Tuesday, November 27, 2007

விஜய்க்கு வலைசரப்புலி நாகை சிவாவுடைய பதில் என்ன?

(இடம்: ஆலமரத்தடி ;; இம்சைகள்: அண்டு & சிண்டு)

அண்டு: இந்த வாரம் எதாவது சூடான செய்தி இருக்காண்ணே!

சிண்டு: இருக்குடா! விஜய்க்கு இது போறாத காலம் போல, போனவாரம் அவரது ரசிகமணிகள் வைத்த கட்டவுட்டில் விஜயின் காலருகே புலி இருக்க, தெந்தமிழகத்தின் சாதிபுலிகள் பாய்ந்து குதித்துள்ளனர். கிலியான ரசிகர்கள் கட்டவுட்டை அகற்றியதாக கேள்வி.

அண்டு: எப்படியோ மேட்டர் நம்ம நாகைசிவாவுக்குத் தெரியல!! தெரிஞ்சி இருந்தா என்ன செய்து இருப்பாரு!!

சிண்டு: என்னவா? "புலியொன்று புறப்பட்டதே!!"னு ஒரு பதிவு போட்டு இருப்பாரு.

சிண்டு: அடேய்! இந்த வாரம் என்ன நடந்தது தெரியுமா? மத்திய அமைச்சர் அன்புமணி ஒரு விழாவில், "ரஜினிகாந்த் சினிமாவில் தம் அடிப்பது போன்ற காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு நான் தனிப்பட்ட முறையில் கடுதாசி் எழுதியதை தொடர்ந்து அவர் படங்களில் தம் அடிப்பதை நிறுத்திக் கொண்டார் நடிகர் விஜயிடமும் தம் அடிப்பது போல நடிப்பதை தவிர்க்கும்படி கேட்டுகிறேன்" என்று ஒரு போடுபோட்டார்.

அண்டு: ரஜினி, விஜய் புகை பிடிப்பதை நிறுத்துவது இருக்கட்டும், இவரு அடம்பிடிக்கிறதை எப்ப நிறுத்தப் போறாரு. இந்தியாவில் ஒரு கோடி பேருக்குக்கிட்ட புகைக்கிறார்களாம். இவர்கள் எல்லாம் ரஜினி, விஜய் படம் பார்த்து கெட்டுப்போனவங்களா? முதல்ல அவரோட கட்சியில யாரும் பிடிக்கிறது இல்லயா?

சிண்டு: அதிகமா பேசுரே! அம்புடுதேன்! விஜயே இதை கண்டுக்கல நீ ஏன் ஓவரா ஊளைஉடுரே!!

அண்டு: கண்டுக்கலயா?

சிண்டு: ஆமாண்டா!! அமைச்சரின் இந்த வேண்டுகோள் குறித்து விஜயிடம் கேட்கப்பட்டபோது, "நானும் அமைச்சர் பேசியதை செய்தித்தாள்களில் படித்தேன். இனிமேல் என்னுடைய படங்களில் தம் அடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்" என்று அநியாயத்துக்கு சோமர்சால்ட் அடிச்சார்.

அண்டு: விஜய்ங்ண்ணா!! உங்க படத்தில் இருக்கக்கூடிய யதார்த்தமான ஒரே விடயம் இதுதாங்கண்ணா! அதையும் தூக்கிட்டால் பிறகு இந்தியாவிலே கதை நடக்கிற மாதிரியே இருக்காதுங்கண்ணா!!

சிண்டு: டேய்! என்ன விஜய்ய கலாய்க்கறயா?

அண்டு: சும்மா மிமிக்ரி செய்தண்ணே!!

அண்டு: ஆமா! இதுக்கு மாலடிமை என்ன சொல்லுரார்?

சிண்டு: 2012-ல் பாமக ஆட்சினு சொல்லுரார்!

அண்டு: அப்ப ரஜினி?

சிண்டு: ம்ம்ம்!!! 2012-ல் பாபா ஆட்சினு சொல்லுவார்!! மூடிட்டு அடுத்த கேள்விய கேளு!

அண்டு: ஆமா! சமீபத்தில பொல்லாதவன் படத்தில் வர வசனத்துக்கு தனுஷ், தயாரிப்பாளர் மேல தியாராயர் கல்லூரி நஷ்டஈடு கேட்டுகிறாங்களாமே!

சிண்டு: ஆமாண்டா! தனுஷ் அவரோட அப்பாவ பார்த்து "என்னை ஒரு டாக்டருக்கு படிக்க வைச்சியா, தியாராயர் கல்லூரியில் பி.ஏ. தானே படிக்க வச்சே!!" என்று கேட்பாரே அதனாலயா!!

அண்டு: ஆமாண்ணே!!

அண்டு: ஏனண்ணே! பேசுற படம் எடுத்தால் தானே பிரச்சனை! பேசாம ஊமை எடுத்தா எதுவும் சொல்ல மாட்டாங்க தானே!!

சிண்டு: டேய்! பேசினாலே தப்ப எடுத்துக்கிறானுங்க, பேசாமல் சைகை செய்தால், இரட்டை அர்த்தத்தில் எதாவது விரல்ல காட்டினே, நாக்க நீட்டினே, மூக்க காட்டினே என்று கொலைவெறியோட கொளுத்திடுவானுங்கடா!!

சிண்டு: சரி இதுக்கு மேல பேசினால் நம்ம டப்பா டான்ஸ் ஆடிடும்!! அப்பாலிக்கா அடுத்த வாரம் பார்க்கலாம்!! எஸ்கேப்!!

குறிப்பு: நாகை சிவா அண்ணே! கோபம் படாதிங்க! "பூனை மீது புலி பாய்வது முறையாகுமா?" இந்தவார வலைச்சரப்புலி நீங்க!! சின்னப்பயபுள்ள எதோ உங்க பேரை கொஞ்சம் யுஸ் பண்ணிக்கிறேன்!! மன்னிக்கவும்.

நன்றி: தமிழ்சினிமா.காம்

Sunday, November 25, 2007

சுலபமான இடுகை மதிப்பீடு

1. நீங்கள் சுலபமாக Post-ஐ மதிப்பீடு செய்ய, இந்த லிங்க் சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள பெட்டிகளை பூர்த்தி செய்யவும். பூர்த்தி செய்து முடித்த பின் get comments பொத்தானை அழுத்தவும்.

2. தற்போது வந்துள்ள புதிய பக்கத்தில், -->add to your blogger.com blog பொத்தானை அழுத்தவும்.

3. புதிதாக வந்துள்ள page element-ஐ கீழே அமைத்துக் கொள்ளவும்.

4. இப்போது உங்கள் இடுகையைப் பாருங்கள். கீழ் படத்தில் உள்ளது போல் இருக்கும், தாங்கள் இதில் மதிப்பிடலாம்.

நஞ்சாவது பிஞ்சாவது

தான் வழக்கம்போல தேநீர் அருந்தும் கடைக்குச் சென்று அமர்ந்தான் கிச்சா. பொதுவுடைமை மற்றும் பெரியாரிய கருத்துகளில் அதிக ஆர்வமுடைய கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி, ஒரு தொழிற்நுட்ப மாணவன். சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டும் முற்போக்குச் சிந்தனையை நமீதாவை விரும்புவதற்கு இணையாக விரும்பினான். அம்பேத்கார் மற்றும் விவேகானந்தரின் நூல்களை சிலுவைபோல் சுமந்து திரிவான். சென்னையில் வசிக்கும் கிச்சாவிற்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தமிழில் பதிவெழுதுவது.

இன்றும் தமிழ்மணத்தில் என்ன பதிவெழுதலாம் என சிந்தித்தவாறு, தன் வாய்நுனியில் வந்தமர்ந்த சிக்ரெட்டுக்குத் தீயிட்டான். கடையில் வேலைபார்க்கும் வேலுவிடம் தேநீர் தயாரிக்கச் சொல்லிவிட்டு மறுபடியும் யோசிக்கலானான். புகை தின்றவாறு செய்தித்தாளைப் புரட்டிய அவன் கண்களில் சிக்கியது அந்தச் செய்தி. "சிறார்கள் தொழிலில் ஈடுபடுத்துவதை எதிர்த்து மனிதசங்கிலி". கிச்சா தேடியது எதோ கிடைத்தது போலும், அப்படி ஒரு மலர்ச்சி அவன் முகத்தில். செய்தித்தாளின் வரிகளில் லயித்துவிட்ட அவனது உதடுகளின் முணுமுணுப்பு அன்று வரையப்போகும் பதிவின் தலைப்பை "நஞ்சுபட்ட பிஞ்சு உள்ளங்கள்!" என்று ஒருவாறு முடிவு செய்தது.

"அண்ணே! டீ" என்று கொண்டுவந்த தேநீரை நீட்டினான் வேலு. செய்திகளை அசைபோட்டவாறு தேநீரை வாங்கிப் பருகிய கிச்சாவின் முகத்தில் ஓராயிரம் விரிசல்கள். "என்னடா! டீ போடுரே! உங்க மாஸ்டர் எங்கடா? " என்று உருமிய கிச்சா நெற்றிக்கண் இருந்திருந்தால் வேலுவை எரித்திருப்பான். கிலியாகிப்போய், வெறித்தபடி நின்று கொண்டிருந்த வேலு மிகவும் பாவம். நான்கு நாட்களுக்கு முன் தேநீர்க்கடையில் வேலைக்கு சேர்ந்த அவனுக்கு வயது ஒன்பது தான்.

Friday, November 23, 2007

ரஜினி சொன்ன கதையும் ஹாலிவுட் படமும்

'பாபா'வை ரஜினியால் மட்டுமல்ல நம்மாலும் மறக்கவே முடியாது. அப்படியே மறந்தாலும் 'பாபா' படத்தையொட்டி ரஜினி சொன்ன கதையை ஒருபோதும் மறக்க இயலாது.பாபாஜி இரண்டாயிரம் வருடங்களாக இமயமலையில் வாழ்ந்து வருவதாகவும், இயேசு பாபாஜியிடம் யோகத்தைக் கற்றதாகவும் சொன்னார் ரஜினி. இருபத்தியோராம் நூற்றாண்டில் இப்படியொரு கதையா? என மருத்துவர் ராமதாஸ் ஒருபக்கம் கிண்டலடிக்க(சின்ன பாபாஜி! ராமதாஸ் சொன்னதுக்கு கவலைபடாமல,் நீங்க "சாயா!மாயா!" போல "ஆயா!பாயா!" என்று கருத்துக்களை அடுத்த படத்தில் உதிர்க்கணும்), "இரண்டாயிரம் வருஷமாக இமயமலையில் இருப்பவரால் ஜனங்களுக்கு துரும்பளவாவது பயன் உண்டா? யாருக்கும் பயன்படாதவர் இரண்டாயிரம் வருடம் வாழ்ந்தால் என்ன! இரண்டு நிமுடம் வாழ்ந்தால் என்ன!" என்று சிலர் இன்னொருபுறமும் கேள்வி எழுப்ப, பாபா கதை நகைப்புக்குள்ளானது அனைவரும் அறிந்ததே.இதற்குப் பிறகு சந்திரமுகி படத்துடைய 100-நாள் விழாவில் தான் பாபா பற்றி ரஜினி பேசினார். (இதில் கொடுமை என்னவென்றால், நம்ம ரஜினிஜியே பாபாஜியைப் பார்த்தது இல்லை).

இப்போது இதே கதை ஹாலிவுட்டில் படமாகிறது! இயேசுவின் 13 வயது முதல் 30 வயதுவரை உள்ள வாழ்க்கை குறித்து பைபிளில் எந்த செய்தியும் இல்லை. இந்த வருடங்களில் அவர் ஒரு பெண்ணை காதலித்து மணந்ததாகவும் இந்தியாவுக்கு வந்து பவுத்த மற்றும் இந்து தர்மங்கள் குறித்து கற்றதாகவும் ஒரு கதை உலவி வருகிறது. இயேசுவுக்கு நேரடி வாரிசு உண்டு என்ற பின்னணியில் உருவான 'டாவின்சி கோட்' நாவலாகவும் திரைப்படமாகவும் வந்து ரசிகர் நெஞ்சத்தை மட்டுகில்லாமல் பணத்தையும் அள்ளியது. (இதேபோல இயேசுவை ஒரு சாதாரண மனிதனாக சித்தரித்த The Last Temptation of Christ என்ற திரைப்படமும் பெரியளவில் எதிப்புகளைச் சந்தித்தது. இதைப்பற்றி தனியாக ஓர் இடுகை போடவுள்ளேன்). இதையெல்லாம் மனதில் வைத்து, இயேசுவின் 13 முதல் 30 வயதுவரையான வாழ்க்கையை காதல், கல்யாணம், இந்திய வருகை ஆகியவற்றின் பின்னணியில் எடுக்கிறார்.(இந்தியாவில் இமயமலைக்கு வரும் இயேசு பெருமானுக்கு ஒபனிங்சாங் இருக்குமா? இருக்கவே இருக்கு நம்ம எம்ஜிஆர் பாட்டு ரீமிக்ச் போட வேண்டியது தான்! "புதியவானம்! புதியபூமி! எங்கும் பனிமழை பொழிகிறது!") ஹாலிவுட் இயக்குனர் Drew Heriot. இந்தக் கதை எழுத்தாளர் Levi H. Dowling எழுதிய Aquarian Gospel of Jesus the Christ நாவலின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் 1908-ல் வெளிவந்தது. புதிய ஏர்பாட்டில் சொல்லப்படாத இயேசுவின் 18 வருட மௌனத்தையும் கூறுகிறது. இயேசுவின் இந்திய வருகை குறித்த சுவாரசியமான தகவல்களுக்கு இயக்குனர் Drew Heriot-க்கு ரஜினியை தவிர வேறு தகுதியான நபர் கிடைக்கமாட்டார்.(எப்படியோ படம் "பாபா" போல ஊத்திக்கொள்ளாமல் இருந்தால் சரி!)

நன்றி: தமிழ்சினிமா.காம்

உலகமயமாக்களுக்குப் பிறகு ஊனமுற்றோருக்கான வேலைவாய்ப்பு


இந்தியாவில் ஊனமுற்றோருக்கான வேலைவாய்ப்பு சரிவை சந்தித்துள்ளதாக உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையொன்று கூறுகிறது. அரசால் கூறப்பட்ட பெரிய பொருளாதார வளர்ச்சியின் நடுவிலும், 1990-ல் 43%-ஆக இருந்த வேலைவாய்ப்பு 2002-ல் 38%-ஆக குறைந்துள்ளது. படிப்பின்மை, வேலை வாய்ப்பின்மை, சமுதாய கவனமின்மை ஊனமுற்றோர்களை வெகுவாக பின்னுக்குத்தள்ளிவிட்டது.

பொதுவாக தனியார்துறையில் ஊனமுற்றோருக்கான எந்தவித சலுகைகளோ, ஊக்கமோ அளிக்கப்படுவதில்லை. 1990-களில் தனியார் துறைகளில் வெறும் 0.3% ஊனமுற்றோர்கள் வேலையில் இருந்தனர். ஆனால் தற்போது இந்தியாவில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில், 0.05%க்கும் குறைவான அளவே ஊனமுற்றோர் வேலையில் உள்ளனர். இவ்வாறு இவர்கள் புறக்கனிக்கப்படுவதை சற்று அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அதை விடுத்து ஒரு சில பெருமகனாரின் வளர்ச்சியை பூதகண்ணாடி கொண்டு பார்த்துவிட்டு, படிப்பறிவில் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி என்றெல்லாம் தம்பட்டம் அடிப்பது வெறும் அபத்தம்.

(கடந்த செப்டம்பர் மாதம் முன் கண்பார்வையற்றோர் நடத்திய போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய இரக்கமற்ற அடக்குமுறை).

கல்வித்துறையில் மேற்கூறியவற்றை விட மிக மோசமான சூழ்நிலை உள்ளது குறிப்பிடதக்கது. சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களில் 6-10% எண்ணிக்கையானவர்கள் படிப்பினை தொடர முடியாமல் நிறுத்திவிடுகின்றனர். இதைவிட அதிகமாக ஊனமுற்றோர் 38% உள்ளனர். மற்ற பிள்ளைகளை விட ஊனமுற்ற பிள்ளைகள் 5.5 மடங்கு அதிகமாக கல்வியைத் தொடர முடியாமல் விடுகின்றனர். இந்த புள்ளியல் விவரம் உலகவங்கியால் வெளியிடப்பட்ட People with Disabilities in India: From Commitments to Outcomes ஆய்வறிக்கையில் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஊனமுற்றவர்களில் 64% பெண்களும், 36% ஆண்களும் படிப்பறிவில்லாதவர்களாக உள்ளனர். இந்தியாவின் படிப்பறிவில் முன்னணி மாநிலங்களான கேரளாவில் 27%-ம், தமிழகத்தில் 34%-ம் ஊனமுற்றோர் கல்வியறிவில்லாதவர்களாக இருக்கின்றனர். அதாவது, ஊனமுற்றோருக்குத் தேவையான இந்த கல்வி வாய்ப்பினை அளிக்காமல் "எல்லோருக்கும் கல்வித் திட்டம்" 100% முழுமை அடையாது. கல்வியில் துவக்கப்பள்ளியைக் கூட கடந்து செல்ல முடியாத அளவிற்கு அவர்களை மேலும் ஊனப்படுத்தாமல், அரசு அவர்களுக்கு வேண்டிய வசதிகளுக்கும், மருத்துவ உதவிகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று உலகவங்கியின் ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.

இன்றும் கிராமப்புறங்களில் நடந்து சென்று படிக்கும் மாணவர்கள் உள்ளனர். ஊனமுற்ற மாணவர்கள் பள்ளிக்கு வரவே முடியாதவர்களாகி விடுகின்ற போது, எங்ஙனம் படிப்பில் அரசு அளித்துள்ள சலுகையைப் பெற இயலும்அல்லது வேலைவாய்ப்பைப் பெற முடியும். ஆகவே அரசு இது போன்ற அடிப்படைப் பிரச்சனையை கருத்தில் கொண்டு தக்க சமயத்தில் நடவடிக்கை எடுப்பதே சிறந்த செயலாகும். நம் தமிழ்மண வலைப்பதிவாளர் மற்றும் வாசகர்களின் வேண்டுகோளும் அதுவே!!!

Thursday, November 22, 2007

கமல் எழுதிய கவிதை

கவிஞர் புவியரசுக்கு நடந்த பாராட்டு விழாவில், தான் எழுதிய கவிதை ஒன்றை மேடையில் வாசித்தார் கமல்.

(தமிழ்சினிமா.காம்-இல் வெளிவந்த அக்கவிதையை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்)

மனித வணக்கம்

தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீகச் சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு

தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடி போனாயோ?

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.

மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண சௌகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல..
எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை,
காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தியுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.

மதமென்றும், குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.

ஆம்,
நாளை உன் வரியில் நான் தெரிவேன்.

அன்பன்
-கமல்ஹாசன்

Tuesday, November 20, 2007

பில்லிசூன்யம் வைத்துவிட்டார்கள் குமுறுகிறார் எட்டியூரப்பா - மேலும் ரஜினிகாந்த் அறிவுரை

கர்நாடகத்தின் முதலமைச்சர் பதவி பறிபோன பிறகு எட்டியூரப்பா விரக்தி விளிம்புக்கே சென்றுவிட்டார் போலும். சாத்திரலு, சம்பிரதாயலுவில் அதிக நாட்டமுள்ள எட்டியூரப்பா எண்கணிதப்படி 'எடியூரப்பா" என்ற தன் பெயரை எட்டியூரப்பா என்று மாற்றி வைத்துக்கொண்டவர். ஆனால் அதனால் ஒருபலனும் காணவில்லை. இப்படி அடிமேல் அடி வாங்கி நொந்து போன எட்டியூரப்பா, இப்போது தேடகவுடா மீது சொன்ன குற்றச்சாட்டு என்னவென்றால், "தேவகவுடாவும் அவரது மகன் குமாரசாமியும் எனக்கு பில்லிசூன்யம் வைத்துள்ளனர்" என்பதே.இதற்கு பயந்து உயில் கூட எழுதி வைத்துவிட்டதாக கூறுகிறார். தான் இறந்தால் அதற்கு கவுடாவும் குமாரசாமியும் தான் காரணம் என்று வேறு கூறியுள்ளார்.

இது பற்றி, நம்ம உட்டலக்கடி உலகநாதன் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கருத்து கேட்க விரைந்தார். போயஸ்தோட்டத்தில், தேடியும் கிடைக்காத ரஜினி சென்னையிலுள்ள பாபாஜி ஆசிரமத்தில் கிடைத்தார்.

உ.உ: கன்னடர்களை விட, பிஜேபியை அதிகம் நேசிக்கும் நீங்க இந்த பில்லிசூன்யத்தை பத்தி சொல்லவருவது என்ன?

ரஜினி: என்னை வாலவைக்காத தெய்வங்களான கன்னடமக்களுக்கு என்னோட வணக்கங்கள், சமீபத்துல எட்டியுரப்பாவுக்கு பில்லிசூன்யம் வச்சிடாங்களாம்னு கேள்விபட்டேன். அதே பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது.(தெரியாம ஏன் சாமி பேசுறே!!) கர்நாடகல நடக்குறது தான் உங்களுக்கு தெரியும்.ஆனா வட இந்தியாவே எரிஞ்சிட்டு இருக்கு. அது உங்களுக்குத் தெரியாது. இத கவுடா ஐயா சுமூகமா எல்லாரோடவும் கலந்துபேசி பில்லிசூனியம் வைக்கணும். எந்த தலைவர்னு பேதமில்லாமல் வைக்க ஏற்பாடு செய்யணும்.

உ.உ.; இத்தகைய பேச்சுக்கு உங்கள் ஒத்துழைப்பு கிடைக்குமா?

ரஜினி: முடிய வச்சு தான் பில்லி சூன்யம் வைக்க முடியுமாம். இங்க சில பேர் முடியே இல்லாத தைரியத்தில் சேது இடிக்கபோறேன்னு சொல்லிட்டு இருக்காங்க!!அவங்களுக்கும் காவிரி வேணும்னு கேட்கிறவனுக்கும், பில்லிசூன்யம் வச்சா, நான் வேணும்ன்னா என்னோட பாக்கெட்ல இருந்து ஒரு கோடி ரூபாய் தரேன்.

உ.உ: சார்! உங்க பாணில இந்த விஷயத்துக்கு ஒரு குட்டிகதை சொல்லி முடிங்க, அப்ப தான் வாசகர்கள் விரும்பி படிப்பாங்க!!

ரஜினி: ஒரு ஊருல அத்துவானினு ஒருத்தர் இருந்தார். அவர் எப்பவும் எதயாவது இடிக்கனும் இடிக்கனும்னு சுத்திகிட்டு இருப்பாரு, இப்படித்தான் இவரு சின்ன வயசுல 10-15 மசூதி, 20-30 கிழவிகளை இடிச்சி தள்ளியிருந்தாரு. இதைப்பார்த்த இவரோட அப்பா. இவரை கூட்டிக்கொண்டு போய் சேதுசமுத்திரத்தில் விட்டுட்டார். விடியவிடிய சேதுவை இடிச்சார். பிறகு அவருக்கு எதையும் அழிக்கிறது புடிக்கல. மகாவதார் பாபாவோட பக்தரா மாறிட்டார். நீங்களும் வாங்க பாபாவோட பக்தரா மாறுங்க.

உ.உ.: ஐயோ! வேணம் சாமி இந்த விளையாட்டு!! எஸ்கேப்!!

Monday, November 19, 2007

ராமர் பிறந்தநாள் கி.மு., 5114, ஜன.10 - விஜயகாந்த் என்ன சொல்லிட போறாரு?

ராமர் பிறந்தது கி.மு., 5114ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி என்று கூறியுள்ளார் தொல்லியல் மற்றும் வானியல் ஆய்வு நிபுணர் டி.கே.ஹரி.


சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் ஞான் என்ற அமைப்பின் நிறுவனர் டி.கே.ஹரி. தொல்லியல், வானியல் மற்றும் ஜாதக நிபுணர். ஹரி துவக்கியுள்ள அமைப்பு, இந்து புராணங்களில் கூறப்பட்டு இருப்பவற்றை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து வருகிறது.

பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கிரகங்களின் அம்சங்கள் அடிப்படையிலும், ராமாயண இதிகாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளின் அடிப்படையிலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளோரின் பிறந்த தினத்தை, ஆங்கில காலண்டர் முறைப்படி இவர் கணித்துள்ளார்.இதற்கெனவே, தேதிகளை கண்டுபிடிக்கும் கம்ப்யூட்டர் மென் பொருளையும் தயாரித்துள்ளார். இதன் மூலமும், புஷ்கர் பட்நாகர் எழுதிய, "கடவுள் ராமரின் காலத்தை நாளிடுதல்"் என்ற புத்தகத்தின் அடிப்படையிலும், ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களின் அடிப்படையிலும், இந்த தேதிகளை ஹரி கண்டுபிடித்துள் ளார்.

ஹரியின் கணக்குப்படி, ராமருக்கு ஒரு நாள் பிறகு பிறந்தவர் பரதர். ஹரி கூறுகிறார். ராமர் கி.மு., 5114ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியும், பரதன் அதே ஆண்டு ஜனவரி 11ம் தேதியும் பிறந்துள்ளனர். பரதனுக்கு கி.மு. 5089ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி முடிசூட்டு விழா நடைபெற்றது. பரதனுக்கு முடிசூட்டு விழா முடிந்ததும் ராமர் தனது 25வது வயதில் மனைவி சீதாதேவி மற்றும் லட்சுமணனோடு வனவாசம் சென்றார். ராவணனுடன் போருக்கு முன்பாக, இலங்கைக்கு அனுமன் கி.மு., 5076ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி சென்று, அங்கிருந்து இரண்டு நாள் கழித்து, செப்டம்பர் 14ம் தேதி இந்தியா திரும்பி உள்ளார். (கள்ளதோணியிலா வந்தாரு, 2 நாள் ஆகுது??) இதை கண்டுபிடிப்பதற்காக, 27 நட்சத்திரங்கள் மற்றும் ஏழு கோள்களின் அமைப்புகள் ஆராயப் பட்டன. அவை இருந்த இடம், ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. ராமர் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். நாசா மையமும் கோள்களின் அமைப்பு குறித்து விரிவாக ஆராய்ந்து வருகிறது. (இந்த தகவலை பத்தி நாசாவுக்கு தெரியுமா? ஐ!!! அமெரிக்காவில் இருக்கும் தமிழ்மண அன்பர்கள் ஜாதகம், ஜோசியம், கைரேகை எல்லாம் இனிமேல நாசாவுலயே பார்த்துகலாம்). ராமர் குறித்த எங்களது ஆராய்ச்சி, முழுக்க முழுக்க அறிவியல் அடிப்படையிலானது. இவ்வாறு ஹரி கூறினார். (நன்றி: தினமலர்).


இந்த செய்தி பத்தி நம்ம கேப்டன் என்ன சொல்லியிருப்பாருனு யோசிச்சா.....!!!????!!!!????

//நாட்டுல எவ்வளவோ ஜனங்க கஸ்டப்படும்போது, நீங்க இராமருக்கு பொறந்தநாள கண்டுபிடிச்சிட்டு இருக்கீங்க. இதெல்லாம் தெரிஞ்சிகிட்டு நாளைக்கு இராமர்க்கு காவெண்ட்ல சீட்டா வாங்க போறாரு. இந்தியாவுல மொத்தம் 2038 கடவுள் இருக்கு, அதுல பூமியில பொறந்த கடவுள் 832. சாகாத கடவுள் 543. செத்துபோன கடவுள் 113, கல்யாணம் செய்துகிட்ட கடவுள் 1002, சாமியாரா போன கடவுள் 885. இதுகெல்லாம் பிறந்தநாள் கண்டுபிடிக்கத்தான் முடியுமா? அப்படி கண்டு பிடிச்சாலும் கேக் வெட்டி கொண்டாடத்தான் முடியுமா? அவனவன் இருக்கிற கஷ்டத்துல ஏன் பொறந்தோம்னு யோசிட்டு இருக்கான். ஆனா நீங்க இராமருக்கு பிறப்புச்சான்றிதழும், நபிகள்நாயகத்துக்கு சாதிச்சான்றிதழ் கொடுத்துட்டு இருக்கீங்க. இத ஒவ்வொரு தமிலனும் யோசிக்கனும். இவங்கள அடிச்சா உத்தரபிரதேஸ்ல இருக்கிற இராமர் இல்ல, உடுமலைபேட்டை இராமர் கூட வரமாட்டான்். பாகிஸ்தான் தீவிரவாதிகளை புடிக்க என்னய பர்வேஸ்முஸ்ரப் குபுட்டு இருக்காரு. நான் வரட்டுமா? ஆங்...//

Sunday, November 18, 2007

வரலாறும் போரும் - 300 ஸ்பார்டன்ஸ் (1)

300 திரைப்படத்தில் லியானடஸ்

சமீபத்தில் வெளியான 300 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. அதற்கு முன்னரே காமிக்ஸாக வந்து உலகினரின் உள்ளங்களை கவர்ந்தது. இதனை இயற்றியவர் ப்ராங்க் மில்லர் என்ற நாவலாசிரியர் ( 'சின்சிட்டி'யும் இயற்றியவர் இவர்தான்). 300 கதை தெர்மோபைலி (நெருப்புவாயில் என்று பொருள்) என்ற இடத்தில் நிகழ்ந்த கிரேக்க-பாரசீக போரை மையமாகக் கொண்டு உருவானது. இப்படத்திற்கு இரானில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. காரணம், தவறான வரலாற்றுத் தகவல்கள். என்ன தான் கிராபிக்ச் யுக்திகளை கையாண்டு காமிக்ஸ் போல இருந்தாலும், பாரசீக படையை எதோ பேய்-பிசாசுகளைப் போல காட்ட விழைவது மிகவும் மோசமான செயல்.

"300 திரைப்படம் 90% வரலாற்றுரீதிலான உண்மைகளை உள்ளடக்கியது" என்று அப்படத்தின் இயக்குனர் கூறுவது காதில் பூ அல்ல பூந்தோட்டமே வைக்கும் வேலை.

இதே போரைக்கொண்டு 1962-ல் "300 ஸ்பார்டன்ஸ்" என்ற பெயரில் திரைப்படம் வெளிவந்து வெற்றியும் பெற்றது. ஆனால் போரின் யாதார்த்தமாக, மாயாஜால வேலைகளின்றி முழுமையாக சொல்லப் பட்டிருக்கும்.300 திரைப்படம் வெகுமோசமாக பாரசீகப் பேரரசைச் சித்தரித்தது. இதற்கு காரணம் பாரசீகம் தற்போதைய ஈரான் என்பது அனைவரும் அறிந்ததே.

லியானடஸ் ஓவியம்

கி.மு.480-ல் சிறிய கிரேக்க கூட்டணிக்கும் பாரிய பாரசீக பேரரசுக்கும் தெர்மோபைலி என்ற இடத்தில் இரண்டரை நாட்கள் போர் நடை பெற்றது. கிரேக்கப்படைக்கு லியானடஸ் தலைமை தாங்கினான். உலக வரலாற்றறிவியலின் தந்தை ஹெரோடோடஸ் கணக்கின்படி கிரேக்கப்படை 300 ஸ்பார்டண்களையும், 700 தெஸ்பியன்களையும், மற்றும் 5000 கிரேக்க வீரர்களையும் கொண்டிருந்தது. பாரசீகப்படை செர்செக்ஸ் தலைமையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படையுடன் போரிட்டது. பாரசீகப்படைக் கூட்டணியில் பாரசீகர்கள் தவிர்த்து, கிரேக்கம், சீனம், வடமேற்க்கு இந்தியாவைச்சேர்ந்த படைகளும் பங்கு பெற்றன. இத்தகைய மாபெரும் கூட்டணி எதிர்ப்பதென்பது சாதாரண விஷயமல்ல. பாரசீக படயடுப்பை அறிந்ததும், படையெடுப்பை எதிர்கொள்ள கிரேக்கத்தின் நாடுகளின் சபை கூட்டப்பட்டது. (பழங்காலங்களிலே கிரேக்கத்தில், கிரேக்க பிராந்தியங்களின் ஐக்கிய சபை உருவாக்கப்பட்டிருந்தது. இது தற்கால குடியரசு ஆட்சிக்கு முன்னோடியானது) . சந்திப்பில் கிரேக்கப்படைக்கு தலைமையேற்க ஸ்பார்டன்கள் அழைக்கப்பட்டார்கள். அதென்ஸ் கடற்படை பாரசீக கடற்படையை எதிர்கொள்ள தயாராகும் வரை, பாரசீகப்படைக்கு எதிர்ப்பு கொடுத்து நிறுத்த வேண்டும் என்பதே போர்வியூகம்.

தற்கால தெர்மோபைலி

ஏற்கனவே கி.மு.490 மாரதான் போரில் ஸ்பார்டன்கள் உதவி ஏதென்ஸ்க்கு கிட்டாமல் போனதற்கு காரணம், ஸ்பார்டன்களின் திருவிழாவாகும். கடவுளின் பேரில் போர்கள் காலந்தாழ்ப்பட்டன. அதேபோல இப்போரிலும் காலம் தாழ்த்தப்பட்டது. ஆனால் போரை பொருத்தவரை, காலம் மற்றும் இடம் மிகவும் முக்கியமானவைகள். இதனைப் புரிந்த லியானடஸ் தன்னுடைய மெய்காவலர்களுடன் போருக்கு புரப்படுகிறான். தெர்மோபைலி கணவாயில் தன்னுடைய படையை நிறுத்திக் கொண்டு போர் புரியத்தொடங்குகிறான். ஒரு பக்கம் மலையும், ஒரு பக்கம் கடலும் கொண்ட அந்த குறுக்கு வாயில், அதிக படையை அனுமதிக்காதது, லியானடஸ் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறான். இரண்டரை நாட்களில் சுமார் 20000க்கு மேற்ப்பட்ட பாரசீக படைவீரர்களை வீழ்த்தி லியானடஸும் அவனது வீரர்களும் இறுதிவரை போர் புரிந்து வீரமரணம் அடைகிறார்கள். ஆடுமேய்ப்பவன் ஒருவனால் மலையைக் கடக்கும் ஆட்டுப்பாதை வழியாக சில பாரசீக படைகள் முன்னேறி, லியானடஸின் படைகளை சுற்றி வளைக்கிறார்கள். இதுவே, லியானடஸின் ஆற்றலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. பிறகு முடிவில், வரும் ஸ்பார்டா படைகளாலும், ஏதென்ஸ் கப்பற்படையாலும் பெருமளவில் சேதமேற்படுத்தப்பட்டு, பாரசீகப்படை பின்வாங்குகிறது.

முதலில் கூறியது போல, போர் வெறும் படைபலத்தைப் பொறுத்து அமைவதில்லை. காலம், சூழ்நிலை, இடம, போர்வியூகம்் என பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது. லியானடஸ் தேர்ந்தெடுத்த தெர்மோபைலி கணவாய் தொட்டு நடந்த போர் பாரசீகத்தின் அசுர பலத்தை வெகுவாக முடக்கிவிட்டது. ஒரு சிறு கணவாயில் குறிப்பிட்ட அளவு படைதான் நுழைய இயலும் என்ற கட்டத்தில், இருதரப்பும் சமமான பலத்துடன் போர்புரியும் சூழல் வந்துவிடுகிறது. அது மட்டுமில்லாமல், கிரேக்கர்களின் படையமைப்பு வெகு எதிர்ப்பு திறன் கொண்டது. இதனால் போரின் முடிவு கிரேக்கர்கள் எதிர்பார்ப்பது போல அமைகிறது. அதுமட்டுமல்லாமல் கிரேக்கப்படை ஒரு தற்கொலைப்படை போல செயல்பட்டு, எதிரிக்கு பெரும் இழப்பை ஏற்ப்படுத்தியது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. மேலும் இத்தகையதொரு இழப்பு எதிரியின் மனவலிமையைக் குறைத்துவிடும்.

பாரசீக படையின் அளவைக் கேட்டும் கண்டும் எள்ளளவு மனம் தளராத ஸ்பார்டாவீரர்களின் வீரம் மெச்சத்தக்கது. ஹெரோடோடஸின் தொகுப்பில் சில:

"சரணடையாவிட்டால் பாரசீக அம்புகள் சூரியனை மறைத்துவிடும்" என்று ஒரு பாரசீகன் கூற்றுக்கு, "அப்போது நிழலில் நின்று போர்புரிவோம்" என்று டினிக்ஸ் என்ற ஸ்பார்டா வீரனின் பதில்.

"பாரசீகர்களின் கூடாரங்கள் வானத்து விண்மீன்கள் போல இருந்தன" என்று ஒரு ஸ்பார்டா வீரன் கூறுகையில், "நான் சிறுவயதில் விண்மீன்களைப் பார்க்கும்போது, ஈட்டியுடன் அதன் அருகில் செல்ல ஆசைப்பட்டேன். இப்போது நல்ல சந்தர்ப்பம்" என்று கூறும் லியானடஸ் வசனம். ஸ்பார்டா வீரர்களின் மனவலிமையை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

தற்போதைய ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் இந்த போரின் முக்கியத்துவத்தை வெகுவாக புகழ்ந்து பேசுகிறார்கள். போரை அவர்கள் அதிகம் சிலாகித்தாலும், அவர்கள் கூறும் முக்கிய காரணம். ஒருவேளை பாரசீகம் கிரேக்கத்தைக் கைப்பற்றி இருந்தால், இன்றைய ஐரோப்பா முற்றிலும் மாற்றத்தை சந்தித்திருக்கும். கிரேக்க நாகரீகமே அழிந்திருக்கும். அதன் நினைவாக, கிரேக்க அரசு தெர்மோபைலியில் லியானடஸுக்கு சிலை எழுப்பியுள்ளது.

சிலருடைய குறுகலான எண்ணங்களில் இப்படியும் தோன்றுவதுண்டு. என்னவென்றால், பாரசீகம் கிரேக்கத்தை வெற்றி கொண்டிருந்தால், இன்று கிருத்துவ மதம் அழிந்து உலகத்தின் ஏகமதமாக இஸ்லாம் இருப்பதற்கு வழிகோலி இருக்கும். லியானடஸ் அக்கால சிலுவைப் போராளியாக சித்தரிப்பது அமெரிக்கர்களின் பிற்போக்குஅடிப்படைவாதம் என்றும் கூறலாம்.

பி.கு.: மேலும் வரவிருக்கும் தொடர்களில் சந்திப்போம், பல்வேறு வரலாற்று போர்களையும் போர்முறைகளைப் பற்றியும் அலசுவோம். அதுவரை பொறுத்திருங்கள்

(தொடரும்)

300 ட்ரெய்லர்Thursday, November 15, 2007

குணசித்திரநடிகர் எஸ்.வி.சுப்பைய்யா - அறிமுகம்

தமிழ்த்திரை உலகின் சிறந்த குணசித்திர நடிகர்களில் எஸ்.வி.சுப்பையா மிகவும் முக்கியமான ஒருவர். எம்.ஆர்.ராதா, நாகைய்யா, பாலைய்யா போன்ற குணசித்திர நடிகர்களின் வரிசையில் இவரும் மறக்க முடியாதவர். நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த "கப்பலோட்டிய தமிழன்" படத்தில் பாரதியாராகவே வாழ்ந்திருப்பார். இன்றும் பலருக்கு, பாரதியார் என்றால் சுப்பைய்யா தான் கவனத்திற்கு வருவார்.
கலைத்துறையில் ஆர்வம் கொண்ட எஸ்.வி.சுப்பைய்யா முதலில் டி.கே.எஸ். நாடகசபா, பிறகு சக்தி நாடகசபா ஆகியவற்றில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1950-க்கு பிறகு சிறுசிறு வேடங்களில் நடிக்கத்தொடங்கினார். மாயாவதி என்ற படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துடன் அருமையாக நடித்திருப்பார். அப்படத்தில் "காமரூபன்" என்ற தெத்துப்பல உடைய நாவிதனாக அவரது சிறப்பான நடிப்பு, எஸ்.வி.சுப்பைய்யா தானா? அவர் என்ற சந்தேகம் ஏற்படுத்தும். அவர் ஜெமினிகணேசன், அஞ்சலிதேவி நடித்த "காலம் மாறிப்போச்சு" என்ற படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.சிவாஜி கணேசனுடன் பல படங்களில் நடித்தார். குறிப்பாக கப்பலோட்டிய தமிழன், பாவமன்னிப்பு, பாகப்பிரிவினை, இரும்புத்திரை, பொன்னூஞ்சல்,நீதி, அரங்கேற்றம் போன்றவை மறக்க முடியாத சிறந்த படங்கள். ஜெமினிகணேசனுடன் மணாளனே மங்கையின் பாக்கியம், சவ்பாக்கியவதி, வஞ்சிக்கோட்டை வாலிபன், ராமு, பார்த்திபன் கனவு ஆகிய படங்கள் சிறந்தவை. பார்த்திபன் கனவு படத்தில் ஓடக்கார பொன்னனாக வருவார். "ஆதிபராசக்தி" படத்தில் அபிராமிபட்டராக அற்புதமாக நடித்திருப்பார். அந்த நடிப்பை சொல்லால் கூறயியலாது. "சொல்லடி அபிராமி" என்ற பாடலில் நடிக்கும்போது, பக்திப் பிழம்பாக மாறிவிடுவார். எம்.ஜி.ஆருடன் இதயக்கனி என்ற படத்தில் நடித்தார். இவர் சொந்தமாக தயாரித்த படம் "காவல்தெய்வம்". இப்படத்தில் ஜெயிலராக வந்து வெகு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படத்தில் அவர் பேச்சும் நடிப்பும் மிகையில்லாமல் சிறப்பாக இருக்கும். கவுரவ வேடத்தில் சிவாஜிகணேசன் பனைமரமேறும் சாமுண்டியாக நடித்தார். இப்படத்தின் கதை-வசனத்தை ஜெயகாந்தன் எழுதினார். சிறந்த குணச்சித்திர வேடங்களில் தமிழ்மனங்களில் பதிந்த எஸ்.வி.சுப்பைய்யா அவர்கள் ் 29-1-1980-ல் காலமானார்். என்னதான் பல நடிகர்கள் தமிழ்த்திரையுலகில் இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துக்கொண்டவர் இவர்.

Wednesday, November 14, 2007

ரஜினிக்கு ஏன் இந்த கொலைவெறி!!


'இனி தமிழகமெங்கும் சித்தர்களின் ஆட்சிதான் மலரப்போகிறது!' என்று ஸ்ரீஸ்ரீ அருள்மிகு ரஜினிகாந்த் சுவாமி அருள்வாக்கு கூறியுள்ளார்.

நடிகர் சரத்குமார் புதுக்கட்சி துவங்கிய பிறகு அவரை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை வாழ்த்தியதோடு, இனி சித்தர்களின் ஆட்சிதான் மலரப்போகிறது என்றாராம். (நம்ம ரஜினி சும்மானு இருக்க மாட்டார் போல) அப்போது ரஜினியிடம், இமயமலையில் இருக்கும் பாபாவை தரிசிக்க தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சரத்குமார் கேட்டுக் கொள்ள, (தம்பு செட்டி தெருவில் இருக்கிற குறுக்குசந்து வழியாகத்தான் 'பாபா' படத்தில் ரஜினி இமயமலைக்கு போனார், அங்கே போய் தேடினால் வழி கிடைக்கும்) உடனடி நிவாரணமாக சென்னையில் உள்ள பாபா கோவிலுக்கு சென்று வணங்கும்படி கேட்டுக் கொண்டாராம் ரஜினி.

ரஜினியின் உற்ற நண்பர் ஹரி என்பவர்தான் சென்னையில் இந்த பாபா கோவிலை கட்டியிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் அந்த கோவிலுக்கு செல்லும் ரஜினி அங்கேயே அமர்ந்து தியானமும் செய்வாராம். இது சித்தர்கள் வாழ்ந்த பூமி என்பதால் என்பதால்தான் ரஜினியின் இந்த வாராவார விசிட். (சென்னையில சித்தரா!! ஓ!! நம்ம மெட்ராஸ்காரரு!! அதாங்க பட்டினத்தார்) தான் ஒவ்வொரு வாரமும் அந்த கோவிலுக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன் என்று ரஜினி சொல்ல, அடுத்த நாளே மேற்படி கோவிலுக்கு சென்றுவிட்டார் சரத். (விஜயகாந்த்க்கு இன்னும் விஷயம் தெரியலயோ!! அவருக்கென்ன பிரச்சனை. அவருக்குத்தான் இமயமலையில்.நிறைய தீவரவாதிகள் தெரியுமே! ஹிந்தி கூட தேவையில்ல! தமிழிலேயே அவர்களிடம் பேசிடுவார் வேற) சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து தியானமும் செய்தாராம். மிகவும் அமைதியான கோவில் என்று தன் ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார் சரத். விரைவில் ரஜினியோடு இமயமலைக்கு சென்று வரவும் திட்டமிட்டிருக்கிறார். (கூடிய சீக்கிரத்தில் ரசிகர்கள் ரஜினியையும், சரத்தையும் தம்பு செட்டி தெரு பக்கமாக பார்க்கலாம்). சரத்குமார் மேல ரஜினிக்கு ஏன் இந்த கொலைவெறி, இனிமேல சரத் படத்துலயும் "சாயா! மாயா" என்று வசனம் வரப்போகுது. ஜாசிசங்கம் ஆரம்பிப்பாரா? இமயமலைக்கு போவாரா? என்பது தான் அடுத்த படத்தோட கிளைமேக்ஸாக இருக்கும்.

நன்றி: தமிழ்சினிமா

ஈழமும் இந்துதேசியமும்


வரலாறு என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். வரலாறு இல்லாதவர்கள்(மறைக்கப்பட்டவர்கள்) தங்களுடைய சுயங்களை இழந்தவர்களாக காட்சிக்கு வைக்கப்படுகிறார்கள். "history must be written of, by, and for the survivors" என்ற பழமொழிக்கேற்ப வரலாறு எழுதப்படுகிறது. இதனை நாம் உணர்ந்து கொள்ளாவிடில் படித்தும் அறிவில்லாதவர்களாகவே இருக்க வேண்டி இருக்கும். சமீபத்தில் என் நண்பருடைய விவாதிக்கும்போது, ஈழப்பிரச்சனைப் பற்றியும், இந்தியாவின் இந்து-முஸ்லீம் பிரச்சனை பற்றியும் பேச்சு வந்தது. விவாதத்தின் தொகுப்பு இது தான்.

1. தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் தான் ஈழத்தமிழர்கள்?

பாண்டியர்களும், சோழர்களும் பலம் பொருந்திய அரசர்களாக இருந்த காலத்தில், இவ்வாறான குடிபெயர்தல்கள் படையெடுப்பு மூலம் நடந்தன. ஆனால் அதற்கு முன்னரே, அங்கு ஈழத்து தமிழ்குடிகள் இருந்தன. தற்போது, சிறிலங்கா அரசின் வாதமொன்றில், தமிழர்பகுதியில் காணப்படும் பௌத்த சின்னங்களைக் கொண்டு தமிழர்கள் வந்தேறிகள் என்கிறார்கள். நாம் என்ன முதலில் இருந்தே இந்துவாக இருந்தோமா? நமது ஐம்பெரும் காப்பியங்கள் அனைத்தும் சமண, பௌத்த மதம் சார்ந்தவை. தமிழகத்தில் கூட நிறைய சமண, பௌத்த சின்னகளின் மிச்சங்கள் உண்டு. இவை பெரும்பாலும் இந்துமன்னர்களால் அழிக்கப்பட்டன. திருமங்கையாழ்வார் கூட சமண மடங்களையும், சிலைகளையும் அழித்ததாக நண்பர் ஒருவர் கூறக்கேட்டேன். இவை வரலாற்றுரீதியாக உண்மை். ஆனால் அவை (சின்னங்கள்) இன்று சிங்கள அரசால் அழிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. இவை நமது வரலாற்றை திரித்து கூறுவதற்காகவே.

நம்முடைய சமண-பௌத்திற்கு முந்தைய நிலை இன்னும் தெளிவாக தெரியவில்லை. வள்ளுவரை கூட சமணர்-பௌத்தர் என வாதங்கள் உண்டு.


16-ம் நூற்றாண்டுகளில் அநுராதபுரத்திலும், கண்டியிலும் இருந்த விஜயநகர நாயக்கர்கள் கூட இன்று சிங்களவர்களாக அடையாளம் காணப்படும்போது. ஏன் 2000-2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பௌத்த தமிழர்கள் சிங்களவர்களாக அடையாளம் காணப்படக்கூடாது. (800 ஆண்டுகளுக்கு முன் நம்முடன் சேரநாட்டு தமிழர்களாக இருந்தவர்கள், இன்று மலையாளிகளாக அடையாளம் காட்டிக் கொள்ளவில்லையா?) இந்துக்களாக மாறிய பிறகு நாமே கூட பௌத்த தமிழர்களுடன் போரிட்டு இருக்கலாம். அவர்களின் விகாரைகளை உடைத்திருக்கலாம். ஆனால் சிங்களவர் சற்றும் சிந்தியாமல் 'மகாவம்சம்" போன்ற பழைய பஞ்சாங்கங்களில் வரலாற்றைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

சில தமிழக மற்றும் ஈழ தமிழர்கள் கூட நாம் பௌத்தர்களாக வாழ்ந்தோம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். தாங்கள் ஒரு தூய இந்து பின்னனி கொண்டவராகவே பறைசாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். சிறிதாவது மேல்கூறியதை சற்று சிந்திக்க வேண்டும்.

2. தமிழீழம் சிறிலங்காவின் ஐக்கியத்தை சீர்குலைகிறதா? ஐக்கிய இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தான் பிரிந்தது தவறா?

இரண்டு கேள்விக்கு பதில் ஒன்றுதான். முன்பு இந்தியா-பாக்கிஸ்தான் பிரியும் போது, முஸ்லீம்கள் மனநிலை எப்படி இருந்ததோ? அதே மனநிலையில் தான் இப்போது ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். சிறுபாண்மையினராக இருந்த முஸ்லீம்களுக்கு போதிய சலுகை வழங்கததாலும், இந்துக்கள் பெரும்பாலான வேலைகளை ஆக்கிரமித்ததாலும் தான் பிரிவு ஏற்பட்டது. முஸ்லீம் பெரும்பாண்மைப் பகுதிகள் பாக்கிஸ்தானுன் சேர்க்க முடிவெடுத்த தருவாயில், லாகூர் இந்தியாவில் சென்றுவிடுமோ என்ற எண்ணத்தில் 1000-க்கும் அதிகமான இந்துக்கள் அங்கிருந்து விரட்டப்பட்டனர்(பிரிவினையின் போது லாகூரில் இந்துக்கள் அதிகம்).அதேபோல, இந்தியாவிலும் எல்லையிலுள்ள நகரங்களில் இருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்டன. பல இந்து-முஸ்லீம் உடன்பிறப்புகள் கொல்லப்பட்டனர். 15 நாட்கள் நீடித்த பிரிவினை இழுபறியால் 5000 கொலைகள் நிகழ்ந்தன. இவையெல்லாம் எவற்றால் சற்று சிந்திக்க வேண்டும். வெளியிருந்து வ்ந்த முஸ்லீம்களுக்கு எதற்கு பாக்கிஸ்தான் என்று பேசுபவர்கள் எல்லாரும் ஐக்கியம் பற்றி பேசுபவர்கள் தான். இந்தியாவிலிருந்தும் பாக்கிஸ்தானிலிருந்தும் வீடுகளையும் நிலங்களையும் பொருட்களையும் விட்டுவிட்டு வெளியேறும். அவலம் நிகழாதிருக்க முஸ்லீம்களுக்கு போதிய இடஒதுக்கீடு வழ்ங்கியிருக்க வேண்டும் அல்லது முறையாக உடனடியாக பாக்கிஸ்தானை அமைதியாக பிரித்திருக்க வேண்டும். அப்படி பிரித்திருந்தால், இன்று இந்தியாவும் பாக்கிஸ்தானும் சகோதர நாடாக இருந்திருக்கும். ஆனால் அந்த பிரிவினை பலரது குருதியின் நெடியிலேயே ஏற்பட்டது. ஒருவேளை இன்று ஐக்கிய இந்திய கோட்பாடு பேசுபவர் சொல்வது போல, இந்தியா பிரியாமல் இருந்திருந்தால், இலங்கையின் நிலைமைதான் நமக்கும் ஏற்பட்டிருக்கும்.இன்று காஷ்மீரில் நிகழும் போர், இந்தியா முழுக்க ஜிகாதியாக நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.

நண்பர் ஒவ்வொரு கேள்விகளாக அடுக்கிச்செல்ல நானும் பொறுமையுடன் பதில் கூறினேன். அவருடைய விவாதத்தில் ஒன்று புரிந்தது, அவருக்கு தமிழரின் வரலாறு தெரியாது. இந்தியாவின் பூர்வீகம் தெரியாது. இப்படிப்பட்டவர்க்கு இலங்கை பற்றிய ஞானம் என்ன இருக்கும் என ஊகிக்க இயலவில்லை. இப்படி ஒருவர் அல்ல பலபேர் உள்ளனர் இந்தியாவில். இவர்களின் கனவு இதுதான் இந்தியா ஒரு இந்து நாடு (இதைத் தான் ஐக்கியம், வேற்றுமையில் ஒற்றுமை என்றெல்லாம் புருடா விடுவார்கள்). படத்திலுள்ள பாரதமாதா உருவத்தை முஸ்லீம் மக்கள் வழிபட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். கேட்டால் தேசியம் என்பார்கள்? இவர்கள் என்றாவது வடகிழக்கு மாகாண மக்களின் இன்னல்களையோ, காஷ்மீர மக்களின் துயர்களையோ கணக்கில் கொண்டதுண்டா? தெரியவில்லை. இவ்வளவு வாய்கிழிய மனிதவுரிமை, மக்களாட்சி, பண்பாடு பற்றி பேசும் இந்தியா கூட திபெத் பிரச்சனையில் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டுதான் இருக்கிறது. கேட்டால் உதைவிழும் என்ற பயம் தானே? இவர்கள் என்னடா என்றால், ஐக்கிய இந்தியா பற்றி அளந்து கொட்டுகிறார்கள். (தொடரும்)

தமிழ்தாய் வாழ்த்திற்கு ரஹ்மானின் இசை!!


ஏற்கனவே தேசிய கீதத்திற்கு இசையமைத்து பெருமை சேர்த்த ஏ.ஆர். ரஹ்மான் தமிழ்தாய் வாழ்த்திற்கும் இசைவடிவம் தரவேண்டும் என 'கல்லூரி' பட விழாவில் ஒரு வேண்டுகோள் வைத்தார் பாலுமகேந்திரா. பாலுமகேந்திரா வைத்த வேண்டுகோளை விழாவிற்கு வந்த நூற்றுக்கணக்கானோர் தங்களது கரவொலிகளால் வழிமொழிந்தனர். கைகளை உயர்த்தி காட்டியும் விருப்பத்தை தெரியப்படுத்தினர். பாலுமகேந்திரா கொளுத்திப்போட்ட இந்த பொறி இசைப்புயலுக்குள் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதன்படி தமிழ்தாய் வாழ்த்துக்கு இசைவடிவம் கொடுப்பதென முடிவு செய்திருக்கிறாராம். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இதற்கான பணிகளை தொடங்க ரஹ்மான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அப்பாடா தமிழ்தாய் வாழத்து பற்றிய செய்தியை ஆங்கில வார்த்தையில்லாமல் எழுதியாச்சு. (நன்றி: சினிசவுத்)

Tuesday, November 13, 2007

மங்கோல் - திரைப்படம்


'மங்கோல்' கஜகஸ்தான் சார்பில் ஆஸ்கார் விருதிற்காக முன்மொழியப்பட்ட ரஷிய படம். இத்திரைப்படம் மங்கோலிய பேரரசன் செங்கிஸ்கானின் கதையைப்பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு மங்கோலிய மக்கள் பல்வேறு எதிர்ப்புக்குரல் எழுப்பினார்கள். செங்கிஸ்கானை தெய்வமாக பாவிக்கும் மங்கோலிய நாட்டிலிருந்து பெருமெதிர்ப்பு கிளம்பியதற்குக் காரணம், செங்கிஸ்கான் 800 ஆண்டுகள் உயிர்வாழ்ந்ததாக அந்நாட்டு மக்கள் நம்புவதே. இப்படம் செங்கிஸ்கானின் கதையின் முதல்பகுதியாக, 10-12 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்ட்டுள்ளது. கஜகஸ்தானிலும், ரஷியாவிலும் படமாக்கப் பட்டுள்ளது. இதனுடைய இயக்குனர் போர்டோவ் " இப்படத்தின் கதை செங்கிஸ்கானைப்பற்றியும் அவனுடைய காதலைப்பற்றியும் ஒரு அனாதைக்குழந்தை, உலகத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றப்போவதையும் கூறும்" என்று தெரிவித்துள்ளார்.

இப்போது கதைக்கு வருவோம். மங்கோலிய வழக்கப்படி செங்கிஸ்கான் எனப்படும் தெமுஜின் தன்னுடைய சிறுவயதில் தந்தையுடன் பெண்பார்க்க செல்வதிலிருந்து தொடங்குகிறது திரைப்படம். (நம்ம ஊருபோல தான், சின்ன வயதில் பார்த்துவிட்டு பருவம் அடைந்த பிறகு மணந்து கொள்வது) தந்தையின் விருப்பதிற்கு மாறாக, ஒரு பலகீனமான இனத்திலிருந்து பெண் தேடிக்கொள்கிறான். திருப்பும் வழியில், எதிரிகளால் தந்திரமாக நஞ்சளித்துக் கொல்லப்படுகிறார் செங்கிஸ்கானின் தந்தை. தன் கூட்டத்தினராலேயே அரசபட்டம் பறிபோக, அடிமையாக வாழ்கிறான் செங்கிஸ்கான். பிறகு அங்கிருந்து தப்பித்துச் சென்று, சில ஆண்டு கழித்து தனக்கு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட பெண்ணை (போர்டே) மனைவியாக்கிக் கொள்கிறான். செங்கிஸ்கானை தாக்கிவிட்டு அவனுடைய மனைவியை மெர்கிட் இனத்தவர்கள் கவர்ந்து செல்ல, தன்னுடைய சகோதரனுடைய (ஜமுகா)உதவியை நாடுகிறான். மனைவியை மீட்ட பிறகு தனியே பிரிந்து செல்ல நினைக்கும் செங்கிஸ்கானுக்கும் ஜமுகாவுக்கும் இடையே ஏற்படும் விரிசலில், மறுபடியும் மனைவியைப் பிரிய நேருகிறது. சீனாவில் அடிமையாக சில காலம் வாழும்போது, மனைவியின் உதவியால் தப்பிக்கிறான். இறுதியில், படைதிரட்டி வந்து போர்த்ந்திரங்களால் ஜமுகாவை வெல்கிறான்.

இறுதி போர்களக்காட்சி தொழில்நுட்பரீதியாக சிறந்து இருந்தாலும், வரலாற்றுரீதியில் சறுக்கிவிடுகிறது. இடிமுழக்கம் கேட்டால் மன்கோலியர்கள் பயப்படுவார்கள் என்ற வாதத்தின்படி, போரில் சண்டையிடாமல் தோற்றுவிடுவார்கள் என்பது கொஞ்சம் நெறுடல்தான். மற்றபடி செங்கிஸ்கான் போர்டே இடையே மலரும் காதல், மங்கோலியரின் உடையமைப்பு, ஒளிப்பதிவு படத்தின் சிறப்பம்சமாக விளங்குகிறது. எப்படி இருப்பினும் தவறாமல் ரசிக்கக்கூடிய படம்.

மங்கோல் படத்திற்கான ட்ரெய்லர்:Thursday, November 08, 2007

இராமாயணம் இலியடின் தழுவலா?

இராமாயணம் இந்துக்களின் புனிதமான காப்பியம். காப்பிய நாயகன் இராமன் கடவுள் அவதாரம். இத்தகைய பெருமை கொண்ட இராமாயணம் கிரேக்க காவியத்தின் வெறும் தழுவலா? சந்தேகம் வந்துட்டா சும்மா இருக்க முடியுமா? உடனே கூகிள் ஆண்டவனை அணுகினேன். இது போன்றதொரு ஆராய்ச்சி ஏற்கெனவே வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடம் உண்டு என்பதை அறிந்தேன்.

2004-ம் ஆண்டு பிராட் பிட் மற்றும் எரிக்பானா நடித்து வெளிவந்த ட்ராய் என்கிற திரைப்படம் கிரீஸுக்கும் ட்ராய்க்கும்(தற்போதைய துருக்கி) நடந்த ட்ராஜன் போரை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். கி.மு. 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டில் ஹோமரால் எழுதப்பட்ட 'இலியட்' என்கிற காப்பியத்தின் கதை தான் இப்படத்தின் மையக்கரு. ஹோமர் 'ஒடிஸி' என்னும் மற்றொரு காப்பியத்தையும் இக்கதையினுடைய தொடர்ச்சியாக இயற்றியுள்ளார். இந்த ட்ராஜன் போர் சம்பவங்கள் 12-13-ஆம் நூற்றாண்டில் நடந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். இப்போது ட்ராய் படத்தின் கதையைப்பற்றி சற்று பார்ப்போம். கிரீஸுக்கும் ட்ராய்க்கும் பல ஆண்டுகளாக போர் நடக்கும் தருவாயில், சமாதான நடவடிக்கையாக ட்ராய் இளவரசர்கள் பாரீஸ் மற்றும் ஹெக்டர் இருவரையும் விருந்திற்காக மெனிலஸ் எனும் கிரேக்கமன்னன் அழைக்கிறான். விருந்தில் பாரீஸும் மெனிலஸின் மனைவியாகிய ஹெலனும் காதல் வயப்படுகிறார்கள். ஹெக்டர் வேண்டாம் என்று கூறியபோதும், பாரீஸ் ஹெலனை ட்ராய்க்கு அழைத்துவந்து விடுகிறான். ட்ராய் மன்னனும் பாரீஸ் மற்றும் ஹெக்டரின் தகப்பனுமான ப்ரியம் ஹெலனையும் பாரீஸையும் வரவேற்று ஏற்றுக்கொள்கிறான். மனைவியை இழந்த மெலனிஸ் தன்னுடைய சகோதரன் அகமெனனின் உதவியை நாடுகிறான். ட்ராயின் மீது ஏற்கனவே படையெடுக்க காத்துக்கொண்டிருந்த அகமெனனுக்கு இது சரியான சந்தர்ப்பமாக அமைந்துவிட, கிரேக்கப்படை முழுவதும் அகமெனனின் தலைமையில் ட்ராயை நோக்கிச்செல்லுகிறது.


தான் செய்த தவறுக்கு படையாட்கள் இழக்கவேண்டாமென்று, மெலினஸுடன் போர் புரிய துணிகிறான் பாரீஸ். போரில் வென்றவர்கள் ஹெலனை அடையலாம் என முடிவு செய்யப்படுகிறது. வாட்போரில் தோற்றுவிட்ட பாரீஸ், ஹெக்டரின் உதவியை கோருகிறான். ஹெக்டர் மெலினஸை கொன்றுவிட, போர் தொடங்குகிறது. அக்கிலிஸ், ஒடிஸஸ், எஜக்ஸ் அகமனின் தரப்பிலிருந்து போர் புரிகிறார்கள். வெகுநாட்கள் முற்றுகையிட்டும் ட்ராய் அரணை கிரேக்கப்படைகளால் நெருங்க முடிவதில்லை. போரில் ஹெக்டர் அக்கிலிசின் நண்பனை தவறுதலாக கொன்றுவிட, அதற்கு அக்கிலிஸ் ஹெக்டரைப் பழிவாங்குகிறான். இறுதியில், ஒடிஸஸின் யோசனைப்படி, கிரேக்கர்கள் "ட்ராஜன் மரக்குதிரை" தயாரித்து வைத்துவிட்டு, மறைந்து கொள்கிறார்கள். அரண் வெளியே கோவிலையிடித்த எதிரிகள் அப்போலோ கடவுளால் அழிந்து போனதாக நினைத்து, மரக்குதிரையை அரணுக்குள்ளே எடுத்துச்செல்ல ப்ரியம் மன்னன் உத்தரவிடுகிறான். அன்று வெற்றிவிழா முடிந்ததும், இரவு மரக்குதிரைக்குளிருந்த கிரேக்கர்கள் வெளிவந்து அரணை திறந்து விடுகிறார்கள். உள்ளே நுழையும் கிரேக்கப்படை ட்ராய் மக்களையும், படைவீரர்களையும் கொன்று நாட்டையே சாம்பலாக்குகிறது. அக்கிலிஸ் பாரீஸின் அம்புபட்டு உயிர் நீக்கிறான் (கணினி வைரஸுக்கும் ட்ராஜன் என வைக்கப்பட்டது, இதே காரணத்தால் தான்).

எதற்கு இந்த கதை என்று கேட்கிறீர்களா? சற்று நன்றாக கவனித்தால், இராமாயணம் இந்த கதையின் மையக்கருவையொத்தே அமைந்திருக்கும் என்பது தெளிவாகப் புரியும். இராமன் - மெலனிஸ், இராவணன் - பாரீஸ், ஹெலன் - சீதை, அனுமன் - அக்கிலிஸ், சுக்கிரீவன் - அகமனன். (அகமனனைப் போல அந்தக்கால தமிழ் மன்னர்கள் இலங்கையை கைப்பற்றவே நினைத்திருந்தார்கள் என்பது உண்மை) இலியட ்இராமாயணம் எழுதியதற்கு முன் எழுதப்பட்டதாக ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது. ட்ராஜன் குதிரை யுக்தியொன்றே போதும், கிரேக்கர்களின் போர் நுணுக்கத்தைப் பரைசாற்ற. இராமகாதை வால்மிகியால் 5-1-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. இராமன் வாழ்ந்த நூற்றாண்டு எதுவென்றே சொல்ல முடியாத அளவிற்கு, நம்மிடம் ஒரு தடயமும் இல்லை. மதவல்லுனர்களை கேட்டால், த்ரேதா யுகம் என்பார்கள். 20 லட்சம் வருசங்கள் கடந்த வரலாற்றை கூறுவார்கள். இதை கேட்ட மாத்திரத்தில் தலை சுற்றும். எனவே இராமகாதை ட்ராஜன் போர்கதையின் தழுவலாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், அக்கிலிஸ் பிறந்தபின் அவனுடைய தாயாகிய தீடைஸ் அவனை மரணமற்றவனாக்க 'ச்டிக்ஸ்' ஆற்றில் மூழ்கியெடுக்கிறாள். அவ்வாறு மூழ்கியெடுக்கும்போது, அவள் பிடித்திருந்த அவனுடைய கணுக்கால்பகுதி ஆற்றில் நனையாமல் பலவீனமாக இருக்கிறது. (ஆங்கிலத்தில் பலவீனத்தை 'அக்கிலிஸ் ஹீல்' என்று கூறுவதுண்டு). இது போன்றதொரு கதை, மகாபாரதத்தில் துரியோதனனுக்கும் உண்டு என்பதை அறிவீர். பாரதத்தில் கூறியதுபோல, மக்கட்தொகையை குறைக்கவே, ஜீயஸால்(கடவுள்) போர் தோற்றுவிக்கப்படுகிறது.

(குறிப்பு: எனக்கு தோன்றிய சிந்தனையைத் தான் கூறியுள்ளேன். மேலும் தகவல் தெரிந்தோர் பகிர்ந்து கொள்ளலாம்.)