

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் ஒரு நேர்மையான குடும்பஸ்தனின் வாழ்க்கையில் மனைவி கேட்கும் சில கேள்விகள் புகுந்து அவனின் பாதையை மாற்றிபோடுவதே கதை. குளிர்பானத்திற்கு 2 ரூபாய் அதிகமாக விற்கும் இடத்தில் துவங்கி, காவல்துறையின் ஒழுங்கினம், பாதையில் பைக் நிறுத்துவது, போதைப்பொருள், மருத்துவமனையில் நிகழும் பிரச்சனை என எல்லாவற்றையும் உடைத்தெறிகிறார். பிறகு என்ன? ஒரு பக்கம் காவல்துறை தேடல், மனைவி குழந்தைகளோடு ஒரு பக்கம் புலம்பி அழ, நாயகன் தன் வழியில். எல்லாருக்கும் இருக்கும் சமுதாய சமத்துவ உணர்ச்சி மேலெழும்பி மறுபடியும் நாயகன் ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதே முடிவு. முடிவில் சமூக இன்னலுக்கு வன்முறை தீர்வல்ல என்று கூறுவது இது ஒரு மசாலாப்படம் அல்ல என்பதை மறுபடியும் உணர்த்துகிறது. கதை கொஞ்சம் மெதுவாகத்தான் நகர்கிறது, ஆனால் நல்லப்படத்தைப் பார்ப்பதற்கு இதைப் பொறுத்துக் கொள்ளலாம்.
காவல்துறை அதிகாரியாக வரும் சீமான் சங்கீதாவிடம் விசாரணை நடத்துவது காவல்துறை பெண்களிடம் எப்படி விசாரிக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம். கதாநாயகன் ஒரு பிராமண இளைஞனாகக் காட்டுவதற்கு மாதவன் நாமம் சாத்திக்கொள்வதையோ, சந்தியாவந்தனம் செய்வதையோ (சங்கர் படத்தில் வருவது போல) காண்பிக்காமல் வெறும் பேச்சில் மட்டும் உணர்த்தி சராசரி தமிழனாக உலவவிடுவது சிறப்பு்.
என்னவென்று தெரியவில்லை சமீபத்தில் வந்த எல்லாப்படங்களும் யதார்த்தமான, அருமையான படங்களே தமிழில் வந்துள்ளது. இது தான் தமிழ் திரைத்துறை வளர்ச்சிக்கு ஆரோக்கியம். ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்களில் வரும் படங்கள் மத்தியில் ஒன்பது ரூபாய் நோட்டு, எவனோ ஒருவன் படங்கள் அத்திப்பூக்கள் தான். கண்டிப்பாக பார்க்க கூடிய படம். டோண்ட் மிஸ் இட்!!
**************************** ******************************* ******************************* ***************
ஒன்பது ரூபாய் நோட்டு படத்தை பார்த்து நெகிழ்ந்து போன பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் தலைவர் சாமிநாதன், தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான 100 தியேட்டர்களில் படத்தை திரையிட சம்மதித்துள்ளார். இந்த படத்தை பார்க்கிற ரசிகர்கள், தியேட்டருக்கு வெளியே இருக்கிற உண்டியலில் விரும்பிய பணத்தை செலுத்தலாம். அது ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி, ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி. அது அவரவர் விருப்பம். உண்டியலில் பணம் செலுத்தாமல் இலவசமாக படத்தை பார்த்துவிட்டும் செல்லலாம். இந்த நிபந்தனையின் பேரில் இப்படியரு படத்தை திரையிடுவது தமிழ்சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாகும்!
மிக அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை திரையிட சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் திண்டாடி வந்த இயக்குனர் தங்கர்பச்சான், பிரமிட் சாய்மீராவுக்கு சொந்தமான ஏழு தியேட்டர்களை வாடகை அடிப்படையில் கேட்டுப்பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தாராம். ஆனால், அவர் கேட்பதற்கு முன்பாகவே முந்திக்கொண்ட அந்நிறுவனம், இவ்வளவு அற்புதமான படத்திற்கு நாங்கள் இலவசமாகவே தியேட்டர் தருகிறோம். அதுவும் 100 தியேட்டர்களை! என்று சொல்ல, பரவசத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார் தங்கர்.
எதிர்வரும் ஞாயிறன்று தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான 100 திரையரங்கங்களில் இந்த படம் ஒரு காட்சி மட்டும் திரையிடப்படும். வெளியே உண்டியலில் விழுகிற பணம் அத்தனையும் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தை எடுக்க முன்வந்த தயாரிப்பாளருக்குதான். அதில் ஒரு பைசா கூட தங்களுக்கு வேண்டாம் என்று பெருந்தன்மையோடு தெரிவித்துவிட்டார் அந்நிறுவனத்தின் இயக்குனர் சாமிநாதன். அவரின் இந்த பெருந்தன்மையான செயலுக்கு சத்யராஜ், நாசர், அர்ச்சனா, ரோஹினி உள்ளிட்ட அத்தனை பேரும் நேரடியாக நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
நன்றி: தமிழ்சினிமா.காம்