Wednesday, February 26, 2014

உள்ளதைச் சொல்வேன் (25/02/2014)

பிரதமரைக் கொன்றவர்களை தண்டிக்காமல் விடுவதா?

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தொடர்புடைய நபர்களை தமிழக அரசு விடுதலை செய்ய முயற்சி எடுத்துள்ளது வரவேற்கதக்கது. ஜெயலலிதா எடுத்த முடிவு அரசியல் காரணங்களுக்காக இருக்கலாம். ஆனால் இப்போது அது முக்கியமல்ல. மத்தியில் ஆளும் காங்கிரஸ் மட்டுமல்லாமல், பல  வட இந்திய ஊடகங்கள் வழக்கம்போல "ராஜீவ் காந்தி கொலையாளிகள்" என்றே பிரசாரம் செய்து வருகிறது. ராஜீவ் கொலைவழக்கில் இவர்கள் யாரும் நேரடியாக தொடர்புடையவர்கள் அல்ல. கொலையில் நேரடியாக தொடர்புடையவர்கள் அனைவரும் சிவராசனோடு இறந்துவிட்டார்கள். கொலைக்குக் காரணமாக இருந்த பிரபாகரனும், பொட்டுவும் போரில் இறந்துவிட்டார்கள். எப்படி இருப்பினும் தண்டனையாக 23 வருடம் சிறையில் இருந்துவிட்டார்கள். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கை சிறையிலேயே முடிந்துவிட்டது. இனிமேலாவது அவர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும். இனியும்  இவர்களின் தண்டனையை நீட்டிப்பது தேவையற்றது. சமீபத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக ராகுல்காந்தி கருத்து தெரிவித்திருந்தார். "பிரதமரைக் கொன்றவர்களை தண்டிக்காமல் விடுவதா?" என்று கூறியிருந்தார்.


ஆயிரக்கணக்கான தமிழர்கள், சீக்கியர்கள் சாவிற்கும் காரணமான ராஜீவ் காந்தியை தண்டிக்க வேண்டுமென்றால், அவருடைய குடும்பத்தின் நான்கு தலைமுறைகள் (ராகுலையும் சேர்த்து) தூக்கில் தொங்க வேண்டும்.

*********************************************************************************

YOUTUBE-ல் ரஜினி நடித்த எதோ ஒரு திரைப்படத்தின் படத்துண்டு. ரஜினி ரசிகர் ஒருவர் "தலைவர் தலைவர்தான்! என்னா ஸ்டைல்!" என்று கருத்திட்டு இருந்தார். அதற்கு பதிலாக விடுதலைப்புலி கொடியின் புகைப்படம் போட்ட ஒருவர் "தலைவர் என்றால் தேசியத்தலைவர் பிரபாகரன் தான். கண்டவனெல்லாம் தலைவரில்லை" என்று கருத்திட்டு இருந்தார். பிறகு அவ்விவாதம் சச்சரவாக மாறி, கண்ணாபின்னாவென்று தனிப்பட்டமுறையில் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு ஒரு சந்தேகம். நான் இன்னாரைத்தான் தலைவர் என்று சொல்லவேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்? நான் யாரை வேண்டுமானாலும் தலைவர் என்று அழைப்பேன். ஆட்டோ ஓட்டுனரைக் கூப்பிடுவேன், டீக்கடைக்காரரைக் கூறுவேன், எங்கள் சந்தியில் இருக்கும் பிச்சைக்காரரிடம் "என்ன தலைவரே! இன்னைக்கு வசூல் குறைவாக இருக்கே!" என்று கேட்பேன்.

**********************************************************************************

இப்புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் என்று தெரிகிறதா...!

(1984-ல் ஈழ தேசிய விடுதலை முன்னணி (TNLF) என்று டெலோ, ஈ பி ஆர் எல் எஃப், ஈரோஸ் இயக்கங்களின் கூட்டமைப்பாகத் துவக்கப்பட்டது. 1985-ல் விடுதலைப்புலிகள் இயக்கமும்  பிரபாகரன் தலைமையில் இணைந்து கொண்டது. ஒற்றுமையாக களத்தில் நிற்போம் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள் தலைவர்கள், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்)

1.சிறீ சபாரத்தினம் (டெலோ இயக்கத் தலைவர் - 1986-ல் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்)
2.பத்மநாபா (ஈ பி ஆர் எல் எஃப் இயக்கத் தலைவர் - 1990-ல் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்)
4.பாலகுமாரன் (ஈரோஸ் தலைவர் - மேலே உள்ளவர்களின் நிலைமை வேண்டாமென்று (வேறுவழியின்றி) விடுதலைப் புலிகளோடு சேர்ந்து கொண்டவர்)
3.மேதகு. பிரபாகரன் (ஈழவிடுதலைக்காக போராடி(?) 2009-ல் உயிர் நீத்தார்)

 
***********************************************************************************

நான் ஒரு ராசியில்லா ராஜா 


மறைந்த பாடகர் டி எம் சௌந்திரராஜன் சிவாஜி கணேசன், எம் ஜி ஆர், ஜெமினி, எஸ் எஸ் ஆர் , ஜெய்சங்கர், எ வி எம்ராஜன், ரவிசந்திரன் என அனைவருக்கும் பொருந்தக் கூடிய அளவிற்கு 1950, 60, 70களில் பல பாடல்களைப் பாடி சாதனை படைத்தவர். தனிப்பாடல்களாகவும் பல பாடியுள்ளார். இருப்பினும் பல சமயம் அவர் கூறும் பதில்கள் எரிச்சலைக் கொடுக்கக் கூடியவை. பல ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியில் அவருடைய பேட்டியில் அவர் கூறிய சில கருத்துகள்.
 • …சிவாஜி கணேசன், எம் ஜி ஆர் புகழடைந்ததற்கு என் பாடல்களே காரணம்.
 • …என்னுடைய தாய்மொழியான சௌராஷ்ட்டிரம் பேசுவதால்தான் பாடலை நன்றாக உச்சரிக்கிறேன். (சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதனை விடவா இவர் தமிழை சிறப்பாக உச்சரிக்கிறார்)
 • …பெண்ணை போன்று பாவணை செய்து (நடித்து காட்டுகிறார்) குழைந்து குழைந்து பேசுவாரே ஒரு நடிகர் (டி ராஜேந்தர் தான் அப்பெண்தன்மையுள்ள நடிகர்), அவர் படத்தில் பாடினேன். அதோடு எனக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விட்டது. அப்பாடலை கேட்டுவிட்டு ஏன் அதைப் பாடினாய் என பலர் என்னை கடிந்து கொண்டனர்.  
டி எம் எஸ் குறிப்பிடுவது ஒரு தலை ராகம் படத்தில் வரும் நான் ஒரு ராசியில்லா ராஜா, என் கதை முடியும் நேரமிது போன்ற சோக பாடல்களை. எல்லோரும் கடிந்து கொண்டனர் என்றால், ஏன் அதற்கு அடுத்த ஆண்டு வந்த ரயில் பயணங்களில் படத்திலும் நூலும் இல்லை வாலும் இல்லை என்ற பாடலைப் பாடினார் என்று தெரியவில்லை. எல்லா கலைஞர்களுக்கு ஒரு காலத்திற்குமேல் ஒரு வீழ்ச்சி என்பது கட்டாயம் இருக்கவே செய்யும், அதை உணராவிட்டால் இப்படி புலம்பக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
…**********************************************************************************
'ஜால்ரா'முத்து


இளையராஜாவை புகழ்வதாக இருந்தாலும் சரி, ரகுமானை புகழ்வதாக இருந்தாலும் சரி, அவரவர்களின் ரசிகசிகாமணிகள் எடுத்துவிடும் ஒரே வாசகம்.

இந்திப் பாடலில் காதை வைத்திருந்த தமிழனின் காதுகளை தமிழ்ப் பாடல்களைக் கேட்க வைத்தவர் இசைஞானி.

இந்திப் பாடலில் காதை வைத்திருக்கும் இந்திக்காரனையும், ஆங்கிலப் பாடலில் காதை வைத்திருந்த ஆங்கிலேயனையும் தமிழ்ப் பாடலைக் கேட்க வைத்தவர் இசைப்புயல். 

- இவை ஐஸுக்கே ஐஸ் வைக்கும் வைரமுத்துவின் ஜால்ரா வரிகள்.
வைரமுத்து இளையராஜாவையோ, ரகுமானையோ காக்கா பிடிப்பதில் தவறில்லை. புதுப்புதுக் கதைகளை எதற்கு உருவாக்க வேண்டும். இளையராஜாவின் இசை என்கிற சாகாப்தம் 70களின் இறுதியில் தொடங்கி 80களில் உச்சத்தை தொட்டது. இளையராஜா அவருக்கு முந்தையவர்களிடமிருந்து விலகி வித்யாசமான இசையால் மக்களைக் கவர்ந்தார். பாடல்களில் இசையின் ஆதிக்கம் அதிகரித்தது. சரி! இளையராஜாவின் வருகைக்கு முன்னர் தமிழர்கள் இந்திப் பாடலை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தனரா? இல்லை அதற்கு முன் யாரும் கேட்கக்கூடிய தரமான பாடல்களைக் கொடுக்கவில்லையா? முதலில் இசைக்கு மொழி ஏது. யார் எந்த மொழிப் பாடலை வேண்டுமானாலும் கேட்கலாம். இரண்டாவது தமிழகத்தில் 80களின் துவக்கத்தில் தான் கேசட்கள் (கிட்டத்தட்ட 20 பாடல்கள் பதிவு செய்யலாம்) பெருமளவில் புழங்கத் தொடங்கின. எல்லா தரப்பு மக்களும் பாடல்களைப் பதிவு செய்து கேட்கத் துவங்கனார்கள். அதற்குமுன் பெரும்பாலான மக்கள் வானொலியில் மட்டுமே பாடல்களைக் கேட்டு வந்தனர். அக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள், தமிழ் மட்டுமின்றி இசை இன்பத்திற்காக மொழி புரியாவிடினும் தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள  பாடல்களைக் கேட்பார்கள். இதனை வைத்து தமிழர்கள் ஏதோ ஹிந்திமொழிப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது ரொம்ப ஓவர்.

ஒருவேளை ரகுமான் விஷயத்தில் பாதி உண்மை இருக்கலாம். இந்தி பேசுபவர்களையும் தமிழ் பாடல்களை கேட்க வைத்தார். இந்திய சினிமாவில் அதுவரை இல்லாத ஒரு நுணுக்கமான இசை அனுபவத்தை ரகுமான் 90களில் துவங்கி வைத்தார். 90களில் வெளியான ரோஜா, ஜென்டில்மேன், பம்பாய், காதலன் பாடல்களை வட இந்தியவில் பரவலாக ரசிகர்கள் வரவேற்பைப் பெற்றது. மொழிபெயர்க்கப்பட்டு ஹிந்திசேனல்களில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் அவரது இசையை கேட்கும்போதெல்லாம் 'பழைய நெனப்புடா பேராண்டி' என்பதாகவே இருக்கிறது. (வெளிநாட்டவர்கள் பாலிவுட்டை மட்டுமே இந்திய சினிமாவாக பார்க்கிறார்கள். ரகுமான் பாடல்கள் மட்டுமல்ல பல பாலிவுட் பாடல், ஆடல்களையும் பார்க்கிறார்கள். பார்த்துவிட்டு, இதுதான் இந்தியாவின் சங்கீதம், இதுதான் இந்தியாவின் நடனம் என முடிவு செய்துகொள்கிறார்கள்)

தமிழ் கூறும் நல்லுலகில் "ஜிங்சாக் போடும் கவிஞர்களின் பேரரசர்" என்று ஒரு பட்டம் கொடுத்தால், அதற்கு வைரமுத்து மட்டுமே முழுத்தகுதியுடையவர். வெள்ளை ஜிப்பாவோடு, விரல் சொடுக்கி, ஆள்காட்டி விரலை நீட்டி, 90 டிகிரியில் கண்ணை வைத்துக்கொண்டு இவர் விடும் பீலா இருக்கிறதே! (இந்த வயதிலும் கலைஞரையே புல்லரிக்க வைக்கிறார் என்றால் பாருங்களேன்.) எவனையாவது காக்கா பிடிக்க வேண்டுமென்றால் போதும் "இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள், ---- கழுவியவர்கள்" என ஜால்ரா சத்தம் காது கிழியும்.

…*******************************************************************************

Wednesday, February 19, 2014

உள்ளதைச் சொல்வேன் (19/02/2014)

குழாயடிச்சண்டை

என் சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு முன்னாடி ஒரு பொதுக்குழாய் இருக்கும். குழாயில் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அங்கு பெண்கள் சண்டை இடுவது மட்டும் தினந்தோறும் நடக்கும். பள்ளிக்கு செல்லும்முன் சற்றுநேரம் குழாயடிச்சண்டையைப் பார்த்துவிட்டு தான் போவேன். தமிழகராதியில் இல்லாத பல நல்ல "கெட்ட" வார்த்தைகளை அங்குதான் பயின்றேன். சாயுங்காலம் ஆறு ஏழு மணிக்கு பெண்கள் நான்கைந்து பேர் வாசர்படியில் அமர்ந்து கதை பேசுவார்கள். சினிமா, அக்கம்பக்கத்தின் காதல், கள்ளத்தொடர்பு, சமையல், ஆன்மீகம், அமானுஷ்யம் எனப் பல விஷயங்கள் பற்றி பேச்சுக்கள் வரும். நல்லா பொழுது போகும். எட்டு ஒன்பது மணிக்குமேல் சாப்பாட்டை முடித்து வெளியில் வந்து அமர்ந்தால், ஏ1 சாரயக்கடையில் குடித்துவிட்டு நடுரோட்டில் நின்று கண்ணதாசன் பாட்டை எவனாவது சத்தமாக பாடிக்கொண்டிருப்பான். கொஞ்சநேரத்தில் அவன் பொண்டாட்டியோ பசங்களோ இரண்டு போட்டு இழுத்துக்கொண்டு போவார்கள். இதை நான் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், சமூக வலைத் தளங்களான முகநூல், ப்ளாக், கூகிள்ப்ளஸ், ட்விட்டர் என பலவற்றில் குழாயடிச்சண்டை, கிசுகிசு, சரக்கடித்தவன் உளறல் போன்றவைகளைத் தான் பார்க்க நேரிடுகிறது. விஞ்ஞானம் முன்னேறினாலும் நம்ம ஜனங்கள் மட்டும் அப்படியே தான் இருக்கிறார்கள்.  போனவாரம் யுவன் என்கிற உலகமகா இசையமைப்பாளர் இஸ்லாம் மாறிவிட்டார் என அதைப்பற்றி ஒரு அக்கபோரு. வார கடைசியில் பாலுமகேந்திரா ஷோபாவை ஏமாற்றிக் கொன்றுவிட்டார் என்று முப்பது வருடத்திற்கு முன்னாடி செத்துப்போன ஷோபாவைப் பற்றி ஒப்பாரி. இப்போது அடுத்துவரப்போவது, தூக்குதண்டனையில் இருந்து தப்பித்த மூன்று தியாகிகள் பற்றி இருக்கும் (இப்போதே துவங்கியாயிற்று என நினைக்கிறேன்). இவனுங்கதான் இப்படி என்று ஆங்கில செய்தி வாசிக்கப் போனால், அங்கு சிங்கம் பலமானதா? கழுதைகொறத்தி வலிமையானதா? என பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார்கள். சரி! எதாவது யூட்யுபிள் பார்க்கலாம் என்று போனால், சாதி பெருமை பேசிக்கொண்டு ரெண்டு குருப் திட்டிக்கொண்டிருந்தார்கள். அடச்சே!!!

*******************************************************************************

சங்ககால தமிழர்களின் "ஊன்சோறு"

சங்ககால தமிழர்களின் "ஊன்சோறு" பற்றி வரலாறு.காம் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். நாம் இன்று அதிகமாக பயன்படுத்தும் மிளகாய், தக்காளி போன்றவற்றை பண்டைய தமிழர்கள் அறிந்ததில்லை. நாமும் செய்து தான் பார்ப்போமே என்று முயற்சித்தேன். ஊன்சோறு அருமை.

பன்றி இறைச்சி - 500 கிராம்
கடுகு, பெருஞ்சீரகம், …மிளகு - தேவைக்கேற்ற அளவு
உப்பு - தேவைக்கேற்ற அளவு
மஞ்சள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கிராம்பு - நான்கைந்து
பட்டை - ஒன்று
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - மூன்று பல்
கறுவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
 • …அரிசியை கழுவி சிறிது சேரம் ஊற வைக்கவும்.
 • இஞ்சி, பூண்டு, கிராம்பு, மிளகு இவற்றை உரலில் இட்டு நன்றாக இடித்துக்கொள்ளவும்.
 • வானலியில் எண்ணெய் சூடானபின், பட்டை, பெருஞ்சீரகம் மற்றும் கடுகைப் போடவும். கடுகு பொறிந்தவுடன், கறுவேப்பிலை, இடித்து வைத்திருக்கும் கலவையை இட்டு வதக்கவும். சிறிது வதங்கியபின் பன்றி இரைச்சி, மஞ்சள், உப்பு போன்றவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். 
 • சிறிது நேரத்தில் பன்றி இறைச்சி நீர்விடத்துவங்கும். இன்னும் சற்று நேரத்தில் ஊறவைத்த அரிசியைப் போட்டு நன்கு கிளரவும். கேவையான அளவு தண்ணீர் சேர்த்து (பாஸ்மதி அரிசியைப் பயன்படுத்தினால் 1:1 அளவில் நீர் சேர்ப்பேன்) மிதமான சூட்டில் 10 - 12 நிமிடங்கள் வேகவிடவேண்டும். 
 • நறுக்கிய கொத்துமல்லியை தூவி பரிமாறவும்.
 • பன்றி இறைச்சி பயன்படுத்தினால் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். (மாடு போல அல்லாமல் பன்றி இறைச்சிக்காவே வளர்க்கப்படுவது. சங்க காலத்தில் பன்றியை இறைச்சிக்காக அதிகமாக பாவித்தனர் தமிழர்கள்).

பதிவுலகில் பலர் ஓட்டலில் சாப்பிடுவதை சிலாகித்து பதிவிடுகிறார்கள். தனியாகவோ குடும்பமாகவோ சென்று சாப்பிடுவதாக சொல்கிறார்கள். அதை மற்றவருக்கும் பரிந்துரை செய்கிறார்கள். வகையாக சாப்பிட்டுவிட்டு தொகைதொகையாக கதை எழுதுகிறார்கள். இதில் ஒருவர் இக்கொடுமையை புத்தகமே போடுகிறார்.

முடிந்தவரை வீட்டு உணவு சாப்பிட பாருங்கள். அப்படி முடியாதபட்சத்தில் வெளியில் நல்ல உணவாக சாப்பிடுங்கள். குறிப்பாக வீட்டில் உள்ள வாண்டுகளுக்கு ஓட்டல் உணவை அறிமுகப்படுத்தாதீர்கள், உங்களுக்கு புண்ணியமாக போகும். இதை அறிவுரையாக எடுத்துக்கொளாதீர்கள்: ஒரு வேண்டுகோள் அவ்வளவே.


**********************************************************************************

காபி...நரசூஸ்...

சென்னை தூர்தர்ஷனில் வந்த பழைய விளம்பரங்களைப் பார்ப்பதில் எனக்கு ஒரு அலாதி சுகம். அதிலும் அப்போது வந்த நரசுஸ் காபி விளம்பரம் மிகவும் பிரபல்யம். YOUTUBE-யிருந்து உங்களுக்காக.

தேங்காய் சீனிவாசன் மற்றும் மனோரமா…உசிலைமணிMonday, February 10, 2014

உள்ளதைச் சொல்வேன் (09/02/2014)

ஜி.ராமனாதன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வனாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, சங்கர்-கணேஷ், சந்திரபோஸ், தேவா, ராஜ்குமார், ரகுமான் என பலரின் பாடல்களை ரசிப்பவன் நான். இளையராஜா பாடல் என்றால் எனக்கு விருப்பம். அதற்காக எனக்கு அவருடைய இசைமீது வெறியோ பக்தியோ இல்லை. பிடிக்கும் அவ்வளவே. இளையராஜா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பிறந்தவன் என்பதால் அவருடைய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்கு காரணம் அவருடைய பாடல்கள் என்னுடைய சிறுவயது நினைவுகளை மீட்டெடுப்பவை. Nostalgia. தற்போது போன வருடம்  கிங் ஆப் கிங்ஸ் என்று மலேசியாவில் நிகழ்ந்து முடிந்த இசைநிகழ்ச்சியை காண முடிந்தது. அதைபற்றி எனது சில எண்ணங்கள்.


 • கிங் ஆப் கிங்ஸ் என்றால் ஏசுவை குறிக்கும் வாக்கியம். ஒருவேளை ராஜாதிராஜா என்பதை இப்படி மொழிபெயர்த்திருப்பார்களோ? எப்படியோ போகட்டும்.  பாலு எப்படி இந்த வயதிலும் இளமை பொங்க படுகிறார் என்று தெரியவில்லை. பாலு...பாலு தான். அவர் பாடியதை மிகவும் ரசித்தேன்.…
 • ஜனனி ஜனனி பாடல் உருவான விதம் பற்றி இளையராஜா உருகிஉருகி சொல்லிக்கொண்டிருந்தார். அப்பாடல் ஒன்றும் அப்படி உருக்கமான பாடல் அன்று. ஆதிசங்கரர் இளையராஜாவின் பாடலில் வந்ததைப் பற்றி  அவர் கூறும்போது, எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. "குருவே! இன்றைக்கு பாடலை கம்போஸ் செய்கிறேன். நீங்கள் அதில் வரவேண்டும்" என்று சொல்லிவிட்டு போனதாகவும், சங்கரரே பாடலில் வந்து அருள் புரிந்ததாக சொல்லி இருந்தார். இதைக்கேட்டு எனக்கு அப்படியே  புல் பூண்டு எல்லாம் அரித்துவிட்டது!
 • …ஒருவேளை நேத்துராத்திரி எம்மா பாடல் எப்படி உருவானது என்று கேட்டிருந்தால், இளையராஜா எப்படி பதில் சொல்லி இருப்பார்!!!!!!!!!!!…
  …நான் பாட்டு கம்போசிங்கிற்கு போயிட்டு இருந்தேன். போகிறவழியில் சில்க்கோட சினிமா போஸ்டரை தற்செயலாய் பார்த்தேன். "சில்க் நீ இன்னைக்கு என்னோட பாட்டுல வர" என்று சொல்லிவிட்டு போய்விட்டேன். பாட்டு கம்போஸிங்க் முடிச்சி பார்க்கிறேன். எல்லாருடைய கண்ணிலும்  (நோட் திஸ் பாய்ண்ட்) தண்ணி வந்துவிட்டது. கம்போசிங் முடித்துவிட்டு ஆர்மோனியத்தை வைக்கப்போனேன். சட்டென்று ஒரு பட்டுத்துணி என்மீது விழுந்தது. பட்டு என்றால் என்ன ? சில்க். சில்கினுடைய அருள். சில்க் என்னுடைய பாட்டில் வந்து, பாட்டை வேறொரு தளத்திற்கு கொண்டுபோய்விட்டதை எண்ணி எனக்கும் கண்ணில் தண்ணி வந்துவிட்டது. 
 • இளையராஜாவுடைய எவ்வளவோ நல்ல பாடல்கள் இருக்கும்போது, நிலா காயுது பாடலும் பாடப்பட்டது. இதுபோன்ற ஒரு கேவலம் எந்த மொழிக்கும் கிடைக்காது. இப்பாடலை பொதுவில் வயதுக்கு வராத பசங்களோட கேட்டு ரசிக்கும் நம்ம சமூகம் ஒரு புரட்சிகரமான சமூகம். வெட்கக்கேடு. இளையராஜாவுக்கு முந்தைய இசையமைப்பாளர்கள் பெரியவர்களுக்கு மட்டும் விளங்கும்படி இலைமறைவு காய்மறைவாக பாடல்களை உருவாகிக் கொண்டிருந்தார்கள். அதை வெளிப்படையாக விருந்து படைத்த பெருமை இளையராஜாவையே சேரும். அவருக்கு பின்னாடி வந்தவர்கள் பற்றி சொல்லவும் வேண்டுமா? பிரித்து மேய்ந்துவிட்டார்கள். கருமம். எப்படியோ போய் ஒழிங்க.
 • …நிகழ்ச்சி முழுவதும் காண இயலவில்லை. இயலவில்லை என்றால் என்னால் சகிக்க இயலவில்லை. அதிலும் இளையராஜாவின் மானத்தை வாங்க யுவன் ஒருவர் போதும் என்று நினைக்கிறேன். காதல் கசக்குதய்யா பாடலை நாலுநாள் கக்கூஸ் போகாதவன் போல பல்லை கடித்தபடி பாடிக்கொண்டிருந்தார். இளையராஜா பாடிய பாடல்களை அவருடைய தவப்புதல்வர்கள் இப்படி குதறி எடுப்பதை பார்க்க முடியவில்லை.

இளையராஜா மீதும், அவருடைய பாடல்கள் மீதும் இருக்கும் ரசிகர்களின் ஈர்ப்பை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க, இவனுங்களுக்கு எப்படிப்பட்ட வழி பாருங்க.

*******************************************************************
சமீபத்தில் 1989-ல் (அபூர்வ சகோதரர்கள் வந்த சமயம்) வெளியான பொம்மை மாதயிதழுக்காக சிவாஜி கணேசனிடம் கமல் எடுத்த பேட்டியைப் படித்தேன்.

…அதிலிருந்து எனக்குப் பிடித்த சில கேள்விகள்.

கமல்: உங்களுக்கு ஏன் டைரக்ட் பண்ணும் ஆசை வரல?
 
சிவாஜி: டைரக்ஷனைப் பற்றி நிஜமாகவே எனக்கு ஒன்றும் தெரியாது. இப்போ நீ டைரக்ஷன் செய்தால் ஒத்துழைப்பு தருவேன். எனக்கு டைரக்டர் ஆகவேண்டும் என்ற எண்ணம் என்னைக்குமே வந்ததில்லை. நான் நல்ல சொல்ஜராக இருந்தேனே தவிர கேப்டனாக விரும்பியதில்லை. எனக்கு கேப்டனாக இருந்தவங்க "இன்னும்...இன்னும்.." என்று சொல்லிட்டு இருந்தாங்களே தவிர "இது போதும்" என்று சொன்னதில்லை.

…கமல்: நீங்க நாடகத்துல இருந்ததாலே, கண்டிப்பாக மேடையிலே பாடி இருக்கணும். ஏன் சினிமாவில் பாடவில்லை.
சிவாஜி: இப்பவும் நல்லா பாடுவேனே. நானும் பாடிப்பார்த்தேன். ரெண்டு பேரோட வேலையை கெடுக்கர மாதிரி இருந்தது விட்டுட்டேன். அதுமட்டுமல்ல, அப்ப பாட்டுக்கு ரெண்டு நாள் மூணு நாள்  ரிகர்சல் பார்ப்பாங்க. நமக்கு இருந்த வேலையில் 2 நாள் 3 நாள் ஒதுக்க முடியாதுங்கிறது ஒண்ணு. தவிர, நம்மை விட நல்லா பாடுரவங்க இருந்தாங்க என்கிறது.

கமல்: இன்னைக்கு பல நடிகர்கள் புருவத்தை உயர்த்தி திரும்பி பார்க்கும்போது, என்ன என்று கேட்பதற்கு பதிலாக உறுமலே கேட்கிறது. அதெல்லாம் உங்கள் சாயல் தானே? 

…சிவாஜி: அந்த காலத்துல அது சரி கமல். இன்னைக்கு நீ குழந்தை மாதிரி வந்து நிக்குற, திரும்புற, அழற பாரு...அதுதான் சரி. நான் பண்ண காலம் வேற. இன்னைக்கு காலம் வேற. கலை தான் அப்பப்ப மாறிட்டே இருக்குமே. இப்ப கூட மறுபடியும் நான் நடிக்கவந்தேன்னா, ரெண்டு நாளைக்கு "ஜெர்க்" அடிப்பேன். இப்ப நீ நடிக்கிறது தான் நடிப்பு. அந்த காலத்துல நான் நடிச்சது நடிப்பா இருக்கலாம். கால ஓட்டதுல எல்லாத்துறையிலேயும் முன்னேற்றம், மாறுதல் வரும்.

இன்னும் பல விஷயங்கள் பற்றி அப்பேட்டியில் சிவாஜி அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்.

*********************************************************************

சோ ராமசாமி பல காலமாக விடுதலைப்புலிகளை எதிர்த்தே பேசிவந்துள்ளார். அவர்களை ஆதரிப்பவர்களையும் சாடியுள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலைப்படி அவர் ஈழத்தமிழர் விஷயத்தில் சொல்பவை கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும், ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். விடுதலைப்புலிகள் தங்களின் சக விடுதலை இயக்கங்களின் உறுப்பினர்களை வேட்டையாடி கொன்றமை, அவற்றின் தலைமையை அழித்தமை என பல விடயங்களை கண்டித்துப்பேச அக்காலத்தில் மிகுந்த தைரியம் வேண்டும். ஈழத்தின் நிலைமை பற்றி மக்களுக்கு சரியாக தகவல்கள் கிடைக்காத காலம் அது. விடுதலைப்புலிகளால் டெலோ இயக்கத்தலைவர் சபாரத்தினம் மற்றும் 100க்கும் மேற்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்  கொல்லப்பட்டபோது கூட விடுதலைப்புலி இயக்கத்திற்குள்ளே ஏதோ சிறிய  சச்சரவு என்ற அளவில் தமிழகத்தின் சில முக்கிய பத்திரிகைகள் எழுதின. ஆனால் அப்போதும் தன்னுடைய கருத்தை தெளிவாக பதிவு செய்தவர் சோ. "தமிழின துரோகி" என பட்டம் கிடைக்கும் என்று தெரிந்தும் அதை அவர் செய்தார். நவம்பர் 1986-ல் துக்ளக் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை.