Sunday, November 18, 2007

வரலாறும் போரும் - 300 ஸ்பார்டன்ஸ் (1)

300 திரைப்படத்தில் லியானடஸ்

சமீபத்தில் வெளியான 300 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. அதற்கு முன்னரே காமிக்ஸாக வந்து உலகினரின் உள்ளங்களை கவர்ந்தது. இதனை இயற்றியவர் ப்ராங்க் மில்லர் என்ற நாவலாசிரியர் ( 'சின்சிட்டி'யும் இயற்றியவர் இவர்தான்). 300 கதை தெர்மோபைலி (நெருப்புவாயில் என்று பொருள்) என்ற இடத்தில் நிகழ்ந்த கிரேக்க-பாரசீக போரை மையமாகக் கொண்டு உருவானது. இப்படத்திற்கு இரானில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. காரணம், தவறான வரலாற்றுத் தகவல்கள். என்ன தான் கிராபிக்ச் யுக்திகளை கையாண்டு காமிக்ஸ் போல இருந்தாலும், பாரசீக படையை எதோ பேய்-பிசாசுகளைப் போல காட்ட விழைவது மிகவும் மோசமான செயல்.

"300 திரைப்படம் 90% வரலாற்றுரீதிலான உண்மைகளை உள்ளடக்கியது" என்று அப்படத்தின் இயக்குனர் கூறுவது காதில் பூ அல்ல பூந்தோட்டமே வைக்கும் வேலை.

இதே போரைக்கொண்டு 1962-ல் "300 ஸ்பார்டன்ஸ்" என்ற பெயரில் திரைப்படம் வெளிவந்து வெற்றியும் பெற்றது. ஆனால் போரின் யாதார்த்தமாக, மாயாஜால வேலைகளின்றி முழுமையாக சொல்லப் பட்டிருக்கும்.300 திரைப்படம் வெகுமோசமாக பாரசீகப் பேரரசைச் சித்தரித்தது. இதற்கு காரணம் பாரசீகம் தற்போதைய ஈரான் என்பது அனைவரும் அறிந்ததே.

லியானடஸ் ஓவியம்

கி.மு.480-ல் சிறிய கிரேக்க கூட்டணிக்கும் பாரிய பாரசீக பேரரசுக்கும் தெர்மோபைலி என்ற இடத்தில் இரண்டரை நாட்கள் போர் நடை பெற்றது. கிரேக்கப்படைக்கு லியானடஸ் தலைமை தாங்கினான். உலக வரலாற்றறிவியலின் தந்தை ஹெரோடோடஸ் கணக்கின்படி கிரேக்கப்படை 300 ஸ்பார்டண்களையும், 700 தெஸ்பியன்களையும், மற்றும் 5000 கிரேக்க வீரர்களையும் கொண்டிருந்தது. பாரசீகப்படை செர்செக்ஸ் தலைமையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படையுடன் போரிட்டது. பாரசீகப்படைக் கூட்டணியில் பாரசீகர்கள் தவிர்த்து, கிரேக்கம், சீனம், வடமேற்க்கு இந்தியாவைச்சேர்ந்த படைகளும் பங்கு பெற்றன. இத்தகைய மாபெரும் கூட்டணி எதிர்ப்பதென்பது சாதாரண விஷயமல்ல. பாரசீக படயடுப்பை அறிந்ததும், படையெடுப்பை எதிர்கொள்ள கிரேக்கத்தின் நாடுகளின் சபை கூட்டப்பட்டது. (பழங்காலங்களிலே கிரேக்கத்தில், கிரேக்க பிராந்தியங்களின் ஐக்கிய சபை உருவாக்கப்பட்டிருந்தது. இது தற்கால குடியரசு ஆட்சிக்கு முன்னோடியானது) . சந்திப்பில் கிரேக்கப்படைக்கு தலைமையேற்க ஸ்பார்டன்கள் அழைக்கப்பட்டார்கள். அதென்ஸ் கடற்படை பாரசீக கடற்படையை எதிர்கொள்ள தயாராகும் வரை, பாரசீகப்படைக்கு எதிர்ப்பு கொடுத்து நிறுத்த வேண்டும் என்பதே போர்வியூகம்.

தற்கால தெர்மோபைலி

ஏற்கனவே கி.மு.490 மாரதான் போரில் ஸ்பார்டன்கள் உதவி ஏதென்ஸ்க்கு கிட்டாமல் போனதற்கு காரணம், ஸ்பார்டன்களின் திருவிழாவாகும். கடவுளின் பேரில் போர்கள் காலந்தாழ்ப்பட்டன. அதேபோல இப்போரிலும் காலம் தாழ்த்தப்பட்டது. ஆனால் போரை பொருத்தவரை, காலம் மற்றும் இடம் மிகவும் முக்கியமானவைகள். இதனைப் புரிந்த லியானடஸ் தன்னுடைய மெய்காவலர்களுடன் போருக்கு புரப்படுகிறான். தெர்மோபைலி கணவாயில் தன்னுடைய படையை நிறுத்திக் கொண்டு போர் புரியத்தொடங்குகிறான். ஒரு பக்கம் மலையும், ஒரு பக்கம் கடலும் கொண்ட அந்த குறுக்கு வாயில், அதிக படையை அனுமதிக்காதது, லியானடஸ் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறான். இரண்டரை நாட்களில் சுமார் 20000க்கு மேற்ப்பட்ட பாரசீக படைவீரர்களை வீழ்த்தி லியானடஸும் அவனது வீரர்களும் இறுதிவரை போர் புரிந்து வீரமரணம் அடைகிறார்கள். ஆடுமேய்ப்பவன் ஒருவனால் மலையைக் கடக்கும் ஆட்டுப்பாதை வழியாக சில பாரசீக படைகள் முன்னேறி, லியானடஸின் படைகளை சுற்றி வளைக்கிறார்கள். இதுவே, லியானடஸின் ஆற்றலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. பிறகு முடிவில், வரும் ஸ்பார்டா படைகளாலும், ஏதென்ஸ் கப்பற்படையாலும் பெருமளவில் சேதமேற்படுத்தப்பட்டு, பாரசீகப்படை பின்வாங்குகிறது.

முதலில் கூறியது போல, போர் வெறும் படைபலத்தைப் பொறுத்து அமைவதில்லை. காலம், சூழ்நிலை, இடம, போர்வியூகம்் என பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது. லியானடஸ் தேர்ந்தெடுத்த தெர்மோபைலி கணவாய் தொட்டு நடந்த போர் பாரசீகத்தின் அசுர பலத்தை வெகுவாக முடக்கிவிட்டது. ஒரு சிறு கணவாயில் குறிப்பிட்ட அளவு படைதான் நுழைய இயலும் என்ற கட்டத்தில், இருதரப்பும் சமமான பலத்துடன் போர்புரியும் சூழல் வந்துவிடுகிறது. அது மட்டுமில்லாமல், கிரேக்கர்களின் படையமைப்பு வெகு எதிர்ப்பு திறன் கொண்டது. இதனால் போரின் முடிவு கிரேக்கர்கள் எதிர்பார்ப்பது போல அமைகிறது. அதுமட்டுமல்லாமல் கிரேக்கப்படை ஒரு தற்கொலைப்படை போல செயல்பட்டு, எதிரிக்கு பெரும் இழப்பை ஏற்ப்படுத்தியது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. மேலும் இத்தகையதொரு இழப்பு எதிரியின் மனவலிமையைக் குறைத்துவிடும்.

பாரசீக படையின் அளவைக் கேட்டும் கண்டும் எள்ளளவு மனம் தளராத ஸ்பார்டாவீரர்களின் வீரம் மெச்சத்தக்கது. ஹெரோடோடஸின் தொகுப்பில் சில:

"சரணடையாவிட்டால் பாரசீக அம்புகள் சூரியனை மறைத்துவிடும்" என்று ஒரு பாரசீகன் கூற்றுக்கு, "அப்போது நிழலில் நின்று போர்புரிவோம்" என்று டினிக்ஸ் என்ற ஸ்பார்டா வீரனின் பதில்.

"பாரசீகர்களின் கூடாரங்கள் வானத்து விண்மீன்கள் போல இருந்தன" என்று ஒரு ஸ்பார்டா வீரன் கூறுகையில், "நான் சிறுவயதில் விண்மீன்களைப் பார்க்கும்போது, ஈட்டியுடன் அதன் அருகில் செல்ல ஆசைப்பட்டேன். இப்போது நல்ல சந்தர்ப்பம்" என்று கூறும் லியானடஸ் வசனம். ஸ்பார்டா வீரர்களின் மனவலிமையை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

தற்போதைய ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் இந்த போரின் முக்கியத்துவத்தை வெகுவாக புகழ்ந்து பேசுகிறார்கள். போரை அவர்கள் அதிகம் சிலாகித்தாலும், அவர்கள் கூறும் முக்கிய காரணம். ஒருவேளை பாரசீகம் கிரேக்கத்தைக் கைப்பற்றி இருந்தால், இன்றைய ஐரோப்பா முற்றிலும் மாற்றத்தை சந்தித்திருக்கும். கிரேக்க நாகரீகமே அழிந்திருக்கும். அதன் நினைவாக, கிரேக்க அரசு தெர்மோபைலியில் லியானடஸுக்கு சிலை எழுப்பியுள்ளது.

சிலருடைய குறுகலான எண்ணங்களில் இப்படியும் தோன்றுவதுண்டு. என்னவென்றால், பாரசீகம் கிரேக்கத்தை வெற்றி கொண்டிருந்தால், இன்று கிருத்துவ மதம் அழிந்து உலகத்தின் ஏகமதமாக இஸ்லாம் இருப்பதற்கு வழிகோலி இருக்கும். லியானடஸ் அக்கால சிலுவைப் போராளியாக சித்தரிப்பது அமெரிக்கர்களின் பிற்போக்குஅடிப்படைவாதம் என்றும் கூறலாம்.

பி.கு.: மேலும் வரவிருக்கும் தொடர்களில் சந்திப்போம், பல்வேறு வரலாற்று போர்களையும் போர்முறைகளைப் பற்றியும் அலசுவோம். அதுவரை பொறுத்திருங்கள்

(தொடரும்)

300 ட்ரெய்லர்



16 comments:

  1. இந்தப்படம் மிகைப்படுத்தப்பட்ட வரலாற்று திரிபாக கருதப்படுகிறது. மேலும் மேற்கத்திய உலகில் இரானை குறித்து அரக்கர்கள் என்ற எண்ணத்தை உருவாக்க திட்டமிட்டு எடுத்ததாகவே படுகிறது. அதில் இடம்பெற்ற வசனங்களும் அப்படியே கூறுகிறது. கிரேக்கர்கள் மட்டும் கட்டுமஸ்தான அழகர்கள். பாரசீகர்கள் காட்டுமிராண்டிகள் போன்ற தோற்றமைப்பு பயன்படுத்தியதன் நோக்கம்? இது ஒரு படம்தானே, படத்தில் ஹீரோ அழகாகவும் வில்லன் அசிங்கமாகவும் இருப்பது இயல்பென்றல் வரலாற்று ஜல்லி எதற்கு?

    //சிலருடைய குறுகலான எண்ணங்களில் இப்படியும் தோன்றுவதுண்டு. என்னவென்றால், பாரசீகம் கிரேக்கத்தை வெற்றி கொண்டிருந்தால், இன்று கிருத்துவ மதம் அழிந்து உலகத்தின் ஏகமதமாக இஸ்லாம் இருப்பதற்கு வழிகோலி இருக்கும். லியானடஸ் அக்கால சுலுவைப் போராளியாக சித்தரிப்பது அமெரிக்கர்களின் நவீனத்துவநடை என்றும் கூறலாம்.//

    போர் நடந்ததாக கூறப்பட்டும் காலத்தில் இயேசுவே பிறந்திருக்கவில்லை. :) அப்போதய போரில் மதச்சாயம் இருந்திருக்கவில்லை. இப்போது அமெரிக்கா பூசுவது களவானித்தனத்துலும் கேடு கெட்டது.

    மற்றபடி, வரலாற்றை மறந்து படம் பார்த்தால், நல்ல கிராபிக்ஸ் நுட்பத்துடன் கூடிய வீடியோ கேம் பார்த்த உணர்வு ஏற்படும்.

    ReplyDelete
  2. லொடுக்கு,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

    ReplyDelete
  3. ////சிலருடைய குறுகலான எண்ணங்களில் இப்படியும் தோன்றுவதுண்டு. என்னவென்றால், பாரசீகம் கிரேக்கத்தை வெற்றி கொண்டிருந்தால், இன்று கிருத்துவ மதம் அழிந்து உலகத்தின் ஏகமதமாக இஸ்லாம் இருப்பதற்கு வழிகோலி இருக்கும். லியானடஸ் அக்கால சுலுவைப் போராளியாக சித்தரிப்பது அமெரிக்கர்களின் நவீனத்துவநடை என்றும் கூறலாம்.//

    போர் நடந்ததாக கூறப்பட்டும் காலத்தில் இயேசுவே பிறந்திருக்கவில்லை. :) அப்போதய போரில் மதச்சாயம் இருந்திருக்கவில்லை. இப்போது அமெரிக்கா பூசுவது களவானித்தனத்துலும் கேடு கெட்டது.//


    :))))))

    ரசித்த வரிகள்.... நான் இன்னும் முழுமையாக 300 படம் பார்க்கவில்லை. ஆனால் ஏதோ வீடியோ கேம்ஸ் உணர்வு வருவதென்பது உண்மைதான் என்று பிரபல பதிவர் ஒருவரும் என்னிடம் நேரில் கூறினார் :))

    ReplyDelete
  4. //.... நான் இன்னும் முழுமையாக 300 படம் பார்க்கவில்லை. ஆனால் ஏதோ வீடியோ கேம்ஸ் உணர்வு வருவதென்பது உண்மைதான் என்று பிரபல பதிவர் ஒருவரும் என்னிடம் நேரில் கூறினார் :))//

    300 காமிக்ஸ் புத்தகத்தை அப்படியே அச்சசலாக உருவாக்கியிருந்தார் இயக்குனர் என்பது குறிப்பிடதக்கது. மொத்தமாகச் சொன்னால், லார்ட் ஆப் ரிங்க்ஸ் போன்றதொரு மிகைப்படுத்தப்பட்ட கற்பனை.(fantasy).

    ReplyDelete
  5. இப்போதைக்கு திரையுலகத்திற்குக் கிடைத்திருக்கும் தொழில் நுட்பங்களைக் கொண்டு ஓரேயடியாக வீரத்தினை நிலை நிறுத்த வேண்டி மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளாக சித்தரிக்கப்பட்டது என்னவோ உண்மை. ஆனல் இத்திரைப்படம் சொல்ல வந்தது மிகப் பெரிய எதிரியை எதிர் கொள்ளும் தைரியமும், போரின் வெற்றி எண்ணிக்கையால் மட்டுமே குறிப்பதல்ல.. யுக்தியாலும் குறிக்க முயலலாம் என்று ஸ்பார்ட்டகஸ் வீரர்களின் வீரத்தையும்தான்..

    படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள்தான் அள்ளித்தெளித்தாற்போல் திரை முழுக்க பரவி கொஞ்சம் சிரிப்பலையை ஏற்படுத்திவிட்டது.

    ஆனாலும் குட்டிப் பிசாசுவின் இந்தத் 'தீவிரவாத எழுத்து' முயற்சி குசும்பனுக்கு தங்கையோ என்று சொல்லத் தோன்றுகிறது.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. //ஆனல் இத்திரைப்படம் சொல்ல வந்தது மிகப் பெரிய எதிரியை எதிர் கொள்ளும் தைரியமும், போரின் வெற்றி எண்ணிக்கையால் மட்டுமே குறிப்பதல்ல.. யுக்தியாலும் குறிக்க முயலலாம் என்று ஸ்பார்ட்டகஸ் வீரர்களின் வீரத்தையும்தான்.. //

    ஆனால், அதற்காக ஒரு ஒட்டு மொத்த இனத்தை இழிவு செய்யும் வசனங்களை எங்ஙனம ஏற்றுக்கொள்வது?? பெர்சியா என்ற இடத்தில் இந்தியாவோ சீனாவோ இருந்திருந்தால் reaction எப்படி இருந்திருக்கும்!!! :)

    ReplyDelete
  7. இரண்டாம் சாணக்கியன்,

    //
    ஆனாலும் குட்டிப் பிசாசுவின் இந்தத் 'தீவிரவாத எழுத்து' முயற்சி குசும்பனுக்கு தங்கையோ என்று சொல்லத் தோன்றுகிறது.. வாழ்த்துக்கள்..//

    பொய்..பொய்..நான் தீவிரவாதத்தை தூண்டுகிறேனா?என்ன சொல்லுரீங்க!!
    அதுவும் குசும்பன் போலவா? இதெல்லாம் ரொம்ப ஓவர்.

    ReplyDelete
  8. /// லொடுக்கு said...

    //ஆனல் இத்திரைப்படம் சொல்ல வந்தது மிகப் பெரிய எதிரியை எதிர் கொள்ளும் தைரியமும், போரின் வெற்றி எண்ணிக்கையால் மட்டுமே குறிப்பதல்ல.. யுக்தியாலும் குறிக்க முயலலாம் என்று ஸ்பார்ட்டகஸ் வீரர்களின் வீரத்தையும்தான்.. //

    ஆனால், அதற்காக ஒரு ஒட்டு மொத்த இனத்தை இழிவு செய்யும் வசனங்களை எங்ஙனம ஏற்றுக்கொள்வது?? பெர்சியா என்ற இடத்தில் இந்தியாவோ சீனாவோ இருந்திருந்தால் reaction எப்படி இருந்திருக்கும்!!! :)///

    பாரசீகப்படை ஒட்டுமொத்த ஆசியாவை குறிப்பதாகத்தான் வசனங்களில் வரும்.

    ReplyDelete
  9. இரண்டாம் சாணக்கியன்,

    //இத்திரைப்படம் சொல்ல வந்தது மிகப் பெரிய எதிரியை எதிர் கொள்ளும் தைரியமும், போரின் வெற்றி எண்ணிக்கையால் மட்டுமே குறிப்பதல்ல.. யுக்தியாலும் குறிக்க முயலலாம் என்று ஸ்பார்ட்டகஸ் வீரர்களின் வீரத்தையும்தான்..///

    தாங்கள் கூறுவது போல, இந்த படத்தில் போர்யுக்தி பற்றி பெரியதாக ஒன்றும் இல்லை. விஜய், ரஜினி படத்தில் வருவது போல ஒருத்தன் பத்து பேரை அடிப்பது போலத்தான் காட்டப்பட்டுள்ளது.

    ReplyDelete
  10. குட்டி பிசாசு.. எம்புட்டு அருமையா விளக்கியிருக்கீங்க..
    நெசமாவே.. வரலாற்று யுகத்த ஒரு சுத்து சுத்தி வந்தப்போல இருக்கு..
    அதுமட்டுமல்ல..
    வெறுமனே விமர்சனமாக அல்ல.. அதனை அக்கு வேறு ஆணி வேறாக அலசி அதில் பொதிந்துள்ள கருத்துக்களின் சாதக பாதகங்களையும் நன்றாக சொல்லியிருக்கிறிர்கள்..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நல்ல தகவல்கள்!!

    ReplyDelete
  12. review of 300 and historical facts were given nicely

    ReplyDelete
  13. விமர்சனம் & அலசல் நல்லாவே இருக்கு

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய