Monday, August 27, 2012

ஒருவர் இன்னொருவராக மாறும் தன்மை

மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் 'மணிசித்ரதாழ்' என்றொரு படம் வந்தது. அதுவே பிறகு சந்திரமுகியாக தமிழிலும் கன்னடத்திலும் ரீமேக் ஆனது.  அந்தப் படத்தில் கதாநாயகிக்கு பேய் பிடித்திருப்பதாக காண்பிக்கப்படும், பிறகு அது personality disorder என தெரியவரும். நம்ம சரவணனாக ரஜினி வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் 'ஒருவர் இன்னொருவராக மாறும் தன்மை'. அது மட்டுமில்லை, 'இன்னொருவராக வாழும்தன்மையும் கூட'.

நான் துவக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும்போது, என்னுடன் உஷா என்றொரு பெண் படித்தாள். கொஞ்சம் கருமையான நிறம். சுருட்டையான முடி.  எங்கள் வகுப்பில் உள்ளவர்களைவிட இரண்டு வயது அதிகம். சரியாக படிக்காமல் மிகவும் மந்தமாக படித்ததால் அவளை 4ம் வகுப்பு அனுமதிக்காமல் எங்கள் வகுப்பிலேயே நிறுத்தி வைத்திந்தனர். வகுப்பில் எப்போதும் அமைதியாக இருக்கும் அவள் ஒருநாள் திடீரென சத்தமாக கத்த துவங்கிவிட்டாள். கண்களை உருட்டுவதும், சத்தமாக சிரிப்பதும் பார்க்க மிகவும் பயமாக இருந்தது. தன் கையில் இருக்கும் பல்பத்தினால் தரையில் ஒரு கோரமான உருவத்தை கீறி, 'இது நான் தான்' என சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள். சுற்றியிருந்த அனைத்து சிறுவசிறுமிகள் எழுந்து பக்கத்து வகுப்பிற்கு ஓடிவிட்டனர். நானும் எனது நண்பன் நந்தனும் சுவற்றோரமாக ஒட்டிக் கொண்டு நின்றோம். எங்களின் ஆசிரியை அவர்களுக்கும் என்ன செய்வதென்பது அறியாமல் திகைத்து நின்றார். உஷா தன் நிலை மறந்து, கண்களை உருட்டியும், நாக்கை வெளியே நீட்டிக் கொண்டும்  தொடர்ந்து சிரித்த வண்ணம் இருந்தாள். சிறிது நேரம் கழித்து உஷா மயங்கிவிட்டாள். அவளுடைய வீட்டிற்கு நடந்தவை தெரிவிக்கப்பட்டது. அவளுடைய மாமா வந்து அவளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

அன்று நடந்த சம்பவம் என் வாழ்வில் நான் எப்போதும் மறக்கவியலாது. அந்த உருண்ட விழிகள், கலைந்த கேசம் கொஞ்சம் திகில் தான். அன்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு  ஒரு வாரம் கழித்து என் அம்மாவிடம் அன்று வகுப்பில் இருந்த ஆசிரியை உஷாவைப் பற்றி கூறிக்கொண்டிருந்தார். உஷாவின் தாய்-தந்தை இறந்துவிட்டனர். அவள் அவளின் மாமா வீட்டில் தங்கி இருந்தாள். தாயற்ற அவளை அவ்வீட்டிலுள்ளோர் அடித்து கொடுமைபடுத்திக் கொண்டு இருந்தார்கள். ஏன் அவள் அப்படிச் செய்தாள்? எதற்காக அவளுக்குப் பேய் வருகிறது? அது உண்மைதானா? இப்படி பல கேள்விகள் எனக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. பேய் பிடித்தது போல அவள் அன்று செய்தது, அவளுடைய வேதனையின் வெளிப்பாடாக இருக்கலாம். சில சமயம் மனிதன் தன்னை மற்றவர்களிடம் இருந்து காத்துக் கொள்ள அல்லது மற்றவர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க, இவ்வாறு வேறொரு வியக்தித்வத்தை உருவாக்குகிறான். ஆனால் காலப்போக்கில் இவனால் உருவாக்கப்பட்ட வியக்தித்வம் முழுமையடைந்து இவனையே ஆட்கொள்கிறது. அவ்வாறு ஆட்கொள்ளப்படும்போது, தன்னை ஆளும் வியக்தித்வத்திற்கேற்ப வெவ்வேறாக செயல்படுகிறான். உஷா தன்னை மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள உருவாக்கிய அந்த கோரமான உருவம் மனதளவில் முழுமையாக அவளை ஆட்கொண்டுவிட்டது.அவள் நிலை இப்போது என்ன என்று எனக்குத் தெரியாது. அவளை அப்போதே ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் காண்பித்திருந்தால் அவள் குணமாக வாய்ப்பிருந்திருக்கும்.

இன்று பேய் பிசாசு போன்ற நம்பிக்கை எனக்கு இல்லாவிடினும், அன்று நடந்தவற்றை நினைத்தால், நினைத்த மாத்திரம் லேசான பயம் வந்துவிடும். 

**********************************************************************************

Saturday, August 25, 2012

'ஆப்கான்' மகன்


 Killing each other over imaginary friends

 'ஆப்கான்மகன்' படத்திலிருந்து நெஞ்சை நக்கர மாதிரி ஒரு சீன். 


சிவாஜி கணேசன் : 1400 வருஷமா வேல்கம்பையும் கத்தியையும் தூக்கிட்டு மதம் மதம்னு  சுத்திகிட்டு இருந்த பயக! ஒசாமா பின்லாடன் மனித வெடிகுண்டுக்கு ஆள் வேணுனு கேட்டப்ப ஓடிப்போய் முதல்வரிசையில  நின்ன முக்காவாசி பயக  நம்ம பயகதேன். இப்ப திடீர்னு ஆயுதத்தை தூக்கிபோட்டு அவன விஞ்ஞானம் பேச கூப்பிட எப்படி வருவேன். நீ படிச்சவனாச்சே! கூட்டிகிட்டுவா! ஆனா அவன் நிதானமாதேன் வருவேன்.

 


உட்டாலக்கடி ஒபாமா: எம்புட்டு மெதுவாய்யா! அதுக்குள்ள நான் பதவில இருந்து போயிடுவனே!

சிவாஜி கணேசன் : பதவிய விட்டு போ! எல்லாபயபுள்ளயும் ஒரு நாளைக்கு பதவியில இருந்து போகவேண்டியவந்தேன். பணத்தை போட்ட உடனே பலனை எதிர்பார்க்கலாமா! ஈமு திட்டதுல காசு போடுரேன்! இன்னைக்கு அவன் ஏமாத்துவேன் ! பிறகு கோகோ திட்டமுனு ஏமாத்துவேன்! பிறகு பொடலங்கா திட்டமுனு ஏமாத்துவேன்! ஆனா பணம், நான் போட்டது! ஏமாறது என்ன பெருமையா  ஒருத்தனோட கடம!

…உட்டாலக்கடி ஒபாமா : ஐயா! இல்லயா! விடுங்கயா! நான் அமெரிகா போறன்யா!

 சிவாஜி கணேசன் : நீ பெரிசா எலக்ஷன்ல ஜெயிக்கரதுக்காக …பெரிய ஏரோப்ளேன்  வச்சி ட்வின் டவர் எல்லாம் இடிச்ச அந்த காட்டுமிராண்டிபயலுகளுக்கு என்ன பண்ண நீ! எதாச்சும் பண்ணு! பிறகு இன்னொருமுறை நோபல் பரிசு வாங்கு! அந்த மிஷைல் சக்களத்திய கட்டிகிட்டு ஊரெல்லாம் சுத்து. என்ன இப்ப! போயேன்.


உட்டாலக்கடி ஒபாமா : இல்லயா! நான் எதாவது செய்வன்யா! என்னை நம்புங்கயா!

சிவாஜி கணேசன் : உன்னதானய்யா நம்ப முடியும் ! உங்க அண்ணன் புஷ்யா நம்ப முடியும். வேற யார் இருக்கா!


**********************************************************************************

Prometheus


Chariots of god என்ற புத்தகம்  வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து போனதையும், அவர்கள் இங்கு விட்டுச் சென்ற அடையாளங்களையும் பற்றி கூறுகிறது. அதாவது நாம் கடவுள்களாக, தேவர்களாக நினைப்பது இவ்வாறு வந்துபோன வேற்றுகிரகவாசிகளே என்பதை உறுதிசெய்வது போல புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதற்கு உலகில் வெவ்வேறு காலங்களில் உருவாக்கப்பட்ட அதிசயங்களையும், கட்டிட சிறப்புகளையும், ஓவியங்களையும், சிற்பங்களையும், புராணங்களையும் எடுத்துக்காட்டாக்கி நூலாசிரியர் விவரிக்கிறார். ஆனால் இவையனைத்தும் பொய் என நிருபனமாகிவிட்டது.இதேபோன்ற மையக்கருத்தைக் கொண்டு ப்ரோமெதீயஸ் (Prometheus) திரைப்படம் வெளியாகியுள்ளது. ஏலியன் (Alien) தொடர்களின் ரசிகர்களுக்கு இப்படம் பெருத்த ஏமாற்றம். தொழிற்நுட்ப விடயங்களைத் தவிர்த்து படத்தில் சொல்லும்படி ஒன்றும் இல்லை.


ஏலியன் திரைப்படத்திற்கு பக்காவான திரைக்கதை, ஏலியனின் உருவ அமைப்பு (நீளமான தலை கொண்ட ஏலியன் - சுவீஸ் ஓவியர் H.R.Giger உருவாக்கியது, ஸ்பேஸ் ஜாக்கி), திரைக்கதையில் வரும் திருப்பங்கள் (அண்ட்ரொஐட், நெஞ்சை கிழித்துக்கொண்டு ஏலியன் வருவது) உட்பட  எல்லாம் ஏற்கனவே உருவாக்கப்பட்டு ரிட்லி ஸ்காட் கையில் கொடுக்கப்பட்டது. அவரும் நோகாமல் படம் எடுத்து பெயர் வாங்கிவிட்டார். மாறாக ப்ரோமெதீஸில் இவற்றில் இருந்த எதுவுமே இல்லை.

படத்தின் இயக்குனர் ரிட்லி ஸ்காட்டின் எலியன் படத்தின் சாயலை தவிர்க்க எண்ணி, வேறொரு கிறுக்குத்தனமான ஒரு கதைக்களனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். படத்தின் துவக்கத்தில் இருந்து முடிவு வரை சுவாரசியமில்லாமல் தேமே என படம் நகர்கிறது இல்லை ஊர்ந்து செல்கிறது. 

**********************************************************************************

கொசுவர்த்தி சுத்தலாம் வாங்க 

கரகாட்டக்காரன் கவுண்டமணி - செந்தில் வாழைப்பழக் காமெடி வரும் முன்னாடியே, இது போன்ற ஒரு அனுபவம் நேர்ந்தது. நான் அப்போது 2வது படிக்கிறேன். என் தந்தை என்னை அழைத்து ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கி வரச்சொன்னார். அப்போது நேரம் இரவு 9 மணி இருக்கும். நான் வீட்டின் அருகே இருக்கும் கடைக்குச் சென்று, ஒரு சீப்பு வாழைபழம் கேட்டேன். கடைக்கார பாட்டியும் 6 - 7 பழங்கள் இருக்கும் ஒரு சீப்பைக் கொடுத்தார். நான் உடனே பாட்டியிடம் எதற்கு இவ்வளவு பழம், ஒரு சீப்பும் ஒரு வாழைப்பழமும் போதும் என்றேன். அந்தப்பாட்டியும் எவ்வளவோ சொல்லிப்பார்த்துவிட்டது. நான் கேட்பதாக இல்லை. கடைசியில் ஒரு சீப்பையும் ஒரு வாழைப்பழத்தையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன். நான் கொண்டு வந்த சீப்பையும் வாழைப்பழத்தையும் பார்த்து  சிரிக்கத்தொடங்கிய என் தந்தை ஒரு முப்பது நிமிடம் ஓயாமல் சிரித்தார்.  

***********************************************************************************

தொடரும் மாணவர் தற்கொலைகள்

ஐ.ஐ.டி சென்னையில் ஒரு மாணவி தற்கொலை, போன வாரம் படித்திருப்பீர்கள். இந்த வாரம் மறுபடியும் ஐ.ஐ.டி கான்பூரில் ஒரு மாணவன் விஷம் குடித்துத் தற்கொலை.

…நான் ஏற்கனவே பதிவிட்ட ஒரு பதிவை மீள்பதிவு செய்கிறேன். 

3 idiots திரைப்படம் தொடங்கிய நான்காவது நாளில் 100 கோடியைத் தாண்டியுள்ளதாம். அப்படி ஒரு வரவேற்பு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில். படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி (முன்னாபாய் MBBS-ன் இயக்குனர்). மேலும் இப்படத்தில் அமீர்கான் நடித்துள்ளார். Chetan bhagat எழுதிய Five point something கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், சிலக் கல்லூரிக் காட்சிகளில் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளது. சரி இப்போது விடயத்துக்கு வருவோம். இந்தப் பதிவு படத்தைப் பற்றிய விமர்சனம் அல்ல. இப்படத்தில் கதை தொட்டுச்செல்லும் இந்திய மாணவ சமுதாயம் எதிர்நோக்கும் சில பிரச்சனைகள். 1.மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பாடத்துறையைத் தேர்ந்தெடுக்காமல், பெற்றோரின் விருப்பத்தின் பேரில் சுயவிருப்பமின்றி  பாடத்துறையை தேர்ந்தெடுப்பது, 2. பேராசிரியர்கள், விரிவுரையாளர்களால் மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் மன அழுத்தங்கள், 3. இவ்வாறான மன அழுத்தங்களால் எற்படும் மாணவத் தற்கொலைகள்.


மருத்துவதுறை கிடைக்காத பெண்ணை வீட்டில் உள்ளோர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை. இது என் நண்பன் வீட்டில் நடந்த ஒரு சம்பவம். இதற்குக் காரணம் என்ன? விருப்பமில்லாத பாடத்தைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துவது, அப்படி படிக்கமுடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்தால் திட்டுவது. முடிவு தற்கொலை. இதுபோல ஏராளமான செய்திகள் பத்திரிகைகளில் தேர்வுமுடிவுகள் வரும் மாதங்களில் வருவதுண்டு. பெரும்பாலான பெற்றோர்கள் “நீ டாக்டராக வேண்டும். இஞ்னியராக வேண்டும்” என்று பிள்ளையின் சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொண்டு வருவார்கள். இப்படி இவர்களால் கட்டமைக்கப்பட்ட கோட்டை ஒருவேளை சரிந்துவிட்டால், மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தானாகவே தற்கொலைக்குத் தயாராகிறார்கள். போதிய படிப்பறிவோ, விழிப்புணர்ச்சியோ இல்லாத பெற்றோர்கள் எப்படியாவது பணத்தை செலவழித்து தன் பிள்ளையை ஒரு பொறியியல் பட்டப்படிப்பையோ, ஒரு மருத்துவப்பட்டப் படிப்பையோ படிக்க வைத்து விடவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படுவதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை. தொடர்வண்டியில் செல்லும் போது என்னிடம் ஒரு பெரியவர் சொன்னது “என்னோட மகளை என்னுடைய நாலு ஏக்கர் நிலத்தை அடகு வைத்து இஞ்னியரிங் படிப்புக்கு …….. காலேஜில் சேர்த்து இருக்கிறேன்.”. இன்றைய நிலையில் இந்தியாவில் பெரும்பாலான கல்லூரிகள் அரசியல்வாதிகளாலும், மந்திரிகளாலும், பினாமிகளாலும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுள் சரியான கல்வி, கட்டுமான வசதிகள் இல்லாவிடினும் மத்திய அங்கீகாரம் பெற்று மக்களை ஏமாற்றி பணத்தைக் கரந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கல்விகற்க போதிய வசதியற்றக் கல்லூரியைத் தான் பெரியவர் குறிப்பிட்டார். கிராமத்திலிருந்தும் நகரத்திலிருந்தும் வரும் சராசரி மாணவர்களின் நிலை மிகவும் மோசமானது. அவர்களுக்கு என்ன பாடத்துறையைத் தேர்வு செய்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பிராக்டிகலாக  தேர்ந்தெடுக்கவும் தெரியாது, தங்களுக்கு எது விருப்பப் பாடம் என்று விவரிக்கவும் தெரியாது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நடக்கும்போது அங்கு கவுன்சிலிங் வரும் சில மாணவர்கள் அவ்வழியே செல்லும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களிடம் என்ன பாடத்துறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கேட்பதை பலமுறைப் பார்த்திருக்கிறேன். போகிறபோக்கில் அவர்களும் எதாவது தோன்றுவதைச் சொல்லிவிட்டுப் போவதுண்டு.

இந்தியாவின் கல்வித்தரமோ அதளபாதாளத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.IIT, மற்றைய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. IITகளும் அதிகப்படுத்தப்படவுள்ளன. நல்ல விடயம் தான். ஆனால் அதற்கான infrastructure வசதிகள் தயாராக உள்ளனவா என்றால்? இல்லை. இப்படி கட்டுமான வசதியில்லாமல் மாணவர் சேர்க்கை மட்டும் அதிகரித்தால், கல்வித்தரம் குறையும், விடுதி மாட்டுக் கொட்டகை போல் இருக்கும். இப்போதே விடுதியில் ஒரு அறைக்கு 2 அல்லது 3 ஆட்களை அடுக்கிக் கொண்டிருக்கிறது IIT எனும் இந்தியாவின் கார்போரேட் நிறுவனங்கள். இங்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் பொறியியல் மாணவர்கள் மலிவாக Microsoft, Google, Texas instruments, Cisco…. என பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். (ஆனால் வெட்கமே இல்லாமல் Dedicated to the Service of the Nation என்று போடுக்கொள்ளத் தெரியும் ) குறிப்பாக சொல்ல வேண்டுமானால் IIT மாணவர்களை இந்தியா பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது.



சரி ஒரு வழியாக மாணவன் தன்னுடைய விருப்பமான அல்லது விருப்பமற்ற பாடத்தையோ தேர்ந்தெடுத்துவிடுகிறான். அடுத்து அவன் சந்திக்கும் பிரச்சனைகள் அவனுடைய ஆசிரியர்கள் மூலமாக. இந்தியாவில் IITகள் தான் உயர்தர பொறியியல் கல்வியை வழங்குகிறது. அப்படி வழங்கிய கல்வியால் இந்தியாவிற்கும் இந்தியமக்களுக்கும் லாபம் வெகு குறைவே. இதற்கு பெரும்பாலானவர்கள் மாணவர்களைக் குறைகூறுவார்கள். ஏனென்றால் IIT-ல் படிக்கும் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் இது தவறான கூற்று. வெளிநாட்டு நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிப்பது யார்? கல்வி நிறுவனமா அல்லது கார்பரேட் நிறுவனமா என்று எண்ணும் அளவிற்கு ப்ரோஜக்ட்களை வாங்கிக் குவித்துப் பணம் சம்பாதிப்பது யார்? கார்பரேட் நிறுவனம் கூட செய்த வேலைக்கு காசுகொடுக்கும் ஆனால் project work என்ற பெயரில் மாணவர்களை பெரும்பாலான ஆசிரியர்கள் ஓசியில் வேலை வாங்கவும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் (research journals, conference papers) எழுதவும், அதிலும் தன் பெயரை முதன்மையாக போட்டுக்கொள்ளும் அளவிற்கு கசக்கிப் பிழிகிறார்கள். அப்படி மாணவர்கள் மேற்சொன்ன வேலைகள் செய்யவில்லையா? கிரேட்(மதிப்பெண்) குறைக்கப்படும். மாணவனின் CGPA பொருத்து பெரும்பாலும் ப்ரோஜக்ட் ஆசிரியர்கள் ஒதுக்கப்படுவார்கள். அப்படி ஒதுக்கப்பட்ட ஆசிரியரின் கீழ் பணிபுரியும் மாணவன் அவரின் விருப்பப்பாடத்தில் தான் ப்ரோஜக்ட் செய்ய வேண்டும். இது தான் பொதுவாக எழுதப்படாத விதி. நிலைமை இப்படி இருப்பின் மாணவனைப் பெரும்பாலும் புதிதாக சிந்திக்க விடமாட்டார்கள். இந்திய அரசாங்கம் வெளியிடும் ப்ரோஜக்ட்களை முடிக்க கல்விநிறுவனங்களுக்கு முதலிடம் தரப்படுகிறது. இவற்றைப் பெரும் பேராசிரியர்கள் மாணவர்களிடம் காசில்லாமல் வேலை வாங்கிக் கொண்டு நிறைய பணம் பார்க்கிறார்கள். உதாரணமாக இந்திய அரசு நிறுவனத்திற்காக ஒரு சாப்ட்வேர் தயார்செய்ய 20 லட்சம் மதிப்பிலான ஒரு ப்ரொஜெக்ட் விளம்பரம் செய்யப்படுகிறது. கல்விநிறுவனத்திற்கு முதலிடம் என்ற வகையில் அந்த ப்ரோஜக்ட்டை ஏற்றுக்கொள்ளும் ஒரு பேராசிரியர், தனக்குத் தொடர்புள்ள சாப்ட்வேர் நிறுவனங்கள் (TCS, CTS…..) மூலமாக சில முக்கிய moduleகளை முடித்துக் கொண்டு, மற்றவற்றை தன் கீழ் ப்ரோஜெக்ட் செய்யும் மாணவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிடுகிறார். சாப்ட்வேர் நிறுவனங்கள் செய்த வேலைக்கான பணம் போக மற்றவற்றை அவரே சுருட்டியும் விடுவார்.

IIT-ல் ஒரு சம்பவம் உங்கள் கவனத்திற்கு. முதல் வருடம் சரியாகப் படிக்காத Btech மாணவர்களை இரண்டாம் வருடம் performance சரியில்லை என்று அனுப்பியுள்ளார்கள். (குறிப்பாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள். இவர்கள் பெரும்பாலும் Hindiயில் படித்தவர்கள், கிராமப்புறத்தில் இருந்து வருபவர்கள். தன்னுடைய பிரச்சனையை ஆசிரியரிடம் முறையாக தெரிவிக்கத் தெரியாத பக்குவம் உள்ளவர்கள்)  தரத்தை மேம்படுத்துகிறேன் பேர்வழி என்று இந்த விடயம் கடந்த ஆண்டுகளில் நடந்தன. ஆனால் அதுபோல விதிமுறைகள் எதுவும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதுபோல நீக்கப்பட்ட மாணவர்கள் வழக்குத் தொடர, IIT வழக்குத் தொடர்ந்த மாணவர்களை மறுபடியும் சேர்த்துக் கொண்டது. முன்பு இந்த விதிமுறையால் பாதிக்கப்பட்ட மாணவகள் கதி என்னவென்று தெரியவில்லை.

IIT-ல் கடந்த நான்கு ஆண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் google-ல் IIT suicide என்று தேடிப்பாருங்கள்.
 மேலும் தகவலுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் சென்று படிக்கவும்.
http://iitsuicides.blogspot.com/

இந்தியாவில், 2006-ல் மட்டும் சுமார் 5897 மாணவர்கள் தேர்வுபளு காரணமாக (16 மாணவர்கள் /ஒரு நாள்) தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது வெறும் அதிகாரப்பூர்வமான தகவல். அப்படியாயின் உண்மை எவ்வளவு என்று தெரியவில்லை. தற்போது இதைவிட அதிகமாகக் கூட இருக்கலாம். இவற்றிற்கு காரணம், காதல் தோல்வி, தேர்வினால் மன அழுத்தம் என்று கூறி தப்பித்துக்கொள்ள முடியாது. இதையும் தாண்டி பெற்றோரின் புரிந்துகொள்ளாத மனப்பக்குவம், ஆசிரியர்களின் சுயநலம், வருங்காலத் தூண்களை துரும்புகளாக மதிக்கும் அரசு என பல முக்கிய காரணிகள் உள்ளன. மாணவர்கள் படிப்பிலும், வாழ்க்கையிலும் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க அவர்களிடம் ஒரு நண்பனைப் போல பழகி அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு தகுந்தவர்கள் (பிரச்சனைக்கேற்றவாறு) மூலம் கவுன்சிலிங் தேவை. அதை விடுத்து ஜோதிடரிடமும், சாமியாரிடமும் சென்று “என் மகனுக்கு எப்படி இருக்கும், என்ன ஆகும் என்று விசாரிப்பது”, மூடத்தனம் மட்டுமல்ல, பிள்ளைகளின் வேதனைக்கேற்ற மருந்தாக அமையாது. கீழ்தட்டு மக்களுக்கு மனநல மருத்துவம்,கவுன்சிலிங் எல்லாம் தற்போதைய சூழ்நிலையில் அணுக முடியாதவை தான். நம்முடைய சகபதிவாளர்கள் தம்மை இப்படி ஒரு உதவிகேட்டு வருபவர்களை கைவிடாமல் சரியான ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேற்கூறிய பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது சம்பந்தப்பட்ட பெற்றோரும், ஆசிரியரும், மாணவனும் கலந்தாலோசித்து எடுக்க வேண்டிய முடிவுகள் மட்டுமேயன்றி நாம் இதில் பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மேலும் இந்திய மக்கள் வருங்கால சமுதாயத்தைக் காப்பாற்ற பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களிடம் ஒரு நல்ல நண்பனைப் போல் நடந்து கொள்ளுங்கள்.


Don't try to fix the students, fix ourselves first. The good teacher makes the poor student good and the good student superior. When our students fail, we, as teachers, too, have failed.
- Marva Collins