Thursday, April 11, 2013

எம்.ஆர்.ராதா அல்லது Bad cheque

என் தந்தையின் நண்பர் ஒருவர், எங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல இருந்தவர். சொந்தம் இல்லாவிடினும் நானும் என் அண்ணனும் அவரை "விசு மாமா" என்று தான் அழைப்போம். என் தந்தையும் அவரும் சேர்ந்து ஒரு தொழில் தொடங்கினார்கள். என் தந்தை முழுபொறுப்பையும் நண்பரிடமே ஒப்படைத்து இருந்தார். சந்தர்பத்தைப் பயன்படுத்தி நண்பரும் அவருடைய மைத்துனரும் சேர்ந்து பல ஆயிரங்கள் மோசடி செய்துவிட்டனர். தான் சுயமாக தொழில் செய்வதாகக் காட்டி பல இடங்களில் கடன் வேறு வாங்கிவைத்திருந்ததால், மேலும் சிக்கல். தொழில் சம்பந்தமான பொருட்களை விற்கவும் முடியவில்லை. இது நடந்தது 20 வருடங்களுக்கு முன், இப்போது அப்பணத்தின் மதிப்பு லட்சங்களில் இருக்கும். தொழில் முழுதும் கடனில் மூழ்கிவிட்டது. என் தந்தையும் பழகியதோஷத்திற்காக பலமுறை சாந்தமாகக் கேட்டுப்பார்த்தார். சரியான பதில் வரவில்லை. ஒருமுறை பொறுமையிழந்து தெருவில் சண்டை போடும் அளவிற்கு வந்துவிட்டது. பிறகு அந்த நண்பர், ஒருசில கடனுக்காக மட்டும் 20000 ரூபாய்க்கான ஒரு காசோலை கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.  அந்தக் காசோலை பணமில்லாமல் வங்கியில் இருந்து திரும்பி வந்துவிட்டது. திரும்ப அந்த நண்பரைத் தொடர்புகொண்டு காசோலை திரும்பியதைப் பற்றிக் கேட்டால், "பாகப்பிரிவினை எம்.ஆர்.ராதா" போல பதில் சொல்லி இருக்கிறார். என் தந்தை பணமில்லாத காசோலைக் கொடுத்து ஏமாற்றியதாக அவர் வழக்கு தொடுத்தார். நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது போடப்பட்ட வழக்கு, கீழ் கோர்ட் மேல் கோர்ட் எனத் தாவி, நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தவரை நடந்தது. நம் நாட்டின் நீதிமன்றத்தின் லட்சணம் அப்படி? அப்போதும் வழக்கு முடிவுராமல், அந்த நண்பரே வெறுத்துப்போய், 25000 ரூபாய் பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு கொடுத்துவிட்டார்.


சமீபத்தில் வெளியூருக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக செல்ல வேண்டிவந்தது. போகும் வழியில், சாப்பாட்டிற்காக வேன் நிறுத்தப்பட்டது. அனைவரும் சென்று சாப்பிடப் போனோம். வண்டி ஓட்டுனரையும் சாப்பிட அழைக்குமாறு சிலர் சொல்ல, நான் அழைக்கச் சென்றேன். சென்று பார்த்தால், ஓட்டுனர் வேறுயாருமில்லை "விசு மாமா". எனக்கு அவருடன் கதைக்கப் பிடிக்கவில்லை. வேறொருவரை அனுப்பிவிட்டு வந்துவிட்டேன். பிறகு அன்று மாலை, வீட்டிற்கு தொலைபேசும்போது, அப்பாவிடம் நடந்ததைக் கூறினேன். என் தந்தை "டேய்! பாவம்டா அவன். அவனை அவனோட மச்சான் ஏமாத்திடானாம். வீட்டைக் கூட வித்துட்டான். குடும்பப் பிரச்சனை. தனியாகத்தான் இருக்கான். நீ பார்த்து ஏதாவது பணம் கொடுத்துட்டு வா!" என்றார். என்னதான் இருந்தாலும், எனக்கு விசு மாமாவை சந்திக்க விருப்பமில்லை. நான் வேறொருவரிடம் பணம் கொடுத்து கொடுக்கச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஒரு பக்கம் என்னுடைய தந்தை அவருடைய நட்புக்குக் கொடுக்கும் மரியாதையை எண்ணி ஆச்சரியமாகவும் இருக்கும், அதேசமயம் அவருடைய எளிதில் ஏமாறும் அப்பாவித்தனத்தை எண்ணி வெறுப்பாகவும் இருக்கும்.

Cheating is a choice, not a mistake. 

தற்சமயம்   என்னுடைய தந்தை பணிஓய்வு பெற்றுவீட்டில் இருக்கிறார். சில சமயம் வேலை ஏதும் இல்லாமல் சலிப்பாக இருப்பதாக சொல்வார், "வேணும்னா நீயும் நானும் ஒரு தொழில் தொடங்குவோம், இந்த முறை நீ என்னை ஏமாத்து" என்பேன். "அறிவுகெட்டவனே" என வழக்கம்போல செல்லமாக அடிப்பார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


2 comments:

  1. சொந்த அனுபவமா இது? வித்தியாசமா தான் இருக்கு,ஆனால் இந்த வயசிலும் டிரைவர் வேலை செய்ய வேண்டிய நிலையில் தான் இருக்கார் பாருங்க.

    ஏமாத்த தெரிஞ்சவங்க எல்லாராலும் சேர்த்து வைக்க முடிவதில்லை போல!

    ReplyDelete
    Replies
    1. சொந்த அனுபவம் தான்.

      …//ஏமாத்த தெரிஞ்சவங்க எல்லாராலும் சேர்த்து வைக்க முடிவதில்லை போல!//

      …சரியாச் சொன்னிங்க.

      Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய