Monday, December 21, 2009

பாட்டி வடை சுட்ட கதையும் நம்ம பிரபலங்களும்வெண்ணிறாடை மூர்த்தி:
கலக்கலான ஒரு ஊருல கட்டுமஸ்தா ஒரு ஆயா இருந்துசான். ஒருநாள் அந்த ஆயா கலர்கலரா வடை சுட்டுகிட்டு இருந்தப்போ! கபால்னு வந்த ஒரு காக்கா ஆயா வடைய கவ்விகிட்டு போயிடுச்சாம். ஆயாகிட்ட இருந்து வடைய லபக்குனு லவட்டிகிட்டு வந்த காக்கா, மரத்துமேல குந்திகிச்சான்.அந்தப் பக்கம் பப்ரபேனு வந்த காட்டுநரிக்கு காக்கா வச்சிட்டு இருந்த வடைய பார்த்து குஜாலாயிடுச்சி. „ப்ப்ப்ப்ருரு! காக்கா! குதுகலமா இருக்கிர நீ! இப்படி குந்தவச்சி உட்காரலாமா! குத்துமதிப்பா ஒரு பாட்டு பாடு“ னு சொல்லுச்சாம். கபாலத்துல கட்டெரும்பு புகுந்த மாதிரி வெட்கத்துல வெடவெடத்துப் போன காக்கா மடமடனு பாட்டு பாட, லொடக்குனு விழுந்த வடைய மடக்கு நரி எடுத்துகிட்டு ஓடிபோச்சாம். காக்கா சொல்லுச்சாம் „ வடை போச்சே!“.

மேஜர் சுந்தராஜன்:
For the past 10 years கிட்டதட்ட பதினஞ்சி வருஷமா இந்த கதைய யாருகிட்டயாவது சொல்லனும்னு நெனச்சிட்டு இருந்தேன். Today I got it. இன்னைக்குத் தான் அந்த சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. Sorry! நீங்க கேட்டுதான் ஆகணும். ஒரு விலேஜ்ல a old lady ஒரு வயசான பாட்டி (பாட்டின்னாவே வயசானவங்க தான்ய்யா!) இருந்தாங்களாம். அவங்க வடை சுட்டு பிஸ்னஸ் பண்ணிகிட்டு இருந்தாங்க. அந்தப் பக்கம் வந்த Crow  ஒரு காக்கா வடைய திருடுகிட்டு போயிடுச்சு. வடைய கொண்டு போன காக்கா ஒரு மரத்துல உட்காந்துச்சு. அந்தப் பக்கம் வந்த Jackle அதாவது நரி “ you damit! படவா ராஸ்கல்! நீ எப்படா திருடன் ஆனே!”னு கேட்டது. அதுக்கு அந்த காக்கா “எசமான்! என்ன மன்னிச்சிடுங்க எசமான்! இனிமே இந்த வடை மேல சத்தியமா திருடமாட்டேன்” னு சொல்லி கதறியழுச்சு. Then they became very good friends. yes. நல்ல நண்பர்களாகிட்டாங்க.

உலகமகாநாயகன் கமலஹாசன்:
சரித்திரக் கதைகேட்டு சலித்துப் போன உங்களுக்கு சாகாவரம் பெற்ற கதை ஒன்று சொல்லப் போகிறேன். இது கலைஞர் சொல்லிக் கொடுத்த வேதம். நடிகர் திலகத்தின் மடியில் அமர்ந்து கற்ற பாடம். மக்களும், மாக்களும் பரிணாம வளர்ச்சியின் பாதையில் நீர் அருந்திக் கொண்டிருந்த போது, தென்னிந்திய பகுதியில் ஒரு தமிழ் கிழத்தி வடை சுட்டு விற்றுக் கொண்டு வந்தாள். கண்மையின் கருமை கொண்ட காகம் ஒன்று, ஒரு வடையை அபகரித்துச் சென்றது. அபகரிப்பு அதிகரிக்கும் பூமியில் புரட்சி பிறந்தே தீரும். புரட்சியின் வடிவில் புத்திசாலி நரியொன்று, காகத்தினிடம் கடவுள் வாழ்த்து பாடச் சொன்னது. வாழ்த்துப் பாடிய காகம் இழந்தது வடை மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கையையும் தான்.

கலைஞர் கருணாநிதி:
ஈழத்தின் துயரை நெஞ்சில் சுமந்தபடி ரஷ்யாவின் “தாய்காவியம்” போல ஒரு “ஆயாகாவியம்” (ஆய்காவியம் அல்ல!) எழுத புறப்பட்டுவிட்டது எனது கரங்கள். வாழ்வைத் தொலைத்த ஒரு மூதாட்டியின் வடை திருடிய காகத்திடம் இருந்து வடையை அபகரித்த நரி குற்றவாளிக் கூண்டிலே நிற்கிறது.
இடம்: நீதிமன்றம்
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.
காகத்தைப் பாடச் சொன்னேன். வடையைத் களவாடினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. காகத்தைப் பாடச் சொன்னேன். பாட்டுக்குப் பாட்டு போட்டி நடத்தி பரிசு கொடுப்பதற்காக அல்ல. கோவில் காகம் கோவிந்தா என்று கத்தாது என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக. வடையைத் களவாடினேன். சரக்குக்கு சைட்டிஷ் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. வயதான மூதாட்டியின் வடை திருடிய வன்மையைக் கண்டிப்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. பிரியாணியும், சரக்கும் வாங்கிக் கொடுத்து கூட்டம் கூட்டுகிறார்களே அரசியல்வாதிகள் – அதைப் போல.

என்னைக் Cunning Jackle, Cunning Jackle என்கிறார்களே, இந்தக் Cunning Jackle ன் வாழ்க்கைப் பாதையிலே aboutturn அடித்துப் பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காகங்கள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். ஆயா சுட்ட வடை இல்லை என் பாதையில், காக்கா சுட்ட குறவர்கள் நிறைந்திருந்தனர். வடையைத் தீண்டியதில்லை நான். ஆனால் வடை சுட்ட கடாயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு காடு பிழைக்க ஒரு காடு. செய்யாற்றில் பிறந்த நான், வடை தின்ன சென்னைக்கு ஓடோடி வந்தேன். நாய் என்று நினைத்து என்னை வாலாட்டச் சொன்னார்கள். ஓடினேன். ஆண்நாய்கள் ஒரு பக்கம் துரத்தின. ஓடினேன். என் முகத்தில் விழித்தால் நல்லதென்று மஞ்சள் துண்டணியும் ஒரு கூட்டம் விரட்டியது. ஓடினேன். ஓடினேன். வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என்னை?

நாய் என்று நினைத்து என்னை வாலாட்ட சொன்னது யார் குற்றம்? டிஸ்கவரி சேனல் பார்க்காமல் சீரியல் பார்க்கும் சென்னைவாசிகள் குற்றம். ஆண்நாய்கள் துரத்தியது யார் குற்றம்? மார்கழி மாசம் வந்ததின் குற்றம். என் முகத்தில் விழித்தால் நல்லதென்று மஞ்சள் துண்டணியும் ஒரு கூட்டம் விரட்டியது யார் குற்றம்? அவர்கள் முகத்தில் நான் விழித்தால் என் கதி என்ன ஆகுமென்று யோசிக்காத வீணர்களின் குற்றம். இக்குற்றங்கள் களையப்படும் வரை நரிகளும் காகங்களும் குறையப்போவதில்லை. இதுதான் என் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.

உரைநடையின் உவகையில் உரைந்து கரைந்து போன என் உடன்பிறப்பே!என் கவிதையையும் சற்றுகனிந்துருகி கேளாய்!

ஈழத்துடன் கவிதை பகிர்ந்து கொல்ல ஒரு திட்டம்
தமிழகத்தில் காங்கிரசுடன் தொகுதி பகிர்ந்துகொள்ள ஒரு திட்டம்
ஈழத்தில் சகோதரயுத்ததை நிறுத்த ஒரு திட்டம்
தமிழகத்தில் சகோதர அரசியல் வளர்க்க ஒரு திட்டம்
ஈழத்தில் ஒரு வாய்க்கரிசி திட்டம்
தமிழகத்தில்  ஒரு கிலோ அரிசி திட்டம்
திட்டங்கள் எத்தனை எத்தனை! அத்தனையும் திகட்டாதவை!
இரந்துகேட்ட தமிழீழித்தால் வந்தது சுடுகாடு
இறந்துகெட்ட மக்களுக்கான கூப்பாட்டுக்கு ஒரு மாநாடு
வாழ்க அண்ணா நாமம்! வாழ்தமிழ் மக்கட்கு பட்டை நாமம்!

22 comments:

 1. சூப்பர்... குறிப்பா மூர்த்தி.. ச்சான்ஸே இல்ல..

  ReplyDelete
 2. உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

  உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
  ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

  ReplyDelete
 3. செமையா இருந்திச்சு :))

  ReplyDelete
 4. //For the past 10 years கிட்டதட்ட பதினஞ்சி வருஷமா //

  i started laughing like hell at this line.

  keep up the good work

  ReplyDelete
 5. புபட்டியன், தெகா, அனானி, சுரேஷ்

  அனைவருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 6. வெ.மூர்த்தி சூப்பர்
  கலைஞர்..ஆஅவ்வ்

  ReplyDelete
 7. மிக அருமை நண்பரே.....

  ReplyDelete
 8. செமையா இருந்திச்சு

  ReplyDelete
 9. வெ.ஆ.மூர்த்தி வடை அட்டகாசம்

  ReplyDelete
 10. //கபாலத்துல கட்டெரும்பு

  இது ஒன்னு போதும். சூப்பர்.

  முதல் 2க்கு சரியான சிரிப்பு.

  ReplyDelete
 11. கண்மணி அக்கா, கோவிகண்ணன், பின்னோக்கி, அனானி நண்பர்களுக்கு...

  நன்றி!!

  ReplyDelete
 12. ஹாய் வாழைபழத்தில் ஊசி எத்திர மாதிரி வச்சிரைய ஒரு ஆப்பு.......... இறந்துகெட்ட மக்களுக்கான கூப்பாட்டுக்கு ஒரு மாநாடு!!!!!!!!
  இதுக்கு மேல சொல்ல ஒண்ணும் இல்லை ...கண்ணீர்தான் வருகுது...

  ReplyDelete
 13. டாப்பு டக்கர்.

  ReplyDelete
 14. முரளி, ஹமரங்கனா, அஹோரி

  நன்றிகள்...!

  ReplyDelete
 15. பலே பலே :)))

  ReplyDelete
 16. வெண்ணிறாடை மூர்த்தி

  super

  ReplyDelete
 17. ரொம்ப நல்லாருக்கு நண்பரே..

  ReplyDelete
 18. ஆகா உங்கள் படைப்பு படுபிரமாதம், உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளவேண்டியிருக்கு

  ReplyDelete
 19. இம்புட்டு நாளா எங்க தலைவரே போயிருந்தீங்க.. அசத்தல் வசனங்கள்.. எல்லாமே அசத்தல்ன்னாலும் தமிழினத்தலைவருக்கு கொடுத்திருக்கற பாங்கு எல்லாத்தையும் தூக்கி சாப்பிடுது :)

  ReplyDelete
 20. classic thinking... aagaiyal... arumai... padithu parthavudan inimai.... pidithathu urainadai elimai...

  (mannikka venduvathu.. naan aangilathil thattachu seitha kodumai)

  regards
  Modjjo

  ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய