Thursday, May 08, 2014

எனக்குப் பிடித்த பாடல்கள்

பட்டிக்காடா பட்டணமா படத்தில் நாயகியைப் பார்த்து நாயகன் சந்தோசமாக பாடிய ஒரு பாடல் "என்னடி ராக்கம்மா". படத்தின் பிற்பாதியில் சோகமான பாடலாக வருகிறது. எம்.எஸ்.வி திருமணத்தில் வாசிக்கும் நாதஸ்வரத்தையும் கொட்டுமேளத்தையும் சோகப்பாடலுக்காக பயன்படுத்தியிருப்பது ஒரு புதுமை. பாட்டில் கூட ஒரு வரி "கல்யாண மேளங்கள் மணியோசை என் கவலைக்கு தாளமடி" என்று வரும். ஒளிப்பதிவு கேமிராக் கோணங்களும் கொஞ்சம் வித்யாசமானதாக இருக்கும். வழக்கம்போல, டி.எம்.எஸ் அவர்களின் அற்புதக் குரலில்.



ஹரிதாஸ், ரத்தக்கண்ணீர் படங்களில் வருவது போல அருணகிரிநாதர் படத்திலும் ஒரு ட்விஸ்ட், சிற்றின்பமே பெரிதென்று வாழும் அருணகிரி தன் தவற்றை உணர்ந்து மனம் நொந்து பாடும் பாடல் "எத்தனையோ பிறவி பெற்று". டி.எம்.எஸ் அவர்களே நடித்ததாலோ என்னமோ கொஞ்சம் மிகை தெரியும். ஆனாலும், பாடல் மாசுமறுவற்றது.



Oliver Twist கதையின் தழுவலான அனாதை ஆனந்தன் என்ற படத்தின் துவக்கத்தில் ஒரு பாடல். "அழைத்தவர் குரலுக்கு வருவேன்" என்று துவங்கும் இப்பாடலை எழுதியது கண்ணதாசன். சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக்குரலில் இப்பாடலை கேட்கும்போது, தெய்வபக்தியுடையோருக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தும். அது கவியரசின் தமிழாலா அல்லது கே.வி.எம்மின் இசையாலா தெரியவில்லை. (This song is dedicated to Bhagavathar Jeyadevdas).



அவன் தான் மனிதன் என்ற  படத்திலிருந்து இளமைத்துள்ளலுடன் ஒரு பாடல்.  "ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில்" என்று துவங்கும் பாடல். இப்படத்தில் வேறு பல பாடல்கள் எனக்குப் பிடித்திருப்பினும், இப்பாடலின் வேகம், வரிகள் ரசிக்க வைக்கின்றன. இதனுடன் 70களில் சிங்கபூரின் அழகு. நடிகர் திலகத்தின் அட்டகாசமான ஸ்டைல்.



சங்கே முழங்கு படத்திலிருந்து "நாலுபேருக்கு நன்றி" என்று துவங்கும் பாடல். இப்படி எளிமையான வரிகளில் தத்துவங்களை அள்ளிவீச கவியரசரால் மட்டுமே இயலும். வலியை உணர்ந்தவர்களின் கண்களில் நீரை வரவழைக்கும்.


ராஜராஜன் படத்திலிருந்து "இதயம் தன்னையே" என்ற பாடல். கே.வி.மகாதேவன் இசையில். வழக்கம்போல சுசீலா, ஜானகி என்றில்லாமல் ஒரு புதிய குரல் எ.பி.கோமளா. மன அழுத்தம் குறைக்க நினைப்பவர்கள் இப்பாடலை முயற்சித்துப் பாருங்கள்.



ப்ரேமபாசம் படத்திலிருந்து "அவனல்லால் புவிமேலே" என்ற பாடல்.  பாரசீகபாணி இசையில் அமைந்த அருமையான பாடல். பி.பி.சீனிவாசன் குரலில்.



9 comments:

  1. கு.பி,

    அனைத்து பாடல்களுமே அருமையானவை என்றப்போதிலும் எனக்கு என்னடி ராக்கம்மா தான் அதிகம் கவர்கிறது.

    நாதஸ்வர இசை சினிமாவில் வாசிப்பதாக காட்டப்பட்டாலும் உண்மையான நாதஸ்வரத்தினை வைத்து 'ஒலிப்பதிவு" செய்வதில்லையாம், ஷெனாய் கொண்டு நாதஸ்வர ராகத்தினை வாசித்து ஒலிப்பதிவு செய்வார்களாம், நாதஸ்வரத்தின் ஒலி 'அவ்வளவு காத்திரமானது" என ஒருப்பேட்டியில் படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் என்னடி ராக்கம்மா பாடல் மற்ற பாடல்களை விட கொஞ்சம் வித்யாசமான இசையைக் கொண்டது. அந்த காலத்துலேயே எம்.எஸ்.வி எதேதோ புதுசா முயற்சி செய்து இருக்கார்.

      ஷெனாய் தகவல் எனக்குப் புதுசு. நன்றி.

      Delete
  2. என்னடி ராக்கம்மா மட்டுமில்லாமல் அந்தக் காலத்தின் பல முக்கியமான பாடல்களை மகிழ்ச்சி, சோகம் என்ற இரு ரசங்களிலும் தருவார்கள். அதற்கேற்ப காட்சிகளில் சோகத்தை வரவழைத்துப் படத்தைப் பார்ப்பவர்களை அழ வைக்கும் ஒரு தந்திரமாக இருந்தபோதிலும்(இப்போது அழுகையெல்லாம் வராது என்பது வேறு விஷயம்) கவிஞர், பாடகர், இசையமைப்பாளர் என்ற மூன்று பேரையும் இரண்டு தளங்களிலும் அவர்களின் திறமையக் காட்டவைக்கும் ஒரு செயலாகவும் இருந்தது. இந்த இரண்டாவது வகை சோகப்பாடல்களை மட்டும் ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டமும் இருந்தது.
    'அந்தக் காலத்திலேயே எம்எஸ்வி ஏதேதோ புதுசா முயற்சிகள் செய்திருக்கிறார்' -என்கிறீர்கள். ஒன்றல்ல இரண்டல்ல, பல்வேறு புதிய முயற்சிகள் செய்து வெற்றியடைந்து நிரூபித்தும் இருக்கிறார்.அவற்றையெல்லாம் தொகுத்து எழுதும் எண்ணமும் இருக்கிறது.
    உங்களின் ரசனை சார்ந்த பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

      Delete
    2. நாடோடி 'அன்றொரு நாள்', கைதி கண்ணாயிரம்'கொஞ்சி கொஞ்சி" என பல பாடல்கள் கூட மகிழ்ச்சி சோகம் என்று வரும். என்னடி ராக்கம்மா பாட்டில் பின்னால் வரும் தவில் போன்ற இசை வித்யாசமாக இருந்ததால் பரிந்துரைத்தேன்.

      தங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி.

      Delete
  3. ஆகா...!

    உங்களின் ரசனைக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அட! நீங்களும் என்னைப் போல பழைய தமிழ் திரைப்படப் பாடல்கள் பிரியர்தான் போலிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட அனைத்து பாடல்களையும் கேட்டு இருக்கிறேன்.

    ஒரு காலத்தில் ஊர்த் திருவிழா என்றால் பட்டிக்காடா பட்டணமா திரைக்கதை வசனத்தை லவுட் ஸ்பீக்கரில் அலற விடுவார்கள். என்னடி ராக்கம்மா பாடல் அபோது பிரபலம்.

    கண்ணன் பாடல் என்றாலே நடிகர் நாகையா ரெடியாகி விடுவார் போலிருக்கிறது. (இன்னொரு பாடல் - கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. //அட! நீங்களும் என்னைப் போல பழைய தமிழ் திரைப்படப் பாடல்கள் பிரியர்தான் போலிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட அனைத்து பாடல்களையும் கேட்டு இருக்கிறேன்.//

      அது என் தந்தையிடம் இருந்து வந்துவிட்டது

      நன்றி சார்.

      Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய