Monday, February 01, 2010

பொய்யாகிப் போனவை



எங்க பாட்டி மதிய நேரத்தில் கறிசோறு கொடுத்து அனுப்பினால் இரும்பு ஆணியோ ஒரு அடுப்புகரித்துண்டோ போட்டு அனுப்புவாங்க. மதியநேரம் கறிசோறு கொண்டு போனால் காத்துகருப்பு தொடர்ந்து வரும் என்று அவங்களுக்கு ஒரு நம்பிக்கை. தென் தமிழகத்தில் கருப்புசாமி, அய்யனார், மதுரைவீரன் கும்பிடுவது போல, வேலூர் பகுதியில் காட்டேரி, முனீஸ்வர வழிபாடு உண்டு. என்னுடைய சிறுவயதில் காட்டேரி என்றால் கருப்பாக  இருக்கும், அதற்கு நீளமா தலைமுடி இருக்கும் என்று கதை சொல்லித்தான் எனக்கு எங்க பாட்டி சோறு ஊட்டுவாங்க. காட்டேரி கும்பிட சாயங்காலமாக குளக்கரை பக்கத்தில் இருக்கும் அரசமரத்தடியில்  பொங்கல், கறி, கருவாட்டு கொழம்பு செய்துகொண்டு போய் படைப்பாங்க. இப்போது அங்க ஒரு சப்கோர்ட் வந்திடுச்சி. ஆனால் இப்போது அந்த அரசமரம் இல்லை. வெட்டிட்டாங்க.

முன்பெல்லாம் எங்க ஊரில் இருக்கிற முனீஸ்வரன் கோயில் பக்கம் இரவில் யாரும் போகமாட்டாங்க. அங்க இருக்குற முனிகள் இரவில் சண்டைபோடும் என்று சொல்லுவாங்க. உடைந்து போயிருக்கும் களிமண் குதிரைகள் சண்டையில் செத்துபோன குதிரைகள் என்று சொல்லுவாங்க. இப்ப அந்த பகுதியில் வீடுகள் அதிகமாகிவிட்டதால், இந்தக் கதைகள் எல்லாம் பொய்யாகிப் போய்விட்டது.

ஒரு உபரி தகவல் என்வென்றால், காட்டேரி குலதெய்வமா கும்பிடுரவங்க கருப்பு அறுனாகொடி கட்டுவாங்க. முனீஸ்வரன் கும்பிடுரவங்க சிவப்பு நிற கொடி கட்டுவாங்க. இரண்டையும் கும்பிடுரவங்க இரண்டு நிறத்திலும் கட்டுவாங்க.

எங்க வீட்டுக்கு எதிரில் எங்கத் தெருவையும் பக்கத்துத் தெருவையும் இணைக்கும் ஒரு சந்து இருந்தது. அங்கு பேய் நடமாட்டம் இருப்பதாக பேசிப்பாங்க. ஒருநாள் இரவு எங்க தாத்தா திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் எதோ ஒரு வெள்ளையான உருவம் அவரை எழுப்பியதாம். பதற்றத்தில் அவர் அந்த உருவத்தை அடிக்கப் போக, ஜன்னல் கம்பியை ஓங்கியடித்து கைமுறிந்துவிட்டதாம். இந்த கதையை நான் நினைத்து நினைத்து சிரிப்பதுண்டு.

எங்க தெருவில் மூலைக்கடை நாடாருக்கு சொந்தமான ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் பூதம் இருப்பதாக சொல்லி யாரும் வாழரது இல்லை. அப்படி இதுக்கு முதல் அந்த வீட்டில் இருந்தவங்க சாப்பிடும் போது திங்குற சோத்தில் மலமும், மண்ணும் விழுமாம். இப்போ அங்க வீடு இல்ல. ஒரு மளிகைக்கடை இருக்கு.

மேலே சொன்ன விசயங்கள் கதைகளாக, செவிவழிச் செய்தியாக எனக்குச் சொல்லப்பட்டவை. இப்படி நிறைய பேருக்கு அனுபவங்கள் இருக்கும். இவை அந்தந்த பகுதிகளின் பழக்கவழக்கமாக, தெய்வ நம்பிக்கையாக, தனிநபர் நம்பிக்கையாக, குல வழக்கமாக உருவாக்கப்பட்ட புனைக்கதைகளின் சார்புடையவையாகவே கருதுகிறேன். இவற்றை இன்னும் மக்கள் நம்பிக்கொண்டும் வழிபட்டுக்கொண்டும் தான் இருக்கிறார்கள்.

4 comments:

  1. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. ENGAL VEETTU PAZHAKKAM ONRU. MUDHAL AAN KUZHANDHAI PIRANDHAL ADHARKU "GANGADHAR" ENA PEYAR VAIKKA VENDUM. eLLAIYEL ADHARKU UDALIL EDHAVADHU KURAI VANDHU SERUM. IDHAY EN THANDHAI KOODA PIRANDHAVAR NANGU PERGALUKKU MUDHALIL MAGANGAL PIRANDHU AVARGALUKKU INDHA PEYARAI VAIKKAMAL THARPODHU MOONRU PERUM UDAL OONATHIL IRUKKIRARGAL.

    INDHA PEYAR EDHARKU VAIKKAVENDUM ENBADHARKU MOOLA KARANAM ILLAI. ANAL VAIKKAVITTAL VILAIVU KANKOODAGA THERIGIRADHU.

    MOODA NAMBIKKAIYA ALLADHU ? DHAYAVU SEIDHU IDHARKU ORU PEYAR VAIKKAVUL. CHANDIPRASAD..rvchandyprasad@yahoo.co.in
    tharpodhu andhiravil vaazhum thamizhan

    ReplyDelete
  3. இரண்டையும் கும்பிடுரவங்க இரண்டு நிறத்திலும் கட்டுவாங்க.\\ DMK Flag!!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய