தமிழ் சினிமா என்றால் முதலில் எம்ஜிஆர், சிவாஜி பிறகு கமல், ரஜினி, இயக்குனர்களில் பாரதிராஜா, பாலசந்தர், மணிரத்னம், தற்போது அமீர், சேரன், சசிகுமார், மிஷ்கின் அவ்வளவு தான். சுதேசமித்திரன், சாருநிவேதிதா, ஜெயமோகன் போன்றோர்கள் பத்தி எழுத, நூல் எழுத தமிழ்சினிமாவை உலகத்தரத்துடன் ஒப்பிட்டு பெரிதாக கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அவர்கள் சொல்லும் கருத்து இத்தாலியப் படம் போல இல்லை, ரஷியப் படம் போல இல்லை என்பது தான். இவர்கள் தமிழ்படங்கள் பற்றி எழுத குறைந்தபட்சம் 70% படங்களாவது பார்த்திருக்க வேண்டும். இது முற்றிலும் இல்லை. மேலே சொன்ன ஆளுமைகளைத் தவிர்த்து மற்றவர்கள் பற்றி பெரிதாக அலசினார்களா என்றால்? அதுவும் சுத்தமாகவே இல்லை. எனக்குத் தெரிந்து R.P.ராஜநாயஹம் அவர்கள் தமிழ் படங்கள் பற்றியும், உலகப் படங்கள் பற்றியும் தெளிவான அறிவு உடையவர். அவர் பாலைய்யா, சுப்பைய்யா பற்றியும் பேசுவார், பெட்ரிக்கோ பெல்லினி பற்றியும் பேசுவார். ரோமன் பொலன்ஸ்கி படத்தையோ,பெட்ரொ அல்மொடொவர் படத்தையோ முன்வைத்து நம்ம ஊர் படத்தை விமர்சனம் செய்யமாட்டார்.
50-60களில் அந்தநாள், நடுஇரவில், பொம்மை போன்ற படங்களை இயக்கி, நடித்து, இசையமைத்த வீணை பாலசந்தர் ஒரு மறக்க முடியாத இயக்குனர். இவர் இயக்கிய அனைத்துப் படங்களும் திகில், நாடக வகையைச் சார்ந்தது.இவர் ஒரு வித்யாசமான படம் எடுக்க வேண்டும் என்றே எடுப்பார் போலிருக்கிறது.
எம்ஜிஆர், சிவாஜி நடித்துக் கொண்டிருந்த காலங்களில் ஜெமினிகணேசன் தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். கல்யாணப் பரிசு, மாமன்மகள், மிஸ்ஸியம்மா போன்ற சமூக படங்களானாலும் சரி,, வஞ்சிக்கோட்டை வாலிபன், பார்த்திபன் கனவு, கணவனே கண்கண்ட தெய்வம், மணளனே மங்கையின் பாக்கியம் போன்ற புராண, சரித்திர படங்களானாலும் சரி துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். 80-90களில் இவரின் பிரதியாக வந்தவர் கார்த்திக் என்று கூறலாம். ஜெமினிகணேசனைப் போன்றே காதல், நகைச்சுவை, துறுதுறுவென்ற நடிப்பு போன்றவற்றால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டவர். மௌனராகம் படத்தில் கார்த்திக் வரும் அந்த அரைமணிநேர காட்சியை யாராலும் மறக்க முடியாது. என் ஜீவன் பாடுது, இதயதாமரை, கிழக்குவாசல்,அமரன், நாடோடித் தென்றல் என்று வித்யாசமாக கலக்கிக் கொண்டிருந்துவிட்டு, ஒரு பிரேக்குப் பிறகு மறுபடியும் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, கோகுலத்தில் சீதை என அஜீத், விஜய் போன்ற இளைஞர்களுடன் போட்டியும் போட்டார்.
அதேபோன்று சத்யராஜ் வித்யாசமான நடிப்பு கொண்டவர். பாசில் இயக்கிய பூவிழி வாசலிலே, என் பொம்முகுட்டி அம்மாவுக்கு போன்ற படங்களில் நன்றாக நடித்தவர்.பெரியார், ஒன்பது ரூபார் நோட்டு போன்ற படங்களும் சொல்லத்தக்கவை. பெரியார் படத்தில் முதலில் சத்யராஜ் தெரிந்தாலும், வயதான பெரியாராக வரும்போது குரல், உடல்மொழி அனைத்திலும் பெரியாராக மாறிப் போய்விடுகிறார்.
மசாலா இயக்குனர்கள் என்று கூறி பாக்யராஜ், பாண்டியராஜன், கங்கைஅமரன் போன்றோரை சுத்தமாக ஒதுக்கித் தள்ளுவது பொருந்தாது. எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் போன்ற கங்கைஅமரன் படங்கள் நிஜ கிராம வாழ்க்கையை சொல்லவில்லை என்றாலும், ஒரு நல்ல முயற்சிகான படங்களாக எடுத்துக் கொள்ளலாம். இயக்குனர்கள் என்று வரும் போது பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் புகுத்தப்பட்டிருக்கும் ஒன்றிரண்டு மசாலா காட்சிகளைத்தவிர்த்தால் ஓரளவு கிராமத்துச் சூழலை காட்டக் கூடிய இயல்பான படமாகத்தான் இருக்கும். சுவரில்லாத சித்திரங்கள் பாக்யராஜ் கொஞ்சம் கொம்ப்ரொமைஸ் இல்லாமல் எடுத்த நல்ல படம். இன்று போய் நாளை வா என்ற படம் சிறந்த திரைக்கதையோடு கூடிய நகைச்சுவை படத்திற்கு உதாரணம். தூறல் நின்னுப்போச்சு படம் கிராம பின்னணியில் எடுக்கப்பட்ட காதல் படம். இந்த படத்தில் வரும் கிராமத்துக் கதாநாயகனுக்குப் பொருந்தக்கூடியவர் பாக்யராஜ் மட்டுமே. ஒருவேளை ராமராஜனும் பொருந்தலாம். கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படம் மிகையான செண்டிமெண்ட் காட்சிகள் இருந்தாலும், மதுரை சூழலில் அமைந்த ஒரு இயல்பான படம். ஸ்ரீவித்யாவின் ஒட்டாத பேச்சுதான் அந்த யதார்த்தமீரலுக்குக் காரணமாக நினைக்கிறேன்.
எப்படியோ அவள் அப்படித்தான் படத்தை மறக்காமல் குறிப்பிட்டு விடுகிறார்கள்.
பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் படம் மட்டும் இப்போது வந்திருந்தால், சுப்பரமணியபுரம், பருத்திவீரன் போன்ற படங்களை தின்று செரித்திருக்கும். இதுவும் சிறந்த திரைக்கதையோடு கூடிய நகைச்சுவை படம். இப்படத்தில் இளையராஜா தன் இசை மூலம் காதல் பரவசத்தை உருக்கியோட விடுவார். மேலே கூறிய இயக்குனர்கள் முன்னிருத்திய நிறைய படங்களுக்கு மெருக்கூட்டியவை இளையராஜாவின் இசை. அப்படியே இந்த ஒலிஒளித்துண்டைக் கேளுங்கள்.
நெத்தியடி என்றொரு பாண்டியராஜன் படம். அப்படத்தில் கதை வடதமிழகத்தில் நடக்கிறது. இப்படத்தில் வரும் பாட்டி இறந்து போன வீட்டில் நடக்கும் காட்சி மிகவும் இயல்பு. இப்படத்தில் ஜனகராஜும், பாண்டிராஜனும் அசல் வடதமிழகத்து வட்டார மொழியில் பேசுவார்கள். தமிழ்சென்னை முதல் தருமபுரி வரை ஓரளவு சென்னைத் தமிழ் போலத் தான் பேசுவார்கள். ஒன்பது ரூபாய் நோட்டு படத்திலும் சத்யராஜும், அர்ச்சனாவும் ஓரளவு விழுப்புரம் தமிழில் தான் பேசுவார்கள். எல்லாம் தங்கர்பச்சான் முயற்சியாக இருக்கும். ஆனால் காஞ்சிவரம் பொருந்தவே பொருந்தாத முகங்கள், பொருத்தமில்லாத நடை உடை பாவனைகள், இயல்புத் தன்மையே இல்லாத திரைக்கதை, ஒத்துப்போகாத பேச்சு மொழி என்று எக்கச்சக்க ஓட்டைகள் உள்ள படம். இப்படத்திலோ காஞ்சிபுரத்தில் „ஏலே, வாலே“ என்று தென்னாட்டு தமிழர்கள் போல பேசுகிறார்கள். பிரகாஷ்ராஜ் நடிப்பில் யாரும் குறைகூற இயலாது. காஞ்சிவரம் எப்படியோ இரண்டு தேசியவிருதுகளைப் பெற்றுவிட்டது.
(தொடரும்)
பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் படம் மட்டும் இப்போது வந்திருந்தால், சுப்பரமணியபுரம், பருத்திவீரன் போன்ற படங்களை தின்று செரித்திருக்கும். \\அது வெளிவந்த சமயத்தில் ரெகார்ட் பிரேக் செய்த படம்தான். அது தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல்தான், சந்தேகமேயில்லை.
ReplyDeleteஆங்கிலப் படங்களை காப்பியடித்து ஊருபட்ட படங்களை தமிழில் எடுத்துள்ளார்கள், அதில் கமழும், மணி ரத்னம், ஷங்கர், முருகதாஸ் எல்லாம் முன்னணி. Where is the question of world standard??!!
நன்றி
Delete