Friday, April 12, 2013

பைபோலார் டிஸ்ஆர்டர் (Bipolar Disorder) - சொந்த அனுபவம்

நண்பர்கள் உறவினர்கள் அருகில் இல்லாதபோது  கஷ்டம் என்று வந்தால் நமக்கு நாமே தான் ஆறுதல் சொல்லிக்கொள்ள வேண்டும். அத்தகைய ஒருசூழல் எல்லோருடைய வாழ்விலும் வருவதுண்டு. நானும் என் மனைவியும் காதல் திருமணம் புரிந்து கொண்டவர்கள். தனியாக இருக்க வேண்டிய கட்டாயம். எங்களுக்கு அப்போது பொருளாதாரரீதியாக சில பிரச்சனைகள் வேறு இருந்தன. என் தந்தையும் எங்களுடன் இல்லை.  என்னுடைய மனைவியை அவளுடைய பெற்றோர் சுத்தமாக புறக்கணித்து, பிரசவத்திற்கும் வரவில்லை. அவர்களுடைய வெறுப்புக்குக் காரணம்  ஒன்று எங்கள் காதல் திருமணம், இன்னொன்று நான் ஒரு இந்தியத்தமிழன்.

எங்களுக்குக் குழந்தை பிறந்து இரண்டே மாதமான நிலையில், திடீரென சில நாட்களாக என்னுடைய மனைவியின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள். அவள் வழக்கம் போல் இல்லாமல் அதிக பணச்செலவு செய்து கொண்டிருந்தாள். ஆன்லைனில் பல புத்தகங்கள் வாங்குவது , பெயிண்டிங்  ஆர்டர் செய்வது எனப் பல செலவுகள். என் மனைவிக்கு ப்ரெஞ்ச், ஸ்பானிஷ் கொஞ்சம் தெரியும். ஆனால் நன்றாகத் தெரியும் என்று சொல்லிக் கொண்டு அவளுடைய மச்சாளிடம் ப்ரெஞ்சில் கதைத்துக் கொண்டிருப்பாள். ஒரேசமயத்தில்இரண்டு மொழிகளுக்கும் மேற்படிப்புக்கு  பணம் வேறு கட்டிவிட்டாள்.  இதன்காரணமாக எனக்கும் அவளுக்கும் அடிக்கடி சில வாக்குவாதங்கள் நடந்தன. யாரிடம் அவ்வளவாகப் பேசாதவள், எல்லோருக்கும் போன் போட்டு மணிக்கணக்கில்  மொக்கை போடுவாள். நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை,நிறுத்தவும் இல்லை. அவளுடைய அடுத்த மாற்றங்கள் தொடர்ந்தன. இரவு தூங்குவதில்லை, அதிகமான சிந்தனை, படபட எனப் பேச்சு. நான் எதாவது கூறினால், 'என்னைக் கட்டுப்படுத்தாதே, நான் இப்போது தான் முழுசுதந்திரம் பெற்றதாக உணருகிறேன்' எனக் கூறுவாள்.

ஒருநாள் வேலையிலிருந்து வீட்டிற்கு வருகிறேன், வீட்டில் பல புதிய ரோஜாச்செடிகள். எதற்காக இவ்வளவு எனக் கேட்டேன். பிடித்திருந்தது, வளர்க்கப் போகிறேன் என்றாள். ஒரு வாரம் கழித்துப் பார்க்கிறேன், தண்ணீர் விடாமல் அவ்வளவு ரோஜாச்செடிகளும்  வாடிக் கிடந்தன. சில சமயம் தானே சமைக்கப் போவதாகக் கூறுவாள், ஆனால் சமைக்கமாட்டாள். சமையல்கட்டுக்கும், வரவேற்பறைக்கும் நடையாய் நடந்து கொண்டிருப்பாள். நான் சமைக்கிறேன் என்றாலும் விடமாட்டாள். அவளின் செயல்களில் மாற்றங்கள் இருப்பதாகச் சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டாள். எனக்குத்தான் பிரச்சனை என்பாள். ஒரு கட்டத்தில் அவள் மீதான வெறுப்பு எனக்குள் கூடிக்கொண்டே போனது. இனி இவளுடன் வாழ இயலாது என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். இப்படியே சில நாட்கள் கழிந்தன.

ஒருமுறை சிகிச்சைக்காக எங்களின் குடும்ப மருத்துவரிடம் சென்றாள். மருத்துவரிடம் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இத்தனை நாட்கள் என்ன நடந்தது என விசாரித்தார். நான் எல்லாவற்றையும் கூறினேன். என்னுடைய மனைவியை மனநல மருத்துவமனைக்கு அனுப்பப் போவதாகவும், குழந்தையை நான் தனியாக கவனிக்க இயலுமா? எனவும் கேட்டார். நான் இயலும் என்றேன். அன்று மாலை நானும் குழந்தையும் மருத்துவர் குறிப்பிட்ட மருத்துவமனைக்குச் சென்றோம். என் மனைவியைச் சந்தித்தேன். குடும்பமருத்துவரை சிறிதுநேரம் திட்டினாள். தன்னை மருத்துவர் தவறாகப் புரிந்துகொண்டு இங்கே அனுப்பிவிட்டதாக கூறினாள். சிறிது நேரம் கழித்து, மருத்துவமனையின் மருத்துவர் என்னை அழைத்துப் பேசினார். நான் என் மனைவியின் செயல்பாடுகளில் மாற்றங்கள் இருப்பதாகக் கூறினேன். நான் வருவதற்கு முன் இதே மருத்துவர் அவளையும் விசாரித்திருக்கிறார். அவளும் என்னுடைய செயலில் மாற்றங்கள் இருப்பதாகக் கூற, மருத்துவருக்கு ஒரே குழப்பம். குடும்ப மருத்துவருக்கு தொலைபேசினார். பிறகே அவர் குழப்பம் தீர்ந்தது. என் மனைவி "குழந்தை எப்படி இருக்கிறது, என்ன சாப்பிட்டாள்" என ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. "எனக்கு இங்கு சாப்பாடு பிடிக்கவில்லை, நாளை வரும்போது சமைத்துக்கொண்டுவா" என்றாள். மறுநாள் அவளுக்காக சமைத்துக்கொண்டு போனேன், ஆனால் அவளோ கரண்ட் பில் கட்டிவிட்டாயா, வாடகை கட்டிவிட்டாயா என வழக்கம்போல திட்டத்தொடங்கிவிட்டாள். கிளம்பும்போது, அவளுடைய தோடுகள், மேக்கப் பொருட்களைக் கொண்டுவருமாறு சொன்னாள். புதிதாகச் சேர்ந்த வேலைக்குப் போகமுடியவில்லை, வேலை போய்விடுமோ என்ற பயம் ஒரு பக்கம். மனைவியின் நிலை என்ன ஆகும் என்பது ஒரு பக்கம். இரண்டு மாதக் குழந்தையை ஒரு பக்கம். என் வாழ்க்கையில் இப்படி ஒரு வேதனையை நான் அனுபவித்ததே இல்லை எனலாம்.


அறையைவிட்டு வெளியேறும்போது தலைமைமருத்துவர் என்னை சந்திக்க வேண்டுமென்றார். போய் சந்தித்தேன். நடந்தவற்றை விசாரித்தார். என்னுடைய மனைவிக்கு வந்திருப்பது பைபோலார் டிஸ்ஆர்டர் என்றார். அவர் சொன்னதாவது: மனிதனுக்கு ஏற்படும் Mood ஒரு அலை போல, சில சமயம் மகிழ்ச்சி சில சமயம் கவலை என்று வரும். ஆனால் அது ஒரு கட்டுக்குள்ளே இருக்கும். பைபோலார் டிஸ்ஆர்டர் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியும் கவலையும் உச்சமாக இருக்கும். மகிழ்ச்சியின் உச்சத்தில் அபரிமீதமான எனர்ஜி (Mania) வெளிப்படும். மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்ததும் அடுத்து அதள பாதாளமாக கவலை (Major depression) வந்துவிடும். அக்கட்டத்தில் ஒருவர் தற்கொலை கூட செய்துகொள்வார்கள். சரியான சமயத்தில் சிகிச்சை அளித்தால், பைபோலார் டிஸ் ஆர்டர் போன்ற மனசிக்கல்களை மருந்தின் மூலம் குணப்படுத்த முடியும். 

என் மனைவி சரியான சமயத்தில் சிகிச்சைப் பெற்றதால், அடுத்தகட்ட பாதாள கவலை Phase-க்குப் போகவில்லை.  சுமார் மூன்று வார சிகிச்சைக்குப் பின்னர், என் மனைவி குணமடைந்துவிட்டாள். தற்போது என்னுடைய மனைவி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறாள். 

நான் மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் எச்சரிக்கையாய் இருப்பது நன்று. வந்தபின் நொந்து கொள்வதைவிட, வருமுன் காப்பது நலம். உங்கள் உற்றார் உறவினர் இதுபோன்ற எதாவது மனச்சிக்கல்கள் இருந்தால், உரிய சிகிச்சை எடுக்க உதவுங்கள். ஏனென்றால் இதுபோன்ற தனிநபரின் செயல்பாடுகளை நெருங்கியவர்களால் மட்டுமே உணர முடியும். எனக்கு நேர்ந்ததைப் போல உங்களுக்கும் நேராமல் பார்த்துக்கொள்வீராக. கொஞ்ச நாட்கள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, புட்டிப்பாலுடன் திரிய வேண்டிவந்தது. ஆனால் எப்படியோ யார் உதவியும் இல்லாமல் தனியாளாக சமாளித்துவிட்டேன்.


16 comments:

  1. but i missed and lost my wife last month :(

    ReplyDelete
  2. முதலில் உங்களுக்கு என் பாராட்டுக்கள் மனைவியை விட்டுப் பிரியாமல், சிகிச்சை அளித்தமைக்கு. இரண்டு சில பத்திகள் இரு முறை பதிந்துள்ளது கவனிக்கவும். இந்த பாழாய் போன வியாதி எனக்கும் வந்தது, எப்போது இருந்து இது இருக்கென எனக்குத் தெரியாது கடந்த மூன்றாண்டுகள் மிகுதியானது. கடந்த ஆண்டு வலைப்பதிவில் இருந்து விலகியதும் அதனால் தான், ஆனால் தொடர் சிகிச்சையின் பலனாய் மூட் கட்டுக்குள் உள்ளது. ஆனால் பல விடயங்களையும், சில உறவுகளையும் இழந்துவிட்டேன், போனது போகட்டும் புதிய வாசல்கள் திறந்து வருகின்றன..

    ReplyDelete
    Replies
    1. /7முதலில் உங்களுக்கு என் பாராட்டுக்கள் மனைவியை விட்டுப் பிரியாமல், சிகிச்சை அளித்தமைக்கு. இரண்டு சில பத்திகள் இரு முறை பதிந்துள்ளது கவனிக்கவும்.//

      நன்றி. நான் கவனிக்கவில்லை. சரி செய்துவிட்டேன்.

      …//இந்த பாழாய் போன வியாதி எனக்கும் வந்தது, எப்போது இருந்து இது இருக்கென எனக்குத் தெரியாது கடந்த மூன்றாண்டுகள் மிகுதியானது.//

      …கவனமாக இருக்கவும்.

      Delete
  3. Tamil movie '3' tells about bipolar disorder. Hero thanush is suffering from biploar disorder..... finally he commit suicide......in the film doctor describes about bipolar disorder, its symptoms,

    ReplyDelete
    Replies
    1. dear friend,
      It is an idiotic movie and describes nothing. a complete exaggeration.

      Delete
    2. Have seen Aarohanam movie they would have tried to say little more detailed than 3 movie, but still many scenes are dramatic

      Delete
  4. உங்கள் மன உறுதியைப் பாராட்டுகின்றேன். மனைவியின் மீது வைத்துள்ள அன்பும் மாறவில்லை என்று அறிந்து கொண்டேன் உங்கள் பதிவின் முலம்.

    இனி எல்லாம் சுகமே. இனிய வாழ்த்து(க்)கள்.

    நல்லா இருங்க.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றியம்மா!

      Delete
  5. நீங்கள் தனியாளாக இருந்ததும் நல்லதற்கே. குடும்பத்தினர்கள் சில சமயம் இம்மாதிரிப் பிரச்சினைகளை ஊதிவிட்டு நம் கட்டுக்கடங்காமல் போகச் செய்வதும் உண்டு. உங்கள் அன்பாலும் அரவணைப்பாலும், மனைவியை குணப்படுத்தி இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. அதென்னமோ உண்மைதாங்க. குணமானாலும் எதாவது சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

      Delete
  6. where are you sir! it looks almost 80% is written by me.

    குலவுசனப்பிரியன்6:05 PM, April 13, 2013

    "நீங்கள் தனியாளாக இருந்ததும் நல்லதற்கே. குடும்பத்தினர்கள் சில சமயம் இம்மாதிரிப் பிரச்சினைகளை ஊதிவிட்டு நம் கட்டுக்கடங்காமல் போகச் செய்வதும் உண்டு" partially true because even when you are away like my case her parents hear most of time from her through phone and they defend her rather accepting the fact

    ReplyDelete
    Replies
    1. // partially true because even when you are away like my case her parents hear most of time from her through phone and they defend her rather accepting the fact //

      என்னைப் பொருத்தவரை குலவுசனப்பிரியன் சொன்னது சரி எனலாம். என் மனைவியின் எல்லாவற்றிற்கும் நான் தான் காரணம் என வெளிப்படையாக சொல்பவர்கள். டயபடிஸா நான் தான் காரணம். டெப்ரஷனா அதுக்கும் காரணம் நான் தான்.

      Delete
  7. குட்டிப்பிசாசு,

    ரொம்ப சிக்கலான சூழலையும் தனியாவே சமாளிச்சு வந்திருக்கீங்களே, பாராட்டுக்கள்.

    நம்ம ஊரில் இருந்தால் ,பிரச்சினையை இன்னும் பெரிதாக்கி இருப்பாங்க,காரணம் மக்களுக்கு சரியான புரிதலே இல்லை, கவுன்செலிங் எடுப்பதென்றாலே "பைத்தியம்" என சொல்லிவிடுவார்கள் அதுவேறு மன உளைச்சலை அதிகமாக்கும்.

    எங்க உறவினர் வீட்டில் ஒரு சிறு பெண் ,அதற்கு மூளை வளர்ச்சி குறைவு,ஆனால் அதை மெண்டல்னு சொல்லும் கொடுமை நடக்குது. எல்லாரும் சகஜமா அது மெண்டல் அப்படித்தான் செய்யும்னு சொல்லுறாங்க. டிரீட்மெண்ட் வேறு கொடுக்க மாட்டேங்கிறார்கள், கொஞ்சம் வயசான தெளிஞ்சிடும் என சொல்கிறார்கள்.அறிவுறை சொல்லி வாய் வலிச்சது தான் மிச்சம்.

    இந்திய சூழலில் சிலவற்றை செய்யவே தயங்குகிறார்கள்.அதுவே மேலும் சிக்கலாக்குகிறது.

    ReplyDelete
    Replies
    1. வவ்வால்,

      …அப்படி ஒருவேளை குணமானாலும் நடந்ததை ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். நம் மக்கள் இது போன்ற பிரச்சனைகளுக்கு விதி மீது பழியைப் போட்டுவிடுவார்கள்.

      Delete
  8. Could you share the Dr's name and address

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய