Saturday, August 25, 2012

தொடரும் மாணவர் தற்கொலைகள்

ஐ.ஐ.டி சென்னையில் ஒரு மாணவி தற்கொலை, போன வாரம் படித்திருப்பீர்கள். இந்த வாரம் மறுபடியும் ஐ.ஐ.டி கான்பூரில் ஒரு மாணவன் விஷம் குடித்துத் தற்கொலை.

…நான் ஏற்கனவே பதிவிட்ட ஒரு பதிவை மீள்பதிவு செய்கிறேன். 

3 idiots திரைப்படம் தொடங்கிய நான்காவது நாளில் 100 கோடியைத் தாண்டியுள்ளதாம். அப்படி ஒரு வரவேற்பு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில். படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி (முன்னாபாய் MBBS-ன் இயக்குனர்). மேலும் இப்படத்தில் அமீர்கான் நடித்துள்ளார். Chetan bhagat எழுதிய Five point something கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், சிலக் கல்லூரிக் காட்சிகளில் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளது. சரி இப்போது விடயத்துக்கு வருவோம். இந்தப் பதிவு படத்தைப் பற்றிய விமர்சனம் அல்ல. இப்படத்தில் கதை தொட்டுச்செல்லும் இந்திய மாணவ சமுதாயம் எதிர்நோக்கும் சில பிரச்சனைகள். 1.மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பாடத்துறையைத் தேர்ந்தெடுக்காமல், பெற்றோரின் விருப்பத்தின் பேரில் சுயவிருப்பமின்றி  பாடத்துறையை தேர்ந்தெடுப்பது, 2. பேராசிரியர்கள், விரிவுரையாளர்களால் மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் மன அழுத்தங்கள், 3. இவ்வாறான மன அழுத்தங்களால் எற்படும் மாணவத் தற்கொலைகள்.


மருத்துவதுறை கிடைக்காத பெண்ணை வீட்டில் உள்ளோர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை. இது என் நண்பன் வீட்டில் நடந்த ஒரு சம்பவம். இதற்குக் காரணம் என்ன? விருப்பமில்லாத பாடத்தைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துவது, அப்படி படிக்கமுடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்தால் திட்டுவது. முடிவு தற்கொலை. இதுபோல ஏராளமான செய்திகள் பத்திரிகைகளில் தேர்வுமுடிவுகள் வரும் மாதங்களில் வருவதுண்டு. பெரும்பாலான பெற்றோர்கள் “நீ டாக்டராக வேண்டும். இஞ்னியராக வேண்டும்” என்று பிள்ளையின் சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொண்டு வருவார்கள். இப்படி இவர்களால் கட்டமைக்கப்பட்ட கோட்டை ஒருவேளை சரிந்துவிட்டால், மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தானாகவே தற்கொலைக்குத் தயாராகிறார்கள். போதிய படிப்பறிவோ, விழிப்புணர்ச்சியோ இல்லாத பெற்றோர்கள் எப்படியாவது பணத்தை செலவழித்து தன் பிள்ளையை ஒரு பொறியியல் பட்டப்படிப்பையோ, ஒரு மருத்துவப்பட்டப் படிப்பையோ படிக்க வைத்து விடவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படுவதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை. தொடர்வண்டியில் செல்லும் போது என்னிடம் ஒரு பெரியவர் சொன்னது “என்னோட மகளை என்னுடைய நாலு ஏக்கர் நிலத்தை அடகு வைத்து இஞ்னியரிங் படிப்புக்கு …….. காலேஜில் சேர்த்து இருக்கிறேன்.”. இன்றைய நிலையில் இந்தியாவில் பெரும்பாலான கல்லூரிகள் அரசியல்வாதிகளாலும், மந்திரிகளாலும், பினாமிகளாலும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுள் சரியான கல்வி, கட்டுமான வசதிகள் இல்லாவிடினும் மத்திய அங்கீகாரம் பெற்று மக்களை ஏமாற்றி பணத்தைக் கரந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கல்விகற்க போதிய வசதியற்றக் கல்லூரியைத் தான் பெரியவர் குறிப்பிட்டார். கிராமத்திலிருந்தும் நகரத்திலிருந்தும் வரும் சராசரி மாணவர்களின் நிலை மிகவும் மோசமானது. அவர்களுக்கு என்ன பாடத்துறையைத் தேர்வு செய்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பிராக்டிகலாக  தேர்ந்தெடுக்கவும் தெரியாது, தங்களுக்கு எது விருப்பப் பாடம் என்று விவரிக்கவும் தெரியாது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நடக்கும்போது அங்கு கவுன்சிலிங் வரும் சில மாணவர்கள் அவ்வழியே செல்லும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களிடம் என்ன பாடத்துறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கேட்பதை பலமுறைப் பார்த்திருக்கிறேன். போகிறபோக்கில் அவர்களும் எதாவது தோன்றுவதைச் சொல்லிவிட்டுப் போவதுண்டு.

இந்தியாவின் கல்வித்தரமோ அதளபாதாளத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.IIT, மற்றைய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. IITகளும் அதிகப்படுத்தப்படவுள்ளன. நல்ல விடயம் தான். ஆனால் அதற்கான infrastructure வசதிகள் தயாராக உள்ளனவா என்றால்? இல்லை. இப்படி கட்டுமான வசதியில்லாமல் மாணவர் சேர்க்கை மட்டும் அதிகரித்தால், கல்வித்தரம் குறையும், விடுதி மாட்டுக் கொட்டகை போல் இருக்கும். இப்போதே விடுதியில் ஒரு அறைக்கு 2 அல்லது 3 ஆட்களை அடுக்கிக் கொண்டிருக்கிறது IIT எனும் இந்தியாவின் கார்போரேட் நிறுவனங்கள். இங்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் பொறியியல் மாணவர்கள் மலிவாக Microsoft, Google, Texas instruments, Cisco…. என பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். (ஆனால் வெட்கமே இல்லாமல் Dedicated to the Service of the Nation என்று போடுக்கொள்ளத் தெரியும் ) குறிப்பாக சொல்ல வேண்டுமானால் IIT மாணவர்களை இந்தியா பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது.



சரி ஒரு வழியாக மாணவன் தன்னுடைய விருப்பமான அல்லது விருப்பமற்ற பாடத்தையோ தேர்ந்தெடுத்துவிடுகிறான். அடுத்து அவன் சந்திக்கும் பிரச்சனைகள் அவனுடைய ஆசிரியர்கள் மூலமாக. இந்தியாவில் IITகள் தான் உயர்தர பொறியியல் கல்வியை வழங்குகிறது. அப்படி வழங்கிய கல்வியால் இந்தியாவிற்கும் இந்தியமக்களுக்கும் லாபம் வெகு குறைவே. இதற்கு பெரும்பாலானவர்கள் மாணவர்களைக் குறைகூறுவார்கள். ஏனென்றால் IIT-ல் படிக்கும் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் இது தவறான கூற்று. வெளிநாட்டு நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிப்பது யார்? கல்வி நிறுவனமா அல்லது கார்பரேட் நிறுவனமா என்று எண்ணும் அளவிற்கு ப்ரோஜக்ட்களை வாங்கிக் குவித்துப் பணம் சம்பாதிப்பது யார்? கார்பரேட் நிறுவனம் கூட செய்த வேலைக்கு காசுகொடுக்கும் ஆனால் project work என்ற பெயரில் மாணவர்களை பெரும்பாலான ஆசிரியர்கள் ஓசியில் வேலை வாங்கவும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் (research journals, conference papers) எழுதவும், அதிலும் தன் பெயரை முதன்மையாக போட்டுக்கொள்ளும் அளவிற்கு கசக்கிப் பிழிகிறார்கள். அப்படி மாணவர்கள் மேற்சொன்ன வேலைகள் செய்யவில்லையா? கிரேட்(மதிப்பெண்) குறைக்கப்படும். மாணவனின் CGPA பொருத்து பெரும்பாலும் ப்ரோஜக்ட் ஆசிரியர்கள் ஒதுக்கப்படுவார்கள். அப்படி ஒதுக்கப்பட்ட ஆசிரியரின் கீழ் பணிபுரியும் மாணவன் அவரின் விருப்பப்பாடத்தில் தான் ப்ரோஜக்ட் செய்ய வேண்டும். இது தான் பொதுவாக எழுதப்படாத விதி. நிலைமை இப்படி இருப்பின் மாணவனைப் பெரும்பாலும் புதிதாக சிந்திக்க விடமாட்டார்கள். இந்திய அரசாங்கம் வெளியிடும் ப்ரோஜக்ட்களை முடிக்க கல்விநிறுவனங்களுக்கு முதலிடம் தரப்படுகிறது. இவற்றைப் பெரும் பேராசிரியர்கள் மாணவர்களிடம் காசில்லாமல் வேலை வாங்கிக் கொண்டு நிறைய பணம் பார்க்கிறார்கள். உதாரணமாக இந்திய அரசு நிறுவனத்திற்காக ஒரு சாப்ட்வேர் தயார்செய்ய 20 லட்சம் மதிப்பிலான ஒரு ப்ரொஜெக்ட் விளம்பரம் செய்யப்படுகிறது. கல்விநிறுவனத்திற்கு முதலிடம் என்ற வகையில் அந்த ப்ரோஜக்ட்டை ஏற்றுக்கொள்ளும் ஒரு பேராசிரியர், தனக்குத் தொடர்புள்ள சாப்ட்வேர் நிறுவனங்கள் (TCS, CTS…..) மூலமாக சில முக்கிய moduleகளை முடித்துக் கொண்டு, மற்றவற்றை தன் கீழ் ப்ரோஜெக்ட் செய்யும் மாணவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிடுகிறார். சாப்ட்வேர் நிறுவனங்கள் செய்த வேலைக்கான பணம் போக மற்றவற்றை அவரே சுருட்டியும் விடுவார்.

IIT-ல் ஒரு சம்பவம் உங்கள் கவனத்திற்கு. முதல் வருடம் சரியாகப் படிக்காத Btech மாணவர்களை இரண்டாம் வருடம் performance சரியில்லை என்று அனுப்பியுள்ளார்கள். (குறிப்பாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள். இவர்கள் பெரும்பாலும் Hindiயில் படித்தவர்கள், கிராமப்புறத்தில் இருந்து வருபவர்கள். தன்னுடைய பிரச்சனையை ஆசிரியரிடம் முறையாக தெரிவிக்கத் தெரியாத பக்குவம் உள்ளவர்கள்)  தரத்தை மேம்படுத்துகிறேன் பேர்வழி என்று இந்த விடயம் கடந்த ஆண்டுகளில் நடந்தன. ஆனால் அதுபோல விதிமுறைகள் எதுவும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதுபோல நீக்கப்பட்ட மாணவர்கள் வழக்குத் தொடர, IIT வழக்குத் தொடர்ந்த மாணவர்களை மறுபடியும் சேர்த்துக் கொண்டது. முன்பு இந்த விதிமுறையால் பாதிக்கப்பட்ட மாணவகள் கதி என்னவென்று தெரியவில்லை.

IIT-ல் கடந்த நான்கு ஆண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் google-ல் IIT suicide என்று தேடிப்பாருங்கள்.
 மேலும் தகவலுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் சென்று படிக்கவும்.
http://iitsuicides.blogspot.com/

இந்தியாவில், 2006-ல் மட்டும் சுமார் 5897 மாணவர்கள் தேர்வுபளு காரணமாக (16 மாணவர்கள் /ஒரு நாள்) தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது வெறும் அதிகாரப்பூர்வமான தகவல். அப்படியாயின் உண்மை எவ்வளவு என்று தெரியவில்லை. தற்போது இதைவிட அதிகமாகக் கூட இருக்கலாம். இவற்றிற்கு காரணம், காதல் தோல்வி, தேர்வினால் மன அழுத்தம் என்று கூறி தப்பித்துக்கொள்ள முடியாது. இதையும் தாண்டி பெற்றோரின் புரிந்துகொள்ளாத மனப்பக்குவம், ஆசிரியர்களின் சுயநலம், வருங்காலத் தூண்களை துரும்புகளாக மதிக்கும் அரசு என பல முக்கிய காரணிகள் உள்ளன. மாணவர்கள் படிப்பிலும், வாழ்க்கையிலும் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க அவர்களிடம் ஒரு நண்பனைப் போல பழகி அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு தகுந்தவர்கள் (பிரச்சனைக்கேற்றவாறு) மூலம் கவுன்சிலிங் தேவை. அதை விடுத்து ஜோதிடரிடமும், சாமியாரிடமும் சென்று “என் மகனுக்கு எப்படி இருக்கும், என்ன ஆகும் என்று விசாரிப்பது”, மூடத்தனம் மட்டுமல்ல, பிள்ளைகளின் வேதனைக்கேற்ற மருந்தாக அமையாது. கீழ்தட்டு மக்களுக்கு மனநல மருத்துவம்,கவுன்சிலிங் எல்லாம் தற்போதைய சூழ்நிலையில் அணுக முடியாதவை தான். நம்முடைய சகபதிவாளர்கள் தம்மை இப்படி ஒரு உதவிகேட்டு வருபவர்களை கைவிடாமல் சரியான ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேற்கூறிய பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது சம்பந்தப்பட்ட பெற்றோரும், ஆசிரியரும், மாணவனும் கலந்தாலோசித்து எடுக்க வேண்டிய முடிவுகள் மட்டுமேயன்றி நாம் இதில் பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மேலும் இந்திய மக்கள் வருங்கால சமுதாயத்தைக் காப்பாற்ற பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களிடம் ஒரு நல்ல நண்பனைப் போல் நடந்து கொள்ளுங்கள்.


Don't try to fix the students, fix ourselves first. The good teacher makes the poor student good and the good student superior. When our students fail, we, as teachers, too, have failed.
- Marva Collins

6 comments:

  1. இந்தியக் கல்வித் துறையில் மாற்றம் பல வரவேண்டும், மார்க்குகள் சார்ந்த கல்வி முறை தான் உச்சக்கட்ட அழுத்தங்களுக்கு காரணம் -- அத்தோடு சமூக கௌரவ நிலைக்கு பலியாக்கப்படும் மாணவர்கள் !!!

    இந்த ஆண்டுக் கடைசியில் ஒரு எக்ஸாம் வைத்து மாணவர் அறிவைக் கணிக்கும் முறையை மாற்ற வேண்டும் .. அந்த ஒரு நாளில் உடல்நிலை சரி இல்லாமல் போனாலே லைஃப் காலி என்ற நிலை இருக்கு !!!

    மேற்கு நாடுகளில் ஒவ்வொரு 20 % க்கும் தனித் தனி எக்ஸாமாக ஆண்டு முழுவதும் வைத்து .. அத்தோடு அசைன்மேன்ட்களுக்கும் மதிப்பெண் கொடுக்கின்றார்கள் ... இது ஒரு அழுத்தங்களைக் குறைக்கின்றது ...

    இன்னும் நிறையவே சொல்லலாம்

    அருமையான ஒரு பதிவு சகோ...

    ReplyDelete
  2. குட்டிப்பிசாசு,

    நல்லப்பதிவு,

    மாணவர்களை விட பெற்றோர் சிந்திக்க வேண்டும்.

    மேலும் தரமான கல்வி ஐ.ஐ.டி.அண்ணா பல்கலையில் இருக்குன்னு நீங்களும் நினைக்கிறிங்க, உண்மையில் ஒன்றுமே இல்லை.

    1+1 கிரடிட் ஹவர்ஸ் கோர்ஸ் என்றால் வாரத்திற்கு 1 தியரி, ஒரு பிராக்டிகள், என ஒரு செமஸ்டருக்கு மொத்தமே 16-18 வகுப்புகள் மட்டுமே நடக்கும்,

    அதே போல 2+1 கிரடிட் ஹவர்ஸ் சப்ஜெக்ட் என்றால் வாரத்திற்கு 2 தியரி, ஒரு பிராக்டிகல் என ஒரு செமஸ்டருக்கு அதிகப்பட்சம் 32 தியரி, 16 பிராக்டிகள் நடக்கும்.

    ஒவ்வொரு பீரியடிலும் ஒரு கணக்கோ அல்லது ஏதோ ஒரு போர்ஷனோ நடத்திவிட்டு, மற்றதை மாணவ்ர்களே படிக்க சொல்லிவிடுவார்கள்.

    இடையில் பல வகுப்புகள் நடத்தாமல் அந்த யூனிட்டை அசைண்மென்ட் என நம்மை எழுதி ஸ்டிக் பைல் போட்டு சப்மிட் செய்ய சொல்லிவிடுவார்கள்.

    அவ்வளவு தான் பாடம் நடத்துவது :-))

    பாடம் நடத்தாமல் மனப்பாடம் செய்து படிக்க தெரிந்த ஆங்கில வழிமாணவர்கள் படித்துவிடுவார்கள்,ஆனால் தமிழ் வழிமானவர்களுக்கு அனைத்தையும் ஆங்கில வழியில் மனப்பாடம் செய்ய கஷ்டம் ,மேலும் நடத்தியதும் புரியாத சூழல் எனவே தேர்ச்சி பெறுவதில்லை.

    இக்கல்லூரிகளில் பாடம் நடத்துபவர்களும் போர்ட்டில் எழுதிப்போட்டுவிட்டு ,அதை காபி செய்ய சொல்வார்கள் அல்லது , டிக்டேட் செய்து நோட்ஸ் எடுக்க சொல்வார்கள்.

    இப்படி நோட்ஸ் எடுக்காமல் இருந்ததால் எனக்கு 3 செமஸ்டரில் குத்தினார் ஒரு பேராசிரியர்,அவரிடம் நான் சொன்னது புக்கில் இருப்பதை மீண்டும் ஏன் எழுத வேண்டும், நான் புக்கிலே பார்த்துக்கிறேன்னு , இனிமே என் வகுப்பு வராத என்றார்,அப்போ அட்டெண்டன்ஸ் ஷார்ட் ஆகுமே சார்னு சொன்னதுக்கு அப்புறம் அவரெ எனக்கு ஓசி அட்டெண்டண்சும் போட்ட்டு இனிமே வராத என சொல்லிவிட்டார், நானும் விட்டது சனியன்னு கேண்ட்டின் போயிட்டேன் :-))

    ஹி...ஹி நாங்க எல்லாம் அப்போவே அப்படி ,இப்போ எப்பூடி :-))

    என்னோட கசின் ஐ.ஐடி யில் பி.எச்.டி செய்தவர் அவரை 3 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 5 ஆண்டுகள் வரைக்கும் இழுக்க விட்டார்கள்.ரொம்ப நொந்து போய் தான் வந்தார், இப்போ வரைக்கும் திட்டுவார் :-))

    ReplyDelete
    Replies
    1. //மேலும் தரமான கல்வி ஐ.ஐ.டி.அண்ணா பல்கலையில் இருக்குன்னு நீங்களும் நினைக்கிறிங்க, உண்மையில் ஒன்றுமே இல்லை.//

      தரம் இருக்கு என்று நான் சொல்லவில்லை. இருக்கும் தரம் இன்னும் குறைவானேன் என்று கேட்கிறேன்.

      //என்னோட கசின் ஐ.ஐடி யில் பி.எச்.டி செய்தவர் அவரை 3 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 5 ஆண்டுகள் வரைக்கும் இழுக்க விட்டார்கள்.ரொம்ப நொந்து போய் தான் வந்தார், இப்போ வரைக்கும் திட்டுவார் :-))//

      எனக்கும் இதேதான் நடந்தது.

      Delete
  3. தற்போதுள்ள கல்வி முறையில் மாற்றம் வர வேண்டும். பிள்ளையை இழந்த பெற்றோருக்கு ஆழ்நத அனுதாபங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய