Thursday, July 12, 2007

எம்.ஜி.ஆரை கைவிட்ட விஜயகாந்த்

சொந்தமாக சொல்லிக் கொள்ள விஜயகாந்திடம் எதுவுமில்லை. பூகம்ப நிவாரணத்துக்கு பணம் கொடுத்ததையும், அரசு மருத்துவமனைகளுக்கு கட்டில்கள் கொடுத்ததையும் கூறி (//மண்டபம் இடிச்சத விட்டுபோட்டீங்க//) ஓரளவுக்குதான் அரசியல் பண்ண முடியும் என்பது கேப்டனுக்கு புரிந்து விட்டது. இதனால் கறுப்பு எம்.ஜி. ஆர்., கறைபடாத எம்.ஜி. ஆர். என்றெல்லாம் எம்.ஜி.ஆர். பெயரில் சவாரி செய்ய ஆசைப்பட்டார். அதன் எதிரொலியாக தனது நூற்றைம்பதாவது படத்துக்கு 'எம்.ஜி.ஆர்.' என்று பெயர் வைத்தார்.(//பேசாம 150-ன்னே படத்துக்கு பெயர் வைக்கலாம், இப்ப இது தான் பேஸன்//) 'மதுர' படத்தை (//மதுர படத்துல தானே விஜய் கலெக்டரா நடிச்சாரு, ஆனா கோயம்பேடு குத்தாட்டம் போடுவாரு//)இயக்கிய மாதேஷ் 'எம்.ஜி.ஆரின்' இயக்குனர். இப்படியொரு பெயர் வைத்திருக்கிறீர்களே என்று விஜயகாந்திடம் கேட்டதற்கு, "பெயரை தேர்வு செய்தது மாதேஷ்" என நழுவிக் கொண்டார். இப்படத்துக்கான போட்டோசெஷன் சமீபத்தில் நடந்தது (//என்ன பெரிய போட்டோசெசன் எப்படி எடுத்தாலும் விஜயகாந்த் அப்படித்தான் இருப்பாரு, தலைவர பேசம பழைய போட்டோ இருந்தா கொடுக்க சொல்லுங்க//).

இதனிடையில் 'சிவாஜி' கிளைமாக்ஸில் 'நான் சிவாஜி இல்ல, எம்.ஜி.ஆர்.' என்று கூறி ரஜினி கைத்தட்டல் வாங்க, இனியும் இந்த பெயர் சரிப்படாது (//நான் சிவாஜியும் இல்ல! எம்.ஜி.ஆரும் இல்ல! புரச்சி தமிலன்...ஆங்!//) என 'புரட்சிதலைவன்' என்று மாற்றினார்கள். இப்போது இதையும் தவிர்த்து 'வித்தகன்' என புதுப்பெயர் சூட்டி அதனை சேம்பரில் பதிவும் செய்து விட்டனர். இந்தப் படத்தின் கதை லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளூரிலும் சில காட்சிகள் உண்டு. விஜயகாந்துக்கு படத்தில் இரண்டு ஜோடிகள். தொடர் தோல்வியில் இருக்கும் விஜயகாந்தை 'வித்தகன்' காப்பாற்றினால்தான் உண்டு!(//விளங்காதவன்... இந்த டைட்டில் ஓகேவா!!//)

நன்றி: JBR (For www.cinesouth.com)

Wednesday, July 11, 2007

சங்கரின் அடுத்த படம் தயாராக உள்ளது

சங்கரின் அடுத்த படம் ரோபோ இல்லை என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகிறது. ஹாலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில், 200 கோடி செலவில் ஜேம்ஸ்பாண்ட் படம் எடுத்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதையடுத்து பத்திரிகையாளர்கள் இயக்குனர் சங்கரை மொய்த்தவண்ணம் உள்ளனர். நேற்று வெண்ணெய் டிவியிலிருந்து நிருபருக்கு சங்கர் வழங்கிய பேட்டி மூலம் கிடைத்துள்ள சில தகவல்கள்.

சங்கர் இதுவரை ஜெண்டில்மேன், முதல்வன் படங்களில் தமிழகத்திற்கு மெசேஜ் சொன்னார். இந்தியன், சிவாஜி படங்களில் இந்தியாவிற்கே மெசேஜ் சொன்னார் இப்ப எடுக்கபோற படத்தில் உலகத்துக்கே மெசேஜ் சொல்லப்போராராம்.சங்கரோட படத்தில் கதையே இல்லைனு ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஜேம்ஸ்பாண்ட் கதை எல்லாருக்கும் தெரியுமே,அதனால மக்கள் இனி எதுவும் சொல்ல முடியாது என்று எண்ணி இந்த படத்தை தொடங்கியுள்ளார்.சுத்தமான தமிழில் 'கம்னாட்டி' என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளதால் வரிவிலக்கும் கிடைத்துவிட்டதாம். தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து இந்தியமொழிகளிலும், ஆங்கிலம், பிரென்சு, ஜெர்மன், மற்றும் C, C++,Java மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இப்படத்தின் கதையின்படி ஜேம்ஸ்பாண்ட் 'சிவாஜி' படத்தின் நாயகனைப் போன்றவர்கள் 20 வருடத்தில் 250 கோடி எப்படி சம்பாதித்தார்கள் என்பதை ஆப்ரேஷன் KAM மூலம் (KAM என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? Ketaal Adiththu Mithippen) துப்பறிந்து கண்டுபிடிக்கிறார். அவர்களுடைய தகாத செயல்களை தவிடுபொடியாக்கி, பின்னிபெடல் எடுக்கிறார். அதனால் தான் படத்தின் ஆங்கிலப்பெயர் KAM-naughty.படத்தில் பாட்டு ரொம்ப ரிச்சா இருக்கிறதாம்.

சமீபத்தில் எகிப்த்தில் பாடல் ஒன்று எடுக்கப்பட்டது. எகிப்த்திலுள்ள பிரமிட்டுகளுக்கு சிவப்பு, மஞ்சள், பச்சை என வண்ணங்கள் அடிக்கப்பட்டு 500 நடனக்கலைஞர்களுடன் ஜெனிபர் லோபஸுடன் கதாநாயகன் ஆடும் பாடல் எடுக்கப்பட்டுள்ளது. அப்பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்,

பல்லேலக்கா பல்லேலக்கா பல்லேலக்கா!

அமெரிக்கா ஆப்ரிக்கா அண்டார்டிக்கா!....

நைல்நதியோரமும் நறுமுகைப்பூவும் மறந்து போகுமா?

கிளியோபத்ராவும் கிளிகொத்தும் பழங்களும் தொலைந்து போகுமா?.....

என்று தொடங்கும் பாடலை வைரமுத்து இயற்றியுள்ளார்.

படத்தில் விறுவிறுப்பான சைக்கிள், கார் சேஸிங் காட்சிகளும் உண்டு. வீட்டிற்கு பால் கொடுக்காமல் போகும் பால்காரனுடைய சைக்கிளை காரில் சேஸ் செய்து பால் வாங்கும் காட்சி, தெருநாய் துரத்தும் போது வேகமாக சைக்கிளில் செல்லும் காட்சி என அனைத்தும் பார்ப்போரை திகைப்பில் ஆழ்த்தும்.

படத்தோட கதாநாயகி ஒரு பண்பாடுடைய தமிழ் பொண்ணா, பேவாட்ச்(ரிஸ்ட்வாட்ச் இல்ல) புகழ் பமீலா நடிக்கிறாங்க. ஏனென்றால் அவங்க தான் விலகாம இருக்க தாவணி, தொப்புள் தெரியாம இருக்க பாவடை என எதையும் போட மாட்டாங்க. உள்ளாடையோட மட்டும் வருவாங்க. படத்தோட முக்கியமான காட்சியே க்ளைமேக்ஸ் தான், ஏனென்றால் சங்கர் அங்க தான் பிறந்த இந்தியாவிற்கு மெசேஜ் சொல்லுரார். கதாநாயகன் அந்த மெசேஜை பிரதமருக்கு எப்படி சொல்லுறாருனு நீங்களே பாருங்க.

கா: இமயமலையையும், நம்ம செயிந்த் தாமஸ்மவுண்டையும் இணைக்கக் கூடிய ஒரு திட்டத்தை நான் செயல்படுத்தலாம்னு இருக்கேன். அதுக்கு உங்க உதவி தேவை.

பி: இமயமலையையும், செ.தா.மவுண்டையுமா? எப்படி?

கா: சொல்லுரேன். கங்கையையும், காவிரியையும் இணைச்சா அது தற்காலிகமாகத் தான் உதவும், பிறகு மறுபடியும் தண்ணீர் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது. அதனால கங்கை உற்பத்தியாகும் இமயமலையை தென்னிந்தியா வரை நீட்டனும்.

பி: (தலைப்பாகை கழட்டி தலைய சொறிந்து கொண்டே) இதெல்லாம் எப்படி முடியும்பா? :(

கா: முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. பொறுப்பை என்னிடத்தில் ஒப்படைங்க நான் பார்த்துக்கிரேன..ஆங்...(சொல்லிட்டு வெளியே வரார்...பின்னணி இசை முழங்க).

தில்லியிலிருந்து சென்னைக்கு கதாநாயகன் நடந்து வர, (பொதுவாக சங்கர் படத்தில் காட்டுறது போல) வடக்கில் இருந்து தெற்கு வரை இமயம் கிராபிக்ஸில் நீளுது. எங்க பார்த்தாலும் ஆறா ஓடுது. தென்னை, பனை, ஆலமரம், அரசமரம் எல்லாம் முளைக்குது. பஞ்சமெல்லாம் தீர்ந்து போகுது.

ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால், ஜேம்ஸ்பாண்டாக நடிக்கப்போவது நம்ம குட்டிபிசாசு தான். (சினிமாபுகழ் ச்சுப்பரமணி(கண்மணி அக்காவோட நாய்குட்டி) தான் ரெகமெண்டேசன் பண்ணி இருக்கு.)

(மீதி கப்ஸா அடுத்த வாரம் தொடரும்)

பி.கு.: இது என்னோட 51-வது இடுகையாக்கும்.

நெட்ல பமீலா ஒழுங்கா துணி அணிந்து கொண்டுள்ள புகைப்படத்தைத்தேட எவ்வளவு நேரம் ஆச்சி தெரியுமா? அப்படி தேடியும் இது தான் கிடைத்தது.

நாத்திகனும் ஆட்கொல்லியும்

நாத்திகன் ஒருவன்

நகரத்திற்குச் சென்றான்

கருமைகவ்விய காட்டுவழி

பொழுதும் சாய்ந்தது

நிலவுக்கதிர்களை வடிகட்டியபடி

வழிநெடுகிலும் வானளாவிய

மரங்களின் கிளைகள்

தனிமையான இருள்

பூச்சிகளின் கிறீச்சலுடன்

இதயத்துடிப்பு தடவிச்செல்லும்

இவனை பயமுறுத்தியது

திடீரென்று சீறல்சத்தம்

திரும்பிப் பார்த்தான்

நெடிய சிங்கமொன்று

வந்தது இவந்திசைநோக்கி

புரியாமல் திகைத்தவன்

யத்தனித்தான் ஓட

அசுரவேகத்தில் அவன்

புகைதின்றது போல்

கண்கள் கனந்தது

கோரப் பற்களுடன்

நகங்கள் நெருங்கியது

அருகாமையில் மரணம்

வீறிடலுடன் மண்ணில்

தடுமாறி வீழ்ந்தான்

சிங்கம் தன்கரத்தை

ஓங்கியது மேலே

வானிலே வெளிச்சம்

"ஆன்மீகவாதி ஆகிவிடு

ஆட் கொள்கிறேன்"

என்றொரு அபயக்குரல்

கனைத்தது கடவுளா?

என்றெண்ணிய கொள்கைவீரன்

"ஆட்கொள்வது இருக்கட்டும்

ஆட்கொல்லியான சிங்கத்தை

ஆன்மீகவாதி ஆக்குக!"

என்று கதைத்தான்

உயர்ந்திருந்த சிங்கத்தின்

கரங்கள் இறங்கியது

ஆன்மீகவாதியான சிங்கம்

"கடவுளே! கருணையுடன்

உணவளித்த உங்களுக்கு

நன்றி!" என தியானித்து

நாத்திகனை நறநறவென

நரம்புகளைக் குதறியது

(இது ஆன்மீக சிங்கம் தான் சிந்திச்சி சிந்திச்சி பிடரி எல்லாம் கொட்டி போச்சி)

(இந்த நினைப்பலயும் சில சிங்கங்கள் சுத்துரது உண்டு)




பி.கு.:

நாத்திகன்: இந்த கதையில் இருந்து என்ன தெரியுது.

குட்டிபிசாசு: அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்-னு தெரியுது

நாத்திகன்: ஏய்! குட்டிபிசாசு! நீ மூடிட்டு சும்மா இருக்கியா! நான் உன்னை கேட்கல, வாசகர்களைத்தான் கேட்கிறேன்

வாசகர்கள்: எங்களுக்கு புரியரது இருக்கட்டும். உனக்கு என்னடா புரியுது லூசு! இப்படி எழுதுரே!

நாத்திகன்: நல்ல புரிதல்! அதனால தான் இந்த இடுகைய லூசுவேலை என்ற தொகுப்பில் சேர்த்து இருக்கேன்.

ஐயா சாமிகளா! இது என்னோட 50வது பதிவு!! என்ன செய்யறது. 50வது இடுகை மொக்கையாக போடணும்னு நெனச்சேன். முடியல!! லூசுவேலையத்தான் போட முடிஞ்சது.

சித்தூர் நாகைய்யா-கண்ணன் பாடல்

மறைந்த தெலுங்கு நடிகர் சித்தூர் நாகைய்யா அவர்களுக்கு ஆந்திர அரசு சிலை எழுப்பியுள்ளதாக செய்தியில் படித்தேன். அந்தக்கால நடிகர்களில் எனக்குப்பிடித்தவர்கள் நாகைய்யா, சுப்பைய்யா, பாலைய்யா,(அய்யா, அப்பா என்ற விகுதியை சேர்த்துக்கொள்ளுவதை அக்காலத்தில் ஸ்டைல்) எம்.ஆர்.ராதா போன்றவர்கள் யதார்த்தமான நடிப்பின் மூலம் வெகுஇயல்பாக தங்களுடைய கதாபாத்திரங்களை பிரதிபலிப்பதில் வல்லவர்கள்.

அவர்களில் நாகைய்யாஅவர்கள் நான் பார்த்த பெரும்பாலான படங்களில் தந்தையாகவோ, ஆன்மீக துறவியாகவோ நடித்திருந்தார். குறிப்பாக என் நினைவில் வருபவை: அசோக்குமார் என்ற படத்தில் தியாகராஜபாகவதரின் தந்தையாக நடித்து இருந்தார் (இப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் எம்.ஜி.ஆரும் நடித்திருந்தார்). பக்த மீரா படத்தில் மீராவின் கணவர் ராணாவாக நடித்திருந்தார்.(இப்படத்தில் எம்.எச்.சுப்புலட்சுமி அவர்கள் மீரா கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்). சரஸ்வதி சபதம் படத்தில் புலவரின் (சிவாஜி) தந்தையாக வருவார். "கலைகளுகெல்லாம் அதிபதி என் கண்மணி வித்யாபதி" (பேச்சில் தெலுங்கு வாசம் இருந்தாலும்) என்று ஒரு தந்தையாகவே மாறி உருகிப்போவார்.தெனாலிராமன் படத்தில் அப்பாஜியாக நடித்தார். இவர் சுயமாக பாடவும், இசையமைக்கவும் செய்தார்.

துறவியாக நடிக்கும்போது நாகைய்யா ஒழுக்கமான துறவிபோலவே காட்சியளிப்பார். ராமு,தெய்வமகன்,அனாதைஆனந்தன் படங்களில் துறவியாக வருவார். இப்படங்களில் இவர் பாடும் கிருஷ்ணன் பாடல்கள் காலத்தால் அழியாதவை. நான் சிறுவயதாக இருக்கும்போது தெய்வத்தை வணங்கும் போது இந்தப்பாடல்களின் சிலவரிகளைத்தான் பாடுவேன்.

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா

கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா ........

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்

ஏழைக்கண்ணீரை கண்டதும் கண்ணன் வந்தான் .......

இந்த இரண்டு பாடல்களைவிட அனாதை ஆனந்தன் படத்தில் வரும் சீர்காழி கோவிந்தராஜனின் கனீர்குரலில் உதிக்கும் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது.

அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்

பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்

காற்றடித்தால் அவன் வீடாவான் கடுமழையில் அவன் குடையாவான்

ஆற்றார் அழுதால் அழுதகண்ணீரை அங்கே துடைக்கும் கையாவான்

வெயிலினிலே தான் அவன் பிறந்தான் மழையினிலேறி மனைபுகுந்தான்

உறவறியாத குழந்தைக்கெல்லாம் உறவினனாக அவன் வருவான்

அதிகமான வருமானத்துடன் நடித்துவந்த இவர் தாராள உதவிசெய்யும் மனப்பான்மையால் மற்றும் தயாரித்த படங்கள் தோல்வியைத் தழுவியதால், 100 ரூபாய்கெல்லாம் நடிக்கவேண்டி வந்தது. நம்நாடு என்ற எம்.ஜி.ஆர். படத்தில் ஒன்றிரண்டு காட்சியில் தோன்றி இறந்துவிடுவார். இதுதான் அவருடைய கடைசி தமிழ்படம் என்று நினைக்கிறேன். 1938 முதல் 1973 வரை 200க்கும் மேற்ப்பட்ட தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். 1904-ல் பிறந்த இவர் 1973-ல் இறந்தார்.

Monday, July 09, 2007

திரையுலக வித்தகர் அகிராகுரோசவா - 2

மேற்கத்திய கலைஞர் 'காட் பாதர்' படத்தின் இயக்குனர் ப்ரான்சிஸ் போர்டு கப்போலா அக்கிரோ பற்றி கூறுகையில் "பொதுவாக திரைகலைஞர்களுக்கு சிறப்பான படைப்பு என்பது அதிகபட்சம் இரண்டு அமைவதுண்டு. ஆனால் அகிரா 8-9 படைப்புகளை வழங்கியுள்ளார்" என தெரிவித்துள்ளார்.
அக்கிரோ வெறும் இயக்குனராக மட்டுமல்லாமல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, மற்றும் திரைக்கதை என ஒரு திரைப்படம் உருவாக காரணமான முக்கியமான துறைகளிலும் கால் பதித்துள்ளார். தன்னுடைய இடதுசாரிக்கொள்கைகளை படம் முழுவதும் விதைத்திருப்பார். 'செவன் சாமுராய்' படத்தில் வேளாளர்களின் வாழ்க்கைத்துயரங்களும், 'யொஜிம்போ'வில் பட்டுநெசவாளர்களைப் பற்றிய கூறுகளும் காணப்படும். அகிரா அறிமுகப்படுத்திய திரைப்பட யுக்திகள் இன்றளவிலும் பயன்படுத்தப்படுகிறது. பார்வையாளர்களை படம் பார்த்த பிறகு சிந்திக்க வைக்கக் கூடிய அற்புதமான கோர்வையான காட்சிகளையே அக்கிரோ உருவாக்கினார்.

செவன் சாமுராய் படம் கொள்ளையர்களிடம் இருந்து ஒரு கிராமத்தைக் காப்பாற்ற 7 சாமுராய்களுடன் வேளாளர்களும் போரிடுவதுதன் கதை.

செவன் சாமுராய் படத்தில் ஆரம்ப காட்சியில், கொள்ளையர்கள் வரப்போவதையறிந்து மக்கள் கூட்டமாக அமர்ந்திருப்பதை தொலைவில் இருந்து காட்டுவார், பிறகு அடுத்தடுத்த காட்சிகளில் காமெரா நெருங்கும். மூன்று பேரைக்காட்டுவார். பிறகு கருத்து தெரிவிப்பவனைக் காட்டுவார். குதிரைகள் வரும்போது அதனுடைய காலடிகள் காண்பிக்கப்படும், பிறகு அதனை எதிர்நோக்கும் வீரர்கள் முகங்களின் மிரட்சி காட்டப்படும். சண்டை நடக்கும் போதும் குதிரையின் கால்கள், சாமுராயின் கால்கள் மண்ணில் ஆடுவது காட்டப்படும், பிறகு கொள்ளையன் கொல்லப்பட்டு கீழே விழுவான். கடைசிக்காட்சிகளில் சாமுராய்கள் ஓடும் போது காமெராவும் அவர்கள் ஓடும் திசை நோக்கி திரும்பும்,அதனை நேர்த்தியான படத்தொகுப்பின் மூலம் இங்கும் அங்குமாக காட்சிகள் நகர்ந்து விறுவிறுப்பைக்கூட்டி சீட்டின் நுனிக்கு நம்மை கொண்டுவந்துவிடும். சில காட்சிகளில் கொல்லப்பட்டவர்கள் மெதுவான நகர்வில் விழுவதும் சிறப்பம்சம். 1954-ல் இந்த காட்சிகளை அவர் உருவாக்கியது தான் நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறது. பொதுவாக கட்சாட் மூலம் அம்பு பாய்வதை காண்பிக்காமல்,(அதாவது ஒருவர் அம்பு எய்வார், வேகமாக கேமிரா திருப்பத்துடன் எதிராளியின் உடம்பில் அம்பு படும்) அகிரா யதார்த்திற்காக உண்மையாகவே அம்பு எய்து காட்சிகளை எடுத்து இருப்பார்(நடிகர்கள் தடுப்பு வைத்திருப்பார்கள் என்பது அறிந்ததே!)

யொஜிம்போ என்றால் மெய்காப்பாளன் என்று பொருள். இப்படத்தில் கதாநாயகன் இரு தீயகும்பல்களால் அல்லல்படும் நகரத்தில் பிரவேசித்து, அவர்களுக்குள் சண்டையை ஏற்படுத்தி அழிப்பான்.

யொஜிம்போ படத்தில் கதாநாயகன் ஊரில் பிரவேசிக்கும்போது ஒரு நாய் துண்டான ஒரு கையை கவ்விச்செல்வது காட்டப்பட்டு, அதன்மூலம் அந்த நகரத்தின் நிலையை உணர்த்துவார். கடைசி காட்சியில் இலையின் மீது கத்தி எறிவது ரிவர்ஸாக காண்பிக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது, ஆனால் படம் பார்க்கும் போது அந்த நினைவை நமக்கு ஏற்படுத்தாது. 'பிஸ்ட்புல் ஆப் டாலர்ஸ்' படத்தில் செர்கியோ லியோன் (இவரைப்பற்றி என்னுடைய முந்தைய இடுகை 1, 2) காட்சிக்கு காட்சி யோஜிம்போவை தழுவி எடுத்தார். இப்படம் கிளிந்த் ஈஸ்ட்வுட்க்கு (மில்லியன் டாலர் பேபி, அன்பர்கிவன் போன்ற அகாடமி விருது பெற்ற படங்களை இயக்கி நடித்தவர்) பெரும் மைல்கல்லாக அமைந்தது.பிறகு 1996-ல் ப்ரூஸ்விலிஸ் நடித்து வெளிவந்த 'லாஸ்ட்மேன் ஸ்டாண்டிங்' என்ற படமும் இப்படத்தின் தழுவலே.




1990-ல் நடந்த 62வது அகெடமி விருது விழாவில், அகிராவின் திரைத்துறைப் சாதனைகளை மரியாதை செய்யும் வகையில், அவருக்கு விருது வழங்கப்பட்டது.

(ஸ்டார் வார்ஸ் புகழ் ஜார்ஜ் லுகாஞ் (இடது), அகிரா (நடுவில்),ஸ்டீவன் ச்பில்பர்க் (வலது))

ஸ்டார் வார்ஸ் வரிசைகள் அக்கிரோவின் 'ஹிட்டன் போர்ட்ரெஸ்' படத்தின் தழுவல். இப்படத்தின் கதை, நாட்டை இழந்திருக்கும் இளவரசியுடன் அந்நாட்டின் தளபதி ஒரு மறைவான கோட்டையில் தங்கி இருப்பார். பேராசை பிடித்த இரு வேளாளர்களின் உதவியுடன் எதிரி நாட்டின் வழியாக வேறொரு நாட்டிற்கு விறகுகளில் ஒளிக்கப்பட்ட தங்கத்துடன் பயணிப்பார்கள். பயணத்தின் இடையே பேராசையினால் வேளாளர்கள் இழைக்கும் தவறுகள், அதனால் வரும் இன்னல்கள், அதனை தளபதி எதிர்கொள்ளும்விதம் என விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. அடிமைகள் செய்யும் கலவரத்தின் போது, கோட்டையும்,காட்சியமைப்பு சிறப்பாகவும், யதார்த்தமாகவும் இருக்கும். தளபதிக்கும் எதிரிநாட்டு தளபதிக்கும் இடையே நிகழும் சண்டை நன்றாக படமாக்கப்பட்டு இருக்கும். மேற்க்கூறிய மூன்று படங்களிலும் செவன் சாமுராய் தவிர்த்து நடிகர் மிபியுன் கதாநாயகனாக நடித்தார். மூன்று படங்களும் கருப்பு-வெள்ளை படங்களாக இருப்பினும், சுவாரசியமாக இருக்கும். மேலும் தொடர்ந்து அடுத்த பாகங்களில் பார்ப்போம்.

Sunday, July 08, 2007

சென்னையில் ஜப்பான் திரைப்பட விழா

Consulate General of Japan - Chennai மற்றும் Madras Film Societyயுடன் இணைந்து சென்னையில் இம்மாதம் ஒன்பதாம் தேதியிலிருந்து பனிரெண்டாம் தேதிவரை ஜப்பான் திரைப்பட விழாவை சென்னை பிலிம் சேம்பரில் நடத்துகிறது, இன்டர்நேஷனல் சினி அப்ரிசியேஷன் பாரம் (ICAF).Vice Consul, Ms. Sakura Ozaki இப்படவிழாவினை 9-ம் தேதி மாலை 6-15 மணி அளவில் தொடங்கி வைக்கிறார். பாலுமகேந்திரா உள்ளிட்ட திரைபிரபலங்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

படவிழாவில் Kuroki Kazuo இயக்கிய இரு படங்களும் Yamada Yaji, Furumaya Tomoyuki ஆகியோர் இயக்கிய படங்கள் தலா ஒவ்வொன்றும் திரையிடப்படுகிறது.

படப்பட்டியல்:

09.07.07 The Face of Jizo (Director: Kuroki Kuzuo)

10.07.07 The Hidden Blade (Director: Yamada Yoji)

1107.07 A Boys Summer (Director: Kuroki Kuzuo)

12.07.07 Robocon (Director: Furumaya Tomoyuki)

(சுட்ட இடம்: www.cinesouth.com)

பிறந்தநாள் காணும் உடன்பிறப்பிற்கு வாழ்த்துக்கள்!!

பிறந்தநாள் காணும் பாசக்கார குடும்ப உறுப்பினர் மற்றும்் என்னுடைய உடன்பிறப்பு 'கவிதாயினி காயத்ரி'க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

Friday, July 06, 2007

டெலக்ஸ் பாண்டியன் யாருணு தெரியுமா?

டெலக்ஸ் பாண்டியன் யாருணு தெரியுமா? நான் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும்போது, எங்க ரூம்மேட் ஒருத்தன். கார்த்தினு பேரு.தினமும் மூணு வேளை சாப்பிடுரானோ இல்லயோ, மேக்கப் போட்டுப்பான். பொண்ணுகளோட கடலை ரொம்ப வறுப்பான். இதைப்பார்த்தா எங்க வயறு சும்மா இருக்குமா கும்மிட்டி அடுப்பு மாதிரி எரிய ஆரம்பிச்சது. அவனை பல்ப் ஆக்க சமயம் பார்த்துட்டு இருந்தோம். வழக்கம் போல அன்னைக்கு இரவு 8:00 மணிக்கு மேக்கப் போட்டுட்டு இருந்தான். நான் "டேய் கார்த்தி மீசை உனக்கு ஏண்டா சரியா வளரல" என்று வாய கிளரினேன். "தெரியல மச்சான்! அது எப்பவும் அப்படித்தான் இருக்கு!" என்றான் கார்த்தி. இதைகேட்ட நம்ம பசங்க நான் போட்ட கோட்டுல ரோடு போட ஆரம்பிச்சாணுங்க."அசிங்கம்டா! ஒரு ஆம்பளைன்னா மீசை நல்லா இருக்கணும்!" என்று சொல்லி அவனை உசுப்பேத்தினானுங்க. அந்த அப்பாவி கார்த்தி என்ன செய்தா மீசை நல்லா வளரும்னு இந்த மடப்பசங்களையே ஐடியா கேட்டான். இவனுங்க குஷி ஆகிட்டானுங்க. "மஞ்சள் தடவினா மீசை நல்லா வரும். மீசை மழிச்சிட்டு தடவினா இன்னும் நல்லா வரும்" என்று கூட்டாளி ஒருத்தன் சொன்னான். "பாருடா நம்ம சீனியோட மீசைய கம்பிகட்டு போல, எல்லாம் மங்சளோட மகிமை" என்று இன்னொருத்தன் கொளுத்தி போட்டான். இவனுங்க அள்ளி விட்டத எல்லாம் அந்த லூசும் நம்பிட்டு இருந்தான். நிலைமை புரியாம "சரி நான் இப்பவே மீசைய மழிச்சிக்கிரேன்" என்று சொல்லிட்டு போய், மீசைய எடுத்துட்டான். மீசையில்லாத அந்த திருமுகத்த பார்த்த சிரிப்பு தாங்கம நான் வெளியே ஓடிட்டேன். கோபுரம் பூசுமஞ்சள் வாங்கி வந்து கொஞ்சம் தடவிட்டு படுத்துட்டான். எங்களுக்கு சிரிப்பு ஒரு பக்கம், பயம் ஒரு பக்கம் ( எங்க இவனுக்கு சுத்தமா மீசை வரம போயிடுமோ என்று).

மறுநாள் காலை மஞ்சள் போட்டது, முகத்தை கழுவின பிறகும் நல்லா தெரிஞ்சது. காலேஜ்க்கு போனான். இன்னைக்கு சாயுங்காலம் கொலை விழ்ப்போகுதுனு நெனச்சேன். சாயுங்காலம் எல்லாரும் அரட்டை அடிச்சிட்டு இருந்தோம். யாரோடும் பேசம இருந்தான். ஒருத்தன் ஆரம்பிச்சான் "என்ன மாமு! நம்ம கார்த்திக்கு மீசை வந்துடுமா?". சும்மா இருந்த சன்கை ஊதி கெடுத்த மாதிரி, கார்த்தி எழுந்து வந்து எல்லாரையும் சபிக்க ஆரம்பிச்சான். பொரம்போக்கு, நீங்க உறுப்படுவிங்கலா,... இப்படி அவனுக்கு தெரிந்த வார்த்தைல அர்ச்சனை செய்தான். எப்படியோ யாரையும் அடிக்கல. அப்ப 'என்னம்மா கண்ணு' படத்தில் வடிவேலு மஞ்சள் பூசினதால மீசை இல்லாம சுத்துவார். அந்த படத்தில் அவரோட பேரு "டெலக்ஸ் பாண்டியன்". இந்த பேர எங்க கார்த்திக்கு வச்சிட்டோம். பொண்ணுகளோட பேசிட்டு இருந்தா, டெலக்ஸ்்னு கூப்பிட்டா போதும், சும்மா கன்னுகுட்டி போல துள்ளி ஓடிவருவான். அப்படி ஒரு பாசம் அவனுக்கு எங்க மேல. இல்லாட்டி நாங்க பக்கத்தில் விலாவரியா சொல்லி மானத்தை வாங்குவோம். இது தான் சதாரண கார்த்தி டெலக்ஸ் பாண்டியன் ஆன கதை.

பி.கு.: இதை பார்த்து அன்பர்கள் யாரும்் மீசை எடுத்து மஞ்சள் தடவி சாருக், சல்மான் ஆக முயற்சி செய்யாதீங்க. டெலக்ஸ்க்கு மீசையெல்லாம் வந்தது, வரம போகல. இதை தெரிஞ்சி தான் இந்த விளையாட்டுல நாங்க இறங்கினோம்.

Thursday, July 05, 2007

திரையுலக வித்தகர் அகிரோகுரோசவா


ஜப்பானிய இயக்குனர் அகிரோகுரோசவா திரையுலகில் மறக்கமுடியாத மந்திரம்.உலகத்திரையுலகிற்கு புதியபிம்பத்தைக் கொடுத்தவர். 'எண்டெர்டெயின்மெண்ட் வீக்லி' வரிசைப்படுத்திய தலைசிறந்த 50 இயக்குனர்களில் இருந்த ஒரேயொரு ஆசிய இயக்குனர். அதில் 6வது இடம் இவர். இவர் இந்தியாவின் சத்யஜித்ரேவின் ரசிகரும் கூட. ஐம்பதுகளில் இவர் இயக்கிய படங்கள் விதைத்துச் சென்ற புதுமை ஏராளம். இவர் இயக்கிய ரோஷமொன் படத்தின் அடினாதம் சிவாஜி நடித்து வெளிவந்த அந்தநாள் முதல் விருமாண்டி என்கிற சண்டியர் வரை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. திரைப்பட தொழில்நுட்பத்தில் உலகை உலுக்கிக்கொண்டு இருந்த மேற்குலகை திகைக்க வைத்தவர்.

1954-ல் வெளியான செவன்சாமுராய் ஹாலிவுட்டில் மெக்னிபிசந்த் செவன் என தயாரிக்கப்பட்டு பெரும்வெற்றி பெற்றது. பாலிவுட்டின் சோலே,சைனாகேட் கூட இதனுடைய தழுவல் தான். 1961-ல் இவர் இயக்கிய யொஜிம்போ, ஹாலிவுட்டில் செர்ஜியோலியோன் இயக்கத்தில் பிஸ்ட் புல்லாப் டாலர்ஸ் என்ற லத்தின் அமெரிக்க படமாக வெளியானது. கிலிண்ட் ஈஸ்ட்வுட் இப்படத்தில் நடித்து தான் புகழின் உச்சத்திற்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகிரோகுரோசவா சிறந்த ஓவியர். காட்சியமைப்பை தன் மனம் ஏற்கும் வரை விடாப்பிடியாக எடுப்பதால் ஊடகங்களால் சர்வாதிகாரியாக சித்தரிக்கப்பட்டார். செவன்சாமுராய் படத்தின் இறுதிக்காட்சிகளில் ஒன்றிற்கு மேற்பட்ட கேமிராக்களைப் பயன்படுத்தி அற்புதமான போர்காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். சண்டைக்காட்சிகளில் கத்தியால் வெட்டும் காட்சிகளில் மாமிசங்கள் வெட்டப்பட்டு ஒலிப்பதிவு அமைக்கப்பட்டதாம்.

அகிரோகுரோசவாவின் படங்களில் மழைக்காட்சி இருக்கும். மேற்கத்திய திரையுலகின் மேதை ஜான் போர்டு அகிரோகுரோசவாவை சந்தித்தபோது "மழை உங்களுக்கு மிகவும் பிடிக்குமா?" என்று கேட்டார். "என்னுடைய படங்களை உண்மையில் அதிக கவனத்துடன் பார்க்கிறீர்" என்று பதிலளித்தார் அகிரோ.

அகிரோ நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும் காட்சியமைப்பதில் வல்லவர். நடிகர்களுக்கான உடையை ஒருவாரத்திற்கு முன்பே கொடுத்து உடுத்தச் சொல்லி, அந்த பாத்திரத்துடன் ஒன்றச்செய்து விடுவார். 1700-ல் ஜப்பானில் நிலவிய நிலப்பிரபுத்துவ கோட்பாட்டில் சாமுராய் மற்றும் வேளாளர்களின் வாழ்க்கைமுறையை பிரதிபலிக்கும்படி கதைகளனாக அமைத்து வெகுவான படங்களை இயக்கினார்.

டெர்ஸு உஸலா என்ற திரைப்படம் வேற்றுமொழிக்கான ஆஸ்கார் விருதினை இவருக்கு 1975-ல் வாங்கித்தந்தது (இப்படம் ஜப்பானிய மொழியில் எடுக்கப்படவில்லை! ரஷிய மொழியில் எடுக்கப்பட்டதாகும்). ரேன்(1985) திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனராக ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார். திரையுலகின் ஜாம்பவானாக வலம்வந்த இவர் 1998-ல மறைந்தார்.