Tuesday, September 17, 2013

அம்மா ஊறுகாய் மற்றும் சிக்கன் 65 திட்டம் முதலமைச்சர் துவங்கி வைத்தார்.

"அம்மா குடிநீர்" திட்டம் முதலமைச்சர் துவங்கி வைத்தார்.

…புரட்டு தலைவியே! டாஸ்மாக் எண்ணிக்கையைக் கூட்டி சரக்குக்கு ஏற்பாடு செஞ்சிங்க. குடிநீர் திட்டம் கொண்டுவந்து மிக்ஸிங்க்கும் ஏற்பாடு செஞ்சிட்டிங்க. அப்படியே கொஞ்சம் சைட்டிஷுக்கு "ஊறுகாய் திட்டம்" "சிக்கன் 65 திட்டம்" கொண்டுவந்திங்கன்னா புண்ணியமா போகும்.


நடிகர் பிரசன்னா தற்போது விரும்பி பார்க்கும் படம்.

என் பொண்டாட்டி நல்லவ.

மூட நம்பிக்கை ஒழிப்புக்கு, உரிய சட்டம் ஒன்றை, மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் - கலைஞர்  கருணாநிதி

ஆமா! என்னமா பீல் பண்ணுராரு. நீங்களே உங்க மஞ்சள் துண்டை ஆட்டி துவங்கி வையுங்க.

எங்கள் வீட்டில் எங்கள் அம்மா தான் பாஸ் என்று ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் தெரிவித்துள்ளார்.

 "ஒரு பொம்பிளேன்னா ..." தலைவரோட டயலாக் எல்லாம் சினிமாவுலத்தான்.******************************************************

இன்றைக்கு எம்.ஆர்.ராதா பற்றி எழுதுபவர்கள் எல்லாருக்கும் அட்சய பாத்திரம் போல இருப்பது. எம்.ஆர்.ராதா அவர்கள் கொடுத்த சில பேட்டிகள் . அவற்றுள் முக்கியமான ஒன்று விந்தனின் "சிறைச்சாலை சிந்தனைகள்". இதிலிருக்கும் சில விடயங்களை எடுத்து தான் கொஞ்சம் இப்படி அப்படி இட்டுக்கட்டி எம்.ஆர்.ராதாவைப் பக்கத்திலிருந்து பார்த்தது போல பலர் இன்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சரி சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன். திரைப்படத்துறையில் வெளிப்படையான மனிதர், திறந்த புத்தகம் எனப் பொதுவாக கண்ணதாசனைச் சொல்லுவார்கள். எம்.ஆர்.ராதாவும் அப்படித்தான். மேலே சொன்ன விந்தனின் புத்தகத்தில் ஒரு இடத்தில் சொல்லுவார். ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பாலமுருகனாக, பால கிருஷ்ணனாக, பெண்வேடங்களில் நடிக்கும் பையன்களுடன் உடலுறவு கொள்ள சில பணக்கார கூட்டம் அலைந்ததையும், தானும் அதுபோல ஆண் மோகம் கொண்டு அலைந்தவர்களில் ஒருவன் என வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். இதைப் பற்றி இவர் அதிகமாக சொல்லவில்லை. இப்படிப்பட்ட  செயல்களில் ஈடுபட்டதற்கு தான் பெரும் வேதனை அடைவதாக குறிப்பிட்டிருந்தார்.   இத்தகைய வலுக்கட்டாயமான ஓரினசேர்க்கை பழக்கங்களை (Homosexual என்பதா? Pedophile என்பதா? தெரியவில்லை) வெளியில் சொல்ல அதிக தைரியம் வேண்டும். எம்.ஆர்.ராதா செய்த தவறுகளை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் எத்தனைபேர் இப்படி தவறுகளை ஒத்துக்கொள்பவர்கள் இருக்கிறார்கள்? எனக்குத் தெரிந்து யாருமில்லை.

எம்.ஜி.ஆர், சிவாஜி கூட இளம்வயதில் பெண்வேடங்களை ஏற்று நடித்தவர்கள். இவர்கள் கூட இப்படி பல போன்ற எண்ணற்ற இன்னல்களை சந்தித்துதான் வந்திருப்பார்கள் போலும்.

******************************************************

நான் பார்த்த அரசியல் என்ற நூலில் எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதியை ஒப்பிட்டு கண்ணதாசன் கூறுகிறார்.
…".....அவரைப் (கருணாநிதி) பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை. ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார். ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார். இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.(http://chakkarakatti.blogspot.de)"

கண்ணதாசன் கருணாநிதியுடன் 25 ஆண்டுகளுக்கு மேல் பழகியிருக்கிறார். அதனையொட்டியே இவ்வளவு தெளிவாக கருணாநிதி பற்றி கூறுகிறார். பாருங்க எவ்வளவு உண்மை. இன்றுவரை கருணாநிதி மாறவில்லை.  அப்படியேதான் இருக்கிறார்.

… ****************************************************
படிக்காதமேதை படத்தில் கேவி மகாதேவன் இசையமைப்பில் ஜமுனாராணி, ஏஎல் ராகவன் பாடிய பாடல். எனக்குப் பிடித்த ஒரு பாடல். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

 

Friday, September 06, 2013

குழந்தைகளின் பெற்றோர்களே ஜாக்கிரதை

பல்கலைக்கழகத்தில் நான் படித்துக் கொண்டிருந்த நேரம். ஒருநாள் மாணவர்விடுதியில் நானும் என் நண்பனும் கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்தோம். தாடிவைத்த ஒருவர். நடுத்தரவயது இருக்கும். தான் ஒரு மலையாளி எனவும் புதிதாக கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும் எங்களிடம் தமிழில் அறிமுகப்படுத்திக் கொண்டார். அவருடன் பேசியதில் அவருக்கு திருமணமாகி இருப்பதும் தெரிந்தது. பல்கலைக்கழகத்தில் குடும்பத்துடன் வசிப்பவர்களுக்கு தனிவிடுதியும் உண்டு. அவ்விடுதியில் இடம் கிடைத்ததும் மனைவியை அழைத்துக் கொண்டுவரப்போவதாக சொல்லிக் கொண்டிருந்தார். சிறிதுநேர விளையாட்டிற்குப் பிறகு செல்லும்போது என்னையும் என் நண்பனையும் பார்க்க சகோதரர்கள் போல இருப்பதாக சொல்லிவிட்டுச சென்றார். அதன் பிறகு நான் அவரைப் பார்க்கவில்லை. வெகுநாட்கள் கழித்து, என்னுடன் படித்த ஒரு கன்னடர் அன்று தாமதமாக வேலைக்கு வந்தார். அவரும் குடும்பஸ்தர்கள் விடுதியில் இருந்து வருபவர் தான். ஏன் தாமதம் என்று கேட்டேன். அவர் வசிக்கும் விடுதியில் இருக்கும் ஒருவன் குழந்தைகளிடம் சாக்லேட் கொடுத்து அறைக்குள் கூட்டிப் போய் சில்மிஷம் செய்து இருக்கிறான்.  குழந்தைகள் பெற்றோரிடம் விவரமாக சொன்னதன் பேரில் அவனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்ததாக சொல்லிக் கொண்டிருந்தார். எனக்குப் பகீர் என்றது, படிக்கவரும் இடத்தில் கூட இப்படி எல்லாம் நடக்கவேண்டுமா?  எனக்கு உணவுஇடைவேளைக்கு நேரமானதால் விடுதிக்கு வந்துவிட்டேன். விடுதியில் நுழையும்போது எனக்குத் தெரிந்த  ஒரு மலையாளி நண்பன் என்னிடம் விசாரித்தான். "இன்றைக்கு என்ன ஆச்சி விஷயம் தெரியுமா?"
"என்ன"
"இக்பாலை போலிஸ் கொண்டு போச்சு"
"எந்த இக்பால்"
"அன்றைக்கு உன்னுடன்  கிரிகெட் ஆடினாரே. தாடி கூட வச்சிட்டு இருந்தாரே. அவர்"
"ஏன் என்னவாம்"
"குழந்தைகளிடம் செக்ஷுவலாக தவறு செய்தாராம். என்னால் நம்ப முடியல. அவர் அப்படி இல்லை. வேண்டுமென்றே யாரோ இப்படி பழி சுமத்தி இருக்காங்க" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

நான் பதிலேதும் பேசாமல் சாப்பிடப் போய்விட்டேன். இது நடந்து பல ஆண்டுகள் இருக்கும். இந்த விஷயம் அப்போது செய்தித்தாளிலெல்லாம் வந்தது. என்னைப் பொருத்தவரை child abuse, phedophile விஷயங்களில் யார் வேண்டுமானாலும் குற்றவாளிகளாக இருக்கலாம். இவர்களை கண்டுகொள்வது கடினம். பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம், வீட்டிற்கு வரும் நண்பர்களாக இருக்கலாம், ஏன் குழந்தையின் தந்தையோ சகோதரனாகக் கூட இருக்கலாம்.

இன்றைக்கு செய்தித்தாளைத் திறந்தால் சிறுமி கற்பழிப்பு, குழந்தை கற்பழிப்பு  என்றுதான் அதிகமாக வருகிறது. செய்தித்தாளில் வரும் சங்கதிகள் சில. ஆனால் உண்மையில் சமூகத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல் நம்மைச் சுற்றி இருக்கும் பல குழந்தைகள்  சீறழிக்கப்படுகிறார்கள். மனரீதியான பாதிப்புடையர்கள் தான் இத்தகைய காரியங்களில் ஈடுபட முடியும். வேதனை தரக்கூடிய இந்த விஷயத்தைப் பற்றி நான் மேலும் சொல்ல விரும்பவில்லை. குழந்தைகளின் பெற்றோர்களே ஜாக்கிரதை. நான் ஒன்றும் குழந்தைகள் மனோ தத்துவநிபுணன் அல்ல. ஆனால் ஒரு சில விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு
1. உங்களுக்கு என்ன கவலை இருந்தாலும், குழந்தைகளிடம் அன்பாக இருங்கள். 
2. முடிந்தவரை அடிக்கடி உங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து பேசுங்கள். அவர்கள் அன்று என்ன செய்தார்கள் என்று அன்புடன் விசாரியுங்கள். 
3. யாருடன் பழகுகிறார்கள் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். 
4. குழந்தைக்கு காயம் ஏதாவது ஏற்பட்டிருப்பின், எதனால் ஏற்பட்டது என்பதை அன்புடன் விசாரியுங்கள். "யாருடன் சண்டை போட்ட" என்று அதட்டினால், பிறகு அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை இருப்பின் உங்களிடம் சொல்லப் பயந்து தயங்குவார்கள். 
5. அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
6. மிகவும் முக்கியமானதொரு விஷயம் சிறுவர்களை பேஸ்புக், இணையதளங்களை பாவிக்கவிடாதீர்கள். அப்படி பாவிக்கவிட்டாலும், கண்காணிப்புடன் நடந்துகொள்ளுங்கள். வளர்ந்த நாடுகளில் இணையத்தின் மூலம் குழந்தைகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுடன் இனிமையாக பழகி தனியாக வரவழைத்து கற்பழித்த கொடூரங்கள் நடந்துள்ளன. 

Friday, April 26, 2013

கவுண்டமணி கேள்வி பதில்ஸ்


கவுண்டமணி கேள்வி பதில்ஸ் 

திமுக - தேமுதிக கூட்டணி பற்றி உங்கள் கருத்து?
வடிவேலு, மதுரை

 
ஜப்பான்ல என்னை ஜாக்கிசான் கூப்பிட்டாக, நான் போலாமா? 
சரளா, கோவை
இங்க பிச்சை எடுத்தது பத்தாதுனு சப்பானுல போயி பிச்சை எடுக்க போறியா. போ. அப்படியே சப்பான் பாசையிலே நாலு வார்த்தை அள்ளிவுடுரேன். கப் கப்னு புடிச்சிக்கோ.


எனக்கு வழுக்கை என்பதால் என் மனைவிக்கு  என்னை கிண்டல் செய்கிறாள்? ……ஓமகுச்சி நரசிம்மன், சைதாபேட்டை
…டே சைதாபேட்டை மச்சான். சைத்தான் கி பச்சா. எண்டா அம்மிகல் தலையா! உன்ன கிண்டல் செய்யாம சுண்டலா செயவாங்க. டே ஏழுமசுரு மண்டையா! இன்னொரு தடவ கேள்வி கேட்டுகிட்டு வந்த செருப்பால பிய்யபிய்ய அடிச்சிடுவேன்...... ஒடிப்போயிடு.... கொசுத்தொல்லை தாங்கமுடியல நாராயணா!

கக்கூஸுல காட்டெருமை புகுந்த மாதிரி கமலஹாசன் கொடுத்த முத்தத்தைப் பத்தி குஜாலா கோக்குமாக்கா எதாச்சும் தட்டி விடுங்க?
வெண்ணிற ஆடை மூர்த்தி, பூலாம்பட்டி 


அடே கழுதவாயா! உனக்கு உதாரணம் சொல்ல வேற  எதுவும் கிடைக்கல.
அந்தாளு சினிமாவிலேயே ஒருத்திவிடாம மொச்சுமொச்சுனு முத்தங்கோடுப்பான்.  கேப் கிடைச்சா ஜட்டி கூட போடுவான். இவனுங்களும் திருந்தமாட்டானுங்க, நம்மளயும் திருந்தவிடமாட்டாணுங்க. வைக்கபோருல நாய் படுத்த மாதிரி.
******************************************************************************** 
இயக்குனர் பேட்டி
சில நாட்களுக்கு முன் இண்டர்நெட்டில் பாக்யராஜ், மணிவண்ணன் அவர்களின் நேர்காணல்களை காண நேரிட்டது. பாக்யராஜ் அவருக்கு தோன்றியதை எதார்த்தமாகச் சொல்லியிருந்தார். அவற்றுள் ஒன்று:
…#ஒரு இயக்குனரோ, கதாசிரியரோ உருவாக்கக் கூடிய படைப்பிற்குத் தேவையான விஷயங்கள் இரண்டுவிதமாக கிடைக்கலாம். ஒன்று, தேடல், ஆராய்ச்சியின் மூலமாக கிடைக்கும் தகவல்கள். இரண்டு, அனுபவத்தின் மூலமாக நம்மையறியாமல் நமக்குள் பதிந்துள்ள விஷயங்கள். இவற்றுள் இரண்டாவது வகையை வைத்து படைப்பை உருவாகுவது சுலபம்.
…(என்னைப் பொருத்தவரை, இரண்டுமே வேறுவேறு பாதைகள். தமக்குள் பதிந்துள்ள நினைவுகளை ஆக்கங்களாக உருவாக்குபவர்களுக்கு ஒரு சமயத்திற்கு மேல் விஷயம் தீர்ந்துவிடும். ஆனால் அவ்வாக்கங்களில் குறைந்தது ஐம்பது சதவிகிதமேனும் உண்மை இருக்கும். …இதற்கு முரணாக, முதலாவதாகச் சொல்லப்பட்ட தகவல் ஆராய்ச்சி சார்ந்த படைப்புகளுக்கான விஷயங்கள் தீராது. ஆனால் அப்படைப்புகளில் செயற்கைத்தனம் மிக அதிகமாக இருக்கும்.)

மணிவண்ணன் பேச்சில் அவரது போலித்தனம் நன்றாகவே தெரிந்தது. 
# நான் தாடி வச்சிகிட்டு ஒரு போட்டோ எடுத்தேன். அப்படியே கார்ல்மார்க்ஸ் மாதிரியே இருப்பேன்.
#… சேகுவேரா கதையை தமிழில் டைரக்ட் பண்ணும்னு ஆசை. என் மகன் தாடி வச்சா அப்படியே சே மாதிரியே இருப்பான்.
…# வேறுபடங்களைக் காப்பியடிப்பது தவறில்லை. இந்த காலத்து இயக்குனர்கள் வேற்றுமொழிப்படங்களை காப்பி அடிப்பது தவறு என்றால், கம்பன் செய்தது என்ன?
(கம்பர் ராமாயணத்தோட தமிழ் வெர்ஷனை எழுதினார். பெயரும் ராமாயணம் என்று தான் பெயர் வைத்தார். கதாபாத்திரங்களுக்கும் அதே பெயர்கள் தான். தமிழ்ப்பட இயக்குனர்கள் காப்பி மட்டும் அடிப்பதில்லை, தன்னால் உருவாக்கப்பட்ட கதை என்றே போட்டுக்கொள்கிறார்கள். உண்மையான கதாசியருக்கு காசு கொடுக்காட்டி கூட பரவாயில்லை. பெயரைக் கூட போடமாட்டார்கள். மணிவண்ணன் இப்படி பொங்குவதற்கும் காரணம் இருக்கிறது. மணிவண்ணனுடைய நூறாவதுநாள் திரைப்படம் Seven black notes  என்ற இத்தாலிய திரைப்படத்தின் ஈயடிச்சான் காப்பி. எனக்குத் தெரிந்து இது ஒன்று. தெரியாமல் எத்தனையோ? இதை என்றாவது இவர் வெளியில் சொல்லி இருப்பாரா? இந்தியில் வேறு இந்தப்படத்தை பெருமையாக இயக்கினார். அப்பாவிப் பெண்ணுக்கு அல்வா கொடுக்கும் காட்சியை விலாவாரியாக எடுக்கும் இயக்குனர், சேகுவேரா படம் எடுத்தால் எப்படி இருக்கும்.)
இவர் போன்ற, சீமான் போன்ற ஆட்களை இன்னும் ஈழத்தமிழர்கள் எப்படித்தான் நம்புகிறார்களோ?
******************************************************************************** 
தமிழ்க் குறிப்பு 
தமிழில் வேறுவேறு குடித்தலுக்கான வினைகள்
குடி - வேகமாக குடிப்பது (எ.கா. தண்ணீர் குடி)
பருகு - கொஞ்சம்கொஞ்சமாக குடித்தல் (எ.கா. பால் பருகு)
அருந்து - மிகவும் கொஞ்சம்கொஞ்சமாக குடித்தல் (எ.கா. மது அருந்து)
……உண்ணுதல் என்றால் உட்கொள்ளுதல். "கள்ளுண்ணாமை" என்ற பதத்தில் கள் என்ற திரவப்பொருளுக்கும் உண்ணுதல் என்ற வினையை பயன்படுத்தியுள்ளார் திருவள்ளுவர்.
***********************************************************************************

Monday, April 22, 2013

அம்மா ஞாபகம்

நான் நான்காம் வகுப்பு என் அம்மா பணிபுரிந்த பள்ளியிலேயே படித்தேன். மதிய உணவு இடைவேளையில் அம்மா மற்ற ஆசிரியைகளுடன் இருந்து உண்பார்கள். நான் சாப்பிட்டவுடன் நண்பர்களுடன் விளையாடப் போய்விடுவேன். பள்ளியின் அருகில் இருக்கும் பெரிய பஜாரில் ஓடித்திரிந்து விளையாடுவோம். மீன்கடை, கோடவுன், காய்கறிக்கடை, அனுமன் கோயில் என ஒரு இடம் விடுவதில்லை எல்லா இடத்திலும் சுற்றிச்சுற்றி விளையாடுவோம்.  விளையாடியபின் Hotel பாலாஜிபவனில் தண்ணீர் குடித்துவிட்டு, அனுமன் கோயிலில் முகம் கழுவிக் கொண்டு, முடிதிருத்தும் கடையில் தலைசீவிக் கொண்டு வகுப்பிற்குச் செல்வோம். வழக்கம்போல் அன்று அப்படி விளையாடிவிட்டு வகுப்புச் செல்கையில், போகும்வழியில் எல்லா மாணவர்களும் பள்ளியைவிட்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். ஸ்ட்ரைக் எதாவது இருந்தால் பள்ளி விட்டவுடன் பையோடு தான் ஓடுவார்கள். எல்லோரும் வெறுங்கையோடு கத்திக்கொண்டும் கதறிக்கொண்டும் ஓடிக் கொண்டிருந்தார்கள். ஏன் ஓடுகிறார்கள் என்று யாரைக்கேட்டாலும் பதில் கிடைக்கவில்லை. நான் ஓடிச்சென்று பள்ளி இருக்கும் தெருமுனையில் நின்று பார்த்தேன். பள்ளியின் கூரை முழுவதும் ஒரு ஆள் உயரத்திற்கு எரிந்து கொண்டிருந்தது. நான் முன்பின் பார்த்திராத தீவிபத்து. பள்ளியில் இருந்த அம்மாவின் ஞாபகம்! எரிந்து கொண்டிருந்த பள்ளியை நோக்கி ஓடினேன். அங்கிருந்த சிலர் தீ பெரிதாக இருப்பதால் என்னையும் மற்ற மாணவர்களையும் பள்ளியின் அருகே நெருங்க விடாமல் விரட்டிக் கொண்டிருந்தார். என் அம்மா பள்ளியில் இருப்பதாக அழுதுகொண்டே ஒருவரிடம் சொன்னேன். பள்ளியில் யாரும் இல்லை, எல்லோரும் வெளியேறிவிட்டனர், நீ போய் தொலைவாக நில் என்று மறுபடியும் விரட்டினார். எரியும் பள்ளியைப் பார்த்தவாறே நான் நடந்து வந்து கொண்டிருந்தேன். அம்மா ஒரு வீட்டில் நின்று, என்னைக் காணவில்லை என்று மற்றவர்களிடம் சொல்லி அழுதுகொண்டிருந்தார். அப்போதுதான் எனக்கு நிம்மதி வந்தது. நான் அருகே சென்று அம்மா என்றதும், என்னைப் பார்த்த உடனே என் கன்னத்தில் அறை ஒன்று விட்டார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 

நம் ஆழ்மனதில் இருப்பவை தான் கனவாக வருகின்றன என்பார்கள். சிறுவயது கனவுகள் நாம் பார்த்த சற்று மோசமான உருவங்களாக இருக்கும், கேட்ட பேய்க்கதைகளின் சிந்தனைகளாக இருக்கும். எனக்கு என்னதான் என் பாட்டி பேய்க்கதைகள் சொன்னாலும் நான் உறங்கும்போது பயப்படுவதில்லை.

இப்போது வேலூர் மாவட்டத்தில் அவ்வளவாக மழை பெய்வதில்லை. ஆனால் சுமார் இருபது வருடங்களுக்கு முன் பருவ மழைகள் காலம் தவறாமல் பெய்யும். அவ்வாறு பெய்யும் போது, என்னுடைய அம்மா வீட்டின் வராண்டாவில் கொடிகட்டி துவைத்த சேலைகளைக் காயப்போடுவாங்க. நிறைய சேலைகள் தொங்கிக் கொண்டிருக்கும், அதனிடைய நான் தனியாக ஓடி விளையாடிக் கொண்டிருப்பேன். அன்றிரவு அதுவே கனவாக வரும். நான் சேலைகள் நடுவே ஓடிக்கொண்டிருப்பேன். சேலைகள் இடையே என் அம்மாவைத் தேடிக்கொண்டிருப்பேன். என்னுடைய அம்மாவின் குரல் கேட்கும், ஆனால் என்னால் கண்டுபிடிக்க இயலாது. எங்கு பார்த்தாலும் சேலையாக இருக்கும். வெளியே வர வழியே இருக்காது. இன்றுவரை இக்கனவு எனக்கு எப்போதாவது  வருவதுண்டு. அப்படி வந்தால், வட இந்தியாவின் ஏழு டிகிரி  குளிர்காலத்தில் கூட உடல் வேர்த்து நனைந்துவிடும்.  எல்லோரையும் போல என் தாய் மீது எனக்கு மிகுந்த பாசம். நான் சிறுவயதில் என் அம்மாவிடம் கோபித்துக் கொண்டு கதைக்காமல் இருந்தேனானால், என்னை கதைக்க வைக்க அம்மாவிடம் ஒருவழி இருந்தது. 'நீங்கள் கேட்டவை' படத்தில் வரும் " பிள்ளைநிலா இரண்டும் வெள்ளைநிலா" , 'தாயிக்கொரு தாலாட்டு' படத்தில் வரும் "ஆராரிரோ பாடியதாரோ" பாடல்களைக் கேட்ட மாத்திரத்தில் பசுவிடம் ஓடும் கன்று போல ஆகிவிடுவேன். என் தாயின் பிரிவிற்குப் பிறகு, இப்பாடல்களை கேட்பதற்கே எனக்கு பயம். என் மனைவி கேட்க விரும்பினால் Headphone-ல் கேட்கச்சொல்வேன்.

P S வீரப்பா - படக்காட்சிகள்

Sunday, April 21, 2013

இத்தாலி பெஸ்தோ துவையல் மற்றும் பி பி சீனிவாஸ்

இத்தாலி பெஸ்தோ துவையல்

பெஸ்தோ என்பது ஒரு இத்தாலி வகை துவையல். அமிலத்தன்மையின்றி சாத்வீகமான சுவை உடையது. சுவையாகவும் வாசமாகவும் இருக்கும். ஸ்பெகட்டி, பஸ்தா, சோறு போன்றவற்றுடன சேர்த்து கிளறி சாப்பிடலாம். பிஸ்ஸா, ரொட்டியை ஓவனில் சுடுவதற்கு முன் அவற்றின் மேல் பெஸ்தோவை லேசாக பூசி சுட்டால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். …பெஸ்தோ தயாரிக்க துளசி பயன்படுத்தப்படுகிறது.  

துளசியிலையில் பலவகை உண்டு. இத்தாலி உணவில் துளசி அதிகமாக பாவிக்கப்படுகிறது. உணவிற்கு பயன்படுத்தப்படும் இவ்வகை துளசி "இனிப்புத் துளசி" (Sweet Basil) எனப்படுகிறது. என்னதான் இந்தியாவில் துளசியை கடவுளாகவே வனங்கினாலும் இத்தாலி உணவுகளில் துளசியை பயன்படுத்துவதுபோல நாம் பயன்படுத்துதில்லை எனலாம்.


பர்மிஸான் ஒரு உலர்ந்த வகை பாலாடைக்கட்டி. விலை சற்று அதிகம். இத்தாலி உணவுகளில் இதை எப்போதும் லேசாக துருவிப் போடுவார்கள்.

 
ஒலிவ் எண்ணெய் உடல் நலத்திற்கு நல்லது. ஒமேகா 3 கொழுப்பைக் கொண்டது. இதை பொறிக்கப் பயன்படுத்துவது உடல்நலத்திற்குச் தீங்கு என்கிறார்கள். அதனால்  நம்ம ஊர் நல்லெண்ணெய் போல உணவில் நேராக கலந்து பயன்படுத்தலாம். இந்தியாவில் ஒலிவ் எண்ணெய் விலை அதிகம் என்பதால், பெஸ்தோவை செய்பவர்கள் நெய் அல்லது நல்லெண்ணெய் பாவிக்கலாம். இதில் ஒரு நகைச்சுவையான விடயம் என்னவென்றால் நம் மக்கள் இந்தியாவில் இருக்கும் போது ஒலிவ் எண்ணெய் மிகவும் நல்லது எனக்கூறி அதிகவிலை கொடுத்துவாங்கி பாவிக்கிறார்கள். இதுவே அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றால், நல்லெண்ணென் மிகவும் நல்லதென அங்கு அதிகவிலை கொடுத்து வாங்குகிறார்கள்.

இப்போது பெஸ்தொ செய்வதைப் பற்றி பார்ப்போம். நாம் வழக்கமாகச் செய்யும் புதினா துவையல், கறிவேப்பிலை துவையல், கொத்துமல்லி துவையல் போலத்தான் இதன் செய்முறையும். கடினமில்லை.

…தேவையான பொருட்கள்:

2 கோப்பை - துளசி இலை (Basil)
1/2 கோப்பை  - பர்மிஸான் சீஸ் (Parmesan Cheese)
1/2 கோப்பை - ஒலிவ் எண்ணெய்
1/4 கோப்பை - பைன் கொட்டை (Pine nut) அல்லது அக்ரோட் (Walnut)
2(அ) 3 பல் - தோலுரித்த உள்ளி (பூண்டு)
தேவையான அளவு - உப்பு மற்றும் மிளகு

பெஸ்தோ செய்முறை:


…1. துளசியிலையை அக்ரோட் (அ) பைன் கொட்டையுடன் சேர்த்து உரலிலிட்டு அரைக்கவும். தோலுரிக்கப்பட்ட பூண்டையும் சேர்த்து அரைக்கவும். அரைக்கும் போது சிறிதுசிறிதாக ஒலிவ் எண்ணெயையும் சேர்க்கவும்.
2. தேவையான அளவு உப்பையும், மிளகையும், பாமஸான் சீஸையும் சேர்த்து அரைக்கவும்.
 


சில குழந்தைகளுக்கு இந்தச் சுவை பிடிக்காமல் போகலாம். அப்போது கொஞ்சம் பால் விட்டு சூடாக்கிக் கிளறிவிட்டுக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும். 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நானும் என் மனைவியும் காதலிக்கும்போது, எங்கள் காதல் எப்படியோ அவளுடைய வீட்டிற்குத் தெரிந்துவிட்டது. எவ்வளவோ முயற்சித்தும் பிறகு அவளை தொடர்புகொள்ள முடியவில்லை. அன்று என் வீட்டிற்குச் செல்ல  இரவு ஒரு 8 மணியளவில் பேருந்திற்காக காத்திருந்தேன்.  தனியார் பேருந்துகள் அதிக இடங்களில் நின்று செல்லும், ஆகவே நான் அரசு பேருந்துகளில் அதிகம் பயணம் செய்வதுண்டு. அரசுப்பேருந்து ஒன்று வந்தது. அதில் ஏறச் செல்லும் வேளையில், அவளிடம் இருந்து ஒரு செல்போன் மெசேஜ். "என்னுடைய பெற்றோர்கள் உன்னுடன் என்னை வாழவிடமாட்டார்கள். என்னை மறந்துவிடு. உனக்குப் பிடித்த வேறு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்". பேருந்தில் ஏறி அமர்ந்தேன். இரவு என்பதால் பயணிகள் எண்ணிக்கை குறைவு. பேருந்தில் பி.பி.சீனிவாஸ் பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது. நான் அமர்ந்த நேரந்தானா அப்பாடல் வரவேண்டும். அதுவரை நான் மறைத்துவைத்திருந்த என் துக்கம் அழுகையாக வெளிவந்துவிட்டது. பிறகு இதுவே என்னுடைய பேவரைட் பி.பி.சீனிவாஸ் பாடலாக மாறிவிட்டது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Saturday, April 13, 2013

கடவுள் வணிகப் பொருளாகிப்போன காலத்தில்

ஆலயடி விநாயகர் தலபுராணம்

என்னுடைய சொந்தக்கார பையன் ஒருத்தன். மகேஷ் என்று பெயர். பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடையவில்லை. வீட்டில் சும்மா இருக்க முடியாமல், ஒரு பெட்டிக்கடை வைத்தான். கடை வாடகை கொடுக்கும் அள்விற்குக் கூட லாபம் இல்லை. கடை நடத்த முடியாமல் மூடிவிட்டான். அவனின் வீட்டுக்குப் அருகாமையில் ஒரு பெரிய குப்பை கொட்டும் இடம் இருந்தது. ஊரின் சில பகுதிகளின் குப்பை பெரும்பாலும் இங்கு தான் கொட்டப்படும். பிள்ளையார் சதுர்த்தி வந்தால், சிறுவர் போவோர் வருவோரிடம் காசு சேர்த்து இந்தக் குப்பை கொட்டப்படும் இடத்தின் பக்கத்தில் உள்ள ஒரு காலி இடத்தில் களிமண் பிள்ளையார் வைத்துக் கொண்டாடுவார்கள். மகேஷுக்கு வேலைவெட்டி இல்லாததால், அவர்களுடன் சேர்ந்து காசு சேர்ப்பதிலும் பிள்ளையார்சிலை வாங்கி வைப்பதிலும் மும்முரமாக இருந்தான். இம்முறை நிறைய பணம் சேர்ந்திருந்தது. வெறுமனே பிள்ளையார் மட்டும் வைக்காமல், ஒரு ஓலைக்கொட்டகைப் போட்டார்கள். அந்த இடம் ஒரு புறம்போக்கு இடம் என்பதால், பிள்ளையார் சதுர்த்தி முடிந்ததும் ஓலைக்கொட்டகை பிரிக்கப்படவில்லை. நம்ம பையனும் ஓலைக் கொட்டகையை கோயில் ரேஞ்சுக்கு பெருக்கி சுத்தம் செய்துவிடுவான். களிமண் பிள்ளையாருக்கு பூபோட்டு எதாவது பக்திப்பாட்டு பாடிடுவான். ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்து, அந்தப் பகுதியில் உள்ள அவனது சொந்தங்கள் ஓலைக்கொட்டகை உள்ள இடத்தில் ஒரு கல் பிள்ளையார்சிலையும் கோயிலும் கட்டுவதென ஏகமனதாக முடிவெடுத்தனர். முதலில் ஒரு சிறுகோயில் கட்டி சின்ன பிள்ளையாரும் வைக்கப்பட்டது. அன்றுமுதல் மகேஷே கோயிலுக்கு அர்ச்சகர்.

விநாயகர் ஸ்துதி, பிள்ளையார் அகவல் என நான்கைந்து புத்தகங்கள் வாங்கி படிக்கத் துவங்கிவிட்டான். சில ஆண்டுகளில் சமூக ட்ரெண்டுக்கு ஏற்றபடி கோயில் மேலும் விரிவாக்கப்பட்டது. அனுமன், ஐயப்பன், நவகிரகங்கள், வைக்கப்பட்டன. நம்மாளும் சலிக்காமல் பூணூல் ஒன்று வாங்கிப் போட்டுக்கொண்டு, முழுநேர பிசினஸில் இறங்கிவிட்டார்.  ஸ்பெஷல் அர்ச்சனை, ஆண்டுப்பிறப்பு, பிரதோஷம் (பிள்ளையார் கோயிலில்?!), நன்கொடை என பிஸினஸில் பிரமாதமான முன்னேற்றம். தற்போது கோயிலில் புதிதாக அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மகேஷும் தகட்டில் சக்கரம் எழுதுவது, குறி சொல்வது என புது பிராஞ்ச் திறந்து பிஸினஸை மேலும் விரிவுபடுத்தியுள்ளார். ஒருமுறை மகேஷோட அம்மா சொன்னாங்க "பிள்ளையாரா இங்க வந்து இருக்கணும்னு விரும்பி இருக்காரு. அதனாலதான் கோவில் வந்தது". நானும் வாய் சும்மா இல்லாமல் "குப்பைத்தொட்டி பக்கத்தில் இருக்க அவருகென்ன அப்படி ஒருஆசை" என்றுகேட்டுவிட்டேன். பார்த்தார்களே ஒரு பார்வை, நான் ஓடிவிட்டேன். மகன் சம்பாதிக்கும் பெருமிதம் அவங்களுக்கு.

கடவுள் வணிகப்பொருளாகிப் போன காலத்தில், பக்தர்களே வாடிக்கையாளர்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பழைய தமிழ்ப்படங்களில் வரும் கிளப் டான்சர்கள், வில்லன்கள்   கிருத்துவர்களாக, முஸ்லீம்களாகக் காட்டுவது ஏன்?

கிளப் டான்ஸ் என்பது முதலில் இந்திப் படங்களில் வந்தன. பிறகு  தென்னிந்தியப் படங்களிலும் அதை ஈயடிச்சான் காப்பியடிக்க கிளப் டான்சர்களாக ரீட்டா, ஜூலி என பெண்கள் வருவார்கள். ஆனால் ஊர்த் திருவிழாவில் ஆடுபவர்கள் முத்தம்மாவாக முனியம்மாவாக இருப்பார்கள். இது ஒரு திரைப்பட ஸ்டீரியோடைப் அவ்வளவே. இந்திப்படங்களில் இவ்வாறு வரக்காரணம், 1950 - 60களிலும் அதற்கு முன்பும் பம்பாயில் கிளப் டான்சர்களாக  ஆங்கிலோ இந்தியர்கள் அதிகமாக இருந்தார்கள். அவர்களுடைய நிறத்திற்காகவும், நுனிநாக்கு ஆங்கிலத்திற்காகவும், இத்தகைய வாய்ப்புகள் கிடைத்தன. இந்தி சினிமாவிலும் சிலர் பயன்படுத்தப்பட்டார்கள்.

இதே அறுபதுகளில் பம்பாயில் மாபியா கும்பல், கள்ளக்கடத்தல் ஆப்கானிய குடியேறிகளால் நடத்தப்பட்டு வந்தது. இதற்கடுத்த கால கட்டங்களில் மாபியாகளில் கரிம்லாலா, ஆஜிமஸ்தான், வரதராஜன் முக்கியமானவர்களாக இருந்தார்கள். பிறகு தாவுத் இப்ராகீம். இதன் காரணமாக பல இந்திப் படங்களில் கடத்தல் வில்லன்கள் முஸ்லீமாக அல்லது தாராவியைச் சார்ந்த தமிழனாக  இருப்பதுண்டு. தென்னிந்தியன் என்று காட்ட வேண்டுமென்றால் நெற்றியில் விபூதி இருக்கும்.

…டான் படத்தில் வில்லன் ஒரு கிருத்துவன். அதன் ரீமேக்கான பில்லாவிலும் அப்படியே. ஆனால் பெயர் மட்டும் 1978ல் குழந்தை கற்பழிப்பு வழக்கில் பிரபலமாயிருந்த ஜஸ்பீர்சிங் என்கிற பில்லா. HAM படத்தில் வில்லன் கிருத்துவர். அதன் காப்பியான ரஜினி நடித்த பாட்சாவிலும் அதேதான், வில்லன் ஆண்டனியாக ரகுவரன் வருவார். இவற்றிலிருந்து ஒரு முரணான விடயம். "தீவார்" திரைப்படத்தில் வரும் கதாநாயகன் ஆஜிமஸ்தான் (தமிழர்  தான்) என்ற மாபியா தலைவனின் இன்ஸ்பிரேஷன் தான். ஆனால் படத்தில் அமீதாப் ஒரு கடவுள் நம்பிக்கையற்ற இந்து. தமிழில் "தீ" என்ற பெயரில் ரீமேக் ஆன ரஜினி நடித்திருந்தார். திரைப்படங்களைப் பொருத்தவரை முஸ்லீம்கள், கிருத்துவர்கள் மட்டுமல்ல யாரைத் தான் ஒழுங்காக சித்தரித்துள்ளார்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கரிமேடு கருவாயன் படத்தில் கவுண்டமணி - செந்தில் சேர்ந்து கலக்கும் ஒரு டப்பாங்குத்து. இசைஞானியின் இசையில். பாட்டோட துவக்கத்தில் ஒரு சின்ன எடிட்டிங் தவறு. கவுண்டமணி உறுமி இருக்கு என்பார் தமுக்கு காண்பிக்கப்படும். தமுக்கு என்பார், உறுமி காண்பிக்கப்படும்.

Friday, April 12, 2013

பைபோலார் டிஸ்ஆர்டர் (Bipolar Disorder) - சொந்த அனுபவம்

நண்பர்கள் உறவினர்கள் அருகில் இல்லாதபோது  கஷ்டம் என்று வந்தால் நமக்கு நாமே தான் ஆறுதல் சொல்லிக்கொள்ள வேண்டும். அத்தகைய ஒருசூழல் எல்லோருடைய வாழ்விலும் வருவதுண்டு. நானும் என் மனைவியும் காதல் திருமணம் புரிந்து கொண்டவர்கள். தனியாக இருக்க வேண்டிய கட்டாயம். எங்களுக்கு அப்போது பொருளாதாரரீதியாக சில பிரச்சனைகள் வேறு இருந்தன. என் தந்தையும் எங்களுடன் இல்லை.  என்னுடைய மனைவியை அவளுடைய பெற்றோர் சுத்தமாக புறக்கணித்து, பிரசவத்திற்கும் வரவில்லை. அவர்களுடைய வெறுப்புக்குக் காரணம்  ஒன்று எங்கள் காதல் திருமணம், இன்னொன்று நான் ஒரு இந்தியத்தமிழன்.

எங்களுக்குக் குழந்தை பிறந்து இரண்டே மாதமான நிலையில், திடீரென சில நாட்களாக என்னுடைய மனைவியின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள். அவள் வழக்கம் போல் இல்லாமல் அதிக பணச்செலவு செய்து கொண்டிருந்தாள். ஆன்லைனில் பல புத்தகங்கள் வாங்குவது , பெயிண்டிங்  ஆர்டர் செய்வது எனப் பல செலவுகள். என் மனைவிக்கு ப்ரெஞ்ச், ஸ்பானிஷ் கொஞ்சம் தெரியும். ஆனால் நன்றாகத் தெரியும் என்று சொல்லிக் கொண்டு அவளுடைய மச்சாளிடம் ப்ரெஞ்சில் கதைத்துக் கொண்டிருப்பாள். ஒரேசமயத்தில்இரண்டு மொழிகளுக்கும் மேற்படிப்புக்கு  பணம் வேறு கட்டிவிட்டாள்.  இதன்காரணமாக எனக்கும் அவளுக்கும் அடிக்கடி சில வாக்குவாதங்கள் நடந்தன. யாரிடம் அவ்வளவாகப் பேசாதவள், எல்லோருக்கும் போன் போட்டு மணிக்கணக்கில்  மொக்கை போடுவாள். நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை,நிறுத்தவும் இல்லை. அவளுடைய அடுத்த மாற்றங்கள் தொடர்ந்தன. இரவு தூங்குவதில்லை, அதிகமான சிந்தனை, படபட எனப் பேச்சு. நான் எதாவது கூறினால், 'என்னைக் கட்டுப்படுத்தாதே, நான் இப்போது தான் முழுசுதந்திரம் பெற்றதாக உணருகிறேன்' எனக் கூறுவாள்.

ஒருநாள் வேலையிலிருந்து வீட்டிற்கு வருகிறேன், வீட்டில் பல புதிய ரோஜாச்செடிகள். எதற்காக இவ்வளவு எனக் கேட்டேன். பிடித்திருந்தது, வளர்க்கப் போகிறேன் என்றாள். ஒரு வாரம் கழித்துப் பார்க்கிறேன், தண்ணீர் விடாமல் அவ்வளவு ரோஜாச்செடிகளும்  வாடிக் கிடந்தன. சில சமயம் தானே சமைக்கப் போவதாகக் கூறுவாள், ஆனால் சமைக்கமாட்டாள். சமையல்கட்டுக்கும், வரவேற்பறைக்கும் நடையாய் நடந்து கொண்டிருப்பாள். நான் சமைக்கிறேன் என்றாலும் விடமாட்டாள். அவளின் செயல்களில் மாற்றங்கள் இருப்பதாகச் சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டாள். எனக்குத்தான் பிரச்சனை என்பாள். ஒரு கட்டத்தில் அவள் மீதான வெறுப்பு எனக்குள் கூடிக்கொண்டே போனது. இனி இவளுடன் வாழ இயலாது என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். இப்படியே சில நாட்கள் கழிந்தன.

ஒருமுறை சிகிச்சைக்காக எங்களின் குடும்ப மருத்துவரிடம் சென்றாள். மருத்துவரிடம் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இத்தனை நாட்கள் என்ன நடந்தது என விசாரித்தார். நான் எல்லாவற்றையும் கூறினேன். என்னுடைய மனைவியை மனநல மருத்துவமனைக்கு அனுப்பப் போவதாகவும், குழந்தையை நான் தனியாக கவனிக்க இயலுமா? எனவும் கேட்டார். நான் இயலும் என்றேன். அன்று மாலை நானும் குழந்தையும் மருத்துவர் குறிப்பிட்ட மருத்துவமனைக்குச் சென்றோம். என் மனைவியைச் சந்தித்தேன். குடும்பமருத்துவரை சிறிதுநேரம் திட்டினாள். தன்னை மருத்துவர் தவறாகப் புரிந்துகொண்டு இங்கே அனுப்பிவிட்டதாக கூறினாள். சிறிது நேரம் கழித்து, மருத்துவமனையின் மருத்துவர் என்னை அழைத்துப் பேசினார். நான் என் மனைவியின் செயல்பாடுகளில் மாற்றங்கள் இருப்பதாகக் கூறினேன். நான் வருவதற்கு முன் இதே மருத்துவர் அவளையும் விசாரித்திருக்கிறார். அவளும் என்னுடைய செயலில் மாற்றங்கள் இருப்பதாகக் கூற, மருத்துவருக்கு ஒரே குழப்பம். குடும்ப மருத்துவருக்கு தொலைபேசினார். பிறகே அவர் குழப்பம் தீர்ந்தது. என் மனைவி "குழந்தை எப்படி இருக்கிறது, என்ன சாப்பிட்டாள்" என ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. "எனக்கு இங்கு சாப்பாடு பிடிக்கவில்லை, நாளை வரும்போது சமைத்துக்கொண்டுவா" என்றாள். மறுநாள் அவளுக்காக சமைத்துக்கொண்டு போனேன், ஆனால் அவளோ கரண்ட் பில் கட்டிவிட்டாயா, வாடகை கட்டிவிட்டாயா என வழக்கம்போல திட்டத்தொடங்கிவிட்டாள். கிளம்பும்போது, அவளுடைய தோடுகள், மேக்கப் பொருட்களைக் கொண்டுவருமாறு சொன்னாள். புதிதாகச் சேர்ந்த வேலைக்குப் போகமுடியவில்லை, வேலை போய்விடுமோ என்ற பயம் ஒரு பக்கம். மனைவியின் நிலை என்ன ஆகும் என்பது ஒரு பக்கம். இரண்டு மாதக் குழந்தையை ஒரு பக்கம். என் வாழ்க்கையில் இப்படி ஒரு வேதனையை நான் அனுபவித்ததே இல்லை எனலாம்.


அறையைவிட்டு வெளியேறும்போது தலைமைமருத்துவர் என்னை சந்திக்க வேண்டுமென்றார். போய் சந்தித்தேன். நடந்தவற்றை விசாரித்தார். என்னுடைய மனைவிக்கு வந்திருப்பது பைபோலார் டிஸ்ஆர்டர் என்றார். அவர் சொன்னதாவது: மனிதனுக்கு ஏற்படும் Mood ஒரு அலை போல, சில சமயம் மகிழ்ச்சி சில சமயம் கவலை என்று வரும். ஆனால் அது ஒரு கட்டுக்குள்ளே இருக்கும். பைபோலார் டிஸ்ஆர்டர் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியும் கவலையும் உச்சமாக இருக்கும். மகிழ்ச்சியின் உச்சத்தில் அபரிமீதமான எனர்ஜி (Mania) வெளிப்படும். மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்ததும் அடுத்து அதள பாதாளமாக கவலை (Major depression) வந்துவிடும். அக்கட்டத்தில் ஒருவர் தற்கொலை கூட செய்துகொள்வார்கள். சரியான சமயத்தில் சிகிச்சை அளித்தால், பைபோலார் டிஸ் ஆர்டர் போன்ற மனசிக்கல்களை மருந்தின் மூலம் குணப்படுத்த முடியும். 

என் மனைவி சரியான சமயத்தில் சிகிச்சைப் பெற்றதால், அடுத்தகட்ட பாதாள கவலை Phase-க்குப் போகவில்லை.  சுமார் மூன்று வார சிகிச்சைக்குப் பின்னர், என் மனைவி குணமடைந்துவிட்டாள். தற்போது என்னுடைய மனைவி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறாள். 

நான் மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் எச்சரிக்கையாய் இருப்பது நன்று. வந்தபின் நொந்து கொள்வதைவிட, வருமுன் காப்பது நலம். உங்கள் உற்றார் உறவினர் இதுபோன்ற எதாவது மனச்சிக்கல்கள் இருந்தால், உரிய சிகிச்சை எடுக்க உதவுங்கள். ஏனென்றால் இதுபோன்ற தனிநபரின் செயல்பாடுகளை நெருங்கியவர்களால் மட்டுமே உணர முடியும். எனக்கு நேர்ந்ததைப் போல உங்களுக்கும் நேராமல் பார்த்துக்கொள்வீராக. கொஞ்ச நாட்கள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, புட்டிப்பாலுடன் திரிய வேண்டிவந்தது. ஆனால் எப்படியோ யார் உதவியும் இல்லாமல் தனியாளாக சமாளித்துவிட்டேன்.


பதினாறு வயசு வந்த மயிலே

சில்க் ஸ்மிதாவை பிடிக்காத தமிழ் திரைப்பட ரசிகர்களே இருக்க முடியாது. அப்படி ஒரு அழகியல் எளிமை. ஆடி ரசிகர்களை மகிழ்வித்தாலும், சினிமாவுலகில் அனாதையாக விடப்பட்டு கஷ்டத்தை மட்டுமே அனுபவித்த ஜீவன். அவரைப் போற்றிப் புகழ்ந்து திருவாளர் கங்கையமரன் தன்னுடைய  "செண்பகமே!செண்பகமே! படத்தில் இசைஞானியின் இசையில் ஒரு பாட்டு வைத்திருக்கிறார். இப்பாடல் ராமராஜன், செந்தில், எஸ்.எஸ். சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி என சும்மா களைகட்டும். சரக்குடன் ப்ரேக் டான்ஸ் வேறு.
 #பதினாறு வயசு வந்த மயிலே மயிலே எங்களை பாடபடுத்தடி மயிலே மயிலே
……#அடக்கி வச்சா சொன்னபடிதான் கேக்க மறுக்குது; அதுக்கு மட்டும் நாளுகிழமை பாக்க மறுக்குது.
…எல்லாம் கங்கையமரனின் வரிகள்.

…சரி பின்னாடி யார் ஆடுவது என்று பார்த்தால், சட்டான்பிள்ளை வெங்கட்ராமனும் (தாடி வைத்திருப்பவர்)  பக்கிரிசாமியும் (சிவப்பு சட்டை,இடுப்பில் துண்டு அணிந்திருப்பவர்). இவர்கள் இருவரும் பழைய தமிழ்த் திரைப்பட மற்றும் நாடக நடிகர்கள். கங்கையமரன் இயக்கிய சில படங்களிலும் நடித்துள்ளார்கள். 60களின் நகைச்சுவை நடிகர்கள். அதிர்ஷ்டம் இருந்திருந்தால் பலரும் நினைவுகூறக்கூடிய அளவிற்கு சிறந்த நடிகர்களாக வந்திருப்பார்கள். இவர்களில் சட்டான்பிள்ளை வெங்கட்ராமன் தூக்குத்தூக்கி படத்தில் சிவாஜிகணேசனுடன் நடித்திருக்கிறார். இப்படத்தில் தான் இவருடன் சட்டான்பிள்ளை என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டது. (குருகுலம், திண்ணைப்பள்ளி இருந்த காலங்களில் வகுப்பின் தலைமைமாணவனாக விளங்குபவரை சட்டான்பிள்ளை என்பார்கள். அதாவது Class leader.) "குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்" பாடலில் சிவாஜிகணேசனுடன் நடிப்பது இவர்தான். சட்டான்பிள்ளை வெங்கட்ராமனும் பக்கிரிசாமியும் இணைந்து நடித்த இன்னொரு பிரபலமான படம் "அடுத்தவீட்டுப் பெண்". இப்படத்தில் டி.ஆர்.ராமசந்திரனுடைய தோழர்களில் ஒருவராக வருவார். பக்கிரிசாமி அங்சலிதேவியின் பாடுவாத்தியார்."கண்களும் கவிபாடுதே" பாடலில் அருமோனியத்துடன் அட்டகாசம் செய்வார். இவருக்கு திருச்சி லோகநாதன் பின்னணி பாடியிருப்பார். டி.ஆர்.ராமசந்திரனுக்கு சீர்காழி கோவிந்தராஜன். இதுபோன்ற ஒரு நுட்பமான போட்டிப்பாடல் மிகவும் அரிது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Thursday, April 11, 2013

எம்.ஆர்.ராதா அல்லது Bad cheque

என் தந்தையின் நண்பர் ஒருவர், எங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல இருந்தவர். சொந்தம் இல்லாவிடினும் நானும் என் அண்ணனும் அவரை "விசு மாமா" என்று தான் அழைப்போம். என் தந்தையும் அவரும் சேர்ந்து ஒரு தொழில் தொடங்கினார்கள். என் தந்தை முழுபொறுப்பையும் நண்பரிடமே ஒப்படைத்து இருந்தார். சந்தர்பத்தைப் பயன்படுத்தி நண்பரும் அவருடைய மைத்துனரும் சேர்ந்து பல ஆயிரங்கள் மோசடி செய்துவிட்டனர். தான் சுயமாக தொழில் செய்வதாகக் காட்டி பல இடங்களில் கடன் வேறு வாங்கிவைத்திருந்ததால், மேலும் சிக்கல். தொழில் சம்பந்தமான பொருட்களை விற்கவும் முடியவில்லை. இது நடந்தது 20 வருடங்களுக்கு முன், இப்போது அப்பணத்தின் மதிப்பு லட்சங்களில் இருக்கும். தொழில் முழுதும் கடனில் மூழ்கிவிட்டது. என் தந்தையும் பழகியதோஷத்திற்காக பலமுறை சாந்தமாகக் கேட்டுப்பார்த்தார். சரியான பதில் வரவில்லை. ஒருமுறை பொறுமையிழந்து தெருவில் சண்டை போடும் அளவிற்கு வந்துவிட்டது. பிறகு அந்த நண்பர், ஒருசில கடனுக்காக மட்டும் 20000 ரூபாய்க்கான ஒரு காசோலை கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.  அந்தக் காசோலை பணமில்லாமல் வங்கியில் இருந்து திரும்பி வந்துவிட்டது. திரும்ப அந்த நண்பரைத் தொடர்புகொண்டு காசோலை திரும்பியதைப் பற்றிக் கேட்டால், "பாகப்பிரிவினை எம்.ஆர்.ராதா" போல பதில் சொல்லி இருக்கிறார். என் தந்தை பணமில்லாத காசோலைக் கொடுத்து ஏமாற்றியதாக அவர் வழக்கு தொடுத்தார். நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது போடப்பட்ட வழக்கு, கீழ் கோர்ட் மேல் கோர்ட் எனத் தாவி, நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தவரை நடந்தது. நம் நாட்டின் நீதிமன்றத்தின் லட்சணம் அப்படி? அப்போதும் வழக்கு முடிவுராமல், அந்த நண்பரே வெறுத்துப்போய், 25000 ரூபாய் பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு கொடுத்துவிட்டார்.


சமீபத்தில் வெளியூருக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக செல்ல வேண்டிவந்தது. போகும் வழியில், சாப்பாட்டிற்காக வேன் நிறுத்தப்பட்டது. அனைவரும் சென்று சாப்பிடப் போனோம். வண்டி ஓட்டுனரையும் சாப்பிட அழைக்குமாறு சிலர் சொல்ல, நான் அழைக்கச் சென்றேன். சென்று பார்த்தால், ஓட்டுனர் வேறுயாருமில்லை "விசு மாமா". எனக்கு அவருடன் கதைக்கப் பிடிக்கவில்லை. வேறொருவரை அனுப்பிவிட்டு வந்துவிட்டேன். பிறகு அன்று மாலை, வீட்டிற்கு தொலைபேசும்போது, அப்பாவிடம் நடந்ததைக் கூறினேன். என் தந்தை "டேய்! பாவம்டா அவன். அவனை அவனோட மச்சான் ஏமாத்திடானாம். வீட்டைக் கூட வித்துட்டான். குடும்பப் பிரச்சனை. தனியாகத்தான் இருக்கான். நீ பார்த்து ஏதாவது பணம் கொடுத்துட்டு வா!" என்றார். என்னதான் இருந்தாலும், எனக்கு விசு மாமாவை சந்திக்க விருப்பமில்லை. நான் வேறொருவரிடம் பணம் கொடுத்து கொடுக்கச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஒரு பக்கம் என்னுடைய தந்தை அவருடைய நட்புக்குக் கொடுக்கும் மரியாதையை எண்ணி ஆச்சரியமாகவும் இருக்கும், அதேசமயம் அவருடைய எளிதில் ஏமாறும் அப்பாவித்தனத்தை எண்ணி வெறுப்பாகவும் இருக்கும்.

Cheating is a choice, not a mistake. 

தற்சமயம்   என்னுடைய தந்தை பணிஓய்வு பெற்றுவீட்டில் இருக்கிறார். சில சமயம் வேலை ஏதும் இல்லாமல் சலிப்பாக இருப்பதாக சொல்வார், "வேணும்னா நீயும் நானும் ஒரு தொழில் தொடங்குவோம், இந்த முறை நீ என்னை ஏமாத்து" என்பேன். "அறிவுகெட்டவனே" என வழக்கம்போல செல்லமாக அடிப்பார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இளையராஜாவின் நகைச்சுவை இசைக்கோர்வை

80,90 களில் இளையராஜா இசையமைத்த திரைப்படங்களில் பின்னணி இசை இன்றும் பலர் மனதில் நீங்காத இடத்தைப் பிடிப்பவை. அவற்றில் சில இசைக்கோர்வைகளைக் கேட்டால், படத்தின் காட்சிகள் நம் கண் முன்னே தோன்றும். அப்படி ஒரு ஈடுபாட்டுடன் நாம் அக்காட்சிகளை ரசித்திருப்போம். என்னைக் கவர்ந்த சில நகைச்சுவைக் காட்சிகளுக்கான பின்னணி இசை உங்களுக்காக.

Wednesday, April 10, 2013

சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ

அமைதிப்படை
அமைதிப்படை இரண்டாம் பாகம் வெளிவரப்போகிறதாம். ஆனால் அதன் ட்ரெய்லர் பார்த்தால், படம் சுமாராகவே இருக்கும் எனத் தோன்றுகிறது. சில வசனங்கள் மஞ்சதுண்டை நேரடியாகத் தாக்குவது போலவே இருந்தன. …பாடல் வெளியீட்டுவிழாவில், மணிவண்ணன் பேசியது சுவாரசியம்.

…முதல் வந்த அமைதிப்படை படத்தில் அரசியல் நையாண்டி வசனங்களுக்காக பெரிதும் பேசப்பட்டது. நித்யாநந்தா புகழ் ரஞ்சிதா நல்லா அழகாக இருப்பாங்க. வயதான வில்லன் வேடத்தில் சத்யராஜ் அருமையாக நடித்திருப்பார். ஆனால் மற்றொரு இளைய சத்யராஜ் வேடத்தில் ஓவர் ஆக்டிங்.

…எனக்குப் பிடித்த சில வசனங்கள்:
…# தேங்கா பொறுக்கிறது தப்புன்னா, சாமிக்கு தேங்காய் உடைக்கிறதும் தப்புதாங்க.
…# 6வது ரவுண்டுலயும் போதை ஏறாட்டி அப்புறம் எதுக்கு அந்த கருமத்தை குடிக்கோணும்.
…#போனை கண்டுபுடிச்சது கிராகம்பெல்ங்குற விஞ்ஞானியா இருக்கலாம்.  ஆனா அதுல ஒத்து கேக்குரத கண்டுபிடிச்சி இந்தியாவுக்கு சொல்லிக் கொடுத்தது நான் தான்.
#சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ 

இளையராஜாவின் இசையில் ஒரு நல்ல பாடல் "சொல்லிவிடு வெள்ளி நிலவே". ஆனால் இப்பாடல் படத்தில் வரவில்லை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிக்கோரி
முன்பெல்லாம் டீக்கடையில் காப்பி எனச் சொல்லி ஏமாற்றி சிக்கோரி (Chicory) காப்பி போடுவாங்க. காப்பி போன்று இருந்தாலும் சிக்கோரி காப்பியில் காப்பியின் சுவை வருவதில்லை. ப்ரூ விளம்பரத்தில் கூட சிக்கோரி  கலக்காத கலவை என வரும். இப்பவெல்லாம் காபின்ப்ரீ காப்பி என சிக்கோரி காப்பியைத் தான் விற்கிறார்கள். இந்த சிக்கோரி ஒரு வகைக் கிழங்கிலிருந்து எடுக்கப்படுகிறது. இதற்கு மேல் வரும் இளசான செடியை அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சலாடாக சாப்பிடிகிறார்கள். இதே வகைச் செடியின் முதிர்ந்த இலைகள் தமிழில் காசினிக்கீரை எனப்படுகிறது. காசினிக்கீரை போண்டா கேள்விப்பட்டிருப்பீர்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஜோதிஜியின் தேவியர் இல்லம் பதிவில் இட்ட பின்னூட்டம். 
//சிங்களர்கள் மரபணு ரீதியாக மட்டுமல்ல. எல்லாவகையிலும் அவர்கள் தமிழர்கள் தான் என்று வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் இடையிடையே கலப்புகள் அதிகரித்து கண்றாவியாக பல நிகழ்வுகள் நடந்தேறி மனதளவில் பிறழ்வுகளாக மாறிப் போனார்களோ என்று நினைத்துக் கொள்வுதுண்டு.//

சிங்களவர்களும் தமிழர்கள் தான் என்பதை சிங்களவர்கள் ஒத்துக்கொள்வது இருக்கட்டும். முதலில் இதை ஈழத்தமிழர்கள் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். யாழ்ப்பாணத்தமிழர்கள் தான் அக்மார்க் தமிழர்கள் என மார்தட்டிக்கொள்பவர்கள்.
எனக்கு ஒன்று தெரிலிங்க! தமிழன் என்றால் யார்? நன்றாகத் தமிழ் தெரிந்தால் தான் தமிழனா? வேற்றுமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பலர் தமிழகத்தில் வாழ்வதில்லையா? அவர்கள் தமிழர்கள் இல்லையா?

Arab என்பவர் யார் என்பதற்கு
The Arab League, a regional organization of countries intended to encompass the Arab world, defines an Arab as: An Arab is a person whose language is Arabic, who lives in an Arabic-speaking country, and who is in sympathy with the aspirations of the Arabic-speaking peoples.

இதே பொருள் தமிழருக்கும் பொருந்தும். தமிழ் பேசும், தமிழ்மண்ணில் வசிக்கும், தமிழ் மொழியையும் தமிழ் மக்களையும் நேசிக்கும் அனைவருமே தமிழர்கள் தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நான் தொடக்கப்பள்ளி படிக்கும் காலங்களில் என்ன்னுடைய வகுப்பில் பாதிக்குப்பாதி முஸ்லீம் சிறுவர்கள் படித்தார்கள். இன்ஸ்க்பெக்ஷன் நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் கைலி/லுங்கி கட்டிக்கொண்டுதான் வருவார்கள். வெள்ளிக்கிழமை வந்தால் போதும். காலைவேளை வகுப்பு எண்ணிக்கை பாதியாக குறைந்துவிடும். மதியம் நமாஸ் முடிச்சிட்டு சாப்பிட்டுவிட்டு இரண்டுமணிக்கு மேல தான் வகுப்புக்கு வருவார்கள். கண்ணுக்கு மை, சென்ட், ரோஸ்பவுடர், முகத்துக்கு மினுமினுப்பு போட்டுக்கொண்டு வருவார்கள். நாங்களும்  சென்ட், மினுமினுப்பு வாங்கி போட்டுக்கொள்வோம். சிலருடைய  பெற்றோர்கள் வளைகுடாவில்  வேலை பார்த்துவந்தார்கள். சிலருடைய பெற்றோர்கள் பஜாரில் காய்கறிக்கடை வைத்திருந்தார்கள். சிலருடைய பெற்றோர்கள் லுங்கி ஏற்றுமதி செய்து வந்தார்கள். இப்போதும்  என்னுடைய பல முஸ்லீம் நண்பர்கள் எங்கள் ஊரில் கடை வைத்திருக்கிறார்கள். நான் அவர்களுடைய கடைகளுக்குப் போகாமல் தவிர்க்கக் காரணம், வாங்கிய பொருளுக்கு எவ்வளவு வற்புறுத்தினாலும் பணம் வாங்கமாட்டார்கள். 
பிறகு மேல்நிலைப்பள்ளி வந்ததும், இம்ரான் என்றொரு நண்பன். திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் உருது அல்லது அரபியை மொழிப்பாடமாக எடுத்துப் படிக்கும் முஸ்லீம் மாணவர்கள் உண்டு. இவனும் அப்படியே. தமிழை சரளமாகப் பேசமாட்டான். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நன்றாக ஊர் சுற்றுவோம். "காலெல்லாம் நோவுவுது...ரா" என்பான். தசாவதாரம் படத்தில் நாகேஷ் ஒரு இடத்தில் இதே வசனம் சொல்லுவார் "காலெல்லாம் நோவுது...பா".  …

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இந்த வாரம் ஈவில் டெட் (Evil Dead) படம் அமெரிக்காவில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போதைய ரசனைக்கேற்றவாறு கோரமான காட்சிகள் அதிகமாக இடம் பெற்றுள்ளன. கிராபிக்ஸ் அதிகமாக பயன்படுத்தப்படவில்லை.  ட்ரெலர் பார்த்தேன், பரவாயில்லை எனத் தோன்றியது. பழைய படத்தின் நாயகனான ப்ரூஸ் கேம்ப்பெல், இயக்குனர் சாம் ரைமி இருவரும் தயாரிப்பாளர்கள்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Saturday, March 30, 2013

பரதேசி மற்றும் ஒரு காதல் கதை


பரதேசி 

…சமீபத்தில் பரதேசி படம் பார்த்தேன். வேதிகாவின் நடிப்பு   எரிச்சலோ எரிச்சல். க்ளைமேக்ஸ் காட்சியில் நடிக்கும்போது  முதல் மரியாதை ராதாவை ஞாபகப்படுத்துகிறார். தன்ஷிகாவின் நடிப்பு மிகவும் முதிர்ச்சியானதாக இருந்தது. பிரமாதம். அதர்வா செயற்கையாக நடித்திருந்தார். அவர் பல இடங்களில் அழும்போது ஏனோ ஈர்ப்பை ஏற்படுத்தவே இல்லை. பொதுவாக ஒரு அப்பாவி கதாபாத்திரம் தனக்கு நேரும் கொடுமையை எதிர்க்க துணிவில்லாமல், கஷ்டப்படும்போது நமக்கு ஒரு பச்சாதாபம் உண்டாகும். அது இங்கே மிஸ்சிங். ஜீவி. பிரகாஷுக்கு வைத்த  பரிக்ஷையில் வெள்ளைப் பேப்பரை கொடுத்துவிட்டு ஓடிவிட்டார். பாவம் அவர் என்ன செய்வார். பின்னணி இசை கொடுமை. பாலா + இளையராஜா ஒரு நல்ல காம்பினேஷன். "நான் கடவுள்" படத்தில் மிகவும் பிரமாதமான பின்னணி இசையைக் கொடுத்திருப்பார் ராஜா. பாலா ஏன் இப்படி? ஒருவேளை சொந்தப்படம் என்பதால் இவ்வாறு செய்தாரோ?  படத்தில் வறுமை, சாதிக்கொடுமை பற்றி வெளிப்படையாக குறிப்பிடாமல் விட்டது பாலாவின் சுதந்திரம் அதுபற்றி சொல்ல ஒன்றும் இல்லை. நாம எதுக்கு இந்தப் படத்தை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளவேண்டும். மற்றபடி ஒரு வித்யாசமான முயற்சி அவ்வளவே. அதற்காக பாராட்டலாம்.

…சுதந்திரம் வருவதற்கு முதல் மக்களை தேநீர் அருந்த பழக்கப்படுத்த ஆங்கில அரசாங்கம் எல்லோருடைய வீட்டிற்கும் இலவசமாக விநியோகித்தது.  வயசான ஒரு தாத்தா ஒருத்தர் சொன்னது "வெள்ளைகாரன் காசு வாங்கமல் டீயை சும்மா கொடுத்தான். சுதந்திரம் வாங்கி நம் ஆளுங்க டீயை காசுக்கு விக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னா விலை விக்குது!". என்னமா திங்க் பண்ணுராரு பாருங்க.

தொலைக்காட்சியில் பரதேசி பேட்டி
…அதர்வா: பாலா என்ன கெட்டப் கொடுப்பார்னு எனக்கு ஒரே எக்ஸைட்டிங்க இருந்தது.
…தொகுப்பாளர்: நீங்க எப்படி அந்த இன்ஸ்ட்ருமென்டை ……(டே! அது தமுக்குடா!)  கத்துகிட்டு அடிச்சிங்க?

 நான் என்றாவது முடியை ஒட்ட வெட்டி வந்தால், "என்னடா! காரவடை முடிவெட்டு வெட்டிகிட்டு வந்திருக்க" என எங்க பாட்டி சொல்லும். பரதேசி படத்தில் வரும் முடிவெட்டைத் தான் அப்படி சொல்வதுண்டு.

மதபோதனை செய்யும் மருத்துவர் வரும் பகுதி ஏதோ இடைசெறுகல் போல உள்ளது. கதையோட்டதைத் தடுக்கிறது. ஆனாலும் அந்தப் குத்துப்பாட்டு (தன்னைத் தானே...). கேட்க நன்றாக இருக்கிறது. எங்க ஊரு பக்கத்தில் ஒரு தோல் மருத்துவனை இருக்கிறது. அது கிருத்துவ மிஷனரியால் நிறுவகிக்கப்படுகிறது. என்னுடைய தமையனுக்கு சிறுவயதில் வைட்டமின் குறைவால் முகத்தில்  தேமல் இருக்கும். என்னுடைய பாட்டி அந்த மருத்துவமனைக்கு அவனைக் கூட்டிச் சென்றார்கள். நானும் உடன் செல்வதுண்டு. ஒவ்வொரு முறையும் சிறு சிறு வேதபுத்தகங்கள், நற்செய்தி வாசகங்கள் கொடுப்பார். பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளச் சொல்வார்கள். எனக்கு என் தமையனுக்கு இதில் சுத்தமாக ஈடுபாடு இருப்பதில்லை. அவர்கள் சொல்வதும் விளங்காது. மணிக்கணக்கில் வேறு உட்காரவைத்து விடுவார்கள். பிறகு ஒரு வழியாக  மருந்து சாப்பிட்டு தேமல் சரியாகிவிட்டது. ஆனாலும் வீட்டிற்கு வந்து புத்தகம் கொடுப்பார்கள். மேலும் வரச்சொல்வார்கள். மருத்துவமனை ஆட்கள் வந்தாலே போதும், நானும் தமையனும் புறகடை வழியாக அடுத்த தெருவிற்கு ஓடிவிடுவோம்.


*********************************************************************************

ஒரு காதல் கதை
கதையோட கதாநாயகன் அந்தண சாதியில் பிறந்தவன். சகோதரர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டு வீட்டைவிட்டு கோபித்துக் கொண்டு வேறொரு இடத்திற்குச் சென்று வேலை பார்க்கிறான். சகோதரர்கள் எப்படியோ அவனை சமாதானப்படுத்தி ஊருக்கு அழைத்துப் போகிறார்கள். போகும்வழியில் இளைப்பாற ஒரு இடத்தில் தங்குகிறார்கள். அங்கு ஒரு பாடல் கேட்கிறது. பாடல் கேட்கும் திசை நோக்கி கதாநாயகன் போகிறான். அங்கு இரண்டு சகோதரிகள். அவர்களுடைய குரலின் இனிமையில் மயங்கி, அவர்களுடன் பேச முயற்சிக்கிறான். அவர்கள் பயந்து ஓடுகிறார்கள். இவனும் துரத்திச் செல்கிறான். ஓடிச்சென்ற பெண்கள், தங்களை ஆண் ஒருவன் துரத்துவதாக தந்தையிடம் முறையிடுகிறார்கள். பெண்களுடைய தங்தை தகாதமுறை நடக்க நினைத்தவனை தண்டிக்க கத்தியுடன் வருகிறார். வரும்வழியில் கதாநாயகனைப் பார்க்கிறார். கதாநாயகன் தான் அப்பெண்களை நேசிப்பதாகவும், திருமணம் புரிய விரும்புவதாகவும் கூறுகிறான். அதற்கு பெண்களின் தந்தை தாங்கள் சக்கிலிய சாதியர் எனவும், இந்தத் திருமணம் பொருந்தி வராது எனக் கூறுகிறார். ஆனால் கதாநாயகன் திருமணம் செய்ய தீர்மானமாக இருக்கிறான்.  தவிர்ப்பதற்காகவோ, சந்தேகப்பட்டோ ஆனால் பெரியவரோ பெண்களை மணப்பதானால் சில கோரிக்கைகளை விடுக்கிறார். உன்னுடைய சாதிய அடையாளங்களான பூணூல், குடுமியைக்  களைந்துவிட்டு, தோல் செருப்பு அணிந்து கொள்ள வேண்டும்.  எங்கள்வீட்டில் மாடுமேய்த்து, தோல் பதனிடுதல், செருப்பு தைத்தல் போன்ற வேலைகளை செய்ய வேண்டும் என்கிறார். அவ்வாறு செய்தால் என் மகள்களை திருமணம் முடித்துவைப்பதாக கூறுகிறார். இவற்றிற்கு ஒப்புக்கொண்ட கதாநாயகன் வீட்டிற்குச் செல்கிறான்.  பெற்றோர், சகோதரர்களின் சம்மதம் கேட்கிறான். கிடைக்கவில்லை. குடுமி, பூணூலைக் களைந்துவிட்டு சக்கிலிய தொழிலை ஏற்கிறான். சகோதிரிகளை மணக்கிறான். திருமணம் முடிந்த கொஞ்ச வருடங்களில் மாமனார் இறந்துவிட, இவனே அனைத்து பொறுப்புகளையும் பார்த்துக் கொள்கிறான். ஒருநாள் மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகளை திருடர்கள் கவர்ந்து சென்றுவிடுகிறார்கள். திருட்டுப்போன சேதி கேட்டவுடன் வேல்கம்பும் வாளுடனும் கிளம்புகிறான் கதாநாயகன். திருடர்களுடன் சண்டை செய்து எல்லாரையும் வீழ்த்தி விரட்டுகிறான். திரும்பும்வேளையில் பின்னிருந்து ஒருவன் கத்தியால் குத்தி கதாநாயகனைக் கொன்றுவிடுகிறான். நடந்தது தெரிந்து மனைவியர்கள் இருவரும் ஓடோடி வருகிறார்கள். துயரம் தாளாமல் இருவரும் கணவனுடன் தீப்பாய்ந்து உயிர்விடுகிறார்கள். இது திருநெல்வேலிசீமையில் வணங்கப்படும் முத்துபட்டன் (பட்டவராயன்) கதை. மனைவியர்கள் - பொம்மக்கா, திம்மக்கா. மாமனார் - வாலபகடை.  இந்தக்கதை கதைப்பாடலாக இன்றும் தென்மாவட்டங்களில்  சொல்லப்பட்டு வருகிறது.

நம்ம மகாஜனங்கள் இந்தக் கதையையும் விட்டுவைக்கவில்லை. மதுரைவீரன் கதையில் மதுரைவீரன் காசிராஜனின் மகன் சக்கிலியரின் மகன் அல்ல என்று இடைசெறுகியது போல, பொம்மக்கா திம்மக்காவிற்கும் முற்பிறவி வைதீக சாயம் பூசி இருக்கிறார்கள். (எதோ "சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்" படத்தைப் போன்றதொரு லவ் சப்ஜக்ட். என்ன கிளைமேக்ஸ் தான் சோகம். ட்ராஜிடி.)

 பட்டவராயர் பொம்மக்கா திம்மக்காவுடன் ... சண்டையின் போது உடன் சென்ற பூச்சி காச்சி நாய்கள். 

***********************************************************************************

கானா பழனியின் பாட்டு (தாத்தா கொஞ்சம் பொடி கொடு)