Sunday, June 17, 2007

அடிப்படைக் கல்வி - சிறார் தொழிலாளர்கள்

அடிப்படைக்கல்வியும் சிறார்தொழிலாளர்களும் இணைந்த பிரச்சனைகள்!

சமீபத்தில் தமிழ்நாடு சென்றபோது, பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டு இருந்தது. என்னுடைய அண்ணியின் உறவுக்கார சிறுவனொருவன் எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பள்ளியில் தான் படிக்கிறான். அடிக்கடி எங்கள் வீட்டிற்கும் வருவான். ஆனால் பள்ளி தொடங்கி ஒரு வாரம் ஆகியும் அச்சிறுவன் வரவேயில்லை. நான் என் அண்ணியை இதுபற்றி கேட்டபோது, பத்தாம் வகுப்பு படிக்க வைக்க முடியாமல் அச்சிறுவனுடைய தந்தை அவனுடைய படிப்பை நிறுத்தப்போவதாக உள்ளார் என்று கேள்விபட்டேன், நான் சிறுவனுடைய தந்தையிடம் இதுபற்றி பேசினேன்.

அவர் ஒரு நெசவுத்தொழிலாளி.ஒரு நெசவாளியின் மாதவருமானம் 2000 ரூபாய்தான் இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் உழைத்தால் 3000 வரை கிடைக்கும். இதுதான் இவர்கள் வாழ்க்கைத்தரம். ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு மேல் செலவு செய்யும் என் போன்றவனுக்கு இது செறிக்க முடியாத விஷயம் தான். சிறுவன் அரசு உதவிப் பள்ளியில் படிப்பதால் 350 ரூபாய் கட்டணம் கேட்கிறார்கள் என்றும், அப்படியே கட்டணம் செலுத்தினாலும் பாடம் எழுத நோட்டுபுத்தகம், பள்ளிச்சீருடை என 500 ரூபாய் வரை ஆகுமென்றும் அவர் கூறினார். மேலும் சிறுவனை இயந்திர நெசவுத்தறியை இயக்கும் வேலைக்கு அனுப்பப்போவதாக கூறினார். அவர் வருத்தம் எனக்கு புரிந்தது.

சிறுவன் மேலும் படிக்க நான் செலவு செய்யத்தயார் என்று கூறிவிட்டு, நோட்டுப்புத்தகமும் பள்ளிச்சீருடையும் வாங்கிக்கொடுத்துவிட்டு வந்தேன்.இந்த உதவியை நம்மால் எல்லாருக்கும் செய்ய இயலாது தான். நான் கூறுவதைக்கேட்டால் இலவசகல்வி இன்னும் நடைமுறையில் உள்ளதா? என்று சந்தேகம் நிச்சயம் எழும். அரசுப்பள்ளியில் உள்ளது என்று சொல்பவர்கள், தரமான கல்வி எல்லாருக்கும் வழங்க இயலுமா? படிக்க இடம் கிடைக்காமல் தான் அச்சிறுவன் அரசு உதவிப்பள்ளியில் சேரும் நிலை.

எங்கள் ஊர்ப்பகுதியில் தீப்பெட்டித்தொழில், பீடித்தொழில், நெசவுத்தொழில்,தோல் தொழிற்சாலை அதிகம் உண்டு. இவற்றில் பல சிறுவர்கள் வேலைக்குப் போவதைப் பார்த்து இருக்கிறேன். பெரும்பாலும் சுமார் 8-12 வயது சிறுவர்கள் தான். இந்த மனக்குமுறல் எங்கு சென்றாலும் அகலுவதில்லை. இந்தியாவின் ஒரு உயர்தர தொழிற்நுட்ப கல்விநிலையத்தில் அமைந்துள்ள உணவகத்தில் சிறார்கள் வேலை செய்வதைப்பார்த்தபோது நொந்து போய்விட்டேன். இதையெல்லாம் பார்த்துவிட்டு நாடு முன்னேற்றம் குதிரைப் பாய்ச்சலில் உள்ளதாக சொற்பொழிவாற்றும் கோயபல்ஸ்களை செருப்பால் அடிக்கத் தோன்றும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.உலகத்திலுள்ள குழந்தைத் தொழிலாளர்களில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் தான் உள்ளனர். இந்தியாவில் 5-14 வயதுடைய 44 மில்லியன் சிறார் தொழிலாளர்களாக உள்ளதாக உலக தொழிலாளர் அமைப்பு கணக்கிட்டுள்ளது.குறைந்த செலவில் பெரிய லாபம் பார்க்க விரும்பும் முதலாளிகள் சிறார்களை தொழிலுக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் அரசாங்கம் அடிப்படைக் கல்வியும் அளிக்காமல், சம்பிரதாயச் சட்டங்களைச் சுழற்றி மக்களையே பதம்பார்க்கிறது.

நாளைய தலைமுறைக்கு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யாமல், வெறும் பேச்சளவில் முன்னேற்றத்தை அடைந்துவிட முடியாது. இந்தியாவின் 20% GNP குழந்தை தொழிலாளர்களால் என்பது மறுக்க முடியாத வெட்கப்பட வேண்டிய உண்மை. பெரும் தொழிற்வளர்ச்சியடைந்த மாநிலங்களில் தான் சிறார் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்.தொழிற்புரட்சி தான் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகக்காரணம் என காரல் மார்க்ஸ் கூறியது ஞாபகம் வருகிறது. இதற்காக தொழிற்சாலை வேண்டாம் என்று கூறவில்லை. சிறார்தொழிலாளர்கள் தனிப்பட்ட பிரச்சனையல்ல! மக்கள்தொகை, அடிப்படை கல்வியின்மை, வெத்துவேட்டு தீர்வுகள், செத்தபாம்பு சட்டங்கள், முதலாளியத்துவத்திற்குச் சார்பான பொருளாதாரக் கொள்கைகள் என பல்வேறு கலவையான பின்னிப்பிணைந்த அடித்தளத்தின் மேல் அமைந்துள்ளது. இதன் தீர்வு எளிதானது! முன்னிற்கும் செயல்பாடுகள் கடினமானது. ஆனால் செயல்படுத்தாமல் விட்டால் நாளை மலரும் முல்லைகளைக் கிள்ளியெறியும் என்பது திண்ணம்!

7 comments:

  1. //சிறுவன் மேலும் படிக்க நான் செலவு செய்யத்தயார் என்று கூறிவிட்டு, நோட்டுப்புத்தகமும் பள்ளிச்சீருடையும் வாங்கிக்கொடுத்துவிட்டு வந்தேன்//

    ம்ம்.. நல்ல காரியம் பண்ணிருக்கீங்க. வாழ்த்துக்கள். உங்க வருத்தம் நியாயமானது அருண். ஆனா படிக்க வெக்கனும்னு பெத்தவங்க நினச்சா நிச்சயம் முடியும். அந்த விழிப்புணர்வே இன்னும் முழுமையா வரல. ஏழைகளுக்கும் எளிமையா கிடைக்கிற விஷயமாதான் அடிப்படைக்கல்வி இருக்கு நம்ம நாட்ல. ஆனா தரம் என்னவோ கேள்விக்குறி தான்னாலும் படிச்சாக்கூட போறாதா?

    ReplyDelete
  2. காயத்ரி,

    //படிக்க வெக்கனும்னு பெத்தவங்க நினச்சா நிச்சயம் முடியும்.//

    நன்றி! நீங்க அப்படி சொல்லிட முடியாது. அந்த சிறுவனோட அப்பா அவன ஒன்பதாம் வகுப்பு வரை படிக்க வச்சி இருக்கார். இது முயற்சி இல்லாம இல்ல. ஆனால் மாத வருமானம் 2000 வாங்குற ஒருத்தருக்கு குடும்பமும் நடத்தணும். இதுல 500 ரூபாய் கூட அவங்களுக்கு கஷ்டம்தான்.

    //ஏழைகளுக்கும் எளிமையா கிடைக்கிற விஷயமாதான் அடிப்படைக்கல்வி இருக்கு நம்ம நாட்ல.//

    அரசுப்பள்ளிகளில் தான் கட்டணம் வாங்கிறது இல்ல. அவை எல்லாரையும் சேர்த்துக்க முடியாது. போதிய அளவில் மாணவர்களை சேர்க்க இயலும். அரசு உதவிப்பள்ளிகளில் கட்டணம் மட்டுமல்லாமல் டொனேசன் வேற உண்டு.

    ReplyDelete
  3. நல்ல பதிவு...

    எனக்கு எப்பவும் தோனுவது படிப்பு எவ்வளவு முக்கியம் என்ற விழிப்புணர்வு மக்களுக்கும், முக்கியமாக குழந்தைகளுக்கு குறைவு..
    இந்த விழுப்புண்ர்வை ஏறபடுத்தினால் கூட முறைசாரா கல்வி / தொழில் கல்வியலாவது சேர்ந்து படிக்க ஆர்வம் ஏற்படும்..

    நல்ல காரியம் செய்தீர்கள்... தொடர்ந்து அவனை வளர்ச்சியையும், படிப்பையும் கவனித்து வாருங்கள். அதுவும் முக்கியம்.

    ReplyDelete
  4. தம்பி இதுபோல பல கேஸூகளைப் பார்த்து என் தனிப்பட்ட முறையில் செலவில் பலமுறைஉதவியிருக்கேன்.ஆனால் அதை அவர்கள் சரிவரப் பயன் படுத்திக் கொள்ளவில்லை.
    அவர்கள் எதிகாலத்தில் ஒரு உறுதியான தீர்மானத்தோடு படித்து முன்னேற விரும்பினால் உயர் படிப்பு வரை உதவலாம்.ஆனால் 99%அப்படியில்லை.பாதியிலேயே திசை மாறி விடுகின்றனர்
    எனக்கு ஒரு பழமொழி ஞாபகம் வருது.
    குதிரையைக் கொண்டு கொள் இருக்கும் இடத்தில் சேர்க்கலாம்.தின்ன வேண்டியது அதுதானே.
    அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டம் மட்டுமே இதைச் சரி செய்ய முடியும்.

    ReplyDelete
  5. @மங்கை,

    விழிப்புனர்வு மிகவும் முக்கியம் தான். பணத்தவிட அவங்களுக்கு்ளுக்கு விழிப்புனர்வு தான் முக்கியம். சரியான வழிப்படுத்தல் இல்லாம, உதவி செய்தால் பயனில்லை.

    @ கண்மணி அக்கா,
    //அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டம் மட்டுமே இதைச் சரி செய்ய முடியும்.//

    இது 100% உண்மை தான்!

    ReplyDelete
  6. சிந்தனைக்கும், செயலுக்கும்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய