்ள பேசில் அவ்வளவாக மணப்பதில்லை. செடியாக வாங்கிப் பயன்படுத்திப் பாருங்கள். நன்றாக இருக்கும். கடைகளில் செடி நன்றாக வளர்வதற்காக பூக்கள் வெட்டப்படுகின்றன. நானும் பூக்களை வெட்டித்தான் வளர்க்கிறேன்.

      …குப்புசாமி ஐயாவுடைய மூலிகைப் பதிவு ஏற்கனவே படித்துள்ளேன் என் புக்மார்கிலும் உள்ளது.

      Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய