Saturday, June 21, 2008

தசாவதாரம் மற்றொரு ஆளவந்தான் இல்லை!!

தசாவதாரம் மற்றொரு ஆளவந்தான் இல்லை என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி. சுருங்கச்சொன்னால், இப்படம் மைக்கெல் மதன காமராஜன் படத்தின் இரண்டாம் பாகம். முதல் ஒரு மணிநேரம் க்ளாசிக் பட ரசிகர்களை கவரும் விதமாகவும், அடுத்த இரண்டு மணிநேரம் அசல் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கிரேஸிமோகன் படமாக மாறிப்போகிறது. நிச்சயம் இந்தக் கலவைதான் படத்தின் வெற்றிக்குக் காரணம். பொழுது போக்கிற்கான நல்ல படம். ஒரு சராசரி தமிழனுக்கு என்ன பெரிய எதிர்பார்ப்பு இருந்துவிடப் போகிறது. சில பாத்திரங்களுக்கு மேக்கப் சற்று உறுத்தல்தான். அப்பாத்திரங்களை கமலால் மேக்கப் இல்லாமலேயே வெகு அழகாக நடித்திருக்க முடியும். பத்து பாத்திரங்கள் நடிக்க வேண்டி, ஒரு திரைக்கதையை தயாரித்தார் கமல். ஆனால் திரைக்கதையின் பலம், பத்து வேடங்களை ஏன் கமலே நடித்தார், வேறு யாராவது நடித்திருக்கலாமோ? என்று யோசிக்க வைக்கிறது. இவ்வகையில் எழுத்தாளர் கமல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். படம் முழுக்க வரலாற்றுத் தகவல்களையும், விஞ்ஞானத் தகவல்களையும் அள்ளித் தெளித்திருக்கிறார்.

ஏனோ நம் தமிழ்மண பதிவாளர்கள் சிலர், வழக்கம் போல... பில்லாவிற்கு விமர்சனம் எழுதியது போல இது சரியில்லை, அது சரியில்லை என்று எழுதியுள்ளார்கள். நெப்போலியன் தமிழ் சரியில்லை என்றொரு கருத்து. (ஆங்கிலம் பேசும் வெள்ளையரிடம் கட்டபொம்மன் பேசிய தமிழ்வசனங்களைப் கேட்டுக் கெட்டுப்போனவர்கள் இவர்கள்!!) நெப்போலியன் நன்றாகவே பேச முயற்சித்துள்ளார். நெப்போலியன் தவிர்த்து, சரத்குமார் நடித்திருக்கலாம். "என்றா பேசுரே!! கட்டிவச்சி, தொலை உரிச்சிபோடுவேன்!!" என்று பேசி இருப்பார். அல்லது கமலே ஒரு வேடமாக ஏற்று நடித்திருக்கலாம்.

உடல்மொழி விஷயங்களில் கமல் பின்னிப்பெடல் எடுக்கிறார். அப்படி வேடத்திற்கு வேடம் வேறுபாடு. உலகில் எந்தக் கலைஞனாலும் இவ்வளவு அழகாக உடல்மொழி, பேச்சு, செயல் வேறுபாடு காட்டி நடிக்க இயலாது. கமலின் கடினமான உழைப்பு கட்டாயம் தெரிகிறது.

அன்பேசிவம் போன்ற கிளாசிக் படத்திற்கு சென்று காமெடி சரியில்லை என்பவர்கள், வசூல்ராஜா படத்திற்கு சென்று நாயகன், மூன்றாம்பிறை கமலைத் தேடுபவர்கள் அனைவருக்கும் ஒரு செய்தி. ஹேராம், குணா, அன்பேசிவம் போன்ற படங்களை எடுத்ததன் மூலம் நட்டம் மட்டுமே சந்தித்த கமல், மேற்கண்ட படங்களையே எடுத்துக்கொண்டிருந்தால் பிச்சைதான் எடுக்க வேண்டிவரும். இப்படங்களுக்கு கமலுக்கு தேசியவிருதுகூட கிடைக்கவில்லை. மசாலா படங்களில் நடித்தாலும் கமலின் நடிப்பை மட்டுமே ரசிப்பவர்களில் நானும் ஒருவன். அவ்வகையில் பார்க்கக்கூடிய படம்.