Monday, August 27, 2012

ஒருவர் இன்னொருவராக மாறும் தன்மை

மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் 'மணிசித்ரதாழ்' என்றொரு படம் வந்தது. அதுவே பிறகு சந்திரமுகியாக தமிழிலும் கன்னடத்திலும் ரீமேக் ஆனது.  அந்தப் படத்தில் கதாநாயகிக்கு பேய் பிடித்திருப்பதாக காண்பிக்கப்படும், பிறகு அது personality disorder என தெரியவரும். நம்ம சரவணனாக ரஜினி வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் 'ஒருவர் இன்னொருவராக மாறும் தன்மை'. அது மட்டுமில்லை, 'இன்னொருவராக வாழும்தன்மையும் கூட'.

நான் துவக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும்போது, என்னுடன் உஷா என்றொரு பெண் படித்தாள். கொஞ்சம் கருமையான நிறம். சுருட்டையான முடி.  எங்கள் வகுப்பில் உள்ளவர்களைவிட இரண்டு வயது அதிகம். சரியாக படிக்காமல் மிகவும் மந்தமாக படித்ததால் அவளை 4ம் வகுப்பு அனுமதிக்காமல் எங்கள் வகுப்பிலேயே நிறுத்தி வைத்திந்தனர். வகுப்பில் எப்போதும் அமைதியாக இருக்கும் அவள் ஒருநாள் திடீரென சத்தமாக கத்த துவங்கிவிட்டாள். கண்களை உருட்டுவதும், சத்தமாக சிரிப்பதும் பார்க்க மிகவும் பயமாக இருந்தது. தன் கையில் இருக்கும் பல்பத்தினால் தரையில் ஒரு கோரமான உருவத்தை கீறி, 'இது நான் தான்' என சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள். சுற்றியிருந்த அனைத்து சிறுவசிறுமிகள் எழுந்து பக்கத்து வகுப்பிற்கு ஓடிவிட்டனர். நானும் எனது நண்பன் நந்தனும் சுவற்றோரமாக ஒட்டிக் கொண்டு நின்றோம். எங்களின் ஆசிரியை அவர்களுக்கும் என்ன செய்வதென்பது அறியாமல் திகைத்து நின்றார். உஷா தன் நிலை மறந்து, கண்களை உருட்டியும், நாக்கை வெளியே நீட்டிக் கொண்டும்  தொடர்ந்து சிரித்த வண்ணம் இருந்தாள். சிறிது நேரம் கழித்து உஷா மயங்கிவிட்டாள். அவளுடைய வீட்டிற்கு நடந்தவை தெரிவிக்கப்பட்டது. அவளுடைய மாமா வந்து அவளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

அன்று நடந்த சம்பவம் என் வாழ்வில் நான் எப்போதும் மறக்கவியலாது. அந்த உருண்ட விழிகள், கலைந்த கேசம் கொஞ்சம் திகில் தான். அன்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு  ஒரு வாரம் கழித்து என் அம்மாவிடம் அன்று வகுப்பில் இருந்த ஆசிரியை உஷாவைப் பற்றி கூறிக்கொண்டிருந்தார். உஷாவின் தாய்-தந்தை இறந்துவிட்டனர். அவள் அவளின் மாமா வீட்டில் தங்கி இருந்தாள். தாயற்ற அவளை அவ்வீட்டிலுள்ளோர் அடித்து கொடுமைபடுத்திக் கொண்டு இருந்தார்கள். ஏன் அவள் அப்படிச் செய்தாள்? எதற்காக அவளுக்குப் பேய் வருகிறது? அது உண்மைதானா? இப்படி பல கேள்விகள் எனக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. பேய் பிடித்தது போல அவள் அன்று செய்தது, அவளுடைய வேதனையின் வெளிப்பாடாக இருக்கலாம். சில சமயம் மனிதன் தன்னை மற்றவர்களிடம் இருந்து காத்துக் கொள்ள அல்லது மற்றவர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க, இவ்வாறு வேறொரு வியக்தித்வத்தை உருவாக்குகிறான். ஆனால் காலப்போக்கில் இவனால் உருவாக்கப்பட்ட வியக்தித்வம் முழுமையடைந்து இவனையே ஆட்கொள்கிறது. அவ்வாறு ஆட்கொள்ளப்படும்போது, தன்னை ஆளும் வியக்தித்வத்திற்கேற்ப வெவ்வேறாக செயல்படுகிறான். உஷா தன்னை மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள உருவாக்கிய அந்த கோரமான உருவம் மனதளவில் முழுமையாக அவளை ஆட்கொண்டுவிட்டது.அவள் நிலை இப்போது என்ன என்று எனக்குத் தெரியாது. அவளை அப்போதே ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் காண்பித்திருந்தால் அவள் குணமாக வாய்ப்பிருந்திருக்கும்.

இன்று பேய் பிசாசு போன்ற நம்பிக்கை எனக்கு இல்லாவிடினும், அன்று நடந்தவற்றை நினைத்தால், நினைத்த மாத்திரம் லேசான பயம் வந்துவிடும். 

**********************************************************************************

6 comments:

  1. நல்லதொரு பதிவு !!! Split personality என்றுக் கூட சொல்வார்கள் .. பொதுவாக மன அழுத்தம் மற்றும் ஜெனடிக் காரணங்கள் உண்டு .. சில நேரங்களில் நாம் ஒன்றும் செய்யாமல் இயல்பாக இருந்தால் கூட இவை ஏற்பட்டுவிடுவதுண்டு .... மனித மனம் சிக்கலானது தான் ...

    சில நேரங்களில் வேறு மொழி பேசுவது போல எல்லாம் நடைபெறுவது உண்டு கிராமங்களி வேப்பிலை அடிப்பதும், தேவாலயத்தில் பேய் விரட்டுவதும் இப்படியானவர்களைத் தான். உண்மையில் இவை மனநோய் என்று ஏற்கும் பக்குவமே நம்மவர்களிடம் இன்று வரை வரவில்லை என்றே சொல்லவேண்டும் !!!

    ஒருவித STIGMA இருக்கின்றது ... இந்தியாவில் மனநோயாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம் சமூக அழுத்தங்களால் பயந்துக் கொண்டும், அறியாமையாலும் புழுங்கிக் கொண்டு இருப்பவர்கள் மிக மிக அதிகம் .. லட்சத்தில் ஒருவரே மிகவும் முற்றிய பின்னரே மனநல மருத்துவரை அணுகுகின்றார்கள் ..

    பலருக்கு கடவுளும், சாமியார்களுமே கதியாகிவிடுகின்றன்ர் !!!

    ReplyDelete
  2. பேய்ப் பிடிச்ச தமிழ்க்கரம்மா உருது பேசுறாங்க, எப்படி பாஸ்? இத்தனைக்கும் அவங்க உருது காரங்க யார்கிட்டயும் பழகியது இல்லை, உருதில் ஒரு வார்த்தை கூடத் தெரியாது!!

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் தெரிஞ்சிருக்கும் வெளியில் சொல்லி இருக்கமாட்டாங்க. தெரியாத ஒரு மொழிய பேச வாய்ப்பில்லை. ஒரு உதாரணம். காலேஜில் என்னுடைய நண்பன் ஒருத்தன் தண்ணிட்யடிச்சா சரளமா ஆங்கிலம் பேசுவான். அவன் தண்ணியடிச்சதால ஆங்கிலம் சரளமா பேசல, தண்னியடிக்கும் போது அவனுக்கு பயமோ கூச்சமோ இல்லை, அதனால் தான் அப்படி ஆங்கிலம் பேசமுடியுது.

      Delete
    2. அந்தம்மா என் வீட்டுக்காரியின் சொந்த சித்தி, அவருக்கு உருதுல ஒரு வார்த்தை கூட தெரியாது, பேய் பிடிச்சப்போ சரளமா உருதுல வெளுத்து கட்டியிருக்காங்க, பேய் விரட்டிய பின்னர் இப்ப அவங்களால ஒரு வார்த்தை கூட பேச முடியாது. நண்பர் ஆங்கிலம்....ஹா...ஹா...ஹா.... ஒரு பட்டதாரி ஆங்கிலம் பேசுவதில் what is surprise in that!!

      Delete
    3. சொந்த அனுபவமா!

      இது போன்ற விடயங்களை சிறுவயதுமுதல் கேள்விபட்டிருந்தாலும், நான் இப்போது எதையும் நம்புவதில்லை.

      //what is surprise in that!!//

      தமிழ்வழிக்கல்வி படித்து கிராமப்புறத்திலிருந்து வரும் பல மாணவர்களுக்கு இந்த பிரச்சனை உண்டு.

      Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய