Monday, July 09, 2007

திரையுலக வித்தகர் அகிராகுரோசவா - 2

மேற்கத்திய கலைஞர் 'காட் பாதர்' படத்தின் இயக்குனர் ப்ரான்சிஸ் போர்டு கப்போலா அக்கிரோ பற்றி கூறுகையில் "பொதுவாக திரைகலைஞர்களுக்கு சிறப்பான படைப்பு என்பது அதிகபட்சம் இரண்டு அமைவதுண்டு. ஆனால் அகிரா 8-9 படைப்புகளை வழங்கியுள்ளார்" என தெரிவித்துள்ளார்.
அக்கிரோ வெறும் இயக்குனராக மட்டுமல்லாமல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, மற்றும் திரைக்கதை என ஒரு திரைப்படம் உருவாக காரணமான முக்கியமான துறைகளிலும் கால் பதித்துள்ளார். தன்னுடைய இடதுசாரிக்கொள்கைகளை படம் முழுவதும் விதைத்திருப்பார். 'செவன் சாமுராய்' படத்தில் வேளாளர்களின் வாழ்க்கைத்துயரங்களும், 'யொஜிம்போ'வில் பட்டுநெசவாளர்களைப் பற்றிய கூறுகளும் காணப்படும். அகிரா அறிமுகப்படுத்திய திரைப்பட யுக்திகள் இன்றளவிலும் பயன்படுத்தப்படுகிறது. பார்வையாளர்களை படம் பார்த்த பிறகு சிந்திக்க வைக்கக் கூடிய அற்புதமான கோர்வையான காட்சிகளையே அக்கிரோ உருவாக்கினார்.

செவன் சாமுராய் படம் கொள்ளையர்களிடம் இருந்து ஒரு கிராமத்தைக் காப்பாற்ற 7 சாமுராய்களுடன் வேளாளர்களும் போரிடுவதுதன் கதை.

செவன் சாமுராய் படத்தில் ஆரம்ப காட்சியில், கொள்ளையர்கள் வரப்போவதையறிந்து மக்கள் கூட்டமாக அமர்ந்திருப்பதை தொலைவில் இருந்து காட்டுவார், பிறகு அடுத்தடுத்த காட்சிகளில் காமெரா நெருங்கும். மூன்று பேரைக்காட்டுவார். பிறகு கருத்து தெரிவிப்பவனைக் காட்டுவார். குதிரைகள் வரும்போது அதனுடைய காலடிகள் காண்பிக்கப்படும், பிறகு அதனை எதிர்நோக்கும் வீரர்கள் முகங்களின் மிரட்சி காட்டப்படும். சண்டை நடக்கும் போதும் குதிரையின் கால்கள், சாமுராயின் கால்கள் மண்ணில் ஆடுவது காட்டப்படும், பிறகு கொள்ளையன் கொல்லப்பட்டு கீழே விழுவான். கடைசிக்காட்சிகளில் சாமுராய்கள் ஓடும் போது காமெராவும் அவர்கள் ஓடும் திசை நோக்கி திரும்பும்,அதனை நேர்த்தியான படத்தொகுப்பின் மூலம் இங்கும் அங்குமாக காட்சிகள் நகர்ந்து விறுவிறுப்பைக்கூட்டி சீட்டின் நுனிக்கு நம்மை கொண்டுவந்துவிடும். சில காட்சிகளில் கொல்லப்பட்டவர்கள் மெதுவான நகர்வில் விழுவதும் சிறப்பம்சம். 1954-ல் இந்த காட்சிகளை அவர் உருவாக்கியது தான் நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறது. பொதுவாக கட்சாட் மூலம் அம்பு பாய்வதை காண்பிக்காமல்,(அதாவது ஒருவர் அம்பு எய்வார், வேகமாக கேமிரா திருப்பத்துடன் எதிராளியின் உடம்பில் அம்பு படும்) அகிரா யதார்த்திற்காக உண்மையாகவே அம்பு எய்து காட்சிகளை எடுத்து இருப்பார்(நடிகர்கள் தடுப்பு வைத்திருப்பார்கள் என்பது அறிந்ததே!)

யொஜிம்போ என்றால் மெய்காப்பாளன் என்று பொருள். இப்படத்தில் கதாநாயகன் இரு தீயகும்பல்களால் அல்லல்படும் நகரத்தில் பிரவேசித்து, அவர்களுக்குள் சண்டையை ஏற்படுத்தி அழிப்பான்.

யொஜிம்போ படத்தில் கதாநாயகன் ஊரில் பிரவேசிக்கும்போது ஒரு நாய் துண்டான ஒரு கையை கவ்விச்செல்வது காட்டப்பட்டு, அதன்மூலம் அந்த நகரத்தின் நிலையை உணர்த்துவார். கடைசி காட்சியில் இலையின் மீது கத்தி எறிவது ரிவர்ஸாக காண்பிக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது, ஆனால் படம் பார்க்கும் போது அந்த நினைவை நமக்கு ஏற்படுத்தாது. 'பிஸ்ட்புல் ஆப் டாலர்ஸ்' படத்தில் செர்கியோ லியோன் (இவரைப்பற்றி என்னுடைய முந்தைய இடுகை 1, 2) காட்சிக்கு காட்சி யோஜிம்போவை தழுவி எடுத்தார். இப்படம் கிளிந்த் ஈஸ்ட்வுட்க்கு (மில்லியன் டாலர் பேபி, அன்பர்கிவன் போன்ற அகாடமி விருது பெற்ற படங்களை இயக்கி நடித்தவர்) பெரும் மைல்கல்லாக அமைந்தது.பிறகு 1996-ல் ப்ரூஸ்விலிஸ் நடித்து வெளிவந்த 'லாஸ்ட்மேன் ஸ்டாண்டிங்' என்ற படமும் இப்படத்தின் தழுவலே.




1990-ல் நடந்த 62வது அகெடமி விருது விழாவில், அகிராவின் திரைத்துறைப் சாதனைகளை மரியாதை செய்யும் வகையில், அவருக்கு விருது வழங்கப்பட்டது.

(ஸ்டார் வார்ஸ் புகழ் ஜார்ஜ் லுகாஞ் (இடது), அகிரா (நடுவில்),ஸ்டீவன் ச்பில்பர்க் (வலது))

ஸ்டார் வார்ஸ் வரிசைகள் அக்கிரோவின் 'ஹிட்டன் போர்ட்ரெஸ்' படத்தின் தழுவல். இப்படத்தின் கதை, நாட்டை இழந்திருக்கும் இளவரசியுடன் அந்நாட்டின் தளபதி ஒரு மறைவான கோட்டையில் தங்கி இருப்பார். பேராசை பிடித்த இரு வேளாளர்களின் உதவியுடன் எதிரி நாட்டின் வழியாக வேறொரு நாட்டிற்கு விறகுகளில் ஒளிக்கப்பட்ட தங்கத்துடன் பயணிப்பார்கள். பயணத்தின் இடையே பேராசையினால் வேளாளர்கள் இழைக்கும் தவறுகள், அதனால் வரும் இன்னல்கள், அதனை தளபதி எதிர்கொள்ளும்விதம் என விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. அடிமைகள் செய்யும் கலவரத்தின் போது, கோட்டையும்,காட்சியமைப்பு சிறப்பாகவும், யதார்த்தமாகவும் இருக்கும். தளபதிக்கும் எதிரிநாட்டு தளபதிக்கும் இடையே நிகழும் சண்டை நன்றாக படமாக்கப்பட்டு இருக்கும். மேற்க்கூறிய மூன்று படங்களிலும் செவன் சாமுராய் தவிர்த்து நடிகர் மிபியுன் கதாநாயகனாக நடித்தார். மூன்று படங்களும் கருப்பு-வெள்ளை படங்களாக இருப்பினும், சுவாரசியமாக இருக்கும். மேலும் தொடர்ந்து அடுத்த பாகங்களில் பார்ப்போம்.

7 comments:

  1. இன்னும் எழுதுங்கள். நல்ல தகவல்.

    ReplyDelete
  2. அகிரோவின் மற்ற படங்களைப் பற்றியும் எழுதுங்கள்.

    ReplyDelete
  3. ரஷோமான் படத்தில் இருந்த ஒரு காட்சி பல கோணத்தை விருமான்டியில் கமல் கையான்டு இருக்கிறார். மனி ரத்னம் கூட அவர் படங்களில் இருந்து சில உத்திகளை
    கையான்டு இருக்கிறார். ரெட் பியர்ட் பற்றி ஏதாவது எழுதுங்கள்

    ReplyDelete
  4. @ முரளி,
    இதுவரை ரெட் பியர்ட் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கல!!

    //மனி ரத்னம் கூட அவர் படங்களில் இருந்து சில உத்திகளை
    கையான்டு இருக்கிறார்.//

    ஆய்தஎழுத்து சொல்லுரிங்களா!

    ReplyDelete
  5. நன்றி

    குட்டிபிசாசு

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய